மனைவியின் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 6,278 
 
 

“வாழ்த்துக்கள் சார் …” என அனைவரும் வரிசையாக நின்று கொண்டு ஒவ்வொருவராக சேகரின் அறைக்குள் சென்று வாழ்த்திய வண்ணம் இருந்தனர் . எல்லோரும் வாழ்த்தி முடித்த பின்னர் அவருடைய நண்பர் சுந்தரம் அந்த அறைக்குள் நுழைந்தார்.

ஜில்லென்று ஏசி காற்று அறையை நிரப்பி இருந்தது.

“வாழ்த்துக்கள் சார் … உங்களுக்கு புரமோஷன் கிடைச்சதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம் …” என்று கை குலுக்கினார் .

நேற்று வரை “சேகர்” என்று அழைத்து வந்தவர் தான்… என்னதான் நண்பராக இருந்தாலும் பதவிக்கு மரியாதை தர வேண்டும் என்பதாலும் அதை விட அதிகமாக சேகரை நன்கு அறிந்திருந்ததாலும் “சார்” என்று மட்டுமே அழைத்தார் சுந்தரம். சேகரின் முகத்தில் மகிழ்ச்சியைவிட லேசான மமதை தெரிந்தது மாதிரி இருந்தது அவருக்கு .

இதையெல்லாம் தாண்டி… “நமக்குள் என்னப்பா மரியாதை… சேகர்  என்று பழைய மாதிரியே கூப்பிடுங்க…” என்று அறையில் வேறு யாரும் இல்லாத அந்தச் சமயத்தில் நண்பர் என்கிற முறையில் தன்னிடம் கேட்டிருக்கலாம்… என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது சுந்தரத்திற்கு. பின் தன் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமோ என்று நினைத்துக்கொண்டார்.

சேகர் நீண்ட காலமாக இந்தப் பதவி உயர்வை எதிர் பார்த்துக் காத்திருந்தவர். இடைநிலை அதிகாரியான சுந்தரத்துக்கு உயர் பதவி உயர்வு கிடைக்க இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். ஏதேதோ காரணத்திற்காக அவருக்குப் பதவி உயர்வு கிடைக்காமல் இருந்தது . தன் நண்பருக்காவது உயர்பதவி கிடைத்ததே என்பதில் மகிழ்ச்சி தான் சுந்தரத்திற்கு.

55 வயதை தொட்டு விட்ட சுந்தரத்திற்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பாதிப்புகள் இருக்கத்தான் செய்தன. முன்பு ஒரு முறை பக்கத்து சீட்டில் இருக்கும் குமாரிடம் பேசிக் கொண்டிருக்கையில்…
“54 வயசுல குமாஸ்தாவாக கை கட்டிக் குனிந்து நிமிர்ந்து வேலை பார்க்க வேண்டியது கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு…. ஐம்பது வயதுக்கு மேல் ஒருவருக்குப் பதவி உயர்வு கிடைச்சி உயர் பதவிக்கு போயிடனும் …” என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். நல்லவேளையாக சில மாதங்களுக்கு முன் அவருக்கு இடைநிலை அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்துவிட்டது.

குமார் ஒருநாள் சுந்தரத்திடம் …
“சார் என் பையனுக்கு மூனு வருஷமா நல்ல வேலை கிடைக்கல்ல. டிகிரி படிச்சிருக்கான்… ” என வருத்தத்துடன் சொன்னார்.

“நம்பிக்கையோட முயற்சி பண்ண சொல்லுங்க. உங்க பையனுக்கு நிச்சயமா நல்ல வேலை கிடச்சிடும்.

அப்போது குமார் அவரிடம்…
“சார் இப்படிச் சொல்றேனு தப்பா நினைச்சிக்காதிங்க. உங்களுக்குக் கீழே வேலை பாக்குறவங்களுக்கும் நீங்க மரியாதை கொடுத்து அவங்களை உக்கார வச்சி பேசறீங்க. அடுத்தவங்களோட கருத்தையும் கேக்குறீங்க. ஆனால் சேகர் சார் அப்படி இல்லை. இயல்பாகவே அடுத்தவங்க மேலே அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் உண்டு. மேலும் தான் பிடிச்ச முயலுக்கு மூனு கால் தானும் நம்பி அதை மத்தவங்களும் ஏத்துக்கனுமுன்னு எதிர் பார்ப்பார்…” என்றார்.

“மனுஷங்க எல்லாரும் ஒரே மாதிரி இருக்கறதில்லை குமார். ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி. ஒரு வகையில அவரைப் பொறுத்த மட்டில் அவர் செய்யறது சரிதான்…” என்று நண்பரை விட்டுக்கொடுக்காமல் சமாளித்தார் சுந்தரம்.

அன்று சேகரின் அறையில் அலுவலகத்தின் முக்கிய கோப்புகள் பற்றி விவாதிக்க வேண்டியிருந்து. பல நிமிடங்களாக எதிரில் நின்றபடியே பேசிக்கொண்டிருந்த சுந்தரத்தை சேகர் அமர சொல்லவில்லை. வெளியில் வந்த சுந்தரத்திற்கு… தன்னை சேகர் அப்படி நடத்தியது… ஒருவேளை வேலை மும்மரத்திலா, தன்னை அமரச் சொல்ல மறந்து விட்டாரோ…தனது உடல்நிலை பற்றி நன்கு அறிந்திருந்தும் நீண்ட நேரம் நிற்கவைத்தது தெரிந்தே நடந்ததா அல்லது மறந்து விட்டாரா …என்ற சந்தேகம் ஏனோ ஏற்பட்டது.

சேகர் வீட்டிலும் இப்படித்தான் . தானே எல்லா விஷயத்திலும் தானே கோலேச்ச வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். மனைவியை அடக்கி ஆள்வது முதல் பிள்ளைகள் மீது ஆதிக்கம் செய்வது வரை. எல்லா முடிவுகளையும் அவரே எடுப்பார். ஆங்கில நாளிதழ்களை அலசிப்படித்து செய்திகளை அதிகமாகத் தெரிந்து கொண்டிருப்பதால் தனக்குத்தான் அறிவும் பக்குவமும் புத்திசாலித் தனமும் அதிகம் என்று கருதிக் கொள்பவர்.

அவர் மனைவி சாந்தியோ இராமாயணம் மகாபாரதம் மற்றும் அவ்வப்போது கிடைக்கும் நல்ல நாவல்கள் புத்தகங்களை வாசிப்பார். சேகர் தன் மனைவியிடம்…

“சாந்தி நீ இன்னும் பழைய பஞ்சாங்கமா இருக்கே. வெளி உலகத்தைப் பாக்காமா உன்னை மாதிரி வீட்டுக்குள்ளேயே கிணத்துத் தவளையா இருக்குறவங்களுக்கு மென்டல் மெச்சூரிட்டி ஏற்படுறதில்லை … “என்று அடிக்கடி நக்கலாகப் பேசுவார்.

திருமணமான புதிதில் சேகர் தன்னைப் பற்றி மனைவியிடம் அதிகமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வார். “எனக்கு தெரிஞ்ச மாதிரி இங்கிலிசுலே எழுதுறவங்க எங்க ஆபிஸில் யாருமில்லை. எல்லாரும் அறைகுறை தான். நானும் ஆபிசிலே ஒருசில பேர் மட்டும்தான் மாஸ்டர் டிகிரி. மத்தவங்கள் எல்லாம் வெறும் டிகிரி தான்…” என்பார்.

“அப்புறம் ஒரு விஷயத்தை உன்கிட்ட மறைக்க விரும்பல்லை. காலேஜ் படிக்கிறப்ப ஒரு பெண் என்னை காதலிச்சா. என் மேலே ரொம்ப மரியாதையும் அன்பாவும் இருப்பா. என்னோட அறிவையும் திறமையையும் ரொம்ப பாராட்டுவா. ஆனா அவங்க வீட்டில தான் பிடிவாதமா வெளிநாட்டுல வேலை பாக்ககுற ஒருத்தனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்திட்டாங்க. என்னைய மாதிரி புத்திசாலி கணவன் கிடைக்கல அவளுக்கு… ” என தன்னைப் பற்றி பெருமையுடன் சொன்னார்.

அதுவும் சாந்தி தன்னை அதே மாதிரி முழுமையாக மதிக்க வேண்டும் என்ற ஒரு வித முட்டாள்தனமான எதிர் பார்ப்பில்தான் . அடிக்கடி சாந்தியை அந்தப் பெண்ணுடன் கம்பேர் செய்து செய்து பேசி அவரின் மனதை புண்படுத்தியது தான் மிச்சம் . இந்தக்கதை பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எப்போதாவது எற்படுவதுண்டு கமலத்திற்கு.

சேகர் ஒரு முறை சாந்தியிடம்…” திருமணத்திற்கு முன் உன்னை யாராவது காதலித்தார்களா அல்லது நீ யாரையாவது…. ” என்று கேட்டுவிட்டார் .

“அப்படி எதுவும் இல்லைங்க…. ” சாந்தியின் பதிலைக் கேட்டதில் அவருக்கு உள்ளூர மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது . பதில் வேறுவிதமாக இருந்திருந்தால் ஒரு வேளை அவர் மனைவியை விவாகரத்து கூட செய்திருக்கலாம். இருந்தாலும் தன் நிம்மதியையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அதையும் ஒரு விதமாக தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி பேசுவார்.

“காதலை உணர்ந்தவர்களுக்குத் தான் எந்தச் சூழலிலும் அடுத்தவங்களுக் காக விட்டுக்கொடுத்துப் போகத் தெரியும்…” என்று தன் மனைவி  தன்னிடம் எல்லா நிலமையிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என உணர்த்துவது போல் குத்திக்காட்டிப் பேசுவார். கோபம் வரும் வேளைகளில் மனைவியிடம் அவர் கை ஓங்கி விடுவதுமுண்டு. மனைவியோ அவரைப்பற்றி நன்கு புரிந்து வைத்திருந்ததால் அவரிடம் அதிகம் விவாதம் செய்யாமல் விட்டுக் கொடுத்துப் போய்விடுவாள்.

இப்படியே வருடங்கள் கழிய சேகர் பதவிஓய்வு பெறும் நாளும் வந்தது. ஓய்வு பெற்ற மறுநாள் முதல் இனி தன்னை யாரும் மதிக்கமாட்டார்களோ என்ற பயம் உள்ளுக்குள் ஏற்பட்டது. வீட்டில் மனைவியும் மகனும் கூட எங்கே தன்னை மதிக்காமல் போகும் நிலை வருமோ என்றும் நினைக்கத் தொடங்கினார். அன்றைய தினம் அலுவலகத்தில் நண்பர் சுந்தரத்தை தவிர மற்றசக ஊழியர்கள் முகத்தில் ஒருவித அதீத மகிழ்ச்சியோடு இருப்பது போலிருந்தது.

அன்று சேகர் வீட்டில் நுழைந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்த போது அலுவலகத்தில் அவர் தினமும் அமரும் அந்த பெரிய சுழல் இருக்கையின் உருவம் மின்னலாய் வந்து மறைந்து போனது.  அத்துடன் நீண்ட பெருமூச்சும் வெளிப்பட்டது. ஒரே நாளில் எல்லாம் மாறிவிட்டதாக நினனத்தார். வீட்டில் ஏசி இருந்தாலும் பகல் முழுவதும் போட்டு அனுபவிக்க முடியாது.

மனைவி சாந்தி் காபி டம்ளரும் கையுமாக வந்து நின்றாள். கணவரின் முகம் களையிழந்திருக்க, “என்ன விஷயம் ஏன் டல்லா இருக்கீங்க?” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல நீ போய் ஒன் வேலையைப் பார்.. ” என்றார் அதட்டலாய்.

அந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று சாந்தியின் கல்லூரித் தோழி கங்கா, பல வருடங்களுக்குப்பின் சாந்தியைக் காண வீட்டுக்கு வந்திருந்தாள். அப்போது சேகர் வீட்டில் இல்லை.  நண்பர் சுந்தரத்தைக்கான வெளியே சென்றிருந்தார்.

தோழிகள் இருவரும் குடும்பம், குழந்தைகள் எனப் பரஸ்பரம் விசாரித்துக் கொண்ட பின் கல்லூரி நாட்களைப் பற்றி பேசத்துவங்கினர்.

“சாந்தி, சமீபத்தில் ஒரு கல்யாணத்திலே மூர்த்தியைப் பார்த்தேன். ஆனால் அவசரமா புறப்பட வேண்டி இருந்ததால சரியா பேச முடியலை. ஆள் அப்படியே பழைய மாதிரியே இருந்தார். நீ மூர்த்தியை மறந்துட்டியா..? ”

“எப்போதாவது நியாபகம் வரும், அவ்வளவு தான். ”

“ஒருவேளை நீ உன்னை காதலிச்ச மூர்த்தியை கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் சந்தோஷமா வாழ்ந்திருப்பேனு எனக்குத் தோனுது. மூர்த்தி ரொம்ப நல்ல டைப். துரதிஷ்டவசமா உங்க காதல் நிறைவேறல்ல. ”

“இருக்கலாம். ஆனா இவர் கூட நான் நல்லாதான் இருக்கேன். கணவன் மனைவி உறவுல யாராவது ஒருத்தர் ஒரு சமயத்தில விட்டுக்கொடுக்கனும்.  இங்கே பெரும்பாலும் நானே விட்டுக்கொடுத்துப் போறேன்.. அவ்வளவுதான்.”

“உன்னைத் திருத்த முடியாது. சரி உன் காதலைப்பத்தி எப்போதாவது உன் வீட்டுக்காரர் கிட்ட பேசி இருக்கியா.?”

“என்ன கேள்வி இது கங்கா இத்தனை வருடங்களுக்குப் பிறகு. எந்த மனைவி கணவனிடம் இவ்வளவு மனம்திறந்து பேசமுடியும்.அதுமட்டுமில்ல முடிஞ்சிப்போன விஷயத்தைப்பத்தி இப்பப் பேசி என்ன பிரயோஜனம் விடு… ”

“உன் நெருங்கிய தோழியான என்கிட்ட உன் மனசுல இருக்கறதை சொல்லுடி.. ”
என வற்புறுத்தினாள் கங்கா.

“ஆண்கள் தங்கள் முன்னாள் காதலை பெருமையா சொல்லிக்கிற மாதிரி பெண்களால அதப்பத்தியெல்லாம் பேசக் கூட  முடியறதில்லை. அதை தாங்கிக்கற மனோபாவம் நிறைய ஆண்களுக்கு இருக்கிறதில்ல.

உண்மையா நடந்ததைச் சொன்னாலும் சில விஷயங்களை மறைக்கிறாங்களோனு சந்தேகப்படுகிறவங்களும் இருக்காங்க. மேலும் தான் எப்படி இருந்தாலும் தன் மனைவி மட்டும் யாரையும் காதலித்திருக்கக் கூடாதுன்னு எதிர்பார்க்கிறவங்களும் இருக்காங்க.

நான் என் கணவரிடம் எதையும் மறைக்க விரும்பல்லை. நான் அவருக்கு உண்மையாகவே இருக்க விரும்புகிறேன். இது போன்ற விஷயங்களை ஏத்துக்கவும் வாழ்க்கைத் துணையை முழுமையா புரிஞ்சிக்கிற மனப்பக்குவமும் மனமுதிர்ச்சியும் வேணும்.   அது ஒவ்வொருவருக்கும் ஒரு காலகட்டத்தில் வரும் . சிலருக்கு அந்த மனப்பக்குவம் இயல்பாகவே இருக்கும். சிலருக்கு முதுமையில தான் வரலாம். ஆனால் என் கணவருக்கு  அந்த மனமுதிர்ச்சி இருப்பதால் அவரிடம் நான் முன்பே சொல்லியிருக்கிறேன்…அவரும் அதைப் பக்குவமா புரிஞ்சிக்கிட்டார்…” என்று பொய் சொன்னாள் சாந்தி.

நீண்ட காலத்திற்கு பிறகு வந்த தோழியை பார்த்த சந்தோஷத்தில் வாசல் கதவின் தாழ்ப்பாளை சரியாகப் போடாமல் வந்து அறைக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் சாந்தி. கதவு சத்தமில்லாமல் திறந்து கொள்ள உள்ளே நுழைந்த சேகர் அனைத்தையும் கேட்டுவிட்டார். எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் போர்டிகோவில் செய்தித்தாள் படிப்பது மாதிரி அமர்ந்திருந்த சேகருக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்து போனது மாதிரி இருந்தது. முதல் முறையாகத் தனது மனைவியின் மனமுதிர்ச்சியின் முன் தான் மண்டியிடுவது மாதிரி உணர்ந்தார் சேகர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *