கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 2,925 
 
 

“அம்மா, மொளைக்கீரை கொண்டு வந்திருக்கேன். வந்து வாங்கிக்குங்க. “

வாசலில் கீரைக்காரியின் உரத்த குரல் கேட்டது.

எழுந்திருக்காமல் தலைவலியோடு கட்டிலில் படுத்திருந்த சகுந்தலாவின் செவியில் விழுந்தது.

“என்னங்க !” அழைத்தாள் சகுந்தலா. ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவளின் கணவர் சுந்தரம் எழுந்து அறைக்குள் பிரவேசித்தார். “என்ன சகுந்தலா?”

“வாசல்ல கீரைக்காரி வந்திருக்கா. போய் நல்லதா நீங்ககளே செலக்ட் பண்ணி ரெண்டு கட்டு வாங்குங்க. அவளா கொடுக்கறத வாங்காதீங்க..அப்புறம் ஒரு கட்டு 20 ரூபான்னு சொல்லுவா. ஒத்துக்காதீங்க. 15 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்குங்க. என்ன சரியா?”

இப்படித்தான் சகுந்தலா மார்க்கெட்டுக்குச் சென்றால் பேரம் பேசித்தான் காய் கறி வாங்குவாள். அவர்கள் கேட்கும் விலைக்கு ஒத்துக் கொள்ள மாட்டாள். மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகள் ‘சரிதான் அடாவடி அடிக்கும் அம்மா வந்திட்டாங்க’ என சகுந்தலாவைப் பார்த்ததும் கிண்டலடிப்பார்கள். அதைப் போல கீரைக்காரியிடமும் இதே நிலைதான்,

மனதுக்குள் சிரித்தபடி பதில் ஒன்றும் சொல்லாமல் பணத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றார் சுந்தரம்.

சுந்தரத்தைப் பார்த்ததும், “வணக்கம் சாமி! அம்மா இல்லீங்களா?” என கேட்டாள் கீரைக்காரி.

“தலைவலின்னு படுத்திருக்காங்க.” என்று வண்டியை நோட்டம் விட்டனர், “அட.. கீரையெல்லாம் ஃப்ரெஷ்ஷா யிருக்கே!” என ஆச்சரியப்பட்டார்.

“ஆமா சாமி, ஃப்ரெஸ்ஸூதாங்க!” என அசடு வழிந்தவள், “நீங்களே பார்த்து நல்லக் கட்டா பொறுக்கி எடுத்துக்குங்க சாமி!” என்றாள்.

“பரவாயில்லை, நீயே எடுத்துக் கொடும்மா!”

சட்டென கீரைக்காரியின் மனம் நெகிழ்ந்தது. வாடிக்கைக்காரர்கள் யாராக இருந்தாலும் கீரைக்கட்டு ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து பிடித்திருந்தால்தான் வாங்குவார்கள். பிடிக்காத கட்டுகளை திரும்ப வண்டியில் போட்டு விடுவார்கள். அப்படி போட்ட கட்டுகள் சிலது விற்கப்படாமல் வாடி வதங்கிப் போய் கிடக்கும். அந்த வரையில் கொஞ்சம் நஷ்டம்தான். ஆயினும் வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என தன் மனதை தேற்றிக் கொள்வாள் கீரைக்காரி. ஆனால் சுந்தரம் தன்னை எடுத்துக் கொடுக்கும்படி சொன்னது நெஞ்சை விரிவடையச் செய்தது கீரைக்காரிக்கு.

இரண்டு கட்டுகள் எடுத்து நீட்டினாள். அவற்றை மலர்ந்த முகத்துடன் வாங்கிக் கொண்டார் சுந்தரம். கீரை நன்றாகத்தான் இருந்தது. “ஒரு கட்டு எவ்வளவும்மா?” விசாரித்தார்.

“அய்யா, கட்டு ஒண்ணு 20 ரூபா. அம்மா வழக்கமா 15 ரூபா கொடுப்பாங்க. நீங்களும் 15 ரூபா மேனிக்கு ரெண்டு கட்டுக்கு 30 ரூபா கொடுங்க, போதும்.”

கீரைக்காரியை அர்த்த புஷ்டியுடன் பார்த்தார் சுந்தரம். பரவாயில்லை, மனைவி கேட்கும் விலையையேச் சொல்லி விட்டாள். உத்தமிதான் என நினைத்தார். பிறகு வாய் திறந்தார்.

“ஏம்மா! முன்னாள் ராத்திரி மார்க்கெட்டுக்குப் போய் கீரை கொள்முதல் செய்து அதை வீட்டில் வைத்து கை வலிக்க ஆய்ந்து கட்டுகளாக கட்டி வண்டியில் வைத்து மறுநாள் இப்படி லோ லோன்னு அலைந்து திரிந்து வாய் வலிக்க கத்தி விக்கறே. இதுல உனக்கு கிடைக்கற லாபத்திலும் கை வைக்கும்படி சொல்றயே! வேண்டாம்மா. உன் வயிற்றில் அடிக்க எனக்கு துளிக்கூட இஷ்டமில்லை. இந்தா இந்த பணத்தை வாங்கிக்க.” என கூறி இரண்டு இருபது ரூபாய் நோட்டுகளை கீரைக் காரியின் கையில் திணித்து விட்டு கீரைக் கட்டுகளுடன் வீட்டினுள் நுழைந்தார் சுந்தரம்.

நடந்த சம்பாஷனைகள் வாசல் அறையில் படுத்திருக்கும் சகுந்தலா காதுகளில் வந்து விழுந்தது. கணவரின் வார்த்தைகளில் தென்பட்ட எதார்த்தம் அவள் நெஞ்சை சுட்டது!

கீரைக்காரி ஆதரவற்றவள். அவள் புருஷன் ஒரு பெண் குழந்தையைக் கொடுத்து விட்டு வேறு யாரையோ இழுத்துக் கொண்டு ஓடிவிட்டான். அவன் இருப்பிடமே தெரியவில்லை. திக்கற்றுப் போய் நின்றவள் சுதாரிக்க பல நாட்களாயின. ஒரு வழியாக தன்னைத் தானே தேற்றிக் கொண்டு வாழ கற்றுக் கொண்டாள். குப்பத்தில் இருக்கும் மற்ற குடிசைவாசிகள் கீரைக்காரிக்கு உறுதுணையாக நின்றார்கள். ஆரம்பத்தில் அக்கம் பக்க வீடுகளில் வேலை செய்தாள். அது சரி படவில்லை. பிறகு தள்ளு வண்டி ஒண்ணு வாங்கி க் கொண்டு கீரைக் கட்டுகள் கொள்முதல் செய்து தெருத் தெருவாக சுற்றி விற்க ஆரம்பித்தாள். அதுவே நிரந்தரமானது. பெண்ணுக்கு பதினோரு வயதாகிறது. அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.

கீரைக்காரியைப் பற்றிய விவரங்கள் அறிவாள் சகுந்தலா. அப்படி அறிந்தும் தான் பேரம் பேசி கீரைக் கட்டுகளை தள்ளுபடி விலைக்கு வாங்கி வந்தது எத்தனை பெரிய தவறு என்பது தன் கணவரின் வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்டாள். அதுமட்டுமா?

மார்க்கெட்டில் வியாபாரிகள், எல்லோரு க்கும் ஒரே விலையில் தான் காய்கறிகள் விற்கிறார்கள். அவர்கள் சொல்லும் விலைக்கு மறு பேச்சு பேசாமல் வாங்கிச் செல்பவர்கள் எத்தனையோ பேர்! ஆயினும் பேரம் பேசி வாங்குபவர்களும் உண்டு.

ஆனால் சகட்டு மேனிக்கு விலை குறைத்து அடாவடி அடித்து பேரம் பேசுவதில் சகுந்தலா முதல் ஆளாக நிற்பாள்.

இப்போது நினைத்துப் பார்க்கும்போது அதுவும் மிகப் பெரிய தவறு என்பது புரிந்தது சகுந்தலாவிற்கு. வியாபாரம் செய்பவர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். அதனால், வாழ்வாதாரமாக இருக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு இழப்பு ஏற்பட தான் காரணமாக இருந்ததற்கு வெட்கப்பட்டாள். வேதனைப்பட்டாள்.

இனி யாரிடமும் ‘பேரம் ‘ பேசுவதில்லை என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *