கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 8,175 
 
 

“ மனோ, காயத்ரி ! பாட்டி வந்திருக்காங்க பாருங்க! ” அம்மா கலா கூவினாள். பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து. மனோவிற்கு வயது ஏழு. காயத்ரி, தங்கை, வயது ஐந்து.

“ஐயா ! பாட்டி, பாட்டி! காயத்ரி, பாட்டி வந்திருக்காங்களாம்!” – மனோ

“ஐயா பாட்டி !”- காயத்ரி குதித்தாள். அண்ணன் எவ்வழி அவ்வழி தன்வழி.

மனோவும், காயத்ரியும் விழுந்தடித்து கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தனர்.

“எப்போ பாட்டி வந்தே!”

“இப்போதாண்டா கண்ணா! உள்ளே நுழையறேன். எனக்கு உங்களை பாக்கணும் போல இருந்தது! உடனே வந்துட்டேன்!”

“நீ எப்போ பாட்டி திரும்பி போவே!” – மனோ

மனோவின் அம்மா, கலா “ உஷ் மனோ! அப்படியெல்லாம் கேக்க கூடாது!”

“விடும்மா! குழந்தை அவனுக்கு என்ன தெரியும்?”

“நீ போகவே கூடாது ! எங்க கூடவே இருக்கணும்!” – மனோ பாட்டியை கட்டி கொண்டு.

“கட்டாயம்! உங்க கூடவேதான் இருப்பேன்”

“ப்ராமிஸ்?”

“ப்ராமிஸ்!”

காயத்ரி “ பாட்டி, கதை சொல்றியா?”

“கட்டாயம், ராத்திரி தூங்க போகச்சே கதை சொல்லறேன்”

“ராஜா கதை சொல்லணும்!” காயத்ரி பாட்டியின் தோளில் சாய்ந்து கொண்டு.

“வேண்டாம் வேண்டாம் பாட்டி ! சாமி கதை சொல்லு!”

“ரெண்டுமே சொல்றேன்! இந்தாங்க சீடை, முறுக்கு! சாப்பிட்டு விட்டு போய் சமர்த்தாய் விளையாடுங்க! ”

கலா “ பசங்களா! பாட்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்!.தொல்லை பண்ணாதீங்க. அத்தை, நீங்க கொஞ்சம் படுத்துகிட்டு இருங்க! நான் சமையல் வேலை பாத்துட்டு வந்துடறேன். நிறைய வேலை இருக்கு. எல்லாத்தையும் நான் ஒருத்தியே பார்க்க வேண்டும். வேலைக்காரி கூட இல்லை ! ”

****

இரவு மணி ஒன்பது.

மனோவின் அப்பா வாசுதேவன், வீட்டில் தனது அம்மாவுடன் அரட்டை.

“அம்மா! இன்னிக்கு தாம்மா உன்னை நினைச்சேன்! நீ வருவியோன்னு!”

“சும்மா புளுகாதே! இந்த ஆறு மாசத்திலே , ஏண்டா ஒரு தடவை கூட நேரே வந்து பாக்கலே? கதை விடறான்!”

“வேலை பளும்மா! தப்பா நினைக்காதே ! ஆனால், எப்பவும் உன் நினைப்புதான்”

“ஏதோ சொல்லு! நம்பறேன்”

“கொஞ்ச நாளாவாது எங்க கூட இருப்பியா?”

“இல்லேடா! உன் தம்பி ஏதோ வேலையா சென்னை வந்தான். அவனோட வந்தேன். நாளைக்கே திரும்பணும், பெங்களூருக்கு.”

“என்னம்மா இப்படி சொல்றே!. நீ கொஞ்ச நாள் இங்கே தங்கிட்டு தான் போகணும். நானும் உன் பிள்ளை தானே! ”

கலா “ஆமா அத்தை! நீங்க இருந்தால், இவருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்! குழந்தைங்க ரொம்ப ஏங்கறாங்க! ”

“இல்லேப்பா! அங்கே, உன் தம்பி பெண்டாட்டியும் வேலைக்கு போறா! குழந்தைகளை பாத்துக்க ஆள் வேணுமே! நான் இல்லாட்டி, உன் தம்பி தவிச்சி தண்ணியா போயிடுவான்”

“முடியாது பாட்டி, நீ எங்க கூடத்தான் இருக்கணும்”- மனோ

“மனோ சும்மாயிரு. பாட்டியை தொந்தரவு பண்ணாதே. பரவாயில்லே அத்தை! என்ன தான் இருந்தாலும், இந்த வீட்டிலே உங்களுக்கு வசதி போதாது தான். பெங்களூர் தான் உங்களுக்கு தோதுப்படும்.”

“அதெல்லாம் இல்லேம்மா! எனக்கு ரெண்டு பெரும் ஒண்ணு தான். கொஞ்ச நாள் கழித்து திரும்பி வரேனே!”

“சரிம்மா! உன் இஷ்டம்! நான் சொன்னா நீ கேக்கவா போறே!”- வாசு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.

****

இரவு மணி 9.30

“பாட்டி! கதை சொல்லு பாட்டி!”

“சொல்றேன்! சொல்றேன்! என்ன கதை வேணும்?”

“சாமி கதை!”

“உன்னை மாதிரி குட்டி கண்ணன் கதை சொல்லட்டுமா?”

“ம்! சொல்லு! சொல்லு !”குழந்தைகள் பாட்டி மடியில் படுத்துக்கொண்டு. காயத்திரி “ இதுக்கு அப்புறம் ராஜா ராணி கதை சொல்லணும்”

“சரி அப்படியே செய்யறேன்!”. பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.

***

“ரொம்ப நாளைக்கு முன்னாடி . டெல்லி பக்கத்திலே ஆயர் பாடி. கோகுலம்னு ஒரு ஊர் . அங்கே, குட்டி கண்ணன் தன் வீட்டிலே விளயாடிண்டு இருக்கான்”

“என்ன வயசு இருக்கும் பாட்டி, குட்டி கண்ணனுக்கு?”

“என்ன, உன் வயசு இருக்கும், ஒரு ஐந்து வயசுன்னு வெச்சுக்கோயேன்!”

“ஹேய் காயத்ரி, சும்மா கேள்வி கேக்க கூடாது?”அண்ணன் அதட்டினான்.”நீ சொல்லு பாட்டி!”

“கண்ணன் மகா குறும்பு. உங்களை மாதிரிதான், ஏதாவது சேட்டை பண்ணி கொண்டே இருப்பான். மண்ணை தின்னுவான். வீடு வீடா போய் உறிலேருந்து வெண்ணை திருடி திம்பான். யாராவது பிடிக்க வந்தா ஓடிப் போயிடுவான்.”

“உறின்னா என்ன பாட்டி?” காயத்ரி. அவளுக்கு எல்லாமே சந்தேகம்.

“அந்த காலத்திலெல்லாம் குளிர் பெட்டி கிடையாதே! அதனாலே, கயிர்லெ வெண்ணை, தயிர், நெய் பானை கட்டி தொங்க விட்டுடுவாங்க. பூனைகிட்டேருந்து, எறும்பு கிட்டேயிருந்து, குட்டி பசங்க கிட்டேயிருந்து காப்பாத்த”.

“ வெண்ணை திருடினா, அவங்க அம்மா அடிக்க மாட்டாங்களா?”

”அவன், நான் வெண்ணை திருடவேயில்லைன்னு சொல்வான்! யம காதகன், மனோ மாதிரி”

“ஐயே! கண்ணன் பொய் சொல்வானா! சாமி போய் எங்கேயாவது பொய் சொல்லுமா?”

“காயத்ரி! பேசாம இரு! நீ மேலே சொல்லு பாட்டி!”

“நல்ல பெண்ணா, கதை கேக்கணும்! கேள்வி கேட்டுகிட்டே இருக்க கூடாது! என்ன!” –பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.

****

குட்டி கண்ணன் தன் வீட்டிலே விளயாடி கொண்டு. அம்மா யசோதா வீட்டுக்குள்ளே ஏதோ வேலையாக இருக்கிறாள். வாசலில் குரல் கேட்கிறது:

அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள், கோபியர். “அம்மா யசோதா! அம்மா யசோதா! ”

“வாங்க! என்ன விஷயம்?”

“அம்மா! உங்க பையன் கண்ணன் பண்ற விஷமம் தாங்கலை! வெண்ணையை திருடி திருடி தின்னுடறான். மத்த பசங்களுக்கு இவன்தான் குரூப் லீடர். எல்லாரும் சேர்ந்து தாழியை உடைச்சு, ரகளை தாங்கலை! உங்க பையனை கொஞ்சம் கண்டித்து வையுங்க அம்மா!”

யசோதா சிரித்தாள். “என் பையனா! இந்த குட்டி கண்ணனா! இருக்கவே இருக்காது!”

“உங்க பையனையே கேளுங்க!”

“கண்ணா! இங்கே வா! நீ வெண்ணை திருடினாயா? இவங்க சொல்றாங்களே?”

“அம்மா !நானா ! நான் எப்படி? நீ நம்பறியா? நானே குட்டி கண்ணன். என் கை பாரு. இவ்வளவூண்டு இருக்கு ! எனக்கு எப்படி உறி எட்டும்? சான்சே இல்லே!”

“யசோதா அம்மா! உங்க பையன் பொய் சொல்றான்! நம்பாதீங்க”

“அம்மா! நானாம்மா பொய் சொல்வேன்? இவங்க தான் பொய் சொல்றாங்க! என்னை பாக்கனும்ன்கிற ஆசையில், இப்படி சும்மா ஒரு நாடகம் போடறாங்க. நம்பாதீங்க! ”

யசோதா “ நான் உன்னை நம்பறேன் கண்ணா ! இதோ பாருங்க! இந்த குழந்தையைப்போய் திருடினான்னு சொல்றீங்களே! வேறே வேலை இல்லே! இன்னொரு தடவை இங்க வந்தால் பாருங்க ! போங்க போங்க!”

இரண்டு நாள் கழித்து:

கண்ணன் தன் வீட்டிலேயே வாயில் வெண்ணையுடன்வெளியே வரும்போது, அம்மா யசோதா பார்த்து விட்டாள். கையும் களவுமாக பிடித்து விட்டாள்.

“ஏய்! திருட்டு கண்ணா! இப்போ சொல்லு! நீ திருடினே தானே! நீ வெண்ணை சாப்பிடறதை நான் பார்த்துட்டேன்”

மாட்டிக்கொண்டான் மாதவன். அவனை அறியாமல், வாயில் வந்தது ” இல்லேம்மா! மே நஹி மக்கன் காயோ!” (நான் வெண்ணை சாப்பிடலே!)

யசோதாவுக்கு கோபம். “நான்தான் பாத்துட்டேனே!ஏன் பொய் சொல்றே! உண்மையை ஒப்புக்கோ! உனக்கில்லாத வெண்ணையா? நானே தரேன்! ”

கண்ணன் குழந்தைதானே ! அடம். தான் பிடித்த பிடியை விடவில்லை. “ இல்லேம்மா! மே நஹி மக்கன் காயோ!”

“போக்கிரி கண்ணா! திரும்ப திரும்ப ஏன் பொய் சொல்றே?”

அம்மாவை எப்படி அடக்கறது ? “அம்மா! இதோ பார், ஏன் என் பேரிலே வீண் பழி போடறே! தினமும், விடி காலையிலேயே என் கையிலே கம்பும், போர்வையும் கொடுத்து காட்டுக்கு மாடு மேய்க்க அனுப்பிடறே! சாயந்திரம்தான் திரும்பி வரேன்!. என்னைப் பார்த்து வெண்ணை திருடறேன்னு சொல்றியே! எனக்கு ஏது நேரம்? சொல்லு!”

“ பின்ன எப்படி உன் வாயில வெண்ண? திருடா ! யாருக்கு காது குத்தற?” யசோதா மடக்கினாள்

“ஒ! அதை கேக்கறியா! என் பிரெண்ட்ஸ் தான் அவங்க திருடி சாப்பிட்டுட்டு என் வாயிலே தடவிட்டு போயிட்டாங்க! ”

“டேய்! அயோக்கியா! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்! உண்மையை ஒப்புக்கோ” யசோதா அதட்டினாள்.

கண்ணன் யோசித்தான். என்ன சொன்னாலும் இந்த அம்மா மசிய மாட்டேங்கிறாளே. ரூட்டை மாத்த வேண்டியதுதான்.

“ அம்மா ! என்ன சும்மா சும்மா திருடன்னு சொல்றே! இனிமே நான் மாடு மேய்க்க மாட்டேன். என்னை சதாய்க்கிறாயா? முடியாது போ!” கண்ணன் இப்போது ஸ்ட்ரைக் பண்ணினான்.

யசோதா சிரித்து கொண்டாள். விளையாட்டு குழந்தை. எப்படியெல்லாம் ஆகாத்தியம் பண்ணுகிறான், இந்த சின்ன விஷயத்திற்கு!

அம்மா விட தயாரில்லை.இந்த சின்னபையனுக்கு என்ன ஒரு அழுத்தம்? நீயா நானா பார்த்துடலாம். முடிவு பண்ணி விட்டாள். “கண்ணா!என்னை ஏமாத்தவா பாக்கிறே ! நீதான் வெண்ணை தின்றாய்! நான் பார்த்தேன்!”

“அம்மா! இல்லை. மே நஹி மக்கன் காயோ!”

“பொய் சொல்லாதே கண்ணா!”

என்ன பண்ணலாம் ? எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டேங்கிறாளே, இந்த அம்மா. ஐடியா ! பாசத்துக்கு அடங்காத அம்மா எங்கேயிருக்கிறாள்?

“எனக்கு தெரிஞ்சி போச்சிம்மா! உனக்கு சந்தேகம் . நான் உன் பிள்ளை இல்லை போலிருக்கு. நான் கருப்பா வேறே இருக்கேன்தானே! அதனாலேதான் என்னை திட்டற! திருட்டு பட்டம் சுமத்துகிறே?”

எந்த அம்மாவிற்கு இந்த சொல்லை தாங்க முடியும்? கண்ணன் பேரில் கொள்ளை பிரியம் யசோதாவிற்கு. நான் பெற்ற செல்ல குழந்தை மனது நோகிறதே! ச்சே! என்ன அம்மா நான்? என் குழந்தை என்ன வார்த்தை சொல்லி விட்டான்?

உடனே கண்ணனை கட்டிக்கொண்டு சொன்னாள். “அப்படியெல்லாம் இல்லேடா கண்ணா! நீ என் கண்ணாச்சே! பட்டாச்சே ! நீ திருடுவியா என்ன? நீ சொல்றது தான் சரி. நீ வெண்ணை சாப்பிடலை தான். ஏதோ நான் தான் தப்பா பார்த்து சொல்லிட்டேன். மறந்துடுடா கண்ணா! என் செல்லமே!” கண்களில் கண்ணீர்.

****

பாட்டி கதையை முடித்தாள். கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மனோவின் அப்பாவும் அங்கே வந்து விட்டார். அவரும் கதையை கேட்டு கொண்டிருந்தார்.

மனோ கேட்டான் “ ஏன் பாட்டி, கண்ணன் பொய் சொன்னானே! அது சரியா?”

பாட்டி ” குழந்தை சொல்றது எல்லாம் பொய்யே இல்லை, மனோ ”

காயத்ரியும் “ பின்னே அம்மா சொல்வாளே எப்பவும் பொய் சொல்லக்கூடாதுன்னு. அப்போ சாமி மட்டும் பொய் சொல்லலாமா?”

மனோவின் அப்பா, தன் அம்மா முகத்தை பார்த்தார். “இதுக்கு என்ன பதில் சொல்லப்போறே?” என்பது போல.

“இல்லடா மனோ! கண்ணன் பொய் சொல்லலியே!அம்மாவோட வார்த்தை ஜாலம் பண்ணினான்”- பாட்டி

“நீதான் இப்போ பொய் சொல்லறே!”- மனோ

“இல்லே மனோ ! கண்ணன் உண்மையைத்தான் சொன்னான்”

“என்னம்மா இது புதுக் கதை! ” – மனோவின் அப்பா.

“கண்ணன் என்ன சொல்றான்? “மேநே யி மக்கன் காயோ!”(நான்தான் வெண்ணை சாப்பிட்டேன்னு). நிஜம் தான் சொன்னான். ஆனால் அவன் அம்மாவுக்கு “மே நயி மக்கன் காயோ” (நான் வெண்ணை சாப்பிடலேன்னு) ன்னு விழுந்திருக்கு. அந்த ஒரு சின்ன சப்தம் தான் வித்தியாசம்.

பாட்டி தொடர்ந்தாள் “இப்போ சொல்லு ! கண்ணன் பொய் சொன்னானா?”

“போ பாட்டி! நீ சொல்றது ஒன்னும் புரியலே!”

“நாளைக்கு திரும்ப சொல்றேன்! அப்போ புரியும். இப்போ உனக்கு தூக்கம் வந்துடுத்து! தூங்கு பாக்கலாம்!”

காயத்ரி அரைகுறை தூக்கத்தில் “பாட்டி ராஜா ராணி கதை?”

“சொல்றேன்! சொல்றேன்! நாளைக்கு சொல்றேன்!”

“அம்மா! நல்லா சமாளிச்சே”– மனோவின் அப்பா

“இது சூர் தாஸ் கவிதை டா. அவர் தான் இதை அழகா சொல்லியிருக்கார். அதுவுமில்லமே, குழந்தைகள் சாமர்த்தியத்தை, சமயோசித பேச்சு திறனை கண்ணன் மூலமா சூர் தாஸ் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் ”

“சரிம்மா! நீ போய் தூங்கு! நாளைக்கு பாக்கலாம்!”
”டேய்! நான் இங்கே தங்கலைன்னு கோபப் படாதே! எனக்கு இங்கே சரிப் பட்டு வராதுடா!”

“அம்மா! எனக்கு தெரியும்மா! என்ன பண்றது? நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்”

“மனசை போட்டு அலட்டிக்காதேடா. கொஞ்ச நாளிலே,எல்லாம் சரியாயிடும். நீ போய் நிம்மதியா தூங்கு.”

“அங்கே என்ன பண்றீங்க! போதும் அரட்டை அடிச்சது. தூங்க வரேலே?” – கலாவின் குரல்.

“இதோ வந்துட்டேன். வரேம்மா”-

****

அடுத்த நாள் காலை:

மனோ “பாட்டி! பாட்டி!”

காயத்ரி “ பாட்டி எங்கேம்மா?”

கலா” பாட்டி போயிட்டாங்க”

“எங்கே!” மனோ

“நீங்க தூங்கிட்டிருந்தீங்க! உங்களை எழுப்ப வேண்டான்னு சொல்லிட்டு பெங்களூருக்கு கிளம்பி போயிட்டாங்க”

“நம்ப கூட இருப்பேன்னு சொன்னாங்களே” – காயத்ரி லேசான அழுகையுடன்.

“பாட்டி பொய் சொன்னாங்க காயத்ரி !” – மனோ, கலங்கிய கண்களுடன்.

“எனக்கு ராஜா ராணி கதை சொல்றேன்னாங்களே”

“பாட்டி பொய் சொன்னாங்க!”- மனோ.“நாங்க பொய் சொன்னா அம்மா அடிப்பாங்க! ஆனால் பாட்டி மட்டும் சொல்லலாமா?”

“இல்லேப்பா! நீங்க அழுவீங்கன்னுட்டுதான் பாட்டி உங்ககூடவே இருப்பேன்னு பொய் சொன்னாங்க.” அப்பா.

“போப்பா! எனக்கு பாட்டி வேணும்!”

“இப்போவே பாட்டி வேணும்” – காயத்ரியும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அழக்கூடாது, மனோ. இப்போ போய் விளையாடு!. நான் சீக்கிரமே பாட்டியை அழைச்சிண்டு வந்துடறேன்”

“எப்போ?”

“ஒரு பத்து நாளில்”

“ப்ராமிஸ்?”

“ப்ராமிஸ்!”

மனோவின் அப்பா, வாசுதேவனுக்கு தெரியும் , இது ஆகிற காரியமில்லை என்று. அம்மா வரமாட்டாள். ஆனால், குழந்தைகளை சமாதான படுத்த, பொய் சொல்லித்தான் ஆகவேண்டும்.

மனோவிற்கு குழப்பம் வேறு மாதிரி. பாட்டி பொய் சொல்றாங்களே. ‘நாம்ப பொய் சொல்லலாமா கூடாதா? அது தப்பில்லையா ? எந்த விஷயத்திற்கு பொய் சொல்லலாம் ? எதுக்கெல்லாம் சொல்லக் கூடாது? ‘

குழப்பம் தீர நாளாகும். “பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்”எனும் குரளுக்கு பொருள் தெரியும் போது, அவன் குழப்பம் தெளியலாம்.

இப்போதைக்கு மனோவும், காயத்ரியும் எல்லாவற்றையும் மறந்து விளையாட ஓடி விட்டனர்.

———————

கண்ணன் பேரில் சுர் தாசின் இனிமையான ஹிந்தி பஜன் : ‘மே நயி மக்கன் காயோ’ – பாடியவர் அனுப் ஜலோட்டா. இது ஒரு வார்த்தை ஜாலம். அருமையான ராகங்கள். அழகாக பாடியிருப்பார். உங்களுக்காக அந்த திரி இங்கே: (நன்றி கூகிள்)

http://www.dhingana.com/main-nahin-m…hajans-3a94031

http://gaana.com/album/main-nahi-makhan-khayokrishna-janmashtami-special?gclid=COiey5zqn7sCFUtV4godkRIA3A

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *