(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கையிலிருந்த மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக் காதில் மாட்டிக் கொண்டு, சாளரத்துக்குக் கீழே விழுந்து கிடந்த செய்தித்தாளை எடுத்துப் பிரித்தார் சிதம்பரம்.
“இந்தக் கதையைக் கேட்டீர்களா?” என்று அங்கலாய்த்துக் கொண்டே அவரை நோக்கி வந்தாள்.அவருடைய மனைவி சிவகாமி.
“ஊர்க் கதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க உனக்கு நான்தானா கிடைத்தேன்? போய் வேலையைப் பார்!”
“இது ஒன்றும் ஊர்க்கதை இல்லை; உங்கள் வீட்டுக் கதைதான்!”
“அது என்ன கதை?”
“எல்லாம் உங்கள் சிகாமணியின் கதைதான்!”
“அவன் எங்கே இப்பொழுது சிகாமணியாயிருக்கிறான்? அவன்தான் ‘முடிமணி’யாய்ப் போய்விட்டானே!”
“முடிமணியா! அது என்ன மணி?”
“அதை வெளியே சொல்லும் அளவுக்கு என்னை இன்னும் வெட்கம் விட்டு விட்டுப் போய்விடல்லை; அவனுடைய தமிழ்ப்பற்று அத்துடனாவது நிற்கிறதே, அதைச் சொல்லு!”
“அதுதான் இல்லை! அந்த முந்திரித் தோட்டம் முத்தையாவின் மகள் முல்லைக்கு “உனக்கேற்ற குட்டிக் சுவர் நான்; எனக்கேற்ற கழுதை நீ!” என்று இவன் காதற் கடிதம் எழுதுகிறானாம், காதற் கடிதம்!”
“சரிதான்; காதற் கடிதத்திலும் ‘கருத்துக் குவியலை’க் கொட்டிக் கலக்க ஆரம்பித்துவிட்டான் போலிருக்கிறதே!”
“கருத்துக் குவியலோ, கண்ராவிக் குவியலோ, நமக்கு இருப்பவன் இவன் ஒருவன்தானே? காலா காலத்தில் இவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவிட்டு மறு வேலை பாருங்கள்!”என்றாள் சிவகாமி,
“உத்தரவு” என்றார் சிதம்பரம்.
சிவதானபுரத்தைச்சேர்ந்த சிதம்பரம் எதையுமே வேடிக்கையாக எடுத்துக் கொள்பவர். இன்பத்தில் துன்பத்தையும், துன்பத்தில் இன்பத்தையும் காண்பது அவருடைய இயல்பு.
இந்த இயல்பு சிவகாமிக்கும் பிடித்தே இருந்தது – கல்யாணத்துக்கு முன்னால் காதலை வளர்த்துக் கல்யாணத்துக்குப் பின்னால் காதலைக் கொல்லாமல் இருந்ததால்!
ஆனால் சிகாமணிக்கோ இதெல்லாம் பிடிப்பதில்லை. அவன் எடுத்ததற்கெல்லாம் சிந்தித்தான், சிந்தித்தான், சிந்தித்துக் கொண்டே இருந்தான். இந்தச் சிந்தனையின் காரணமாகக் கலாசாலையில் காலடி எடுத்து வைத்ததும் அவன் முதன் முதலாக கண்டுபிடித்த உண்மை; அப்பா ஒரு முட்டாள்; அம்மா ஓர் அசடு!”என்பதாகும்.
அந்த முட்டாளும், அசடும் சேர்ந்து தனக்குக் கல்யாணம் செய்வதை அவன் விரும்புவானா? விரும்பினால் பகுத்தறிவு மிக்க அவன் பள்ளி நண்பர்கள் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்களை வெள்ளிப் பாத்திரங்களென்றும், அந்த வெள்ளிப் பாத்திரங்களின் மேல் படியும் அறியாமை என்னும் அழுக்கை எளிதில் துடைத்து விடலாமென்றும், அவர்களுடைய பெற்றோர் பித்தளைப் பாத்திரங்களென்றும், அந்தப் பித்தளைப் பாத்திரங்களின் மேல் ஏறியிருக்கும் அறியாமை என்னும் களிம்பை அகற்றுவது அவ்வளவு எளிதல்லவென்றும், அந்தப் பணியை மேற்கொள்ளும் இளைஞர் சமுதாயம் அதைப் படிப்படியாகத்தான் அகற்ற முடியுமென்றும் அடிக்கடி விளக்கிவரும் அரும் பெரும் தலைவர் ஆசிரியர் அறிவழகனார்தான் அவனைப்பற்றி என்ன நினைப்பார்?
சிந்தித்தான், சிந்தித்தான், சிந்தித்துக் கொண்டே இருந்தான்’ சிகாமணி – இல்லை முடிமணி!
“இன்னும் என்ன யோசனை? நான்தான் அந்த முல்லையையே உனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுகிறேன் என்கிறேனே?” என்றார் சிதம்பரம்.
“கல்யாணம், கல்யாணம் என்று சொல்லாதீர்கள் அப்பா!காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கிறது!”
“சரி, தேனாகப் பாயும் திருமணம்தான் செய்து கொள்ளேன்!”
“திருமணம் என்றால் ‘திருந்திய திருமணம்’ தான் செய்து கொள்வேன்; சம்மதமா?”
“அது என்ன திருமணம்?”
“பழைய சடங்குகளையும் பழைய சம்பிரதாயங்களையும் உடைத்தெறியும் திருமணம்!”
“அப்படியென்றால் புதிய சடங்குகளையும் புதிய சம்பிரதாயங்களையும் உருவாக்கும் திருமணமா?”
‘சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!”
சிகாமணி உட்கார்ந்தான்.
“சிந்திக்க ஆரம்பித்து விட்டாயா, என்ன?”என்றார் சிதம்பரம் திடுக்கிட்டு.
“ஆம்; சிந்திக்கிறேன், சிந்திக்கிறேன், சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்!” என்றான் சிகாமணி.
“நானும் போகிறேன், போகிறேன் போய்க் கொண்டே இருக்கிறேன்!” என்று சொல்லிக் கொண்டே குடையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார் சிதம்பரம்.
“எங்கே போகிறீர்கள்?”என்றான் சிகாமணி விசுக்கென்று எழுந்து.
“புரோகிதர் வீட்டுக்கு!”
“புரோகிதர் வீட்டுக்கா திருந்திய திருமணத்தில் அவருக்கு ஏது இடம்? ஆசிரியர் அறிவழகனார் வீட்டுக்கு வேண்டுமானால் போய் விட்டு வாருங்கள்!”
“ஏன் அவரே இப்பொழுது புரோகிதராகிவிட்டாரா?”
“இது சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!”
சிகாமணி உட்கார்ந்தான்.
“சிந்திக்க ஆரம்பித்து விட்டாயா, என்ன?”என்றார் சிதம்பரம் மறுபடியும் திடுக்கிட்டு!
“ஆம், சிந்திக்கிறேன், சிந்திக்கிறேன், சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்!” என்றான் சிகாமணி.
“ஆஆஆ..” என்றார் சிதம்பரம் தமது, கைவிரல்களைச் சொடுக்கிக் கொண்டே.
“என்ன அப்பா அது?” என்றான் அவன், சிந்தனையைச் சற்றே கலைத்து!
“ஒன்றுமில்லை; கொட்டாவி விடுகிறேன், விடுகிறேன், விட்டுக் கொண்டே இருக்கிறேன்!”
“ஏன் கொட்டாவி விடவேண்டும்? ஆசிரியர் அறிவழகரை வேண்டுமானால் நானே பார்த்துக் கொள்கிறேன்; அதற்குமேல் ஆகவேண்டிய காரியங்களை நீங்கள் கவனிக்கலாமே?”
“சரி, கவனிக்கிறேன்!” என்று சொல்லிக் கொண்டே கிளம்பினார் சிதம்பரம்.
“எங்கே போகிறீர்கள்?” என்றான் சிகாமணி, மறுபடியும் விசுக்கென்று எழுந்து.
“தாலி வாங்க!”
“வேண்டேன் தாலி; பெண்களுக்கு அது வேலி!”
“வேறு என்னதான் செய்ய வேண்டும்? அதையாவது சொல்லேன்!”
“சொல்கிறேன் அப்பா, சொல்கிறேன். என்னுடைய திருமணத்திற்கு மிகவும் முக்கியமாக வேண்டியது மைக்!”
“மைக் என்று சொல்லாதே ‘ஒலிபரப்பும் கருவி’ என்று சொல்லு!”
“வரவேற்கிறேன், அப்பா வரவேற்கிறேன்; தமிழில் உங்களுக்குள்ள ஆர்வத்தை நான் தலைவணங்கி வரவேற்கிறேன். ஒலி பரப்பும் கருவிக்கு அடுத்தாற்போல் என்னுடைய திருமணத்திற்கு வேண்டிய திரைப்பட இசைத் தட்டுக்கள்!”
“ஐயோ, அது வேண்டாண்டா!”
“ஏன் அப்பா?”
“அந்த இசைத்தட்டால் தான் நிலவொளி வீட்டுத் திருமணம் நின்று விட்டதாம்!”
“இசைத் தட்டுக்கும் நிலவொளி வீட்டுத் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்”
“தலைவிக்கு மாலையிடத் தலைவன் எழுந்தபோது “நெனைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு அதனாலேயே முழிக்குதே அம்மா பொண்ணு!”என்ற இசைத்தட்டை ஒலிபரப்பாளர் வைத்து விட்டாராம்; அதைக் கேட்டதும் தலைவி திடுக்கிட்டு விழிக்க, ஐயமுற்ற தலைவன் பைய நழுவி விட்டானாம்!” “அறிந்தேன் உண்மையை; அதற்காகக் கலங்கமாட்டான் இந்தக் காளை! எந்தையே, என் அருமைத் தந்தையே! எங்கள் சிந்தனை செயல்படும் போது இம்மாதிரியான சிக்கல், தவறுகள் நேருவது ஏராளம்! ஏராளம்! அந்தத் தவறுகளைத் தாங்குவதற்கு நாங்கள் கொண்டுள்ள கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தாராளம், தாராளம்!”
இந்தச் சமயத்தில் சிதம்பரம் கைதட்ட “என்னப்பா இது? ஏன் கை தட்டுகிறீர்கள்? இப்பொழுது நான் மக்கள் மன்றத்திலா உரையாடிக் கொண்டிருக்கிறேன்?” என்றான் சிகாமணி.
“இல்லையா, இப்பொழுது நீ மக்கள் மன்றத்தில் உரையாடவில்லையா?” என்றார் சிதம்பரம், ஏதும் அறியாதவர் போல.
“இல்லை, அப்பா! என்னுடைய உணர்ச்சியில் ஒரு சொட்டு இங்கே உதிர்ந்து விட்டது; என்னுடைய சிந்தனையில் ஒரு துளி இங்கே சிதறிவிட்டது; அவ்வளவுதான்!”
“சரி, அப்புறம்?”
“அடுத்தாற்போல் என்னுடைய திருமணப் பந்தலில் நீங்கள் அவசியம் கட்ட வேண்டும், கறுப்புத்துணி!”
“அத்துடன் சங்கும் ஊதி, திருவாசகமும் பாட வேண்டுமா?”
“ஒரு வாசகமும் வேண்டாம்; இடையிடையே கொட்டு மேளம் முழங்கட்டும் அது எங்களுக்கு உடன்பாடே!”
“இவ்வளவுதானா, இன்னும் ஏதாவது உடன்பாடு உண்டா?”
“உண்டு” இரண்டு ரோஜாப்பூ மாலைகள்!
“ரோஜாப்பூ என்று சொல்லாதே; இரோசாப்பூ மாலை என்று சொல்லு!”
“வரவேற்கிறேன் அப்பா, வரவேற்கிறேன்; தமிழில் உங்களுக்குள்ள தனியாத ஆர்வத்தை நான் தலைவணங்கி வரவேற்கிறேன். ஆனால் இரண்டு இரோசாப்பூ மாலைகள் மட்டும் போதாது. என் திருமண விழாவுக்கு! இன்னும் சில பல மாலைகள் வேண்டும்; வாழ்வு வளம்பெற வாழ்த்துரை வழங்குவோருக்கு!”
“ஐயோ, இது மூடநம்பிக்கையாச்சே? பிறருடைய வாழ்த்துரையில் உன்னுடைய வாழ்வு வளம்பெறும் என்று நீ நம்பலாமா? அன்னையும் பிதாவும் ஆன்றோரும் சான்றோரும் செய்யும் ‘ஆசீர்வாத’த்தை நம்பாத நீ; அவர்களுடைய ‘வாழ்த்துரை’யை – மட்டும் நம்பலாமா? பகுத்தறிவுக்குப் பாதகமாச்சே! ஏன் இந்த வார்த்தைப் புரட்சி? இதனால் ஏற்படுமா வாழ்க்கைப் புரட்சி?”
“சிக்கலான கேள்வி, சிந்திக்க வேண்டிய கேள்வி; சிந்தித்தாலும் என் சிற்றறிவுக்கு விடை கிடைக்காத கேள்வி; வருகிறேன் அப்பா வருகிறேன்!”
சிகாமணி கிளம்பினான்.
“எங்கே போகிறாய் குழந்தை, எங்கே போகிறாய்?”
“பேரறிவு படைத்த பெருமகனாரின் உறைவிடத்துக்கு!”
“நன்றி, சென்று வருக!”
சிதம்பரம் திரும்பினார்.
அவர் திரும்பினாரோ இல்லையோ, “ரொம்ப அழகாய்த் தான் இருக்கிறது! அவன் ஏதோ தத்துப்பித்து என்று உளறுகிறான் என்பதற்காக நீங்களுமா அவனுடன் சேர்ந்து கொண்டு உளறுவது? கூப்பிடுங்கள், அவனை!” என்றாள் சிவகாமி.
“குழந்தாய், அன்னை உன்னை அழைக்கிறாள்!” என்றார் சிதம்பரம்.
சிகாமணி வந்தான் “தாயே தலை வணங்குகிறேன்!” என்றான்.
“என்னடா இது, நாடகத்திலே வேஷம் போடும் கூத்தாடிப் பயல்கள் மாதிரி? பிள்ளையா, லட்சணமாப் பேசேன்’
“வருந்துகின்றேன், அன்னையே வருந்துகின்றேன்; செந்தமிழின் சுவை அறியாச் சீற்றம் குறித்து வருந்துகின்றேன்!”
“வருந்தற்க மகனே வருந்தற்க!” என்று அவனைத் தேற்றினார் சிதம்பரம்.
“இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை. முதலில் நீங்கள் போய் முகூர்த்தத்துக்கு நாள் பார்த்து வாருங்கள்”என்றாள் சிவகாமி.
“நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும்?”
“கோளோ, தேளோ, எனக்கு வேண்டியது நாள்!” என்றாள் சிவகாமி, அழுந்தந் திருத்தமா.
“அப்பா வெள்ளிப் பாத்திரமே, இந்தப் பித்தளைப் பாத்திரத்தைத் திருப்தி செய்வது எப்படி?”
“அதற்கும் எங்களிடம் திட்டம் இருக்கிறது; அந்தத் திட்டத்தின் மூலம் விதி நாளைக் குறித்தாலும் கோளைக் குறிக்கக் கூடாது என்பது தான்!” “அப்படியே குறித்தாலும் அதைத் திருமண அழைப்பிதழில் குறிக்கக் கூடாது; அதுதானே உங்கள் குறிக்கோள்?”
“ஆம், ஆம்!”
“அருமையான திட்டம்; அந்தத் திட்டத்தில் அடியேனும் ஒரு திருத்தம் கொண்டு வரலாமோ?”
“என்ன திருத்தம் எந்தையே?”
“நாள் பார்க்கும் போது ஒரே நாளில் இரண்டு முகூர்த்தங்கள் உள்ள நாளாகப் பார்த்துவிட வேண்டியது. அப்படிப் பார்க்கும்போது 11/2-3 கும்ப லக்கினம் என்று இருந்தால் இன்னொன்று 9-101/2 சிம்ம லக்கினம் என்று இருக்கும். அறியாமை மிக்க அன்னையின் திருப்திக்காக 11/2-3 முகூர்த்தத்தில் யாருக்கும் தெரியாமல் தாலியைக் கட்டிவிட வேண்டியது. அறிவு மிக்க ஆசிரியர் பெருமகனாரின் திருப்திக்காக 9-101/2 முகூர்த்தத்தில் முகூர்த்தம் என்று சொல்லாமல் மாலை மாற்றிக் கொண்டு விடவேண்டியது. இதுவே திருத்தம். என் இன்னுயிர் இளவலே!”
“தேவையில்லாத திருத்தம்; எங்கள் திறமைக்கு மாசு கற்பிக்கும் திருத்தம்; எந்தையே, இது எங்கள் திட்டத்தின் இரண்டாவது விதி; ஏற்கனவே எங்களால் திருத்தங் கொண்டு வரப்பட்டு, எங்கள் தலைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி!”
“என்னே என் அறியாமை! இதற்குத்தான்பகுத்தறிவு வேண்டும் போலும்!”
“உங்களைப் போன்றவர்கள் அதைப் படிப்படியாக அடைய வேண்டுமென்பதற்காகவே இந்த அந்தரங்க விதி!”
“விதியோ, சதியோ! நீங்கள் போய் வேலையைப் பாருங்கள்!” என்றாள் சிவகாமி.
அதற்குமேல் சிதம்பரம் அங்கு நிற்கவில்லை.
“வாழ்க, திருத்தம்! வாழ்க;சீர்திருத்தம்!”என்று முழங்கிக் கொண்டே புரோகிதரின் வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.
அன்று மாலை சிந்தனைப் புயலில் சிக்குண்டு வந்த சிகாமணியை நோக்கி, “என்ன தம்பி என்ன?”என்று வினவினார் அண்ணா அறிவழகனார்.
“திருந்திய திருமணத்தில் ஓர் திடீர் ஐயம்?” “திடீர் ஐயமா, அது என்ன ஐயம்? தெரிவித்தால் விளக்குகிறேன்!”
இந்தச்சமயத்தில் கையில் விளக்கு மாற்றுடன் உள்ளே நுழைந்த வேலைக்காரி, “நான் இருக்கிறப்போ நீங்கள் ஏன்சாமி விளக்கணும்? கொஞ்சம் எழுந்திருங்க; நானே விளக்கிட்டுப் போயிடறேன்!” என்றாள்.
“அறிவற்ற மக்கள், ஆட்டு மந்தை யொத்த மக்கள்! என்று தம்மை மறந்து, தம்முடைய ஆதரவாளர்களை ‘விமர்சனம்’ செய்தவாறே ஆசிரியர் அறிவழகனார் மாடிக்குச் சென்றார்; சிகாமணி அவரைப் பின் தொடர்ந்தான்.
“என்ன ஐயம், எடுத்தியம்புவாய்!”
“எந்தப் பழைய சடங்குகளையும், எந்தப் பழைய சம்பிரதாயங்களையும் திருந்தாத திருமணத்திலிருந்து நாம் ஒழிக்கப் பார்க்கிறோமோ, அதே சடங்குகளையும் அதே சம்பிரதாயங்களையும் திருந்திய திருமணத்தில் புதிய உருவில் நாம் புகுத்தப் பார்க்கிறோம் என்பது என் தந்தையாரின் கூற்றாயிருக்கிறது. அந்தக் கூற்றை நான் மறுப்பது எங்ங்னம்?”
“சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!”
“அது மட்டுமல்ல; திருந்திய திருமணத்தில் நீங்கள் இன்று வழங்கும் வாழ்த்துரை, திருந்தாத திருமணத்தில் அன்னையும் பிதாவும் ஆன்றோரும் சான்றோரும் அன்று வழங்கிய ஆசீர்வாதந்தானே? ‘ஆசீர்வாத’த்தில் இல்லாத நம்பிக்கை ‘வாழ்த்துரை’யில் மட்டும் இருக்கலாமா? ஏன் இந்த வார்த்தைப் புரட்சி? இதனால் ஏற்படுமா வாழ்க்கைப் புரட்சி? என்றும் அவர் கடாவுகிறார். அதை நான் எதிர்ப்பது எங்ங்னம்?”
“சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!’
“சிந்தித்தேன்! சிற்றறிவுக்கு எட்டவில்லை; பேரறிவைத் தேடி ஓடி வந்தேன். தங்களுக்கும் இது சிக்கலான கேள்விதானா? தங்களுக்கும் அது சிந்திக்க வேண்டிய கேள்விதானா?”
“ஆம் தம்பி, ஆம்!”
“முடிவு?”
“இந்த முடிவற்ற உலகத்தில் முடிவு காண நான் யார், நீ யார்? நடப்பது நடக்கும்; கிடைப்பது கிடைக்கும். உண்மையை உள்ளது உள்ளபடி உனக்கு மட்டும் சொல்கிறேன்; கேள்; கொள்கை எதுவா – யிருந்தாலும், கோட்பாடு எதுவாயிருந்தாலும் அதை உருவாக்குவது காலம்; உடைத்தெரிவதும் காலந்தான்! அந்தக்காலத்தையொட்டிநாம் கடைத்தேற வழிகோலுவோம்; முடிவைப் பற்றிய கவலையில்லாமல் ‘மூட நம்பிக்கைகள் ஒழிக!’ என்று ஒரே மூச்சில் முழங்குவோம், முழங்குவோம்; முழங்கிக் கொண்டே இருப்போம்!”
“அங்ஙனம் முழங்குவது சுயமரியாதைக்கு விரோதமில்லையா, தன்மானத்துக்குப் பங்கமில்லையா?”
அவன் குமுறினான்; கொந்தளித்தான்.
“சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!”
அவர் பாடினார்; சொன்னதையே சொல்லிப் பொற்சிலம்பமாடினார்.
“போதும், இந்தப் பல்லவி! வருகிறேன்; வணக்கம்!”
‘க்க’த்துக்கு ஓர் ‘அழுத்தம்’ கொடுத்து விட்டு வெளியே வந்தான் சிகாமணி – இல்லை, முடிமணி!
இனி என்ன?
இந்தக் கேள்வி எழுந்தது அவன் உள்ளத்தில், நின்றான்.
வீட்டைக் கூட்டிய வேலைக்காரி குப்பையைக் கொண்டு வந்து வெளியே கொட்டினாள்.
அதிலிருந்த ஒரு கரித் துண்டு அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. எடுத்தான்; எழுதினான் – அந்தக் கணமே அவன் கண்ட முடிவைத்தான்!
மறுநாள்…
சிகாமணி கண்ட முடிவைச் சிதம்பரம் கண்டார்; சிவகாமியும் கண்டாள் – ஏன், ஊர் கண்டது; ஊராரும் கண்டார்கள்.
அது என்ன முடிவு என்கிறீர்களா? – அது தான் திருந்திய திருமணத்தின் திடீர் முடிவு; ஒருவருக்கும் தெரியாமல் முல்லையை இழுத்துக் கொண்டு ஓடிவிட்ட முடிவு!
இந்த முடிவு தெரிந்ததும் “உங்கள் முடிமணிதான் எங்கள் முல்லையை இழுத்துக் கொண்டு ஓடி விட்டான்!” என்றாள் பெண்ணைப் பெற்றவள்.
“உங்கள் முல்லைதான் எங்கள் முடிமணியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள்!”என்றாள் பிள்ளையைப் பெற்றவள்.
இவர்கள் இருவருக்குமிடையே சிக்கிக் கொண்ட சிதம்பரம் என்ன செய்வார், பாவம்! ஆசிரியர் அறிவழகனாரை சந்தித்து, “மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு முன்னால் முடிமணியை ஒழித்து விட்டீர்களே, அவன் எங்கே போயிருக்கிறான் என்றாவது தெரியுமா?” என்று உசாவினார்.
“அவன் எங்கே போயிருந்தால் என்ன? அறிவில் என்னையும் மிஞ்சி விட்டான் அவன்! அது மட்டுமல்ல; பழைய சடங்குகளையும், பழைய சம்பிரதாயங்களையும் உடைத்தெரிந்ததோடு, புதிய சடங்குகளையும் புதிய சம்பிரதாயங்களையும் கூட உடைத்தெரிந்து விட்டான் அவன்! அதோ பாருங்கள் அவன் எழுப்பியிருக்கும் புதிய கோஷத்தை, புதிய குரலை!” என்று முழங்கிக் கொண்டே எதிர் வீட்டுச் சுவரைச் சுட்டிக் காட்டினார் அவர்.
சிதம்பரம் படித்தார், படித்தார்.
“திருந்திய திருமணம் வீழ்க; திருட்டுத் திருமணம் வாழ்க”
அறிவழகனார் அறையலுற்றார்.
“இதையே ‘காதல் வாழ்க’ களவழி வாழ்க! என்று ‘வள்ளுவன் பாணி’யில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும், இல்லையா?”
சிதம்பரம் சிரித்தார்.
“ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார் அறிவழகனார்.
“சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி என்றார் சிதம்பரம்.
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.