நாங்க அமெரிக்கன் சிட்டிசன்!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 4,756 
 
 

“ஒருத்தருக்கு எத்தனை கிலோ கொண்டு போலாம்னு சரியா கேட்டியா ???”

“அம்மா , இதோட இருபது தடவை இதே கேள்விய கேட்டுட்ட !! இரண்டு சூட்கேசுதான் கணக்கு !

“ரகு !! ஒரு பாட்டில் மாகாளிக்கிழங்கு போட்டு வச்சிருக்கேன் !! மறந்துட்டேன் !”

“அம்மா ! ஒரு துண்டு மாங்கா கூட வைக்க இடமில்லை !! ப்ளீஸ்…ஆள விடு..!!”

“ஏன் சுஜா ! அவன இப்படி படுத்தற !! கஸ்டம்ஸ்ல அவனோட சூட்கேச தொறந்து பாத்தா படிக்க வந்தியா‌ இல்ல சாப்பிட வந்தியான்னு கேக்க மாட்டானா ??”

“அதெல்லாம் அவங்களுக்கு நல்லாவே தெரியும் ! கலா சொன்னா ! அவ பொண்ணு சிகாகோ போன போது கஸ்டம்ஸ் ஆபீசர் வடுமாங்கா பாக்கெட்டை எடுத்துக் காட்டி …

“Baby mango pickle ! Goes well with rice !! I know “ன்னு சொன்னானாம் ! இதெல்லாம் அவங்களுக்கு இப்போ அத்துப்படி …… ஒண்ணும் சொல்ல மாட்டான் !!”

“அதான் மூக்குப் பொடி தவிர சகலவித பொடியும் பேக் பண்ணி குடுத்திருக்கியே !! போதும் விட்டுடு ”

இப்போ ஆனந்த் அவர் பங்குக்கு ஆரம்பித்து விட்டார் …

“டிக்கெட் .. பாஸ்போர்ட் .. எல்லாம் பத்திரமா செக் பண்ணிக்கோ…

கொஞ்சம் பணத்த சூட்கேசுல வை.. கொஞ்சம் மட்டும் கைல வச்சுக்கோ..இரண்டு பாஸ்போர்ட் காப்பி வச்சிருக்கேன் !! …”

அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே போனார்.. ரகு என்ற ரகுவரன் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாய் தெரியவில்லை.

யாரோ நண்பனுடன் உடன் மும்முரமாய் அஜீத்தின் புது படம் பற்றி பேசிக்கொண்டிருந்தான்..

“டேய் !! .. போதும் பேசினது… மூணு மணிக்கு ஏர்போர்ட்ல இருக்கணும்…

***

ஆனந்த் … சுஜாதாவின் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ரகு என்ற ரகுவரன்..

“இந்த மாதிரி கூட பிள்ளை இருப்பானா ??…..என்று கேட்க வைப்பவன் ….

படிப்பைத் தவிர .. அஜீத் படம் தவிர … வேறு எதுவுமே தெரியாது…

இப்போது M.I.T. யில் முழு உதவித் தொகையுடன் மேற்படிப்பு….

கொஞ்சம் எடுப்பான பல்… சோடாபாட்டில் கண்ணாடி…. !!!!இதெல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாத சமர்த்துப் பையன்…..!!!!

முதல் முறை விமானப் பயணம் …

“பாத்து போடா… செக் இன் பண்ணிட்டு வந்து சொல்லிட்டு போ…நிறைய நேரம் இருக்கு….”

“சரிப்பா !! “

சுஜாவுக்கு இருப்பே கொள்ளவில்லை…

“இவ்வளவு நேரமா ? பாஸ்போர்ட் எடுத்துக்க மறந்துட்டானோ ???

கவுன்ட்டர்ல நிக்கறானான்னு பாருங்கோ ….பெட்டி வெயிட் கூட இருந்திருக்குமோ?? ”

நீதான் அமெரிக்கால எல்லாரும் பட்டினி இருக்காமாதிரி ஊர்ப்பட்ட சாமான அமுக்கி அமுக்கி வச்சு மூடினயே ….”

மாற்றி மாற்றி இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே கட்டை விரலை உயர்த்தி காட்டியபடி வெளியே வந்தான் ரகு !!

“ஆல் செட் ……!!!”

இரண்டு பேர் கண்ணிலும் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது…

***

ஒரு வருஷம் போனதே தெரியவில்லை ….

இதோ.. ரகுவரன் லீவில் வருகிறான்..

“அப்பா !!! ப்ளேன் லேண்ட் ஆயிடுத்து… !! எப்படியும் இமிக்ரேஷன் , கஸ்டம்ஸ் முடிஞ்சு வர ஒரு மணிநேரம் ஆகும் !!

ஐ லவ் யூ டாடி…. லவ் யூ மாம்….!

“அதோ ரகு !!! ரொம்ப இளச்சுட்டானே குழந்த …. “

கொண்டு போன சூட்கேஸை வைத்து தூரத்திலேயை அடையாளம் தெரிந்து விட்டது..

நிஜமாலுமே பாதியாகி விட்டான்..

பல் நன்றாகவே நீட்டிக்கொண்டிருந்தது….

“என்னப்பா ! துரும்பா இளச்சிட்டயே…”

“சாப்பிடக் கூட நேரமில்லாம்மா.. சமச்சாதானே.. சாண்ட்விச்சிலேயே காலம் போறது…

அம்மா ! உன் சாப்பாட்ட ரொம்ப மிஸ் பண்றேன். !!!…”

“படிப்பெல்லாம் நல்லா போறதா ?… ??? பணக்கஷ்டம் ஏதாவது இருக்காப்பா….???”

“கேம்பஸ் ஜாப் இருக்குப்பா ….

இருந்தாலும் தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னுதான்….

ஆனா சூப்பர் யூனிவர்சிடி…!! அதில படிக்க குடுத்து வைக்கணும்…”

ஒண்ணர வருஷத்திலேயே முடிக்கலாம்னு இருக்கேன் !!!…..”

ஒரு வாரம் ஃப்ரெண்ட்ஸ்…. ஃப்ரெண்ட்ஸ் … என்று முகமே மறந்து போச்சு…

“அப்பா ! எனக்கு முக்கியமான இரண்டு உதவி பண்ணனும் !

பல் டாக்டர் கிட்ட போணம் !! Braces கண்டிப்பாக போட்டுக்கணும். அப்புறம் கண்ணுக்கு லேசர் !

அமெரிக்கால millionaires கூட யோசிக்கற விஷயம் …இங்கேயே மூணு லட்சம் சுலபமா ஆய்டும் !

வேலக்குப்போனதும் திருப்பி குடுத்துடுவேன்ப்பா!

Sorry to trouble you !!”

ஆனந்துக்கு பக்கென்றது ! தீடீரேன்று மூன்று லட்சத்துக்கு எங்கே போவது ??

இவன் லீவுக்கு வராமலேயிருந்திருக்கலாமோ !!..
பணத்துக்கும் பாசத்துக்கும் நடுவில் ஊசலாடும் தந்தைமனம் .

“பாவம் ! குழந்த வாயத்திறந்து ஒண்ணு கேட்டதில்லை !! நீ பண்ணிக்கோப்பா !!!

ஹெட் ஆபீசிலிருந்து சேங்ஷன் ஆகிவிட்டது … அப்புறம் அப்பீல் ஏது??

அப்புறம் குளிருக்கு கோட் ., நாலு ஜீன்ஸ் , புது நைக்கே ஷூஸ்.. ! எல்லாம் சேர்ந்து முழி பிதுங்கியது

நல்லவேளை சீக்கிரம் படிப்பை முடிப்பதில் குறியாயிருக்கிறான் ..

எவ்வளவு செய்தாலும் தகும்…

***

நாட்கள் நகர்ந்தன…….

“சீக்கிரம் வாங்க ! வாட்ஸ்அப்பில ரகு ….!

“அம்மா ..அப்பா.. குட் நியூஸ்…. ..
நான் M.S. மூணு மாசம் முன்னாடியே முடிச்சிட்டேன்…

உடனே மெக்கின்ஸில வேலை …. ….. இப்போ வர முடியாது…

வேலைல சேர்ந்து ஆறு மாசம் கழிச்சு H1B விசா ஸ்டாம்ப் வாங்க வரணும்… நீங்க கிராஜுவேஷனுக்கு கண்டிப்பா வரணும் ….”

“முதலில் பிள்ளையாருக்கு ஒரு தேங்கா உடச்சிட்டு வாங்க…”

கிராஜுவேஷனுக்கெல்லாம் போகமுடியவில்லை ….

***

நாளைக்கு ரகு வருகிறான் ..

“என்ன இவ்வளவு நேரம்….இத்தன நேரம் வந்திருக்கணுமே….”

“ஹாய்….டாட்…!!!!

இரண்டு பேரும் எங்க பாத்திட்டிருக்கீங்க…??”

இவன் நிச்சயம் ரகு இல்லை… ஆள் கும்மென்று , ஆறு கிலோ நிச்சயமாக கூடியிருக்கும் !!

Tight T-shirt ! Ray-Ban coolers ! தள்ளு வண்டியில் இரண்டு American Touristor சூட்கேசுகள் … .!!!?!

அரவிந்சாமி சாயல் எப்படி வந்தது ??

முன்னாடி லேசாய் வழுக்கை ஆரம்பித்திருந்தது…. முகம் பளபளவென்று ! இவன் நம்ப ரகுவா ???…

“அம்மா ! என்ன இப்படி இளச்சு.. அப்பா நீங்களும் தான். ..”

ரகுவுடன் ஒட்டிக்கொண்டு பின்னாடியே ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் …

ஏறக்குறைய ரகு வயசு இருக்கும் ..

ஒல்லியான தேகம்… ஜீன்ஸ்…. T-shirt …ஒட்ட வெட்டிய முடி…. பார்த்தால் பையனா பெண்ணா என்று யோசிக்க வைக்கும்…

“டாட் … இது சுரு…. சுருதி…!!!!!

…என்னோட M.I.T. ல படிக்கிறா…தல முழுக்க மூள….போற வழிலதான் வீடு…நாம் ட்ராப் பண்ணிட்டு தான் போறோம்…ஓக்கே . ????”

“ஹலோ ஆன்ட்டி….ஹலோ அங்கிள் !!!”

காரில் கிடைத்த விவரங்கள்……
சுருவின் அம்மா ஒரு மகப்பேறு மருத்துவர் ! தனியாக கிளினிக் வைத்திருக்கிறாள் !

பிரில்லியன்ட் என்று பார்த்ததுமே தெரிந்தது…..!!!

அப்பாவைப் பத்தின விவரமில்லை…

இரண்டு பேரும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டே வந்தார்கள் !!

சுஜாவுக்கு லேசாய் வயிற்றைக் கலக்கி பாத்ரூம் போகவேண்டும் போல் இருந்தது..!!!!

ஆனந்த் ஒன்றையும் கண்டுகொள்ளாமல் டிரைவருடன் மோடி ஜெயிப்பாரா என்று சீரியசாக பேசிக்கொண்டிருந்தார் !

இல்லையென்றால் அவனுக்கு தூக்கம் வந்துவிடும் என்பது ஆனந்தின் லாஜிக். !!!…

அண்ணா நகரில் ஒரு பெரிய வீட்டின் முன்னால் வண்டி நின்றதும் ,

“பை …தாங்யூ ஆன்ட்டி அண்ட் அங்கிள் …பை வரன்….!!!! நாளைக்கு கூப்பிடறேன் என்ன .??”

சுரு உள்ளே போனதும் ,

“முகப்பேர் போங்க….”என்றான் ரகு!!!!.

“ரகு….அவ என்னமோ சொன்னாளே….
வரனா ?????…

“ஆமா .. டாட் … எம்பேரு இப்போ ஏ.ஆர்..வரன் ….. அதாவது… ஆனந்த் ரகுவரன்…. இதுதான் ஈஸியா அவங்களுக்கு வாயில நுழையுது…”

“என்னமோ ஏ.ஆர்.ரகுமான்
தம்பி மாதிரி இருக்கு…..”

அவ பேரு சுருக்கமா …சுரு…”

சுரு பேருக்கேத்த மாதிரி சுருசுருப்பு …. அடிக்கடி வந்து போனாள்!!

நேராய் சமையலறைக்குத்தான் வருவாள்…

கிச்சன் மேடை மேல் சுவாதீனமாய் ஏறி உட்கார்ந்து கொள்வாள்…

“ஆன்ட்டி ….!!எங்கம்மா சமச்சு பார்த்ததேயில்ல… பாவம்…. அவங்க நேரத்தில சாப்பிட்டு கூட பார்த்ததில்லை …. ஹாஸ்பிடல்… கிளினிக்… பேஷன்ட்ஸ் ..பேஷன்ட்ஸ்…..!!!!

வரன் எவ்வளவு நல்லா சமைக்கிறான்…!! ஒரு வத்தக்குழம்பு பண்ணுவான் பாருங்க…!!!

இரண்டு பேரும் நாலு நாள் வச்சு சாப்பிடுவோம்…”

என்று சொன்னவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்….

எனக்கு ஏதோ சரியில்லாத மாதிரி இருந்தது….

ரகு இந்த தடவை இரண்டு பெட்டி நிறைய.. ……

பாதாம் பருப்பு , முந்திரி, முகத்துக்கு க்ரீம் , பெர்ஃப்யூம் , ஆஃப்டர் ஷேவ்…. டேபிள் மேட்.. ஆனந்துக்கு காலணிகள் , டீ.ஷர்ட்ஸ் ,இன்னும் என்னென்ன உண்டோ எல்லாமே…..!!!!

இந்தியா அமெரிக்கா போன மாதிரி இப்போ அமெரிக்காவே இங்கே…. !!!

எல்லாம் டாலர் படுத்தும் பாடு….!!!!

“அப்பா… உங்களுக்கு ஒரு கார் வாங்கலாம்னு இருக்கேன்…என்ன மாடல் பிடிக்கும்னு சொல்லுங்க…”

“ரகு !!! தயவுசெய்து கார் எல்லாம் வேண்டாம்… என்னால மெயின்டெய்ன் பண்ண முடியாது… ஃபோன் பண்ணா ஊபர்…ஓலா….

முன்ன மாதிரி ஒரு கஷ்டமும் இல்லப்பா….”

பிள்ளையின் பாசம் அவரை ரொம்பவே நெகிழச் செய்தது….

***

“ஆனந்த்… நீங்க ஒண்ணு கவனிச்சீங்களா ?? சுரு ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்ட் மாதிரி தெரியல… !!

அவங்கிட்ட கேக்க பயமாயிருக்கு…..”

இதற்கு இரண்டு நாளில் விடை கிடைத்தது…

“அம்மா… நானும் சுருவும் அமெரிக்கா போனதும் ரிஜிஸ்டர் திருமணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்…

அவளுக்கு கோல்ட்மேன் சாக்ஸில் வேலை… சம்பளம் மட்டுமே ஐம்பது லட்சம்… போனஸ் வேற… இங்க கல்யாணம் பண்ணிட்டா விசா பிரச்சினை …!!!!!

ஞாயிற்றுக்கிழமை அவ அம்மாவை கூட்டிட்டு ரெசிடன்சி வரேன்னா…!!!!

நமக்கு மட்டும் ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கோம்….

ஆறு மாசம் கழிச்சு உங்க இஷ்டம்போல எங்க வேணாலும் கல்யாணம் வச்சுக்கலாம்…..”

“ஆனந்த் ! எனக்கு வேடிக்கையா இருக்கு !!!

முதல்ல கல்யாணம் … அப்புறம் ரிஜிஸ்டர் பண்ணனும்னா பண்ணலாம்…!

அப்புறம் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கறதுதானே வழக்கம்….

இப்போ முதல்ல ‘ லிவிங் டுகெதர் …. அப்புறம் ‘ ரிஜிஸ்டர் திருமணம் ‘ அப்புறம் போனாப்போறதுன்னு அப்பா அம்மாவுக்காக கல்யாணம்….”

“சுஜா….அது அந்த மண்ணோட மகிமை… நம்ப கலாச்சாரம் மாதிரி தனி மனித சுதந்திரம் அவங்க கலாச்சாரம்…. டாலர் மட்டும் வேணும்னு சொன்னா எப்படி ???

பையன அனுப்பும் போது நான் இதையும் தான் எதிர்பார்த்தேன்..

அதனால எனக்கு ஒண்ணும் அதிர்ச்சியா இல்லை…. அவனுக்கு சுருவை ரொம்ப பிடிச்சிருக்கு… அவளுக்கும் அவன்கிட்ட அதே பிரியம் .. இதுக்கு மேல வேறென்ன வேணும் ???…..”

இரண்டு தடவை அமெரிக்க விஜயம்…. நயாகரா நீர்வீழ்ச்சி , லிபர்ட்டி சிலை , யோசிமிட்டி பார்க் , கிராண்ட் கன்யன் ….. ஒரு இடம் பாக்கி இல்லை…

வரும்போதெல்லாம் ஐ…. பாட்…, டேப்லெட் .., லேப்டாப் … , பென் டிரைவ் … !!!!!!

வீடு முழுதும் அமெரிக்கா… அமெரிக்கா….!!!!

‘”அப்பா.. உங்க இரண்டு பேருக்கும் க்ரீன் கார்ட் அப்ளை பண்ணியிருக்கேன்.

ஆன்லைனிலேயே ஃபார்ம் எல்லாம் பூர்த்தி பண்ணி அனுப்பிடுங்க..”

இதில் ஆனந்துக்கும் சுஜாவுக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லை….

ஆனந்தின் அம்மா …தொன்னூறை நெருங்கி விட்டாள்… மூன்று பையன்களும் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்ள ஏற்பாடு..

க்ரீன் கார்டுக்கு அமெரிக்காவில் சேர்ந்தாற்போல இருக்க வேண்டியிருக்கும்..இப்பவே தம்பி ஆரம்பித்து விட்டான்…

‘ ம்…ஒவ்வொத்தாரா கழட்டிட்டு போங்க.. கவர்மென்ட் வேல.நாங்க எங்க போறது…’

அம்மாவும் ஒவ்வோரு தடவையும்..

“ஆனந்த்.. அடுத்த தடவை நீ வரும்போது நான் இருப்பேனோ இல்லையோ ??? “என்று இமோஷனல் ப்ளாக் மெயில் பண்ண ஆரம்பித்து விட்டாள்…..

இதேல்லாம் தெரிந்தோ என்னவோ சுஜாவுக்கு எந்த கஷ்ட்டமும் கொடுக்காமல் அவளுடைய பெற்றோர்கள் கயிலாய சிட்டிசன் ஆகி நாலு வருஷம் ஆகிறது….

***

மான்ஹாட்டன்…..!!!!

சுஜாவுக்குத்தான் பொழுது போவது கஷ்ட்டமாய் இருந்தது… ரகுவும் சுருவும் வருவதும் போவதுமாய்…பார்த்து பேசவே நேரம் இல்லை..

ஆனந்துக்கு candy யையும் Toffee யையும் வாக் கூட்டி போகவே நேரம் சரியாக இருக்கும்….

( சுருவின் செல்ல நாய்க்குட்டிகள் ) விட்டால் லைப்ரரி……

சுஜாவுக்கும் வேலைக்கு போகவில்லை என்று ஒரே குறை…

அவளுக்கு தெரிந்ததெல்லாம் வாய்க்கு ருசியாய் சமைப்பது… குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது…

“பேபி ஸிட்டிங் “பண்ணப்போறேன் சுஜா சொல்லிவிட்டாளேயொழிய ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை…

ஆனால் சீக்கிரமே அவளுடைய கனவு நனவானது……

சுருவுக்கு இரண்டு மாதமாம்… அவளுடைய அம்மா சரியாக டெலிவரி சமயத்தில் தான் வரமுடியும் என்று சொல்லி விட்டாள்…

இதற்குள்………..

ஆனந்த் அம்மாவுக்கு சோடியம் குறைந்து இரண்டு தடவை I.C.U…!!

ஆனந்தால் ஒரு தடவைதான் போக முடிந்தது…. படுத்த படுக்கையானதால் இரண்டு நர்சுகள் வீட்டோடு…!!!

ஆனந்தின் தம்பி பெண் கல்யாணம்….!!

பேரனுக்கு ஆண்டு நிறைவு..!!

சுஜாதாவின் வீட்டில் இரண்டு துக்கம்…!!!

ஒன்றுக்கும் போக முடியாமல் ஒரு க்ரீன் கார்டு வந்து மாட்டிக் கொண்டது…. !!!!

***

ஐந்து வருஷமா ஆச்சு அமெரிக்கா வந்து…..!!!

இரண்டு பேத்திகளுக்கு பேபி ஸிட்டிங். …..சுரு வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கிறாள்…..

ஏ.ஆர்…வரன்…….. !!!வழுக்கைத்தலையை எப்படியோ வாரி மறைத்துக் கொள்கிறான்…..

ஆனந்துக்கும் சுஜாவுக்கும் வரவேண்டிய B.P. , சுகர் எல்லாம் சரியாக வந்து சேர்ந்து கொண்டது…

“அப்பா !!! நானும் சுருவும் ஒரு முடிவு பண்ணியிருக்கோம்..!!!

மேகாவும் லேகாவும் இங்க வளர வேண்டாம்னு தோணுது…..

உண்மையைச் சொன்னா கொஞ்சம் பயமா கூட இருக்கு… நாம எல்லோரும் தான் சிட்டிசன் ஆய்ட்டோமே …

நிம்மதியா இந்தியால செட்டில் ஆகலாம்னு இருக்கோம்.. எனக்கு அங்க ஆஃபீஸ் இருக்கு…சுருவுக்கு நல்ல வேலை கிடைக்கும் … !!!

உங்களுக்கும் கச்சேரி , கோவில் குளம்னு ….. ரகு சொல்லிக் கொண்டே போனான்….

நிம்மதியைத் தேடி அலைகிறான்…..

நாங்கள் இப்போது NRI …!!!!

அதாவது ‘Non Resident Indian ‘…..

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பிரஜை……

அமெரிக்காவின் எல்லாவித நன்மைகளையும் பெற்றுக் கொண்டு இந்தியாவின் மிச்சமுள்ள பண்பாடு கலாசாராத்தையும் விட மனசில்லாமல் மீண்டும் இந்தியாவில் வசிக்க வந்திருக்கும்…………..

வேண்டாம்…… விட்டுவிடுங்கள்….!!!!

மும்பையில் லோகண்ட்வாலா காம்ப்ளெக்ஸில் 4000 சதுர அடியில் அபார்ட்மெண்ட்….!!!! ஆளுக்கொரு B.M.W.. !!

சிட்டியின் சிறந்த கான்வென்டில் குழந்தைகள்…!!!!!!

Best of both worlds …..!!!!!!

நடப்பதற்கு சௌகரியமாய் நடைபாதை… …..

சுஜாவும் நானும் காலையிலும் மாலையிலும் தவறாமல் நடக்கிறோம் ….!!!!!

ஏறின உப்பையும் சர்க்கரையையும் குறைக்க வேண்டுமே….!!!!

“ஆனந்த் !! மேகாவும் லேகாவும் எப்படி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டாங்க பாத்தீங்களா …”

“சுஜா… சின்னப் பசங்க நம்பள மாதிரி ரொம்ப யோசிக்க மாட்டாங்க…

They live for the moment….!!!!!

சீக்கிரமே சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி மாறிடுவாங்க…..

அதிருக்கட்டும்… இவர்கள் ஸ்கூல் முடிக்கும் போது நிச்சயம் திரும்பி போகணும்னு நினைப்பாங்கன்னு தோணலயா ….????

நாம ரகுவோட எதிர்காலம் பத்தி யோசிச்ச மாதிரி ரகுவும் சுருவும் நினைக்க மாட்டாங்களா …..???

இது முடியாத தொடர் கதை….!!!!!

மசால் வடைக்கு ஆசைப் பட்டு பொறியில் மாட்டின எலி மாதிரிதான்…..”

“ஆனந்த் உங்க கிட்ட கேக்கணும்னு மனசு உறுத்திகிட்டே இருக்கிற ஒரு விஷயம்……

சிட்டிசனாக நாம பிரமாணம் எடுத்து முடிஞ்சதும் உங்கள் கண்ணெல்லாம் கலங்கி இருந்துதே… ஏன்……?”

“சுஜா…. யாரும் கவனிக்கலைன்னுதான் இத்தனை நாள் நினைச்சிட்டிருந்தேன் …

சுஜா… பிரமாணம் எடுக்கும்போது நம்ப நாட்டோட பந்தம் முடிஞ்சு போச்சுன்னு வெளில வேணா சத்தமா சொல்லிக்கலாம்… !!!!

சொல்லிதான் ஆகணும்…….

ஆனா அது என் மனசிலேயிருந்து வந்த வார்த்தையில்லை … வெறும் வாயிலிருந்து வந்தது…!!!!

பேசாமா oath ceremony யிலிருந்து ஓடிவந்துடலாம்னு கூட நினைச்சேன்…..!!!

கொஞ்சம் அவசரப்பட்டுடோமோ சுஜா…??

இந்த அமெரிக்கன் சிட்டிசன்ஷிப்புக்காக நாம இழந்தது அதிகம்னு எனக்கு தோணுது…!!!!

அம்மாவோட கடைசி காலத்தில கூட இருக்கமுடியலையே. ..!!!!

candy யையும் toffee யையும் வாக் கூட்டிட்டு போய் தினம் அதோட shit எடுத்துப்போட்ட எனக்கு அம்மாவை ஒரு நாளாவது பாத்ரூமுக்கு கூட்டிட்டு போக முடிஞ்சுதா ???

சந்தேகமில்லாம ரகுவும் சுருவும் நம்மள நல்லா பாத்துக்கறாங்க…

ஆனா நமக்கு வேற சாய்ஸே தரலயே…..”

“ஆனந்த்.. நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க…!!!!

நீங்கதானே அடிக்கடி சொல்வீங்க…..

You can’t have the cake and eat it too… !!!

பேசாம கையில இருக்கிற கேக்கை ரசிச்சு சாப்பிடுங்க…!!!

குழந்தைங்க மாதிரி……..

“Just live for the moment……”

மேகாவும் லேகாவும் மேற்படிப்புக்கு அமெரிக்கா கிளம்பி விட்டார்கள்..

“அப்பா… நானும் சுருவும் மறுபடி அமெரிக்கா போலாம்னு முடிவு பண்ணிட்டோம்…

குழந்தைங்க வாரக்கடைசி… , விடுமுறைக்கு அங்க இருந்தா சௌகரியமா இருக்கும்னு நெனைக்கிறாங்க…….

சுருசமைச்சு குடுத்தா வாரக்கடைசியில மேனேஜ் பண்ணிடலாம்… பாவம் அவங்களே சமச்சு….”

“நல்ல யோசனை….. போய்ட்டு வாங்க…”

“என்ன போய்ட்டு வரவா. ..???

நாலு பேரும் தான் போறோம்…

இனிமே உங்கள தனியா விடற பேச்சேயில்ல …..”

ஆனந்தும் சுஜாவும் பேக் பண்ண ஆரம்பித்தார்கள்…வேறு வழியில்லாமல்…!!!!

அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவோமே ….!!!!!

அவங்க அமெரிக்கன் சிட்டிசன்ஸ்….!!!!!!

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *