மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய் இருந்தது. மேல் அலமாரியில் வைத்திருந்த சிறிய வண்ணத் தொலைக்காட்சியைப் பார்ப்பது சலிப்பைத் தர எழுந்து வெளியே வந்து அமர்ந்தேன்.
பக்கத்து வீட்டுப் பெரியவர் கதவைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.
“”என்னண்ணே… பொழுது போகலயா?” என்றேன். சிரித்தபடி… “”பொழுது போதலப்பா… சாயங்காலம் அஞ்சு மணிக்கு புறப்பட்டு நடந்து போனா… ரெண்டு மணிநேரம் என்னை மாதிரி ஆளுகளோட அரட்டை… வரும்போது நாலு இட்லி, ஒரு காபி… அப்புறம் ராத்திரி பதினொன்னு வரைல டி.வி…”
அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு மகன். ஒரு மகள். மகன் ஏதோ ஒரு வெளிநாட்டில் இருப்பது தெரியும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை வந்துவிட்டுப் போவான். மூன்று மாதத்துக்கு ஒருமுறை வந்துவிட்டுப் போகும் மகளுக்கு மும்பையில் வங்கிப் பணி.
இவர் மட்டும் தனியாய் இங்கிருந்தாலும், எந்த சலிப்பும் முகச் சுழிப்பும் இன்றி நேரந் தவறாது… நடைப்பயிற்சி, நூலகம், மருத்துவமனை…
“”அது என்னவோ… காலைல இருந்து கொஞ்சம் அதிகமா வியர்க்குது… இன்னிக்கு வெயில் அதிகமோ…” என்றார்.
“”இல்லண்ணே… மழை பெஞ்சி மூணு மாசம் ஆகுதில்ல… அதான்… எப்படியும் இந்த வாரம் மழை வரும்…”
திடீரென அவருக்கு மூச்சு ஏறி இறங்கிற்று. இடது கையை இறுக்கிப் பிடித்தபடி… “”அம்மா…” என்று அலறித் துடிக்க, நான் ஓடிச்சென்று பிடித்திராவிட்டால் கீழே விழுந்திருப்பார். பரபரப்பாயிற்று தெரு. வேலைக்குப் போனவர்கள் போக வீட்டிலிருக்கும் முதியோர் வேகமாய்க் கூடி…
“”என்னாச்சு… கரெக்டா செக் அப் பண்ணிக்குவாரே…” என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் விசாரிக்க…
“”நூத்தி எட்டுக்கு போன் போடலாமா?”
அவர் மயக்கத்திலும், நினைவிலுமாய் இருந்தார்.
“”இடது பக்கம் ரொம்ப வலி… எப்படியாவது…”
என்று மெல்ல முணங்கிவிட்டு மீண்டும் மயக்கமானார். அதற்குள் ஆட்டோ ஒன்று வர ஏற்றிக் கொண்டு கிளம்பினேன்.
நான் எதிர்பார்த்ததைவிட சிக்கல் அதிகமாயிற்று. மருத்துவமனையில் சேர்த்த அரைமணி நேரத்தில் உயிர் பிரிய… அதற்குள் உடன் வந்து சேர்ந்த சிலரோடு ஆம்புலன்சில் வீட்டுக்கு எடுத்து வந்து நடுவீட்டில் கிடத்தினோம்.
அவரின் வீட்டுக்குள் இதுவரை யாரும் நுழைந்ததில்லை. இரண்டு அறைகள், ஒரு சமையலறை என்றிருந்த வீட்டில், கூடம், குளியலறை தவிர்த்து வேறேதும் அதிகம் பயன்படுத்தியதன் அறிகுறியே இல்லை.
கூடத்திலேயே தொலைக்காட்சி இருந்தது. படுக்கை இருந்தது. சற்று முன் என்னிடத்தில் வாயிற்கதவைப் பிடித்தபடி பேசிக் கொண்டிருந்தவர், அசைவின்றி, இதயத் துடிப்பின்றி, கண்ணிறுக்கிக் கைமூடிக் கிடக்கிறார் எனில் இதுதான் மரணமா? மரணமெனில் வலிக்குமா? அல்லது உயிர் பிரிகையில் ஏதோ நம்மை விட்டு நழுவிப் போகும் சுகம் கிடைக்குமோ? இறந்து கிடந்த அவர் முகத்தில் இதற்கான விடைகள் இல்லை.
படுக்கைக்கு நேரே இருந்த சுவரில் ஒரு அட்டையில் வெளிநாட்டில் இருக்கும் மகனின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை இருந்தன. அதற்கும் கீழே மும்பையில் இருக்கும் மகளின் தொலைபேசி எண்கள்.
“”முதல்ல… லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொல்லுப்பா… அப்புறம் அவங்களுக்கு சொல்லிக்கலாம்…”
யாரோ குரல் கொடுத்தார்கள்.
காவல் துறைக்குச் சொல்லிவிட்டு முதலில் அவர் மகனுக்கு சுழற்றினேன்.
இரண்டு முறை மணியடித்தும் எடுக்காது புறக்கணித்தது மறுமுனை. மூன்றாவது முறை எடுத்து…
“”ஹு ஆர் யு…?” என்றது கோபமாக.
“”நான் “இண்டியா’-ல இருந்து பேசறேன்…” என்று என் பெயரைச் சொன்னதும்…. அதிர்ந்து
“”யார் நீங்க… எப்படி என் செல் நெம்பர் கிடைச்சுது…” என்றான் பதட்டமாக. மெல்ல செய்தியைச் சொன்னேன்.
“”அப்படியா…” என்ற பிறகு இருபது நொடி மௌனம் பேசிற்று.
“”சரிங்க… நீங்க வைங்க… நான் கூப்பிடறேன்…”
அதற்குள் என்னுடைய “செல்’ இருப்பில் முப்பது ரூபாய் போயிருந்தது. இம்முறை அவன் அழைப்பு.
“”சாரிங்க… என்னால விவரமா பேச முடியல… என்னோட சிஸ்டர் உங்ககிட்ட பேசுவாங்க…”
என்றதும் இணைப்பு அறுந்து போயிற்று.
அடுத்த அழைப்பு அவன் மும்பை சகோதரியிடமிருந்து…
“”நீங்க யாருங்க…?” என்று துவங்கியது.
“”பக்கத்துல கடை வெச்சிருக்கேன்…”
“”சரி… எப்படி ஆச்சு… ஹாஸ்பிடலுக்கு போயிருந்தாரா?” விவரம் சொன்னேன்.
“”தாங்க் யூ… ஹால்ல உக்காத்தி வெச்சிருக்கீங்களா? படுக்க வெச்சிருக்கீங்களா? படுக்க வெச்சிடுங்க… ஜன்னல் எல்லாத்தியும் திறந்து வெச்சிடுங்க… வீட்டைப் பூட்டி சாவிய வெச்சிடுங்க… நான் இன்னும் அஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்பிடறேன்…”
சரியாய் ஐந்து நிமிடம் கழித்து அழைப்பு வந்தது. “”என்னோட சொந்தக்காரங்க இருபது கிலோ மீட்டர்ல இருக்காங்க… அவங்க வந்துருவாங்க… அப்பாவோட கடைசி விருப்பப்படி எங்க கிராமத்துல எல்லாம் வெச்சிக்கலாம்னு இருக்கோம்…”
“”எப்படி உங்க சொந்தக்காரங்கன்னு நான் தெரிஞ்சுக்கறது?”
“”நான் லோக்கல் போலீஸ்கிட்ட பேசிடறேன்… அவங்க வந்து உங்களோட இருப்பாங்க…”
சொன்னது போலவே இருபது நிமிடத்தில் காவல்துறை வந்தது.
“”யாரு இங்க இருந்து போன்ல பேசுனது…?”
அவர்களின் கேள்வி என்னை பயங்கொள்ள வைத்தது. நம்மீது சந்தேகம் வந்து விடுமா? வழக்கு… கோர்ட்… அது இது என்று…
“”நான்தான் சார்…” என்றேன்.
“”என்ன செய்யறீங்க…?”
“”பக்கத்துல கடை வெச்சிருக்கேன்…”
“”பரவால்லங்க… இந்த மாதிரி தனியா இருக்கறவங்களுக்கு ஏதாவது ஆச்சின்னா கண்டுக்கறதுக்குக்கூட யாருமில்லாத இந்தக் காலத்துல… இவ்வளவு தூரம் கவனிச்சு… ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போயி… ரொம்ப நல்ல விஷயங்க… ஆனா… என்ன பாவம்… பெரியவரைக் காப்பாத்த முடியல…”
காவல்துறை ரொம்பவும் இதமாய்ப் பேசிற்று.
“”எங்களுக்கு முறைப்படி அவங்க பொண்ணுகிட்ட இருந்தும் தகவல் வந்திருக்கு… அவங்க சொந்தக்காரங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்க… நாம அவங்ககிட்ட ஒப்படைச்சிடுவோம்…”
என்றபடி அவர் வெளிமுற்றத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர… அவரது இடுப்பில் இருந்த ஒயர்லெஸ் ஏதோ சொல்லிற்று.
அரைமணியில் ஆம்புலன்சில் குளிர்சாதனப் பெட்டி வந்து இறங்கிற்று. உடன் மூன்று கார்களில் ஏழெட்டுப் பேர் வந்து இறங்கினார்கள். கண்ணீரும் கதறலும் ஏதுமின்றி வீட்டை காலி செய்து பீரோவை ஏற்றுவதுபோல் அவரை ஏற்றி…
வந்திருந்த கும்பலில் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்தவர் என்னை நோக்கி வர…
“”ரொம்ப நல்லவர் சார் அவர்… எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்… என்னைக்கும் யார் கிட்டயும் கோவிச்சு பேசமாட்டார்… எப்படியும்… எப்பவும்… சிரிச்சுக்கிட்டே இருப்பார்…”
என்றேன் நட்புடன். அவர் முகத்தில் சலனமேதும் இல்லை.
“”நீங்கதான வீட்டைப் பூட்டி சாவிய வெச்சிருந்தது…?”
என்று கேட்ட அவர் குரலில் சந்தேகம் ஒட்டியிருந்தது. ஒரு காகிதத்தை எடுத்து…
“”வீட்டுல என்னென்ன சாமான் இருந்ததுன்னு இதுல எழுதியிருக்கேன்… இதுல ஒரு கையெழுத்து போடுங்க… கைல எப்பவும் பணம் வெச்சிருப்பாருன்னு அவரு மகன் சொன்னாரு… ஆனா ஏதும் இல்லயே… நீங்க ஏதாவது பாத்தீங்களா?”
இதற்கு பதில் “ஏதாவது எடுத்தீங்களா’ என்று நேராகவே கேட்டிருக்கலாம்.
ஊசியாய்க் குத்தின அவரின் வார்த்தைகள். அதைவிட அவரது கண்களும், அதில் நிறைந்து வழிந்த சந்தேகமும்.
ஏதும் பேசத் தோன்றாது அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவரையல்ல, குளிர்சாதனப் பெட்டியில் இருந்த அவரை.
– நவம்பர் 2013