நோக்கப் படாத கோணங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 10,511 
 
 

இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா, நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன், பிள்ளை படுத்திருக்கிறாள், எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன்.

ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்ததும் விடியாததுமாக குளியல் அறையில் கேட்ட தண்ணீர் சத்தத்துக்கும் சமையல் அறையில் இருந்து வந்த தாளித்த மணத்துக்கும் விடை தெரியாமல் படுக்கையில் கிடந்து தவித்த ஓவிசியர் தணிகாசலம் மருமகள் சியானியை நிமிர்ந்து பார்த்தார். தினமும் இறுக்கமான ஜீன்சும் ரீசேட்டும் என்று பரபரப்பாக இருப்பவள் இன்று பட்டுப் புடவையில் மட்டுமல்ல ஒருவித வெட்கமும் கலந்த தொனியில் சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

இந்தா பிள்ளை கொஞ்சம் நில்லு! என்ற ஓவிசியர் சட்டைப் பையிலிருந்து நூறு டொலர் காசை எடுத்து நீட்டினார்.

வேண்டாம்! இது என்னத்துக்கு மாமா!

இல்லைப் பிள்ளை நல்ல நாள் அதுவுமாய் வேண்டாம் என்று சொல்லாதே பிடி. கவனமாக போட்டு வா! எல்லா இடமும் வழுக்குது.

இவர் போன் பண்ணினால் கோவிலுக்கு போட்டேன் என்று சொல்லுங்கோ மாமா.

ஓவிசியர் சியானி போவதையே பார்த்துக் கொண்டு நின்றார்.

மூன்று வயதில் குழந்தை இருந்தாலும் அவள் இன்றும் அழகாய்த்தான் இருந்தாள். விரித்துவிட்ட தலையிலிருந்து மழை பெய்து முடிந்ததும் தாழ்வாரத்துக் கிடுகிலிருந்து சொட்டு விழுவது போல முத்துக்கட்டி உருளும் தண்ணீர் அவளின் பின்புறத்து சேலையை இடுப்புவரை நனைத்திருந்தது.

ஓவிசியர் நேற்று உம்முடைய மருமகளைப் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது கடவுள் யாருக்கோ சவால் விட்டுப் படைச்சது போல என்ன வடிவாகப் படைச்சிருக்கிறார். வடிவு மட்டுமே கதையும் அப்படித்தான். என்ன பண்பான வார்த்தைகள் பேசுது அந்தப் பிள்ளை. எங்களின்ரை வீடுகளிலும் இருக்குதுகள். தகரத்திலே ஆணியாலே கீறின மாதிரிக் கத்திக்; கொண்டு! எல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பனவு வேணும்.

மாலை வேளையில் மோலில் கூடும் வயோதிப நண்பர்கள் புகழ்ந்து சொல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சியை மிசிசாகாவில் இருந்து அவரின் மனைவி பாக்கியம் எடுக்கும் போன் கோல் தவிடுபொடியாக்கி விடும்.

பாக்கியத்துக்கு சியானியைப் பிடிக்காது. கனடாவுக்கு வந்த புதிதில் அவருக்கும்தான் அவளைப் பிடிக்காமல் இருந்தது. ஆனால் என்றைக்கு அவள் யாருக்கும் பயப்படாமல் அந்தக் கருத்தைச் சொன்னாளோ அன்றிலிருந்து அவர் மனதில் அவள் இடம் பிடித்து விட்டாள். ஒரு தரும நியாயம் உணர்ந்த பிள்ளை அவள் என்ற எண்ணமே அவர் மனதெங்கும் வியாபித்து இருந்தது.

இங்கே பாருங்கோ எனக்கு குழந்தையை பார்க்க உதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மாமி மகளோடை மிசிசாகாவிலும், மாமா மகனோடை ஸ்காபரோவில் என்னுடைய வீட்டிலும் இருக்க ஒருக்காலும் நான் சம்மதிக்க மாட்டன். அது பெரிய பாவம். வயது போன நேரத்திலே அவையை இப்படிப் பிரிச்சு வைக்கிறது அதுகளின்ரை மனதை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று அண்ணனும், தங்கச்சியும் யோசிச்சுப் பார்த்தியளோ?

ஏதோ சொத்துப் பிரிக்கிறது போல கதைக்கிறியள். அவையை எங்காவது ஒரு இடத்திலே ஒன்றாக இருக்க விடுங்கோ பாப்பம்!

மருமகளின் கோபத்தை அன்றுதான் பார்த்தார் ஓவிசியர். பெற்ற பிள்ளைகள் சுயநலத்துக்காக இரக்கம் இல்லாமல் செய்ய நினைக்கும் ஒரு கொடுமைக்கு எதிராக எங்கிருந்தோ வந்த ஒருத்தி குரல் கொடுக்கிறாளே என்று அவர் மனதார சந்தோசப்பட்ட போதுதான் மருமகள் பரிதாபமாகத் தோற்றுப் போனாள்.

சியானி தோற்றுத்தான் போனாள். அவள் வென்றிருப்பாள் என்று ஓவிசிரியருக்குத் தெரியும். ஆனால் அணுகுண்டு விழுந்த பின்பு உலக யுத்தமும் தான் முடிஞ்சு போச்சே. ஏன் வீரம் குறைந்து போகாவிட்டாலும் விவேகம் குறைந்தவர்களோடு போராடி என்ன பயன்? என்ற நினைப்பில் தானே அது முடிந்து போயிற்று.

என்ன நீர் அப்பாவைக் கலைச்சு விட்டால் விரும்பின ஆட்களைக் கொண்டு வந்து வைத்துக் கதைச்சுக் கூத்தடிக்கலாம் என்று நினைக்கிறீரா? அப்பா இங்கேதான் இருப்பார். சரியோ அம்மா தங்கச்சியோடை போய் இருக்கட்டும். நீர் வாயை மூடிக்கொண்டு இரும்.

தன்னுடைய மகன் யாரை மனதில் வைத்துக் கொண்டு அப்படிச் சொன்னான் என்று அவருக்குத் தெரியும். மனைவி பாக்கியம் மகனும் மருமகளும் வேலைக்குப் போன பின்பு போன் எடுத்து காதிலே பட்டை தீட்டித் தரும் விசயந்தான் அது.

தம்பியைக் கண்டால் முகம் உம்மென்று இருக்கும். அவன் நேத்தன் வர வேணும் அவவின்ரை சிரிப்பென்ன, நெளிப்பென்ன எங்கை தேடிப்பிடிச்சியளோ தெரியாது இப்படியொரு தேவடியாளை. செடியில் பிறந்து கொடியில் விழுந்த கதை மாதிரிப் போட்டுது என்னுடைய பிள்ளையின்ரை வாழ்க்கை. என்ன செய்வம். என்னப்பா ஏதாவது சமைச்சுப் போடுறாளோ இல்லாட்டில் என்ரை பிள்ளையைப் பட்டினி போடுறாளோ? பெடியன் நல்லாக மெலிஞ்சு கொண்டு போகுது.

இல்லையப்பா இவன் தம்பியும் நேத்தன்ரை சிநேகிதத்தை வேலை செய்யுற இடத்தோடை வைச்சிருக்க வேணும்.

ஓவிசியர் பலதடவை பாக்கியத்துக்குச் சொல்ல நினைத்துப் போட்டும் சொல்வதில்லை. பாக்கியம் அப்படியில்லை. எப்ப போன் எடுத்தாலும் இதே பல்லவிதான் பாடும். ஆனால் இன்றைக்கும் கோவிலுக்கு போக முன்பு சியானி சமைத்து வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறாள்.

இத்தனைக்கும் அவள் வருமான வரித் துறையில் பெரிய வேலையில் இருக்கிறாள். நினைத்தால் பவிசு காட்ட அவளுக்கும் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் அப்படி எந்தப் பந்தாவும் இல்லாமல் வேலையால் வந்தவுடனே என்ன மாமா சாப்பிட்டியள்? இவர் போன் அடிச்சவரோ என்றுதான் முதலில் கேட்பாள்.

அப்படிக் கேட்காமல் போனால் கூட யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனாலும் அவள் கேட்பாள். விழுந்தடித்துச் சமைப்பாள். தான் சாப்பிடும் போது சாப்பிட அழைப்பாள். எங்கு போவதானாலும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் போவாள். இது கனடாவில் பல மாமன்களுக்கக் கிடைக்காத வரம்.

இந்த உண்மையெல்லாம் பாக்கியத்திடம் எடுபடாது. உதெல்லாம் அவளின்ரை நடிப்பு என்று ஒரு வரியில் பாக்கியம் தீர்ப்புச் சொல்லிவிடும்.

ஓவிசியர் திரும்பவும் கட்டிலில் சாய்ந்தார். அவர் மனைவியோடும் எதிர்த்து வாதிடுவதில்லை. ஒருவேளை பாக்கியம் சொல்வதுதான் உண்மை என்ற நிலை வந்தால் என்ன செய்வது என்ற பயம் அவருக்குத் தலை தூக்கும் விதத்திலும் சியானியின் நடத்தைகள் சில சமயங்களில் அமைந்து விடுவதுண்டு.

அன்றும் அப்படித்தான் நடந்து விட்டது. உறவினர்கள் வீட்டுப் பிறந்த நாள். மகன் குடும்பத்தோடு அவரும் மகளோடு பாக்கியமும் என்று கன்னை பிரிந்து வந்து கூடிக்கொண்ட இடம். நேத்தனையும் அங்கு கண்டவுடன் ஓவிசியர் கலங்கித்தான் போனார்.

எப்பவும் அவன் இருக்கும் இடம் சித்திரை மாதத்துப் பனங்கூடல் மாதிரி சலசலப்பாகத்தான் இருக்கும். ஏதாவது ஒரு விசயத்தைப் பற்றி விவாதித்து எப்போதும் கத்திக் கதைப்பது அவனது பழக்கம். அவனோடு சியானியும் சேர்ந்து விட்டால் சனங்களுக்கு சிரிச்சு வயித்து நோ வந்துவிடும்.

ஐயோ இந்தப் பெடியும் வந்திருக்கே. இவள் பிள்ளை சியானி கணவன், மாமன், மாமி என்று எல்லோரும் இருக்கிற இடத்திலே கவனமாக இருந்துவிட வேணும் மனம் பதைத்தது. ஆனால் எல்லாமே அவர் விருப்பத்துக்கு மாறாகத்தான் நடந்தது.

சியானியைக் கண்டவுடன் எல்லாரும் பொறுங்கோ. இங்கே சியானி வந்திட்டுது. சியானியைக் கேட்டுப் பார்ப்போம். சியானி எங்கே நீர் சொல்லும் உலகத்திலே ஆண்களா, பெண்களா தைரியசாலிகள்? நேத்தன் கேட்டான். ஓவிசியர் தலை குனிந்து இருந்தார்.

உலகத்திலே யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உம்மைவிட நான் மனதாலும் பலசாலிதான். உடலாலும் பலசாலிதான்.

அப்படிச் சொல்லும் சியானி என்று ஒரு கூட்டம் சத்தம் போட நேத்தனும் விடவில்லை. சிம்ரன் மாதிரி இருந்து கொண்டு எப்படி நீர் சொல்லுவீர் என்னை விட நீர் பலசாலி என்று சியானி? கேட்டுக் கொண்டே கிட்ட வந்தான்.

அவன் வந்ததும் ஓவிசியர் கனவிலும் நினைக்காத ஒன்றைச் சொன்னாள் சியானி. நேத்தன் உம்மைவிட நான் பலசாலி என்று வாயாலே சொல்லி உமக்கு விளங்கப்படுத்த ஏலாது. இந்த மேசைக்கு கையைக் கொண்டு வாரும். காட்டுறன்.

ஒரு பொம்பிளை இப்படிச் சொன்ன பிறகு இருந்து என்னத்துக்கு அதையும் ஒருக்கால் பார்ப்போமே. வாரும் நேத்தன் வந்து விட்டான்.

சுற்றி நின்று எல்லோரும் வேடிக்கை பார்க்க குனிந்து சாப்பாட்டு மேசையில் முழங்கையை ஊன்றி இருவரும் பலம் பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் பஞ்சாபி உடையின் மேல் போர்வை விழுந்ததைக் கூட பொருட்படுத்தாமல் நேத்தனுடன் போராடி சியானி வென்றுவிட்டாள்.

எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்ய ஓவிசியர் மனம் மட்டும் நாய்ப் பிறவி என்றது. ஆனால் சியானியோ மௌனமாக சிரித்துவிட்டுப் போய் கணவனின் அருகே அமர்ந்து விட்டாள்.

ஓவிசியர் பாக்கியத்தை பார்த்தார். அவள் கோவத்தில் சிவந்து போயிருந்தாள்.

பத்துப் பேருக்கு முன்னாலே ஒரு இளந்தாரிப் பொடியன்ரை கையைப் பிடித்து வளைக்கிறாள். நெஞ்சுச் சட்டைக்குள்ளாலே எல்லாம் தெரியுது. ஒரு வெட்கம் வேண்டாம். என்னுடைய பிள்ளையாய் இருக்க வேணும் கொள்ளிக் கட்டை எடுத்துச் சூடு போட்டிருப்பன். களிசறைப் பழக்க்கம். அப்பாவும் மகனும் பார்த்துச் சிரிச்சுப் போட்டு வாறியள் என்ன?

சரி சரி பத்துப் பேருக்கு முன்னாலே தானே அப்படிச் செய்தாள். தனியச் செய்யல்லே தானே. இவன் தம்பி இருந்தவன் அவன் பெரிசு படுத்தல்லே. நீ ஏன் துள்ளி விழுகிறாய்? விடு

அரைமனதுடன் பாக்கியத்தை போனில் சமாதானம் செய்த ஓவிசியர் இது கொஞ்சம் அதிகம் என்றுதான் நினைத்தார். அதற்குப் பின்பும் சில நிகழ்வுகள் அவருக்குப் பிடிக்காமல் தான் இருந்தன. மாலை வேளைகளில் நேத்தன் வீட்டுக்கு அடிக்கடி வாறதும், மணிக்கணக்காக சியானி சிரித்துச் சிரித்து பேசுவதும் கூட அவருக்கு உடன்பாடற்ற விடயங்கள் தான்.

அதனால் மாலை வேளைகளில் தான் வெளியே போவதைக் கூட அவர் குறைத்துக் கொண்டு விட்டார். அது பற்றி சியானியோடு பல முறை கதைக்க நினைத்த போதும் சியானி மகளில்லை. மருமகள் கவனமாகப் பேச வேண்டும். கன குடும்பங்களிலே இந்த வித்தியாசம் விளங்கிக் கொள்ளப் படாத படியால் தான் நிறையப் பிரச்சனை என்ற எண்ணம் ஏற்பட்டு அவருக்கு தடை போட்டு விடும்.

போன் மணி ஒலித்தது. பாக்கியம் தான். சொல்லு என்றார். இல்லே தம்பிக்கு இன்றைக்கு கல்யாண நாள். அதுதான் ஒருக்கால் கதைப்பம் என்று எடுத்தனான். நிக்குதே.

அவன் விடிய வேலைக்குப் போட்டான். சியானியும் கோவிலுக்குப் போட்டுது. கொஞ்சம் செல்ல எடு.

ஏனாம் கோவிலுக்கு? நேத்தன் சட்டை இல்லாமல் பஜனை பாடுறதை இரசிக்க போறாவாமோ??

உன்னோடை கதைக்கேலாதப்பா போனை வை.

போனை வைத்துவிட்டுத் திரும்பிய ஓவிசியர் குழந்தையை வலுக்கட்டாயமாக எழுப்பிப் பால் கொடுத்தார். உறக்கம் குழம்பியதாலோ என்னவோ அது தொடர்ந்து அழுதது. தூக்கி விளையாட்டுக் காட்டினார். அதற்குள் சியானியும் வந்துவிட்டாள்.

அவள் முகம் வியர்த்திருந்தது. குழந்தையை வாங்கிக் கொண்டு மேலே போனாள். போகும் போது மாமா கோயில்லே இருந்து பிரசாதம் கொண்டு வந்தனான். மேசையிலே இருக்கு எடுங்கோ என்றாள்.

போன் திரும்பவும் ஒலித்தது.

மாமா நான் எடுக்கிறேன் என்றாள் சியானி. அது நேத்தனின் நம்பர்தான்.

ஓவிசியருக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. கீழே அவரும் எடுத்து விட்டார்.

சியானி நான் கேட்டது கோவமா?

இல்லே.

அப்ப ஏன் ஒன்றும் சொல்லாமல் போட்டீர்?

அது கோவில். பதில் சொல்கிற இடம் இல்லை.

அப்படியென்றால் சியானி இப்ப சொல்லும்.

நான் என்னுடைய கணவருக்கு நல்லதொரு மனைவியாகவும் என் குழந்தைக்கு நல்ல அம்மாவாகவும் தான் இருக்க ஆசைப்படுகிறன். யாருக்கும் வைப்பாட்டியாக இருக்க நினைக்கல்லே. அது எனக்கு விருப்பமும் இல்லை. அவ்வளவுதான்.

சியானி நீர் என்னோட கதைச்ச கதைகள் பழகிய விதம் எல்லாம் என்னுடைய மனதில் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்திப் போட்டுது. அது தப்பு என்று இப்ப நினைக்கிறேன்.

நேத்தன் ஊரிலே பார்த்திருப்பீர். ரையில் தண்டவாளத்திலே ஓடுது. பக்கத்திலே கைகாட்டி மரம் நிக்குது. கைகாட்டி கை காட்டுறதோட நிக்க வேணும். ரையிலே பயணம் செய்ய ஆசைப்படக் கூடாது. ஆசைப்பட்டால் இரண்டுக்கும் நல்லதில்லை. அந்தப் பிரண்~pப்புக்கும் அர்த்தம் இல்லை. நான் சொல்லுறது உமக்கு விளங்கும் என்று நினைக்கிறேன். நீர் எனக்கு எப்பவும் நல்லதுக்கு வழி காட்டுற கைகாட்டியாக இருக்கப் பாரும்!

என்னை மன்னித்துக்கொள்ளும் சியானி.

ஏய்! நேத்தன் என்ன படங்களிலே வாற மாதிரிக் கதைக்கிறீர்? நான் மனதிலே ஒன்றும் நினைக்கல்லே. இங்கே பாரும். இன்றைக்கு என்னுடைய கல்யாண நாள். நல்ல மரக்கறி எல்லாம் சமைச்சு வைச்சிருக்கிறேன். மனதிலே இருந்து இந்தக் குப்பைகளை எல்லாம் கூட்டி ஒதுக்கிப் போட்டுச் சாப்பிட வாரும் என்ன?
போனை வைத்து விட்டாள் சியானி.

ஓவிசியர் மனதில் ஆயிரம் சிந்தனைகள். எங்கள் கலாச்சாரத்திலே எத்தனை அடிதடிகளுக்கும் கொலைகளுக்கும் குடும்பப் பிரிவுகளுக்கும் தலை குனிவுக்கும் காரணமான அதே பிரச்சினை ஒன்று எவ்வளவு இலகுவாக இங்கே ஒரு சிறு பெண்ணால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விடுகின்றது. இந்தத் தீர்வுக்கு திருக்குறள் காரணமா? இல்லைத் திருவாசகம் காரணமா? எதுவும் இல்லையே.

புகுந்த நாட்டிலே கைப்பற்றிக் கொண்ட கலாச்சாரத்தின் விளப்பத்தினால் தானே வாழ்க்கையிலே இப்படியான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியும் இருக்கும் இது சகஜம் என்று நினைத்துக் கண்ணைக் கசக்காமல் கணவனிடம் சொல்லாமல் சியானி தானே பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டாள். அப்படி இல்லாமல் அவள் கண்ணகி வேடம் போட்டு நீதி கேட்டிருந்தால் தொடர் பகைதானே மிஞ்சியிருக்கும். வாழ்க்கையும் எவ்வளவு அலங்கோலப் பட்டிருக்கும்.

உடையிலும், உருவத்திலும் மாற்றம் ஏற்படும் போது கலாச்சாரம் அழிகிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் உள்ளத்தில் ஏற்படுகின்ற இந்த வலுவான அக மாற்றங்களைக் கண்டும் ஏன் மௌனமாக இருந்து விடுகிறார்கள். எமது கலாச்சாரத்தில் காணப்படும் தீயனவற்றை உதறிவிட்டு அன்னியப் பண்பாட்டில் உள்ள நல்லவற்றை மட்டும் உணர்ந்து ஏற்றுக் கொண்டு இயங்கும் சியானி போன்றவர்கள் செல்லும் திசை எவ்வளவு மேன்மையானது? எம்மவர்கள் ஏன் இந்தக் கோணத்தில் பார்க்க மறுக்கிறார்கள்?

மாமா பிரசாதம் எடுத்தியளோ என்றாள் சியானி.

மகளே நீதான் எனக்கு இறைவன் தந்த மிகப் பெரிய பிரசாதம் என்றார் ஓவிசியர்.

……………………….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *