பரணியின் கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 4,884 
 
 

நீ மச்சக்காரன்யா, உனக்கு வரப்போற பொண்டாட்டி இளவரசி மாதிரி இருப்பா, நல்லா பெரிய இடத்துல இருந்துதான் வருவா”

ஜோசியக்காரர் சொன்னதை அப்படியே சொக்கிப்போய் கேட்டுக் கொண்டிருந்தான்பரணி.

ஆனால், நாட்கள் வருடங்களாய் ஓடிக்கொண்டே இருந்தன இளவரசியைத்தான் இன்னும் காணோம்.

“குடும்பம் என்ற இரயிலில் எல்லோரும் ஏறிக் கொண்டு எனக்கு டாட்டா காட்டி செல்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த இரயிலில் இடம் கிடைக்கமாட்டெனெங்கிறது?

இப்படி ஒரு தத்துவத்தை உதிர்த்துக் கொண்டிருப்பவன் நம் கதையின் ஹீரோ பரணீதரன் என்கிற பரணி தான்.

அவனுக்கென்ன குறைச்சல், சினிமா நடிகர்களை விட ஆள் கொஞ்சம் அழகாயத்தான் இருப்பான். வீட்டில் இரண்டாவது பையன். அவனுக்கு கீழ், மேல், ஆண், பெண், இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவனுக்குத்தான் ஒன்றும் அமையமாட்டேனெங்கிறது.

இதற்கும் இவன் பிரபலமான ஜோசியக்காரரிடம் தன்னுடைய ஜாதகத்தை காண்பித்திருக்கிறான். அவர் சொன்னார், பரணி நீமச்சக்காரன், இளவரசி மாதிரி ஒரு பெண் உனக்கு மனைவியாகப் போகிறாள். இதை கேட்டது முதல் பரணி நான்கு நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறான். அதுவெல்லாம் கடந்து போன கதை. ஜோசியம் சொல்லி மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. எல்லாம் தட்டியே போகிறது.

பரணி ஆள் மட்டுமல்ல குணமும் குழந்தைதான். இதற்கும் அவனுக்கென்று அவன் அப்பா தனியாக அந்த நகரில் ஒரு ஹோட்டல் வைத்து கொடுத்திருக்கிறார். நஞ்சை, புஞ்சை நிலங்களும் அவர்கள் குடும்பத்துக்கு நிறைய உண்டு. இவனை பொருத்தவரை பயபக்தியானவன். கனவு காணும் போதுகூட பெண்கள் வந்துவிட்டால் இரண்டடி தள்ளி நின்றுதான் பேசுவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில நேரங்களில் நடு இரவில் எழுந்து உட்கார்ந்து கொள்ளுவான், என்னடா என்று அவன் அப்பாவோ, அம்மாவோ கேட்டால், அசிங்கமா கனவு வருதுப்பா என்று அப்பாவியாய் சொல்லி முழிப்பான். சினிமா பார்த்தால்கூட ஓரளவுக்கு மேல் காட்சிகள் பார்க்க முடியாமல் இருந்தால் படக்கென கண்ணை மூடிக்கொள்வான். இப்படிப்பட்ட அப்பாவிக்கு இன்னும் பெண் கிடைப்பது குதிரை கொம்பாய் இருக்கிறது.

ஆனால் வியாபாரத்தில் படுசூட்டிகை. எல்லா நெளிவு சுழிவுகளையும் தெரிந்து வைத்திருக்கிறான். இவன் அப்பா அம்மாவிற்கு இவனுக்கு பெண் அமையாதது பெரும் கவலை. அப்படித்தான் ஏதாவது பெண்ணை விரும்புகிறானா என்றால் மூச்ச்..பேசக்கூடாது. இப்படிபட்டவனுக்கு எங்கு பெண் தேடுவது?

அவர்கள் ஊரில் இருந்த திரையரங்கு ஒன்றில் எதேச்சையாக ஒரு படம் பார்த்தான். அந்த படம் அவன் மனதை அப்படி சோகப்படுத்திவிட்டது.

அந்த படத்தின் கதையில் நாயகனும் நாயகியும் உருகி உருகி காதலிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இருவரும் ஒன்று சேராமலேயே பிரிந்து விடுகிறார்கள். இதனால் இருவரும் தனித் தனியே சோகமாய் பாடல்கள் பாடி வருத்திக் கொள்கிறார்கள். இதை பார்த்தது முதல் பரணிக்கு அது நடிப்புத்தான் என்று புரிந்தாலும் அந்த சோககாட்சியில் நடித்த அந்த நடிகையிடம் எப்படியாவது ஆறுதலும், தன்னுடைய பிரச்சினைக்கு யோசனையும் கேட்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். ஆனால் ஒரு பிரச்சினை, அந்த படம் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் வெளி வந்த படம், அந்த பெண் நடிப்புலகை விட்டே சென்று விட்டதாகவும் கேள்வி.

ஒருவரை கண்டுபிடிக்க இப்பொழுதுதான் ஏகப்பட்ட வசதிகள் வந்துவிட்டதே. ஒரு வழியாக விலாசம் கண்டுபிடித்து ஒரு கடிதம் எழுதுகிறான். இந்த கடிதம் அந்த நடிகையிடம் இல்லை இல்லை இவள் இப்பொழுது ஒரு தொழிலதிபராக இருப்பவள், அந்த கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாள்.

இவளை பொருத்தவரை நடிப்பு என்பதை விட்டு நிரம்பகாலம் ஆகிவிட்டது. நல்ல வசதியில் பின்பலம் இருந்ததால் திரைஉலகில் பதினாறு வயதில் புகுந்தவள் “ஹோம்லிலுக்” என்ற பட்டத்துடன், எல்லா மொழிகளிலும் நிறைய கதாநாயகர்களுடன் உருகி உருகி காதல் செய்து நடித்திருக்கிறாள். ஆனால் அவள் மனதில் இதுவரை ஒரு ஆண்மகன் கூட உள்ளே நுழைய முடியவில்லை. அவளை பொருத்தவரை இது ஒரு தொழில், அவ்வளவுதான், மற்றபடி வசதிகள் நிறைய இருந்ததால் அடுத்து சாதிக்க தொழில் துறையில் புகுந்து விட்டாள். இந்த ஐந்து வருடங்களில் ஒரு கம்பெனியை நிர்வகித்து உலா வந்துகொண்டிருப்பவள்.

அவளுக்கு இவனின் கடிதம் வேடிக்கையாகவும் அதேநேரத்தில் இப்படியும் இந்த காலத்தில் ஒரு அப்பாவியா? என்ற எண்ணம் வந்தது. அம்மா அப்பா இவளை கல்யாணம் பண்ணிக் கொள்ள சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் இவனின் கடிதம் அவள் மனதில் சலசலப்பை உண்டு பண்ணிவிட்டது.

பரணிக்கு வந்த போன்கால் அந்த நடிகையிடம் இருந்து வந்தது, உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டு.. பரணிக்கு ஒரே மகிழ்ச்சி. நாளையே வந்து பார்ப்பதாக சொன்னான். அவனை அவள் கம்பெனி விலாசத்துக்கே வரச்சொன்னாள்.

அவளை நடிகையாகவே நினைத்து போனவன், அங்கு அவள் ஒரு கம்பெனியின் நிர்வாகியாக இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டான். அவளும் இப்படி அப்பாவியாய் கடிதம் எழுதியவன் ஒரு ஹோட்டலை நிர்வகித்து கொண்டிருப்பவன் என்றதும் ஆச்சர்யப்பட்டாள். அவள் மனதில் இவனும், இவன் மனதில் தாராளமாய் நுழைய, காத்திருந்த பெற்றோர்கள் சட்டு புட்டென்று கரம் பிடிக்கவைத்து கல்யாணம் செய்து வைத்துவிட்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *