தாயில்லாமல் நானில்லை

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 15,672 
 
 

“”டேய் நம்ம ஜெயிச்சிட்டோம்டா… மினிஸ்டர் பொண்ணு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் முழுசும் நமக்குதான். மூணு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்… கல்யாணத் தேதிய இப்பத்தான் சொன்னாங்க…”
“”கையக் கொடுரா… இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா,” எட்வர்டின் கைகளைப் பற்றி முரட்டுத்தனமாக குலுக்கினான் ஜான்.
“”கல்யாணம் என்னிக்கு?”
“”பிப்ரவரி 15.”
“”பிப்ரவரி 15ஆ?”
“”ஏன்… அதுல என்ன பிரச்னை?”
“”அன்னிக்கு அம்மா பர்த்டேடா… மறந்து போய்ட்டியா?”
“”அடக் கடவுளே!”
தலையில் கை வைத்துக் கொண்டான் எட்வர்ட்.
தாயில்லாமல் நானில்லைஜானும், எட்வர்டும் இரட்டையர்கள். பெங்களூருவின் பிரபலமான பூ அலங்கார விற்பன்னர்கள்; ப்ளாரிஸ்ட்ஸ்.
மிகச் சிறிய வயதிலிருந்தே ஜானுக்கும், எட்வர்டுக்கும் பூக்கள் மேல் தணியாத காதல் இருந்தது. அவர்களுடைய தந்தை தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஊட்டி தாவரவியல் பூங்காவின் ஆலோசகராகப் பணியாற்றியவர். அதன் காரணமாக ஜானும், எட்வர்டும் பள்ளிக்கு போய்வந்த நேரம் போக, மீதம் இருந்த நேரம் முழுவதையும், பூக்களுடனேயே கழித்தனர்.
அவர்கள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தந்தை, தாவரவியல் பூங்காவில் நிகழ்ந்த ஒரு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். குடும்பமே கலங்கிப் போனது.
அவர்களின் தாய் எலிசபெத்துக்கு கருணை அடிப்படையில், அதே இடத்தில் வேலை கொடுத்தது அரசு.
ப்ளஸ் டூ தேறியவுடன், மேலே படிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டனர் இரட்டையர்கள்.
“பூக்கள் சம்பந்தப்பட்ட வேலை ஏதாவது கெடச்சிதுன்னா நிறைய சாதிக்கலாம்னு தோணுதம்மா…’ என்றனர்.
தெரிந்தவர்கள் கையில் காலில் விழுந்து, பெங்களூருவில் ஒரு பெரிய பூ அலங்காரக் கடையில் உதவியாளர்கள் வேலையை வாங்கிக் கொடுத்தாள் எலிசபெத்.
வேறு சிந்தனையின்றி முழு மூச்சாக வேலையில் ஈடுபட்ட சகோதரர்கள், ஐந்தே வருடங்களில் சொந்தமாக பூ அலங்காரத் தொழில் தொடங்கும் அளவிற்கு வளர்ந்தனர். அது போக, ப்ரிகேட் ரோட்டில், அழகான பூங்கொத்துக்கள் விற்பனை செய்யும் கடையையும் தொடங்கினர். கார், சொந்த வீடு என வேகமாக வளர்ந்து கொண்டிருந்தனர்.
எலிசபெத் இன்னும் அரசுப் பணியில்தான் இருந்தாள். அவள் வேலையை விட்டுவிட்டு வந்தால், ராணியைப் போல் வைத்துக் கொள்கிறோம் என்று அம்மாவிடம் கெஞ்சிப் பார்த்து விட்டனர்; எலிசபெத் விடாப்பிடியாக மறுத்து விட்டாள்.
ஒவ்வொரு ஆண்டும், தங்கள் தாயின் பிறந்த நாளன்று, ஜானும், எட்வர்டும் ஊட்டிக்கு போவர். ஒரு வருடத்திற்கு தேவையான துணிமணிகள், சந்தையில் புதிதாக வந்திருக்கும் மின்னணு சாதனங்கள், தின்பண்டங்கள், நகைகள்… அதுபோக கை நிறைய பரிசுகள் என்று கொண்டு வந்து, தங்களுடைய பாசத்தில் எலிசபெத்தை மூச்சுத் திணற வைத்திருப்பர். முத்தாய்ப்பாக தங்கள் கைகளால் செய்த ஒரு பூங்கொத்தை எலிசபெத்தின் பாதங்களில் வைப்பர்.
எலிசபெத் வழக்கமாக போகும் தேவாலயத்தில், அவள் பிறந்த நாளன்று விசேஷ மலர் அலங்காரம் செய்வர். அவர்கள் வேலைப்பாட்டின் அழகை கண்டு ஊரே பிரமிக்கும். பிறந்த நாளன்று காலை, ஒரு பக்கம் ஜானும், ஒரு பக்கம் எட்வர்டும் வர, தேவாலயத்திற்குள் நுழையும்போது எலிசபெத்திற்கு பெருமையால் நெஞ்சம் வெடித்துவிடும் போல இருக்கும்.
மொத்த ஊரும், தாயையும், பிள்ளைகளையும் பிரமிப்புடன் பார்க்கும். “ஜான், எட்வர்டு மாதிரி எனக்கு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று கர்த்தரிடம் வேண்டாத பெண்களே இல்லை…’ என்று பாதிரியார் சொல்லும்போது, எலிசபெத்துக்கு பெருமையாக இருக்கும்.
கடந்த பல வருடங்களில் ஒருமுறை கூட, தங்கள் தாயின் பிறந்த நாளுக்கு ஜான், எட்வர்டு போகாமல் இருந்தது கிடையாது. ஆனால், இந்த முறை?
கர்நாடக மாநில அமைச்சரின் மகளுக்கு நடக்கும் திருமண வரவேற்பில், பூ அலங்காரம் செய்ய நடந்த வெறித்தனமான போட்டியில் வெற்றி பெற்றது இரட்டையர்கள் தாம்.
அன்று மதியம் தான், அமைச்சர் பி.ஏ., மூலமாக அந்த நல்ல செய்தி வந்திருந்தது. வள்ளிசாகக் கிடைக்கும் லாபம் ஒரு லட்சம் ஒருபுறம் இருக்கட்டும்… நிகழ்ச்சிக்கு வரும் பெரும்புள்ளிகள் கண்களில் ஜான், எட்வர்டின் திறமையான பூ அலங்காரம் பட்டால், அதன்பின் வானமே எல்லை.
“”எட், எனக்கு ஒரு ஐடியா… நம்ம மேனேஜர் ராஜ் நல்லா ட்ரெயின் ஆயிட்டாரு… நம்ம ரெண்டு நாள் முன்னால பூவ செலக்ட் பண்ணிக் கொடுத்துரலாம்… ராஜ் நம்ம ஆளுங்கள வச்சி…”
“”நடக்காது, ஜான். நம்ம ரெண்டு பேரும் அங்க இருந்தாத்தான் ஆர்டர்னு பி.ஏ., சொல்லிட்டாரு.”
“”அம்மா பிறந்த நாளை ஒரு வாரத்துக்கு முன்னாலேயே கொண்டாடிட்டா என்ன?”
“”அம்மா பிறந்த நாள் என்னிக்குன்னு ஊட்டி மொத்தத்துக்கும் தெரியும். நம்ம அன்னிக்குத்தான் சர்ச்சுல அலங்காரம் பண்றோம். ஒரு வாரத்துக்கு முன்னால அந்த அலங்காரத்த செஞ்சா, ஊருக்கெல்லாம் அம்மா பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும். நம்ம வசதிக்காக பொறந்த நாள் தேதிய மாத்தறது எனக்கு சரின்னு தோணல.”
“”இன்னொரு ஐடியா ஜான்… நீ ஊட்டிக்கு போ; நான் கல்யாண வேலையப் பாக்கறேன்.”
“”அது இன்னும் மோசம். முதல்ல அம்மாவுக்கு நீ வரலேன்னு கவலையா இருக்கும். எட்வர்ட் ஏன் வரலன்னு எல்லாரும் அம்மாவ கேள்வி கேட்டுத் தொளச்சிருவாங்க. எனக்கும், உனக்கும் சண்டைன்னு கூட பேசுவாங்க. அது மட்டுமில்ல… மினிஸ்டர் பி.ஏ., நம்ம ரெண்டு பேரும் அங்க இருக்கணும்னு சொன்னாருன்னு நீ தானே சொன்ன.”
“”அம்மா பொறந்த நாளையும் விட்றக் கூடாது… அதே சமயத்தில், இந்த பெரிய வாய்ப்பையும் விட்றக் கூடாது… நீ தான் ஒரு வழி சொல்லணும்.”
“”மொதக்காரியமா மினிஸ்டர் பி.ஏ.,கிட்ட போன் பண்ணி, இன்னும் ஒருநாள் டயம் வாங்கு… அதுக்குள்ள கடவுள் ஏதாவது வழி காட்டுவாரு.”
எட்வர்ட் பி.ஏ.,விடம் பேசிவிட்டு வந்தான்.
“”ஏன் ஜான்… விஷயத்த அப்படியே அம்மாகிட்ட சொல்லி, அவங்க முடிவுக்கு விட்டுட்டா என்ன?”
“”உனக்கு அம்மாவ பத்தித் தெரியாதா? “நீங்க உங்க தொழில பாருங்கப்பா…’ன்னு சொல்லிருவாங்க. இந்த விஷயம் தெரிஞ்சிருச்சின்னா நம்மள ஊட்டிக்கு வரவிட மாட்டாங்க. அப்படியே மீறி நாம போனாலும், அவங்களுக்கு ஒரு குற்ற உணர்வு இருந்துகிட்டே இருக்கும்.”
மறுநாள் அதிகாலையிலேயே அவர்கள் கடையைத் திறந்து விட்டனர். வெளியே லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. இன்னும் கடை ஊழியர்கள் யாரும் வரவில்லை; வாடிக்கையாளர்களும் வர ஆரம்பிக்கவில்லை.
மணி ஏழேகால். எட்டு மணிக்குள் பி.ஏ.,க்கு போன் செய்து, முடிவை சொல்ல வேண்டும்.
பத்து வயது சிறுமி ஒருத்தி, கடைக்குள் நுழைந்தாள். ÷ஷாகேசில் இருந்த மலர்களைப் பார்த்தபடி தயக்கத்துடன் நடந்து வந்தாள். அவள் இருந்த இடம் நோக்கி ஜான் ஓடினான்.
“”உனக்கு என்னம்மா வேணும்? பொக்கே வேணுமா, கட் ப்ளவர்ஸ் வேணுமா?”
எட்வர்டும் அந்த இடத்திற்கு வந்து விட்டான். அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த குழந்தைத்தனம், இருவரையும் உருக்கிவிட்டது.
“”எனக்கு ஒரு பொக்கே வேணும். ஆனா, என்கிட்ட வெறும் ஐம்பது ரூபாதான் இருக்கு அங்கிள்.”
“”பிரச்னையே இல்ல. அம்பது ரூபாய்க்கு இந்த பெரிய பொக்கே தரேன். போதுமா?”
அந்த பொக்கேயின் அடக்க விலையே நூறு ரூபாய். விற்கும் விலை 200 ரூபாய்; ஆனால், இந்தக் குழந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இரட்டையர்கள் உறுதியாக இருந்தனர். அந்த சிறுமி பொக்கேயை கையில் வாங்கி, அதில் இருக்கும் மலர்களை ஆராய்ந்தாள்.
“”நல்லாத்தான் இருக்கு. ஆனா, எங்கம்மாவுக்கு பட்டு ரோஜாவும், லில்லிப் பூவும் தான் பிடிக்கும். இதுல அது இல்லையே அங்கிள்.”
“”அதனால என்ன கண்ணு… ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு… நீ சொன்ன மாதிரி பூ போட்டுக் கொடுக்கறேன்.”
“”அப்படியே இன்னும் கொஞ்சம் பெரிசா பண்ண முடியுமா அங்கிள்?”
“”தாராளமா.”
அந்த சிறுமி சொல்வது போல் செய்ய வேண்டுமென்றால், ஐநூறு ரூபாய்க்கு மேல் பில் போடுவர் இரட்டையர்கள். ஆனால், இவளுக்கு விசேஷ சலுகை… ஐம்பது ரூபாய்தான்.
“”உன் பேரு என்ன கண்ணு?”
“”மரியா… மரியா கான்ஸ்லேவ்ஸ்.”
“”ஸ்வீட் நேம். இந்த சேர்ல உக்காரு. பத்து நிமிஷத்துல உன் பொக்கே ரெடியாயிரும்.”
“”தேங்க்ஸ் அங்கிள்.”
பொக்கேவை தயார் செய்ய, உள்ளறைக்குள் நுழைந்தான் ஜான். வெளியே ஓடினான் எட்வர்ட். ஐந்து நிமிடம் கழித்து அவன் திரும்பி வந்தபோது, அவன் கையில் ஒரு கேட்பரீஸ் சாக்லேட் இருந்தது.
“”மரியா கண்ணு… நீ இதச் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள உன் பொக்கே ரெடியாயிரும்.”
மரியாவின் கண்கள், மகிழ்ச்சியால் மலர்ந்தன.
“”தேங்க்ஸ் அங்கிள்.”
அடுத்த சில நிமிடங்களில் அழகான பொக்கேயுடன் உள்ளறையிலிருந்து வந்தான் ஜான்.
“”மரியா… இது உங்கம்மாவுக்கா?”
“”ஆமாம் அங்கிள். இன்னிக்கு அவங்களுக்கு பிறந்த நாள்.”
“”அப்படியா? உங்கம்மாவுக்கு எங்க வாழ்த்துக்கள சொல்லும்மா. இதுல ஒரு பெர்த் டே கார்ட் வச்சிடறேன்… சரியா?”
“”தேங்க்ஸ் அங்கிள்.”
பொக்கேவை பெற்று, தன் கையில் இருந்த கசங்கிய ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினாள் மரியா.
அதைப் பெற்றுக்கொண்ட ஜான், ஒரு பில் போட்டுக் கொடுத்தான். மரியாவை வழியனுப்ப ஜானும், எட்வர்டும் கதவு வரை வந்தனர். எட்வர்ட் மணியை பார்த்தான். 7.40 இன்னும் இருபது நிமிடங்களுக்குள் பி.ஏ.,க்கு போன் செய்ய வேண்டும். “கர்த்தரே… எங்களை ஏன் இவ்வளவு சோதிக்கிறீர்? என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று கோடிட்டுக் காட்டக் கூடாதா?’
கடை வாசலில் மரியா விடை பெற்றுக்கொண்ட போது, எட்வர்ட் அவளிடம் கேட்டான்… “”மரியா… நேரா வீட்டுக்கு போய் உங்கம்மாகிட்ட இந்த பொக்கேய கொடுத்துருவ இல்ல?”
“”இல்ல அங்கிள். நான் வீட்டுக்கு போவல… கல்லறைக்கு போறேன். எங்கம்மா ரெண்டு வருஷத்துக்கு முன்னால செத்துட்டாங்க. இந்த பொக்கேய அவங்க சமாதியில வைக்கப் போறேன். பொக்கே சூப்பரா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நான் வரேன்.”
அதிர்ச்சியில் உறைந்து போயினர் ஜானும், எட்வர்டும். கண்ணீர் திரையின் மூலமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிரச்னைக்கு முடிவு கிடைத்து விட்டது. எட்வர்ட் போன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான். மூன்று லட்சம் என்ன, மூன்று கோடி கொடுத்தாலும் அந்த தேதியில் அவர்களால் வரமுடியாது என்பதை அமைச்சர் பி.ஏ.,விடம் சொல்வதற்காக!

– ஜூன் 2010

Print Friendly, PDF & Email

1 thought on “தாயில்லாமல் நானில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *