மனதை காக்கும் மகிழ் உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 2,308 
 

வினய் ஏழாவது முறையாக ஃபோன் செய்து விட்டு, “ச்சே, எங்கே போய்ட்டாரு அப்பா, அம்மா இருப்பாங்களே, அவங்களும் எடுக்கலையே, என்ன நடந்தது அங்கே” என்று அலுப்புடனும், கவலையுடனும் சொல்லிக்கொண்டே வந்தான். பக்கத்து அறையில் இருந்து வந்த அஸ்வினி, “அப்பாவோட நண்பர் ரத்தினம் இருப்பாரே, அவருக்கு கூப்பிட்டு பாத்தீங்களா?”என்றாள். “எல்லாம் அதையும் ‘ட்ரை’ பண்ணிட்டேன். அவரு ஃபோன் செஞ்சப்பவும் அப்பா, அம்மா எடுக்கலை.நான் அந்த மேனேஜரை கூப்பிடலாம்னா ‘நாட் ரீச்சபில்’ அப்டீன்னு வருது.” வினய் விரக்தியுடன் சொன்னான். “சரி, வா, நாம் திவாகரை கூப்டு விஷயத்தை சொல்வோம்” என்றான் வினய்.

வினய் அவன் மனைவி அஸ்வினி, அவர்களின் ஐந்து வயது பையன் தருண், இரண்டு வயதில் பெண் குழந்தை தான்யா எல்லோரும் வசிப்பது கலிபோர்னியாவில். கணவன், மனைவி இருவரும் மென்பொருள் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகிறார்கள். வினய் தன் பெற்றோர்கள் நடேசன், பானுமதி தம்பதியரை ‘மகிழ்ச்சி வனம்’ என்ற பெயரில் சென்னைக்கு அருகில் உள்ள வசதியான முதியோர் இல்லத்தில் ஆறு மாதங்கள் முன்பு சேர்த்து விட்டிருந்தான். ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு சனி, ஞாயிறன்று தொடர்பு கொண்டு பேசுவான்.


சிகாகோவில் குடியிருந்து வரும் மற்றொரு மென்பொருள் துறை பொறியாளர்களான திவாகரும் அவன் மனைவி அனுசுயாவும், கடந்த இரண்டு மணிநேரம், திவாகரின் பெற்றோர்களைத் தொடர்பு கொள்ள முயன்று தோல்வியடைந்தனர். ” ஒரே கவலையா இருக்கு அனு.நீ உன்னோட அப்பாவைக் கூப்பிட்டு, இவங்களை கான்டாக்ட் பண்ணச்சொல்றியா?”. என்றான் திவாகர். அனுசுயா உடனே அவளுடைய பெற்றோரை அழைத்து விவரம் சொன்னாள். முக்கால் மணி நேரம் கழித்து, அனுசுயா சொன்னாள்.” அப்பா, அம்மா ரெண்டு பேரும் அரை மணி நேரமா ஃபோன் செஞ்சிருக்காங்க, லைனே போகலைங்கறாங்க.மானேஜரும் ஃபோனை எடுக்கலை.”

இதைக் கேட்டவுடன் திவாகர், “சரி, கதிரவனை கான்டாக்ட் பண்ணி கேக்கலாம்.அவன் கேட்டு பாத்துட்டு சொல்லட்டும்.” என்றான். தண்டபாணியும் அவரின் மனைவி மீனாட்சியும் , திவாகரைப் பெற்றவர்கள். ஆறு மாதங்கள் முன்பு “மகிழ்ச்சி வனம்” முதியோர் இல்லத்தில், திவாகரும், அனுசுயாவும் சேர்த்து விட்டனர். அந்த நேரத்தில் வினயிடமிருந்து அழைப்பு வந்தது.


சிந்தியா நார்த் கரோலினாவில் தன் கணவன் கதிரவனுடனும், மூன்று வயதான வேதா என்ற பெண் குழந்தையுடனும் வசிக்கிறாள். அவளும், கதிரவனும் காதல் திருமணம் செய்தவர்கள், இந்தியாவில் உள்ள ஒரு பெரிய மென்பொருள் அலுவலகத்தில் ஒன்றாக பணி செய்தவர்கள, அப்பணிகளின் தொடர்பாக அவர்களை அமெரிக்காவிற்கு ஒரு புதிய வணிகத்திட்டத்தை கையாள்வதற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கதிரவன், சிந்தியா இருவரும் அதை வெற்றிகரமாக முடித்து விட்டு, அங்குள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து ஏறக்குறைய நான்கு வருடங்களாக அங்கேயே இருந்து விட்டார்கள்.

கோவிந்தராஜ், கண்ணம்மாள் இருவருக்கும் ஒரே மகள் சிந்தியா. தன்னுடைய துணை இல்லாமல் அவர்கள் தனியே இருப்பதை விரும்பாத சிந்தியா, கடந்த ஆறு மாதங்கள் முன்னர், இந்தியா வந்தபோது “மகிழ்ச்சி வனம்” இல்லத்தில் அவர்கள் வாழ்க்கையை தொடரச்செய்து விட்டு அமெரிக்கா சென்றாள். ஆனால் இன்று மாலை முதல் அவளும், கதிரவனும், கோவிந்தராஜ், கண்ணம்மாள் இருவரையும் தொடர்பு கொள்ள முயன்று முடியாமல், தவிப்புடனும் கவலையுடனும் இருக்கிறார்கள். அப்போது, திவாகர் அழைத்தான்.


அமெரிக்காவில் வசிக்கும் இவர்கள், தம்முடைய பெற்றோர்களிடம் பேசவேண்டும் என்ற நோக்கத்துடன் முயற்சி செய்து, முடியாமல் போன நேரத்திற்கு ஏழு மணி நேரம் முன்பே, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்தில் ஒரு பிரபல நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் தினேஷ், அதே போன்று அவனுடைய பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டு பேசமுடியாமல் போனது. தினேஷ், அவன் மனைவி புனிதா, மூன்று வயது பையன் கிரண் மூவரும் ஆம்ஸ்டர்டம் நகரில் கடந்த மூணரை வருடங்களாக வசித்து வருகிறார்கள். புனிதாவும் அங்குள்ள ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் பணி புரிகிறாள்.

கனகராஜ், பவானியம்மாள் தம்பதியர்க்கு தினேஷ், கவிதா என்ற இரு வாரிசுகள். கவிதா தினேஷை விட நான்கு வயது மூத்தவள். திருமணத்திற்கு பின், கனடா சென்று கணவன், குழந்தைகளுடன் வசிக்கிறாள். ஆறு மாதங்கள் முன்பு, பெற்றோர்களைப் பார்க்க வந்த தினேஷ்,புனிதா இருவரும் அவர்களை தனியாக இருக்க வேண்டாம் என எண்ணி, “மகிழ்ச்சி வனம்” முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர். இப்போது அவருடைய செல்லிடப்பேசிக்கு என்ன ஆயிற்று, ஏன் பதிலளிக்காமல் இருக்கிறார் என புரியாததால் புனிதாவைப் பார்த்து, “புனிதா, நீ உன் ஃப்ரெண்ட் ஸ்டெல்லா துபாயில்தானே இருக்கா, அவளையோ அல்லது அவள் ஹஸ்பண்ட் ஜேம்ஸையோ கான்டாக்ட் பண்ணி, என்ன ஆச்சுன்னு கேளு. அவங்க அப்பா, அம்மா அங்கதானே இருக்காங்க, அவங்களோட நிச்சயம் ஸ்டெல்லா பேசிருப்பா இந்நேரம்.” என்று படபடவென கூறினான். புனிதா, உடனே ஸ்டெல்லாவிடம் பேசி முடித்து, தினேஷை பார்த்து முகமலர்ந்தாள்.


ஜேம்ஸ் ஒரு கட்டுமானத் துறை பொறியாளர். ஸ்டெல்லா கப்பல் துறையில் மேலாளராக இருப்பவள். தங்களுடைய பெண் குழந்தை ஜோஸ்லினுடன் துபாயில் இருந்து வருகிறார்கள். ” மகிழ்ச்சி வனம்” முதியோர் இல்லத்தில், ஆறுமாதங்கள் முன்னர், ஸ்டெல்லா அவளுடைய பெற்றோரை தங்க வைத்தாள்.ஸ்டெல்லாவும், புனிதாவும் கல்லூரித்தோழிகள். வில்லியம்ஸ், ரெஜினா அவளுடைய பெற்றோர்கள், தனியாக இருக்க முடியும் என்று தைரியமாக சொன்னாலும், ஸ்டெல்லா மறுத்து, ஜேம்ஸ் உதவியுடன், இந்த இல்லத்தில் சேர்த்து விட்டாள்.

அன்று மாலை அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினாள். அவர்கள் நலமாக இருப்பதை அறிந்தாள். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அவள் பெற்றோர்கள் அந்த இல்லத்தில் இல்லை என்றும், சென்னைக்கு சற்று வெளியே உள்ள, தோட்டத்துடன் கூடிய ஒரு பெரிய வீட்டில் இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டதுதான். அவர்கள் மட்டுமல்லாமல், நாம் இதுவரை கடந்து வந்த மற்ற நான்கு தம்பதியினரின் பெற்றோர்களும் அங்கேதான் தங்கியிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டாள். ‘ இதை எங்களிடம் சொல்லவே இல்லையே ‘ என்றதற்கு, ‘ ஆச்சரியப்படுத்த ஸஸ்பென்ஸாக வைக்க முடிவு செய்தோம் ‘ என்றார் வில்லியம்ஸ்.

இது நடந்து மூன்று மணி நேரம் சென்றபின் புனிதாவின் செல்லிடப்பேசி அழைப்பு வந்தது. அப்போது அவர்களிடம் விவரங்கள் சொன்னாள் ஸ்டெல்லா. ஆனால், புனிதாவும், தினேஷும் அழைத்தபோது தினேஷின் பெற்றோர்கள் அதற்கு பதிலளிக்காமல் இருந்தது ஏன் என்று புனிதா கேட்டதற்கு, ஸ்டெல்லாவும் குழம்பிப்போய், ‘ அதுதான் ஏனென்று புரியவில்லை ‘ என்றாள்.

ஆறு மாதங்கள் முன்பு :

வினய், அஸ்வினி; திவாகர், அனுசுயா; கதிரவன், சிந்தியா; தினேஷ், புனிதா ; ஜேம்ஸ், ஸ்டெல்லா இவர்கள் அனைவரும் ஒரே நாளில் ‘ மகிழ்ச்சி வனம்’ முதியோர் இல்லத்தில் கூடியிருந்தனர். இவர்களில் ஸ்டெல்லாவும், புனிதாவும் முன்பிருந்தே தோழிகள். மற்ற அனைவரும் ஒருவரை ஒருவர் அன்றுதான் சந்தித்துக் கொண்டனர். புனிதா, ஸ்டெல்லா இருவரும் அவரவர் திருமணம் நடந்த போது அதில் வெவ்வேறு காரணங்களால் பங்கேற்க முடியவில்லை. தங்களது கணவரை காணொளி மூலம் ஒரு முறை அறிமுகம் செய்து வைத்தனர்.

அதே போல் அங்கே நடேசன், பானுமதி; தண்டபாணி, மீனாட்சி; கோவிந்தராஜ், கண்ணம்மாள்; கனகராஜ், பவானியம்மாள்; வில்லியம்ஸ், ரெஜினா; இவர்களும் இந்த இல்லத்தில் சேர்வதற்காக வந்திருந்தனர். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தங்கள் கதைகள், பிள்ளை பெண்கள் பற்றிய பேச்சுக்கள், வேறு பல பொதுவான நிகழ்வுகள் இதையெல்லாம் பேச ஆரம்பித்து, இதனிடையே அவர்களின் வாரிசுகளும் அந்த உரையாடல்களில் கலந்து கொள்ள, எளிதில் நல்ல ஒரு நட்பில் முடிந்தது. எல்லோரும் குறைந்த பட்சம் இரண்டு முறை அவர்களை காணொளியில் அழைக்க வேண்டும் என்றும், பணிச்சுமை இருந்தால் கண்டிப்பாக ஒரு முறையாவது கூப்பிட்டு பேசவேண்டும் என்றும் பெரியவர்கள் கூற, இளையவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு, பெரிய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு ‘இல்லத்தில்’ முதியவர்களை சேர்த்து விட்டு, இளையவர்கள் அவரவர் வழியில் திரும்பினர். அதற்கு முன், அவர்களுள் யார் இல்லத்திற்கு அழைத்து, விஷயங்கள் அறிந்தால் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒன்றாகப்பேசி சம்மதித்தனர். இப்படியே ஆறு மாதங்கள் நல்ல முறையில் கடந்தன. அவர்களிடை நட்பும் மேலும் கூடியது.

‘மகிழ்ச்சி வனம்” இல்லத்தில் இந்த ஆறு மாதங்களில் நடேசன் தனியார் நிறுவனப் பொறியாளராக இருந்தவர். கலகலவென்று பேசினாலும் கண்டிப்பாக இருப்பவர். பானுமதி ஓவியம் வரைவதில் வல்லவர். இயந்திரங்களுடன் அதிகமாக பணிசெய்து வந்த நடேசனையே இயந்திரம் போல் வரைந்து ‘நவீன எந்திரன்’ என்று பெயர் சூட்டி, இதை மற்ற பெரியவர்கள் பார்த்து, சிரித்து வேடிக்கையாக கிண்டல் செய்தனர்.

தண்டபாணி, மீனாட்சி இருவரும் வங்கிப்பணி செய்து ஓய்வு பெற்றவர்கள். ‘ என்ன, வங்கியை, எங்க வரவு செலவு கணக்கையும் நீங்கதான் பாத்துக்கணும்.’ மற்ற பெரியவர்கள் கூற, மீனாட்சி ‘ அது ஓகே, ஆனால் அதுக்கு சார்ஜ் வரும்.மாதாமாதம் தரணும் ‘ சொல்ல, மற்றவர்கள், ‘நாங்க உங்களோட இருந்து, எத்தனை ஜோக்ஸ் சொல்லி சிரிக்க வைக்கறோம், அதுக்கே நீங்கதான் பணம் கொடுக்கணும்னு ‘ சொல்லி சிரிப்பார்கள்.

கோவிந்தராஜ் ரயில்வே துறையில் வேலை பார்த்தவர். கண்ணம்மாள் தோட்டக்கலை படித்தவள்.மாடித்தோட்டங்கள் சிறப்பாக அமைப்பார். இவர்கள் அனைவரும் உணவருந்த போகும்போது அல்லது மாலை வெயிலில் சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது அல்லது ஏதாவது ஒரு பிரார்த்தனை கூட்டம் நடத்த அமரும்போது, தாமதமாகவே வந்து கலந்து கொள்வார் கோவிந்தராஜ். ‘ ரயில்வேகாரர் இல்லையா, லேட்டாத்தான் வருவாரு, இந்தம்மா தோட்டத்து பயிர்களோட பழகினவங்க, அதான் கரெக்டா நேரத்துக்கு வந்துடுவாங்க ‘ என்று கிண்டல் செய்வார்கள். சமையல் கலையிலும் கண்ணம்மாள் மிகவும் திறமையான பெண்மணி. அற்புதமாக சமைப்பார்.

கனகராஜ், நெல் அரவை மில் மற்றும் சமையல் எண்ணெய் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் வணிகமும் செய்து வந்தவர். ஒரு வருடம் முன்பு, தன் உடல்நலம் கருதி, இவரை விட மிக இளையவரான தம்பியையும், தன் முழு நம்பிக்கைக்கு உரிய மேலாளரையும் கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டு இவர் ஒதுங்கினார்.மாதம் ஒரு முறை போய் வருவார். பவானியம்மாளும் கண்ணம்மா வைஃப் போலவே மிக ருசிகரமாக உணவு சமைப்பார். அந்த இல்லத்தின் உணவகத்தில் சில நாட்களில், சாப்பாடு சுமாராக இருந்தால், பவானியம்மாளும், கண்ணம்மாளும் தங்கள் குழுவிற்கு தனியே தங்கள் அறையில் உணவு சமைப்பார்கள். இதற்காகவே மற்றவர்கள் ‘ கடவுளே, இன்னிக்கு சாப்பாடு நல்லா இல்லாமல் இருக்கணும். அப்பதான், இந்த அம்மணிகள் சமைக்கற சூப்பர் சாப்பாடு கிடைக்கும்.’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கனகராஜ், கோவிந்தராஜ் இருவரும் கொஞ்சம் நொறுக்குத்தீனி பிரியர்கள். மற்றவர்கள் அளவோடு சாப்பிடும் நேரத்தில் இவர்கள் இருவரும் முடித்து விடுவார்கள். ‘ இவரு அரவை மில், அவரு ரயில் பயண அரவை, ரெண்டு பேரும் இப்படித்தான் இருப்பாங்க ‘ என்று கேலி செய்து சிரித்து பேசிக்கொள்வார்கள் அனைவரும்.

வில்லியம்ஸ் கட்டுமானத் துறையில் இருந்தவர். சிறிய வகை மனைகள் வாங்கி அங்கே, நடுத்தர குடும்பங்களின் நிதிநிலை அளவுக்கேற்ப, நல்லவிதமாகவும், தற்கால அமைப்புகளுடனும் வசதிகளுடனும் வீடுகள் கட்டி, விற்று பணம் ஈட்டி வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலம், அவர் வேகத்திற்கு ஒத்துழைக்காத தால், அப்பணிகளை நிறுத்தி விட்டார். ரெஜினா சிறுதானியங்களில் பிஸ்கட் நன்றாகச் செய்பவர். அது தவிர, முதலுதவி சிகிச்சைகள், தற்காப்பு கலைகள் இவைகளை கற்றவர். இவர்களில் யாருக்காவது ஏதேனும் உடல்நலம் சிறிய அளவில் பாதித்தால், வீட்டு

வைத்தியம் உடனடியாக செய்து குணப்படுத்துவதில் வல்லவர். ‘முதல் டாக்டரம்மா நீங்கதான் எங்களுக்கு, அது முடியலேன்னாதான் வேற வெளி டாக்டரை பார்ப்போம்’ என்று இந்த குழுவில் எல்லோரும் சொல்வார்கள். ‘இனிமேல் கன்ஸல்டிங் ஃபீஸ் சார்ஜ் பண்ணலாமான்னு யோசிக்கிறேன் ‘ என்று சிரித்தபடியே கூறுவார் ரெஜினா.

இப்படியே இவர்களது நாட்கள் ஆனந்தமாகவும், புதிய அனுபவங்களுடனும் போய்க்கொண்டிருந்தாலும், இவர்கள் மனதில் பூரண திருப்தி அல்லது அமைதி இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில், அவ்வில்லத்தில் அறிமுகமான வெங்கடாசலம் என்பவர் ஒருநாள் இவர்கள் அனைவருடனும் வெளிப்பூங்காவில் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார் .”என் பையனுடன் அமெரிக்காவுக்கு போய் தங்கிடப் போறேன். அவனும், மருமகளும் மூணு வருஷமா வற்புறுத்தி கூப்டுட்டே இருக்காங்க. அவங்களுக்கு நான் இங்கே வந்து சேந்ததுல இஷ்டமே இல்லை. பெருங்களத்தூர் கிட்ட இருக்கிற தோட்டத்தோட இருக்கற பங்களா வீட்டை வித்துட்டு புறப்படலாம்னு இருக்கேன். நான் இங்க இருந்த இந்த ஆறு மாசத்தில நீங்க எல்லாரும் மறக்க முடியாத நண்பர்கள். எப்படியும் இன்னும் ஒரு மாதம் இருப்பேன். நாம் தொடர்ந்து வாட்ஸப்பில் பேசிக்கலாம் நான் அங்கே போனாலும்.” இதைக்கேட்ட நடேசனும், தண்டபாணியும் “வெங்கடாசலம் சார், உங்க நட்பை எங்களாலயும் என்னிக்கும் மறக்க முடியாது. எங்களுக்கு அங்கெல்லாம் போகணும்னு தோணலை சார். இந்த இல்லத்தில் எல்லாம் இருந்தும், ஏதோ எங்க மனசுக்குள் ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங் மாதிரி இருக்கு. அதனால நாங்க அஞ்சு தம்பதியர்களும் தனியா ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கலாமான்னு கலந்து பேசிக்கிட்டு இருந்தப்ப இதை நீங்க சொல்றீங்க. எங்களால உங்க பங்களாவை வாங்க முடியாது. ஆனால் வாடகை நியாயமான முறையில் கொடுப்போம். எங்களை நம்பி, எங்களுக்கு வாடகைக்கு விட முடியுமா?” என்று கேட்டனர்.

மிகவும் மகிழ்ச்சியுடன் வெங்கடாசலம் “ஒரு பிரச்னையும் இல்லை.உங்களை முழுசா நம்பறேன். அடுத்த வாரமே உங்களை அங்க அழைச்சிட்டு போறேன். அக்ரிமெண்ட் போட்டு அதுக்கு அடுத்த வாரம் உங்ககிட்ட சாவி தரேன். அங்கயும் வீட்டு முறைப்படி சமையல் செய்து தர இடங்கள், மெடிகல் வசதி, கோவில் எல்லாம் இருக்கு. நான் அறிமுகப்படுத்தி விடறேன். ஆனால் உங்க வாரிசுங்க இதுக்கு சம்மதிப்பாங்களா?” என்றார்.

“இதெல்லாம் எங்க முடிவு. அது அவங்க காதுக்கு நாங்க இப்ப எடுத்துட்டு போக மாட்டோம். நீங்க இதை எங்களுக்கு செஞ்சு கொடுங்க” என்று எல்லோரும் கூறினர்.

இது நடந்த மூன்று வாரங்களில் இந்த ஐந்து புதிய தம்பதியர்கள் அந்த பங்களாவுக்கு குடி பெயர்ந்தனர். தங்களுக்குள் அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, எல்லோரும் தங்களால் இயன்ற வேலைகளை செய்துகொண்டு முன்பைவிட மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அவர்கள் வாரிசுகளின் தொலைபேசி அழைப்பு பெரும்பாலும் இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு வரும். அன்றும் அதே போல் கோவிந்தராஜ் செல்லிடப்பேசி ஒலித்தது. அது காணொளி அழைப்பு. பதிலளிக்க கோவிந்தராஜ் முற்பட, மறுமுனையில் இருந்து சிந்தியா ” எப்படிப்பா இருக்கீங்க? ஏன் நேத்து ஃபோன் எடுக்கலை?” என்று கூறி விட்டு ” அப்பா, நான் மட்டுமல்ல, எல்லா வாரிசுகளும் லைன்ல இருக்கோம். இன்னிக்கும் எல்லோரும் ட்ரை பண்ணோம். ஆனால் உங்க நம்பர்ல கூப்பிட்ட உடனே எடுத்திட்டீங்க.மத்தவங்க எடுக்கலை நேத்து நீங்க எடுக்கலை. என்ன நடக்குது அங்கே? வேற இடத்தில் இருக்கிறதா ஸ்டெல்லா நேத்து சொன்னா.என்னாச்சு அப்பா?” என்று கேட்டாள். ஞாயிறு காலை உறக்கம் தியாகம் செய்து காணொளியில் இருந்த வினய், திவாகர், கதிரவன், மதிய உறக்கம் தொலைத்த தினேஷ், மாலை வெளியே செல்லும் திட்டத்தை புறந்தள்ளிய ஜேம்ஸ், அவரவர் மனைவி எல்லோரும் இதையே பதட்டத்துடன் கேட்டனர்.

கோவிந்தராஜ் உடனே ” இரும்மா, என்னைவிட அழகா கோர்வையா நடேசன் சொல்வாரு பாரு. நீங்க விவரம் சொல்லுங்க நடேசன். மத்தவங்க குறுக்கே பேசாதீங்க ஐயா.” என்றார். நடேசன் கூற ஆரம்பித்தார்.

“கண்ணுங்களா, நாங்க எல்லாம் நல்லா ஜாலியாத்தான் இல்லத்தில் இருந்தோம். ஆனாலும் அது ஒரு பணி ஓய்வு பெற்று, தங்களுக்கு பிடித்ததை செய்து கொண்டு, விருப்பப்பட்ட நேரத்தில் விரும்பியதை செய்தல் இவைகளுக்கு அது அவ்வளவு ஏற்றதாக இல்லை. என்ன இருந்தாலும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நேரம், காலம் அட்டவணைகள் உண்டு. எங்களுக்கு சிலசமயங்களில் வேண்டிய மாதிரி உணவுகள் இப்படி எல்லாம் எப்பவும் எதிர்பார்க்க முடியாது. அதே சமயத்தில் நீங்க எல்லாரும் இருக்கற இடத்துக்கு வந்துடற அளவுக்கு மனசு பக்குவப்படலை. எங்களுக்குள் யோசித்து, திரும்பத் திரும்ப பேசி, இதே ஒற்றுமையை, தினப்படி வாழ்க்கையை ஏன் நமக்குன்னு ஒரு இல்லம் அமைச்சிட்டு, ஒருத்தருக்கொருத்தர் துணையாவும், அவரவர்க்கு விருப்பங்கள் போல் நாளைக்கழித்தல், வேண்டிய உணவுவகைகள் தயாரிக்கணும்னா எல்லாரும் சேர்ந்து செய்வது, இப்படி இருக்கக்கூடாதுன்னு முடிவு செஞ்சப்போ, அங்கேயே அறிமுகமான நல்ல மனுஷன் வெங்கடாசலம் சந்தோஷமா இந்த

பங்களா வீட்டை ரொம்ப குறைஞ்ச வாடகைக்கு கொடுக்க சம்மதிச்சவுடனே, நாங்க தாமதிக்காமல் இங்கே வந்துட்டோம். மேனேஜர் உங்ககிட்ட சொல்லாம அனுமதிக்க மாட்டேன்னுதான் சொன்னாரு. ஆனால், தண்டபாணி எப்படியோ பேசி அவரை சம்மதிக்க வச்சுட்டாரு.

இங்கே வந்தவுடன் நாங்க எங்களுக்குள்ள போட்டுகிட்ட கண்டிஷன் என்னன்னா, ஒரு நாளைக்கு ஒருத்தரோட செல்போன்தான் வெளிய இருக்கும். அதுல கால் வந்தா மட்டுமே அட்டென்ட் பண்ணுவோம்.நேத்து வில்லியம்ஸ், இன்னிக்கு கோவிந்தராஜ், நாளைக்கு என்னோட ஃபோன் இப்படி. இதனால எங்களுக்கும் செல் போனுக்கும் இடைவெளி அதிகமாக்கிட்டு, அந்தக்காலம் மாதிரி சின்னச்சின்ன விளையாட்டுகள், கதைகள் ஒருத்தர் ஒருத்தரா சத்தத்துடன் படிக்கறது, தோட்ட வேலை, சில சமயங்களில் டி.வி, நல்ல சினிமாவாக இருந்தால் மட்டுமே பாக்கறது, புதுசா ஏதாவது வெளிநாட்டு மொழி பயிற்சி எடுத்துக்கறது இப்படி பல. உங்களுக்கு அடுத்த வாரம் சஸ்பென்ஸ் உடைக்கலாம் அப்படின்னு இருந்தோம். நீங்களே லைன்ல வந்துட்டீங்க. கண்ணம்மாள், பவானியம்மாள் ரெண்டு பேரும் எங்க எல்லாருக்கும் ஏதாவது சில விருப்ப உணவு சாப்பிடணும்னா, அருமையா செஞ்சு கொடுத்துடுவாங்க, நாங்களும் ஹெல்ப் செய்வோம். தோட்ட வேலைக்கு முக்கியமான தேவைகளை கண்ணம்மாள் வழிகாட்டறபடி நானும், வில்லியம்ஸும் பாத்துப்போம். வீட்டு சுத்தம், மற்ற பராமரிப்பு ரெஜினா, கோவிந்தராஜ் டிபார்ட்மெண்ட். பர்சேஸ், மத்த வரவு செலவு டீலிங் தண்டபாணி, கனகராஜ் இன்சார்ஜ். ஆனாலும் இது ஒரு கூட்டுக்குடும்பம். முதியோர்களின் கூட்டுக்குடும்பம். இங்கே மெஷின்கள் ரொம்ப குறைவு. அடுத்த ஸ்ட்ரீட்ல பெரிய ஹாஸ்பிடல். வீட்டு முறைப்படி சமையல் செஞ்சு தினமும் டெலிவரி வந்துடுது. அரை கிலோ மீட்டர்ல கோயில், சர்ச் எல்லாம் இருக்கு. சுற்றி இருக்கறவங்களும் நல்லா பழகறாங்க.

நீங்க எங்களை “மகிழ்ச்சி வனம்” இல்லத்தில் இருக்க சொன்னீங்க. உடலும், சூழலும் மகிழ்ச்சிதான் அங்கே. ஆனால் இங்கே எங்களுக்கு எங்களோட மனசை தெம்பா வச்சு மனசை காக்கற மகிழ்ச்சி உலகமாக இருக்கு. இன்னும் பத்து வயசு எல்லாருக்கும் குறைஞ்ச மாதிரி உணர்வு வந்திருக்கு, தெரியுமா? ” என்று சிரித்தபடியே முடித்தார் நடேசன்.

“எல்லா முதியோர்களும் இப்படித்தான் இருக்கணும்னு நாங்க சொல்லை பிள்ளைங்களா! நாங்க எல்லாரும் ஒரே மாதிரியான ஒருமித்த மனசோட இதை யோசிச்சோம். நடைமுறை படுத்தினோம். அது தவிர எங்களுக்கு ஹெல்த் எல்லாம் மோஸ்ட்லி நார்மலாதான் இருக்கு. அதனால கஷ்டமா தெரியலை.” இவ்வாறு கனகராஜ் விளக்கினார்.

வாரிசுகள் அனைவரும் இதை ஒப்புக்கொண்டனர். சந்தோஷமான சிரிப்புடனும், ஆனந்தக்கண்ணீருடனும் அந்த முதியோர்களின் மனம் காக்கும் உலகத்தை ரசித்தனர். அப்போது தண்டபாணியும், கோவிந்தராஜும், “நாளைலேர்ந்து உங்க எல்லாருக்கும் ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்புவோம். அதில் அன்று யாருடைய ஃபோன் ஆன்ல இருக்கும்னு தகவல் இருக்கும். ஓ.கே?” என்று கூறினார்கள். மன நிறைவான சிரிப்புகளுடன் இந்த உரையாடல்கள் முடிவுக்கு வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *