(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“என்ன கம்னு ஆட்டீங்க?” என்றாள்.
கம்னு ஆகாமல் என்ன செய்வது. இன்றைக்கு எனக்கு தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கிற மூடே இல்லை. டிவியில் லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படம் போடுகிறான். நொறுக்குத் தீனியைக் கொறித்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்து ஆங்கிலப் படத்தை எஞ்ஜாய் பண்ணுவதை விட்டு விட்டு….
படம் முடிந்து, தியேட்டரிலிருந்து வெளியேறினோம்.
“நா டிரைவ் பண்றேங்க ப்ளீஸ்”, என்று இவள் கேட்கவில்லை.
காரின் கதவை நான் திறந்து விட்டதும் சமர்த்தாய்ப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
பிறகு மெல்ல வாயைத் திறந்தாள்.
“க்ளைமாக்ஸ்ல சண்ட ஸீன் நல்லா எடுத்திருக்காங்க இல்ல?”
“இதெல்லாம் ஒரு சண்டயா? ஜாக்கிச்சான் படத்துலயும், ஸில்வஸ்டர் ஸ்டால்லோன் படத்துலயும் சண்டயப் பாத்துட்டு, இந்தத் தமிழ்ப்பட சண்டயெல்லாம் பார்க்க முடியுமா?”
“பாட்டு பரவாயில்லல்ல? இப்ப வர்ற படங்கள்ல உள்ளப் பாட்டுக்களப் பார்க்க இது எவ்வளவோ தேவல. இல்லிங்க?”
“ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சக்கர. இதெல்லாம் ஒரு பாட்டா? எம்.எஸ்.விஸ்வநாதன், கேவி மஹாதேவன் மாதிரி வருமா?”
“புதுசா ஒரு வில்லன் வர்றானே, ஆள் வித்யாசமா இருக்கான் இல்ல? நல்ல செலக்ஷன்?”.
“ஐயே, ஓமக்குச்சி மாதிரி ஙேன்னு இருக்கான். என்ன நல்ல செலக்ஷன்?”
“சரி, காமெடியாவது புடிச்சதா ஒங்களுக்கு?”
“நாகேஷ் காமெடியையும் சந்திரபாபு காமெடியையும் ரசிச்சிட்டு, இந்தக் காமெடியையெல்லாம் சகிச்சிக்கணும்னு தலையெழுத்து. கஷ்டம்டா சாமி.”
“என்னங்க இவ்வளவு சலிச்சிக்கிறீங்க. இந்தப் படத்துல எதுவுமே புடிக்கலியா ஒங்களுக்கு?”
“புடிச்சதே. ஹீரோயின், மலையாள புதுமுகம். ஆள் ஸ்வீட்டா இருக்கா.”
“ஐயோ பாவம்னு இருக்கா. ஐயாவுக்கு ஸ்வீட்டா இருக்காளாம்ல!”
சிரித்தபடியே தாடையில் ஒரு இடி இடித்தாள்.
“ஒங்களுக்கும் எனக்கும் ஏங்க டேஸ்ட்ல இவ்வளவு வித்யாசம் இருக்கு!”
வழியில் ஒரு ரெஸ்ட்டாரன்ட்டில் சாப்பிட்டுவிட்டு, வீடு வந்து சேர்ந்தபோது மணி பதினொண்ணைத் தாண்டி விட்டது.
வீட்டை நெருங்கினபோது கேட்டில் ஒரு தடங்கல்.
ஒரு ப்ளாட்ஃபாம் குடும்பம், பாதி கேட்டை மறித்துக் கொண்டு படுத்திருந்தது. படுத்திருந்தவர்களை எழுப்பி நகர்த்தாமல் கார் உள்ளே போக முடியாது.
காரிலிருந்து இறங்கிக் குரல் கொடுத்தேன்.
வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார்கள்.
அரை நித்திரையில், எழும்ப உடன்படாத சிறுவனுக்கு ரெண்டு அடி விழுந்தது.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அலைக்கழிக்கப்பட்ட கைக்குழந்தை. நடு ராத்திரியின் நிசப்தத்தைத் துவம்சம் செய்கிற மாதிரி ஓங்கி அழுதது.
காரை உள்ளே நிறுத்திப் பூட்டிவிட்டு, “இப்ப நீங்க படுத்துக்கலாம்” என்றேன்.
அந்த நடைபாதைக் குடும்பத்துக்குத் தங்கு தடையின்றிக் கிடைக்கிற ஒரே விஷயமான உறக்கத்தைக்கூடப் பறிக்க நேர்ந்தது குறித்து வருத்தமாயிருந்தது ரொம்ப.
அந்த வருத்தத்தைத் தணிக்க இவள் ஏதாவது பேசுவாள் என்றால், வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே பிரவேசித்த பின்னாலும் இவள் மௌனமாயிருந்தாள், வழக்கத்துக்கு மாறாய்.
“என்ன கம்னு ஆய்ட்ட” என்றேன்.
“பாவம்ங்க, அவங்கள டிஸ்ட்டர்ப் பண்ணாமக் கார நாம் வெளியவே நிறுத்தியிருக்கலாம்ல?” என்றாள், என்னவள்.
– 16.11.2003 (அவனுக்கும் அவளுக்கும்)