நீத்தார் கடன்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,044 
 
 

“புத் என்ற நரகத்திலிருந்து பெற்றவனை விடுவிப்பவன், “புத்திரன்!’ பதிமூன்று நாள் நித்யவிதி செய்து, நீ, அவரைக் கரையேற்றி விட்டாய்…’ ராமு சாஸ்திரிகள் அப்பாவின், 13ம் நாள் காரியத்தன்று ஆவேசம் வந்தது போல் சொன்ன வார்த்தைகள்… அப்பா பற்றி நினைக்கும் போதெல்லாம், முந்திக் கொண்டு வந்து வருத்துகிறது.
“அப்பா எங்களுக்கு இங்கேயே சொர்க்கத்தைக் காட்டியவர். அவர் எந்த நரகத்துள் வீழ்ந்திருக்க முடியும்? அதுவும் நான் வந்து மீட்கும்படி?’ அவன் விரக்தியாய் சிரித்தான்.
நீத்தார் கடன்!“அப்பா சொக்கத் தங்கமாய் வாழ்ந்தவர். எங்களைப் பார்த்துப் பார்த்து, ஆசை ஆசையாய், பொத்திப் போற்றி வளர்த்த மகராஜன்… நாங்களே அறியாத எங்கள் நிறை, குறை அப்பாவுக்குத் தெரியும். எங்களைச் சீராட்டி, செதுக்கிச் சீராக்கி, எங்களுக்கான இலக்கில் எங்களை வெற்றிகரமாய் செல்லச் செய்தவர்; செலுத்தியவர்!
“அப்பா எங்களுக்கு மட்டுமல்ல, தான் வகித்த ஒவ்வொரு பாத்திரத்திற்கும் சத்தியமாய் வாழ்ந்தவர். தாத்தா – பாட்டிக்கு, அத்தைக்கு, அம்மாவிற்கு, ஏன் ஊர் உற்றார் அனைவருக்கும் அப்பா என்றால் பிடிக்கும். பணத் தேவையோ, சரீர சேவையோ, வாழ்க்கைப் பிரச்னையோ எந்த எதிர்ப்பார்ப்புமின்றி, மிதமிஞ்சிய கருணையால் மட்டுமே உந்தப்பட்டவராக, வலியச் சென்று, சப்தமில்லாது எவருக்கும் உதவிக்கரம் கொடுக்கும், எல்லாருக்கும் நல்லவராய் ஒருவரால் இருக்க முடியுமா… அப்பா இருந்தார் அத்தாட்சியாய். ஏனிப்படி நீண்டநாள் எங்களோடிருக்கும் கொடுப்பினையும் அளிக்காது, இம்மோசமான தருணத்தில் எங்களைத் தனியேயும் தவிக்க விட்டுவிட்டுத் திடீரென மறைந்தார்.
“குடும்பத்தில் இதுவரை, மூன்று இறப்பை சந்தித்திருந்த போதும், இதுவே என் மீது விழும் முதல் மரண அடி. பத்து வயதிற்குள், அடுத்தடுத்து பார்த்த பாட்டி, அத்தையின் மரணங்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உறையச் செய்தவை. இரண்டு வருடம் முன், அம்மா இறந்த போது தான், மரணத்தின் முழுப் பரிமாணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் உடலும், உள்ளமும் உள்வாங்கிக் கொண்டது. அவள் மரணமும், இப்படி ஆறு மாதம் ஆன பின்னரும் நின்றால், நிமிர்ந்தால், நெஞ்சடைக்கச் செய்யாது, சீக்கிரமே ஆறிப் போன அதிசயம், தந்தையும் தாயுமான அப்பா உடனிருந்து தாங்கியதால்தான் என்பது இப்போது புரிகிறது. அத்தனை சோகத்தையும் தான் விழுங்கி, அம்மாவின் பிரிவை இயல்பாக ஏற்க வைத்த அப்பா நீலகண்டன், பர நீலகண்டனே!
“அந்த மகாதேவனுக்கும், “நரகவாசம்’ எழுதப்பட்ட ஒன்றா? அப்பாவிற்குப்பின், அப்பாவின் இடத்தை இட்டு நிரப்பக்கூடிய ஒரே மனிதர்…” சிவசு மாமாவைக் கேட்டான்; ஆறு மாதமாய் கேட்கிறான்.
“காரணமில்லாத காரியம் என்று எதுவும் இல்லை. அந்திமக் காரியமும் அப்படியே. அதது புரியும் போது புரியும்,’ என்றார் சுருக்கமாய்.
அவன் காத்திருந்தான்… ஆனால், ஒரு தீர்ப்பின் நீதி புரிவதற்காக அடுத்து வந்த வழக்கு காத்திருக்கவில்லை. அது, முன்னினும் மூர்க்கமாக அவனைத் தாக்கியது. அப்பாவுடன், அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய அவர்கள் வீட்டையும், சுற்றி வளைத்துள்ளது இக்குற்றப் பத்திரிகை. வீட்டின் மீது தனக்குள்ள உரிமை என்ற கொக்கியுடன் பிரச்னையைத் துவக்கியிருப்பது, அப்பாவின் தாயாதி அல்ல… தங்கை மகன், சுந்தரம் என்ற, சுந்தர்! எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும், அவன் வாதம் நிற்காது. சிவசு மாமாவே அவன் சட்டையைப் பிடித்து நாலு வார்த்தை கேட்டிருக்கலாம். எதற்காக தன்னை அவசரமாய் வரச் சொன்னார்… தெரியவில்லை. ஒருவேளை பயந்து விட்டாரோ… மாமாவை நினைத்தால், அவனுக்குப் பாவமாக இருந்தது. சுந்தரை நினைத்தால், நெஞ்சு வரை பற்றிக் கொண்டு எரிந்தது.
தகப்பனுக்கும் மேலாக அன்பைக் கொட்டி வளர்த்தவரை நாகூசாது எப்படியெல்லாம் ஏசியிருக்கிறான்… நன்றி கெட்டவன்.
அதிகாலை குளிரிலும் அவனுக்கு அதிகமாய் வியர்த்தது. ஆசுவாசப் படுத்திக் கொள்ள நடைமேடையின் இந்தக் கோடியிலிருந்து, அந்தக் கோடி வரை மெதுவே நடக்கலானான்.
சிறிது நேரத்தில் பெங்களூரு வண்டி வந்து கொண்டிருப்பதற்கான அறிவிப்பு வந்தது. எஸ்.4 அருகே சென்று தயாராக நின்றான். ரயிலிருந்து இறங்கினாள் புவனா.
“”அக்கா…” ஆதுரமாய் அழைத்தாலும், அவனது உயிரற்ற உதட்டசைவில், வெற்றுப் பார்வையில், ஆறு மாதத்தில் அவன் உள்ளத்தில் குறைந்துவிட்ட தைரியம் தெரிந்தது. உடலில், ஐந்து வயது கூடிவிட்ட தளர்வு தெரிந்தது. அவன் கைகளைப் பற்றி, “நானிருக்கிறேன்…’ என்பது போல் அழுத்திக் கொண்டாள் புவனா. விடுவித்துக் கொள்ள மனமில்லாது, அப்படியே அவளை ஒன்றியபடி நடந்தான். இருவரும் மவுனமாய் வெளியே வந்து, ஒரு டாக்சியைப் பிடித்து, தங்கள் கிராமத்தை நோக்கிப் பயணமாயினர்.
“”எப்படி இருக்க பாலா?”
“”ம்…” ஓரெழுத்தில் பதில் சொல்லி, அவள் கேட்டதையே திருப்பிக் கேட்டான்.
“”ம்… சிவசு மாமா என்ன விஷயமாய் உடனே வரச் சொன்னார்?” அக்கா நேரே விஷயத்திற்கு வரப் பார்த்தாள்.
“”சொல்றேன்…” அவரது அழைப்பைப் பற்றி மேற்கொண்டு பேசாது, அவரைப் பற்றிப் பேசினான்…
“”சிவசு மாமா மாதிரி மனிதரைப் பார்க்கவே முடியாதுக்கா. வாரம் தவறாது ஆறுதலாய் நாலு வார்த்தை அவராகவே பேசுகிறார். பாவம், அவர் போன் பண்ணும் போதெல்லாம் நான் அனேகமாய் மீட்டிங்கில் இருப்பேன்; ஆனாலும், அவர் அசறுவதில்லை. இப்படி ஒரு சினேகம் நமக்கெல்லாம் வாய்க்காதுக்கா!”
“”அது தான் அப்பா. அவருடன் தொடர்புடைய அனைத்தும், அனைவரும் ஆத்மார்த்தம்!”
“இல்லை… விதிவிலக்குகள் இருக்கின்றன…’ அவனுக்குக் கத்த வேண்டும் போலிருந்தது; பேசாதிருந்தான்.
தங்கள் வீடு… அப்பா இருந்த வரை, ஒரு காலத்தில் துடியாய் வாழ்ந்த ஒரு தெருவின் அடையாள இல்லமாய், அந்தக் கிராமத்தின் ஜீவனைக் கஷ்டப்பட்டுத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த குடும்பங்களில் முதன்மையானதாய் இருந்த, தங்கள் வீடு, இனி, என்ன ஆகும்? தலையை சிலுப்பி யோசிப்பதை நிறுத்தினான்.
வீடு வந்து விட்டது. சிவசு மாமா ஓடியே, நிஜமாகவே, ஓடி வந்தார்.
“”வா பாலா… வாம்மா புவனா…” திரும்ப, திரும்ப அவர்களை ஏறிட்டுக் கண் குளிரப் பார்த்தார். பாலாவோ, வைத்த கண்ணை எடுக்காது, அவர்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கிராமத்து வீட்டுக்கு உண்டான இலக்கணப்படி அமைந்த வீடு. மிகப் பெரியதும் இல்லை; மிகச் சிறியதும் இல்லை; கச்சிதம். சரிந்த ஓட்டுச் சதுரங்களைத் தாங்கக் கூடிய முகப்பு. நான்கு படி ஏறியதும், பூட்டப்பட்டப் பெரிய தேக்கு மரத்தாலான கதவு!
மாமா இடுப்பிலிருந்து சாவிக் கொத்தெடுத்து, எண்களைப் பார்த்து, திண்ணை முதல், கிணற்றடி வரை நேராக இருந்த, ஐந்து கதவுகளையும் ஒவ்வொன்றாய் திறந்தார்.
புவனா, பாலா இருவரும் பிறந்து, வளர்ந்து பிள்ளைப் பருவம் முழுக்க உருண்டு புரண்ட பூமி அங்குலம், அங்குலமாய் விரிந்தது. பள்ளி நாட்களுக்குப் பின் கல்லூரி, வேலை, திருமணம் என்று இருவர் உலகிலும் வேறு வாசல்கள் புகுந்து விட்டாலும், அந்த வீடுதான் அவர்களின், தலைவாசல், நிலை வாசல், கடை வாசல் எல்லாமும். ஏனெனில், கிராமத்தின் பெரும்பாலான பெற்றோர் போல, பிள்ளைகளின் வட்டம் பெரிதானவுடன் இடம் பெயர்ந்து விடாது நீலகண்டனும், பார்வதியும் அங்கேயே வாழ்ந்து, அங்கேயே மறைந்து, அந்த மண்ணுடனான சொந்தத்தைத் தங்கள் மடியோடு வைத்திருந்தனர்.
“”பூட்டிய வீடு மாதிரியே இல்லையே மாமா… அப்பழுக்கு இல்லாம சுத்தமா இருக்கு!” ஆச்சரியப்பட்டாள் புவனா.
“”உங்கப்பா எங்க போயிருக்கான்… என் இடம் அங்க சரியா இருக்கான்னு பார்க்க முன்னாடி போயிருக்கான். அவன் இங்கு விட்டுட்டுப் போனதை நான் பார்த்துக்கிறேன்!”
அதே நறுக்கு தெரிக்கும் பேச்சு… மாமா இங்கு, சப்-போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்தார். அப்பா, திண்டுக்கல்லில், ஹெட் போஸ்ட் மாஸ்டர். ஒரே துறை என்றாலும், மாமா தந்தி மொழி மாதிரி, “பட்பட்’ தான்; அப்பா நேர்மாறு. பதிவுத் தபாலைப் போல் மிகவும் ஜாக்கிரதையாய் பேசுவார். அவளுள் அப்பாவுடன் இழந்தவைகள் ஒவ்வொன்றாய்த் தோன்றலானது.
நடைவழியில் நிழலாடியது. முண்டாசை அவிழ்த்து, கக்கத்தில் இடுக்கி, தலையைக் குனிந்தபடி உள்ளே வந்தான் ராசு. அவர்களைப் பார்த்ததும், வாய் பொத்திக் கேவினான்.
“”ஒரு நா அடைஞ்சு கிடக்குமா இந்தக் கதவு… வருவோரும், போவோருமா கல்யாண வீடு மாதிரி இருக்கும். ஆறு மாசமா பூட்டு தொங்குது. பாக்கப் பாக்க ஆத்துப் போகுது!” சிறிது சிறிதாய் உடைந்த அவன் துயரம் பக்கென பாலாவையும் தொற்றிக் கொண்டது.
தன் வீடு, ஊர், உற்றவர் இவற்றை விட்டு விட்டுத் தான் எங்கோ வடகோடியில் அனாதையாய் வாழ்கிறோமோ என்று முதன் முறையாய் அவனுக்குத் தன் மீதும், தன் இளம் மனைவி, சின்னஞ்சிறு மகன் மீதும் சொல்லொண்ணா இரக்கம் பிறந்தது. அவன் கண்கள் பனித்தன.
“”ராசு… ஏம்பா ஆறியிருக்கிற புண்ணைக் கிளறுகிறாய்… பாலா, இதோ வந்துட்டேன். நான் சொன்ன விஷயத்தை யோசித்து, என்ன முடிவு செய்யணுமோ செய்…” ராசுவை இழுக்காத குறையாய் இழுத்துக் கொண்டு வெளியே சென்றார் சிவசு மாமா.
“”மாமா என்னவோ கோடி காட்டிட்டுப் போறாரே?” புருவம் உயர்த்தினாள் புவனா.
“”சொல்றேன்… இப்ப என்ன அவசரம்?”
சொல்லி விட்டானே தவிர, ஒரு சிறுமியைப் போல் கூடத்திலிருந்து மூன்றாம் கொல்லை வரை சுற்றிச் சுற்றி வருபவளிடம், எப்படிச் சொல்வது என்று தெரியாது, விழித்தான் பாலா. அவள் மனோ வேகம் அவள் கால்களுக்கு இல்லாததால், அவளாகவே ஓய்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்தாள்.
“”பாலா… உனக்குத் தெரியுமா, தாத்தா இறந்த போது, அப்பா இன்டர் படித்துக் கொண்டிருந்தாராம்… அப்போது இதே தெருக்கோடியில், இதைப் போல் இரண்டு பங்கு பெரிதான, தங்கள் பூர்வீக வீட்டில் இருந்திருக்கின்றனர். அந்த வருடம் அப்படி ஓர் அடைமழை. ஊருக்குள் வெள்ளம் வந்ததாம். அப்பா நட்டாற்றில் நின்ற அத்தனை பேரையும் வீட்டில் தங்க வைத்து, மூன்று வேளையும் சாப்பாடு போட்டாராம். வெள்ளம் வடிந்தவுடன், என்ன தோன்றிற்றோ, வீட்டை அப்படியே நிரந்தரச் சத்திரமாக மாற்றி விட்டாராம். இருந்த ஒரே சொத்தான நிலத்தையும், அதற்கு வருமானமாய் எழுதி வைத்து விட்டாராம். அந்த ஏற்பாடு பாட்டிக்கு மிகவும் பிடித்ததாம்.
“”அப்புறம்… வேலையில் சேர்ந்து கொஞ்சம், கொஞ்சமாய் பணம் சேர்த்து இந்த வீட்டைக் கட்டினாராம்… யார் யார் நிலத்திற்கோ, கங்கணம் பார்த்து, டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் கணக்கெழுதி, வக்கீல் குமாஸ்தாவாய் கேஸ் கட்டுக் குறித்து, சுருங்கச் சொல்வதென்றால், ஒரு அட்டாவதானியாய் சுழன்று, வீட்டைக் கட்டிய கையோடு அத்தைக்கு ரொம்ப விமரிசையாய் கல்யாணம் செய்து, பிறகு தான் அவர் கல்யாணம் செய்து கொண்டாராம்…”
இந்தக் கதையைப் பாட்டி சொல்லி, அத்தை சொல்லி, அம்மா சொல்லி, இப்போது அக்கா சொல்லக் கேட்கிறான் பாலா. ஒவ்வொருவர் வாய்மொழியில் கேட்கும் போதும், ஒவ்வொரு ருசி! அப்பாவின் வெற்றிகளை பிறர் சொல்லித்தான் கேட்க முடியும்.
“”அக்கா… போன வாரம் சுந்தர் இங்கு வந்து மாமாவைப் பார்த்தானாம்?”
“”நம் அத்தை பையன் சுந்தரா… நம்ப முடியலை.”
“”நம்பு… இன்னும் நிறைய நம்ப வேண்டும். நாம யாருமே வேண்டான்னு ஓடிப் போனவன், அப்பா இறந்ததற்கு வராதவன், இப்போ வந்திருக்கான். மருந்துக்குக் கூட மாறலையாம். அப்படியே வளந்திருக்கான். நேரான வாழ்க்கையில்லை; நிரந்தர வேலை யில்லை. நிறையக் கடன் வைத் திருக் கிறானாம். இதில், கல்யாண மாகி அடுத் தடுத்து, இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவன் கோபமும், கூச்சலும் அப்படியே அவன் அப்பனைப் பார்த்தது போலிருந்தது…” என்றார் மாமா.
“”அப்பாவின் வாழ்க்கையில் தோல்வி என்றால், அது அத்தையின் மண வாழ்க்கைதான். அது, இன்னும் தொடர்கிறதா பாலா… அப்பா அத்தையை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். யார் விதி கண்ணைக் கட்டியது… அத்தையினுடையதா… அப்பாவினுடையதா?
“”அவர் செய்த சீர் செனத்தி எல்லாத்தையும் குடியில், சீட்டில் தோத்து படாத பாடு படுத்தினார் அத்தையின் கணவர். சுந்தருக்கு இரண்டு வயது. அத்தை பிறந்த வீட்டுக்கே நிரந்தரமாய் அனுப் பப்பட்ட போது, நான் பிறந்து சில மாதங்களே ஆயிருந்த நேரம். அப்பா பதறவில்லை. தங்கை யையும், அவள் குழந்தையையும் தன்னு டைனேயே வைத்துக் கொள்ளத் தீர்மானித்தார்.
“”தன் மூத்த குழந்தையாத்தான் சுந்தரை வளர்த்தார். பதினாறு வயது அறியாமையோ, பொறாமையோ, தீய சகவாசமோ எதனாலோ தூண்டப்பட்டு, வீட்டை விட்டே போயிட்டான்; எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இப்பவாவது நம்மைப் பார்க்கத் தோன்றியதே…”
“”திரும்பி வந்திருக்கான். நம்மைப் பார்க்க அல்ல; வீட்டைக் கேட்க… அப்பா மீது பெரிய குற்றப் பட்டியல் வைத்திருக்கிறான். எனக்கு வக்கீல் நோட்டீஸ் விடப் போகிறானாம். அப்பா அவர்களை ஏமாற்றி விட்டராம். தான் பெற்ற பெண்ணாயிருந்தா இப்படியொரு மாப்பிள்ளையைத் தங்கைக்குப் பிடித்திருப்பாரா என்று, மாமாவிடம் காய்ந்தானாம். பூர்வீக வீட்டை அப்பா சத்திரமாக்கி விட்டத்தில், நிலத்தையும், அதற்கு அடுத்தபடியாய் எழுதியதில், அத்தையின் பங்கும் போய் விட்டதாம். அதனால், இந்த வீட்டில், அவனுக்கு சம பாகம் வேண்டுமாம்! ஒரு மனை வீட்டை இரண்டாக்கி, ஒன்றை இவன் பெயரில் பதிய வேண்டுமென்று நான்கு பேரைச் சேர்த்து, அன்று பெரிய ரகளை செய்தானாம்… இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்மோடு நேருக்கு நேர் சண்டை போட வரப் போகிறான்.”
சொல்லத் துவங்கிய போது, நெஞ்சு வரை அழுத்திய பாரம் சொல்லச் சொல்ல தலையே வெடித்து விடும் போல் ஆனது. மொத்த அங்கங்களாலும், வீட்டை அப்படியே இறுகப் பற்றிக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முட்டியை மடக்கி, விரல்களை நெறித்து, “ம்….ம்…’ என்று ஊங்கார மிட்டான்.
இத்தனை ஆக்ரோஷம் ஏனென்று அவனைக் கையமர்த்த எழுந்த புவனாவிற்கு, அடுத்த நிமிடம் அவனுடையகோபம் நியாயமாகப் பட, அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் அவர்களுக்கு வார்த்தையே வரவில்லை. அது, அப்பாவின் ஆணை!
“வார்த்தை வரம். சிந்த விடாதே… அள்ள முடியாது…’ கணத்துக்குக் கணம் உள்ளே சுழன்றது.
அம்மாவிற்கு அவர்கள் வீடு கோகுலமே தான். “கண்ணனே’ அவளுக்கு கண்கண்ட தெய்வம். ஜென்மாஷ்டமியை அமர்க்களமாய் கொண்டாடுவாள். நவராத்திரி, 10 நாளும், பாலாவிற்கு கண்ணன் வேஷம். சுந்தருக்கு பலராமன், புவனாதான் சுபத்ரா… ஊர் குழந்தைகள் கோபர்கள். அலங்கரித்து மாளாது அம்மாவிற்கு. அவள் பாட்டைப் போலவே பிரமிக்க வைக்கிறது, அவளது பக்தியும், பாரபட்சமற்ற பளிங்கு மனமும், கொள்ளை அன்பும். அம்மா இருந்த போது, அவளை இத்தனை துல்லியமாய் அறிந்து வைத்திருந்தோமா… தெரியவில்லை. நினைவுக் கடலில் அவர்கள் மனம்
அமிழ்ந்தது.
“ஏய்… வாடா வெளியே… எதுக்க நின்னு பேசு… என் கேள்விக்கு பதில் சொல்லு…’ வாசலில் கூச்சல் கேட்டது. சுந்தர் வந்து விட்டானா…
புவனாவும், பாலாவும் வாசலுக்கு விரைந்தனர். வாசற்படி வரை தலை தெறிக்க வந்தவர்கள், நிலைப்படியில் அப்படியே நிலைகுலைந்து போயினர். திண்ணையில் காவல் தெய்வம் போல் உட்கார்ந்திருந்த சிவசு மாமாவையோ, சற்று தள்ளி கூடியிருந்த சுந்தரத்தின் கூட்டாளிகளையோ அவர்கள் கவனிக்கவே இல்லை.
பின்னோடிய, 20 வருடத்தின் முன்பிருந்த தடயம் எதுவுமேயின்றி, முகம் கறுத்து, உடல் மெலிந்து, தூக்கிக் கட்டிய வேட்டியும், ஆங்காங்கு நைந்த மேல்சட்டையும், வெறும் காலுமாய், கண்களில் கொப்பளிக்கும் கோபமும், திறந்த வாய் மூடாத உறுமலுமாய் பைத்தியக்காரனைப் போல் நின்றிருந்த சுந்தரத்தைத் தவிர, எதுவுமே அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை.
சுந்தரத்தை நோக்கி, இரண்டடி வைத்தான் பாலா; பதறினாள் புவனா . அவளைக் கையமர்த்தி…
“”ஹலோ சுந்தர்,” என்று வாய் நிறைந்த சிரிப்புடன் அவனை எதிர்கொண்டு அழைத்தான் பாலா. நேருக்கு நேர் நின்று தோளோடு தோள் சேர்த்தணைத்து வீட்டினுள்ளே கூட்டி வந்தான். கூடத்தில் நடுநாயகமாகப் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அவனை வலுக்கட்டாயமாக அமரச் செய்தான். பேன்ட் பாக்கெட்டிலிருந்த வீட்டுச் சாவியையும், பத்திரத்தையும் எடுத்து அவன் கைகளில் ஒப்படைத்தான்.
“”இந்த வீட்டுடனான உறவு ஒன்றே ஒன்றுதான் சுந்தர். இது ஒன்றாய்த்தான் இருக்க முடியும்; இரண்டாகப் பிரிய முடியாது. இங்கிருந்து எதையும் பெயர்க்கவும் முடியாது. விற்பதென்பது, ஐயோ நம்மால் முடியவே முடியாததொன்று. நானும், அக்காவும் எப்படியோ, அப்படித்தான் அப்பாவும், மீனா அத்தையும். அதனால், இது என்னிடம் இருந்தாலும், உன்னிடம் இருந்தாலும் ஒன்றுதான். இந்தா… பெற்றுக் கொள்!”
கண்களில் நீர் பெருக வாயடைத்து நின்ற சுந்தரத்தின் கன்னத்தில் தட்டிவிட்டு பாலாவும், புவனாவும் புறப்பட்டனர். தன் நண்பன் நீலகண்டனை மீண்டும் பார்த்தது போல் பரவசப்படலானார் சிவசு மாமா . தானும், தன் உயிர்த் தோழனுமாய் மொழிபெயர்த்த ஒரு ஆங்கிலக் கவிதை அவர் நினைவுக்கு வந்தது…
“தந்தையாகும் மகன் தன் தந்தையை
தன் மகனில் பார்க்கிறான்
தந்தையை ஈன்ற மகன் தன்னைத்
தன் தந்தையில் பார்க்கிறான்
மகன், தந்தை – மகன் என மாறி மாறி
மகன் மனிதனின் தந்தை ஆகிறான்!’
***

– ஆர்.சந்திரா (டிசம்பர் 2011)

கல்வி: எம்.ஏ., வரலாற்றிலும், இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர். கடந்த நான்கு வருடங்களாக சிறுகதை எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது எழுதும் ஆர்வத்துக்கும், திறமைக்கும் வித்திட்டது மதுரை வானொலி நிலையம். வானொலியில் இவரது நான்கு வரலாற்று நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன.
இலக்கிய பீடம் இதழ் நடத்திய, “சிறுகதை போட்டி 2008’ல், இவரது சிறுகதை சிறப்பு பரிசு பெற்றுள்ளது. ஆன்மிகக் கட்டுரைகளும், சிறுவர்களுக்கான கதை, கட்டுரைகளும் எழுதியுள்ளார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *