இப்படிக்கு… நான்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 2,243 
 

அன்புள்ள ஆத்தாவுக்கு…

எனக்கு சாதி மீது பற்றில்லை என்பதால் வேறு சாதியில் கூட மணம் முடித்துக்கொள்ளலாம் என்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் எனக்கு உண்மையிலேயே திருமணத்தில் நம்பிக்கை இல்லாதது மட்டுமில்லாமல் அது சாதியை சார்ந்து இல்லை என்பதையும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். அதனால் எனக்கு மறுபடியும் திருமணம் பற்றிய யோசனைகளை.. அல்லது எச்சரிக்கையை தரவேண்டாம் எனவும் தங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தங்களின் சௌகரியத்தை மட்டும் அவ்வபோது தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன்.

நன்றி..


அன்புள்ள மகனுக்கு..

ஆத்தா எழுதிக்கொள்வது. நீ சொல்லுவது எனக்கு  புரிகிறது. ஆனால் எனக்கு வயதாகிவிட்டது. நீ தனியாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறாய் சென்னையில். அந்த வெய்யில் நகரத்தில் நீ சுயமாக சாப்பாடு செய்துக்கொண்டு அந்த தனியார் கம்பனியில் ஏறக்குறைய நான்கு வருடங்களாக வேலை செய்தபடி இப்படி கடிதம் அனுப்பியபடி பொழுதை போக்குவது எனக்கு என்னவோ கிறுக்குத்தனமாக தோன்றுகிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியலில்லை. வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே வந்து போகும் உனக்கு எங்களை பற்றிய வருத்தம் இல்லை என்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த வருத்தத்தை போக்க நீ உடனடியாக ஒரு கல்யாணத்தை கட்டிக்கொள்ள சம்மதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அந்த உஷாவையாவது திருமணம் செய்துக்கொள்ள சம்மதிக்க வேண்டும் என்றும் பிடிவாதமாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.


அன்புள்ள தந்தைக்கு..

அம்மா எழுதியது போல என்னால் உங்களுக்கு வருத்தமென்றால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காலம் கடந்து விட்டது. திருமணம் என்பது என்னுடைய விருப்பம், தங்களது விருப்பத்துக்காக எதுவும் செய்ய காத்திருக்கும் எனக்கு இந்த ஒரு விழயத்தில் மட்டும் என்னை குறை சொல்லிக்கொண்டே இருப்பது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் என்னை பற்றி சிந்தித்து பாருங்கள். நான் உங்களுடைய கடைக்குட்டி என்றாலும் உங்ளுக்கு செல்லம் என்றாலும் அதற்காக என்னை விட்டுக்கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை. உங்களுடைய இரண்டு மூத்த புதல்வர்கள்.. அதாவது என்னுடைய இரண்டு அண்ணாக்கள் நீங்கள் சொல்லுகிற மாதிரியே உங்களின் விருப்பப்படி திருமணம் செய்து ஆளுக்கு இரண்டு குழந்தைகளுடன் சந்தோழமாக இருப்பதோடு உங்களையும் சந்தோழப்படுத்துகிறார்கள் என்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு போதுமானது. முப்பத்தியேழு வயதானாலும் நான் இன்னமும் என்னை வயதானவனாக கருதவில்லை. எனக்கு பிடிக்கும்போது நான் உங்களை கேட்காமலேயே திருமணம் செய்துக்கொள்வேன். ஆனால் அது நடக்கலாம். நடக்காமலும் போகலாம். இதுவரை ஒரு திருமணத்தை பற்றி எந்த எண்ணமும் எனக்கு தோன்றவில்லை. யாரையாவது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும் எனக்கு தோன்றவில்லை. இனிமேல் நடக்கும் விழயங்களை பற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆகையால் நீங்கள் என்னை பற்றியோ அல்லது நான் சென்னையில் இருந்துக்கொண்டு வேலை செய்வதை பற்றியோ வெய்யிலை பற்றியோ குறிப்பிடாமல் வேறு ஏதாவது எழுதுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி..


அன்புள்ள தம்பிக்கு..

பெரியண்ணா எழுதிக்கொள்வது..

நீ எழுதிய கடிதத்தை படித்தேன். இதற்கு முன்பும் இப்படி கடிதங்களில் ஒரு சில வார்த்தைகள் நீ தெரிவித்திருந்தாலும் அதை விளையாட்டுத்தனமாக எழுதுகிறாய் என்று நினைத்துக்கொண்டேன். உன்னுடைய அண்ணி கூட மிகவும் வருத்தப்படுகிறார்கள். நீ தனியாக இருப்பதாகவும் உனக்கு ஒரு துணை நிச்சயம் அவசியம் என்றும் உன் அண்ணி உன்னை பற்றி பேசாத நாட்களே இல்லை என்பதை நீ அறிவாய். நீ இங்கே வரும்போது ஒரு நாள் மட்டுமே இருந்துவிட்டு போவது கூட உன் அண்ணிக்கு பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் உனக்கு ஒரு குடும்பம் இருக்குமோ என்று கூட நாங்கள் தவறாக நினைத்துக்கொண்டோம், ஆனால் இப்போது அப்படி இருந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றுகிறது. உனக்கு உடம்புக்கு ஏதாவது ஒன்று என்றால் யார் கவனிப்பார்கள்..? தைரியம் தேவைதான். ஆனால் இந்த தைரியம் உடம்புக்கு ஒத்துவராது எனபதை நீ புரிந்துக்கொள்ள வேண்டும். நல்ல பதிலாக தருவாய் என நினைக்கிறேன். பிறகு.. இது ரகசியமாக இருக்கட்டும். உனக்கான சொத்து பாகத்தை எங்களையும் மீறி எங்களுக்கு தெரிவிக்காமல் அப்பா விற்க ஏற்பாடு செய்வதாக கேள்வி. அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் பயமாக இருக்கிறது. உன்னுடைய சொத்து உனக்குதான் சொந்தம். வேறு யாருக்கும் விற்கவோ வாங்கவோ உரிமையில்லை. ஆதலால் பத்து ஏக்கர் அளவிலான அந்த இடத்தை பாதுகாப்பது என்னுடைய கடமை. ஆனால் எத்தனை நாளைக்கு இதை என்னால் சரியாக செய்யமுடியும் என்பதை யோசித்து பார்த்து நல்ல முடிவாக எடுப்பாய் என நினைக்கிறேன்.

நன்றி..


அன்புடைய  பெரியண்ணாக்கு..

நீங்கள் என் மீது மிகுந்த அன்புடையவராக இருக்கிறீர்கள் என்பதும் அண்ணியும் அவ்வாறே என்றும் நான் அறிவேன். அண்ணிக்கு நீங்கள் சொல்லிதான் புரிய வைக்கவேண்டும். காரணம் அண்ணி நீங்கள் சொன்னால் புரிந்துக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன். நான் ஒரு நாள்தான் அங்கு தங்கினாலும் எனக்கு அதற்கு மேல் தங்குவதற்கான எனக்கான சூழ்நிலை இல்லை என்பதும் தங்களுக்கு தெரியும் என நான் நினைக்கிறேன். இதற்காக நான் மிகவும் என்னுடைய பணியை விரும்புவதாகவோ அல்லது ஊரில் இருக்க பிடிக்கிவில்லை எனவோ எடுத்துக்கொள்ளாதீர்கள். காரணம் நான் அப்படிப்பட்டவன் இல்லை. பணிச்சுமை காரணமாக மற்ற நாட்களில் அந்த விடுமுறையை நல்லபடியாக கழிப்பதற்காக நான் நிறைய இடங்களுக்கு சென்று வருகிறேன். அப்போது கூட தனியாக பேருந்திலேயே பயணம் செய்கிறேன். என்னால் தனியாக இதற்கென ஒரு காரை வாங்க முடியும் என்றாலும் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் பேருந்து பயணத்தை விரும்பி செய்கிறேன். இதன் மூலம் பேருந்தில் உடன் பயணிப்பவர்களை பற்றி தெரிந்துக்கொள்வதோடு அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் அறிந்துக்கொள்கிறேன். மேலும் பேருந்தில் எப்போதும் கூட்டமாக இருப்பதால் குடும்பத்தோடு பயணிக்கும் உணர்வையும் அது தருகிறது. இரயிலில் பயணிக்கும்போது கிடைக்காத சந்தோழம் பேருந்து பயணத்தில் கிடைக்கிறது. அதனால் இரயில் பயணங்களை கூட தவிர்த்து பெரும்பாலும் பேருந்து பயணத்தை விரும்பியே செய்கிறேன் நான். பிறகு.. என்னுடைய சொத்தை பற்றி கவலைப்படாதீர்கள். அதற்கு அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள். அந்த சொத்து பூர்வீக சொத்து. அது என்னுடைய கையை விட்டு போகாது. நான் என் முன்னோருக்கு செய்யும் நல்ல விழயமாக அந்த சொத்து இருக்கும். அந்த இடத்தில் கூடிய விரைவில் மலர் பண்ணையை ஆரம்பித்து அருகிலுள்ள ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பை அள்ளித்தரும் வகையில் அதை வியாபாரமாக செயல்படுத்த இருக்கிறேன். என்னுடைய பயணம் கூட என்னுடைய பணி சார்ந்த விழயமாக இல்லாமல் இருக்க கவனமாக இருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தின் போது அந்த மலர் பண்ணைக்கான விவரங்கள் கிடைத்தால் கவனமாக சேகரித்துக்கொள்கிறேன். இப்போது கூட  மலர் பண்ணைக்கான ஆக்கபூர்வமான பணிகளில் எப்போது இறங்குவது என யோசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த அருகிலுள்ள மக்கள் இதன் மூலம் சந்தோழப்படுவார்கள். அவர்களுடைய வருவாய் இதன் மூலம் உயரும். மேலும் அவர்களுடைய வாழ்க்கை தரமும் உயரும். ஆதலால் இங்கு சொத்து விற்பனை என்கிற பேச்சுக்கே இடமில்லை. உங்களுக்கு ஏதாவது தவறான தகவல் கிடைத்திருக்கலாம் என நினைக்கிறேன். அதை நம்பாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி..


அன்புடைய தம்பிக்கு..

சின்ன அண்ணா எழுதிக்கொள்வது..

நீ பெரிய அண்ணாவுக்கு எழுதிய கடிதத்தை படித்தேன். அது என்னுடைய மனைவி அதாவது உன்னுடைய சின்ன அண்ணியின் மூலம் கிடைத்தது. அதில் இருந்து உன்னுடைய சொத்து விழயங்களை பற்றி  அண்ணா எழுதியிருந்ததை பார்த்து அதிர்ச்சியாக இருத்தது. உன்னுடைய சொத்தை நீ சொன்னது போல உனக்கு தெரியாமல் ஏதும் செய்திட இயலாது. அதை விற்க ஏற்பாடு செய்வதாக அப்பா மீது வீண் பழி சுமத்தி அண்ணா அப்பாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பார்க்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால் உன்னுடைய சொத்து மீது அவருக்கு ஒரு கண் இருப்பது போல தெரிகிறது. அது பற்றி அப்பாவிடம் பேசி உன்னை சரிக்கட்டி பத்து ஏக்கரில் பாதியையாவது பெற்றிடவேண்டும் என்று காய் நகர்த்தியிருப்பார் போலிருக்கிறது. ஆனால் அப்பா அதை கண்டித்திருப்பார் என நினைக்கிறேன். அதனாலேயே அண்ணாவுக்கு அப்பாவின் மீது கோபம். அதை திசை திருப்பி உனக்கு அப்பாவின் மீது வெறுப்பும் கோவமும் வருவதற்கான சதியாக நான் இதை பார்க்கிறேன். காரணம் அண்ணா உன்னுடைய நிலத்தின் பாதுகாவலனாக காட்டிக்கொளவதை வைத்து பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. இந்த கடிதம் ரகசியமானதாக இருக்கட்டும். எனக்கு இது பற்றி கடிதம் ஏதும் எழுத வேண்டாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வயதாகிவிட்டது. உன்னுடைய நிலம் நீ இல்லாமல் அப்பாவின் பாதுகாப்பில் இருந்தாலும் முன்பு போல அவர் அங்கு அடிக்கடி செல்வதில்லை. வாரத்துக்கு மூன்று நாட்கள் நான்தான் என்னுடைய நிலத்திற்கு செல்லும்போது உன்னுடைய நிலத்தையும் பார்வையிட்டு வருகிறேன். பத்திரமாக இருக்கிறது. ஆனால் ஏதாவது விவசாயம் செய்யாமல் விட்டிருப்பது நல்லதல்ல. நீ விரும்பினால் நான் விவசாயம் செய்து விளைவதை உன் பெயரில் விற்று உன்னுடைய சேமிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். நான் ஏதும் பிரதிபலன் எதிர்பார்க்கமாட்டேன் இந்த விசயத்தில். ஆங்காங்கே நீ பனை மரம்.. தென்னை.. மாமரம்.. முருங்கை என்று நிறைய மரங்களை வைத்திருந்தாலும் ஒரு காடு போல வளர்ந்து எதற்கு இப்படி என்று யோசிக்க தோன்றுகிறது. உள்ளே பசுமையாக தென்பட்டாலும் உடனடி பலன் ஏதுமில்லாமல் வீணாக போவது போல தோன்றுகிறது. மேலும் தண்ணீரே இல்லாமல் அந்த பசுமைக்கு காரணம் நீ அமைத்துள்ள மழை நீர் வடிகால் வசதிதான் என்பதை அறியும்போது நீ திட்டமிட்டுதான் இந்த பத்து ஏக்கருக்கான பசுமை பண்ணையை அமைத்திருக்கிறாய் என்பது புரிகிறது. மேலும் மலர் பண்ணை பற்றியும் சொல்லியிருக்கிறாய். இப்போது உள்ள பசுமையும் அந்த  மலர் பண்ணையும் ஒத்து வருவதை பார்க்கும்போது இது நீண்ட கால திட்டமாக முன்பே மலர் பண்ணைக்கான முன்னேற்பாட்டு பணிகளை துவங்கிவிட்ட மாதிரியும் தெரிகிறது. எப்படி இருப்பினும் முதலாளி என்று ஒருவர் இல்லாமலிருப்பது வருத்தம் தரக்கூடியது. நீ நம்பினால் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து நீ அங்கு தைரியமாக இருக்கலாம். பிறகு.. உன்னுடைய சின்ன அண்ணி உன்னை விசாரித்ததாக தெரிவிக்க சொன்னார்கள்.

நன்றி..


அன்புள்ள சின்ன அண்ணாவுக்கு..

தாங்கள் தெரிவித்தது போல பண்ணை விழயம் என்னுடைய நீண்ட கால திட்டமாகும். அருகிலுள்ள மக்களை பயன்படுத்தும் நோக்கத்திலேயே இந்த பண்ணையை ஆரம்பிக்க இருக்கிறேன். அப்போது அந்த பகுதியில் உள்ள அந்த ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அந்த பண்ணை உயர்த்தும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர்கள் நம் ஊரில் வேலை செய்யுமிடத்தில் ஒரு இயந்திரமாக நடத்தப்படுவது சின்ன வயதிலிருந்தே எனக்கு உறுத்திக்கொண்டிருக்கிறது. ஏன் அவர்களை நாம் நம் வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்து வெளியில் நிறுத்தி பேசி ஒருமையில் வாடா போடா என்று அழைத்து வயதானவர்களை கூட புண்படுத்தும் வகையில் திட்டி நம்முடைய அதிகாரத்தை காட்ட வேண்டும் என்கிற உறுத்தலுக்கு பதில்தான் என்னுடைய பண்ணையில் அவர்கள் வேலை செய்யும்போது அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் சுதந்திரமாகவும் இருக்கும். இது நம் கிராமத்தில் நம் வீட்டில் ஆரம்பித்து ஊரின் ஒரு எல்லை வரை பரவலாக இருப்பது எனக்கு தெரியும். நான் இதற்கு எதிரானவன் என்றும் நீங்கள் அனைவருமே உட்பட ஊரிலும் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நான் பிரயாணம் செய்யுமிடத்தில் இதையெல்லாம் ஒரு சில இடத்தில் கண்கூடாக பார்க்கும்போது சலிப்பாக இருக்கிறது. ஆரோக்கியமான சமுதாயத்தில் நான் வாழ்ந்துக்கொண்டிருக்கவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் அப்பாவும் அம்மாவும் எனக்கு கற்றுக்கொடுத்த விழயங்களை தற்போது நினைத்து பார்க்கும்போது பெரும்பாலான விழயங்களை தவிர மற்றவைகள் என்னுடைய கேள்விகளுக்கு பதில் தருவதாக இல்லை. ஆக ஒரு சராசரி மனிதனாக அந்த கற்பித்தல் என்னை உருவாக்கியிருக்கிறது என்பதை நினைத்து பார்க்கும்போது அது என் வீட்டிலிருந்தே  ஆரம்பமாகிறது என்பதை யோசிக்கும்போது எனக்கு திருமணம் ஆனால் என்னுடைய குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை முன்னெச்சரிக்கையாக தீர்மானிக்கும் அளவுக்கு இருக்கிறது.

நான் அந்த பண்ணையில் அவர்களோடு அவர்களாக மாறப்போகிறேன். அவர்கள் மனதில் நான் உயர்ந்தவன் பிறப்பில் என்கிற அடையாளத்தை அழித்து அவர்களை போலவே நானும் என்றும் பணமும் சொத்தும் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது என்கிற வித்தியாசத்தையும் உணர வைக்கப்போகிறேன். இதன் மூலம் எனக்குள் இருக்கும் தேடலின் ஒரு பகுதியை சாந்தி செய்கிற மாதிரி இருக்கும். சென்னையில் இருக்கும் வெய்யிலை விட அந்த மனித பாகுபாடு அனலாக இருக்கிறது எனக்கு. சின்ன அண்ணியை நானும் கேட்டதாக சொல்லுங்கள். அண்ணாவின் பெண்ணுக்கும் உங்களுடைய இரண்டு பையன்களுக்கும் நல்லபடியாக வளர வாழ்த்துக்கள். ஒரு சித்தப்பாவாக நான் அவர்களோடு நெருக்கமாக இல்லாவிட்டாலும் அவர்களும் என் வீடும் ஊரும் என்னை வளர்த்த மாதிரியான அடையாளங்களுடன் வளராமல் சுயேச்சையாக வளரவேண்டும் என்று எப்போதும் நினைத்துக்கொள்கிறேன். இப்போதெல்லாம் ஒரு சந்தேகம் தோன்றுகிறது. அதாவது ஒரு சில தவிர்க்க முடியாத அடையாளங்களுடன் வாழ்வது எளிதாக இருப்பது போலவும் அடையாளமில்லாமல் மனிதனாக வாழ்வது கடினமாக இருப்பது போலவும் தோன்றுகிறது. நகரத்தில் இருப்பதால் இது கனமாக தெரியவில்லை. ஆனால் ஊரில் இருக்கும்போது அந்த கனத்தை அதிகமாகவே உணருகிறேன். அதனால்தான் என்னால் ஊரில் ஒரு நாளைக்கு மேலே இருக்க முடியவில்லை. அந்த ஊரை விட்டு கிளம்பும்போது இறுக்கமான இடத்திலிருந்து வெளியேறுவது போல இருக்கிறது. பேச்சு.. மூச்சு கூட சுதந்திரம் பெற்றது போல இருக்கிறது. காற்றில் கூட எனக்கு அங்கு ஒரு சில விரும்பத்தகாத அடையாங்களை உணர முடிகிறது. தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அப்படி நினைத்துக்கொண்டால் அது நிச்சயமாக என்னுடைய தவறான சிந்தனையாக இருக்காது. பிறகு ஒரு சில விழயங்களை குறிப்பிட்டு தனக்கு கடிதம் எழுதவேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அதனால் நானும் நேரடியாக எதையும் குறிப்பிடாமல் பொதுவாக எழுதியிருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் யாருக்கும் எந்த பொறுப்பும் என் விழயத்தில் தேவையில்லை என்றும் அதாவது அந்த பொறுப்புக்கு உரியவன் நான் என்பதால் நானே கவனமாக இருப்பேன் என்றும் சொத்து விழயத்தில் அலட்சியமாக இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. அண்ணாவை பற்றி குறிப்பிட்டிருந்தது  சரியான தகவலா என்று தெரியவில்லை. அப்பா இது பற்றி என்னிடம் பேசியதில்லை. இதற்கு மேல் இதைப்பற்றி எழுத தோணவில்லை.

நன்றி..


அன்புடன் மாமாவுக்கு..

உஷா எழுதிக்கொள்வது. நான்தான் என்று தெரிந்து ஆச்சரியமாக இருக்கும் உங்களுக்கு. ஆனால் எனக்கு பல விழயங்கள் உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றுவதால் தங்களின் முகவரியை அத்தையிடம் வாங்கி எழுதுகிறேன். அவர்கள் தாங்கள் கோபித்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படி தோண்றவில்லை. தங்களை உங்கள் வீட்டில் மற்றவர்களை விட ஒரு படி அதிகமாகவே பார்க்கிறேன். ஏதோ ஒரு வித்தியாசம் உங்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து காட்டுகிறது. என்னவென்று சொல்ல தெரியவில்லை. நான் இப்போது எழுதுவது நம் திருமணத்தை பற்றி.

அதாவது என்னுடைய திருமணம் மற்றும் உங்களுடைய திருமணத்தை பற்றி. நம் திருமணம் என்கிற ஒற்றை வார்த்தைக்கு அர்த்தம் கிடைக்கவில்லை என்பதால் பிரித்து எழுதுகிறேன். இப்படி எழுதுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் உங்களை நான் ஒரு சில நாட்களுக்கு எதிர்கால கணவனாக சுமந்திருக்கிறேன். ஏதோ அது நடந்துவிடும் என்பது போல. ஆனால் அப்படி நடக்கும் என நம்பி விளையாட்டுத்தனமாக இருந்துவிட்டேன். முறைப்பெண்ணாக இருந்தாலும் சொந்தம் என்றாலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் கற்பனை என்பதில் நியாயம் இருக்கவேண்டும் என்றும் உணர இரண்டு வருடங்கள் எனக்கு தேவைப்பட்டது. அதாவது இரண்டு வருடங்களாக நான் காத்திருந்து இப்போதுதான் நிஜம் புரிகிறது என்று தோன்றுகிறது. கற்பனை சுகமாக இருப்பதால் அதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அதிலேயே இரண்டு வருடங்களை ஓட்டிவிட்டேன். ஆனால் அந்த இரண்டு வருடங்களில் உங்களை புரிந்து கொண்டதை விட நான் என்னை புரிந்துக்கொண்டதே அதிகம். என்னுடைய ஆசையை.. இயலாமையை.. தோல்வியை.. காத்திருப்பை.. நம்பிக்கையை..

எனக்காக தங்களது வீட்டில் கூட நம்பிக்கையை விதைத்தார்கள். அவர்களே சொல்லிவிட்டார்களே என்பது கூட நம்மை பற்றின கற்பனைக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உறுதியாக இருந்துவிட்டீர்கள். இப்போது வரைக்கும். திருமணம் வேண்டாம் என்று. என்னை வேண்டாம் என்று சொல்லவில்லை. அது வரையிலும் சந்தோழமாக இருக்கிறது எனக்கு. இப்போது வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பார்க்கட்டுமா என்று கேட்காமலேயே ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு என்னிடம் அப்படி கேட்பதில் இருக்கும் தயக்கம் புரிகிறது. அவர்கள் என்னுடைய கஷ்டத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள். என்னுடைய கற்பனையை கூட. என்னுடைய ஏமாற்றத்தை கூட. அதனாலேயே அதிலிருந்து வெளிய வருவதுதான் ஒரே வழி என்பது போல அதற்கு மாற்றாக வேறு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது நான் என்ன செய்ய? தெரியவில்லை. சுய அனுதாபம் ஏற்பட்டுவிட்டது. என் மீது எனக்கு கோபம் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஆனால் ஏமாளியாக உணருகிறேன். தாங்கள் திருமண விரும்பமில்லாமல் ஒதுங்கியே இருக்கிறீர்கள் என்று தெரிந்தும் இரண்டு வருடங்களை போக்கிவிட்டது என்னை நானே ஏமாற்றிக்கொண்டது போல உணருவதால் ஏமாளியாக உணருகிறேன். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் அப்படிப்பட்டவரும் இல்லை. இப்போது இரண்டு வருடங்களாக உங்களுடன் வாழ்ந்துவிட்டதாகவே உணருகிறேன். ஒரு சில நாட்கள் என்று சொன்னது கூட நாகரீகமாக கருதிதான். ஆனால் வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று தெரிந்த பிறகு அந்த வாழ்க்கைக்கு மரணம் நடந்துவிட்டது என்பது போல உணருகிறேன். வேறு மாப்பிள்ளை என்பது எனக்கு இரண்டாவது கணவர்தான். இந்த உலகத்துக்கு ஒரு நாள் பார்த்து அடுத்து நாள் கட்டிக்கொண்டு அதற்கடுத்த நாள் முதலிரவை முடித்து வைப்பது பழகி விட்டது. ஆனால் உள்ளுக்குள் எத்தனை பெண்கள் பிடித்தமானவர்களை தாண்டி முன்னே பின்னே பார்த்தறியாதவர்களுடன் தங்களுடைய வாழ்க்கையையும் விருப்பத்தையும் தொலைக்கிறார்கள் என்று நினைத்து பார்த்தால் பாவமாக இருக்கிறது. அந்த பாவப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி என்று நிச்சயமாக எனக்கு தெரியும்.

அதற்கு நிச்சயமாக நீங்கள் காரணம் இல்லை என்பதும் எனக்கு தெரியும். ஏனென்றால் நாம் ஒருவருக்கொருவர் காதலர்கள் இல்லை. நான் சொந்தத்தில் ஒரு முறைப்பெண். அவ்வளவுதான். நிச்சயமாக நானும் உங்களை ஒரு தலையாக காதலிக்கவில்லை. விரும்பினேன். அவ்வளவுதான். காதலுக்கும் விருப்பத்துக்கும் வித்தியாசம் இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. காதலை பற்றி உண்மையாக காதலிப்பவர்களுக்குதான் தெரியும். அவர்களின் உணர்வுகள் வேறு மாதிரியாக இருக்கும். இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கு பிரிவு என்பது தோன்றினால் தங்களையே இழப்பது நியாயமானது என்றாலும் நான் அதையெல்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. உலகத்தில் ஏதாவது ஒன்றுக்கு அந்த உயிர் பயன்படலாம். ஒரு குழந்தையை வளர்க்க.. ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சை போட.. ஒரு வயதான தம்பதிக்கு ஆதரவு தர.. ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்ற.. இப்படி எத்தனையோ இருக்கும்போது ஏன் காதலை இறுதிப்படியாக கொள்ள வேண்டும்..? ஆனால் நான் உங்களை காதலிக்கவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் அந்த இன்னொரு மாப்பிள்ளையை ஏற்றுக்கொள்வேன். இன்னொரு என்கிற வார்த்தையை கவனியுங்கள். ஒருவரை தாண்டி அந்த இன்னொருவருக்கான தேடல் ஆரம்பித்து விட்டது. படிப்படியாக நான் தங்களை மறந்துவிடுவேன் என நினைக்கிறேன். தாங்கள் இங்கு ஊருக்கு வரும்போது அந்த ஒரே நாள் இருக்கும்போது தங்களை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் வீட்டை தாண்டி வருவது சிக்கலாக இருக்கும் என்பதால் தவிர்த்து விடுவேன். இனி நீங்கள் வந்தால் அந்த எண்ணம் வராது. வரவும் கூடாது. ஆனால் ஒரே ஒரு ஆசை இருக்கிறது. நீங்கள் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று. அப்படி சொல்ல எனக்கு உரிமை இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் மூன்றாவது நபர் சொல்லுகிற மாதிரி கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். உண்மையாக சொன்னால் நான் மூன்றாவது நபர்தான். சொந்தம் என்பது நாமாக உருவாக்கிக்கொள்வதுதானே. உங்களுடைய அந்த எதிர்கால மனைவிக்கு வாழ்த்துக்கள்.

நன்றி..


அன்புடன் அம்மாவுக்கு..

உங்கள் கடைக்குட்டி மகன் எழுதிக்கொள்வது. நீங்கள் அவ்வபோது உஷாவை பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அவ்வளவுதான் எனக்கு தெரியும். நான் உஷாவை பார்த்திருக்கிறேன். உஷாவை தெரியும். ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கிறேன். அதெல்லாம் ஒரு நிகழ்வு. அவ்வளவுதான். ஆனால் தாங்கள் அந்த பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து என்னை பற்றிய ஒரு உறுதியில்லாத செய்தியை ஆழமாக அவர்களின் மனதில் படிய வைத்து இப்போது என்னை குற்றவாளி கூண்டில் நிறுத்தி இருக்கிறீர்கள் என தோன்றுகிறது. உஷாவின் கடிதத்தை பார்க்கும்போது எனக்கு அவர்களுடன் நேரில் பேசவேண்டும் போல தோன்றுகிறது. அவர்களுக்கு இப்படி ஒரு காத்திருப்பு இருக்கும் என்று எனக்கு தெரியாது.

அவ்வபோது உஷாவை பற்றி சொல்லி பெண் பார்க்க வேண்டும் என்று சொல்லுவீர்கள். இரண்டு வருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. உஷா என்கிற பெயர் உஷாவின் கடிதத்துக்கு பிறகுதான் எனக்கு பதிவாகிறது நன்றாக. அவர்களின் கடிதத்தில் அவர்களின் தைரியமும் பக்குவமும் தெரிகிறது. காதல் ஏதும் தெரியாமல். அப்படி ஒரு உணர்வை கூட காதலிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்லியிருப்பது அவர்களின் புரிதலை காட்டுகிறது. கடைசியாக நீங்கள் எழுதின கடிதத்தில் கூட உஷாவை பற்றி குறிப்பிட்டிருந்தது போல இருந்தது. உடனே அதை எடுத்து பார்த்தேன். உண்மைதான். அந்த உஷாவுக்கு நல்லவனாக ஒருவன் அமையவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன். அப்படியே அமைவான். பிறகு அம்மாவுக்கு ஒரு முக்கியமான விழயம். என்னுடைய நிலம் சம்பந்தமாக அண்ணாக்களுக்கு பிரச்சனை இருக்கும் போலிருக்கிறது. அது என்னுடைய நிலம் என்பதையும் அதில் நாம் தலையிடக்கூடது என்பதையும் இரண்டு பேருமே மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. நான் வெளியில் இருப்பதும் குடும்பம் இல்லாமல் இருப்பதும் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் நான் அதன் மீது ஒரு கவனத்தோடு இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனக்கு குடும்பம் இல்லாவிட்டால் என்னுடைய சொத்து கை மாறிவிடும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம். அவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும்.. ஏன்.. நீங்கள் கூட அப்படி நினைக்கலாம். சொத்துக்காக திருமணம் செய்வதை விட பெரிய முட்டாள்தனம் ஏது இருக்க முடியும்..? அப்படியானால் எனக்கு பிறகு சொத்தை யார் அனுபவிப்பது என்கிற கேள்விக்கான பதில்தான் அப்படிப்பட்ட திருமணங்கள் என்றால் எனக்கு வேறு வழி கிடைக்காதா என்ன..?

ஊருக்கு பயன்படுகிற மாதிரி நிலத்தை மாற்றியமைப்பது என்பது வேறு. நிலத்துக்கான சொத்துரிமை வேறு என்பது எனக்கு தெரியும். அதனாலேயே பின்னாடி சிக்கல் வரக்கூடாது என்பதற்காக திருமணம் என்கிற விழயத்தை அல்லது குடும்பம் என்கிற விழயத்தை இழுக்கிறார்கள் எனபது எனக்கு தெரியும். எனக்கு இதற்கு மேல் திருமணம் என்று ஒன்று ஆகாவிட்டால் அந்த சொத்தை குடும்பத்துக்கே திரும்பி தந்துவிடுவேன் என்பதை அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் அது ஒரு வழிமுறைதான். ஒரு அறக்கட்டளை மூலமாக நிலத்தை தொடர்ந்து பண்ணை வழியாக பயன்பாட்டில் இருக்க செய்யவும் யோசிப்பேன். அது ஒரு வழிமுறை. இதனால் அந்த அறக்கட்டளை சிறப்பாக செயல்படவேண்டும் என்றுதான் நினைப்பேனே தவிர அது சிறப்பாக நடந்தால் பண்ணை சிறப்பாக நடக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இப்படி சொல்லுவதுன் மூலம் உங்களுக்கும் அப்பாவுக்கும் மற்றவர்களுக்கும் கோவமோ அல்லது எரிச்சலோ வரும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் அந்த சொத்தை நீங்களே திரும்ப பெற்றுக்கொள்ளலாம். எனக்கு உறவுகள் மட்டுமே போதுமானது. எதிர்காலத்தை பற்றி எனக்கு தெரியவில்லை. குடும்பத்தை பற்றி திரும்ப.. திரும்ப பேசுவது எனக்கு சலிப்பை தருகிறது. எதுவும் நிச்சயமில்லை இதற்கு மேல். என்னை நானே கட்டாயப்படுத்திக்கொள்வது நான் விரும்பாதது. ஆகையால் முடிவை உங்கள் பக்கமே விட்டுவிடுகிறேன். அண்ணாக்களுக்கு திரும்ப நிலத்தை ஒப்படைத்து சரி பாதியாக பங்கிட்டு எடுத்துக்கொண்டால் சந்தோழமே. அவர்கள் அதை விரும்புவதை விட முழுசாக தானே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை பார்க்கும்போது எனக்கு ஒரு தங்கையோ அக்காவோ இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

அப்படி இருந்திருந்தால் அவர்களுக்கு தந்திருப்பேன் இடத்தை. சின்ன அண்ணா என்னுடைய இடத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை தன்னிடம் தருமாறு கேட்பதில் அக்கறை ஏதும் தென்படவில்லை. பெரிய அண்ணாவுக்கு போட்டியாக தெரிகிறது அவருடைய கோரிக்கை. மொத்தத்தில் எனக்கு குடும்பம் இல்லாதது அவர்களுடைய உண்மையான முகத்தை தோலுரித்து காட்டுகிறது. பெரும்பாலும் எல்லாருமே ஒரு முகமூடிக்குள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் அது ஒரு கட்டத்தில் முகமூடி கிழியும்போது அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துகிறது என்பதும் நானும் புரிந்துக்கொண்ட உண்மை. அப்படி பார்த்தால் இந்த சோதனையெல்லாம் தேவைப்படத்தான் செய்கிறது. மற்றவர்களின் உண்மையை புரிந்துக்கொள்ள. இதையெல்லாம் படித்துவிட்டு இந்த கடிதத்தை கிழித்துவிடவும். அப்பாவிடம் கூட காட்ட வேண்டாம். ஆனால் அது சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு குடும்பத்துக்கு கடிதம் எழுதும்போது அது பரவலாக எல்லாருக்கும் தெரியத்தான் செய்யும். அதுவும் நம்முடைய குடும்பம் கூட்டுக்குடும்பமாக இருப்பதால். ஆகையால் அது அடுத்தவர்களின் கைக்கு போவதற்குள் கிழித்துவிடுவது சிறந்தது. இல்லையென்றால் முகமூடி கிழிந்து நிர்வாணமான சங்கடத்தில் அண்ணாக்களுக்கு உள்ளேயும் எனக்கும் இந்த கடிதம் பெரிய பிரிவை ஏற்படுத்தும். கடிதத்தை வழக்கம்போல நீங்கள்தான் வாங்குவீர்கள் என்பதாலும் அந்த உஷா விழயத்தை தெரியப்படுத்த வேண்டும் என்கிற ஆதங்கத்திலும் இதை எழுதுகிறேன்.

நன்றி..


அன்புடன் மகனுக்கு..

உன் அப்பா எழுதிக்கொள்வது..

நீ எழுதியிருந்த கடிதத்தை படித்து நீ சொன்னமாதிரி கிழித்து எரிகின்ற குப்பையில் போட்டுவிட்டேன். நீ சரியாக எழுதியிருந்தாலும் அந்த கடிதத்தில் அண்ணன் தம்பிகளை பிரிக்கும் வாசகங்கள் இருப்பதால் அது நிஜமாகவே நடந்துவிடுமோ என்கிற பயத்தில் கடிதத்தை எரித்துவிட்டேன். இனிமேல் இப்படிப்பட்ட விழயங்களை கடிதத்தில் தெரிவிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கிறேன். இந்த வீட்டில் உன் மீது நிறைய மரியாதை இருக்கிறது எனக்கு. உன் அண்ணன்களை விட. காரணம் அவர்களிடம் இருக்கும் முகமூடி உன்னிடம் இல்லை. அது எனக்கு பிடித்திருக்கிறது. நீ இந்த வீடு மற்றும் இந்து ஊரின் சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதை தாண்டி சுயமாக இருக்க முயல்வது சின்ன வயதிலேயே எனக்கு தெரியும். ஆனால் அந்த சுயம் ஒரு சராசரியான மகனை எனக்கு தராமல் போனதில் எனக்கு நிறைய வருத்தம். அப்படி இருந்திருந்தால் உனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் கூட ஆயிருக்கும். நான் என்னுடைய கடைக்குட்டி பையனின் பையன்களை அல்லது பாப்பாக்களை கொஞ்ச விரும்புகிறேன். நான் தாத்தாவாக முழுமையாக இல்லாததும் பாட்டியாக முழுமையாக இல்லாமலிருப்பதும் உன் அம்மாவுக்கு கூட தெரிந்திருக்கிறது.

இதற்கு மேல் இதைப்பற்றி பேசுவது நீ இனி எடுக்கும் முடிவை பொறுத்தே இருக்கும், முதலில் உன்னிடமிருந்து தகவல் வந்த பிறகே உன்னுடைய திருமணத்தை பற்றி இனி பேசுவேன். இந்த கடிதம் என் கைக்குதான் முதலில் கிடைத்தது.  போஸ்ட் மேன் வந்தபோது நான்தான் வெளியில் உட்கார்ந்திருந்தேன். நல்லதாக போய்விட்டது. உன் அம்மா படித்திருந்தால் நிறைய வருத்தப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு இப்போது மன அளவில் கூட ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்ந்து ஓரமாக ஒதுங்கி ஓய்வில் இருப்பவர்கள் நாங்கள். எங்களுக்கு குழந்தைகள்தான் இப்போதைக்கு சந்தோழம். பெரும்பாலும் எல்லா வீட்டிலேயும் பேரன் பேத்திகளோடு இருப்பதே பெரியவர்களுக்கு சந்தோழமாக இருக்கும். அதனால்தான் நாங்கள் முழுமையான தாத்தா பாட்டியாக இல்லை என்று சொல்லுகிறேன். அப்பறம் அந்த நில விழயமாக ஒரு சில விழயங்களை உன்னிடம் மறைத்துவிட்டேன். அதற்கு காரணமும் குடும்பத்தில் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதால்தான். உன் பெரிய அண்ணன் வெளிப்படையாகவே உன்னிடமிருந்து சொத்தை ஒரு விலைக்கு வாங்கி அவன் பெயரில் தந்துவிடுமாறு எனக்கு அழுத்தம் கொடுத்தான். இதை ஆரம்பித்தபோது அவன் மீது எனக்கு கோவமாக வந்தது. ஆனால் அந்த கோபம் பிறகு உன் மீது திரும்பியது. காரணம் நீ திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பதுதானே என்று. உன் அண்ணனிடம் நிச்சயமாக உனக்கு திருமணம் நடக்கும் என்று சொல்லி அதை அடக்கிவிட்டேன். ஆனாலும் அவ்வபோது மறைமுகமாக அவன் பேசிக்கொண்டேதான் இருக்கிறான். அவனுக்கு அடுத்து இரண்டாவது தம்பி இந்த விழயத்தில் முந்திக்கொள்வானோ என்கிற பதபதப்பு இருக்கிறது. ஆனால் அது நிஜமே. இரண்டு பேருமே ஒரே மனநிலையில்தான் இருக்கிறார்கள். பெரியவன் வெளிப்படையாக சொல்லிவிட்டான். சின்னவன் பூனை போல பதுங்கி கவனத்தை காட்டுகிறான். அவன் சூசகமாக என்னிடம் சொல்லும்போது இனி அடிக்கடி தம்பியின் நிலத்து பக்கமாக போய் உடம்பை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தானே இனி பார்த்துக்கொள்கிறேன் என்றும் அதை பற்றி உன்னிடம் தெரிவித்து விட்டதாகவும் அதற்கு நீயும் சம்மதித்து விட்டதாகவும் சொல்லுகிறான். இதை பற்றியெல்லாம் நான் உன்னிடம் விசாரிக்கவில்லை. எல்லாம் திருமணம் வரைக்கும்தானே என்று விளையாட்டுத்தனமாக இருந்து விட்டேன். மேலும் திடீரென்று நீ நிலத்தை விற்றுவிட்டால் என்ன செய்வது என்கிற விழயமும் அவர்களை துரத்துகிறது. எனக்கே கூட அப்படி நடந்துவிடுமோ என்கிற பயம் இருக்கிறது. என்னிடம் சொல்லாமல் ஏதும் செய்யமாட்டாய் என்று தெரிந்தாலும் அந்த பத்து ஏக்கர் நிலம் அனாமத்தாக இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. ஒரு அனாமத்துக்கான சொத்து அனாமத்தாகத்தான் முடியும். நாலு பேருக்கு பயன்படும் என்றாலும் அந்த சொத்தை யார் நிர்வகிப்பது என்பதில் போட்டா போட்டி வந்து கடைசியில் யாரோ ஒருவருக்கு அந்த சொத்து போய் சேர்ந்துவிடும் ஆகையால் இந்த குழப்பம் எனக்கும் இருக்கிறது என்பதை வெளிப்படையாக உன்னிடம் சொல்லுவதில் தயக்கமில்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.

அதை இப்போதுதான் உறுதியாக சொல்ல முடிகிறது. உன்னுடைய திருமணம் என்பது நிச்சயமில்லை என்பதால். சொத்தை உன் பெயருக்கு எழுதிவிட்டதால் இனி அது உன் விருப்பம் என்று எனக்கு வேடிக்கை பார்க்க தோணவில்லை. உன் அண்ணன்களுடைய விழயம் அப்படிதான் எனக்கு உணர்த்துகிறது. இந்த நிலத்து விழயமாகவும் இனி நான் பேசப்போவதில்லை. அந்த பண்ணை.. வேலை வாய்ப்பு.. ஏழைகளுக்கான வாழ்வாதார உயர்வு என்று பேசுவதும் அதை இப்போது ஆரம்ப நிலையில் செயல்படுத்திக்கொண்டிருப்பதும் நல்லதே. நான் சாதிக்காரன்தான். என்னை அப்படித்தான் என்னுடைய அப்பா. அம்மா வளர்த்தார்கள். நான் என்னுடைய பையன்களையும் அப்படித்தான் வளர்த்திருக்கிறேன். பத்தோடு பதினொன்றாக இருக்கவே விரும்புகிறேன். தங்க ஒரு வீடும் சாப்பிட சாப்பாடும் பேசுவதற்கு மனைவியும் வீடு நிறைய குழந்தைகளும் இருந்தால் போதுமானது என்று என் உலகத்தை வைத்திருக்கிறேன். உன்னுடைய உலகம் வேறு என்று எனக்கு தெரியும். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் நீ இருக்க விரும்புவதுதான் எனக்கு உன் மீதான மரியாதைக்கு காரணம். அந்த மரியாதை என்றும் மாறாது. அந்த பண்ணை முன்னேற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். சொத்துக்காக நீ உன்னுடைய திருமண முடிவை மாற்றிக்கொள்ளமாட்டாய் என்பது எனக்கு தெரியும். காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

நன்றி..


அந்த கடிதங்களை எடுத்து வைத்துவிட்டு பத்திரமாக பழைய நினைவுகளின் அடையாளமாக பத்திரப்படுத்தி பீரோவை மூடிவிட்டு வெளியே வந்தபோது அந்த பண்ணையின் ஒரு முனையில் பெரிய பசுமை வீட்டின் முன்பு நிற்பது நன்றாக தெரிகிறது. என் முன்பு ஒரு காடு விரிந்துக்கிடக்கிறது பத்து ஏக்கரில். இன்னும் பத்து ஏக்கரை தொடர்ச்சியாக வாங்குவதற்கு முயற்சி நடந்துக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே பல வித நிறங்களில் பூக்களும் செடிகளும் தெரிகிறது. நிறைய பெண்களும் ஆண்களும் பூக்களின் சேகரிப்பில் இருக்கிறார்கள். அவர்கள் என்னை பார்த்து மரியாதை தருகிறார்களே தவிர நடிக்காமல் கூனிக்குறுகாமல் இருப்பது ஆறுதலாக இருக்கிறது. என்னை பற்றி அவர்கள் நன்றாக புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களின் பார்வையில் தெரிகிறது.

அந்த பார்வையில் வேலை கிடைத்திருப்பதும் அது சொந்த ஊரில் மரியாதைக்குரிய வேலையாக இருப்பதும் தங்களை மனிதர்களாக உணரும் நன்றியும் தெரிகிறது. அவர்களின் குடும்பத்தோடு ஒருவனாக நானும் மாறிவிட்டேன். என்னுடைய மனைவியும் என்னுடைய இரண்டு கொஞ்சம் வளர்ந்த பாப்பாக்கள் கூட..

என்னுடைய மனைவியின் முகத்தில் சந்தோழத்தை பார்க்கிறேன். என் மனைவியை விட நான் எனக்கு இப்படி ஒருத்தி துணையாக அமைந்ததை சந்தோழமாகவே கருதுகிறேன். பண்ணைக்கு வேலைக்கு வருகிறவர்கள் எனக்கு தரும் மரியாதையை என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தருவதும் என் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து குழந்தைகளை கொஞ்சுவதுமாக இருப்பதும் எனக்கு இன்னமும் சந்தோழத்தை தருகிறது. என்னுடைய உலகத்துக்குள் தொடர்ந்து நான் என்னை தக்கவைத்து வாழ்ந்துக்கொண்டிருப்பதாக உணரும்போது அந்த சந்தோழம் இன்னும் அதிகமாகிறது.

சின்ன பாப்பா அப்போது சிரித்தபடியே கொஞ்சம் முன்புறம் அந்த கோழியை பிடிக்க வேகமாக தடுமாறியபடி ஓட முயற்சிக்கிறது.

பக்கத்தில் இருந்த என் மனைவி பாப்பாவை பிடிக்க பின்னாடியே ஓடி கைகளை நீட்டி தடுமாறியபோது நான் வேகமாக எச்சரிக்கை தரும்போது கூட சந்தோழமாகவே சொல்லுகிறேன்..

“பாத்து உஷா..”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *