‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? அவரே சொன்னது போல, ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்!’ அனுபவப்பட்ட எனக்குத்தானே அதிலுள்ள சிரமம் தெரியும்!
‘மிகப் பெரிய சிந்தனைகள் எல்லாம், எதிர்பாராத நேரத்தில் ஒரு சிறு நொடித் துளியில் உருவாவதுதான்’ என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார் இல்லையா? அந்த மாதிரி, நான் மிகவும் விரும்பும் பருப்பு உசிலியை வெண்டைக்காய் மோர்க் குழம்போடு ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு இருந்தபோது, என் அருமை மனைவி கமலாவின் சிந்தனையில் உதித்தது அந்த ஐடியா!
‘‘ஏங்க, நம்ம வீட்டுல நாய் ஒண்ணு வளர்த்தா என்ன?’’
ரசம் சாதம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே அதில் பாயசத்தை ஊற்றின மாதிரி ஆகிவிட்டது எனக்கு. ‘ஏன்… உங்களையெல்லாம் வளர்ப்பது போதாதா… நாய் வேறு வளர்க்க வேண்டுமா?’ என்று கேட்டு வைத்தால், மேற்கொண்டு மோர்க் குழம்பு கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது.
என் மௌனம் கமலாவைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டும். இந்த மாதிரி சமயங்களில்தான் ஏழரை நாட்டுச் சனி உச்சம் பெறுகிறது.
‘‘எனக்கொண்ணும் ஆசையில்லை. சின்னதுதான் அடம்பிடிக்கிறது.’’
அம்மாவின் புடவைக்குப் பின்னாலிருந்து புன்சிரிப்போடு என் குட்டிப் பெண் ஸ்வேதா எட்டிப் பார்க்க, என் போதாதவேளை நானும் பதிலுக்குப் புன்சிரிக்க, கப்பென்று பிடித்துக்கொண்டது சனி.
‘‘ஹாய்! அப்பா ஓ.கே. சொல்லிட்டார்!’’ என எனது இரண்டு வாண்டுகளும் கோரஸாகக் கத்திக்கொண்டே ஓடிவிட, நான் நிராயுதபாணியானேன். கமலா வின் முகத்தில் இரண்டு பீட்ஸா சாப்பிட்ட பெருமிதம்.
மறுநாள் மாலையில் நான் ஆபீஸில் 150 வவுச்சர்கள், மேனேஜரின் தவுசன் வாலா வசவுகளுடன் போராடிக்கொண்டு இருந்தபோது, செல்லில் என் இரண்டு பெண் பிள்ளைகளின் குரல்கள்…
‘‘அப்பா, ஷாலுவைப் பார்க்கப் போக வேணாமா? அம்மா வெயிட்டிங்!’’ & இது பெரிய பெண் சஞ்சனா.
‘‘ஷாலுவா?’’
‘‘ஐய, இதுகூடத் தெரியலையா? நாம வாங்கப்போற டாகியோட பேரு. டாகின்னா டாக். டாக்னா நாய். ஹ¨ம்… சீக்கிரம் வாப்பா!’’ & இது என் ஸ்வேதாக் குட்டியின் கெஞ்சல்.
மேனேஜரிடம் கெஞ்சிக் கூத்தாடி பர்மிஷன் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனால், என்சைக்ளோபீடியா மாதிரி ஏதோ ஒரு தடிமனான புத்தகத்தைப் புரட்டிக்கொண்டு இருந்தாள் என் சகதர்மிணி. வழவழ பேப்பரில் கலர்கலராக நாய்களின் படங்கள்.
‘‘அப்பா! ஷாலுவை எப்படி பாத் செய்யணும், என்ன ஃபுட் கொடுக்கணும்னு யாரையும் கேட்கவே வேண்டாம். அம்மா ஒரு புக் வாங்கியிருக்கா. ஜஸ்ட், செவன் ஹண்ட்ரட் ருப்பீஸ் ஒன்லி!’’
‘‘இருபது பர்சென்ட் டிஸ்கவுன்ட்னு சொல்லுடி!’’
‘‘ஆமாப்பா. அப்புறம் அந்த செயின்…’’
‘‘சஞ்சு! கீப் கொயட்! எல்லாத்தையும் இப்பவே சொல்லியாகணுமா? அப்பா, முதல்ல டிபன் சாப்பிடட்டும்!’’
கென்னல் ஷாப்பில் ஏராளமான நாய்க் குட்டிகள். விதவிதமான குரைப்புகள். கன்றுக்குட்டி சைஸில் அல்சேஷன்கள்! ஊதுகுழலுக்குக் கால்கள் முளைத்த மாதிரி ஒரு நாயா, குட்டியா தெரிய வில்லை… என் கால்களை நக்க முனைய, நான் சுவரில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டேன். நூல் கண்டுக்கு நடு வகிடு எடுத்து வாரிவிட்ட மாதிரி இன்னொரு குட்டி நாய். அந்தச் சடை நாயின் முன் பகுதி எது, பின் பகுதி என்று நான் கேட்க, நான் ஏதோ தமாஷ் பண்ணுவதாக நினைத்துச் சிரித்தார் கென்னல் ஷாப் முதலாளி. அதற்கான விடைதான் எனக்கு இன்றுவரை கிடைக்கவில்லை.
நாய்களை அலசி ஆராய்ந்து, ஒருவழியாக ஷாலு தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஒரே கவ்வில் ஒரு கிலோ சதையைக் கவ்வி எடுத்துவிடுபவள் போல, நல்ல ஆகிருதியாக இருந்தாள்.
காலனியில், கமலாவைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அக்கம்பக்கத்து பிளாட்காரர்களுக்கு ஸ்வீட்ஸ் என்ன, கூல் டிரிங்க்ஸ் என்ன…
‘‘கங்கிராஜுலேஷன்ஸ்! நாய் வாங்கியிருக்கீங்களாமே? எவ்வளவு ஆச்சு? என்ன சாதி?’’ என்று விசாரிப்புகள்.
எனக்குப் பதில் தெரியவில்லை. ‘‘மன்னிக் கணும். நாயா இருந்தாலும் நான் சாதி பாக்கிறது கிடையாது!’’ என்று மழுப்ப, பிரமாதமாகச் சிரித்தது கூட்டம்.
‘‘இது அல்சேஷன் டாபர்மேன் கிராஸ்!’’ என்று கமலாதான் பதிலைச் சொல்லி, என் மானத்தைக் காப்பாற்றினாள்.
யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்… தூக்கம் சொக்கும் நேரம் அதிகாலை நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைதான். சரியாக அந்த நேரத்தில், மூஞ்சியில் தண்ணீர் ஊற்றாத குறையாக என்னை எழுப்பிவிடுவாள் கமலா. என் கையில் ஷாலுவின் சங்கிலியைக் கொடுத்து, ஒரு வாக் போல உச்சாவுக்கு அழைத்துப் போய்வரச் சொல்வாள். அதைப் போல தண்டனை கிடையவே கிடையாது.
ரோட்டில் ஷாலுவை கன்ட்ரோல் செய்யவே முடியாது. புதிதாக சைக்கிள் ரிக்ஷாவோ, ட்ரை சைக்கிளோ ஓட்டிப் பார்த்திருக்கிறீர்களா, ஒருபக்கமாக இழுத்துச் செல்லும். அது மாதிரி என் கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டே இருப்பாள் ஷாலு. சும்மாவாவது போவாளா? மாட்டாள். எங்கோ ஒரு தெரு நாய் தன்பாட்டுக்கு தேமே என்று போய்க்கொண்டு இருக்கும். ஷாலு அநாவசியமாக அதை வம்புக்கு இழுப்பாள். இவள் குரைக்க, அது குரைக்க, அதன் அடியாட்கள் மாதிரி இன்னும் நாலு தெரு நாய்கள் சேர்ந்துகொண்டு வியூகம் அமைத்து, எங்கள் இருவரையும் பார்த்துக் குரைக்க, என்பாடு திண்டாட்டமாகிப் போகும்.
ஷாலு என் நிம்மதியை மட்டும் பதம் பார்க்கவில்லை; பர்ஸையும் சேர்த்துதான்! வீட்டில் நாய் வளர்ப்பு பற்றி விதவிதமான புத்தகங்கள். சஞ்சுவும் ஸ்வேதுவும் சாப்பிட் டார்களோ என்னவோ, ஷாலுவுக்கு ராஜ உபசாரம். நெய்யும் பாலும் அமர்க் களப்பட்டது. முட்டை என்று எழுதினாலே குமட்டிக்கொண்டு வருவ தாகச் சொல்லும் கமலா, வாட்ச்மேனிடம் சொல்லி ஷாலுவுக்கு தினமும் மட்டன் வாங்கிப் போட் டாள். வெட்னரி டாக்ட ரோடு ஷாலு சம்பந்தமாக அவள் விசாரித்ததற்கே போன் பில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகி யிருக்கும்.
இப்படியாக, இந்தச் சனி திசையிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தினமும் நான் புலம்பிக் கொண்டு இருந்தபோது, திடீரென ஒரு மத்தியான வேளையில் எனக்கு போன் வந்தது. சஞ்சுதான் பேசிற்று.
‘‘அப்பா! அம்மாவை ஷாலு கடிச் சுட்டா. புஜ்ஜி மாமி அம்மாவை நர்ஸிங் ஹோமுக்கு அழைச்சுட்டுப் போயிருக்காங்க. நீ நேரா அங்கே வந்துடு. வரும்போது அம்மா ஏ.டி.எம்&ல ஃபைவ் தௌசண்ட் எடுத்துட்டு வரச் சொன்னா. உடனே வா!’’
அலறியடித்து ஓடினேன். பெட்டில் படுத்திருந்த கமலாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. குதிகாலுக்குச் சற்று மேலே ஆடுசதையில் வெடுக்கெனக் கடித்திருக்கிறது. கடியைவிட, போடப்போகிற ஊசிகளைப் பற்றித்தான் அவளுக்குப் பயம் அதிகம்.
‘‘நான்தான் சொன்னேனே, நாயெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுன்னு! நீங்கள்லாம் கேட்டாதானே..?’’
‘‘ஆமாங்க, நீங்க சொல்றதுதான் சரி!’’ என்றவள், ‘‘நான் கென்னல் ஷாப்ல பேசிட்டேங்க. அவங்க ஷாலுவைத் திருப்பி எடுத்துக்கிறதா சொல்லிட் டாங்க. இப்பவே அந்தச் சனியனைக் கொண்டு போய் விட்டுட்டு வந்து டுங்க!’’என்றாள்.
வீட்டுக்குப் போனால், எதுவுமே நடக்காத மாதிரி ஷாலு குஷி மூடில் மேலே விழுந்து கொஞ்சியது.
நான் அதன் சங்கிலியைக் கழற்ற, வழக்கம் போல வாக்கிங் என்று நினைத்து, உற்சாகமாக ஓடிப் போய் காரில் தாவி ஏறியது. வழியெல்லாம் ஜன்னல் வழியாக குதூகலமாக வேடிக்கை பார்த்தபடி வந்தது.
கென்னல் ஷாப்பில் அதை விட்டபோது, எனக்கே கொஞ்சம் மனசு கஷ்டமாகிவிட்டது. நான் ஷாலுவை விட்டு விலகி வந்து, காரில் ஏறி ஸ்டார்ட் செய்தபடி திரும்பிப் பார்த்தபோது, ஷாலுவின் கண்களில் வெளிப்பட்ட சிநேகமும் அன்பும் என்னைத் தடுமாற வைத்தன.
மறுபடியும் தப்பு செய்கிறோமோ?
‘’ஷாலு, நீ என்னைப் படுத்தி யெடுத்தாலும் ‘ஐ லவ் யூ’டா கண்ணம்மா!’’ என்றபடி ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸைப் பறக்கவிட்டவன், கமலாவின் வார்த்தைகளை மீற முடியாதவனாக, கண்கள் கசிய, காரை நகர்த்தி, வேகமெடுத்தேன்.
– 14 மே 2006