பெருஞ்செல்வர் குமாரசாமி முதலியார்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 7,892 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில் இக்கதைகள் தமிழில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

I

உழைப்பின் பயன்

வேணு புரம் என்பது அழகிய ஒரு சிற்றூர். அதில் பல்லாண்டுகளுக்கு முன்பு நாகலிங்க முதலியார் என்பவர் ஒருவர் இருந் தார். அவர் செல்வர் அல்லர்; எளிய வாழ்வே வாழ்ந்து வந்தார். அவருக்குக் குமாரசாமி என்னும் ஒரு மைந்தர் உண்டு. குமாரசாமிக்கு மணமான மறு ஆண்டே நாகலிங்க முதலியார் காலமானார்.

குமாரசாமி முதலியாருக்குக் கிடைத்த சொத்து, ஒரு வீடும், சிறிது நிலமும், ஒரு பசுவுந்தான். குமாரசாமி முதலியாரும் அவர் மனைவியும் மனம் ஒத்து இல்வாழ்க்கை நடத்தினர். குமாரசாமியிடம் சோம்பல் என்பதே இல்லை. அவர் நல்ல உழைப்பாளர். அவர் அதிகாலையில் எழுந்து வயலுக்குச் சென்று ஏர் உழுவார்; தகுந்த உரம் இட்டுப் பயிரைத் தாமே கவனித்து வருவார். இதனால் அவருக்கு நல்ல விளைவு கிடைத்தது. தவிர, அவருக்கு உரிமையான ஒரு தரிசு நிலம் இருந்தது. அவர் அதை வெட்டிக் கொத்திப் பண்படுத்தி, அதைச் சுற்றி நல்ல வேலி யிட்டு, அதைச் சிறு தோட்டமாக்கினார்; அதில் ஒரு சிறு கிணறும் வெட்டினார்; தெங்கு, மா, எலுமிச்சை, முதலிய மரங்களை நட்டு, வியர்க்க உழைத்து, நீர் பாய்ச்சி, அவைகளை மிகவும் கவனமாய் வளர்த்து வந்தார். அவர் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு வந்து, ஒவ்வொரு செடியினருகிலும் சிறிது நேரம் இருந்து அதைக் கண்டு களித்துச் செல்வார். நாளடைவில் மரங்கள் தகுந்த பலனைக் கொடுக்க ஆரம்பித்தன; இவ்விதம் தோட்டத்திலிருந்தும் நெல் வயலிலிருந்தும் கிடைக்கும் வரும்படி அவர் குடும்ப வாழ்விற்குப் போக எஞ்சியிருந்தது. அதை அவர் வீணாகச் செல வழியாமல் விலைப்படுத்தி, பணத்தை வங்கியில் சேர்த்து வந்தார்.

அவர் மனைவியும் சும்மா இருக்கவில்லை; பசுவிற்கு வேண்டிய புல் தழை முதலியவற்றைத் தானே வெளியிற்சென்று கொண்டு வந்தாள்; அதற்குப் போதுமான தீனி யளித்துப் பாதுகாத்து வந்தாள்; பசு இருக்கும் தொழுவத்தைத் துப்புரவு செய்து பசுவை நல்ல நிலையில் வைத்திருந்தாள். பசு ஏராளமாகப் பாலைக் கொடுத்தது. சரியான தீனி அளிக்கப்பட்டதால் அதன் பால் மிகச் சத்துள்ளதாய் இருந்தது. அத்தகைய பாலை அவள் நீர் கலவாமல் கொடுத்ததால், எல்லாரும் சிறிது அதிக விலை கொடுத்துங்கூட அவளிடமே பால் வாங்கினர். இதனாலும் பொருள் கிடைத்தது. அவள் தன் வீட்டுக் கொல்லையில் புடல், அவரை, கத்தரி, மணித்தக்காளி, முதலியவற்றைப் பயிர் செய்து, அவற்றிற்குப் போதுமான தண்ணீர் இறைத்து வந்தாள். அந்தக் காய்கறிகளை விற்பதாலும் அவர்களுக்குச் சிறிது பொருள் வருவாய் வரவரப் பெருகிக்கொண்டே வந்தது. இரண்டோர் ஆண்டுகளில் அந்தப் பொருளைக்கொண்டு குமாரசாமி முதலியார் இன்னும் அதிகமாக நிலம் வாங்கினார். அப்படியிருந்தும், அவர் தம் உழைப்பை நிறுத்தவில்லை. ஆகையால், திருமகள் அவர்கள் வீட்டிற் புகுந்து வாழலானாள்.

மனைவி வந்த இருபது ஆண்டுகளுக்குள் குமாரசாமி முதலியார் சீமானாகிவிட்டார். அந்தச் சிற்றூரில் பெரும்பான்மை நிலம் அவருக்கே உரியதாகிவிட்டது. ஏராளமான பசுக்களும் காளைகளும் அவரிடம் இருந்தன. அவர் கையில் தொகையாகவும் பணம் மிகுதி யாய் வைத்திருந்தார். அந்தப் பகுதியில் அவரைவிடச் செல்வர் ஒருவருமில்லை. வயல்களை உழுது பயிர் செய்வதற்கும், பசு முதலியவற்றை மேய்ப்பதற்கும், வீட்டுச் செயல்களைக் கவனிப்பதற்கும் பல வேலைக்காரர்களை அவர் நியமித்திருந்தார். அவர் வாழ்ந்த மாவட்டத் தில் அவரையும் அவருடைய ஏராளமான செல்வத்தையும் அறியாதவர் ஒருவருமில்லை. பெருஞ்செல்வர் குமாரசாமி முதலியார் என்ற பெயர் எங்கும் பரவியது.

செல்வரான பிறகு பெரிய மனிதர் பலர், குமாரசாமி முதலியாருடன் நட்புக்கொண்டனர். அவர்கள் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து, விருந்துண்டு, களித்துச் செல்வார்கள். குமாரசாமி முதலியார் நல்ல பண்பு வாய்ந்தவர்; தம் வீட்டுக்கு வந்தவர்களை மரியாதையுடன் வரவேற்று நன்கு உபசரிப்பவர்; தம் மனைவியிடமும் மிகுந்த மதிப்புடையவர்; அவர் வறியராயிருந்த தாம் மிகுந்த செல்வரானது அவள் வந்த பிறகுதான் என எண்ணினார். ‘ஏர் பிடித்தவன் என்ன செய் செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்!” என்பது பழமொழி அல்லவா?

II

‘செல்வம் சகடக்கால் போல வரும்.’

குமாரசாமி முதலியார் செல்வராயிருந்தும் அவருக்குச் சில குறைகள் இருந்தன. அவருடைய இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் இளமையில் இறந்துவிட்டார்கள். மற்றப் பையனோ, தன் தகப்பனாரின் குணத்துக்கு முற்றிலும் மாறுபட்டவன்; முழுச் சோம்பேறி. அவனுக்குத் தீயவர்களின் உறவு மிகுதி. சீட்டாடுதல், குடி முதலிய பல தீய பழக்கங்களும் அவனிடம் குடிகொண்டன.

அவன் அழித்துவிட்ட பொருளுக்குக் கணக்கில்லை. அவனால் பெற்றோர்கள் பட்ட சிறுமையோ சொல்லத் தரமன்று. அவர்கள் ஒவ்வொரு நாளும் அவனைப்பற்றி என்ன பழிச்சொல் கேட்க வேண்டி வருமோ என்று கவலையும் அச்சமும் கொண்டார்கள். அவ னுக்கு மணமும் ஆயிற்று. அவன் மனைவி அவனைப் பம்பரமாக ஆட்டிவந்தாள். அவள் வந்ததும் பெற்றோரிடமிருந்து அவனைப் பிரித்து வேறு குடித்தனம் ஏற்படுத்திவிட்டாள். சொத்தில் தனக்குரிய பங்கைத் தந்து விடவேண்டுமென்று தகப்பனாரை வற்புறுத்தி அவன் வாங்கிக்கொண்டான்; அதையும் விரைவில் இழந்து அயலூருக்குப் போய் விட்டான்.

குமாரசாமி முதலியாரைத் துன்பம் இத்துடன் விட்டபாடில்லை. அவர் பணம் சேர்த் திருந்த சில வங்கிகள் முறிந்துவிட்டன. ஆகையால், தாம் சேர்த்த பொருளில் பெரும் பகுதியை அவர் இழந்துவிட்டார். மழை பெய்யாமல் பயிர்கள் தீய்ந்து போனதனாலும் ஏராளமாக இழப்பு ஏற்பட்டது. நோய்களால் மாடுகளெல்லாம் இறந்துவிட்டன. இப்படிப் பல வகையிலும் இழப்பு ஏற்பட்டுக் கடன் உண்டாகித் தாம் வாழ்ந்த வீடு, தம் நிலம் முதலியயாவும் அவர் இழந்து வறியவர் ஆகி விட்டார்.

செல்வம் நிலையில்லாதது. அது சக்கரம் போலச் சுழன்று வரும். செல்வனாயிருந்தவன் ஏழையாவதையும், ஏழை செல்வனாவதையும் நாம் பார்த்திருக்கிறோம். அரசர்களுங்கூடத் தங்கள் நகரிலிருந்து விரட்டப்பட்டு வேற்றூர் சென்று உழைத்து வயிறு வளர்க்க வேண்டிய நிலைமையை அடைகின்றார்கள். கருமேகங்களினூடே மின்னல் தோன்றி மறைவது போலச் செல்வம் நிலைத்திராது. ஊழ் வலியால் ஒருவனுக்குப் பெருஞ்செல்வம் உண்டானால், அது இருக்கும் பொழுதே அதைத் தனக்கும் பிறருக்கும் நலம் பயக்கும் வழிகளில் பயன்படுத்திக்கொள்பவனே அறிஞன்.

எப்பொழுதும் ஏழையாயிருக்கும் ஒருவன் படும் துன்பத்தைவிடச் செல்வனா யிருந்து பல இன்பங்களையும் துய்த்த ஒருவன் திடீரென அந்தச் செல்வத்தை இழக்க நேரிடின், அவன் படும் துயரம் தாங்க முடியாததாக இருக்கும். குமாரசாமி முதலியார் இனி வேறு யாரிடமாவது வேலைக்கமர்ந்து வாழ வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டார். அவருக்கு இப்பொழுது ஐம்பத்தைந்து வயதிருக்கும். அவர் மனம் மிகவும் கலக்கம் அடைந்திருந்தது. இன்னது செய்வதென்று தெரியாமல் அவர் தவித்துக்கொண்டிருந்தார்.

III

பிறரிடம் வேலைக்கமர்தல்

அந்த ஊரில் நாராயணசாமி முதலியார் என்னும் செல்வர் ஒருவர் இருந்தார். அவர் குமாரசாமி முதலியார் நிலைமையைக் கண்டு மிகவும் இரக்கப்பட்டார். குமாரசாமி முதலியார் குணம் அவர் மனத்தைக் கவர்ந்திருந்தது. குமாரசாமி செல்வராயிருந்த பொழுது நாராயணசாமி முதலியாரிடம் நட்புக் கொண்டிருந்தார்; அவரைப் பல முறை உபசரித்து மிருக்கிறார். நாராயணசாமி முதலியார், இவ்வளவு தாராள குணமும் நல்லெண்ணமும் உள்ள குமாரசாமிக்கு இந்நிலை நேர்ந்ததே என்று இரங்கி, அவருக்கு இப்போது தம்மால் கூடிய அளவு உதவி செய்து அவரது மனக் கவலையைப் போக்குவது தம் கடமை யென உணர்ந்தார். பணமிருக்கும் வரையிலே தான் உலக மக்கள் ஒருவனை மதித்து அவனிடம் நட்புக்கொள்ளுவார்கள். அவன் பணத்தை இழந்த பின், முன்னர் அவனைச் சூழ்ந்து அவன் குணங்களை மெச்சி உண்மை நட்பாளர்கள் போல நடித்த வீணர்கள், அவன் இருக்கும் தெருவிலேகூடப் போகமாட்டார்கள். அப்படியானால், அவனுக்கு அவர்கள் ஒரு சிறு உதவியுங்கூடச் செய்யமாட்டார்க ளென்பதைச் சொல்லவும் வேண்டுமா!

நாராயணசாமி முதலியார் குமாரசாமியிடம் சென்று, “ஏதோ ஊழ் வலியால் உங்களுக்கு இந்நிலை நேர்ந்துவிட்டது. உங்கள் மனம் படும் துன்பத்தை நான் அறிவேன். நடந்ததைக் குறித்து வருந்துவதில் பயனில்லை. ‘இவ்வளவுதான் நாம் கொடுத்து வைத்தது!’ என்று மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டா. என்னை உங்களுடைய தம்பி போல நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலுக்குத் தகுந்தபடி என் வீட்டில் வேலை செய்யுங்கள். உங்கள் மனைவியும் என் மனை விக்கு உதவியாக இருக்கட்டும். உங்களுக்குத் தேவையானவற்றை என்னிடம் கூசாமல் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். என் வீட்டை உங்கள் வீடாகவே நினைத்து மகிழ்வுடன் இருங்கள்,” என்று பல இனிய மொழிகள் கூறி ஆறுதல் சொன்னார்.

நாராயணசாமி முதலியார் தம் அல்லற் காலத்தில் இவ்வித அன்பும் ஆதரவும் காட்டி யதற்காகக் குமாரசாமி முதலியார் அவருக்குத் தம் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்தார். அன்று முதல் அவரும் அவர் மனைவியும் நாராயணசாமி முதலியாருடைய வீட்டில் வேலைக்கு அமர்ந்தனர். சில மாதங்கள் வரை அவர் மனத்துக்கு இவ்விதம் வேலை செய்வது மிகுந்த சங்கடத்தை உண்டு பண்ணிற்று. ஆயினும், நாளடைவில் அவர்களுடைய துன்பமெல்லாம் சிறிது சிறிதாக அவர்களுடைய மனத்தை விட்டு அகன்றுவிட்டது. இந்த வேலை அவர்களுடைய மனத்திற்கு ஒத்தும் போய்விட்டது. அவர்கள் தங்களால் கூடிய வரை தங்கள் தலைவருக்கு வஞ்சகமில் லாமல் பாடுபட்டார்கள். நாராயணசாமிக்கும் அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி. ஏனெனில், குமாரசாமி உண்மையுள்ளவராயும், உழைப்பாளராயும் இருந்தார். உழவுச் செயல்களிலும், குடும்பக் கலைகளிலும், உலக வாழ்விலும் நல்ல பழக்கம் பெற்ற ஒரு பெரியாரைத் தமக்குத் துணையாக வைத்துக்கொள்வது மிகுந்த உதவியாயிருக்குமென்று அவர் கருதினார். ஆனால், செல்வத்தில் வாழ்ந்த ஒருவரை இவ் வளவு தாழ்ந்த நிலையில் வைக்க நேர்ந்ததே என்பதை நினைக்குந்தோறும் அவர் மனம் சிறிது கலக்கம் அடைந்தது.

IV

வாழ்க்கையின் குறிக்கோள்

ஒரு நாள் நாராயணசாமி முதலியார் வீட் டிற்கு அவர் உறவினர் சிலர் வந்திருந்தனர். அவர்கள் கூடத்தில் உட்கார்ந்து மகிழ்ச்சி யுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது குமாரசாமி அந்த வழியாக ஏதோ காரியமாக வெளியே சென்றார். அப்பொழுது வீட்டுத் தலைவர் விருந்தாளிகளுள் ஒருவரைப் பார்த்து, “அதோ போகிறாரே, அவர் யார் தெரியுமா?” என்றார்.

வி: தெரியாதே! ஏன்? அவரைப்பற்றிய செய்தி என்ன?

நா: அவர் ஒரு காலத்தில் மிகுந்த செல் வராயிருந்தார். நீங்கள் கூடக் கேள்விப்பட் டிருக்கலாமே! பெருஞ்செல்வர் குமாரசாமி முதலியார் அவரே.

வி: ஆம்; நானும் கேள்விப்பட்டிருக் கிறேன். அவரது புகழ் இந்த நாடு முழுவதும் பரவியிருக்கிறது. ஆனால், அவர் தம் செல்வம் முழுவதையும் இழந்து மிகுந்த வறுமையில் ஆழ்ந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

நா: அவருடைய நிலைமை மிக இரங்கத் தக்கது. வறுமை அவரைச் சூழ்ந்துவிட்டது. எத்தனையோ வேலைக்காரர்களை அடக்கி யாண்டு சிறப்புடன் வாழ்ந்த முதலியாரும் அவர் மனைவியும் இப்பொழுது இங்கு வேலை செய்து பிழைக்கிறார்கள். இக்காட்சி கொடுமை யிலும் கொடுமையல்லவா?

வி: அடடா ! அவரா இவர்! ‘செல்வம் சகடக்கால் போல வரும்,’ என்பார்களே, அது உண்மைதான். ‘ஆறிடும் மேடும் மடு வும்போலாம் செல்வம், மாறிடும் ஏறிடும்,’ என்பதும் உண்மையே. அவர்கள் இத்தகைய நிலைமையில் இருக்க, அவர்கள் மனம் எவ் வளவு துன்பப்படுகிறதோ! அவர்கள் மனம் வருந்தவில்லையா? அவர்கள் எவ்விதம் இந் தத் துன்பத்தைப் பொறுத்துக்கொள்கிறார்களோ!

நா: அவர்களுடைய மனத்தில் இருப்பது நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், பார்வைக்கு எப்பொழுதும் முகமலர்ச்சியுட னும் மகிழ்ச்சியுடனுந்தான் தோன்றுகிறார்கள். அவர்கள் வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கிக்கொண்டிருந்தாலும் இருக்கலாம். இருந்தாலும், அகத்தின் அழகு

முகத்தில் தெரியாமலா போகும்?

வி : எனக்கு அவர்களைப் பார்க்க வேண்டுமென்று விருப்பமாயிருக்கிறது. அவ ரிடம் சில செய்திகளைக் குறித்துப் பேசவும் விரும்புகிறேன். நீங்கள் அவரை இங்குக்

கூப்பிடுகிறீர்களா?

நா: அதற்கென்ன தடை! இதோ கூப் பிடுகிறேன்.

“மாமா, சிறிது நேரம் இப்படி வாருங்க ளேன்! அங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று குமாரசாமியை நாராயணசாமி கூப் பிட்டார்.

குமாரசாமி முதலியார் வந்ததும், விருந் தாளியும் நாராயணசாமி முதலியாரும் அவ ருக்கு மரியாதை செய்து இருக்கை கொடுத்து உட்காரச் செய்தார்கள். குமாரசாமி முதலி யார் கடவுளை நினைத்துக்கொண்டு அமர்ந்தார்.

விருந்தினர், “நான் உங்களைப் பற்றியும் உங்கள் நல்ல குணத்தைப் பற்றியும் பெரிதும் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு இவ்வித நிலைமை உண்டானதைப் பற்றி எனக்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது! எல்லாம் விதியின் பயன்! அரிச்சந்திரன் தோட்டிக்கு அடிமையாகி வேலை செய்ததும், அவன் மனைவி சந்திரமதி காளகண்டையருக்கு அடிமைப்பட்டதும் விதியின் செயலேயன்றி வேறென்ன? எங்களைப் பார்த்ததும் உங்க ளுக்கு மனத்தில் துன்பம் மிகலாம். நீங்கள் பல நலங்களுடன் முன்பு வாழ்ந்ததும், இப்போதுள்ள உங்கள் நிலைமையும் இப்போது உங்கள் நினைவுக்கு வந்து மனத்தைப் புண்படுத்தலாம்,” என்றார்.

குமாரசாமி முதலியார் புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே, “இன்பம் எது, துன்பம் எது என்று நான் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள். என்னுடைய மனைவியிடமே நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவள் மனத்திலுள்ளதை ஒளியாமல் சொல்லுவாள். முழு உண்மையையும் அவள் உரைப்பாள்” என்றார்.

அப்பொழுது விருந்தினர், கதவின் பக்கத்தில் நாராயணசாமி மனைவியுடன் உட்கார்ந்திருந்த குமாரசாமி முதலியாரின் மனைவியை நோக்கி, “பெரியம்மா, நீங்கள் முன்னிருந்த நிலையுடன் உங்கள் இக்கால நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கையில் உங்கள் மனம் எவ்விதம் இருக்கிறதென்று சொல்வீர்களா?” என்று கேட்டார்.

அவள், “நானும் என் கணவரும் முப்பது ஆண்டுகளாகச் செல்வ வாழ்க்கை வாழ்ந்து வந்தோம் என்பது உண்மைதான். ஆனால், அப்பொழுது நாங்கள் இன்பம் என்பதையே அறியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் செல்வத்தை இழந்து உழைப்பாளிகளாய் உழைத்து இந்த வாழ்க்கை தொடங்கிய இந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் உண்மை இன்பத்தைக் கண்டோம். இவ்வாழ்க்கையே எங்களுக்கு இன்பமாய் இருக்கின்றது. இதைத் தவிர வேறு வாழ்க்கையை நாங்கள் விரும்பவில்லை,” என்றாள்.

இவ்விதம் அவள் கூறியது நாராயண சாமி முதலியாருக்கும் விருந்தினருக்கும் மிகுந்த வியப்பை விளைவித்தது. விருந்தினர் சற்றுத் தலையை நீட்டி அந்தக் கிழவியின் முகத்தை ஆவலுடன் பார்த்தார். அவள் முகத்தில் மகிழ்ச்சியே நிலவியது. உண்மையிலேயே அவள் இன்பமுள்ளவளாய் இருந்தாளென்பதை அவள் முகக்குறியே காட்டிற்று. அவள் மலர்ந்த முகத்துடனும் புன்சிரிப்புடனும் தன் கணவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவரும் அவ்விதமே அவளை நோக்கினார்.

குமாரசாமியின் மனைவி, “நான் உண்மையாகச் சொல்லுகிறேன்: நாங்கள் செல்வராயிருந்தவரை உண்மை இன்பத்தைக்காணவே இல்லை. இப்பொழுது செல்வத்தையெல்லாம் இழந்து, உழைத்து வாழத் தொடங்கியபடியால், மிகுந்த இன்பத்தை அடைகிறோம். இதைக்காட்டிலும் மிகுந்த இன்பம் வேறு ஒன்றிலும் இல்லையென்பது எங்கள் முடிவு. வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை. இது விளையாட்டாகச் சொன்னதன்று. இது உண்மை,” என்றாள்.

விருந்தினர், “அம்மா, நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லை. இன்பம் என்பதுதான் என்ன? செல்வர்களாய் இருந்த பொழுது காணாத இன்பத்தை இப்பொழுது என்ன கண்டுவிட்டீர்கள்? நீங்கள் தெளிவாய் எடுத்துரைக்க வேண்டும்,” என்றார்.

அவள், “நாங்கள் செல்வத்தை இழந்து விட்டோம் என்கிறீர்கள்! செல்வம் என்பது உள்ளத்தின் நிறைவே தவிர, வேறன்று. எவ்வளவு பொருள் கிடைத்தாலும், எவ்வளவு செல்வராயிருந்தாலும் திருத்தியடையாமல் பணந்தான்குறி என்று அதிலேயே கருத்தைச் செலுத்திக் கவலை கொள்ளும் மனிதரைச் செல்வர் என்று எப்படிச் சொல்லுவது? மிகுந்த செல்வத்தைப் பெற்றிருந்தும் அவர்களுக்கு மனக்குறை இருந்து கொண்டேதான் இருக்கும். அவர்களே வறியவர்கள். வறியவனாயிருந்தும் திருத்தி கொண்ட உள்ளத்தையுடையவனே செல்வன் என்று சொல்லவேண்டும். ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து,’ என்ற முதுமொழியையும் நீங்கள் கேட்டிருக்கலாம்; ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே,’ என்று குமரகுருபரர் கூறுகிறாரே! முன்பு எங்களுக்கு ஏராளமாய் நிலம் இருந்தது; தோப்புக்களும் உண்டு; நூற்றுக் கணக்கான கால் நடைகள் இருந்தன. இவ்வளவு இருந்தும் எங்கள் மனம் திருத்தி அடைந்ததா?’ இன்னும் நிலங்களை வாங்க வேண்டும்; பணத்தைச் சேர்க்க வேண்டும்; ஒரு குறு நில மன்னராகவோ, அரசராகவோ திகழ வேண்டும்,’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தோம். இவ்விதம் மனம் ஒன்றை விட்டு மற்றொன்றில் பாய்ந்து திருத்தியடையாமல் எப்பொழுதும் குழப்பத்தையே விளைத்துக்கொண்டிருந்தது. அப்பொழுது எங்களைச் செல்வர்கள் என்று சொல்வது பொருத்தமாகுமா? உள்ளதைக் கொண்டு திருத்தியடைபவரே செல்வர். அவரே பேரரசர் என்று சொல்ல வேண்டும்.

“செல்வராயிருக்கையில் எங்களுக்கு ஒரு நாளாவது மனத்தில் அமைதி என்பதே இல்லை; ஏதாவது ஒரு கவலை இருந்து கொண் டேயிருக்கும். ‘மாடுகள் நோயால் இறந்து விடுமோ!’ என்ற கவலை ஒரு பக்கம்; ‘மழை பெய்யவில்லையே! பயிர்கள் தீய்ந்துவிடுமோ! என்ற கவலை வேறு. ‘வங்கியில் போட்ட பணம் மோசம் போய்விடக்கூடாதே!’ என்ற கவலையும் ஏற்படும். ஓர் அச்சம் நீங்கினால் இன்னொன்று தோன்றும். வேலைக்காரர்களின் தொல்லை ஒரு புறம். அவர்கள் சரியானபடி வேலை செய்கிறதில்லை. உயர்ந்த கூலி மட்டும் வாங்குவதிலேயே அவர்கள் கருத்துடையவர்களாயிருந்தார்கள். குறைந்த கூலியைக் கொடுத்து மிகுந்த வேலையை அவர்களிடம் வாங்க நாங்கள் முயற்சி செய்தோம். இதனால் நாங்கள் தேடிய பாவம் வேறு. சில நேரங்களில் வீட்டிலுள்ள நகைகள், விலையுயர்ந்த பொருள் முதலியவை திருட்டுப்போய்விடுமோ என்று இரவு முழுவதுங்கூட அடிக்கடி திடுக்கிட்டு எழுந்திருப்போம்.

“இவ்விதம் மனத்திற்கு ஓயாத கவலை இருந்தால் இன்பம் எப்படி உண்டாகும்? கவலையற்று, அச்சமற்று, துன்பமற்று மன மிருந்தாலல்லவோ இன்பமென்பது ஏற்படும்?

“தவிர, மனிதன் உண்டு உடம்பைப் பெருக்கி உறங்குவதற்காகவா உலகில் வாழ வேண்டும்? நம்மைப் படைத்த ஆண்டவரிடத் தில் அன்பு பூண்டு அவர் அருளைப் பெற வேண்டாவா? ஆண்டவரை நினைப்பதற்கு எங்களுக்கு நேரமே இல்லாமலிருந்தது. நல்ல சிந்தனை செய்வதற்கும், நல்வழிப்படுவதற் கும், பாவங்களைப் போக்குவதற்கும், நாம் கடவுளை அடிக்கடி வேண்டுவது இன்றியமையா தது. நமது உடம்பு வளர்வதற்கு உணவு இன்றியமையாதது போல, நமது ஆன்ம வளர்ச்சிக்கு இறைவரிடம் முறையிடுதல் அவசியம். நாங்கள் கடவுளையே மறந்து விட்டோம்.

“இதனால் நான் பணத்தையே தேட வேண்டாவென்று சொல்ல வரவில்லை. அதிலேயே விருப்பங்கொண்டு, செருக்கடைந்து, கடவுளை மறந்து, மனம் பலவாறு உழன்று, கெட்ட எண்ணங்களிலும் பாவச் செயல்களிலும் ஈடுபடாதிருக்க வேண்டும். முன் பிறவியின் நல்வினையால் கடவுள் இச்செல்வத்தைக் கொடுத்தார் என்றெண்ணி, செல்வம் நிலைத்திராது ஆகையால் நல்ல செயல்களுக்கு அது பயன்படும்படி செய்ய வேண்டும். அதற்குரிய மனத்தை அளிக்குமாறு கடவுளை வேண்ட வேண்டும். பெருஞ்செல்வம் ஒருவனைச் செருக்குடையவன் ஆக்கிவிடுகிறது. அவன் ஆடம்பரமாகத் தன் காலத்தைக் கழிக்கிறான்; கடவுளை நினைப்பதும் இல்லை. ‘ஒட்டகம் ஊசி யின் காது வழியாக நுழைந்தாலும் நுழை யலாம். பணக்காரன் மோட்சத்தை அடைய முடியாது,’ என்று ஏசுநாதர் சொன்னது இதைக் குறித்தே என்று நினைக்கின்றேன்,” என்றாள்.

விருந்தினர், “இப்பொழுதுள்ள நிலைமை யில் நீங்கள் என்ன இன்பத்தைக் காண்கிறீர்கள்?” என்றார்.

அவள், “நானும் என் கணவரும் காலை யில் எழுந்ததும், ஒருவருக்கொருவர் அன் பான வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு அமைதியாய் வாழ்கிறோம். தலைவருக்கு எங்க ளால் பயன் ஏற்பட வேண்டுமென்றெண்ணி, எங்கள் ஆற்றலுக்குத் தக்கபடி சிறிதும் கபடின்றி மனமுவந்து உழைக்கிறோம். எங்க ளுக்கு நல்ல உணவும் உடைகளும் கிடைக்கின்றன. எங்கள் மனம் அமைதியாயிருக்கிறது. கவலையோ, அச்சமோ, பகையோ சினமோ யாதொன்றும் மனத்தை வருத்துவதில்லை. எங்கள் கடமையைச் சரிவரச் செய்கிறோம்; வேறொன்றிலும் பற்றுதல் வைக்கிறதில்லை. எல்லாவற்றையும் ஆண்டவரிடத்தில் விட்டுவிட்டுக் கவலையற்று இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது.

உடம்பை மட்டும் வளர்த்தல் போதாது. ஆன்ம வளர்ச்சியும் வேண்டும். ஆன்மப் பயிற்சி செய்ய எங்களுக்குப் போதிய ஓய்வு இருக்கிறது. கடவுளை நினைத்து அவரிடம் எங்கள் வேண்டுகோளைச் செலுத்தப் போதிய ஓய்வு நேரம் இருக்கிறது. செல்வராயிருந்த வரையில் நாங்கள் கடவுளை நினைக்கவில்லை; செல்வம் எங்கள் அறிவை மறைத்துவிட்டது. துன்பங்களே அவரை நினைக்கும்படி செய் தன. முப்பது ஆண்டுகளாகத் தேடியும் காணாத இன்பத்தை நாங்கள் இப்பொழுது அடைந்திருக்கிறோம்,” என்றாள்.

அப்பொழுது அங்கிருந்தவர்கள் எல்லாரும் சிரித்தார்கள்.

“நண்பர்களே, இவ்விதம் சிரிக்காதீர்கள். இது கேலி பண்ணக்கூடிய செயலன்று; வாழ்க்கையின் உண்மை என்பதை நீங்கள் அறியுங்கள். நாங்களும் எங்கள் செல்வத்தை இழந்ததும் துயரத்தால் அழுதோம். பின்பு கடவுள் எங்கள் மேல் அருள் கூர்ந்து எங்களுக்கு உண்மை ஒளியினைக் காட்டினார். இதை நாங்கள் எங்கள் மனத்தைத் தேற்றிக் கொள்வதற்காக மட்டும் சொல்ல வரவில்லை. உங்கள் நலத்தைக் கருதியே இதைச் சொல்லுகிறோம் என்பதை நீங்கள் அறிய வேண்டும்,” என்றார் குமாரசாமி முதலியார்.

வந்த விருந்தினர், “மெய்யறிவைப் புகட்டக் கூடியதும், உண்மை நெறியைக் காட்டக் கூடியதுமான ஓர் அரிய சொற்பொழிவு என்றே இதைச் சொல்ல வேண்டும்! குமாரசாமி முதலியார் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். வேதங்களிலும் இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது,” என்றார்.

பின்னர் எல்லாரும் சிரிப்பதை விட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

– டால்ஸ்டாய் சிறுகதைகள் (ஆறாம் வகுப்புக்குரியது), முதற் பதிப்பு: நவம்பர் 1960, எம்.எஸ்.சுப்பிரமணியம் பிரசுரம், திருநெல்வேலி.

மதிப்புரை

Sir P. S. Sivaswamy Aiyar. **The Stories selected are interesting and your rendering of them very easy and readable and suitable to our children. You have done well in adapting the stories for Tamil children by giving a local colour and back ground.

Sri C. Rajagopalachariar. **It is exceedingly well done and with particular attention to its serving as a school text-book.

Sri K. S. Ramaswamy Sastri. **The stories of Tolstoy as adapted by you form pleasant and instructive reading.

வெள்ளக்கால் ராவ்சாகிப் வெ. ப. சுப்பிரமணிய முதலியார். **எளிய இனிய தெளிவான நடையிலெழுதப் பட்டனவாகவும், படிப்போருக்கு நல்லொழுக்கமும் நல்லறிவும் வளரச் செய்வனவாகவும், ஆண்பாலார் பெண்பாலார், பெரி யோர், சிறியோரெல்லாரும் இனிது படித்துப் பயனடையத் தக்கவையாகவுமிருக்கின்றன.

The Hindu. **Rendered into effective simple prose**attractive to juvenile readers **forms suit able reading for children.

The Madras Mail. **Easily bring forth the central theme of all Tolstoyan writings namely the moral uplift of both the individual and the society. It will prove useful in the inculcation of noble ideals in children.

The Prabuddha Bharata. **The book is written in simple prose and forms suitable reading matter for children. It is not mere translation, for the book draws original material from Tamil life and gives apt quotations from Tamil poets.

சுதேசமித்திரன். **தமிழ் நாட்டு வாடையுடன் கூடியது. *அழகிய எளிய நடையில் எல்லாருக்கும் தெரியும் முறையில் எழுதப்பட்டுள்ளது. * பாமர மக்களை எளிதில் வயப்படுத்தும் தன்மை வாய்ந்தது. புஸ்தகம் மொழி பெயர்ப்பாகக் காணப் படாமல் தனி முதற்புத்தகமாகத் தோன்றுகிறது.

தமிழ் நாடு. மொழி பெயர்ப்பில் இது ஒரு புதிய பாணி. ருஷ்யப் பேரறிஞர் டால்ஸ்டாயே தமிழருக்காகத் தமிழில் எழுதிய மாதிரி அமைந்திருக்கிறது மொழி பெயர்ப்பு. **மூலக் கருத்து முறிந்து விடாமல் எல்லாரும் படித்துப் பரவசிக்கும் ரீதியில் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கின்றன ஆறு கதைகளும்.

The Ardra. His style is easy, clear, smooth and correct and makes the book delightful reading. It deserves to be widely read by pupils of the Tamil Country.
The Scholar. Has been written in simple and chaste Tamil which can be easily understood by our children. The stories selected are interesting and are calculated to teach our children good ideals and nobility of character.

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம். ** இனிய, தெளிவான எளிய நடையில், படிப்போரது மனத்தைக் கவரும் முறையில் ஆசிரி யர் தமிழருக்கு அளித்துள்ளார். * இந்நூலை இரு பாலாரும், இளைஞரும், முதியோரும் கற்று இன்புற்றுப் பயனடைவாராக. பள்ளிப் பிள்ளைகள் இதனை வாங்கி வாசிப்பாராக.

Service. *Has fulfilled a long felt need of our schools for a suitable translation of Tolstoy’s tales.

கலை மகள். **இத்தகைய புத்தகங்கள் பள்ளிக்கூடங் களில் வைத்து ஆதரிக்கத்தக்கனவாகும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *