பாமினிக்குத் தன் கணவனை நினைக்க… பொச பொசவென்று எரிச்சல், கோபம்.
பின்னே! தன் தம்பி. தங்கக் கம்பியைப் பற்றி முகம் தெரியாத நபரிடம் இல்லாததும் பொல்லாததுமாய்ச் சொன்னால் யாருக்குத்தான் கடுப்பு, வெறுப்பு வராது. சேதி கேட்ட அந்த அம்மாள் ஓ…. அந்தப் பெண்ணின் தங்கையா இவள் ? என்று தன்னைப் பற்றியும் ஒரு தாழ்ந்த கருத்தை எடுத்துச் செல்வாள்.!
பழக்க தோசத்தில் அடுத்த வீட்டு அலமேலு அம்மாள் தன் மகன் குறையைக் கொட்ட வந்தாள்.
”வாங்கும் சம்பளத்தைக் கொடுக்காமல் தண்ணி அடிச்சு டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கிறான்ப்பா. திருமணமாகியும் பொறுப்பு வராமல்….தத்தாரிகளுடன் சீட்டுல உட்கார்ந்து மிச்ச மீதிப் பணத்தையும் இழக்கிறான்ப்பா. பொண்டாட்டி கழுத்துல ஒரு நகை நட்டு இல்லே. அவளுக்கும் அடி உதை. பார்க்க சகிக்கலை. இதனால அவளைப் பெத்தவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியாமல் தலைக்குனிவு. ஒத்தப் புள்ளையைப் பெத்து…. நான் படாத பாடு படறேன். அவமானமாய் இருக்கு. வாடகைக்கு வந்த இடத்துல யார்கிட்ட சொல்லி அழ.? உன்கிட்ட சொல்றேன். எனக்கு நாதி கெடையாது. நீயாவது கொஞ்சம் கண்டியேன்.” என்று சொன்னவளுக்கு…..
”வீட்டுக்கு வீடு வாசல்படி. என் மனைவியின் தம்பி கதை இதை விட மோசம். கிராமத்துல மிராசுன்னு தெருவுக்கு ஒரு வைப்பாட்டி. தான் குடிக்கிறது மட்டுமில்லாமல் மனைவியையும் குடிக்கச் சொல்லி அடி உதை. டாஸ்மாக்கால ஒரு நல்ல சமுதாயமே நாற சமூதாயமாய் மாறுது. அரசாங்க இலவச கொடுப்பால் வேலைக்குப் போகாமல் சோம்பேறி சமூதாயம் வேற உருவாகிட்டிருக்கு. கவலைப் படாதீங்க. நான் உங்க பையனைக் கண்டிக்கிறேன்.!”
‘எதற்கு இந்தப் பதில் ?! முகம் தெரியாத நபரிடம் மைத்துனனையும் மட்டம் தட்டி அதனால் மனைவியையும் மட்டம் தட்டுவதில் என்ன லாபம்? ‘ கடுப்போடு அமர்ந்திருந்தாள்.
இரவு…..
”எதுக்கு இப்படி சொன்னீங்க ? ” என்று கணவன் சட்டையைப் பிடிக்க….
”பாவம்டி அது. வயசான காலத்துல வேதனை. நாமும் கேட்டு… சரி கண்டிக்கிறேன்னு சொன்னால் தனக்கு மட்டும் கஷ்டம், துன்பம்ன்னு வேதனைப் படும். வீட்டுக்கு வீடு வாசல்படின்னு அது கஷ்டத்துக்கு இணையாய் சொல்லி வைச்சா…. மனசுல சின்னதாய் ஒரு ஆறுதல், வாழ்க்கையில பிடிப்பு வரும். இது மனுசாளுக்கு மனுசாள் மனதளவில் மனிதாபிமான உதவி.” சொல்ல……
பாமினி சட்டென்று சட்டையை விட்டு அவனைக் கட்டிப் பிடித்தாள்.
கதை ரொம்ப சுருக்கமா இருக்கு, ஆனா கருத்து நல்லா நறுக்குன்னு இருக்கு. படித்தேன்,மகிழ்தேன் & அறிந்தேன்.