மனசு நனைந்த மழைக் காலங்களில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 2,046 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

தொலைபேசி மணி எழுப்பியது. “அப்பு. சித்தப்பா பேசறேம்ப்பா. சபியை ஒரு வாரமா காணோம்ப்பா. அங்கே வந்தானா?” 

மறுபடி காணாமல் போயிட்டாரா! 

“வரலையே சித்தப்பா. ஸபர் பண்ணுங்க..” 

“இன்னைக்கு நைட் ஃபோன் செய்யறேன். வந்தா அவனை நைஸா பேசி அங்கேயே தங்க வை. தகவல் கொடு. நாங்க வந்து கூட்டிட்டுப் போறோம்..”என்றார். 

இப்படி சபிபாய் காணாமல் போவது எத்தனையாவது முறையாக இருக்கும்? எண்ணிக்கை நினைவில்லை. ஆனால் சின்ன வயசிலிருந்து நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிறைய முறை சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுப் போயிருக்கிறார். சில நாட்களோ, பல நாட்களோ கழித்து வருவார், வரும்போது புது கெட்டப்பில் வருவார்; சில சமயங்களில் தாடி வைச்சிருப்பார்; சில சமயங்களில் மொட்டை அடிச்சிருப்பார்; எங்கேயும் போவார்; எதையும் செய்வார்; எந்த எளிய வீட்டிலும் தங்கிவிடுவார். தான் பணக்கார வீட்டுப்பிள்ளை என்கிற எண்ணம் கிடையாது. 

அப்படித்தான் ஒரு முறை எங்க வீட்டுக்கும் வந்திருந்தார். 

எங்களுக்கு எல்லாம் ரொம்ப குஷி. 

“சபி பாய்… சபி பாய்…” என்று ஓடிச் சென்று கட்டிக் கொண்டோம். 

பிஸ்கெட், சாக்லெட் கொடுத்தார். அப்பத்தான் கவனித்தேன். அவர் கையில் இரட்டைஇலை  பச்சை குத்தி இருந்தது. அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பது தெரிந்ததுதான். இவ்வளவு தூரமா? மாலை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போனார் மலைக் கள்ளன் அநேகமாக நான் பார்த்த முதல் படம் என்று நினைக்கிறேன். டெண்ட் கொட்டகை கறுப்பு-வெள்ளையின் அழகில் மனசைப் பறிகொடுத்தேன். ஒரே புரொஜக்டர் என்பதால் மூன்று இடைவேளையிடுவது அப்போது சிறப்பு அம்சமாக இருந்தது. அந்தச் சமயங்களில் சபி பாய் முறுக்கு வாங்கித் தருவார். எம்.ஜி.ஆர் வரும்போதெல்லாம் அவர் கை தட்டுவது வினோதமாக இருந்தது என்றாலும் கூட அது ரசிக்கும்படியாக இருந்தது. 

மறுநாள் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டார். என்னைப் பின்னாடி உட்கார வைத்து ஓட்டிச் சென்றார். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. மத்தவங்க ஓட்டினாலும் அதில் உட்காரக்கூடத் தெரியாது. எதிரே சைக்கிள் வந்துவிட்டாலும் பயம். அப்படிப்பட்ட என்னை வெள்ளாமைக்கு அழைத்து சென்றார். அழகான இடம். ஊரில் இருந்து சற்றே தள்ளி இருந்தாலும் நானே இதுவரை இங்கு வந்ததில்லை. 

கொஞ்ச இரு என்று சென்றவர் மாங்காய் பறித்து வந்தார். ஒரு கல்லில் அதைப் போட்டு உடைத்தார். சட்டைப் பையில் இருந்து ஒரு பொட்டலம் எடுத்தார். உப்பு, மிளகாய் தூள். அதிசயமாக இருந்தது. அவர் முகத்திலோ வெற்றிப் புன்னகை. ருசித்து சாப்பிட்டோம். 

‘கொஞ்ச இரு’என்று மறுபடியும் போனவர், இந்த முறை குருவிக் கூட்டை எடுத்து வந்து காட்டினார். வியப்பாக இருந்தது. எவ்ளோ அழகு! உள்ளே ஒரு முட்டை கூட இருந்தது, சின்னதாக! கையில் ஒரு பூவைப் பிடித்திருப்பதைப் போல, மென்மையாகப் பிடித்து, அதையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 

‘பாத்தியா அப்பு! எவ்ளோ அழகா கட்டியிருக்கு! டைலரோட பிட் துணி கூட இதில் இருக்கு பாரேன்” என்றார். 

நான் அவரையே பார்த்துக் கொண்டிந்தேன். வீட்டுக்குத் திரும்பிய போது சென்னையில் இருந்து சித்தப்பாவின் கடிதம் வந்திருந்தது. அவர் காங்கிரஸ்காரர். சபி பாயின் தீவிர எம் ஜி ஆர். ஆதரவு செய்கைகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க இவர் ஓடி வந்திருந்தார். அப்பாதான் சமாதானம் பண்ணி பஸ்ஸுக்கு காசு தந்து அனுப்பி வெச்சார், 

“நான் போகலே. இங்கேயே இருக்கேன் பெரியப்பா” என்றார். 

“அப்புறம் லீவு கெடச்சா வா கண்ணா, இப்போ போம்மா. போய் நல்லா படி” 

இருந்த காசில் எனக்கு ஒரு ரூபாய் கொடுத்துட்டுப் 

போனார். அப்ப அவர் ஒன்பதாவது படித்தார். நான் ஐந்தாவது படிச்சிட்டிருந்தேன். அவரை பஸ்ஸில் ஏற்றி விட்டுத் திரும்பினேன். சிரித்தபடி கையாட்டறார். என் கண்கள் கலங்கிவிட்டன. 

அதற்குப் பிறகு பல முறை இப்படி ‘ஓடிப் போவது’ நடந்திருக்கிறது. வளர்ந்த பிறகு நம் வீட்டிற்கு வருவதை நிறுத்திவிட்டார். மற்ற இடங்களுக்குப் போக ஆரம்பித்தார். படிப்பையும் பத்தாவதுடன் நிறுத்தியாகிவிட்டது. வேலையில், வியாபாரத்தில் ஈடுபடுத்தினாலும் அந்த ‘ஓடிப் போற பழக்கத்தை மட்டும் அவரால் நிறுத்த முடியவில்லை. ஏன் இப்படி ஓடுகிறார்? அவருடைய தேடுதல்தான் என்ன? 

புரியலே! 

திருமணம் செய்து வெச்சா சரியாகும் என்றார்கள்; செய்து வைத்தார்கள். ஆனா சரியாகலே. 

குழந்தைகள் பிறந்தா சரியாகிவிடும் என்றார்கள். குழந்தைகளும் பிறந்தன. அப்பவும் அவருடைய பழக்கத்தை அவரால் விட முடியவில்லை. 

அப்பத்தான் ஒரு ‘ஆலிம்ஸா’விடம் அழைத்துச் சென்றார்கள். அவருக்கு யாரோ செய்வினை செய்திருப்பதாக, ‘ஆமில்ஸா’சொன்னார். அவருக்குப் போய் யார் இப்படி செய்திருக்கப் போகிறார்கள்? அதற்கு ஏதேதோ பரிகாரம் செய்தார்கள். சில நாட்கள் நல்லபடி இருந்தார். மறுபடி மிஸ்ஸிங். ஷெஹன்ஷாபாபாதர்காவில் தங்கி இருப்பதாகக் கேள்விப்பட்டோம். எல்லோரும் சேர்ந்து டூரிஸ்ட் காரில் போனோம். அப்ப கூட அழைத்துப் போகலேன்னு சொல்லி சாதிக் மாமு, பின்னாடி சண்டை போட்டார். ஏதோ பிக்னிக் போனதா எண்ணம் சபி பாய் கிடைத்தார். தர்கா பெருக்குற வேலை செய்து வருவதாகவும் இதில் தனக்கு நிம்மதி இருப்பதாகவும் கூறினார். ‘வர மாட்டேன்’ என்று அடம் பிடித்தார். அப்புறம் ஒரு வழியாக அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம். 

எம். ஜி. ஆர். இறந்த பிறகு சபிபாயுடைய சதாய்ப்பு அதிகமாகிவிட்டது. அடிக்கடி வெள்ளை குல்லா, கறுப்பு கூலிங் கிளாஸ், வெள்ளை சட்டை, வேட்டியுடன் பெரிய மூட்டைகளைத் தூக்கும் கூலிக்காரர்களுக்கு உதவுவார். எல்லோரும் இரட்டை விரலைக் காட்ட, பதிலுக்கு இவரும் புன்னகைத்தபடியே காட்டுவார். 

சென்னையில் இருந்தால் சினிமா, அரசியல் கூட்டங்கள் ; இரண்டும் இல்லையன்றால் மொட்டை மாடியில் காத்தாடி விட்டுக் கொண்டிருப்பார்; விதம் விதமாக, கலர் கலராக. கூடி ஒரு கும்பலே இருக்கும். காத்தாடி விடறதுக்கு பந்தோபஸ்து எல்லாம் ஒரு நாள் முன்னாடியே ஜரூராகத் தொடங்கிவிடும். கலர் கலராய் காகிதங்கள் என்ன, சீசா தூள் கலந்த மாஞ்சா என்ன.. கலக்கல்தான்! அப்படியே விட்டு, பக்கத்து தெரு கலீமுடைய காத்தாடிய டீல் விட்டு அறுக்கற ஸ்டைல் இருக்கே… யப்பா காத்தாடியை சபி பாய் விடுவது ஒரு கலை. 

நினைவுகளின் நதியிலிருந்து கரையேறினேன். தயாராகிப் புறப்பட்டேன். வண்டியைப் பூட்டிக் கொண்டு, பக்கத்து வீட்டில் சாவி கொடுத்துட்டுப் போனேன். என் பார்ட்னர் வருவான் படு தய்யூப். நாங்கள் தங்கி இருந்த இடம் மஹாராஷ்டிராவில் ஒரு சிறு கிராமம். பச்சைத் தோல் வியாபாரம். காலை, ஃபஜ்ஜர் தொழுகைக்குப் பிறகு அங்கே சந்தை கூடும். ஆட்டுத் தோல். மாட்டுத் தோல் அதைப் பார்த்து, விலை பேசி, தேவையானதை வாங்கி வைப்போம். அந்த இடத்திற்கு ‘மண்டி’என்று பெயர் அங்கேயே ஓரமாக நாங்கள் தங்கலாம். பச்சைத் தோல்களின் வாடையில் அங்கு தங்குவது கொடுமை. சாப்பாடு வேறு ஓட்டலில் கஷ்டமாகத்தான் இருந்தது. கொஞ்ச நாள் அனுபவத்திற்குப் பிறகு சொந்தமாகத் தோல் வியாபாரம் செய்யலாம் என்று ஸ்பர் செய்தேன். 

முதலாளி ஊரில் இருந்தார். பச்சைத் தோல் ஒரு லோடு சேர்ந்தவுடன், லாரியில் ஏற்றி ஆம்பூர் டேனரிக்கு அனுப்பிடணும். நமக்கு வருஷத்திற்கு ஒரு முறை ரம்ஜானில் ஒரு மாசம் லீவு கிடைக்கும். அப்ப ஊருக்குப் போவதோடு சரி.. 

சந்தையில் ஒரு ரவுண்ட் சுத்திவிட்டு, மண்டிக்குத் திரும்பினேன். கதவு திறந்திருந்தது. பார்ட்னர் படு தய்யூப் வந்துட்டாரா? அட, சபிபாய்! இன்ப அதிர்ச்சி… உற்சாகமாகிவிட்டது. அவரே ஓடி வந்து கை குலுக்கினார். இந்த முறை மீசையைக் காணோம். 

“எப்படி இருக்கீங்க?” 

“எனக்கென்ன, நல்லா இருக்கேன். நீ என்ன இந்த மாதிரி இடத்தில் தங்கி இருக்கே. சே, வேலை வேண்டுமென்று எனக்கு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா. உன்னை யார் இங்கே எல்லாம் வந்து வேலை செய்யச் சொன்னது?” 

உண்மைதான். சொல்லியிருந்தால் சபிபாய் வேறு வேலைகூட வாங்கித் தருவார். இருந்தாலும், அப்பா ஆசையுடன் வாங்கித் தந்த வேலை இது. வருங்காலம் நல்லா இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு. சபி பாயே ‘டீ போட்டார். நல்ல ஸ்ட்ராங் டீ, பேரணாம்பட்டு நினைவைக் கொண்டு வந்தது. பேண்ட் பாக்கெட்டில் இருந்து துழாவி ஒரு பொட்டலம் எடுத்தார். பட்டர் பிஸ்கெட், உடைந்திருந்தது. அதை ‘டீ’யில் தொட்டுச்சாப்பிட்டார் 

“சித்தப்பாகாலையில் ஃபோன் செய்தார். ரொம்ப கவலைப்பட்டார்” என்றேன். 

“அவரு கெடக்கிறாரு.” 

“உங்க மாமியார் இறந்துட்டதைக் கேள்விப்பட்டு வருத்தமாச்சு”சிரித்தார். 

“நானே வருத்தப்படலே. நீ ஏன் வருத்தப்பட்டே” என்றார். 

“அது இல்லை. யாராவது இறந்தா வருத்தப்படணும்.” 

“அதான் ஏன்…ஏன் வருத்தப்படணும்? அது என்னமோ தெரியலே அப்பு. யாராவது இறந்துட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சத்தம் போட்டு சிரிக்கணும் போலிருக்கு. எனக்கு மனசு சரியில்லை என்றால் நான் போய் ரிலாக்ஸ் பண்ணிக்கிற இடம் கப்ரஸ்தான் – (உடல் அடக்கம் நடைபெறும் இடம்)” என்றார். எனக்குப் பயமாகிவிட்டது. 

பகல் சாப்பாட்டை அவரே செய்தார். சாதம், தால் காஸால்னா, கபாய், வெண்டைக்காய் பொரியல் கூட அவர் கொண்டு வந்த நாற்றங்காய் ஊறுகாய், ஆஹா சூப்பர். அம்மா செஞ்சதைப் போலவே இருந்தது.படு தய்யூப் லயித்து சாப்பிட்டார். 

“சபி பாய். இங்கேயே தங்கிடுங்க. பேசாம ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சுடலாம்” என்றார் படு தய்யூப். 

“அட போப்பா. இங்கேயே தங்கிட்டா, எனக்கு வேற வேலை இல்லையா?” என்றார் சபி பாய். 

வேற வேலையா! இங்கிருந்தும் ஓடப் போகிறாரோ.. 

இரவெல்லாம் மூவரும் தூங்கலே. பழைய விஷயங்களைப் பேசிட்டு இருந்தோம். மெல்லிய ஒலியில் கிஷோர் குமாரின் பாடல்கள். ‘டீ’ஃபிளாஸ்கில் இருந்தது. வெளியே மழைச்சாரல். 

“அப்பு, உனக்கு நினைவிருக்கா, மழைக்காலங்களில் வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனில் போய் நனையாதபடி அந்த மழை வாசனையை அனுபவித்த அழகு இருக்கே. வேர்க் கடலை சாப்பிட்டபடி ஆஹா, சுபம். இப்பவும் வருதே, இதெல்லாம் மழையா. உடம்புகூட நனையமாட்டேங்குதே” என்றார். 

அப்ப நான் இஸ்லாமியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். யாரோ தேடிட்டு வந்திருப்பதாக பியூன் சொல்ல, இவர்தான்! ஒரு வாரம் ஹாஸ்டலில் நம்முடன் தங்கி இருந்தார். அப்புறம் கேள்விப்பட்டு சித்தப்பா வந்து அழைத்துச் சென்றார். 

அவரையே பார்த்தேன், எனக்குக் கொஞ்சம் புரிவதைப் போல் இருந்தது. 

தொலைபேசி அழைப்பு. பேசினேன். 

“அஸ்ஸலாமு அலைக்கும்.” 

“வாலைக்கும் ஸலாம்” 

“அப்பு. ஆமில்ஸாகிட்டேயும் விசாரிச்சுட்டேன். சபி உன்னிடம் தான் வந்திருக்கணுமென்று சொல்றாரேப்பா” என்றார் சித்தப்பா. 

நான் சபி பாயைப் பார்த்தேன். அவர் ஆர்வமாக டிவியில் கார்ட்டூன் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். 

“இல்லே சித்தப்பா வரலையே. வந்தா நானே உங்களுக்கு ஃபோன் செய்யறேன்” என்று வைத்துவிட்டேன் மனசு அமைதியாக இருந்தது. 

மழை வேகமாகப் பெய்யும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியே சென்றேன். 

“குடை எடுத்துக்க” என்றான் ‘படு தய்யூப்’. 

“வேண்டாம்…” என்றேன்.

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *