சங்கர் ஊரிலிருந்து வந்ததிலிருந்து கணேசனுக்கு தூக்கம் போய்விட்டது. மாலதி அவனோடு கொஞ்சிப் பேசுவதும் கிண்டலடித்து விளையாடுவதும் கணேசனுக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.
“உங்கள் நண்பர் கூடவுமா பேசக் கூடாது” என்று ஒருமுறை கேட்டும் விட்டாள் மாலதி. சங்கரிடமும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கணேசனுக்குள் ஒரே மனப் புழுக்கம். என்ன செய்யலாம் என்று தினம் தினம் அலுவலகத்தில் யோசித்துக் கொண்டிருந்ததில், அவனுடைய அலுவலக வேலைகளைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியவில்லை.
‘சங்கரை வேறு அறையில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்’, இல்லையெனில் தினமும் அலுவலகம் சென்றுவரும் வரை சங்கரும் மாலதியும் தனியாக வீட்டிலிருப்பதில் கணேசனுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.
நண்பன் ஒருவன் மூலம் பிரம்மச்சாரிகள் அறையை விசாரித்து இன்று, அங்கே சங்கரை அனுப்பி விடவேண்டும். அவனுக்குத் தேவையான அறை வாடகை சாப்பாட்டுப் பணம் எல்லாம் கொடுத்து விடலாம் என்ற முடிவோடு வீட்டிற்கு கிளம்பினான் கணேசன்.
வாசலில் வந்து கதைவைத் தட்ட நினைத்தபோது, உள்ளே கேட்ட பேச்சுக் குரலைக் கவனித்தான் கணேசன்.
“எனக்கு ரொம்ப பயமாயிருக்கு சங்கர், நீங்கள் ஊரிலிருந்து வந்த பிறகு, இவர் என்னுடன் ஒழுங்காக பேசுவதுமில்லை. முன்னே மாதிரி சகஜமாக நடந்து கொள்வதுமில்லை.
இரவில் தூக்கத்திலகூட அடிக்கடி கல்பனா என்று உளறுகிறார். இவருடைய ஆபீஸ் ஸ்டெனோ கல்பனாகூட இவருக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் நண்பரிடம் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்”
மாலதி விசும்புவதைக் கேட்ட கணேசனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.