கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,805 
 
 

நான் அந்தக் கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகத்தான் போனேன். லீவைஸ் கால் சராயும் பழுப்பு நிற டி-ஷர்ட்டுமாக நான் மட்டும் வித்தியாசமாகத் தென்பட்டேன். எல்லோரும் மயில் கண் வேஷ்டியும் அங்கவஸ்திரமும் அணிந்து சிவப் பழமாகக் காட்சியளித்தார்கள்.
“”வாடா அம்பி, ஏன் லேட்டு?” என்றார் சாம்பன் மாமா.
“”இல்ல மாமா , பாஸ்போர்ட்டு விஷயமா கோயம்புத்தூர் வரைக்கும் போயிருந்தேன்”
“”சரி… சரி… வா வந்து உட்கார்”
கோவிலின் வாகன சாலை முன்பு இருந்த கல்மண்டபத்தில் அன்று பிரம்மோத்ஸவ கமிட்டி கூடியிருந்தது. இரண்டு வாரத்தில் தொடங்கவிருக்கும் பிரம்மோத்ஸவத்தைப் பற்றி விவாதிக்கவே அந்த சந்திப்பு. அப்பா காலமான பிறகு ஊர் விஷயங்களிலும் கோவில் கமிட்டி மீட்டிங்குகளிலும் நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பங்கு கொள்வேன். பணி நிமித்தமாக ஐந்தாண்டுகள் அமெரிக்காவில் இருக்க நேர்ந்தது. ஊர் வரும் போதெல்லாம் கட்டாயமாக ஊருக்கும் எனக்கும் மிச்சமிருக்கும் பந்தத்தை உயிர்ப்பிக்க இது போன்று நிகழ்வுகளில் கண்டிப்பாக பங்கு கொள்வேன்.
“”சரிப்பா. எல்லாரும் பொறுமையா கேளுங்கோ. முன்ன மாதிரி எல்லாம் பிரம்மோத்ஸவம் நடத்தற நிலமையில நம்ம இல்ல. பொறுப்பா எடுத்து பண்ண காரியகாராளும் யாரும் இல்ல. போன ரெண்டு மாசமா வசூலான நிதில நாக்கக் கூட வழிக்க முடியாது. கோவில் பிரம்மோத்ஸவதுக்கு காசு குடுங்கோனு சொன்னா யாரு தர்றா? இதோ, அந்த கீழத் தெரு பட்டாபிராமன் ஐம்பது ரூபா தரான். இந்த மாதிரி தான் எல்லோரும் பண்றா. மொத்தமா வசூல் ஆனது முப்பத்தி எட்டாயிரத்து சொச்சம் தான். அதனால இத வெச்சுண்டு என்ன பண்ண முடியுமோ, அவ்வளவு தான் இந்த வருஷம்” என்று பேசி முடித்தார் பொருளாளர் நீலகண்டன்.
சுவர் ஓரமாக நின்று கொண்டிருந்தான் சுரேஷ். அப்போது தான்அவனைப் பார்த்தேன்.சிரித்தான். ஊருக்கு வந்து பத்து நாட்கள் ஆகியும் சுரேஷைப் பார்க்கவே இல்லை. இளைத்திருந்தான். எவ்வளவு வருஷம் கழித்துப் பார்த்தாலும் அவன் கண்ணில் இருக்கும் தேஜஸ் அப்படியே இருக்கும். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு வேதம் படிக்க பாலக்காட்டில் ஒரு பாடசாலையில் அவன் அப்பா சேர்த்துவிட்டிருந்தார். நான் அமெரிக்கா கிளம்பும் போது வழியனுப்ப விமான நிலையத்துக்கே வந்திருந்தான் பாலக்காட்டிலிருந்து. இப்போது கோவிலில் அர்ச்சகராக இருக்கிறான் என்றும் கல்யாணமாகி பையன் பிறந்து விட்டதாகவும் அம்மா ஒரு முறை ஸ்கைப்பில் பேசிய போது சொன்னது ஞாபகம் வருகிறது.
“”ஆமா. இப்ப யார் ஊருல இருக்கா? எல்லாரும் பெங்களூரு மெட்ராஸ்னு ஒவ்வொரு திக்குக்குப் போய்ட்டா. சாமிய சப்பரத்துல தூக்கி வெக்க ஆளில்ல. போன வருஷம் மகா கொடுமை. தேர் இழுக்க ஆள் இல்லை. தேர் நிலை சேர மணி பத்து ஆயுடுத்து. ஆனா பாருங்கோ போஜனத்துக்கு மட்டும் சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும் ஆஜர். வெட்கக் கேடு” சாம்பன் மாமா மூச்சிரைக்க பேசி முடித்தார். அப்போது எல்லோருக்கும் காப்பியும் ரிப்பன் பக்கோடாவும் பரிமாறப்பட்டது. இரண்டு முழுங்கில் காப்பியைக் குடித்துவிட்டு விஸ்வேஸ்வரன் தொடர்ந்தார்.
“”இப்ப முடிவு பண்ணி இருக்கறது என்னன்னா, பிரம்மோத்ஸவம் குறித்த தேதியில தொடங்கும். கல்யாண உத்ஸவம், வசந்தோத்ஸவம், பாரி வேட்டை எல்லாம் உண்டு. தேர் வடம் பிடித்தல் இந்த வருஷம் வேண்டாம்” என்று சுருக்கமாகப் பேசி முடித்தார்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நூறு வருடப் பாரம்பரியம் அது. சோமாஸ்கந்தர்,விசாலாட்சி அம்பாள் என இரு பிரம்மாண்டத் தேர்கள். தேர் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் வீதிக்குப் பெயரே தேர் வீதி. தேர் அன்று வெளியூரிலிருந்து மக்கள் வந்து வணங்கிப் போவர். மிட்டாய்க் கடைகளும், சன்னக் கட்டை போடுவோருக்கு, நீர் மோர் பந்தலும், பலூன் வியாபாரிகளும், பட்டுப் பாவாடை கட்டிய பெண்களும் என எட்டு வீதியும் திருவிழாக் கோலம் பூண்டு விடும். விசாலாட்சி அம்பாளின் தேர் கொஞ்சம் சிறியது. இழுத்தால் சட சடவென்று வீதி முக்கிற்கே வந்து விடும். பெரிய தேருக்குத் தான் சன்னக்கட்டை போட வேண்டும். சிறுவர்களை எல்லாம் சின்னத் தேர் இழுக்க விட்டு விடுவார்கள். சன்னக்கட்டை போடுவதற்காகவே சீக்கிரம் பெரியவனாக ஆக வேண்டும் என்று பல முறை ஏங்கி இருக்கிறேன். பெரியவனானதும் சன்னக் கட்டை போட்டு ஒரே மணி நேரத்தில் கடை வீதி மேட்டைக் கடந்து நிலை சேர்த்துவதே என் ஆண்மைக்கு நான் கொண்ட சவாலாக இருந்தது. கோடை காலம் என்றாலே தேர் நாள் தான் ஞாபகத்துக்கு வரும்.
“”சாரி கம் அகைன், தேர் கிடையாதா? என்ன மாமா இவ்வளவு சாதாரணமா சொல்றேள்?” என்றேன்.
“”யாரு நம்ம மதுசூதனன் மகனா? ஏன்டா அம்பி இந்த லாஸ் வேகஸ்னு ஏதோ சொல்றாளே அங்க ஒரு தரம் போயிட்டு வந்தாலே ஜென்ம சாபல்யம் அடைஞ்ச மாதிரினு சொல்றா. போனாயோ நீ?” நீலகண்டனின் ஹாஸ்யத்திற்கு பொலபொலவென எல்லோரும் சிரித்தனர்.
“”தட்ஸ் வெரி ஃபன்னி. பட் மாமா தேர் வேண்டாம்னு எப்படி இவ்வளவு சாதாரணமா சொல்றேள்? எங்க தாத்தாவோட தோப்பனார் காலத்திலிருந்து தேர் உண்டுன்னு பாட்டி சொல்லிக் கேள்வி. நிதி போறலேனா போய் வெளியூர்ல இருக்குற நம்மூர்காராகிட்ட கேட்போம். இல்லாட்டி அறநிலையத்துறையை அணுகுவோம். தயவு செஞ்சு சடால்னு இப்படி ஒரு முடிவுக்கு வராதேள்” என்றேன் .
“”உனக்கென்னடா தெரியும்? நீ எப்போ ஊர்ல இருந்துருக்கே? சாப்ட்வேர் அமெரிக்கானு நீ பாட்டுக்கு கிளம்பிட்டே. ஊர் விஷயம் ஒண்ணாவது தெரியுமா நோக்கு? தேர் சக்கரம் இருக்கே, அது கடைசியா மாத்தினது 1943 இல . இப்ப மாத்த காசு கேட்டா யார் தர்றா? முனிசிபாலிட்டில பர்மிஷன் வாங்கவே போன தடவ என் பாடு உன் பாடா போய்டுத்து. அதுவும் இல்லாம கடை வீதில தேர் போக இப்போ வழியே இல்ல. வியாபாரிகள் எல்லாம் ஆக்ரமிச்சுண்டுட்டா. இடிக்கச் சொன்னா போராட்டம் பண்ணுவா. அப்பறம் தேர் நாள் அன்னிக்கு எட்டு வீதி முழுக்க கொறஞ்சது அஞ்சு மணி நேரம் ஈ.பீ.ல பெர்மிஷன் வாங்கி பவர் கட் பண்ணனும். இப்போ இருக்கற கஷ்டத்துல இது வேற. ஆசாரிக்கெல்லாம் குடுக்க எங்க காசு? அத விடுப்பா. சன்னக் கட்டை போட, தேர் வடம் பிடிக்க ஜனம் எங்கே இருக்கு? சொல்லு. காசு குடுத்து அசலூர்காராளத்தான் கூட்டிண்டு வரணும். அமெரிக்கால இருந்து வந்தமா, கொடிவேரி போய் குளிச்சமா போனமான்னு இரு . பெரியவா பேசும் போது குறுக்க பேசிண்டு … போடா” என்று எரிந்து விழுந்தார் சாம்பன் மாமா .
“”சுரேஷா கேட்டுக்கோ. மூணாம் தேதி கிராம சாந்தி. கருப்பராயன் கோயில் பூசாரி கிட்ட பேசிடு. நீயும்ஆக வேண்டியதப் பாரு” என்று முடித்தார் விஸ்வேஸ்வரன்.
கூட்டம் முடிந்து நானும் சுரேஷும் நந்தவனம் நோக்கி நடந்தோம். அரச மரத்தடி விநாயகர் சந்நிதி திண்ணையில் உட்கார்ந்து கொண்டோம்.
சுரேஷ், “”இருடா கொய்யாக்கா அடிச்சுட்டு வரேன்” என்று குச்சியை எடுத்துக் கொண்டு கொய்யா மரம் நோக்கி நடந்தான். அதே நடை. இடது காலை சற்று நொண்டியவாறு கிளாஸ் ரூமிலிருந்து கார்பெண்டரி வகுப்புக்கு நடந்து வருவான். கார்பெண்டரியிலும் கிராப்டிலும் அவனை அடித்துக் கொள்ள ஆளில்லை. சுரேஷுக்கு எல்லாமே கோவில்தான். சிறுவயதில் பள்ளி முடிந்ததும் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு ஐயப்ப குருக்களிடம் ருத்ரம் படிக்க வந்துவிடுவான். பிரதோஷ காலங்களில் தேங்காய் உடைப்பது, விபூதி தருவது, மார்கழி மாதமானால் மடப்பள்ளியில் வெண் பொங்கல் கிண்டுவது முதற்கொண்டு எல்லா வேலையும் பார்ப்பான். தேரின் போது பெரிய தேரில் ஏறிக் கொள்வான். தீபாராதனை காட்டுவான். கீழிருந்து தேங்காய் பழம் எடுத்துக் கொண்டு விறுவிறுவென மேலே ஏறுவான். சன்னக் கட்டையை தொடர்ந்து போடவேண்டிய தருவாயில் மேல் நின்று இடுப்பில்கட்டி இருக்கும் துணியை மேல் நோக்கி கர கரவென சுத்துவான். எதிர்வரும் மின்கம்பி கலசத்தின் மீது இடிக்காதவாறு முன்னரே இறங்கிப் போய் மின்கம்பி செல்லும் மொட்டை மாடி மீதேறி ஆயக்காலை வைத்து கம்பியைத் தூக்குவான். தேர் நிலை சேரும் வரை ஓயவே மாட்டான். நிலைக்கு வந்ததும் “”நமப் பார்வதி பதயே, ஹர ஹர மகாதேவா” என்று தொண்டை கிழியக் கோஷமிடுவான் .
“”இந்தாடா” என்று ஒரு கொய்யாக் காயை வேஷ்டியில் துடைத்துக் கொடுத்தான்.
“”என்னடா கொடுமையாய் இருக்கு தேர் இல்லாத ப்ரம்மோத்ஸவமா? சுத்தப் பேத்தலா இல்லை” என்றேன்
“”ஆமாடா. கொஞ்ச நாளாய் இப்படித்தான். இப்போ ஊர் முன்ன மாதிரி இல்ல. விவசாய நிலம் எல்லாம் பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சுட்டா. தொழில் இல்லை. நம்ம தலைமுறை ஆட்கள் யாருமே இல்ல. எல்லாரும் மெட்ராஸ், பெங்களூருன்னு இருக்கீங்க. கோவில் ஒழுங்கு இல்லாமலேயே போய்டுத்து”
“”அதுவும் சரி தான். ஏதேதோ காரணம் எல்லாம் சொல்றா. அதை எல்லாம் கடந்து உற்சவத்த நடத்தத் தானே கமிட்டி இருக்கு. அவாளே இப்படி பேசினா எப்படி பாரு, மத்த கோவில் தேர் எல்லாம் பீ.ஹெச். ஈ. எல். ல சொல்லி இரும்புச் சக்கரமும். டிராக்ஷன் பிரேக்கும் பண்ணிண்டுட்டா. நமக்கென்ன கேடு?” என்றேன்
“”யாரு காசு தர்றா சொல்லு. நீ தருவ. நான் தருவேன். அவ்வளவு தான். கோவிலோட அருமை யாருக்கும் புரியறது இல்லை. நமக்கெல்லாம் இதெல்லாம் பண்ணனும்னு யாரு கத்துக் கொடுத்தா? பிரம்மோத்ஸவம் முடிஞ்சு மஞ்ச நீர் ஆட இப்போ பசங்களே இல்ல தெரியுமோ? நான் மட்டும்தான் போன தரம் சாமி சப்பரத்த இழுத்துண்டு போனேன். மஞ்ச நீர் ஆட பசங்க இல்லன்னு ஒரே ஒரு பலி பீடக் கல்லை எடுத்து வெச்சு அது மேல தான் எல்லார் வீட்டு மஞ்சள் நீரையும் ஊத்தினேன். நம்ம ரொம்ப ரசிச்சுப் பண்ணின விஷயமெல்லாம் கண் முன்னாடி குரூரமா அழியறத பார்க்கவே கஷ்டமா இருக்குடா. இதுக்கு காரணம்னு யாரச் சொல்லணும்னு என் அறிவுக்கு எட்டல. அப்படி இதெல்லாத்தையும் விட்டுட்டு எல்லாரும் எதை நோக்கி ஒடறான்னும் தெரியல. ஈஸ்வரோ ரக்ஷத்து”
பிரம்மோத்ஸவம் ஆரம்பிக்கும் நாள் அன்று மாலை சாமி அலங்காரம் செய்து சப்பரத்தில் வைத்துக் கட்டினான் சுரேஷ். பூஜை செய்த பலி பீடக் கற்கள் அனைத்தையும் சப்பரத்தின் பின்புறம் அடுக்கினான். எட்டுத் திக்கிலும் பதித்து பிரதிஷ்டை செய்து விட்டு வரவேண்டும். நாயனமும் தவிலும் முழங்க அலங்கார நாயகராய் ஒரு காலத்தில் பயணித்த விசாலாட்சி சமேத விச்வேஸ்வரர் அன்று பழைய டேப் ரெக்கார்டரில் காருகுறிச்சியின் மல்லாரி இசை மெலிதாக ஒலிக்க கிளம்பினார். சாமி வரும் சத்தம் எவருக்கும் கேட்டிருக்காது. மீறிப் போனால் மொத்தமே பத்துப் பேர்தான் சாமியைச் சேவித்து சுரேஷிடம் விபூதி குங்குமம் பெற்றனர். கடை வீதி மேட்டில் தனியாளாகச் சப்பரத்தை இழுக்க முடியாதவாறு தள்ளாடிக் கொண்டிருந்தவனைத் தற்செயலாகப் பார்த்தேன். நான் கோவில் வரை சப்பரம் தள்ளினேன்.
தேர் நாளும் வந்தது. சோமஸ்கந்தரையும் விசாலாட்சி அம்பாளையும் ஸ்ரீபாதம் தூக்கிகளைக் கொண்டு கோவில் பிரகாரத்தையே மூன்று முறை சுற்றி வந்தால் போதும் என்று கோவில் அறங்காவலர்கள் சுரேஷுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள். நான் கோவிலுக்குப் போன போது அர்ச்சகராக வேறு யாரோ இருந்தார். சுரேஷ் இல்லை. விசாரித்ததில், சுரேஷுக்கு உடம்பு சரி இல்லை, ஜுரம் என்றார்கள். சுரேஷ் என்ன ஆனாலும் இப்படி வீட்டில் உட்கார மாட்டானே? அதுவும் இன்று உற்சவம் வேறு. விஷயமறிய அவன் வீட்டுக்கு விரைந்தேன்.
சுரேஷ் கொல்லையில் இருப்பதாக அவன் மனைவி சொன்னாள். சுரேஷ் கொல்லையில் மரப் பலகைகளை வைத்து தன் பழைய உளி கொண்டு எதையோ தட்டிக் கொண்டிருந்தான்.
“”டேய் என்ன டாஆச்சு” என்றேன்
“”சித்தப் பொறுடா” என்றான்.
தன் மகனின் பழைய நடை வண்டிச் சக்கரங்களை ஒரு பேரிங் கொண்டு மரப் பலகையில் பொருத்தி இருந்தான். மேலே நான்கு சிறு பலகைகளைக் கட்டி அதன் மேலே ஒரு அட்டைக் கூம்பைப் பொருத்தினான். ஜிகினாப் பேப்பர்களை இலகுவாக நாற்புறமும் ஒட்டினான். சாமி அரை சென்று சிவன் பார்வதி படத்தையும் ஒரு முருகர் படத்தையும் கொண்டு வந்து உள்ளே பொருத்தினான். சந்தனப் பொட்டு வைத்து ராமபாணத்தில் நெருக்கமாகக் கோர்த்த ஒரு பூமாலையைப் போட்டான். பிறகு வெந்நீர் அறைக்குள் சென்று ஒரு சணல் கயிற்றை எடுத்து, முகப்பில் பொருத்தி இருந்த கொக்கியில் கட்டினான். பார்ப்பதற்கு ஒரு குட்டித் தேர் போல இருந்தது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனிடம், “”டேய் கண்ணா, இங்க வா. இந்தக் குட்டித் தேர நீ எட்டு வீதிக்கும் இழுத்துண்டு போயிட்டு வருவியாம். அப்பா உனக்கு பூசலார் நாயனார் கதை சொல்லுவேனாம்” என்று பேசிக் கொண்டிருந்தான்.

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *