நாகலிங்கப்பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 1,765 
 
 

காப்பெட் வீதியில் வெயில் இறங்கிப்  பளபளத்தது.

ஐந்து மணிக்கு இந்த வெயில் சற்று அதிகமாயிருந்தது.

கிறீச்சென்ற தடுப்பு விசைக்குக் குறுக்கே ஒரு பூனை, உடல் நடுங்கி நின்ற பின் உடலைச் சாய்த்து அப்பால் பாய்ந்தது.

திகழின் கண்கள் சிறு பதற்றமொன்றை உணர்ந்து பின் ஆசுவாசமாகின.

“கவனமடாப்பா, பூனையைக் கொண்டால் ஆயிரம் பிராமணரைக் கொண்ட பாவம் வந்து சேந்திடும்”  

சாரதியின் ஆசனத்துக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வாணனின் குரல் சாரதியை எச்சரித்தது.

“பிராமணர் எண்டா ஆர் சித்தப்பா…?” சுடர் வாணனைச் சுரண்டியபடி கேட்டான். முன்னால் சாரதியின் இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த திகழின் செவிகளில் சுடரின் கேள்வி ஊசியாய் இறங்கியது.

“பிராமணர் எண்டால் கோவிலிலை பூசை செய்யிற ஆக்கள்.” வாணன் சொன்னான்.

“எனக்குத் தெரியும். கோவில் ஐயரவை தான் பிராமணர், அப்பிடித்தானை சித்தப்பா” நிலா தன் உரத்த குரலால் வாணனை அழைத்தாள்.

முன்புறத்தே வீதி  நகர்ந்து கொண்டிருந்தது. யௌவனம் இறங்கிக் கொண்டிருந்த பருவத்தில் , திகழுக்கு எதனையும் இலகுவாக எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை. மௌனத்தின் மீது திரளும் சிறிய சலனங்களால் அவன் சூழப்பட்டிருந்தான். “பூனை குறுக்காலை போனாக் கூடாதப்பா…” ஞானம்மாவின் குரல் பூனை கடந்து போன சொற்ப நிமிடங்களுக்குப் பிறகு வெளிப்பட்டது.

“சும்மா இருங்கோ அம்மா, எந்த நூற்றாண்டிலை இருந்து கொண்டு என்ன கதை கதைக்கிறீங்கள்?” 

மடியில் உறங்கியிருந்த ஆயிலியைச் சற்றே உயர்த்தி நெஞ்சோடணைத்தபடி   அருள்விழி சொன்னாள்.

“செல்லக்குட்டி நல்ல நித்திரை…” குழந்தையின் நெற்றியில் பொலிந்த மயிர்க்கற்றையை ஒதுக்கிய மலர்விழியின் உதடுகளில் சிரிப்பின் சுழி அரும்பியது.

“வெளிநாடு போறவரைக்கும் இந்த நூற்றாண்டு ஞாபகமில்லை அருளுக்கு, இப்ப தான் ஞாபகம் வந்திருக்குப் போலை…”

“அதெண்டா உண்மை தான்…” வாணன் கூடச் சேர்ந்து சிரித்தான்.

பின்னால் அவர்கள் எதற்குச் சிரிக்கிறார்கள் என்று புரியாமல், திகழின் கண்கள் கறுப்பு நிறக் கார்பெட் வீதியிலும், மனது பிராமணனைக் கொல்லும் பாவத்திலும் நிலைத்திருந்தது. வெண்ணிறப் பூனை கருநிறம் பளபளத்த வீதியில் ,குருதியாய் வழிந்து கொண்டிருக்கும் காட்சி மட்டும் மனதிற்குள் உறைந்திருந்தது.

“ஆயிலிக் குட்டி நித்திரையோ, சித்தி?”

நிலா திரும்பி அருள்விழியிடம் கேட்டாள்.

“ஓம், நீங்கள் ரெண்டு பேரும் ஆய்க்கினை பண்ணினதாலை ஆயிலி களைச்சுப் போய் நித்திரை ஆயிட்டுது…” மலர்விழி நிலாவைப் பார்த்துப் பாவனையோடு சொன்னாள். 

நிலா அலங்கரிக்கப்பட்ட பொம்மை மாதிரி இருந்தாள். சித்தி ஜெர்மனியிலிருந்து கொண்டு வந்த வெள்ளிமணிகள் இழைக்கப்பட்ட, வலை போலும் துணியால் ஆக்கப்பட்ட, பார்ட்டி பிரொக்   அணிந்திருந்தாள். தேவதைத்தனமான அந்த ஆடையை அணிந்து வருவதில் அவளுக்கு அவ்வளவு புல்லரிப்பு.

“அண்ணை, இதுக்கு முந்தி சிவராத்திரிக்கு நித்திரை முழிச்சிருக்கிறீங்களோ…?” வாணன் கேட்டான்.

“சிவராத்திரிக்கெங்கை…” திகழின் வார்த்தைகளில் சலிப்பின் களிம்பு ஊறியிருந்தது. 

“ஆனா, இரவிரவா நித்திரை முழிச்சிருந்திருக்கிறன்…”

“ஓம், படிக்கிற காலம், பெடியளோடை தெரியுற காலம் நித்திரை முழிப்புக்குப் பஞ்சமோ என்ன?”

“சண்டைக் காலத்திலை, ஷெல் அடி விழேக்க இஞ்சை ஆரும் நித்திரை முழிக்காம இருந்தா, அது தான் புதினம்…” என்றாள் மலர்விழி.

“ஓம், அப்பிடியும் ஒரு காலம் இருந்திருக்கு, என்ன…?” என்று யோசனையோடு இழுத்தான் வாணன்.

“நீங்கள்தானை அந்த அடிபாடுகளுக்கை நிற்காமல் தப்பிப்பிழைச்சு ஜெர்மனிக்குப் போட்டீங்கள்” அருள்விழியின் குரலில் சிறிது எள்ளல் இருந்தது.

“ஷெல் அடி எப்பிடிச் சித்தி இருக்கும்?”

சுடர் அருள்விழியைக் கேள்விகளால் உலுப்பினான்.

“சுடர், சித்தியை ஆய்க்கினை பண்ணக் கூடாது, ஆயிலி நித்திரை கலைஞ்சிடும்….” மலர்விழி சுடரை எச்சரித்தாள்.

“ரெண்டு பேரையும் ஆயிலியோடை, ஜெர்மெனிக்கு எடுத்தால் சரியாய் போகும்…” வாணனின் குரல் எழ சுடரும், நிலாவும் பிரகாசித்துக் குதித்தார்கள்.

“கூட்டிக் கொண்டு போங்கோ, அப்பதான் ரெண்டு பேரிண்ட   கொட்டமும் அடங்கும்…” மலர்விழியின் குரலை மேவி,

“என்னை விட்டிட்டு என்னண்டப்பன் போவீங்கள்…?” என ஞானம்மாவின் குரல் எழுந்தது.

“நாங்கள் போய், அம்மம்மாவையும் கூப்பிடுவம்” என்றாள் நிலா.

“நினைப்பைப்பார்…” என்ற மலரின் சிரிப்பு  வாணனுடையதும், அருளுடையதும் குரல்களோடு கலந்தொலிக்க, அது எங்கோ தொலைவிலிருந்து ஒலிப்பதாக மிக மங்கலாகக் கேட்டது திகழுக்கு.

“அப்ப, இந்த முறை சிவராத்திரிக்கு, சுடரும், நிலாவும் நித்திரை முழிக்கப் போகீனை போலை…” வாணனின் குரல் குழந்தைகளைத் தொடர்ந்து சீண்டிக் கொண்டிருந்தது.

“எந்தப்பக்கம் திரும்ப வேணும்….?” சாரதியின் குரலால் உலுப்பப்பட்ட திகழ் பின்னால் திரும்பி 

“எங்கை, வாணன்…?” என்றான்.

வாணன் தேசப்படத்தை விரித்து வைத்துச் சொல்வது போல் திசைகளைச் சுட்டத் தொடங்கினான்.

சற்றுப் பொறுத்து, “ஒவ்வொரு வருசமும் அங்க  போறனீங்களோ…?” என்றான் திகழ்.

“நானோ? கோவிலுக்கோ? ஒரு நாளும் தலை வச்சுப் படுத்ததில்லை. அது என்னெண்டா, அம்மா ஒரு நேர்த்தியை வச்சிட்டா. எனக்குக் கலியாணம் சரி வந்தா, அடுத்த சிவராத்திரிக்கு என்னைக் கொண்டு ஒரு அபிஷேகம் செய்விக்கிறதா. நானும் சின்னனிலையே ஜெர்மனிக்குப் போயிட்டன் தானை, பேசி வாற கலியாணம் ஒவ்வொண்டையும் தட்டிக்கழிக்கிறதைப் பாத்திட்டு அம்மாவும், நான் அங்கை ஆரேன்வெள்ளைக்காரீட்டை இல்லாட்டி வேற ஏதேன் பழக்கத்திலை மாட்டீற்றன் எண்டு நினைச்சுட்டா போலை, அதாலை அப்பிடி ஒரு நேர்த்தி…”   

“கடைசில மாட்டிக் கொண்டது நானாப் போனன்”  அருள்விழி பொய்யாய் நெடுமூச்சு விட்டாள். 

“நேர்த்தி நிறைவேத்துறதுக்கே இவ்வளவு நாள் ஆச்சுப் போலை…” மலர்விழி அங்கலாய்த்தாள்.

“என்ன செய்யுறது,போன வருஷம் ட்ரை பண்ணியும் ‘கோவிட்’டாலை ரிக்கெட் கான்சல் பண்ண வேண்டி வந்திட்டுது. எல்லாம், அம்மா செய்யுற வேலை. கோயிலுக்கே போகாத நான் வந்து ஒரு அபிஷேகம் செய்ய வேண்டி ஆச்சுது…”

சொல்லிக்கொண்டே வாணன் சிரித்தான்.

“உப்பிடித்தான் எல்லாரும் சொல்லுறது.இளமை முறுக்கிலை உப்பிடிச் சொல்லுற ஆக்கள்,அடிபட்டாப் பிறகு தான் கோயிலே கதியாக் கிடப்பீனை. இப்பிடி எத்தினை பேரை நான் கண்டிருக்கிறன்”  ஞானம்மாவின் குரல் முணுமுணுத்தது.

“எந்தக் கோயில்?” திகழ் கேட்டான்.

“அம்மாவுக்குத்தான் தெரியும் எந்தக் கோயிலெண்டு. நான் தான் சொன்னனே, சின்னனிலையே ஊரை விட்டுப் போயிற்றன்”. வாணன் குரலில் ஏக்கத்தை மீறிய பெருமை இருந்தது.

புழுதி படர்ந்த சிறு ஒழுங்கையொன்றில் ஹயஸ் நுழைந்து சிவாலயம் ஒன்றின் முகப்பில் நின்ற போது, திகழின் முகத்தில் யுகமொன்று கடந்த திரை அசைந்தது. இருள் கவிழ்ந்து மூடத் தொடங்கிய அந்த அந்திப் பொழுதில் கோபுர விளிம்புகளில் பலவர்ண ஒளிப்பிரவாகம் கமழ்ந்து தொங்கியது.

“எனக்கு இந்தக் கோயிலை எப்பவோ பாத்த மாதிரிக் கிடக்கு…”

“ஏனப்பா, எப்ப வந்தனீங்கள்…?” என்று மலர் குறுக்கிட்டாள்.

“நீங்கள் என்னை விடப் பரவாயில்லை, கோயிலுக்கெல்லாம் வந்திருக்கிறீங்கள்…” என்றான் வாணன் திகழைப்  பார்த்து முறுவலித்தவாறே. திகழ் வாணனின் முறுவலைக் கவனிக்காமல் யோசித்தான்.

“சின்னனிலை வந்த ஞாபகம், அது இது போலையும் கிடக்கு. வேறையாயும் இருக்கலாம்.”

“ஓமோம், கோயில்கள் எல்லாம் ஒரே மாதிரித் தானை கிடக்கும். இந்த ஊருக்கும் உங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே. நீங்கள் இஞ்சை  வந்திருக்கிறதுக்கு…?” என்றான் வாணன்.

ஞானம்மாவைக் கையைப் பிடித்து மலர் இறக்கிய பிறகு அவர்கள் கோயிலை நோக்கி நடந்தார்கள். கோயில் வாசலருகில் இருந்த குழாயில் அவர்கள் கால்களைக் கழுவிக் கொண்டார்கள்.

உள்ளே ஒலிபெருக்கியில் பக்திப்பாடல்கள் ஒலித்தன.

சனங்கள் கோவிலுக்குள்ளிருந்து வருவதும் போவதுமாயிருந்தார்கள்.

கோயிலுக்கு உள்ளே வாணனின் அம்மாவும், அக்காவும் ஏற்கனவே வந்து அவர்களுக்கு காத்திருந்தார்கள். அவர்கள் உள்ளே போகத், திகழ் கோயில் வெளி மண்டபத்தில் நின்றவாறு மூலஸ்தான மூர்த்தியைப் பார்த்தான்.மெத்தென்ற பூக்களும் சிவந்த தீபங்களின் மென்னசைவும் கொந்தளித்த மனதில் சிறு அமைதியை உண்டாக்கின.

“என்னப்பா, உள்ளை பாக்கத் தெரியேல்லையே? நீங்கள் வந்ததோ, இல்லையோவெண்டு…”

“இல்லை, நான் உள்ளை ஒருக்காலும் வந்ததில்லை, சாமியைப் பாத்துச் சொல்ல ஏலாது. கட்டடங்களும் புதுசாக் கிடக்கு, இரவு வேறை…”

“அப்ப, வேறை ஏதேன் கோயிலுக்குப் போயிருப்பீங்கள்…”

மலர்விழி வாசலில் நின்று கை கூப்பி விட்டு அருள்விழியின் மாமியாரைச் சுகம் விசாரிக்கச் சென்றாள். 

திகழ் வெளியே வந்தான்.

வானத்தில் விண்மீன்கள் பொலியத் தொடங்கின.

இருள் கரிய படலமாய்த் திரண்டிருந்தது.

மாசி மாதத்துப் பனி இன்னும் கொஞ்ச நேரத்தில் உடலை நடுக்குற வைக்கலாம் எனத் தோன்றியது.

ஒரு மூலைக்குள், தேர்முட்டி. புதிய பூச்சுக் கலவை.

தேர் ஒரு கால சாட்சியாக நிமிர்ந்து நின்றிருந்தது.

இருளில் அதன் நிழல் கூட அச்சுறுத்தியது.

அமாவாசை இரவில் இதை விடக் கருந்திரள் வருவதற்கு இன்னும் நேரமிருக்கிறது என நினைத்துக் கொண்டான். இன்று சிவராத்திரி தீபங்கள் அந்த இருளை உறிஞ்சி விடக்கூடும்.

மணியொலி கலகலக்கத் தொடங்கிய போது, முதல் சாமத்துப் பூசை என்பது தெரிந்தது. சுடர் வெளியே ஓடி வந்து இவனைத் தேடினான்.

“பூசைக்கு வரச் சொல்லி அம்மா கூப்பிடுறா…” 

“நான் அடுத்த பூசைக்கு வாறன்…” 

சுடர் வந்த வேகத்தில் திரும்பிப் போனான்.

இவன் வெளியே உலவிய போது, மடப்பள்ளி சாளரத்திற்குள்ளால் அந்தப் பெண்களின் முகங்கள் தென்பட்டன.

கரிய புகை புகைக்கூட்டிலிருந்து, அவிழ்ந்து, அவிழ்ந்து மேலேறியது. சாளரத்திற்குள் சற்றே நரை மேவிய முதிய முகமும், இளமைத் துடிப்பான முகமும் மாறி, மாறி அசைந்து கொண்டிருந்தன. குனிந்து, நிமிர்ந்து, நடந்து விலகி அந்த முகங்கள் நாலைந்து தரம் நோக்கியதோடு மிகப் பரிச்சயமாகின. மடப்பள்ளிக்குள் மோதகங்கள், வடைகள், பொங்கல் என நைவேத்தியத்துக்கான உணவுப்பதார்த்தங்களை அவர்கள் தயாரித்துக்கொண்டிருக்கக் கூடும். எத்தனை தினங்கள், எத்தனை விசேஷங்கள், எத்தனை ஆயிரம் வடைகளையும், மோதகங்களையும், பொங்கலையும் அவர்கள் பொரித்து, அவித்துப் போட்டிருப்பார்கள்?

காலங்காலமாக அந்தக் குடும்பத்துப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட மடப்பள்ளி. அவர்கள் மீதில் பச்சாதாபமொன்று வந்து போன கணத்தில் திடீரென்று இதயத்தில் ஒரு சில்லிப்பு எழுந்தது. வழியில் கண்ட   வெள்ளைப் பூனை போல அந்த சில்லிப்பு விருட்டென்று எழுந்து ஓட முயன்றது.

சாளரத்தில் தோன்றிய நரை செறிந்து, சுருங்கல்கள் நிறைந்த அந்த முகத்திற்குச் சிறிது பளபளப்பை ஊட்டினால், ஏதோ கணத்தில் அந்த முகத்தின் கண்ணீர் ஏன் இவனுக்குத் தோன்ற வேண்டும்? அவன் மனதைக் கலைத்து விட்டு, மீண்டும் சாளரத்தை நோக்கினான். கசியும் வியர்வையும், புகையும் படிந்த அந்த முகத்தில் கண்ணீர் இல்லை. அது அவனது பிரமையா…?

திரும்பத் தேர் முட்டியை நோக்கினான். நினைவுகள் தளும்பின. எதனையும் மீட்டெடுக்க முடியும் போல் தோன்றவில்லை.

ஏதோ ஒரு நூதன வாசம் கமழ்ந்தபடியிருந்தது. ஊதுபத்தி, சந்தனம், அகிற்புகை தவிர்த்து ஏதோ ஒரு பூர்வீக மணம் போல, அந்த வாசனை அவனை ஈர்த்தது.

மணியொலி குலுங்கிக் குலுங்கி அதிர்ந்தபின், நாதஸ்வரத்தின் இனிமை துளித் துளியாகி ஒழுகி ஓய்ந்தது. நிலா விபூதி, சந்தனம் குங்குமத்தோடு வெளியே ஓடி வந்தாள்.

“அப்பா, பிரசாதம் …” என்றவள் அவன் பேசாமலே நிற்பதைக் கண்டு,

“குனியுங்கோ அப்பா…” என்று அவனைக் குனிய வைத்தாள். உள்ளங்கைக்குள் பொதிய வைத்திருந்த சிறு துகள்கள் விபூதி, குங்குமம், சந்தனத்தைத் தன் குளிர்ந்த விரல்களால் அவன் நெற்றியில் பூசி விட்டாள். அவள் விரல்கள் பட்டதும் சற்றே ஆசுவாசமாக உணர்ந்தான்.

“என்ன அண்ணை, வெளிலையே நிண்டிட்டீங்கள்?” வாணன் அவனை நோக்கி வந்தான். மற்றவர்கள் முகப்பு மண்டபத்தின் தூணொன்றின் அருகில் அமர்ந்து கொண்டார்கள்.

ஆயிலி இப்போது உறக்கத்திலிருந்து விழித்திருந்தாள். அவளைத் தூக்குவதும், கொஞ்சுவதுமாக எல்லோரும் அதிலேயே ஒன்றி விட்டிருந்ததைப் பார்த்த திகழ் ” கொஞ்சம் சுத்திப் பாக்கலாமெண்டு நினைச்சன்…” என்றான் வாணனை நோக்கி.

“ஓமோம், நானும் பாக்கத்தான் வேணும், வாங்கோ பாப்பம்…”

சிவப்புக்கரை வேட்டியின் ஒரு நுனியை விரல்களில் பிடித்தபடி அவன் நடந்தான். இவன் எதேச்சையாக மடப்பள்ளி சாளரத்தைப் பார்த்தான். தனியே புகை மட்டும் வெளியேறிக் கொண்டிருந்தது. யாருடைய முகத்தையும் காணவில்லை.

கோயிலின் வடகிழக்குத் திசையில் ஒரு நந்தவனம் இருந்தது. அங்கிருந்து விதவிதமான வாசனைகள் இரவின் வாசனையோடு கிளர்ந்து எழுந்தன.மல்லிகை பூத்திருக்கிறது போலும் என அவன் நினைத்தான். தனியே மல்லிகைக்கானதென அந்த வாசம் இருக்கவில்லை.

“என்னவொரு வாசம் உலகத்திலையுள்ள சென்ற் வாசமெல்லாம் தோத்துப் போம்…” வாணன் மூச்சை இழுத்து ரசித்தான்.

சற்றே குருதி வாசம் ஏறினாற்போலிருக்கத் தொண்டை கமறி இவன் இருமத் தொடங்கினான். 

என்ன வாசம் அது…?

“அப்பா, நானும் உங்களோட வாறன்…”

சுடர் ஓடி வந்து அவன் வேட்டியைப் பற்றினான். 

கொஞ்சத்தூரம் அந்த வாசத்தை உள்வாங்கிக் கொண்டு நந்தவனத்துக்குள் அவர்கள் உலவினார்கள்.

”அது என்னப்பா, பெரிய விளாங்காய் மாதிரிக் காய்ச்சுக் கிடக்கு.?”

நீண்டு உயர்ந்த மரம். சருகு நிறத்தில் உருண்டை, உருண்டையான காய்கள் கிறிக்கெற் பந்தினை விடச் சற்றே பெரிய அளவுகளில் கிளைகளில் கொத்தாக ஓட்டியிருந்தன.

” என்ன மரமண்ணை இது?” வாணன் ஆச்சரியமாய் நிமிர்ந்தான். இருளுக்குள் துல்லியமாகத் தெரியவில்லை. மின் விளக்குகளின் மெல்லிய பளபளப்பில் அவற்றை உணர முடிந்தது. அந்த மரத்திலிருதே அந்த அறியாத வாசம் கிளம்புவதை அவன் சடுதியாக உணர்ந்தான்.சிறு, சிறு குவளைகள் போல வட்ட வட்டமாகச் செவ்விதழ்களும், மஞ்சள் அரும்புகளும் கிளைகள் தோறும் அரும்பியிருந்தது மின்னொளியில் மயக்கமூட்டும் தோற்றமாயிருந்தது.

சடுதியாக நிமிர்கையில் நிறைய மஞ்சள் பாம்புகள் அவனை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான். பாம்புகளின் கண்கள் அவனை உறுத்துப் பார்த்தன.

“நாகலிங்கப் பூ …” அவனையறியாமலே அவன் உதடுகள் மெள்ள உச்சரித்தன. 

“இது தான் நாகலிங்கப் பூ மரமோ…?” சுடர் உற்சாகமாய்க் கூச்சலிட்டான். 

நிலத்தில் சில இதழ்களும், மஞ்சள் நாகமும், லிங்கமுமென உதிர்ந்து கிடந்தன. சுடர் குனிந்து அந்த இதழ்களை எடுக்கப் போனான்.

“அதை எடுக்காதையடா… கீழை போடு” திகழ் கத்தினான்.

“ஏன் அண்ணை, விழுந்த பூத்தானை.”

”விழுந்த பூத்தான், ஆனாலும் வேண்டாம்…”

“ஏன், அப்பிடி.?”

“நாகலிங்கப்பூவை முறைப்படி பூசை பண்ணித்தான் எடுக்க வேணுமாம், இல்லாட்டிப் பெரும் பாவம் வந்திடுமாம்…”

“உது ஆரேன் வேலைவெட்டி இல்லாதவங்கள் கட்டி விட்ட கட்டுக்கதையாயிருக்கும்”.

அவன் சுடரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். அந்த மரத்தில் ஓராயிரம் நாகங்கள் வாசம் செய்வதாக அவனுக்குத் தோன்றியது. ஓராயிரம் பூக்கள், ஓராயிரம் லிங்கங்கள் அவற்றின் மீது கவிந்து காவல் காக்கும் ஓராயிரம் நாகங்கள். அவை அவனைத் துரத்தின. நாவை நீட்டிச் சுழற்றிப்படி அவனையும் அவன் குடும்பத்தையும் பின் தொடரத் தொடங்கின. இருளுக்குள் தடுமாறியபடி  நந்தவனப் படலையைத் திறந்தவன் திரும்பிப் பார்க்காமலே வெளியேறினான். அவன் கரங்களுக்குள் சுடரின் பிடி இறுகிக் கிடந்தது.


காலையின் புலர்வில் நாகலிங்கப்பூக்கள் மரவிருளுக்குள் செந்நிற ஒளியைச் சொரிந்து ஒரு வெளிச்சப் பிரவகிப்பை ஏற்படுத்தின. அந்த மரத்தின் கீழ் பூணூல் அணிந்த படி நின்ற சிறுவனை இவன் அழைத்தான்.

“குருக்கள் ஐயா எங்கை…?” 

“கோயிலுக்குள்ளே…” அவன் புலன் மரத்தின் பூக்களிலிருந்து திரும்பவில்லை.

“பூசை எப்ப முடியும்…?”

“இப்ப முடிஞ்சிடும்…” இவனது கேள்விகளுக்கு அசிரத்தையாகப் பதில் சொல்லிய சிறுவனது கவனம் முழுக்க மரத்திலிருந்த நாகலிங்கப் பூக்களின் அழகில் சொக்கியிருந்தது.

படீரென்று வெடித்த ஒரு சத்தத்தில் திடுக்கிட்டு ஓட எத்தனித்தவனைப் பார்த்து  சிறுவன் சிரித்தான்.  

“அது ஒண்டும் குண்டுச் சத்தமில்லை. இந்தக் காய் தான் விழேக்க அப்பிடி ஒரு சத்தம்”

அப்போது தான் அவன் அந்த நாகலிங்க மரத்தின் குண்டுகள் போலும் காய்களைக் கண்டான். அந்தக் காய் விழுகிற போது எழுந்த சத்தம் எதிர்பார்க்காத நிலையில் குண்டுச் சத்தமாகவே தொனித்ததை உணர்ந்தான்.

சிறுவனைச் சிநேகிதமாகப் பார்த்துப் புன்னகைத்தான்.

“எனக்கு அந்தப் பூவை ஆய்ஞ்சு தருவீங்களோ?”

சிறு விரல்கள் நாகலிங்கப் பூவைக் காட்டின.

“ஓம், அதுக்கென்ன…” அவன் எம்பி ஒரு பூவைக் கையில் ஆய்ந்தான்.

ஒன்று, இரண்டு, மூன்று.

அவன் மூன்று பூக்களை நீட்ட, சிறுவன் பூக்களைப் பக்குவமாக ஆராய்ந்து,  அந்தச் சிறு பூவிதழ்ப் புல்லிகளை விரல்களால் விலக்கியபடி அதிசயித்தான்.

“பூவுக்குள்ளை, முனிவர் சிவலிங்கத்துக்குப் பூசை செய்யீனை. நாகம் லிங்கத்துக்கு குடை பிடிக்குது.”

இவன் ஆவலாய் எட்டிப் பார்த்தான். அதற்கு முன் அவன் அந்தப் பூவைப் பார்த்ததில்லை. அதற்கான எந்த விளக்கத்தையும் அவன் அறிந்திருக்கவில்லை.

“கடவுளே, மந்திரம் எதுவும் சொல்லாமல் நாகலிங்கப்பூவைப்   பிடுங்கக்   கூடாது. என்ன வேலையடாப்பா செய்து போட்டாய்… ” குருக்கள் பதறியவாறு நந்தவனத்துக்குள் நுழைந்தார்.

இவன் நிமிர்ந்தான்.

கண்களில் ஒரு குரூரம் விளைந்தது.

சாரத்தை நெருக்கி மறைந்திருந்த பிஸ்டலை எடுத்தான். அதிர்ச்சியில் மிரண்ட குருக்களின் கண்கள் நடப்பதை மூளைக்குக் கடத்த முதலே, அவரது நெற்றியை நோக்கிச் சுட்டான். அவர் குருதி கொப்பளிக்க நிலத்தில் சரியும் வரை அந்தத் துப்பாக்கிக் குண்டின் சத்தம் நாகலிங்கக் காய் நிலத்தில் விழுந்ததாகவே அந்தச் சிறுவன் எண்ணியிருக்கக் கூடும்.

இவன் வேலிக்குள் பாய்ந்து ஓடியதைக் கண்ட பிறகே, அவன் காலடியில் நாகலிங்கப் பூக்கள் நழுவி விழுவதையும் உணராமல், குருதி சொரிய நிலத்தில் கிடந்த குருக்களை நோக்கி ‘அப்பா’ என்று கத்திக் கொண்டு  ஓடினான்.

இவன் கோவிலின் பின் ஒழுங்கையை நோக்கி ஓடிய போது, மடப்பள்ளி வாசலிலிருந்து  வெளியே வந்த கரியும் புகையும் படிந்த ஐயரம்மாவின் முகத்தில் கண்ணீரும், பதற்றமும் பளபளக்கக் கண்டான்.                                     


“ஏனப்பா, அந்தப் பூவைத் தொட வேண்டாம் எண்டனீங்கள்.”

சுடர் சிணுங்கிக் கொண்டிருந்தான். அதை நிலாவுக்குக் காட்ட முடியாமற் போன தவிப்பு அவனிடமிருந்து. பூர்வ காலம் ஒன்றில் உறைந்து விட்டாற் போல மௌனமாய்ப் போன,  திகழைப் புரியாமல் பார்த்து விட்டு, சுடரை ஆயிலியின் திசை நோக்கிக் கூட்டிப் போனான் வாணன்.

இவன் தேர் முட்டியைப் பார்த்தான். அங்கே ஒரு காலத்தில் வரிசை, வரிசையாய் ஆயுதங்களை ஒழித்து வைக்கக்கூடிய மறைவிடம் இருந்தது. தேர்ச்சில்லுக்குக் கீழ் திமிறிக் கொண்டிருந்த ஆயுதங்களைத் தற்செயலாகக் குருக்கள் கண்டு விட்ட பிறகு, இராணுவம் அவற்றைக் கைப்பற்றிக் கொண்டது.

ஆயுதங்கள்  உயிராயிருந்த காலம்.

உயிரைக் காட்டிக் கொடுத்தவர்கள் உயிர்ப்பலிக்கு ஆளாகாமல் எப்படித் தப்ப முடியும்…?

” அடுத்த பூசைக்காவது உள்ளை வாங்கோ…” மலர்விழி தூணுக்கருகிலிருந்தவாறே இவனைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

” எனக்குத் துடக்கு, 

நான் வரேலாது உள்ளை…

இப்ப இல்லை, எப்பவும்… ” அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.    

உள்ளேயிருந்து, பச்சைப் பட்டுச் சால்வையோடு குருக்கள் வெளி மண்டபத்திற்கு வந்தார். காற்றாட நின்று கோயில் நிர்வாகத்தினரோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தவரது விழிகளை இவன் உற்றுப் பார்த்தான்.

அந்த விழிகளுக்குள் என்றோ ஒருநாள், நாகலிங்கப் பூக்களுக்கு ஆசைப்பட்ட சிறுவனின் விழிகளை இவன் கண்டான்.

– நன்றி: https://solvanam.com, Issue 279, செப்டம்பர் 25, 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *