நெருப்புடா! நெருங்குடா!

8
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 12,559 
 
 

“ஏய்! என்னடி இது?” என்று கையிலிருந்த சேலையைக் காண்பித்து கேட்டாள் அலமேலு.

“என்ன அத்தே?” என்று தயங்கிக் கேட்ட ரம்யாவின் கன்னங்களில் பளாரென்று அறை விழுந்தது.

“ஏண்டி என் காஸ்ட்லி சேலைய பார்த்து துவைன்னு அப்பவே சொன்னேனில்ல. இப்படி கறை பண்ணி வைச்சிருக்கே?” என்று அதட்டினாள் அலமேலு.

“இல்ல அத்தே! நான் சரியாத்தான்” என்று முடிப்பதற்குள் அடுத்து அறை விழ துவண்டு விழுந்தாள் ரம்யா.

“ஒழுங்கா துவைச்சு அயர்ன் பண்ணி வைக்கனும் என்ன?” என்று அழகாக துவைத்து அயர்ன பண்ணி வைச்ச சேலையை சிறிய கறைக்காக கசக்கி விட்டெறிந்து சென்றாள் மாமியார் அலமேலு.

ரம்யா தரையில் துவண்டு கிடக்க அவளை எழுப்பாமலும் அங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது போல் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் ரம்யாவின் கணவன் கணேசன்.

ரம்யாவுக்கு கணேசனுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட முடியவில்லை. ரம்யா முதுகலை தமிழ் படித்தவள். மதுரைக்கு பக்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்.

அலமேலுவின் ஒரே ஓரு மகனான கணேசனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அலமேலுவின் சொத்துக்களை பராமரித்து வந்தவனுக்கு கல்யாண வயதை எட்டியதும் ஏழைப் பெண்ணான ரம்யாவை கட்டி வைத்தாள்.

ரம்யாவின் வீட்டின் சூழ்நிலை அவளை அந்த வாழ்க்கையை ஏற்க வைத்தது. ரம்யாவின் தந்தையோ அவர் தகுதிக்கேற்ப பத்து பவுன் நகையும் சீரும் செய்து அனுப்பி வைத்தாலும் வந்ததிலிருந்து இதுதான் கதை.

“அம்மா மனசு கோணாம நடந்துக்கோ” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான் கணேசன்.

ரம்யா மனசு நிறைய சந்தோஷத்தோட தன் கணவனிடம் செய்தியைச் சொல்ல அறையில் காத்திருந்தாள். கணேசன் வழக்கம் போல் இரவு தாமதமாக போதையில் வந்தவன் அவள் தேவதையாக தெரிய அவளை பார்த்துச் சிரி;த்தான்.

“என்னங்க” என்று மெல்லிய குரலில் வாயெடுத்தவளை பேச விடாமல் அவளை கட்டி அணைத்து கட்டிலில் சாய்க்க முயல அவள் திமிற ஒர் அறை விட்டதில் நிலை குலைந்து கட்டிலில் அவள் மீது பாய்ந்து அனுபவித்து விட்டு அயர்ந்து தூங்கினான்.

ரம்யாவோ அந்த கோரத் தாக்குதலில் நிலை குலைந்து சின்னாபின்னாமாகி தன் வயிற்றில் உதித்த குழந்தையை நினைத்து வருந்தியபடி கிடந்தாள்.

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான அறைக்கு வெளியே காத்திருந்த ரம்யா தன் முறை வர உள்ளே சென்றாள். டாக்டர் பரிசோதித்தபின் எழுந்து அமர்ந்தவள் “டாக்டர் என் குழந்தை” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

“நான்தான் மூணுமாசம் ஜாக்கிரதையா இருக்க சொன்னேனில்ல. இப்ப பாரு கர்ப்பம் கலைஞ்சிருச்சு. “ என்ற டாக்டர் அவளை பார்த்த பார்வையில் அவள் செத்துவிட்ட நிலையில் அறையை விட்டு வெளியேறினாள்.

“மனசயும் உடம்பயும் கட்டுபடுத்திக்க முடியாத இவங்களுக்கெல்லாம் ஏன் குழந்தை ஆச வருது?” என்று நர்சிடம் பேசுவது காதில் விழுந்தது.

“என்ன ரம்யா இப்பதான் எங்கள பாக்கனும் தோணுச்சா?” என்று கேட்ட எதிர் வீட்டு கனகாவிற்கு புன்னகையை பதிலாக அளித்து விட்டு கையில் பையுடன் உள்ளே நுழைந்தாள் ரம்யா.

“வாம்மா என்ன மாப்பிள்ளை வரலையா?” என்று தன் படித்துக் கொண்டிருந்த பேப்பரை மூடிவிட்டு கேட்டார் அப்பா ராஜேந்திரன்.

“இல்லப்பா அவர் வெளியூர் போறார். நீ வேணா அம்மா வீட்டுக்கு போய்ட்டு வான்னு அனுப்பி வைச்சார” என்று சமாளித்தாள் ரம்யா.

ரம்யாவின் குரல் கேட்டு வந்த தாய் லட்சுமி மகள் தனியாக வந்ததைப் பாரத்து கண்ணாலே கேள்வி கேட்டுவிட்டு “ரம்யா வா களைப்பா இருப்பா இந்த காபிய குடி” என்று காபி டம்ளரை நீட்டினாள்.

“வா அக்கா எங்க மாமா வரல?” என்று கேட்டபடி தன் அறையிலிருந்த வந்தாள் அவளுக்கு இளையவளான கல்லூரியில் படிக்கும் வசந்தா.

“இல்லடி அவர் வரல” என்று சொல்லி முடிப்பதற்குள் “ஹாய் அக்கா எப்ப வந்த?” என்று கேட்டபடி டைப்பிங் வகுப்பு முடிந்து வந்த தங்கை ஜானகியும் தையல் வகுப்பு முடித்து வந்த சீதாவும் கேட்டனர்.

“இப்பதான் வந்தேன் உங்க கிளாசெல்லாம் எப்படி போகுது?”

“நல்லா போகுதுக்கா.” என்றவர்கள் அக்காவின் பக்கத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டனர்.

தரகர் ரங்கசாமி வந்தார்.

“வாம்மா ரம்யா எப்படி இருக்க?” என்று விசாரித்தார்.

“நல்லா இருக்கேன்” என்று பதில் அளிக்க “என்ன விஷயம் தரகரே” என்றார் அப்பா.

“நம்ம ஜானகிக்கு நல்ல சம்பந்தம் வந்திருக்கு. அதப்பத்தி பேசத்தான் வந்தேன்”

“இல்லப்பா ரம்யா கல்யாணத்துக்கு வாங்கின கடனே இன்னும் முடியல. அதனால கொஞ்சம் தள்ளி போடலாம்னு இருக்கேன்”

“இல்ல நல்ல சம்பந்தம் ஜானகி போட்டோ பாத்து சம்மதிச்சுட்டாங்க. நகை சீர் செனத்தி எதுவும் வேணாம்ங்கறங்கா அதான்.”

“அவங்க சொல்லலாம். நாம கொஞ்சமாவது செய்ய வேணாம்” என்ற அப்பாவிடம் “நாளைக்கு அவங்கள வரச் சொல்லிட்டேன். அவங்க வந்து பாத்துட்டு போகட்டும். அப்புறம் பேசிக்கலாம்” என்றார் தரகர்.

“சரி” என்று தலையசைத்தார் அப்பா.

“அய்! அக்காவ பொண்ணு பாக்க வராங்க” என்று சந்தோஷப்பட்டனர் வசந்தாவும் சீத்தாவும்.

“சும்மா இருங்கடி” என்று வெட்கப்பட்டாள் ஜானகி.

மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்து விட்டு ஜானகியை பிடித்திருப்பதாகவும் வரதட்சணை வேண்டாம் கல்யாண செலவை தாங்கள் பாத்துக் கொள்வதாகச் சொல்லி நிச்சயம் செய்து சென்றனர்.

ரம்யா வந்து ஒரு மாதமாகியும் யாரும் அழைக்க வராததால் தாய் லட்சுமிக்கு கவலை அளித்தது. நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் நினைத்தவள் அன்று “என்ன ரம்யா உன்ன தேடிட்டு மாப்பிள்ளை வரல. ஏன் போன் கூட பண்ணல. ஏதாச்சும் பிரச்சனையா” என்று மெல்லக் கேட்டாள்.

“அதெல்லாம் ஓண்ணுமில்ல” என்று முடிப்பதற்குள் “ஏய்! ரம்யா எங்கடி இருக்க?” என்ற கணேசனின் குரல் வெளியிலிருந்து கேட்டது.

“வாங்க மாப்பிள்ளை” என்ற மாமனாரிடம் “மாப்பிள்ளையாவது மண்ணாங்கட்டியாவது. மூத்த மாப்பிள்ளை நான் இருக்கும் போது என்ன கேட்காம எப்படி ஜானகிக்கு சம்பந்தம் பேசீனிங்க” என்றான் கணேசன்.

“அது வந்து மாப்பிள்ளை நீங்க வெளீயூர் போயிருக்கறதா ரம்யா சொன்னா அதான்”

“ஓ எல்லாம் உன்னாலாதானா?” என்று முறைத்தவன் “அப்படின்னா எங்க அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கனும் இல்ல.”

“அது வந்து மாப்பிள்ளை” என்று முடிப்பதற்குள் “ஊரெல்லாம் என்ன கணேசா உன் மச்சினிசிக்கு கல்யாணமமேன்னு உனக்கு தெரியாதான்னு நக்கலா கேட்கறான்”

“சரி மாப்பிள்ளை தப்புதான்” என்றவரைப் பார்த்து “மகாதப்பு உடனே இந்த சம்பந்தத்த நிறுத்திட்டு என் மாமா பையன் சந்துருவுக்கு உங்க பொண்ண கட்டி வைக்கனும் அப்படின்னு அம்மா சொல்லச் சொன்னாங்க” என்று உத்தரவிட்டான் கணேசன்.

“அதெப்படி மாப்பிள்ளை பேசுன சம்பந்தத்த வேண்டாங்கறது” என்றவரிடம் “என்ன நிச்சயம்தான் பண்ணியிருக்கிங்க. கல்யாணம் பண்ணலியே. இந்த கல்யாணம் நடக்கனும். நாளைக்கு நாங்க வர்றோம். நிச்சயம் பண்ணல உங்க பொண்ணு வாழா வெட்டியா உங்க வீட்டோட இருக்க வேண்டியதுதான்” என்று ஆவேசமாக கிளம்பிச் சென்றான் கணேசன்.

“இதுக்குதாம்மா மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்லனும் நான் சொன்னேன். நீதான் பாத்துக்கலாம்ன்ன இப்ப பாரு என்ன ஆயிடுச்சு” என்றாள் தாய்.

“அம்மா சொன்னா கல்யாணத்த நடக்க விட மாட்டாங்கம்மா. அந்த சந்துரு ஒரு மோசமான குடிகாரன். அவனுக்கு நம்ம ஜானகிய கேட்கச் சொல்லித்தான் என்ன அனுப்பிச்சாங்க. நான் அதப்பத்தி பேசுறதுக்குள்ளதான் நல்ல சம்பந்தம் வந்துச்சு. அதான் பேசல. வீட்டுக்கு போன என்ன நடக்குமுன்ன தெரியும் அதான் வீட்டுக்கு போகாம இங்க இருந்தேன்” என்று அழுதப்படிக் கூறினாள் ரம்யா.

“அடிப்பாவி இத ஏன் முன்னாடி சொல்லலே?” என்றாள் தாய்.

“எப்படிம்மா சொல்லச் சொல்ற. நான் நல்லா இருக்கறதா எல்லாம் நினைச்சிக்கிட்டு இருக்கும்போது நான் நரகத்துல இருக்கேன் என்று சொல்ல சொல்றியா?” என்று கேட்டபடி தன் கதையை கண்ணீருடன் சொல்லி முடித்தாள்.

“வேண்ணா இந்த சம்பந்தத்த வேண்டாமு;ன்னு சொல்லிட்டு மாப்பிள்ளை சொன்ன மாதிரி செஞ்சிடலாங்க” என்ற தாயிடம் “அம்மா என் வாழ்க்கை பாழாப் போனது போகட்டும். தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்கனும். நாளைக்கு நான் பேசிக்கிறேன்” என்றாள் ரம்யா.

மறுநாள் சொன்னபடி கணேசன் தன் தாய் மற்றும் சந்துருவுடன் வீட்டுக்கு வந்தான்.

ரம்யாவின் அப்பாவும் அம்மாவும் வரவேற்று சோபாவில் அமரவைத்தனர்.

“என் பையன் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். உங்க பொண்ணு ஜானகிய என் மாமா பையனுக்கு நிச்சயம் பண்ணுங்க” என்று அதிகாரத்துடன் மிரட்டினாள் அலமேலு.

“சம்மந்தி” என்றவரை “வேற பேச்சே வேணாம் சொன்னத செய்யுங்க” என்ற அலமேலுவிடம் “முடியாது அத்தே” என்று அதட்டலாகச் சொன்னாள் ரம்யா.

“ஏய்” என்ற மாமியரிடம் “இந்த கல்யாணம் நடக்காது அத்தே” என்றாள் ரம்யா.

“ரம்யா கொஞ்சம் சும்மா இரும்மா” என்றவர் “சம்மந்தி என் பொண்ண மன்னிச்சுக்கோங்க” என்றார் ரம்யா அப்பா.

“இவ்வள எத்தன தடவ மன்னிக்கிறது. என்ன பொண்ண வளர்த்து இருக்கீங்க. பெரியவங்கங்ககிட்ட எப்படி பேசறதுன்னு தெரியல. இப்படித்தான் வீட்லயும் நடந்துக்கறா. ஓரு மாசம் பொறந்த வீட்டுக்கு அனுப்புனா திருந்துவான்னு அனுப்பிச்சா இன்னும் ஒவரா பேசறா” என்ற சம்மந்தி அலமேலுவிடம் “பாவம் சின்ன பொண்ணு” என்றார் ரம்யா அப்பா.

“அதவீடுங்க இப்ப நீங்க என்ன சொல்றீங்க,?” நிச்சயம் பண்றிங்களா? இல்லியா?” என்ற கணேசனுக்கு பதில் சொல்ல இயலாமல் குடும்பமே தவித்தது.

“அப்பா நீங்க ஏம்பா அவங்கள கெஞ்சீறீங்க?” முடியாதுன்னு சொல்லுங்கப்பா” என்றாள் ரம்யா.

“ஏய் இந்த திமிர் பிடிச்சவ தங்கச்சி நமக்கு வேணாம். அவங்க பொண்ண அவங்களே வைச்சிக்கட்டும் வாடா” என்று மாமியார் கிளம்ப “ஏய் இனிமேல என் கூட வாழ்ந்திடலாம்ன்னு நினைச்சிடாதா. உன் கண்ணு முன்னாடியே சந்துருவுக்கு கல்யாணம் பண்றேன். அதுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்றேன். நான் ஆம்பளடி” என்று சவால் விட்டான் கணேசன்.

“அதயும் பாக்கலாம். பெத்த பொண்டாட்டிய கண் கலங்காம பாத்துக்கறவன்தான் ஆம்பள. உன்ன மாதிரி ஆள் கூட வாழறத விட எங்க அப்பா அம்மாவுக்கு பொண்ணா என் தங்கைகளுக்கு அக்காவ வாழ்ந்துட்டு போறேன்” என்று பதில் சவாலிட்டாள் ரம்யா.

:”அப்ப நான் கட்டின தாலிய கழட்டிக் குடு” என்று கணேசன் நெருங்க குடும்பமே ஸ்தம்பிக்க “ எங்க அப்பா அம்மா போட்ட பத்து பவுன் நகைய வித்து அழிச்சிங்க இல்ல. அதயும் செஞ்ச சீர் செனத்தியும் திரும்பி குடுத்துட்டு உங்க தாலிய கேளுங்க. நானே கழட்டி தர்றேன்” என்று தைரியமாக எதிர்த்தவள் கண்களில் நெருப்புடன் கணவனை எரிப்பது போல் பார்த்தாள் ரம்யா.

கணேசனும் அவன் வீட்டாரும் கோபத்துடன் வெளியேற “என்னம்மா இப்படி பண்ணிட்டியே?” என்ற தாயிடம் “அம்மா நான் சரியான முடிவுதான் எடுத்திருக்கேன். நான் பக்கத்திலிருக்கற காலேஜ்ல பேசிட்டேன். அங்க லெக்சரர் ஜாப் கிடைச்சிருச்சு. என்னால என்ன மட்டுமில்ல நம்ம குடும்பத்த பாத்துக்க முடியும். கணவனும் மனைவியும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அன்பா நடந்துக்கனும். இருவரும் சமம்ன்னு நினைக்கனும். அதில்ல நான் ஆம்பள நீ பொம்பள நான் சொல்றபடி நடக்க இது வியாபரம் இல்ல. வாழ்க்கை “ என்றபடி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக சென்றாள் ரம்யா.

“நெருப்புடா நெருங்குடா பாப்போம் நெருங்கினா பொச்சுக்கற கூட்டம்” என்ற கபாலி படத்தின் பாடல் எங்கோ ஒலித்தது.

Print Friendly, PDF & Email

8 thoughts on “நெருப்புடா! நெருங்குடா!

  1. அருமை கடைசியில் அருமையான முடிவு..
    பெண் என்றால் எனலாமா பார்க்கும் ஆண்களுக்கு இது ஒரு பாடம். கணவன் மனைவி உறவு என்பது புனிதமானது அதை மிரட்டலும் பணத்திமிராலும் ஆள நினைப்பது தவறு எண்ணபத்தை மிக அழகாக காட்டி உள்ளீளர்கள் . வாழ்த்துக்கும் அம்மா..

  2. நல்ல தொடக்கம், நல்ல முடிவு.மருத்துவமனை நிகழ்வு நேர்தியாக இருந்தது. கதை சொல்லாடல் எதார்த்தம்.நன்றி …… நல்லகதை தருவித்ததர்க்காக…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *