தேன்சிட்டு கூடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 7,784 
 
 

காலையில இந்த தண்ணி வண்டிக்காரனுங்க தொல்லை தாங்கமுடியல. ஓயாம ஹாரன் அடிச்சிட்டே தெரு முழுக்க சுத்தி சுத்தி வர்றான். வீட்ல தண்ணியில்லாதவங்களுக்கு ஒரு தடவ ஹாரன் அடிச்சா கேக்காதா. ஏன் இப்படி காது கிழியிற அளவுக்கு ஹாரன் அடிக்கிறான்? இதை கேக்க யாருமே இல்லையா. ஒருத்தர் இந்த தெருவுல இருக்காரே. போன வாரங்கூட ரோட்டில வேகமா கார் ஓட்டிக்கிட்டு போன ஒருத்தர மறிச்சு எதிர் வீட்டுக்கார் சண்டை போட்டாரே. அவரு இதையெல்லாம் தட்டி கேக்கமாட்டாரா?

கேட்கமாட்டார். ஏன்னா அவர் வீட்டு போர்லயும் தண்ணி இல்லை. அவரும் இந்த தண்ணி வண்டிக்காரனுங்கள நம்பி தான் இருக்காரு. அதனால இவன் பண்றத தட்டி கேட்கமாட்டார். இந்த தண்ணி வண்டிக்காரனுங்களுக்குள்ள போன வாரம் இதே ரோட்டில சண்டை. வேறு ஒரு தண்ணிக்காரன் இந்த தெருவுக்குள்ள வந்ததும் வழக்கமா வர்றவன் அவனை மறிச்சு சண்டைபோட்டான். அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டானுங்க. அதுல என்ன பியூட்டினா, அவனுங்க சண்டை போட்டுக்கிட்டுருந்தாலும் வழக்கமா வர்ற வண்டில இருக்க இன்னொருத்தன் ஒரு பக்கம் எல்லாருக்கும் தண்ணிய வித்துக்கிட்டே தான் இருந்தான். தண்ணி புடிக்க வந்த இந்த தெருக்காரங்க யாரும் அந்த சண்டையை கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை.

காலைல என் வீட்டுக்கார் பத்து மணிக்கு தான் ஆஃபீஸ் போவார். நான் அதுவரைக்கும் பொதுவா வெளில தலை காட்டறதில்லை. காலைல சீக்கிரமா எந்திரிச்சு வாசலை தெளிச்சுட்டு வீட்டுக்குள்ள போறவ பத்து மணிக்கு மேல காய்கறி விக்கிற வண்டி வரும்போது தான் வெளில வருவேன். கடந்த மூணு வருசமா இந்த வீட்ல தான் வாடகைக்கு இருக்கோம். அதுக்கு முன்னாடி எப்படியும் ஆறேழு வீடு மாறிருப்போம். என்னமோ இந்த வீடு எங்களுக்கு செட் ஆகிடுச்சு. மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஓனரும் நல்ல மனுசங்க. எங்களை புள்ளை மாதிரி பாத்துக்குவாங்க.

என்ன இந்த தெருவில இருக்க முக்கால்வாசி வீட்டுக்காரங்களுக்கு சொந்த வீடு. அதுக்கும் மேல நெறைய பேருக்கு சொந்த ஊரும் கூட. அதனால் அவங்க எங்களை மாதிரி வாடகைக்கு குடித்தனம் இருக்கவங்கள பாத்தா கொஞ்சம் ஏளனமா நினைப்பாங்க. அவங்கள விடுங்க, காலைல காய்கறி விக்க தள்ளுவண்டில வர்றவன் கூட சொந்த வீட்டுக்காரிகளை ஒரு மாதிரி ட்ரீட் பண்ணுவான், எங்களை மாதிரி வாடகைக்கு இருக்கவங்கள ஒரு மாதிரி ட்ரீட் பண்ணுவான். அவனுக்கெல்லாம் எப்படி தெரியும் நாங்க வாடகை வீட்ல தான் இருக்கோம்னு? ஒருவேளை எங்க மூஞ்சில எழுதி ஒட்டிருக்கோ.

காய்கறி விக்கிறவன்ல ஆரம்பிச்சு, கேபிள் டிவி, பால் போடுறவன்னு நெறைய பேருக்கு இந்த ஊர்ல யாருட்ட எப்படி பேசணும்னு நல்லாவே தெரிஞ்சிருக்கு. இந்த பாகுபாடெல்லாம் மனுஷனுக்குத் தான் தெரியும். பறவைங்களுக்கு தெரியாதுல. எங்க வீட்டை சுத்தி எத்தனையோ சொந்த வீடு, சொகுசு வீடு, தோட்டம் வச்ச வீடுன்னு ஏகப்பட்ட வீடுக இருந்தாலும், எங்க வீட்ல வந்து இந்த தேன்சிட்டு குருவி கூடு கட்டிக்கிட்டு இருக்கு.

வாசல்ல துவைச்சு துணி காயப்போட ரெண்டு இரும்பு கம்பி ஏற்கனவே கட்டியிருந்துச்சு. அந்த ரெண்டு கம்பில ஒண்ணுல தான் இப்போ தேன்சிட்டு குருவி கூடு கட்ட ஆரம்பிச்சிருக்கு. மொதல்ல என்னடா தரையில இவ்வளவு தூசி விழுதேன்னு பார்த்தேன். அப்புறமா தான் அங்க ஒரு குருவி கூடு கட்டுறதை பார்த்தேன். எங்கிருந்தோ சின்ன சின்ன தூசுகளை பொறுக்கி வந்து ஒரு சாம்பல் நிற தேன்சிட்டு குருவி கூடை கட்டுது. அதுக்கு துணையா எப்பவுமே ஒரு முழுக்கறுப்பு நிறத்தில இன்னொரு தேன்சிட்டு குருவி வருது.

மனுஷனை மாதிரி பாகுபாடு இல்லைனாலும் குருவிக்குள்ளையும் பாலின பாகுபாடு இருக்கும் போல. அந்த சாம்பல் நிற குருவி பெண்குருவியாம். என் வீட்டுக்காரரு சொன்னாரு. கறுகறுன்னு மைதடவின மாதிரி இருந்த இன்னொரு குருவி ஆண் குருவியாம். அந்த குருவி கொஞ்சம் கூட பெண் குருவிக்கு ஹெல்ப் பண்ணல. எல்லாமே அந்த சாம்பல் நிற குருவி தான் பாத்துக்கிடுச்சு. அதையெல்லாம் பாக்கிறப்ப கூட எனக்கு பெருசா ஒன்னும் தோணல. ஆனா பெண் குருவி கூடை கட்டி முடிக்க போற சமயத்தில அந்த ஆண் குருவி தினமும் ரெண்டு மூணு தடவ அந்த கூட்டுக்குள்ள போயி செக் பண்ணுச்சு. அப்பதான் எனக்கே கோவம் வந்துச்சு. ஆணடவன் குருவி விஷயத்தில கூட ஆணுக்கு ஒரு சட்டமும் பெண்ணுக்கு ஒரு சட்டமும் எழுதிருக்கானே.

குருவி கூட்டக் கட்டுனதிலிருந்து எனக்கு தான் பிரச்னை. ஒரு கம்பியில காயப்போடுற அளவுக்குத்தான் துணி துவைச்சு காயப்போட முடியுது. இன்னொரு கம்பில துணி காயப்போட்டா கம்பி ஆடி கூட்டுக்குள்ள இருக்க குருவி பறந்து போயிடுது. ஒருவேளை முட்டை போட்டுச்சுன்னா கம்பியை ஆட்டுறப்ப முட்டை கீழ விழுந்தாலும் விழுந்துடும். அதனால அந்த கம்பியை நான் யூஸ் பண்றதே இல்லை.

ஒருநாள் என் வீட்டுக்காரரு செக் பண்ணிட்டு கூட்டுல ரெண்டு முட்டை இருக்குன்னு சொன்னாரு. அன்னைக்கு நயிட்டு எனக்கு தூக்கமே வரவேயில்லை. புரண்டு புரண்டு படுத்திட்டு இருந்தேன். ‘என்னாச்சு ப்ரீத்தி, தூக்கம் வல்லையான்னு?’ கேட்டார். இந்த உலகத்தில எதை யாருகிட்ட நான் மறைச்சாலும் அவர்கிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன். என் கண்ணெல்லாம் கலங்கி இருந்துச்சு. ‘ஏய் என்னாச்சு உனக்கு? ஏண்டி அழற?’ னு கேட்டாரு. ‘நாம இந்த வீட்டுக்கு வந்து மூணு வருசமாச்சு. ஆனா இந்த குருவி இங்க கூடு கட்டி ஒரு வாரந்தான் ஆகுது. அதுக்குள்ள முட்டை போட்டுடுச்சு. இன்னும் ஒரு வாரத்தில குஞ்சு பொரிச்சு அதுக்கப்புறம் ஒரு ரெண்டு வாரத்தில குஞ்சுகளும் பறந்து போயிடும்.”னு நான் சொல்லும்போதே அவருக்கு நான் எதை பத்தி பேசப்போறேன்னு தெரிஞ்சுடுச்சு.

இருந்தாலும் நான் ஆரம்பிச்சத நிப்பாட்டாம சொன்னேன் ‘ஆனா மூணு வருசமா இந்த வீட்லயே இருக்க எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவே இல்லைங்க. ஏன் நமக்கு மட்டும் ஒண்ணுமே நடக்கமாட்டிங்குது.’னு சொல்லிட்டு அவரோட தோள்ல என் முகத்தை மறைச்சுகிட்டேன். அப்போதான் அவரு சொன்னார் ‘எல்லாம் சரியாகிடும். இப்ப நாம பாத்துட்டு இருக்க டாக்டர் நல்ல டாக்டர் ப்ரீத்தி. எனக்கு நம்பிக்கை இருக்கு. தேவையில்லாம கவலைப் படாதே. இந்த குருவி கூடுகட்டி முட்டை போட்டது கூட நல்ல சகுனம் தான். அதை நினைச்சு நீ நியாயமா சந்தோசப்படணும்’னு அவர் சொன்னது என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு.

அவர் சொன்னபடி உண்மையிலேயே இது நல்ல சகுனமா? அப்போ ஒருவேளை எனக்கும் நல்ல நேரம் வந்துடுச்சுனா இனி நானும் காலைல மத்தவங்க மாதிரி சகஜமா வெளில போலாம். பள்ளிக்கூடம் போற குட்டீசுகள வேடிக்கை பாக்கலாம். நான் ஏன் காலைல வெளிய வர்றதில்லைனு நான் சொல்லவே இல்லையே. எங்க எதித்த வீட்டில இருக்கவங்களோடு பையன் எப்பவும் ஸ்கூல் போறப்ப எனக்கு டாட்டா காமிச்சிட்டுதான் போவான். ஆனா அன்னைக்கு ஒரு நாள் அவனுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அப்போ அவங்க வீட்டுக்கு வந்த தெருக்காரங்க யாரோ ‘உன் பையனை எதித்த வீட்ல இருக்கவங்களோட பேசச் சொல்லாத. உன் பையன் நல்லா மூக்கும் முழியுமா இருக்கான். நல்ல படிக்கிறான் வேற. அதனால் எதித்த வீட்ல இருக்கவ உன் பையன் மாதிரியே அவனுக்கு ஒரு புள்ள பொறக்கணும்னு ஏங்குனாலும் ஏங்குவா. அவ ஏங்க ஏங்க உன் பையனுக்கு தான் கண்ணடி விழும்’னு சொல்லிருக்காங்க. அடுத்து அவனுக்கு சரியானதும் என் கூட பேசுறதில்ல. ஸ்கூல் போறப்ப எங்க வீட்டுப்பக்கம் பாக்கக் கூட மாட்டான். அது ஏன்னு எனக்குத் தெரிய வந்த நாள்ல இருந்து நான் வெளியே போறதில்லை. சாயந்தரம் கூட நான் அடிக்கடி வெளிய போறதில்லை.

நாளாக நாளாக நான் அக்கம் பக்கத்தில இருக்கவங்ககூட பேச்சுவார்த்தையை குறைச்சுக்கிட்டடேன். இது என் வீட்டுகாருக்கும் தெரியும். அவரோட சப்போர்ட் இல்லைனா என்னோட வாழ்க்கை எப்படியிருக்கும்னு என்னால நினைச்சுக் கூட பாக்க முடியல. பக்கத்து வீட்ல இருக்கவங்க தன்னோட புள்ளைய ஸ்கூல் வேன்ல ஏத்திவிடும்போது அந்த பொண்ணு அழுதுகிட்டே போகும். சில சமயம் வேன் சீக்கிரமா வந்துட்டா அவங்க அம்மா ‘சுந்தரி சுந்தரினு…’ அந்த புள்ளைய கத்திகிட்டே கிளப்பும். அதுவரைக்கும் அந்த வேன் டிரைவர் நின்னுட்டிருப்பாரு. அவங்க அம்மா சுந்தரி சுந்தரினு கத்துறது என் காதுல ‘சுண்டெலி சுண்டெலி’ னு கேக்கும். நான் அடுப்படில வேலை பாத்துகிட்டே சிரிச்சுக்குவேன்.

சுந்தரி தினமும் அழுதுட்டே தான் வேன்ல ஏறும். சில நாள் சுந்தரியோட அம்மா அந்த புள்ளைய அடிச்சிப்புடுவாங்க. பாக்கவே பாவாம இருக்கும். சுந்தரி அழுதுட்டே வேன்ல ஏறினதும் வேன்ல இருக்க வாண்டுங்க ‘சுண்டெலி சுண்டெலி’னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனா அவங்க கிண்டல் பண்ண ஆரம்பிச்சதும் சுந்தரி வாய்விட்டு சிரிக்க ஆரம்பிச்சிடும். ஒருவேளை நமக்கு குழந்தை புறந்திட்டா நாமளும் இப்படி தான் நம்ம குழந்தையை அடிப்போமோனு கூட சமயத்தில தோணும்.

குருவி கூடுகட்டி முட்டை போட்ட கொஞ்ச நாள்ல குஞ்சு பொரிச்சிடுச்சு. அதுக்கப்புறம் எங்க வீட்டு வாசல்ல எப்ப பாத்தாலும் அந்த குஞ்சுங்க சத்தம் போட்டுட்டே இருக்கும். எனக்கு என் வீட்டுக்காரு சொன்ன மாதிரியே நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சுனு மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை. எனக்கும் அந்த மாசம் நாள் தள்ளி போயிருந்துச்சு. இது மாதிரி பல மாசம் நடந்திருக்கு. ஆனா அந்த மாசங்களிலெல்லாம் எங்க வீட்ல குருவி கூடு கட்டலை. குஞ்சும் பொரிக்கல. அந்த குருவி கூடு எனக்கொரு புது நம்பிக்கையை கொடுத்துச்சு.

கூடு கட்டின நாள்ல இருந்து காலைல எந்திரிச்சதும் அந்த கூட்டை பாக்குறதே எனக்கு வேலையா இருந்துச்சு. வழக்கம் போல அன்னைக்கு கூட்டை எட்டிப்பாத்தேன். எந்த சத்தமும் இல்லை. என் வீட்டுக்காரு எந்திரிச்சதும் என்னென்னு பாக்க சொன்னேன். அவர் பாத்துட்டு ‘குஞ்சுங்க பறந்திடுச்சு போல’னு சொன்னார். உடனே அந்த கூட்டை பிரிக்க போனாரு. ஆனா நான் வேணாம்னு சொல்லிட்டேன்.

அடுத்த ஒரு சில நாள்ல வழக்கம் போல என் கனவு கலைஞ்சிடுச்சு. என் முகத்தை வச்சே காலைல எந்திரிச்ச என் வீட்டுக்காரு புரிஞ்சிக்கிட்டாரு. அவரும் எதுவும் பேசல. ஆனா நான் வீட்டுக்காருட்ட கேட்டேன். ‘ஏங்க, நீங்க தானே சொன்னீங்க. வீட்ல குருவி கூடு கட்டுறது நல்ல சகுனம்னு. ஆனா இப்படி ஆயிடுச்சே.’னு கேட்டேன். பாவம் அவர் என்ன செய்வாரு. என்ன சமாதானப்படுத்த ஏதாச்சும் சொல்லிருப்பார். அதை போயி இப்ப அவர்ட்ட கேக்குறது நியாயமானு எனக்கே தோணிச்சு. இருந்தாலும் கேட்டுட்டேன்.

கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தவர் அப்புறம் சொன்னார் ‘ஒருவேளை ஆண்டவன் இந்த வீட்டுக்கு ஒரே ஒரு குழந்தை வரம் தான் கொடுத்திருப்பார் போல. அதில உனக்கும் அந்த குருவிக்கும் நடந்த போட்டில குருவி ஜெயிச்சிடுச்சு. அதனால யாரு ஜெயிச்சா என்ன. இந்த உலகத்துல ஒரு புது உயிர் நம்ம வீட்டில இருந்து உருவாயிருக்கு. இதுவரைக்கும் இந்த மாதிரி சின்ன விஷயம் கூட நடக்கல. இப்போ முதல்ல குருவி குஞ்சு பொரிச்சிடுச்சு. இனி போக போக எல்லாம் சரியாகிடும்.’னு சொன்னார். இந்த முறையும் அவர் என்ன சமாதான படுத்தத்தான் சொல்லுறார்னு எனக்குத் தெரியுது. இருந்தாலும் நானும் கூட அவர் சொன்னதுல ஓரளவு சமாதானமாகிட்டேன். எப்பவும் போல அடுத்த வேலைய பாக்க வேண்டியது தான்னு அப்படியே அந்த விஷயத்தை மறந்துட்டேன்.

அடுத்த மாசம் அவர் தங்கச்சியோட குழந்தைகளுக்கு காதுகுத்து கல்யாணம் வச்சிருக்காங்க. அதை நினைச்சா எனக்கு இன்னும் பக்கு பக்குனு இருக்கு. நான் போகாம இருக்க முடியாது. போயிதான் ஆகணும். போனாலும் அங்க வர்றவங்க பேசுற பேச்சை கேட்டா ஒரு வாரத்துக்கு தூக்கமே வராது. அந்த அளவுக்கு வார்த்தையால டார்ச்சர் பண்ணுவாங்க. இந்த விஷயத்தில நான் ஆண்களை ரொம்ப மதிக்கிறேன். ஆனா இந்த பொம்பளைங்க இருக்காங்களே. என்னைப் பார்த்ததும் போதும், ‘என்ன விஷேசம் எதுவுமில்லையா?’எடுத்த எடுப்புல அதை பத்தித்தான் பேசுவாங்க. அப்படியே வாயிலேயே குத்தணும் போல இருக்கும். நீயும் பொம்பளை தானடி. அட் லீஸ்ட் ஒரு சில மாசமாவது கழிச்சு தானே நீயும் புள்ளை பெத்துறப்ப. அப்போ உனக்கெல்லாம் அந்த வேதனை தெரியாதா? இப்போ உனக்கு புள்ளை இருக்குனு என்னை மாதிரி இருக்கவள பாத்தா உடனே இதைத்தான் கேட்கணுமா?

நான் சொல்லி திருத்த இந்த ஊர்ல பல பொம்பளைங்க இருக்காங்க. அவங்க எல்லாரையும் திருத்த எனக்கு ஆயுசு போதாது. அந்த விசேஷம் முடியிற வரைக்கும் இப்படி அதையே நினைச்சு நான் லூசானாலும் ஆச்சர்யப் படுறதுக்கில்ல. ஒவ்வொரு நாளும் ஓடிக்கிட்டே இருக்கு. எனக்கும் வயசு கூடிகிட்டே இருக்கு. இறைவா இதுக்கு ஒரு முடிவே இல்லையா.

அன்னைக்கு காலைல அவர் ஆஃபீஸ் போனதும் வீட்டு வாசல்ல மறுபடியும் சின்ன சின்ன குப்பையா இருந்துச்சு. என்னடா மறுபடியும் குப்பை விழுதேன்னு பார்த்தேன். மறுபடியும் அதே குருவி. இப்போ வெளில மாட்டிருந்த லைட்ல கூடு கட்ட ஆரம்பிச்சிடுச்சு. நாம ஏன் இந்த குருவியா பொறந்திருக்க கூடாதுனு தோணுச்சு. மூணு மாசத்துக்கு ஒரு தடவ கூடுகட்டி குஞ்சு பொரிச்சு, அதோட வாழ்க்கை பயணமே அவ்வளவு தான். ஆனா எனக்கு அப்படியா? எத்தனை பிரச்சனைகளை பாக்கவேண்டியிருக்கு.

இந்த முறை அந்த குருவி கூடு கட்டினதுல எனக்கு பெருசா எந்த ஈடுபாடும் இல்லை. அதுபாட்டுக்கு அது வேலைய பாத்துச்சு. நான் என் வேலைய பாத்துகிட்டு இருந்தேன். ஒரு வாரத்தில அழகான கூடை கட்டிருச்சு. ஆண் குருவி வந்து செக் பண்ணிட்டு வழக்கம் போல அது வேலைய அது பாத்துட்டு இருந்துச்சு. எப்படியும் இன்னும் ரெண்டு மூணு வாரத்தில குஞ்சு பொரிச்சு போன தடவ மாதிரியே பறந்து போயிடும்.

இந்த முறை என் வீட்டுக்காருகிட்ட நான் அந்த குருவி கூட்டை பத்தி அதிகமா பேசல. பாவம் அவரும் என்ன செய்வாரு. நான் ஏதாச்சும் சொல்லி என்னை ஆறுதல் படுத்த அவர் ஏதாச்சும் சொல்ல, வேண்டாம். இந்த தடவை நான் எதுவும் பேசப்போறதில்லை. இந்த மாசமும் நாள் தள்ளிப்போயிருக்கு. ஆனா எனக்கு பெருசா நம்பிக்கையில்லை. எப்பயும் போல என் வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டேன்.

அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. காலைல லேட்டா தான் எந்திரிச்சோம். ராத்திரி அவர் தங்கச்சி விசேஷத்துக்கு என்ன செய்றதுன்னு பேசிட்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழிச்சு அவர் யாரையோ பாக்க கிளம்பி போயிட்டார். நான் மத்தியானம் எப்பவும் போல சாம்பார் வைக்கலாம்னு காய்கறி காரனுக்காகக் காத்திட்டிருந்தேன்.

எப்பவும் பத்தரை மணிக்கு வர்ற காய்கறிக்காரன் அன்னைக்கு ரொம்ப லேட்டா வந்தான். அவன் சத்தம் கேட்டதும் அவசரம் அவசரமா கூடையை எடுத்திட்டு போனேன். கதவை திறந்து வாசல்ட்ட போறப்ப தான் அதை பார்த்தேன். அந்த குருவி கூட்டிலிருந்த ரெண்டு முட்டையும் கீழ விழுந்து உடைஞ்சு போயி கிடந்துச்சு. முதல்ல ரொம்ப கஷ்டமாகி போயிடுச்சு. ஆனா அந்த நேரத்திலயும் திடீர்னு எனக்கொரு சந்தோசம். காய்கறி விக்கிறவன் கூப்டுகிட்டே இருக்கான். அவன்கிட்ட போனதும் நெறைய காய்கறி வாங்கினேன். அவனுக்கு ஒரே சந்தோசம் ‘என்னமா வீட்ல விசேஷமா? யாரும் வர்றாங்களா?’னு கேட்டான். நான் ‘ஆமா.’னு சொல்லிட்டு வெஜிடபிள் பிரியாணி வைக்கிறதுக்குரிய காய்கறிகளை வாங்கிட்டு வந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *