பிப்ரவரி இரண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,783 
 
 

‘கௌரவர்கள் சூதுக்கிழுத்து பன்னிரண்டு + ஒன்று என்ற கணக்கில் பாண்டவரின் இயல்பு வாழ்வை முடக்கியதுபோல்’ உன் சுற்றத்தார் நான் தெளிவில்லாமல் இருந்தபோதும் கையை கடிக்காமல் இருப்பதற்கு சரியான ஆள் என நினைத்திருப்பார்கள், நீயும் உன் வீட்டுக்கு கழிதல் கணக்கில் சுலபமாய் அடங்கிவிட்டாய். இருவரும் வெயிலுக்கும் மழைக்கும் அடிப்பட்டோம். ஹெலிகாப்ட்ரில் வீசும் நிவாரண பொட்டலத்தை கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து வாழ்வோருக்கு சமமாய்த்தான் நம் வாழ்வும் இருந்தது.

பதினான்கு ஆண்டுகள் வாழ்வின் பந்தம் முடியும்போது மூக்கு ஒழுகும் பிள்ளைகளை விட்டு மூடி போட்டு படுத்துக்கொண்டாய் பூமிக்குள். ஆறு ஆண்டுகள் தொடங்க என் தவறுகளை, கடந்தவைகளை திரும்பிப் பார்க்கிறேன். இலக்கியவாதிகள் கழிவிரக்கம் தேடுகிறான் என்று பட்டம் கட்டுவார்கள். எனக்கென்னவோ ஏடுகளில் கிறுக்கும் எழுத்துக்களை கடந்து நிற்கும் யாரும், பூமியில் வாழ நினைக்கும் யாரும் எதையோ ஏதோ ஒருவகையில் பெற நினைக்கிறார்கள், பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியில்லை என மறுக்கும் ஒருவன், எச்சில் இலையை தேடித் தின்னும் பயித்தியக்காரனாகத்தான் இருக்கவேண்டும்.

சில மாதங்கள் கழிந்த நிலையில் உன் வழி வந்த உறவுகள் எனக்கு அன்னியமானது. நான் உன் இருப்பின்போது இருந்ததைவிட பன்மடங்கு இறங்கி அவர்களை சேவித்தேன். ஏனோ தாமரைத் தண்ணீராகவே இடைவெளியை உணர்த்துகிறார்கள். மனைவிமூலம் கணவன்மூலம் வருகின்ற உறவுகள் இவ்விருவரில் யாரோ ஒருவர் இழப்பிற்குப் பிறகு உறவு, உதிரும் பூவாகத்தான் இருக்கிறது. அதுவும் இளவயதுக்காரர்களுக்கு அவ்வுறவிலே மாற்று வழி இல்லாதபோது தீயில் விழுந்த சருகாக சீக்கிரம் தடமே இல்லாமல் காணாமல் போகிறது. எந்த மனிதருக்கும் (எல்லா உயிரினங்களுக்கும் கூட) ‘அன்பை போற்றுதல், அதில் நாட்டமுள்ள’ தாய் வழி உறவுதான் எதையும் தாண்டி உயிர்ப்புடன் நிற்கிறது.

திருப்பிப் பேசாமல் இருக்கும்வரைதான் மனிதன் ‘கடவுள்’ என்று போற்றுகிறான். நீ சொன்ன வார்த்தைகளை இப்போதும் பிள்ளைகளுக்கு பயபக்தியுடன் போதிக்கிறேன். தினந்தோறும் இரவு நேரந்தவறாமல் ஜெபிப்போம். ஏனோ சோகம் நிறைந்த பாடல்களையே தேர்வுசெய்து பாடுகிறோம். அப்போது எனக்கு கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது. அதை பிள்ளைகளுக்கு மறைக்கும் வண்ணம் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்கிறேன். ஏறக்குறைய இரண்டு வருஷங்கள் அதை கடைபிடித்தோம். ஜெபிக்கும்போது உறவுகள், குடும்பகஷ்டம், ஒழுங்குமுறை உள்ளடக்கம் சார்ந்து உன் வழி முறைப்படியே நிறைவேற்றினோம். இடைவிடாமல் பல்வேறு புத்தகங்களை படிக்கும்போதுதான் எனக்கு வாழ்வை குறித்ததான சற்று தெளிவு வந்தது. ஜெபம் என்பது எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுகிற, ஆறுதல் படுத்துகிற ஒரு வழி முறை. நேரடியாக பேசமுடியாத விஷயங்களை குடும்ப ஜெபத்தின் மூலம் பிள்ளைகளிடம் புரியவைக்க உதவும் கருவி எனப் புரிந்தது. அது பிள்ளைகளிடத்தில் வினைபுரிகிறது என்றே தோன்றுகிறது.

இவள் ஏன் பெண்ணாக பிறந்தாள் என்று நீ வருத்தப்பட்டதுண்டு. ஏதாவது விழாவிற்கு அழைத்தால், அவள் உன்னைப்போலவே பொன் நகை இல்லை என காரணம் சொல்லுகிறாள். நல்ல திடகாத்திரமாகவும் அறிவை தக்கவைத்துக் கொள்கிற வழிமுறைகளைத்தான் கடினப்பட்டு என்னால் கொடுக்கமுடிகிறது. உன்னிலிருந்தும் என்னிலிருந்தும் வசீகரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறாள். அவள் என்னைவிட்டு யாரோ ஒருவன் கையில் தஞ்சமடைகிறபோது, அவர்கள் வாழ்வை பதியம் போட என் வாழ்வியல் கோளாறுகளை அவனிடம் சொல்ல என்னிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறாள்.

உன் திருப்திக்காக ஒன்றிரண்டு மட்டும் உனக்குத் தெரிவிக்கிறேன். நீ நம் வீட்டின் ஹாலில் வட்டமாக உட்கார்ந்து சிரித்த சிரிப்பை அக்கம் பக்கத்தில் கேட்டு உன் சகோதரிகள் வந்திருப்பதாக முடிவு செய்வார்கள். அதன் பிறகு அப்படியொரு சிரிப்பு ஹாலின் சுவர்களில் தெறிக்கவேயில்லை. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லுவது போல மனிதனை மதங்கள் தங்கள் கற்ப்பிதங்களால் நிலைநிறுத்தி வைத்திருக்கிறதுதான். உன் சகோதரிகள் கட்டுமானங்களை கடந்து இதுவரை வந்ததேயில்லை. விசாரிக்கிற பழக்கங்கள் குறைந்துதான் போனது. அதற்கு என் வயதும் காரணம்தான். திடீரென்று கைவிடப்படுதல் கொடுமையான விஷயந்தான். சிந்திக்காதவன் நிச்சயம் கொலைகாரனாகக்கூட மாறிவிடுவான்.

இந்நிலையில் போலியாக நடித்து எல்லோரையும் அழைத்து ஊர் பெருமைக்காக எதையும் செய்ய விருப்பம் இல்லை. ஆனால் அதனதை அதனதன் காலத்தில் செய்தல் நன்றுதான். திட்டங்களே இல்லாத உயிரினங்களும்தான் வாழ்கிறது, மடிகிறது. திட்டங்களோடு வாழ்கிறவனுக்குந்தான் மரணம் காத்திருக்கிறது. எதற்கு மனிதனுக்கு திட்டம் வேண்டும் என்றுகூட நினைக்கிறேன். உயிரினங்களைப்போல் இனங்களுக்குள்ளே சாதி, மதம் இல்லாமல் பழகுகிறோமா? ஏற்றத்தாழ்வுகள் புறந்தள்ளி விடுகிறோமா? திட்டங்களால் ஒழுங்கு இருப்பதாக நினைக்கிறோம். அந்த ஒழுங்கு மனப்பான்மைதான் எல்லா தீங்கிற்கும் மூலவேர். அந்த ஒழுங்கை பெரிதாக உடைக்க வேண்டும் என்று இல்லை. அப்படி கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் தேவையில்லை என்பதில் நமக்கு உடன்பாடு உண்டு. அதனால் அவமானப்பட்டு, கடனை உடனை வாங்கி கட்டிய வீட்டை பெண்ணாகப் பிறந்துவிட்டாளே என்று நீ குறைபட்டுக்கொண்ட அவளை ரிப்பன் கட் செய்யவைத்து, நாம் இருவரும் ஜெபித்து வீட்டில் பால் காச்சி குடிபுகுந்தோம் உனக்கே தெரியும்.

ஆறாம் வகுப்பு சேர்த்து முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும்போது எல்லாமே புதிதாக கொடுத்தனுப்புவதில் ஒரு பெருமை அப்படித்தான் ஒரு ஜாமன்றிபாக்சும் புதிதாக வாங்கினேன். ஏனோ திடீரென்று ஒரு மாலை காது குத்திவிடுகிறேன், காதுமுற்றி விட்டால் கஷ்டம் என்று அவளுக்கு காது குத்திவிட முடிவு செய்தோம். எதை செய்வதற்கும் ஏதோ ஒரு பொருள் தேவை. அதோடு சிறு அனுபவம் இருந்தால் நல்லதுதான். தொடங்கும்போது சற்று சிக்கல் வருகிறது. தொழில் நுட்பம் தெரிந்தவரிடம் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மேம்போக்கு இருக்கும். அதில் நுகர்வோர் ஏமாற வாய்ப்பு அதிகம். இப்படி புதிதாய் செய்ய நினைப்பவர்கள் பயத்தின் காரணமாக உண்மையாக செய்ய முயற்சி செய்வார்கள்.

அப்படித்தான் அவளை தன் மடிமீது இடுக்கிப்பிடித்துக்கொண்டு ஜாமன்றிபாக்சில் இருந்த காம்பசில் இடது காதின் மையத்தை பிடித்து குத்தினேன். முதல் முதலில் ஒரு ஆயுதத்தால் மனித சதையை ஓட்டைப் போடுவதென்பதால் சற்று பயம்தான். ஏதாவது தப்பாக செய்து புண்ணாகி, காது கெட்டுவிடுமோ என்ற பயம். பிள்ளைகள் வாழைப் பழத்தை உரித்து அவள் வாயில் திணித்தார்கள். காம்பஸ் காதில் இறங்கியது. ஆனால் மையத்தை தவறி ஓரமாக வருவது போலாகிவிட்டது. அவள் அதிகமாக அழுதாள். கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு என்று குத்தினேன். சமீபமாக இரண்டு குழந்தைகளின் காதுகுத்தல் விழாவில் கலந்து கொண்டபோது எப்படியெல்லாம் ஆர்ப்பாட்டமான சடங்கு முறை பின்பற்றப்பட்டது. எவ்வளவு கூட்டத்தின் மத்தியில் அக்குழந்தைகளுக்கு என்ன என்ன ஆறுதல் வார்த்தைகள் கூறினார்கள். நடத்துகிறவர், மனிதர்களுக்கு மத்தியில் என்னவெல்லாம் சொல்லி உறவுகளை பெருமைப்படுத்தினார் என்பது ஏனோ அப்போது என் மனக்கண்ணில் படமாக காட்சிப்பட்டது.

அவளுக்கு காதிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் கீழேகொட்டியது எனக்கு கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர் கொட்டியது. பையன் கிழிந்த துணியில் காதை துடைத்தான். அவள் வாயில் பாதி வாழைப்பழம் அப்படியே நின்றிருந்தது. பார்த்திருந்த பிள்ளைகள் அப்பா ஏதோ கொடுஞ்செயல் புரிவதுபோல பார்த்தார்கள். காம்பஸ் மறுமுனைக்கு வந்தது. அப்போது எதிலோ வெற்றி பெற்ற சந்தோசம் கிடைத்தது. பிள்ளைகள் சிரித்தார்கள். பொத்தல் விழுந்துவிட்டதென்று காம்பசை இழுத்துவிட்டேன், பொத்தல் விழுந்த இடமே தெரியவில்லை. என் கைவிரல்களில் ரத்தம் படிந்திருந்து. மீண்டும் பயம் பற்றிக்கொண்டது. ஏற்கனவே குத்திய இடத்தின் குறிப்பறிந்து ஒரு வழியாக குத்தி பூந்துடப்பக்குச்சியை சொருகிவிட்டேன். மறு காதுக்கு எந்த பதட்டமும் இல்லாமல் தெளிவாக குத்திவிட்டேன். என்ன குளறுபடியோ தெரியவில்லை முதல் குத்திய காது அவளுக்கு நீண்ட நாள் அடிக்கடி சீழ்பிடித்தது. அதன் பிறகுதான் ஆறியது.

பல வருஷங்கள் கடந்துவிட்டது. ஒரு சிறிய கம்மல் போடுவதற்கு பொத்தல் பெரியதாக இருக்கிறது. ரெண்டு பட்டன் வாங்கிவாப்பா என்கிறாள். ஒருவேளை ஒருவன் கையில் ஒப்படைத்து விட்டபோது, இதே பட்டனுக்காக அவனிடம் கெஞ்சவேண்டி வரலாம். அப்போது ‘எவண்டி உனக்கு காது குத்தினது உங்கப்பன் போட்ட சுண்டக்கா நகையைப் போட எனக்கு செலவு வெக்கிற’ என்றுகூட திட்டுவான். அப்போது பசுமரத்தாணிபோல் தங்கிப்போன இந்நிகழ்வுகளை சொல்லி சங்கடப்படுவாள். அப்போதெல்லாம் மறைமுகமான அவமானத்தை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆண்பிள்ளைகள் குறித்து உனக்கு எப்போதும் ஒரு நிறைவு இருந்ததை நான் அறிவேன். நீ சென்றபோது என் இடுப்பளவு எட்டாதவர்கள் இன்று என் தலையை தாண்டிவிட்டார்கள். தற்போது கார்ட்டூன்களைப் பார்ப்பதில்லை. அரைகுறை ஆடைகளையுடுத்தும் தமிழ்ப் படங்களையும், போலியான காதல் வசனம் தெறிக்கும் தமிழ்ப் படங்களையும் தான் அதிகமாக பார்க்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அறிவுரை சொல்லுவதை வெறுக்கிறார்கள். ஆனால் என் செயல்பாடுகளின் பயனாக அவர்கள் குடும்பக் கஷ்டத்தை உணர்கிறார்கள். சில நேரம் வெறுமையை உணர்கிறபோது எனக்கு கோபம் அதிகமாக வருகிறது. அதுவும் உன் குடும்பத்தின் தலைமை இடமாய் செயல்படும் உறவுகள், கண்டுகொள்ளாததை நினைக்கும்போது துணிந்து தவறு செய்ய நினைக்கிறேன். ஏன்? பெரியவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள், சிறியவர்கள்தான் வந்து தன்னை வணங்கவேண்டும், தன் தேவைகளை கேட்கவேண்டும், தன்னைக் கெஞ்சவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது ‘ஆணவத்தின் உச்சத்தில் வலிந்து செயல்படும் மனிதம்’ என்றே எனக்குப்படுகிறது.

சிறியவர்கள் சிலநேரம் மரியாதையின், கஷ்டங்கள் தரக்கூடாது என்பதின் நிமித்தமாகக்கூட பெரியவர்களை அணுக முடியாத சூழ்நிலையில் தத்தளிப்பார்கள். அதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். நிச்சயமாக பெரியவர்களுக்கு இருக்கும் ஈகோ சிறியவர்களுக்கு (அவர்கள் மேல்) இருக்காது. முந்தின நாள் பக்கத்து வீட்டுக்காரன், அவன் வீட்டுக்கு வந்தவனும் சேர்ந்து உன் அண்ணனை அடித்து விட்டார்களாம். அதைக் கேள்விப்பட்ட உன் சின்ன அண்ணன் கொலை வெறியுடன் வந்து அந்த வீட்டுக்காரர்களின் வெளியில் இருந்த டூவீலர் கண்ணாடி, டூம் எல்லாம் உடைத்து விட்டான். இத்தனைக்கும் உன் பெரிய அண்ணன் அவனை தண்டச்சோறு, ஊர்சுத்தி, ஒதவாக்கரை என்று எப்போதும் திட்டியவர்தான். இப்போதாவது நான் சொல்வதில் உண்மையிருக்கிறது என்று நீ புரிந்துக்கொள்ள வேண்டும். என் மீது தவறே இல்லை என்று சொல்லிவிடமுடியாது. இருந்தாலும் லேசாய் மன்னித்து விடும்படியாகவே இருக்கும். பிள்ளைகள் நான் தவறுகின்ற வேளையில் அதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். நீதிக்குப் பயந்து தவறுகளை திருத்திக் கொள்கிறேன்.

நீ அடிக்கடி சொல்வாயே நாலு பேரு மதிக்க நியாயமான முறையில் வாழ்வது இந்த உலகத்தில் கடினமான காரியம். இருந்தாலும் அதை விடக்கூடாது என்று அதை ஒவ்வொருவர் இடத்திலும் ஆய்வுசெய்து அறிகிறேன். என்னாலும் பலவிஷயங்களில் அதை முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை. நட்பு முறிந்த இருவரிடம் மேலும் சிக்கலை ஏற்படுத்தா வண்ணம் இணைக்கும் நோக்கத்தோடு இருவரிடமும் அன்பு மாறாமல் என்னால் நட்பாய் இருக்கமுடிகிறது. ‘அப்படி இருக்கமுடியாது, இருவரிடத்திலும் ஏதோ பலனை எதிர்பார்த்தால் தான் அப்படி நடந்துகொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்வாய் என்பதை அறிவேன். நீ நினைப்பதும் சரிதான் அவர்களிடத்தில் பழகும்போது அவர்கள் அனுபவங்களையும், அறிவையும் சுரண்டிக் கொள்ள நினைப்பது உண்மைதான். சற்று மிகையாய் இருந்தாலும் நான் பழகும் ஒவ்வொருவரையும் ஒரு நல்ல புத்தகமாக நினைக்கிறேன். இது தவறு என்றால் புத்தகங்களைப் படிப்பதும் தவறுதான். பலவிதமான புத்தகங்கள் சமமான, சுகமான வாழ்வுக்கு உதவுகிறது. பழிக்கவே பழிக்காது.

ஆனால் மனிதர்களிடம் அப்படி இருப்பதனால் பல சமயங்களில் நான் சிக்கலை சந்திக்கிறேன். இருந்தாலும் அதிலிருந்து மாறிக்கொள்ள விரும்பவில்லை. ஒருவேளை அப்படி இருக்க முடியாதபடி ஏதோ ஒரு சார்பில் நிர்பந்தம் வந்தால், அங்கிருந்து விலகிக்கொள்ளவே மனம் முடிவெடுக்கிறது. இதில் உனக்கும் உடன்பாடுள்ளதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இதைக்கூட நீ இல்லாதபோது, நான் இயல்பாகவே மாறிவிட்டிருக்கக்கூடும் என்று நீ நினைக்கக் கூடாது என்பதற்காகவே சொல்லுகிறேன். சிந்திக்காத மனிதனின் இயல்பான குணம் சாவை சந்திக்கும் வரை மாறுவதே இல்லை. அதில் கொடூரங்களே எப்போதும் மிஞ்சுகின்றன. நல்ல சிந்தனையுள்ளவன் செயல்பாடு அடிக்கடி மாறினாலும் அதில் மற்றவருக்கு கெடுதலே நேராது. புரிந்துகொள்வாய் என நினைக்கிறேன்.

நீ சில நேரங்களில் நான் சென்றபிறகு உனக்குத் தோதான ஒரு உறவை புதுப்பித்துக்கொள், அதற்கு எப்போதும் தயங்கவே வேண்டாம் என்று எப்படி உன்னால் சொல்லமுடிந்தது என்று இப்போது யோசிக்கிறேன். நான் பல முறை மரணப்படுக்கையில் விழுந்தும், நீ எனக்கு சேவை செய்யும் போதும் அப்படி ஒரு வார்த்தை ஏன் என் உதடுதாண்டி உனக்கு ஆறுதல் கொடுத்ததே இல்லை. அப்படி ஒரு இரண்டாம் மறுகட்டமைப்பு, மனிதர்களான இருபாலருக்கும் மிக அவசியம் தான். ஆனால் புழுத்து நாறும் உறவுகளின் சடங்குகளில் இருந்து அது நிறைவேறுவது குதிரைக்கொம்புதான். ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு லாபநோக்கு, கற்பிதங்களை, பிரயோகிக்கிறார்கள். தனிமனித உணர்வுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஆனால் கூட்டு செயல்பாடு என்று பெயர்சூட்டி தனி மனித உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்துகிறார்கள். அதற்கு அடிமைத்தனம், சார்பு நிலைதான் காரணமாம். அதை விவரித்தால் உனக்கு வெறும் புலம்பலாக போகுமென்பதற்காக விட்டுவிடுகிறேன்.

நான் சில நேரம் இப்படிக்கூட நினைப்பதுண்டு. உன் போன்ற முகச்சாயல் உடையவர்களை நான் சாலையில் பார்க்கும்போது. ஒருவேளை உன் நினைவு வரும்போது அச்சாயல் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். மேலும் நீ இருக்கிறாய், பரந்த உலகத்தின் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கிறாய் என்றே நினைக்கிறேன். அப்போதும்கூட குடும்பத்தலைவியாகத்தான் உன்னை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. கொஞ்சம் மனசுவைத்து கற்பனையில் மேம்பட்ட வாழ்வை உனக்குக் கொடுக்கிறேன்.

நீ உயர்ரக ஆடைகளை உடுத்திக்கொண்டு ஆடம்பர பங்களாவில் தன் இச்சையாய் உனக்குண்டான எல்லாம் செய்துகொள்ளும் பூரணப்பாத்திரத்தில் உன்னை வரைகிறேன். அங்கே உனக்கு குழந்தைகள் இருக்கும், உன் தோலில் கைப்போட்டு நீ விரும்பும் இடமெல்லாம் அழைத்துச்செல்லும் நபரைக் காண்கிறேன். இது தற்போது எனக்குள் எழுகின்ற யோசனையாகக்கூட இருக்குமோ என நினைக்கிறேன். அதற்கு நடைமுறை சாத்தியம் குறைவுதான். உனக்கு பயம் வேண்டாம். ஆனால் இப்போதுதான் புரிகிறது இவைகளையெல்லாம் மிக மிக குறைச்சலாகவே உனக்கு கொடுத்திருக்கிறேன்.

உன் சிநேகிதர்களிடம் சொல்லவேண்டாம் இலக்கியம் மக்களிடம் சென்று சேராததற்கு காரணம் இலக்கியவாதிகள் தங்களுக்குக் கிடைக்கும் புகழை மனைவிகளுக்கும் வெளிப்படையாக பகிர்ந்தளிக்காமைதான். இலக்கிய சாயல் உனக்கு இருக்கிறது என்று என்னை நீ சொல்லுவாய், அது இப்போது ஞாபகம் வருகிறது. அதை உணர்ந்ததால் தான் இப்போது மேம்பட்ட கற்பனை வாழ்வில் உன்னை தூக்கிப் பிடிக்கிறேன்.

நல்ல நண்பர்களை தெரிந்துகொள் என்று கடைசி நேரங்களில் நீ சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. என்னைக் கேட்டால் நல்ல நண்பர்கள் என்பது குளிர்காலங்களில் சுடுநீரைத் தேடுவது போலதான். அதற்கெல்லாம் எல்லையுண்டு ஆனால் எல்லையை வரையறுக்க முடியாத, மனமொன்றி புரிந்த வாழ்க்கைத்துணைவர்கள் தான் உலகில் சிறந்த நண்பர்கள். இதை பல நண்பர்களுக்கு வலியுறுத்தி சொல்கிறேன். அவர்கள் அதை உபதேசங்களாகவே நினைக்கிறார்கள். இந்த எழுத்து உன்னை வந்து சேரும்போது நீயா இப்படி எழுதினாய் என நினைத்து உனக்குள்ளாகவே சிரித்துக்கொள்வாய் என்று எனக்குத் தெரியும். என்ன செய்வது எல்லோரையும் காலம் கடந்துதான் ஞாநியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஒன்று மட்டும் கூடுதலானான இடத்தைப் பிடித்துக்கொண்டது. பொருள் ஈட்ட முடியாமை. உயிரற்ற இயந்திரங்களை சரிசெய்ய நீயறிந்தபடி நிறைய கருவிகள் என்னிடம் இருந்தது. குறைந்த செலவினால் சரிசெய்துகொள்ள நிறைய பேர் என்னிடம் வந்தார்கள். வாழ்வியலை அறிந்துகொள்ள ஏடுகளை கையிலெடுத்த பிறகு பைசா வருவாய் இல்லை. உனக்குத் தெரியாது என்பதற்காக சொல்லுகிறேன். ரஷ்யா ஆட்சியாளர் ஸ்டாலின் தன் மகள் படித்து முடித்துவிட்டு அவரிடம் தன் எதிர்கால வாழ்வுக்கு எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது என்று கேட்டபோது ‘ஸ்டாலின்’ கண்டிப்பாக இலக்கியம் உனக்கு வேண்டாம். அரசியலை எடுத்துக்கொள்’ என்றுதான் வழிகாட்டுகிறார். இலக்கியத்தின் ஈடுபாடு உள்ளவர்தான். அக்கட்டத்தில் ஆட்சியாளராய் இருந்ததால் அதன் போதை இலக்கியத்தை வெறுமை என்று நினைத்திருக்கலாம். அல்லது பிழைப்புக்கு உதவாது என்று நினைத்தாரோ? எனக்குப் புரியவில்லை அதனால் உனக்கு தெளிவுபடுத்த முடியவில்லை. ஆனால் வருவாய் இல்லாத வாழ்வை பெண்கள் நாடுவது குறைவுதான். உனக்கு கோபம்வேண்டாம்.

தேவைகள் அதிகமாகிறபோது வருவாய் இல்லாமல் நாட்களை கடத்துவது சிரமமாகத் தான் இருக்கிறது. நாம் சேர்ந்து செய்த பலன் தராத எந்த தொழிலையும் தூக்கி எறிந்து விட்டு அதன் முகம் திரும்பிப் பார்க்காது வந்திருக்கிறேன். என்னை மன்னித்துவிடு அறிவதையும், கிறுக்குவதையும் அப்படி சாதாரணமாக விடமுடியவில்லை. ஏனென்றால் பயமில்லாமல் எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களையும் கடக்க மிகவும் உறுதுணையாய் இருக்கிறது. ஒரு வேளை இதை கையில் எடுத்திருக்காவிட்டால் எப்போதோ உன்னிடம் வந்து சேர்ந்திருப்பேன். என்னை பிரிந்திருப்பதில் அவ்வளவு சந்தோசமா ‘பாதகனே’ என்று திட்டவேண்டாம்.

உன் பெயரில் மிக பிரம்மாண்டமான விழா எடுக்க எத்தனித்தேன். விழாக்கள் மனித மனங்களில் இருந்து சீக்கிரம் அழிந்து போகிறது. அதனால் அதை கைவிடுகிறேன். பொய் சொல்லுவதே உன் வேலை என்று நினைக்காதே. நிச்சயமாக இந்த எழுத்தின் மடல் தரும் ஆறுதலை விட, வேறொன்றும் உனக்கு பெரியதாக இருக்கவே முடியாது. ‘கண்ணுக்கு புலப்படாத ஒன்றை நம்பிக்கையோடு தரிசிக்க நினைப்பதுபோல்’ இனி உன்னை காணவே முடியாது என்ற நிலையில், பிப்ரவரி இரண்டில் உன் ஆறாவது நினைவு அஞ்சலியை செலுத்துகிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *