மந்திரச் சொல்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 25, 2016
பார்வையிட்டோர்: 8,578 
 
 

“”நான் பாட்டுக்கு செவனேன்னு வீட்லயிருந்தேன். முந்திரி பழம் பறிச்சு சாப்பிடலாம்ன்னு சொல்லி கூப்பிட்டுவந்து, என்னை மட்டும் சிக்கல்ல மாட்டிவுட்டுட்டு ஊர்க்காரப்பசங்க ஓடிட்டானுங்க. இதுக்குத்தான் அப்பவே துணைக்கு வரல்லன்னு சொன்னேன்” என்று முனகினான் மச்சராசு.

பொறியில் சிக்கிக் கொண்ட எலி போல, குத்தகைக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டான். தப்பி ஓட முடியாதபடி தேங்காய் நார் கயிற்றில் இறுக்கி பிடித்து மரத்தில் கட்டியிருந்தனர். வெயில் உச்சிக்கு ஏற ஏற எரிச்சல் தாங்க முடியவில்லை.

அடுத்து என்ன செய்வார்களோ? ஏது செய்வார்களோ? என்கிற பயத்தில் அவனுக்கு மயக்கமே வருவது போலிருந்தது.

மந்திரச் சொல் “வெளியூர்க்கு வந்தா கையக்கால அடக்கிக்கிட்டு சும்மாயிருந்திருக்கணும். அதவுட்டுட்டு, ஊர்க்காரப் பசங்க கூப்பிட்டானுங்கன்னு… அவனுங்க பேச்சக் கேட்டுக்கிட்டு, குத்தகைக்காரனுங்களுக்கு தெரியாம முந்திரிப் பழம் பறிச்சது ரொம்ப தப்பாயிடுச்சு. முந்திரிக் கொட்டைய திருடதான் வந்திருக்கோம்ன்னு குத்தகைக்காரங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு, இப்படி மரத்துல புடிச்சு கட்டிப் போட்டுட்டாங்களே…’ என்று மச்சராசு மனதிலே புலம்பிக் கொண்டிருந்தான் .

“”எத்தனை பேர்டா வந்தீங்க…?”

நாக்கை மடித்து, கடித்துக்கொண்டு குத்தகைக்காரன் ஒருவன் அதட்டிக் கேட்டான். அதற்குள் இன்னொருவன் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு,

“”அவன்கிட்ட என்ன பேச்சு… கேக்கற விதத்தில கேட்டா… பதில் தானா வருது” என்று சொல்லிக்கொண்டே, அவனை அடிப்பதற்கு பக்கத்திலிருந்த காட்டாமணிக் குச்சியை மடக், மடக் கென்று ஒடித்தெடுத்து, கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.

அவர்களுடைய உருவத்தைப் பார்த்ததும் மச்சராசுவுக்கு, ஆடிமாசம் குலதெய்வ கோவிலில் பார்த்த முனீஸ்வரன், வீரன் சாமிதான் ஞாபகத்திற்கு வந்தது. என்ன செய்வார்களோ… ஏது செய்வார்களோ? என்று அவர்களை பரிதாபமாக பார்த்தான்.

வயதான தோற்றத்தில் இருவர். அவர்களை வயதானவர்கள் என்று சொல்ல முடியாது. நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறி விறகுக்குச்சி போலிருந்தார்கள், துள்ளி வரும்

ஜல்லிக்கட்டு காளையை, விரட்டிப் பிடிக்கும் வீரனைப் போன்று, திமிறிக் கொண்டு ஓடிய இளவட்டங்களைத் துரத்தி பிடிக்க முற்பட்டதை, நினைத்துப் பார்த்தான். அவர்கள் போட்ட சத்தம், கடுங்கூச்சல் இன்னும் அவன் காதில் ரீங்காரமிட்டன. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான் மச்சராசு.

“”டேய்…வாய மூடு, இந்த அழுவற வேலையெல்லாம் வேற எங்கியாவது வச்சுக்க. தொலைச்சுடுவேன், தொலைச்சு… ராஸ்கல். எத்தனை பேர் வந்தீங்கன்னு கேட்டேன்ல்ல?”

ஆவேசமாகக் கத்தினான்.

அவனுடைய அதட்டலில் சட்டென்று அழுகையைக் கப்சிப்பென்று நிறுத்திக் கொண்டான். அவன் பேசும் போது முகத்தில் தெறித்த வெற்றிலை பாக்கு எச்சிலை தோள்பட்டையால் துடைத்துக் கொண்டே என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

“”என்னடா… நான் கேட்டுக்கிட்டே இருக்கன்… நீ என்ன வாயே தெறக்க மாட்டேங்கற? இன்னும் ரெண்டு போடணும்மா?” இன்னொருவன் முழுக்கை சட்டையை மடக்கிக் கொண்டே கிட்டே வந்தான்.

வார்த்தை குழறியபடி, “”நா..நா..லு பேர் வந்தோம்.”

“”நாலு பேராண்டா… இவன புடுச்சாச்சி.. மத்த மூணு பேரும் தப்பிச்சிட்டானுங்க. அவனுங்க வரவரைக்கும், இவன் இங்கதான் இருக்கணும்.” அங்கிருந்த பெரியவர்களை

பார்த்து, “”இங்க பாரு தாத்தா அவன் அழுவுறான் கிழுவுறான்னு கட்டவுத்து வுட்டுடாதீங்க. இவனத் தனியா விட்டுட்டு அவனுங்க எங்கயும் போகமாட்டானுங்க…..” என்று சொல்லிக் கொண்டே தோப்புக்குள் எதாவது அசைகிறதா, எங்காவது ஒளிந்திருக்கிறார்களா? என்றவாறு நோட்டமிட்டனர்.

“”சரி, நாங்க அவனுங்களை தேடிப் புடிச்சுக்கிட்டு வர்ற வரைக்கும் , நீங்க ரெண்டு பேரும் எங்கியும் போகக் கூடாது” என்று இரண்டு பெரியவர்களுக்கும் அந்த வாலிபர்கள் ஆணையிட்டு விட்டு, மரத்தில் சாய்த்து நிறுத்தியிருந்த ஒரு துரு பிடித்த சைக்கிளை எடுத்துக்கொண்டு புழுதி பறக்க அவர்களைத் தேடிச் சென்றனர்.

இவன்க எப்பப் போயி…… அவன்கள எங்க கண்டுபிடிச்சு….. நம்மல எப்ப விடறது, அவர்கள் போய் கொண்டிருப்பதையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் மச்சராசு. பயத்தில் கண்களிலிருந்து தண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

மாமா பையனின் திருமணத்திற்காக, திருமணத்திற்கு முதல் நாள் காலையிலே குடும்பத்தோடு பண்ருட்டியில் இருக்கும் மாமா வீட்டுக்கு வர நேர்ந்தது மச்சராசுக்கு. அது பெண் வீட்டார் எதிர்ப்போடு நடக்க இருக்கிற காதல் திருமணம். மறுநாள் காலையில் திருவந்திபுரம் கோவிலில் நடக்க இருக்கிறது. திருமணம் முடியும் வரை யாருக்கும் தெரியக்கூடாதென்று காதோடு காதாக முக்கியமானவர்களிடம் மட்டும் சொல்லி திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர் .

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கென்ன வேலை….. என்பது போல் மச்சராசு அந்த விஷயத்தைப் பற்றி எதையும் கண்டு கொள்ளாமல், அக்கம் பக்கத்து இளவட்டங்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

பண்ருட்டிக்கு பலாவும், முந்திரியும் பேர் போனது. அதுவும், பங்குனி மாசம் என்பதால் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் முந்திரி பழ சீசன் ஓகோவென்றிருக்கும்.

சென்னையில் முந்திரிப் பழம் கிடைப்பது அரிது. அதுமட்டுமல்ல, மச்சராசுவுக்கு முந்திரிப் பழம் என்றால் அலாதி பிரியம்.

எப்பொழுது அந்தப் பழம் கிடைத்தாலும், அதை அப்படியே சாப்பிட்டால் கார்ப்பு அதிகமாக இருக்கும் என்று அவற்றை நன்றாகக் கழுவி, சின்ன சின்னதாக நறுக்கி, உப்புப் போட்டு குலுக்கி, ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு துணுக்காக எடுத்து எடுத்து வாயில் வைப்பான். அது அப்படியே பஞ்சு மிட்டாய் போல் கரையும்.

தேனாய் இனிக்கும்.

அப்படித்தான் இன்றும், முந்திரிப் பழம் பறிக்க அக்கம் பக்கத்து வீட்டு, இளவட்டங்கள் ஜந்து பேர் கிளம்பினார்கள். எல்லோரும் மாமா பையனின் நண்பர்கள்தான். விஷயம் அறிந்த மச்சராசுக்கு முந்திரிப் பழம் என்றதும் நாவில் எச்சில் ஊறியது. வாயில் சுரந்த உமிழ் நீரை விழுங்கிக்கொண்டு, ”அண்ண… ண்ணா… முந்திரிப் பழம்ன்னா… எனக்கு ரொம்ப புடிக்கும்ன்ணா… கொஞ்சம் எனக்கும் எடுத்தாந்து குடுங்களாம்” என்று பவ்யமாக கேட்டான்.

“”இங்கப் பாரு மச்சராசு, அங்க போனாத்தான் எவ்வளவு கிடைக்கும்ன்னு தெரியும்… இதுல நீ வேற கேக்கற, நாங்க என்ன பண்றது…” என்றவர்கள் ஏதோ யோசித்தவாரு

“”ஓண்ணு பண்ணு. நீயும் எங்களோட துணைக்கு வாயேன்”

“”நானா… அய்யோ…எங்கம்மா திட்டுவாங்க”

“”அப்பன்னா.. போ..”

“”அண்ண …ண்ண” என்று கெஞ்சினான்.

“”இங்க பாரு… நீ ஒண்ணும் பண்ண வேணாம். சும்மா எங்ககூட துணைக்கு வா… நாங்க ஒனக்கு பறிச்சித் தர்றோம்” என்றார்கள்.

மச்சராசுவுக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல, அவர்களை விடவும் மனமில்லை. இருக்கவும் மனமில்லை.

“”போயிட்டு ஒடனே வந்துடலாம்மில்ல” என்று கேட்டுக் கொண்டே வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அவர்களோடு கிளம்பி விட்டான். போகிற வழியில் ஒரே சிரிப்பும், கும்மாளமும் போட்டுக் கொண்டு வந்தான். மகிழ்ச்சியில் கால்கள் விறு விறு வென்று நடந்தன.

“”ஏய், இவன் போற வேகத்தப் பாத்தா…, தோப்புல ஒரு முந்திரிப் பழங்கூட மிஞ்சாது போலிருக்கே” என்று இளவட்டங்கள் மச்சராசுவை கிண்டலடித்துக் கொண்டு வந்தனர்.

மச்சராசுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. நம்ம இஷ்டத்துக்கு அங்கியே எவ்வளவு சாப்பி ட முடியுமோ… சாப்பிட்டுட்டு, மிச்ச மீதியைத்தான் வீட்டுக்கு எடுக்கிட்டு வரணும்” என்று கணக்குப் போட்டுக் கொண்டே வந்தான்.

தோப்பை நெறுங்க நெறுங்க பூவும், காயும், பழமும் சேர்ந்தது போல் ஒரு நறுமணம் மூக்கைத் துளைத்தது. அடே…யப்பா’ என்று மலைத்துப் போய் நின்றான். எந்தப் பக்கம் பார்த்தாலும் முந்திரிப் பழமாக தொங்கிக் கொண்டிருக்கின்றது. திசையெட்டும் திரும்பிப் பார்த்தான். சிவப்பு, மஞ்சள், பச்சை என்று கலர் கலராக பெரிசும் சிறுசுமாக காட்சியளித்தன. பல வண்ணங்களில் முந்திரிப் பழத்தை கண்டதும் சிறுபிள்ளையைப் போல் மனதில் குதூகலித்தான். காற்றில் அவை ஆடுவது கண்டு சிட்டுக்குருவி

ஊஞ்சல் ஆடுவது போலிருந்தது அவனுக்கு. வெயில் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்த நேரம் என்பதால் முந்திரி இலைகளெல்லாம் தங்கம்போல் தகதகவென ஜொலித்தது.

மரத்தினருகில் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக குத்தகைக்காரர்கள் சீமை கருவேல முட்களையும், சப்பாத்திக் கள்ளிகளையும் வெட்டிப் போட்டு வைத்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் மரத்தை சுற்றியும் துடைப்பத்தால் பெருக்கி வைத்திருந்தனர். யாராவது வந்தால் அவர்களுடைய கால் தடத்தை வைத்தே யாருடைய கால்தடம் என்று கண்டுபிடித்து விடுவார்களாம். அப்படி அந்த ஊரில் உள்ள எல்லாருடைய கால் தடமும் குத்தகைக்காரர்களுக்கு அத்துப்படி, இப்போதெல்லாம் செருப்பு, ஷூ போட்டு தான் திருட வருகின்றனர் என்றாலும், எப்போதும் இப்படிச் செய்யும் பழக்கத்தை அவர்கள் கைவிடவில்லை.

வைக்கோல் போர் போல், மரங்கள் சிறுசிறு குன்றுகளாக தரையோடு தரையாக தவழ்ந்திருந்தன. எல்லோரும் ஆளுக்கொரு திசையாக ஓடி ஓடி பறித்தனர். தோப்புக்குள் தொலைந்து விட்டால் வழி தெரியாதே என்பதற்காக மச்சராசு அவர்களோடவே இருந்தான்.

எதைப் பறிப்பது என்பது போல் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஒரு மரத்தின் கிளையை பிடித்து இழுத்தான். முந்திரிப் பழத்தை பறிக்கும்போதெல்லாம் “”அய்… அய்..”

என்று கத்திக்கொண்டே பறித்தவனை இளவட்டங்கள் எச்சரித்தனர்.

“”ஏய்… சத்தம் போடாதே. குத்தகைக்காரனுங்க வந்தா… நம்மல சும்மா வுடமாட்டானுங்க புரியுதா? முந்திரிக் கொட்டையைத் திருவி கீழப்போட்டுட்டு பழத்த மட்டும் பையில போட்டுக்க. அப்பற…ம், மரக்கிளைகளுக்குள்ள போகாத. முட்டிக்கால் அளவுக்கு செத்தையெல்லாம் கெடக்கு. அதுவுள்ள நல்லதுகில்லது கெடக்கும். ஜாக்கிரதை” என்று மச்சராசுவை எச்சரிக்கை செய்துவிட்டு பழத்தை பறிப்பதிலேயே எல்லோரும் முனைப்பாக இருந்தனர்.

பறிக்கும்போதே சில பழங்கள் கொழுக் மொழுக்கென்றிருந்தது. அதைப் பார்த்ததும், அவனுக்குச் சுவைக்க வேண்டும் போல் தோன்றியது. ஒரு பழத்தைப் பறித்து யாருக்கும் தெரியாமல் திரும்பிக் கொண்டு, முன் பல்லில் வைத்து, கழுகு மரம் ஏறும் காத்தவராயன் கோழியின் இரத்தத்தை கடித்து உறிவது போல், அவனும் கடித்து சாற்றை மட்டும் உரிந்து, சக்கையைக் கீழே துப்பினான். சாறு வாய்க் கொள்ளாமல் வழிந்து சட்டையையும் நனைத்தது. சட்டை கரையாகுமோ என்றெண்ணி கையால் தேய்த்து,

தேய்த்து அந்த இடத்தையே அழுக்காக்கி விட்டிருந்தான்.

அப்போது ஒரு பெருங்குரல் உயிரையே உலுக்குவது போலிருந்தது. நான்கு ஐந்து பேர் “”திருடன்… திருடன்…” என்று கத்திக் கொண்டு, கத்தி, கடப்பாறை, சொரட்டுக் கோலுடன் பாய்ந்து வந்தனர். மச்சராசுக்கு திடுக்கென்று தூக்கி வாரிப் போட்டது. திடீரென்று அந்த இடம் போர்க்களம்போல் ஒரு பேரிரைச்சல் உருவானது.

“” டேய், ஒருத்தனக்கூட உடாம புடிங்கடா” எல்லாப் பக்கத்திலிருந்தும் ஆட்கள் குதித்தும், தாவியும், ஓடிவந்தார்கள். புலியின் பாய்ச்சலைக் கண்டு நான்குபுறமும் சிதறியோடும் மான்கள் கூட்டம் போல் இவர்கள் ஓட ஆரம்பித்தனர்.

மச்சராசுவுக்கு எந்தப் பக்கம் ஓட வேண்டும் என்றே தெரியவில்லை. மனம் போன போக்கில் ஓடினான். தோப்புக்குள் ஆய்… ஓய்… என்று ஒரே அலறல் சத்தம். ஏதோ தீவிரவாதிகளைப் பிடிப்பது போல் ஒரு போராட்டம். குடலெல்லாம் அவனுக்கு நடுங்கியது. ஓயிட் லெகான் கோழி போல மச்சராசுவால் வேகமாக ஓட முடியவில்லை.

மூச்சு வாங்கியது. அவர்கள் இவனை கோழி அமுக்குவது போல் ஒரே அமுக்காக அமுக்கினர். மூச்சிறைக்க ஓடிவந்து பிடித்ததால் ஆத்திரம் தாங்காமல் “பளார் பளார்’

என்று தாடையிலும் முதுகிலும் ஒருவன் “பொத் பொத்’தென்று சாத்தினான்.

வலி தாங்காமல் “”அய்யோ, அம்மா” என்று அலறியவன், “”தெரியாம வந்துட்டேன். இனிமே இந்தப் பக்கமே வரமாட்டன். நான் வெளியூரு… என்னை உட்டுடுங்க” என்று கையெடுத்துக் கும்பிட்டு கதறினான். அவர்கள் வாயால் எதுவும் பேசவில்லை. இன்னொருவன் அவன் பங்கிற்கு “பளார் பளார்’ரென்று நாலு வைத்தான்.

“”பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்னு சொல்லல?” என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு இவனை தரதரவென்று இழுத்துச் சென்றனர். எங்கே இழுத்து செல்கிறார்கள் என்று தெரியாமல் “”ஐயா, ஐயா” என்று கெஞ்சிக் கொண்டே, காலை தரையில் வைத்து அழுத்தி பின்னுக்கு இழுத்தான். அப்போதும் அவர்கள் அவனை

விடாமல் இழுத்துச்சென்று, பக்கத்திலிருந்த வேப்பமரத்தில் தேங்காய் நார் கயிற்றால் இரண்டு கைகளையும், பின்னுக்கு வைத்து கட்டி விட்டார்கள். எவ்வளவு அழுது புலம்பியும் பலனில்லை.

போனவர்கள் எப்போது வருவார்கள் என்று சைக்கிள் போன பாதையையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான். இந்த ஊர்க்காரப் பசங்களுக்கு வேண்டுமானால், இது பழகியிருக்கலாம். ஆனால் மச்சராசுவுக்கு இது புதுசு. பித்துப் பிடித்தவனைப் போல் சித்தம் கலங்கிப் போயிருந்தான். என்னென்னவோ கற்பனைகள் மனதில் தோன்றி மறைந்தாலும், அவையெல்லாம் இன்னும் பயத்தைதான் அதிகப்படுத்தியது. மேற்கொண்டு என்ன செய்வது? ஏது செய்வதென்று புரியாமல், விழித்து நின்றான்.

“”இவ்வளவு நாளா திருடுன முந்திரிக் கொட்டையெல்லாம் எங்கடா வச்சிருக்கீங்க?” கெளுத்தி மீசையைத் தடவியபடி, வயதான ஒருவர் கேட்டார். இவன்களை துரத்திப் பிடிக்கும்போது அவிழ்ந்து போன கோவணத்தை மேலும் கீழுமாக இழுத்து சரி செய்து கொண்டு இரண்டு வயதான வாலிபர்கள் நாய் குத்தலாக கீழே உட்கார்ந்திருந்தனர்.

புடிச்சதிலிருந்தே இதே கேள்வியைக் கேட்டு கேட்டு அவனை நோகடித்தனர்.

வாயில் அடக்கி வைத்திருந்த வெற்றிலை பாக்கை துத்துவென்று துப்பிவிட்டு, “”எங்கன்னு கேட்டேன்ல்ல…. வித்துட்டீங்களா…?” இவனிடமிருந்து பதில் வருவதற்கு

கொஞ்சம் தாமதம் ஆனதால் அவர்களாகவே பதில் சொன்னது போல் நினைத்துக் கொண்டு,””எவன் வூட்டு காசுல எவன் மஞ்சக் குளிக்கறது?” என்று கெட்ட வார்த்தையால் திட்டி முடித்தார். அவருடைய நாரசமான வார்த்தையை கேட்கவே முடியாமல் காதுரெண்டும் கூசியது மச்சராசுக்கு.

“”நான் வெளியூரு… சாமி, எங்க மாமா வூட்டுக்கு விருந்தாடியா வந்திருக்கேன். முந்திரிப் பழம் திங்கலாம்ன்னு… ஊர்காரப்பசங்க சொன்னானுங்க. சும்மா.. அவனுங்ககூட துணைக்கு வந்தேன்” மனமிறங்கி விட்டு விடுவார்கள் என்றெண்ணி நடுங்கும் குரலில் சொன்னான்.

“”அடி செருப்பால, இந்தக் கதையெல்லாம் வேற யாருக்கிட்டயாவது போய் சொல்லுடா… எழுந்தன்னா உரிச்சிப்புடுவன் உரிச்சி” என்று தலைப்பாகை கட்டியிருந்தவர் அடிக்க எழ முயன்றார். அதற்குள் கோவணம் கட்டிருந்த பெரியவர் அவரை அமுக்கி விட்டு, ஞ்சால் ஒன்னை உட்டுடுறேன். ஆனா, இவ்வளவு நாளா பறிச்ச முந்திரிக் கொட்டையெல்லாம் எங்க வச்சுருக்கீங்க. இல்ல, எங்க வித்தீங்கன்னு. உண்மையை மட்டும் சொல்லு உட்டுடுறோம் நைசாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் கேட்டார்.

உதடு துடிக்க, உடைந்த குரலில் “”சாமி, முந்திரிக் கொட்டை திருட நான் வரல்லைங்க. எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது. அந்த பசங்கதான் முந்திரிப் பழம் பறிக்க வந்தாங்க… நான் சும்மா அவுங்களுக்கு துணைக்குத்தான் வந்தன். அவுங்க வந்தப் பிறகு வேணும்ன்னா கேட்டுப் பாருங்க” என்று கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தான். அவன் சொன்னதை எதையும் அவர்கள் காதில் வாங்கியது போல் தெரியவில்லை.

“”சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னா நாங்க நம்பிடுவோம்ன்னு நெனச்சியா? அவன் அவன் நகை நட்டை வித்து, காட்டை ஏலம் எடுத்து, அதுக்கு வேளா வேளைக்கு

மருந்தடிச்சி, ராவு பகலும் சோறு தண்ணியில்லாம காவ காத்துக்கிட்டு கெடந்தா… நீங்க என்னடான்னா நோவம வந்து நோம்பு கும்மிட்டு போலான்னு பாக்கறீங்களா?” என்று காரசாரமாகப் பேசினார்.

தலைப்பாகை கிழவர் வாயில் வைத்திருந்த வெற்றிலைப் பாக்கை எட்டி துப்பினார், அப்போது, வாயில் வழிந்த எச்சிலைக் கையால் துடைத்து, கீழே தடவிக் கொண்டே, “”இன்னிக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, தப்பிச்சுப் போனவனுங்க வந்தாதான் நீ வூடு போயி சேர முடியும்” என்றவாறு காது பக்கத்தில் சொருகியிருந்த தென்னங்குச்சியை எடுத்து பல்லில் புகுந்து கொண்ட வெற்றிலைப் பாக்கை குத்தி குத்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் விட்டதிலிருந்து கோவணம் கட்டியிருந்தவர் தொடர்ந்தார், “”மொலச்சு மூணு எல வுடல அதுக்குல்ல திருட வந்துருச்சு. இதெல்லாம் படிச்சு என்ன செய்யப் போவுது?

இப்பவே இப்படியிருக்கு… இன்னும் போவ.. போவ எப்படியிருக்குமோ?” என்று திட்டிக்கொண்டே பக்கத்தில் கிடந்த காய்ந்த மௌôரை எடுத்து,””இந்தப் பக்கம் வருவியா,

வருவியா?” என்று படார் படாரென்று காலிலே நாலு வைத்தார். எறும்புப் புற்றில் காலை விட்டதுபோல் வலி தாங்காமல் “”அய்யோ… அம்மா…” என்று அலறிக் கொண்டிருந்தான்.

இவனுடைய அலறல் சத்தத்தைக் கேட்டு “”தாத்தா… தாத்தா…” என்றவாறு தேடிச் சென்ற இரண்டு வாலிபர்களும், தப்பித்துச் சென்ற இளவட்டங்களும், அவர்களுடன் வெள்ளை வேட்டி சட்டை மனிதர் ஒருவரும் பேசிக் கொண்டே வந்தார்கள்.

“”தாத்தா முந்திரிக் கொட்டைய திருடறது இவுங்கல்ல. அதுவேற குரூப்பு. இவுங்க நம்ம மூத்தவரோட ப்ரண்ட். பக்கத்து ஊருதான். அதுமட்டுமில்ல இவங்கெல்லாம் நம்மளுவங்கத்தான். தோ… இவர் சொல்லிதான் தெரியுது” என்று இளவட்டங்கள் அழைத்து வந்த வெள்ளை வேட்டி சட்டை நபரை காட்டி சொன்னார்கள்.

“”தம்பி… தப்பா நெனைச்சிக்காத. நாங்கதான் ஆள் தெரியாம அடிச்சுப்புட்டோம். நீயாவது இன்னாருக்கு வேண்டிய பையன்ன்னு சொல்லக் கூடாதா?” என்று சொல்லி விட்டு அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

மச்சராசுவுக்கு உயிர் போய் உயிர் வந்தது போலிருந்தது. “அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டான். அவர்களை நினைக்க நினைக்க அழுகையும், ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது.

அதற்குள் ஊர்க்காரப் பையனில் ஒருவன் மச்சராசுக்கு அருகில் வந்து, “”ஒங்க மாமா வீட்டில ஒன்ன காணோம்ன்னு தேடிக்கிட்டிருக்காங்க. மாப்பிள்ளைக்கு தோழன் யாரும் இல்லாததால நீதான் நாளைக்கு அவனுக்குத் துணையா இருக்கணும்மாம். நீ இங்க இருக்கற விஷயம் அவுங்களுக்கு தெரியாது. சீக்கிரம் வீட்டுக்குப் போ” என்று சொல்லிக் கொண்டே அவசர அவசரமாக கட்டை அவிழ்த்துக் கொண்டிருந்தான்.

“”என்னது மறுபடியும் துணைக்கா…?” முந்திரித் தோப்பிலிருக்கும் போதிலிருந்தே அவன் மனதில் மந்திரச் சொல்லாக திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது…. இனிமே,

எதுக்கும், யாரு கூடயும் துணைக்குப் போகக் கூடாது” என்பது தான்.

– சு.பாண்டியன் (ஏப்ரல் 2015)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *