நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 4,729 
 
 

நானும் என் நண்பன் சங்கரும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள் பள்ளியில் படிக்கும்போதே மிக நெருக்கமாக பழகுவோம், நாங்கள் பள்ளிக்கு எடுத்து ச்செல்லும் மதிய உணவைக்கூட பகுந்துதான் உண்ணுவோம் சில நாட்களில் இருவரில் யார் ஒருவர் மதிய உணவு எடுத்து வரா விட்டாலும் இருப்பதை பகுர்ந்து, அனுசரித்தும் அனுபவித்தும் சாப்பிடுவோம்.

நாங்கள் இருவருமே கொஞ்சம் நடுத்தர வர்க்கம் தான் எங்கள் இருவரின் எண்ணங்களும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாகத்தான் படித்தோம் சில குடும்ப சிக்கல்கள் காரணமாக என்னால் படிப்பை தொடர முடியவில்லை ஒரு துணிக்கடையில் வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டேன், இன்று ஏதோ என் கடின உழைப்பாள் முன்னேறி சிறியதாக சொந்த துணிக்கடை ஓன்று வைத்து நடத்தி வருகிறேன், சொந்த வீடு, மனைவி குழந்தை குட்டிகளும் ஆகிவிட்டது.

நண்பன் சங்கர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசாங்க வேளையில் அமர்ந்துவிட்டான் ஆண்டுகள் இருப்பதை கடந்துவிட்டோம் எப்போதாவது தொலைபேசியில் பேசிக்கொள்வோம் இன்று எதிர் பாராத விதமாக நண்பன் சங்கரிடமிருந்து அழைப்பு வந்தது அழைப்பை எடுத்து நலம் விசாரித்தேன், நல்லா இருக்கேன்டா மாரியப்பா, அப்புறம் ஒரு சின்ன உதவி, நீதான் பெரிய முதலாளியாச்சே எனக்கு உன்ன விட்ட யாரு இருக்கா என்று இழுத்த நண்பனை சரி சொல்லு என்ன விஷயம் என்றேன், இல்ல உனக்கு தெரியும் என் பொண்ணு பெரியவா கவிதா ப்ளஸ் டூவில் நல்ல மார்க் இப்போ நீட்லயும் தேறிட்டா, கேரளாவுல ஒரு தனியார் மருத்துவ கல்லூரில சீட் கிடைச்சிருக்கு சேர்த்து விடுறதுக்கு ஒரு ரெண்டு லட்சம் தேவைப்படுது குடுத்து உதவினா கொஞ்சம் கொஞ்சமா உன் கடனை அடைச்சிருவேன் என்றான். அட இதுக்குதான் இவ்வளவு தயங்குனியாக்கும் நீ ஒன்னும் கவலை படாதே நீ மத்த ஏற்படுகளை செய் நான் பணம் ரெடிபண்ணிட்டு கூப்புடுறேன் என்றேன் நண்பனும் சந்தோசமாக சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

நான் பணத்தை திரட்ட ஆரம்பித்தேன் வங்கி சேமிப்பு மற்றும் கையிருப்பு எல்லாம் சேர்த்தாலும் ஒரு லட்சம் குறையுது என்ன பண்ணலாம் என யோசித்து க்கொண்டிருக்கும் போது விபரம் அறிந்த என் மனைவி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிக்கொடியை என்னிடம் கொடுத்தாள் நான் ஆச்சரியமா அவளையே பார்த்தேன், ஒரு குழந்தையோட படிப்புக்கு உதவாத தங்கம் இருந்து என்ன பிரயோசனங்க, இதை அடகுக்கடையிலே வச்சி பணத்தை கொடுங்க என்றாள், நான் என் மனைவியின் உதவும் குணத்தை எண்ணி பெருமைப்பட்டு கொண்டே அடகுக்கடைக்கு புறப்பட்டேன் பணம் ஏற்ப்பாடு செய்ய.

என்னங்க, என்னங்க, மனைவியின் குரல் கேட்டு ஆழ்ந்த கனவில் இருந்த நான் திடுக்கிட்டு கண் விழித்தேன், சீ என்ன வாழ்க்கை இது ஒரு மனிதன் அடுத்தவனுக்கு உதவுவது போல கனவு காணக்கூடவா தகுதியில்லாமல் போய்விட்டது, அடகுக்கடைக்கு போகும் போதே கனவை கலைத்துவிட்டானே, என்ன கடவுள் என சபித்துவிட்டு அரை தூக்கத்தில் இருந்த என்னை என்னங்க சீக்கிரம் ரெடி ஆகுங்க வேலைக்கு லேட்டா போனா துணிக்கடைக்காரன் நீ ஒன்னும் வேலைக்கு வேண்டாம் வீட்டுக்கு போன்னு சொல்லிறப்போறான், ஹான் இன்னொன்னு வேலைக்கு போறதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு ரூபா வச்சிட்டு போங்க இந்த மஞ்ச கயிறை மாத்தணும் இத போட்டு ரெம்ப நாளாச்சு ஒரே அழுக்கு, மஞ்ச கயிறா, இல்ல கருப்பு கயிறான்னே தெரியல என்ற மனைவியை பார்த்தேன், அவள் சாமி போட்டோவுக்கு முன் நின்று கழுத்தில் கிடந்த அழுக்கு படிந்த மஞ்ச கயிறை இரு கைகளாலும் ஏந்தி பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *