நத்தார் பண்டிகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 921 
 

(1953 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகலெல்லாம் மார்கட்டில் சுற்றிக் கொண்டிருந்த தானி யேல் பசிக்களை மிகுதியால் மரக்கறிக் கடையின் ஒதுக்குப் புறத்தில் போய் படுத்துக் கொண்டான்.

உணவருந்திப் பசியைப் போக்கும் இந்த உலகத்தில், நித்திரையால் பசியைப் போக்குவது தானியலின் புதிய கண்டு பிடிப்பு! பசியைப் போக்க அந்த வழி மட்டும் அவ னுக்குக் கிடைக்கவில்லையென்றால், ஏதாவது ஒரு ஹோட் டலுக்குள் புகுந்து பசி தீருமட்டும் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் வெளியேற வேண்டும்! இது அவனால் செய்ய முடியாத காரியம். எனவே யாருக்கும் தொல்லை இல்லாமல் நித்திரையை நிஷ்டயாக்கிக் கொண்டான்.

“தேவகுமாரன் மறுபடியும் இந்த உலகத்தில் அவதரிப் பார்’ என்பதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், தேவ குமாரன் தன்னை அடியோடு கை விடமாட்டார் என்ற நம்பிக்கையில் மார்கட்டுக்குள் சுற்றித் திரிந்து ஏதாவது கூலி வேலை செய்து தன் காலத்தைக் கழித்து வந்தான் அவன். மார்க்கட்டில் எப்பொழுதும் கூலி கிடைக்கு மென்று சொல்ல முடியாது தான்; சில சமயம் ஒன்றுமில்லா மலும் போய்விடும். அன்றைக்கும் அப்படித்தான் ஒன்றும் கிடைக்கவில்லை. பசியைப் போக்கப் படுக்கை யில் விழுந்து விட்டான்.

மனிதன் சன்னலை அடைத்தால் கடவுள் கதவைத் திறந்து விடுவார் என்று அவன் தாய் அடிக்கடி சொல்லு வாள். ஆனால்! அவன் வாழ்க்கையில் மனிதன் தான் கதவை அடைத்தான். அதற்குப் பதிலாகக் கடவுள் மார்க்கட்டில் கிடைக்கும் கூலி மூலம், இலேசாகச் சன்னலைத் திறந்து காட்டிக் கொண்டிருந்தார். என்றா லும் அன்று கடவுளும் சன்னலை அடைத்து விட்டார்! அதனால் தான் அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை, எனவே பசியை ஏமாற்ற நித்திரையில் தஞ்சம் புகுந்தான் அவன்.

தானியல் பசியை மறக்கடிக்கும் உபாயத்தில் இருந்து கண் விழித்தபொழுது உலகம் நன்றாக இருட்டிக் கிடந்தது. மார்க்கட்டின் மத்தியில் இருந்த மின்சார விளக்கு பனிப் புகையினூடே மங்கலாகத் தெரிந்தது. உடம்பை முறித்து சுடக்கு விட்டுக் கொண்டே எழுந்து நடந்தான் தானியல். உலக வாழ்க்கையில் எவ்வித இலட்சியமும் இன்றி சலன மற்ற நிலையில் நடந்தான் அவன்.

நத்தார் பண்டிகையைக் கொண்டாட உலகம் நெருப் புடன் விளையாடிக் கொண்டிருந்தது! தேவகுமாரன் பிறந்ததையும் பிறக்கப் போவதையும் எண்ணி மகிழ்ச்சி யடைந்த மனிதர் கூட்டம் காசைக் கொடுத்துத் தலை யிடியை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தது. ஊரின் நான்கு திசைகளிலும் இருந்து வரும் வெடிச் சத்தங்கள் * இன்று நத்தார் பண்டிகை’ என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. அவன் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். வானத்தில் தாரகைகள் தெளிவாக இல்லை. பனிப்புகை மறைத்துக் கொண்டிருந்தது. குளிர் காற்றால் அவன் உடல் சிலிர்த்தது. தனது இரு கைகளையும் மார்பில் கட்டிக்கொண்டு, நகரத்தின் மத்தியில் இருந்த பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தான் அவன்.

பாலத்தின் மத்தியில் தொங்கிக் கொண்டிருந்த மெர்க் குரி விளக்கு வெளிச்சம் தானியலின் கறுத்த உடம்பில் இலேசான நீல நிறத்தைப் பூசியது.

எண்ணெய் படாத சிக்கேறிய தலை, கழுத்தில் கருத்த நாடாவில் தொங்கிக் கொண்டிருக்கும் கறுத்துப் போன அலுமினியத்தினாலான சிலுவை. அழுக்கேறிய பைஜாமா காரன், இவைகள் தான் தானியல் அல்லது தானியல் தான் அவைகள் என்றபடி அமைந்திருந்தது அவனது தோற்றம்.

பாலத்தில் இருந்து வீசிய குளிர் காற்றில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பாலத்தின். சுவரோரம் ஒண்டி உட்கார்ந்து கொண்டான். பக்கத்தில் இருந்த பஸ் கொம் பனியில் மணி பத்தடித்தது! தெருவில் போய்க் கொண்டி =ருந்த வாலிபர்கள் ஒரு யானை வெடியைக் கொளுத்திப் பாலத்தின் மத்தியில் போட்டனர், அது வெடித்த சத்தம் தானியலின் மனதில் ஒரு சலனத்தை உண்டாக்கி விட்டுப் போயிற்று.

இன்றைக்கு பதினைந்து வடருங்களுக்கு முன் தானிய லுக்கு பத்து வயதிருக்கும். இது போன்ற ஒரு நத்தார் பண்டிகை தினம், நாலைந்து நாள் காய்ச்சலுக்குப் பின் கொஞ்சம் குணமடைதிருந்தான் தானியல். என்றாலும் அவனால் நடக்க முடியவில்லை . எனவே அவன் தாயார் 1.தானி! நத்தார் பிரார்த்தனையை வீட்டிலேயே செய் வோமா?” என்று கேட்டாள். தானியலும் ‘ஓம்!’ என்றான் பிரார்த்தனைக்கு ஆயத்தம் செய்தாள் அவன் தாய்.

நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பீடத்தில் பாலன் பிறந்த கதையைச் சித்தரிக்கும் படம் ஒன்று வைக் கப்பட்டிருந்தது. பீடத்தைச் சுற்றி மெழுகுதிரிகள் எரிந்து கொண்டிருந்தன. தானியலின் தாய் பீடத்துக்கு முன்னால் உட்கார்ந்தாள். தானியலும் அவள் பக்கத்தில் உட்கார்ந் திருந்தான். தாய் தேவ கீதம் பாடினாள். சின்ன தானிய லும் தனக்கு தெரிந்தவரை முணுமுணுத்தான்.

பாலன் பிறப்பதற்குச் சற்று நேரம் இருந்தது. தானியலின் தாய் பக்திப் பரவசமாகப் பாடிக் கொண்டிருந்தாள். குழந்தை தானியல் உலகத்தை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான் .டூ…ம்!” மாதா கோவில் பீரங்கி அலறியது. அந்தச் சத்தத்தில் “அம்மா!” என்றலறியபடி எழுந்தான் தானியல். பீரங்கிச் சத்தத்துக்கில்லாத சக்தி குழந்தையின் அம்மா என்றழைப்புக்கு இருந்தது! பாட்டை நிறுத்தி விட்டுத் தானியலைப் பார்த்தாள் அவன் தாய். தானியல் படுக்கையில் உட்கார்ந்து அங்குமிங்கும் பார்த்து விழித்துக் கொண்டிருந்தான். விசயத்தை உணர்ந்து விட்ட அவன் தாய் சொன்னாள்.

“பாலன் பிறக்கப் போகும் சமயத்தில் தூங்கலாமா? அது தான் கடவுள் கோபித்துப் பீரங்கிச் சத்தம் போட்டு எழுப்பினார்!” என்று.

“தூங்கினால் கடவுள் கோபித்துக் கொள்வாராம்மா?” தானியல் கேட்டான்.

எரிந்து போன மெழுகு திரிகளுக்குப் பதிலாக வேறு மெழுகு திரிகளை ஏற்றி வைத்துக் கொண்டே அவள் சொன்னாள்.

“உம்…! கோபித்துக் கொள்வார்! அவர் கோபித்துக் கொண்டால் உனக்குப் பட்டுச் சட்டை தரமாட்டார். உன் காய்ச்சலைச் சுகமாக்க மாட்டார்! தெரியுமா?” என்றாள்.

“சரியம்மா! நான் தூங்கமாட்டேன்” என்று சொல்லி விட்டு முழங்காலில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வது போல் பாவனை செய்தான் தானியல்.

தாயார் சிரித்துக் கொண்டே, “தானி பாலன் பிறந்தார் என்ற பாட்டைப் பாடுகிறேன் நீயும் பாடு” என்றாள். அவனும் அவளோடு சேர்ந்து பாடினான். சிறிது நேரம் பாடி விட்டுச் சொன்னாள்.

“தானி! பீடத்தைப் பார் பாலன் பிறக்கப்போகிறார்” என்று.

தானியல் பீடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டி ருந்தான், அவன் தாய் பீடத்தை மறைத்திருந்த ஒரு வெள்ளைத் துணியை அகற்றினாள். அங்கே செலோலைட் டினாலான ஒரு பாலன் பிறந்திருந்தார்! தானியலுக்கு ஏதோ அற்புதம் நிகழ்ந்த மாதிரி இருந்தது.

“அம்மா! பாலன் பிறந்தாச்சி!” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கைதட்டினான்.

அதன் பிறகு அவ்வளவு இனிமையான நத்தார் பண்டிகை தானியலுக்குக் கிடைக்கவில்லை! ஏனென்றால் அடுத்த பண்டிகைக்கு முன் அவன் தாயார் இறந்து விட்டாள்! இல்லை கொலை செய்யப்பட்டாள்!

தெருவில் ஏற்பட்ட ஆரவாரம் தானியலின் சிந்தனை யைக் கலைத்தது. அவன் நிமிர்ந்து பார்த்தான். வர்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கரோல் பஸ் வண்டி பாலத்தின் மேல் அவனைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. அதில் இருந்தவர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர், அந்த பஸ் அவன் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். பஸ் மறைந் கதம் வானத்தைப் பார்த்தான்; வானம் இன்னும் தெளி வடையவில்லை! பனிப்புகை மூடியிருந்தது. மணி பதி னொன்று.

வெகு நேரமாக அடங்கிக் கிடந்த பசி தானியலின் வயிற்றைக் குடைந்தது. வலது கையால் வயிற்றைத் தடவிக் கொடுத்தபடி நிமிர்ந்தான். பாலத்தின் இரு ஓரங்களிலும் சனங்கள் நடந்து கொண்டிருந்தார்கள். சாரி சாரியாக நல்ல கிறிஸ்த்தவர்கள் அந்த நடு நிசியில் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள், பட்டு உடையும் பாதித் தூக்கமும் முட்டி மோத நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். சிறு வயதில் அவள் தாய் இருந்த காலத்தில் இதே போன்று இந்த நேரத்தில் கோவிலுக்குப் போயிருக்கி றான் அவன். ஆனால் இன்று?

தாய் இல்லாத காரணமோ அல்லது தன்னைப் போல் மற்றவர்களையும் நேசிக்கும் தன்மையற்ற காரணமோ? என்னவோ? கிறிஸ்த்தவர்களின் முக்கியமான தினத்தில் அனாதையாக தெருவோரத்தில் ஒதுங்கிக் கிடந்தான் அவன். தாயைப் பற்றி அதிகமாக அவனுக்கு ஒன்றும் தெரியாது. அவள் ஒரு நர்ஸ்’ ! யாரோ ஒருவன் ஏதோ ஒரு காரணத் துக்காக அவளைக் கொலை செய்து விட்டான்! அவ்வளவு தான் அவனுடைய முன்னறி தெய்வத்தைப் பற்றி அவன் தெரிந்து கொண்டதெல்லாம்.

பாதையில் நடந்து கொண்டிருந்த மனிதன் ஒருவன் அவன் காலில் இடறி விட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காது போய்க்கொண்டிருந்தான். தானியல் அந்த அவசரப் பிரகிருதியைப் பார்த்து விட்டுத் தன் கால்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக முடக்கிக் கொண்டான்.

நத்தார் பண்டிகையின் நடு இரவுப் பிரார்த்தனைக்கு முதலாவது அழைப்பு மணி மாதிரி கோவிலில் ஒலித்தது. மணியோசையைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந் தான் தானியல். பாலன் பிறக்கும் வைபவத்தைக் காண கிறிஸ்த்தவர்களை அழைக்கிறார்கள். ஏன் நானும் போனால் என்ன? பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு எண்ணம் தோன்றியது அவனுக்கு! குனிந்து தான் உடுத்தி யிருந்த கிழிந்து போன பைஜாமாவை பார்த்தான் பிறகு ஏதோ ஒன்றை எண்ணிச் சிரித்தான்!

“உன்னைப் போல் அயலானையும் நேசி” இந்த வாக் கியத்தை தானியலின் வாய் முணுமுணுத்தது. புத்தாடை புனைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் கிறிஸ்த்தவர்களுக்கு மத்தியில் இந்த அழுக்கேறிய உடையுடன் அவன் எப்படிப் போவான்.”

“சுளீர்” தானியலின் வயிற்றுக்குள் பசி குத்தியது! இனி அவனால் அந்த வேதனையைத் தாங்க முடியாது. எப்படியாவது ஏதாவது சாப்பிட வேண்டும். தானியல் தன் இருப்பிடத்தை விட்டெழுந்தான். எழுந்து நடந்தான். அவன் பார்வை எல்லையற்றிருந்தது. அவன் நடையும் ஜீவனற்று இருந்தது. சற்றுத் தூரம் சென்றிருப்பான், விளக்கு வெளிச்சம் அவன் கண்களைக் குத்தியது. தலை யைத் தூக்கிப் பார்த்தான். வர்ண விளக்குகள் அலங் கரிக்கப்பட்டிருந்த மாதா கோவிலைக் கண்டான்.

வர்ண விளக்குகளுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆடவரும் பெண்டிரும் அலங்கார உடையணிந்து கோயி லுக்குப் போய்க் கொண்டிருந்தனர். இந்தக் காட்சியைக் கோயிலின் தலைவாசலில் நின்று பார்த்தான் தானியல். புனிதமான தினத்திலே பரிசுத்தமான கிறிஸ்த்தவர்களுக்கு முன்னால் தன்னை ஒரு காட்சிப் பொருளாக வைக்க விரும் பாதவன் போல் கோயில் சுவரோரமாக இருந்த இருட்டுக் குள் தன்னை மறைத்துக் கொண்டான்.

“ஆராதனைக்கு நேரமாச்சி இன்னுமென்ன செய்றீங்க! கெதியா வாங்க”.

சத்தம் வந்த திசையில் தலையைத் திருப்பிப் பார்த் தான். அவனுக்கு நேரே ரோட்டுக்கு மறுபுறத்தில் இருந்த வீட்டுப் படியில் நின்று வீட்டுக்குள் இருந்தவர்களைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள் ஒரு முதியவள். தானியல் உற்றுப் பார்த்தான். “திரேஸா ஆன்ரீ” ஆச்சரியத்து டன் முணுமுணுத்தான் அவன்.

திரேஸா ஆன்ரியை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனுடைய தாய் இருந்த காலத்தில் எத்தனையோ முறை அந்த வீட்டுக்குப் போயிருக்கிறான் அவன். “சின்ன தானி! சின்ன தானி! என்று திரேஸா ஆன்ரி முத்தமிடாத நாள் ஒன்று கூட இருக்காது. ஆனால்! இன்று?

அவன் திரும்பவும் அந்த வீட்டுப் பக்கம் தன் பார் வையை ஓடவிட்டான். அப்பொழுதுதான் அவசரவசர மாக வெளியே வந்து கொண்டிருந்தது, ஒரு இளம் ஜோடி!

“கெதியா வாங்க! கெதியா வாங்க!” என்று சொல்லிக் கொண்டே திரேஸா ஆன்ரி படி இறங்கினாள். அந்த இளம் ஜோடி அவளைப் பின் தொடர்ந்தது. தானியல் தன்னை இருளுக்குள் நன்றாக மறைத்துக் கொண்டான். அவர்கள் அவனைத் தாண்டிச் சென்றனர்.

“என்ன? திரேஸா ஆன்ரிக்குப் பின்னால் செல்பவள் லீலாவா?” அவன் வாய் முணுமுணுத்தது.

ஆச்சரியத்துடன் கண்களை அகலத் திறந்து பார்த் தான். ஆம் லீலாதான் சிறுவயதில் அவனுடன் ஆடிப் பாடித் திரிந்த அதே லீலாதான்! இன்று எவ்வளவு பெரிய வளாகி விட்டாள்? அவளுக்கு ஒரு கணவனும் வந்து விட்டான். இன்னும் சில காலத்தில் அவளுக்கு ஒரு குழத் தையும் வந்து விடும். “லீலா?”” அவன் அடிவயிற்றில் இருந்து கிளம்பியது அந்தச் சத்தம், அவள் கண்கள் மலர்ந்து கலங்கியது.

“கதவுக்குப் பூட்டுப் போட்டியா லீலா?” திரேஸா ஆன்ரி கேட்டாள்,

“இல்லையம்மா சும்மாதான் சாத்திவிட்டு வந்தன்”, லீலா சொன்னாள்.

மூவரும் சற்றுத் தயங்கினர். திரேஸா ஆன்ரி சொன் னாள்.

“சரி, சரி நேரமாகுது. வாங்க இந்த நேரத்தில் எந்தக் கள்ளன் வரப் போரான்?”

மூவரும் கோயிலை நோக்கி நடந்தனர்.

அவர்கள் கோயிலுக்குள் நுழையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் தானியல்,

அவன் வயிற்றுப் பசி விஸ்வரூபம் எடுத்தது பசியைப் போக்க அவன் வழக்கமாகக் கையாளும் தூக்கத்தை எதிர் பார்த்தான். தூக்கம் வரவில்லை; பசிதான் வந்தது.

வேறு வழியில்லை. திரேஸா ஆன்ரியின் வீட்டுக்குள் நுழைய வேண்டியது தான்.”

இந்த எண்ணம் தோன்றியதற்குப் பின் தயக்கமும் தோன்றியது. வாழ்க்கையில் ஒரு நாளும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டியது அவன் பசி/ எதிரேஸா ஆன்ரியின் வீடுதானே?” இப்படி வொரு கேள்வியோடு சமாதானம் கிடைத்தது அவனுக்கு. வேறு வழியில்லை. அடிமேல் அடி வைத்து வீட்டுக் கதவடிக்கு வந்தான். அவன் உடல் இலேசாக நடுங்கியது, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் திறந்தான். நடு ஹோலுக்குள் விளக் கெரிந்து கொண்டிருந்தது. மேசையின் மீது கிறிஸ்த்துமஸ் கேக், வாழைப் பழம், சில பண்டிகைப் பலகாரங்கள் எல்லாம் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. இரண்டெட் டில் மேசையை அணுகினான். ஒரு கேக்கை எடுத்துச் சாப்பிட்டான். வாழைப் பழம், பிஸ்கட், பலகாரம் இப் படியே மூன்று வளையம் வரும்பொழுது வயிறு நிரம்பி விட்டது. இப்பொழுது தண்ணீர் தேவைப்பட்டது.

பக்கத்தில் இருந்த ஒரு கண்ணாடி அலமாரிக்கு மேல் ஒரு சிறிய கண்ணாடிக் கூசாவில் தண்ணீர் இருந்தது. தண்ணீர் கூசாவை எடுத்தான், என்ன ஆச்சரியம்? கண்ணாடிக் கூசாவுக்குப் பக்கத்தில் ஒரு தங்க மோதிரம் இருந்து மின்னிக் கொண்டிருந்தது! தானியல் ஸ்தம்பித்து விட் டான். அது தங்க மோதிரம் தானா? தங்கத்தை இங்கே ஏன் போடுகிறார்கள் பித்தளை மோதிரமாக இருக்குமோ? தானியல் தன் மனதைத் தட்டிக் கழித்து விட்டுத் தண்ணீ ரைக் குடித்தான். திரும்பவும் அவன் மனம் அந்த மோதி ரத்தைச் சுற்றி வந்தது. கையில் எடுத்து விளக்கு வெளிச் சத்தில் பார்த்தான். ”ஓம் தங்கந்தான்!’ மோதிரத்தை இருந்த இடத்தில் வைத்தான். பிறகு அங்கிருந்து திரும்பி னான். அவன் கண்களில் சிகரட் தென்பட்டது. ஒரு சிக ரட்டை எடுத்துப் பற்ற வைத்தான். நேராக வாசலுக்கு வந்தான்.

“மனிதன் சன்னலை அடைத்தால் கடவுள் கதவைத் திறப்பார்?” என்ற வாக்கியம் ஞாபகத்துக்கு வந்தது. திறந்த கதவைச் சாத்திவிட்டு தெருவில் இறங்கி நடந் தான் அவன்.

“பாலன் பிறந்தார் பாவிகளை மீட்க” என்ற பாடலோசை கோயிலுக்குள் இருந்து வந்தது.

தானியல் ஒரு ஏப்பம், விட்டு விட்டு நடந்தான். நத்தார் பண்டிகை. மற்றவர்களை விட வயிறு நிரம்பி இனிமையாக இருந்தது அவனுக்கு.

“பாலன் பிறந்தார் பாவிகளை மீட்க” என்ற பாடலை முணுமுணுத்தபடி நடந்தான் தானியல்.

-1953, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *