பார்வை பேதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 1,891 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூக்கபிள்ளைக்கு வயது என்ன இருக்கும் என்பது அவருக்கே தெரியாத சங்கதி.

‘எழுபது எழுபத்தொண்ணு இருக்குமா?’ ‘எழுபத் தஞ்சை நெருங்கியிருக்கலாம், எழுபத்தாறு முடிஞ் சிருக்குமோ?’- இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொன்றைக் கூறும் போது, ‘உம் உம்… இருக்கும் இருக்கும் இருக்கலாம்’ என்பதில் எதையாவது அவர் சொல்லிவைப்பார். அவருக்கே திட்டவட்டமாக எதுவும் தெரியாததுதான் காரணம்.

அவரிடம் ஜாதகக் குறிப்பு எதுவும் இல்லை, அவருடைய வயதைத் துல்லியமாகக் காட்டக்கூடிய ஆதாரங்களும் ஒன்று மில்லை. அவர் அநேக வருஷங்களாக ‘வயது எழுபது” என்று சொல்லிக்கொண்டிருந்தவர் தான். அவருக்கே அது அலுத்துப் போகவும், எழுபத்தஞ்சு’ என்று சொல்ல ஆரம்பித்தார். இப்படிச் சில வருடங்கள் சொல்லிக்கொண்டிருப்பார். பிறகு ஒரே தாவு. ‘எண்பது’ என்று கூற ஆரம்பித்துவிடுவார். அவரது வயதுக் கணக்கைப் பொறுத்த வரையில், அவர் ‘வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்ற நியாயம் தான். அவர் எழுபதையும் அதற்கு மேற்பட்ட எண்ணையும் தொடவிரும்பாமல், ‘அறுபத்தாறு, அறுபத்தெட்டு என்று எதையாவது சொல்லிக்கொண்டிருந்தால், அது சரியில்லை என்று யார்தான் மறுத்துவிட முடியும்? இல்லை; அப்படி மறுப்பதற்கு, மறுத்துப் பேச விரும்புகிறவரிடம், ஆதாரம் தான் என்ன இருக்கிறது? பின்னே என்ன! பேச்சை விட்டுத் தள்ளும்!

மூக்கபிள்ளை புதுப்பட்டி என்கிற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே – ஏன், அவர் தாத்தா காலத்திலிருந்தே – அந்த ஊர் புதுப்பட்டி ஆகத் தான் இருந்து வருகிறது. அதற்கு அக்கம் பக்கத்தில் இரண்டு மூன்று புதூர்கள் தோன்றிவிட்டன. ஒரு ஊர் ‘சிவநகர்’ என்றுகூடப் பெயரைப் பெற்றுவிட்டது. (அது நகரம் ஒன்று மில்லை. முப்பது நாற்பது குடிசைகளைக் கொண்ட சிற்றூர் தான். என்றாலும், அதற்குப் புதுமையான பெயர் வேண்டும் என்று அநேக இளவட்டங்கள் தீர்மானித்தார்கள். அது ‘நகர்’ ஆய்விட்டது!) இருந்தாலும், பிள்ளை அவர்களின் ஊர் இன்னும் பழைய பட்டி ஆகிவிடவில்லை, பெயரளவில்.

மூக்கபிள்ளை இன்னும் நிமிர்ந்துதான் நடந்தார். தடிக்கம்பை கொண்டா’ என்று கேட்கவில்லை. கண்களுக்குக் கண்ணாடியின் உதவி தேவைப்படவில்லை. அவர் வாயில் பற்கள் இருந்தன. ‘அவர் சீடை முறுக்கு பொருவிளங்காய் எல்லாம் வெண்கலப் பானையில் ஸ்டாக் பண்ணியிருக்கிறார். ராத்திரி ஒன்பது மணிக்கு மேலே, யாரும் வீடுதேடி வர மாட்டாங்க என்று உறுதிப்பட்டதும், இருட்டில், கட்டிலில் படுத்தாறே, கடமுடான்னு கடித்துத் தின்பார். தனியாகத் தின்பதிலே அவருக்கு எப்பவுமே இன்ட்ரஸ்ட்!” என்று ஊரில் வாலிபப் பிள்ளையாண்டான்கள் பேசுவது வழக்கம்.

‘சவத்துப் பயலுகளுக்குப் பொறந்த வெறும் பயலுக. அவனுகளையும் யாரு திங்கவேண்டாமுன்னா?” என்று மூக்க பிள்ளை முணமுணப்பதும் வழக்கம்தான். மற்றவர்கள் பேசுவது அவர் காதுகளையும் எட்டத்தான் செய்யும். அந்த ஊரில் ரகசியம் என்று எதுவும் கிடையாது.

‘பெரியபிள்ளை இந்த வயசிலும் சீடை முறுக்குகளை எல்லாம் வெளுத்துக் கட்டுறாரே? அவர் பல்லு நெசமான பல்லுதானா; இல்லே, கட்டிக்கொண்ட பொய்ப் பல்லா?” என்றொரு சந்தேகம் ஒரு சமயம் சில பேருக்கு ஏற்பட்டது. அது உண்மையான பல்லேதான் என்ற உறுதியும் பின்னர் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

‘இது அந்தக் காலத்து மண்ணுடேய் வைரம் பாய்ஞ்ச கட்டையாக்கும்!’ என்று மூக்கபிள்ளை அடிக்கடி பெருமை யாகப் பேசுவார்.

‘சன்னத் தீவனமா தின்னுருக்கான் மனுசன்! உண்டவன் உரம் செய்வான்கிறது சும்மாவா? சனிக்கிழமைதோறும் எண்ணை தேய்ச்சுக் குளிப்பு. அன்று அருமையா உளுத்தங் களி. களி இன்னு சொன்னா அதுதான் களி! பிரமாதமா இருக்கும். அதிலே நல்லெண்ணெய் மினுமினுண்ணு வழியும். பாலும் தயிரும் நெய்யுமா தினம் உள்ளே போய்க்கிட்டே இருக்கு. காப்பி, புகையிலை விவகாரம் எதுவும் கிடையாது. அப்புறம் உடம்பு ஏன் வைரம் பாய்ஞ்சு தளதளன்னு இருக்காது?” என்று, அவரோடு சேர்ந்து வம்பளந்து பொழுதுபோக்கும் பாக்கியம் பிள்ளை பாட்டையா ஒரு தடவை சொன்னார்.

அதை மூக்கபிள்ளை மறுக்கவும் இல்லை. அவரே பெருமை யாகச் சொன்னதும் உண்டு: ‘ஏ, காப்பி என்னடே காப்பி! நீத்தண்ணி (நீராகாரம்) பக்கத்திலே அது நிற்கமுடியும்? காலையிலே எழுந்திருச்சதும், பெரிய தம்ளருக்கு ஒரு தம்ளர் நீத்தண்ணி தினம் குடிச்சிட்டு வா. அப்புறம் உடம்பு எப்படி இருக்குன்னு நீயே பாரு. மரவையிலே பழையச் சோறு போட்டு, கட்டித் தயிரையும் ஊத்தி, திருகப் பிசைஞ்சு, சுண்டக்கறி அல்லது சுண்டல் கீரை வச்சுக்கிட்டு முன்னாலே உட்காரு. ஒரு வெட்டு வெட்டிப்போடுவே நீயே. ஏ, மசால் தோசை, பெசலு ரோஸ்டு அது இதுங்கிறதுல்லாம் டவுனுகள்ளே ஓட்டலிலே சும்மா பேருக்குத்தான். அதுலே என்ன சத்து இருக்குங்கேரு?’ என்று ஆரம்பித்தாரானால், சாப்பாட்டு புராணத்தை எளிதில் ஏறக்கட்டிவிடமாட்டார்.

‘அந்தக் காலத்திலே பார்க்கணும். சாப்பிடதுக்கு முன்னாடி, நெய்யை கைநிறைய வாங்கிக் குடிப்பேன். சோத் திலும் பெரிய கரண்டிக்கு ஒரு கரண்டி நெறைய ஊத்தணும். சும்மா நானும் நெய் ஊத்திக்கிடுதேன்னு கரண்டியைக் காட்டிட்டு இழுத்துக் கொள்ற விசயமே அப்போ கிடையாது. அந்தக் காலத்திலே பாலு, தயிரு, நெய்யி எல்லாம் தாராள மாவும் சகாயமாவும் கிடைச்சுது. இப்பதான் பட்டி தொட்டிகளிலே, துட்டுக் கொடுத்தாலும், பாலு, மோரு, நெய்யி எல்லாம் கிடைக்கேன்குதா? கிராமங்க ரொம்பவும் வறண்டு போச்சு!’ என்றும் அவர் சொல்வார்.

மூக்கபிள்ளையின் ஊரான புதுப்பட்டியே அதற்குச் சரியான உதாரணமாக இருந்தது. குட்டிச் சுவர்களும், இடியும் வீடுகளும், ஊரைவிட்டு வெளியேறும் குடும்பங்களும், பிழைப்புக்காக வெளியூர் போகிறவர்களின் எண்ணிக்கையும் வருஷம் தோறும் அதிகரித்துக்கொண்டிருந்தன. ஊரைப் புதிதாகப் பார்க்கிறவர்கள் பார்வையில் பெரிய பெரிய வீடுகள் படும். அவை வெறுமையாய் நிற்பதுபோல் தோன்றும். ‘இதில் எல்லாம் ஆள்கள் குடியிருக்கலையோ?’ என்ற சந்தேகம் இயல்பாகவே உண்டாகும்.

குறுகலான, நீண்ட, தெருக்கள் எப்போதும் வெறிச் சோடிக் கிடக்கும். ஆட்களின் நடமாட்டம் சிறிதும் இல்லாததுபோல் காட்சிதரும். அவற்றின் வெறுமை முன் னிரவிலேயே மனசை உறுத்தும். எப்போதாவது தெருவில் தென்படுகிற உருவங்கள் – வயது முதிர்ந்தவர்கள், சீக்காளி கள், மெலிந்து உலர்ந்து வதங்கிக் காணப்படும் பெண்கள், போதுமான போஷாக்கின்றித் தவிக்கும் சிறுவர் சிறுமியர்- நிரந்தர வறுமையின் குரூப சித்திரங்களாகக் கண்களை உறுத்துவர்.

இரவு ஏழு மணிக்கே ஊர் ஓசையற்று, இயக்கமற்று, உயிர்த்துடிப்பு குன்றி, மிக அமைதியாகத் தோற்றம் காட்டும். அதன் வெறுமையை, வறுமையை, சவத் தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கே போலும் மின் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும்.

எனினும், மூக்கபிள்ளைக்கு அந்த ஊரை வெகுவாகப் பிடித்திருந்தது. ‘இது ரொம்ப அழகான இடம். இங்கே இருக்கிற அமைதி வேறே எங்கேயும் கிடைக்காது. பக்கத்திலே ஆறு ஓடுது, ஒரு மைல் தூரம் நடந்து போகணு மேங்கேரா? நடப்பது உடம்புக்கு நல்லது. காலை நடை காலுக்குப் பலம்; மாலை நடை மனதுக்கு நலம்! ஆற்றிலே குளிச்சிட்டு, ஆண்டவனை தரிசித்துப்போட்டு, வீட்டிலே வந்து வேண்டியதைச் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்தால், மனசிலே ஆனந்தமும் அமைதியும் நிறைந்துவிடும். இவ்வாறு உற்சாகமாகப் பேசிக்கொண்டே இருப்பார் அவர்- கேட்பதற்கு ஆள் இருந்தால்.

மூக்கபிள்ளை அந்த ஊரைவிட்டு அதிகமாக எங்கும் போனவர் அல்லர். ‘வட்டச் சம்மணம் போட்டு ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்துவிடும் பிள்ளையார் மாதிரித்தான் அவரும். ‘ஊர்வழி போறது வாறதுங்கிற தெல்லாம் சும்மா வீண்வேலை!’ என்பது அவரது ஆணித்தர மான கருத்து. ‘மதுரை பாராதவன் கழுதை என்று அவர் ஊர்ப்பக்கத்துப் பெரிய மனிதர்கள் அடிக்கடி சொல்லி வந்ததனால், அப்படி அந்த ஊரிலே என்ன அதிசயம் இருக்குது பார்க்கலாமே என்று அவர் ஒருதடவை மதுரை போய் வந்தார். அந்த யாத்திரை அவருக்கு உற்சாகம் அளிக்க வில்லை. அவ்வூர் அவருள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடவும் இல்லை. அதன் பிறகு அவர் எந்த ஊருக்கும் போக வேண்டும் என்று ஆசைப்படவுமில்லை.

‘திருச்செந்தூரில் திருவிழா நடக்குது, வாருமேன்’ என்று பாக்கியம் பிள்ளை அவரை எத்தனையோ தடவைகள் கூப்பிட்டுப் பார்த்தார். கடைசியாக வெற்றியும் பெற்றார். இரண்டுபேரும் போனார்கள். திரும்பி வந்ததும் மூக்கபிள்ளை தீர்மானமாகச் சொல்லிவிட்டார்:

‘திருவிழா என்ன திருவிழா! ஒரே கும்பலும் நெருக்கடி யும்தான். ஊருக என்றால் எல்லாம் ஒரே மாதிரித்தான். தெருக்கள், வீடுகள், ஆளுகள்! சின்ன ஊரிலே இதுக குறை வாகவும், பெரிய ஊரிலே அதிகமாகவும் இருக்கும். அவ்வளவு தானே!’

அதிலிருந்து பாக்கியம் பிள்ளையோ, வேறு யாருமோ அவரை எங்கும் அழைப்பதில்லை என்றாகிவிட்டது. அதனால் மூக்கபிள்ளைக்குத் திருப்திதான் உண்டாயிற்று.

‘எங்க தாத்தா இந்த ஊரிலேயேதான் இருந்தார். இங்கேயே கடை வைத்துச் சம்பாதித்தார். இந்த வீட்டைக் கட்டினார். தாம் வசதியாக இருந்து,சாவதற்கு நல்ல இடம் வேணுமே என்று எண்ணித்தான் வசதியாய், பெரிசாய் இதைக் கட்டினார். இதில்தான் மனநிறைவோடு செத்தார். அவர் எந்த ஊருக்கும் போனதில்லை எங்க அப்பாவும்

இங்கேயே இருந்து, பல வழிகளிலும் சம்பாத்தியம் பண்ணி, வயல்கள் வாங்கினார். அவர் கல்யாணம் விசேஷம் என்று சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்வருவாரே தவிர, வீணாக ஊர் சுற்றியது கிடையாது. சந்தோஷமாகத்தான் செத்தாரு. நானும் இங்கேயே இருந்து, வயல்களை கவனிச்சுக்கிட்டு, நிம்மதியாக இருக்கேன். மனநிறைவோடு சாவேன்” என்று அவர் எப்போதாவது சொல்வது உண்டு.

அவருக்கு உள்ளூரிலேயே கல்யாணம் ஆயிற்று. அதனால் மாமனார் வீடு, அங்கே இங்கே என்று அயலூர் போக வேண்டிய அவசியம் தலைகாட்டாது போயிற்று. அந்த விஷயத்திலும் பிள்ளைக்கு ரொம்ப திருப்தியே.

அந்த ஊரிலேயே அவரைப்போன்ற நோக்கு பெற்றிருந் தவர்கள் வேறு சிலரும் இருந்திருக்கக்கூடும். இருந்தார்கள். அவர்கள் மூக்கபிள்ளைக்கு முன்பே தங்களது ‘நெடும் பயணத்தை மேற்கொண்டு விட்டார்கள். எனவே மூக்க பிள்ளையின் அபிப்பிராயம் அந்த ஊரின் புதிய தலைமுறையின ருக்கு விசித்திரமானதாகவும், ‘கிணற்றுத்தவளை மனோ பாவம்’ ஆகவும் ஒலித்தது.

முதலில், அவருடைய மகனுக்கே அது பிடிக்கவில்லை.

செல்லையா டவுன் பெரிய பள்ளிக்கூடத்தில் படித்தான். ஊரிலிருந்து ஆற்றங்கரைப் பாதையாக அதேக பையன்கள் போய்ப் படித்துவிட்டு வந்த பள்ளியில்தான் அவனும் படித் தான். ஆனால், இரண்டு மைல் நடந்து ‘ரயில் கெடி’யை அடைந்து காத்திருந்து ரயில் வந்ததும் ஏறிப்போய், பிறகு சாயங்காலம் ரயிலில் வந்து இறங்கி, பழையபடி நடந்து, இருட்டுகிற சமயத்தில் வீடு வந்து சேர்ந்து கொண்டிருந்த சில பையன்களோடுதான் அவனும் போய்வந்தான்.

அவன் கெட்டிக்காரப் பையன். படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாகப் பெற்றிருந்தான். அதனால் சிரமங்களைப் பொருட்படுத்தாது, படிப்பையே கரும் மாக ஏற்று, அந்தக் கருமமே கண்ணாக இருந்தான்.

அவன் அம்மா பர்வதம் இருந்தவரை அப்படி நடந்தது. அவள் இறந்த பிறகு அவன் டவுனில், ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கும்படி மூக்கபிள்ளை ஏற்பாடு செய்துவிட்டார். விடுமுறை காலத்தில்தான் ஊருக்கு வருவான். அவனுக்குப் ‘பொழுதே போகாது. அந்த ஊரின் ‘பின்தங்கிய நிலைமை’ களும், அங்கு வசிப்பவர்களின் குறைபாடுகளும் அவனுக்கு மனக்கசப்பை உண்டாக்கி வந்தன.

அவன் கல்லூரியில் படித்துத் தேறி, உத்தியோகத்துக்கு வலை வீசி, ஒரு வேலையும் தேடிக்கொண்டான். சில வருடங் களுக்கு ஒருமுறை வெவ்வேறு ஊர்களுக்கு மாறுதல் அளிக்கும் ஒரு உத்தியோகம் அது. நல்ல சம்பளம் கிடைத்தது. ஊர் மாற்றங்கள் அவனுக்கு அலுப்புத் தரவில்லை. மகிழ்ச்சியே அளித்தது.

மூக்கபிள்ளை தான் அலுத்துக்கொள்வார்: ‘இதென்ன பிழைப்பு! ஒரு இடத்திலே தங்கியிருக்க முடியாமல், அடிக்கடி குடிசையைத் தூக்கிக்கிட்டு, ஊர் ஊராக அலையிற வேலை! என்னமோ அவனுக்குப் புடிச்சிருக்கு. பின்னே நமக்கென்ன!

அவர்கள் சமூக நியதிப்படி, பெண்ணைப் பெற்ற புண்ணியவான்கள் தேடிவந்தார்கள். பையன் பி.ஏ. படிச்சிருக்கான். நல்ல வேலை பார்க்கிறான். தங்கக் கம்பி; இடமும் நல்ல பெரிய இடம்’ என்று நற்சான்றுகள் கூறி, ‘நகை ஐயாயிரம் ரூபாய்; ரொக்கம் மூவாயிரம் தாறோம்; கல்யாணமும் நடத்திவிடுகிறோம் என்று ஏலம் கூறிக் கொண்டு நெருக்கினார்கள். பிள்ளைவாள் பிகுப் பண்ணினார். அதனால் ‘நகை ஏழாயிரம் ரூபாய், கையிலே ரொக்கமா ஐயாயிரம் தாரோம். கல்யாணத்தையும் சிறப்பா நடத்தி வைக்கிறோம். சீர்வகைகளையும் நிறையவே செய்வோம் என்று வாக்களித்த இன்னொரு ‘பெரிய இட த்தின் மகளை மூக்கபிள்ளை, மகன் செல்லையாவுக்கு வாழ்க்கைத் துணை ஆக்கினார். தமது கடமை முடிந்தது என்ற திருப்தியில் மிதந்து களித்தார்.

செல்லையாவின் மனைவியும் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவள். நாகரிக நோக்கு கொண்டவள். அதனால் அந்தப் பட்டிக்காட்டுப்பய ஊருக்கு ஏன் ஏன் போகணும்?’ என்று நினைத்தாள். அவள் சொல்படி செல்லையா நடந்துகொண்டான். ஆகவே, புதுப்பட்டிக்கு அவர்கள் ‘எப்பவாவது வந்துபோவதுகூட, ஒன்றிரு வருடங்களுக்குப் பிறகு நின்றேவிட்டது.

அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. ‘பேரன் பேத்தி களைப் பார்க்க வரும்படி மகன் தந்தைக்கு அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருந்தான்.

ஆனால் மூக்கபிள்ளைக்கு இருந்த ஊரைவிட்டு அசைய மனம் இல்லை. ‘கோயில் மாதிரி’ அவருக்குத் தோன்றிய தனது வீட்டைவிட்டு வெளியே எழுந்தருள அவருடைய திரு வுளம் இசையவில்லை. ஆகவே, வயல் சோலி, அது இது என்று ஏதேனும் காரணங்கள் கூறித் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். மகன் மருமகள் எல்லோரும் ‘தூரா ெ தொலைவில்’ இருந்ததும் அவருக்குச் சௌகரியமாயிற்று. ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை, அறுப்பு முடிந்ததும், நெல்லை அவித்து, அரிசியாக்கி, மூட்டைகளாக லாரியில் ஏற்றி பத்திர மாக மகனுக்கு அனுப்பிவிடுவார். அதில் அவருக்கும் திருப்தி; மகனுக்குப் பெருமை; மருமகளுக்குச் சந்தோஷம்.

அநேக வருடங்களுக்குப் பிறகு, புதுப்பட்டிக்கு அருகில் உள்ள பெரிய நகரம் ஒன்றுக்கு மாறுதல் பெற்று, செல்லையா வந்து சேர்ந்தான். சௌகரியமான வீடும் கிடைத்திருந்தது. அவன் பதுப்பட்டி வந்து அப்பாவையும் நகருக்கு வருமாறு அழைத்தான், ‘இங்கே தனியாக, சமையல்காரி சமையல் செய்து போட, உதவிக்கு ஆள் இல்லாமல் கஷ்டப் படுவானேன்? இத்தனை காலமும் இருந்தது சரிதான். இனி மேல் கொஞ்சம் வசதியாக, பேரன் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டு, ஓய்வாக இருக்கலாம் அல்லவா?’ என்று சொன்னான்.

மூக்கபிள்ளை அதற்கு இணங்காமல் போகவே, உங்க இஷ்டம். இருந்தாலும் ஆசையாகக் கூப்பிடுறேன். ஒரு மாசத்துக்காவது அங்கே வந்து தங்கியிருங்கள். உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும்படி நானும் ராசம் மாளும் கவனித்துக்கொள்கிறோம். குழந்தைகள் தாத்தா தாத்தா என்று உங்களைப் பார்க்கும் ஆவலில் இருக்கிறார்கள். நீங்கள் மறுக்கக்கூடாது’ என்று கோரினான்.

பெரிய பிள்ளை யோசித்தார். பின்னர், ‘பெரிய மனசு பண்ணி’ இணங்கினார். ஒரு நாளும் குறித்து மகனை அனுப்பி வைத்தார்.

அதன்படியே மூக்கபிள்ளை நகரத்துக்கு, மகன் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தார்,

வீடு கலகலப்பாக இருந்தது. குழந்தைகள் ஏதோ பூதத்தைக் கண்டதுபோல் மிரண்டும் வெட்கப்பட்டும் ஒளிந்து கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்திற்குத்தான் அப்படி. பிறகு அவர்களது இயல்பின்படி கத்திக் கூப்பாடு போட்டுக்கொண்டு, அங்கு மிங்கும் ஓடி ஆடினார்கள், குதித்தார்கள், பொருள்களைப் போட்டு உடைத்தார்கள். ஒருவரை ஒருவர் குறைகூறியும், அடித்தும், சண்டை முற்றியதும் அழுதும் பொழுதுபோக் கினார்கள். அம்மாக்காரி பிள்ளைகளை அடக்குகிறேன் என்று ஓயாமல் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தாள். எப்போதும் கர்ணகடூரமான ஓசைகளை எழுப்பிக்கொண் டிருப்பதில் அந்த வீட்டில் எல்லோருக்குமே உற்சாகம் அதிகம் என்று மூக்கபிள்ளைக்குத் தோன்றியது.

அவர் வெகுநேரம் வரை பொறுமையாக இருந்து பார்த் தார். வந்த அன்றைக் கே பிள்ளைகளைக் கண்டிக்க வேண்டாம் என்று என் எண்ணினார். வரவர ‘அதுகள் பிள்ளைகளாகத் தோன்றவில்லை அவருக்கு. குரங்குகளாகவே தோன்றினர். அவருக்கே பொறுமை போய்விட்டது. ‘ஏ குரங்குகளா, ஏன் இப்படிக் கத்திக் குதிச்சுக்கிட்டு கலாட்டா பண்ணுறீங்க? அமைதியா ஒரு இடத்திலே உட்கார்ந்து விளையாடுங்களேன் என்று எரிந்து விழுந்தார்.

அப்புறம் அடிக்கடி அதட்டல்களும், போதனைகளும் கண்டனங்களும், குறைகூறல்களும் அவரிடமிருந்து சிதறிக் கொண்டிருந்தன.

பிள்ளைகள் அவற்றைப் பெரிதுபடுத்தவில்லை. அவர்கள் இஷ்டத்துக்கு, வழக்கம்போல், கூச்சலிட்டும் சண்டை போட்டும் அழுதும் அமர்க்களப்படுத்தினார்கள்.

‘சே, இதென்ன வீடா இது! ஒரே காட்டுக் கூச்சலா இருக்கிறதே எப்ப பார்த்தாலும்! என்று பெரியவர் அடிக்கடி அலுத்துக்கொள்ள நேரிட்டது.

வீட்டில் அமைதி இல்லை; கொஞ்சநேரம் வெளியிலே போய்வரலாம் என்று கிளம்பினார் மூக்கபிள்ளை.

தெருவில் எப்பவும் கூட்டம்தான். கூட்டம்தான். சிறு தெருவைக் கடந்து பெரிய தெருவில் அடியெடுத்து வைத்தால், உயிருக்கே ஆபத்து வந்துவிடும் போலிருந்தது. சைக்கிள்கள், மோட்டார்கள், பஸ்கள். சைக்கிள் ஓட்டுகிற பயல்கள் அவனவன் இஷ்டத்துக்குக் குறுக்கும் நெடுக்குமாகப் போறானுக. எந்தப் பக்கமிருந்து கார் வருமென்று தெரிய வில்லை. எங்கே போனாலும், ஓரம் போ ! ஏ,ஓரமாப் போ மரியாதை தெரியாத பயல்கள்… ஒருவன், ஏ Q கழவா. என்ன சாகணும்னு ஆசையா? அதுக்கு என் காருதானா அகப் பட்டது?” என்று சத்தம் போட்டான்.

இவ்விதம் பெரிய பிள்ளையின் எரிச்சலை அதிகப்படுத்தும் எத்தனையோ நிகழ்ச்சிகள், வெளியிலும், கூச்சல்களையும் ஓசைகளையும் கிளப்புவதில் ஆர்வம் உடையவர்களாகவே ஜனங்கள் காணப்பட்டார்கள். ‘சே, இதுவும் ஒரு ஊரா!’ என்று காறித் துப்பியது மூக்கபிள்ளையின் மனம்.

நகர மக்களின் நாகரிகமும், வாழ்க்கை முறைகளும் மூக்கபிள்ளைக்குச் சம்மதமாக இருக்கவில்லை. ‘என்ன எழவு நாகரிகமோ! என்று அலுத்துக்கொண்டார் அவர். நகர தாகரிகப் பழக்க வழக்கங்கள் தன் மகன் வீட்டிலும் நிலையாக வேரூன்றி வளர்வதை அவர் ஒவ்வொரு கணமும் உணர்ந் தார்.

காலையில் எழுந்ததுமே பல் விளக்காமல், காப்பி குடிக்கும் நாகரிகம் அக்குடும்பத்தில் எல்லோரிடமும் படிந் திருந்தது. ‘இது என்ன வழக்கம்! சீ, இது நல்லதில்லே!’ என்று அவர் உபதேசித்தார்.

குழாய் தண்ணீரில் ஒன்றரை வாளி பிடித்து, குளித்தேன் என்று பெயர் பண்ணுவதும் அவருக்குச் சரிப்பட்டு வரவில்லை. ஐந்தாறு வாளிகள் தண்ணீர் பிடித்துக் காலி பண்ணினால், மருமகள் முணுமுணுத்தாள்.

அவர் காலையில் ‘நீராகாரம்’ கேட்கிறபோதும்; தோசை வேண்டாம், பழையச்சோறு வேண்டும் என்று கோருகிற போதும், அவள் முனகினாள். ‘இங்கே பழையதும் கிடையாது, நீத்தண்ணியும் இல்லை’ என்று அவள் சொல்வது அவருக்குச் சிடுசிடுப்பதுபோல் தோணும்.

முன்னிரவில் அவர் ‘கோயிலுக்குப் போகலாம், வாங்க என்று பேரன்களை அழைத்தபோது, ‘நாங்க சினிமாவுக்கு போகப்போகிறோம், கோயில் என்ன கோயில்!’ என்று அவர்கள் கூச்சலிட்டார்கள்.

இவ்வாறு, மூக்கபிள்ளைக்கும் பிந்திய தலைமுறையினருக் கும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அபிப்பிராய பேதம் எழுந்துகொண்டே இருந்தது. ‘சே, நான் இங்கே வந்தது தப்பு. இங்கே அமைதியும் இல்லை; வசதிகளும் இல்லே. அதனால் மனசில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லை’ என்று அவர் தனக்குத்தானே அநேக தடவைகள் சொல்லிக் கொண்டார்.

விருந்தும் மருந்தும் மூணுநாள் என்பாக. இந்த நகர வாசத்தையும் மூணு நாளைக்கு மேலே என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று அவர் தீர்மானமாகக் கருதினார்.

ஆகவே, நான்காம் நாள் காலையில் மூக்கப்பிள்ளை புதுப் பட்டி என்கிற தனது சொர்க்கத்தை நாடிக் கிளம்பி விட்டார்.

‘என்னப்பா நீங்க…இன்னும் ஒரு வாரமாவது’ என்று இழுத்தான் மகன்.

‘நல்லவேளை. பொசுபொசுப்பும், புழுபுழுப்பும் விட்டு வழியாகுது, எதுக்கெடுத்தாலும் நொள்ளாப்பு. இது சொத்தை, அது சொள்ளையின்னு வக்கணை கொழிச்சுக் கிட்டு… சீக்கிரம் கிளம்பினதே நல்லது’ என்று மருமகள் மனசினுள் கருதினாள்.ஆயினும் வாய் வார்த்தையாக ‘என்ன மாமா இப்படி, வந்த நாலாம் நாளே புறப்பட்டுட்டீங்களே? என்று குறைபட்டுக் கொண்டாள்.

பேரன்கள் ‘டா-டா, பை-பை, சீரியோ!’ என்று கூச்சலிட்டு வழியனுப்பினார்கள்.

‘மரியாதை தெரியுதா பாரேன்! வணக்கம், போய் வாங்க யின்னு சொல்லக் கத்துக்கிடலே. என்னென்னவோ கத்துறானுக!’ என்று மூக்கபிள்ளையின் மனம் புலம்பியது. புதுப்பட்டியை நினைத்துக்கொண்டது. “என்ன அழகான அமைதியான ஊரு! அதை விட்டுப்போட்டு இங்கே வந்தேனே!” என்று அனுதாபப்பட்டது.

அவர் கால்கள் வேகமாக நடக்கலாயின.

– எழுத்தாளன் மலர் 1973

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *