“”என்ன பானு சொல்றே? உன்னாலே சென்னை வர முடியாதா?”
அசோக் கோபம் பாதி, வேதனை பாதியாகக் கேட்டான்.
நகப் பூச்சு போட்டுக் கொண்டிருந்த பானு நிதானமாகச் சொன்னாள்.
“”ஆமா உங்கம்மாவுக்கு சிஷ்ரூசை செய்ய நான் வேலையை மாத்திக்க முடியாது”
கோபத்தை அடக்கிக் கொண்டு அசோக் சொன்னான்.
“”சேர்ந்து இருந்தா சிஷ்ரூஷையா?”
“”இதோ பாருங்க அசோக் வீணான ஆர்க்யூமெண்ட் வேண்டாம். என்னால என் வேலையை சென்னைக்கு மாத்திக்க முடியாது”
“”கல்யாணத்துக்கு முன்னாடி பாக்கலாம்னு சொன்னியே?”
“”நீங்க கூடத் தான் எத்தனையோ சொன்னீங்க. அத்தனையும் நடந்திடிச்சா என்ன?”
“”பானு”
“”இதோ பாருங்க இப்பத் தான் ஹனிமூன் முடிச்சு ஊர் திரும்பறோம். நீங்க வேணா உங்க வேலையை மாத்திட்டு சென்னை போங்க. நான் இங்கேயே பெங்களூருலே இருக்கேன்”
அசோக் பேசவில்லை.
இருவரும் பெங்களூரில் ஒரு ஐ டி கம்பெனியில் வேலை பார்த்து காதலித்து பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடித்து எல்லாம் கூடி வருகிற வேளையில் இதென்ன குழப்பம்?
அசோக் தன் தாயை நினைத்துக் கொண்டான்.
“”அம்மா நீ இப்படி தனியா இந்தக் கிராமத்திலே இருக்க வேண்டாம் . வீட்டை வித்துட்டு…”
“”வேண்டாம் அசோக். நீயே பேச்சிலர் குவார்ட்டஸ்லே மெஸ்ஸþலே சாப்பிட்டுட்டு இருக்கே. உனக்குக் கல்யாணம் ஆகட்டும் அப்பறம் பாக்கலாம்..”
“”எனக்கு சென்னையிலே ப்ரமோஷனோட வேலை உறுதி ஆயிடிச்சு”
“”சரி நீ முதல்லே சென்னை வா அப்பறம் பாக்கலாம்…”
சென்னை தாண்டி வேளச்சேரி பக்கத்தில் ஓர் இரண்டும் கெட்டான் ஊர் அது. அங்கே இவர்களின் பூர்வீக வீடு ஒன்று இருக்கிறது. அம்மா அங்கு தான் இருக்கிறாள். இப்போது தான் டெவலப்பர்களின் கண்களில் இந்த இடம் தென்பட்டிருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக ப்ளாட் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த இடத்தில் குப்பைகளை எரித்துக் கொண்டிருப்பதால் ஒரே புகை மயம். ஆஸ்துமா வியாதிக்காரர்களுக்கு ஒத்து வராது. ஆனாலும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள்.
திருமணத்திற்குப் பின் நிலைமை மாறி அம்மா தன்னுடன் வரச் சம்மதிப்பாள் என்ற எண்ணத்தில் புதிதாக வளர்ந்து வரும் சோளிங்கநல்லூரில் ஒரு ப்ளாட்டை புக் செய்திருக்கிறான் இவன்.
திருமணம் ஆகி விட்டது. ஆனால் இவன் நினைத்த இரண்டாவது வேலை தான் நடக்க வில்லை.
இப்போது பானு வேறு முட்டுக் கட்டை போடுகிறாள்.
“”உங்கம்மா தனியா இருந்தா என்ன? எங்கம்மா கூடத் தான் மும்பையிலே தனியாத் தான் இருக்கா. உங்கம்மாவுக்காவது அக்கம் பக்கம் மனுஷா உதவி இருக்கு”
“”இதோ பார் பானு. உங்கம்மா எங்கம்மான்னு பிரிச்சுப் பேசாதே. தாய்மைங்கிறது எல்லாருக்கும் பொது..”
“”வேண்டாங்க அப்படி அம்மா கூடத் தான் இருக்கணும்னு இருந்தா ஏன் பெங்களூர்லே வந்து வேலை பாத்தீங்க ப்ளீஸ்”
“”இந்த டாப்பிக்கை இத்தோட விட்டுடுங்க…”
தப்பு இவளைக் காதலித்தது தப்பு
திருமணத்திற்குப் பிறகு வேலையை மாற்றிக் கொண்டு சென்னை போய்விடலாம் என்று நினைத்தது அதை விடத் தப்பு.
தன்னுடன் தன் தாயும் இருப்பாள் என்று நினைத்தது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய தப்பு தப்பு.
ஆனால் அம்மா எதையும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்று கேட்கவில்லை பறவைகள் தம் சிறகுகளைச் சுமையென்று நினைக்கின்றனவா? செடி தன் கனிகளைச் சுமையென்று நினைக்கிறதா?
ஆனால் பானு தன் கடமைகளைக் கூட சுமையாக
நினைக்கிறாள்.
பெங்களூரின் ராஜ ராஜேஸ்வரி கோவிலில் திருமணம் முடிந்து ஏதோ ஒரு ஹோட்டலில் ரிஸப்ஷனும் முடிந்த பிறகு மண்டபத்தில் அவர்களை வாழ்த்தியதுடன் அந்தத் தாய் தன் கடமை முடிந்து தன் கூட்டுக்குள் சென்றுவிட்டாள்.
இவனுக்குத் தான் மனசாட்சி அடித்துக் கொண்டது.
தனி மனுஷியாக இருந்து வாழ்வில் பல தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்டவள் இவன் தாய்.
படிப்பறிவில்லாத அவள் தன் அனுபவ அறிவால் பல பிரச்னைகளை வெற்றி கண்டிருக்கிறாள்.
வாழ்வின் துருப் பிடித்த பக்கங்களைத் தூக்கி எறிந்தவள் அவள்.
வேரும் நீரும் செடி வளரப் போதுமானவை என்று உணர்ந்து, அன்பு நீரையும் மன உறுதி என்கிற ஆணி வேரையும் நம்பி மரமாக வளர்ந்தவள்.
வாழ்வின் முயற்சியின் பக்கங்களைப் புரட்டியவள்.
பையன் பிறந்த பிறகும் கூட போஸ்டலில் கல்வி பயின்று பட்டம் பெற்றவள்.
சின்னச் சின்ன வாக்கியங்களை சிறு சிறு புத்தகங்களாகப் போட்டவள். அந்த அனுபவ வாக்கியங்கள் அனைவருக்கும் பிடித்திருந்ததில் அதிசயமில்லை.
சமையல் கலையை மட்டுமே நம்பி புத்தகம் வெளியிட்ட மீனாஷி அம்மாள் மீனாஷி இல்லத்தை உருவாக்கினார் என்றால், இவளால் தன் இல்லத்தை அன்பு மகனை உருவாக்க முடியாதா என்ன?
முயற்சி என்பது விதை முளைத்தால் மரம் இல்லையென்றால் உரம்.
இவளுள் அனுபவங்கள் உரமாகிக் கிடந்தன.
அதனால் தான் அசோக் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்ன போது கருத்து மாற்றம் ஏதுமின்றி அதை ஏற்றுக் கொண்டாள்.
இனி….
அசோக் சோர்ந்து போனான். இனி பானுவிடம் பேசிப் பயன் இல்லை
சனி ஞாயிறுகளில் இவன் தான் தன் தாயைப் போய் பார்த்துவிட்டு வந்தான்.
போகும் போது நிறையப் பலகாரங்கள் ஸ்வீட் வாங்கிப் போவான்.
அம்மாவுக்கு பூசணி அல்வா பிடிக்கும் டம்ரூட் அல்வா வாங்கிப் போவான்.
பானு தான் அனைவருக்குமே அல்வா தருகிறாளே?
“”பானு வரலியா?” என்று அம்மாவும் கேட்கமாட்டாள். அவளுக்குத் தெரியும்.
நடக்காததைக் கனவு காணும் தாயல்ல அவள்.
அன்று அம்மாவுக்கு உடல் நிலை சரியல்லை என்று தகவல் வர இவன் தான் லீவு போட்டுவிட்டுக் கிளம்பினான்
“”எனக்கு ஆபீஸில் ஆடிட்டிங் இருக்கு. என்னால். வர முடியாது” என்று பானு சொல்லிவிட்டாள்.
இதுவே அவள் தாய்க்கு ஏதாவது நடந்தால் இப்படி இருப்பாளா?
வேண்டாம் எல்லாரும் நன்றாக இருக்கட்டும்.
அம்மாவுக்கு லேசான அட்டாக். இவன் தான் பத்து நாட்களாக மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக அலைந்தான்.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தபோது அவன் சொன்னான்.
“”இனிமே நீ தனியா இங்கே இருக்க வேண்டாம். என்னோடு பெங்களூருக்கு வந்துடு” என்றான் அசோக்.
“”வேண்டாம்பா ரெஸ்டுலே இருந்தா எல்லாம் சரியாயிடும்”
“”அதான் இத்தனை நாள் இருந்தாச்சே. பேசாம ஊருக்குப் போ. அதான் ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கே… இன்னும் என்ன? எனக்கு ஒண்ணுமில்லை..
இவன் வேதனையுடன் ஊர் திரும்பினான்.
அம்மாவிற்கு வேளைக்குக் கொடுக்க வேண்டிய ஆகாரம் மருந்துகள் எல்லாவற்றையும் சார்ட் போட்டு அந்த ஆயாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
வீடு நிசப்தமாக இருந்தது.
பானுவிற்கு என்னவாயிற்று?
பேசாமல் கிளம்பி மும்பை போய்விட்டாளா?
கையிலிருந்த டூப்ளிகேட் சாவி மூலம் வீட்டைத் திறந்தான்.
பானு எங்கே?
பெட்ரூமில் யாரோ முனகும் சப்தம்..
பானு பெட் ரூமில் போர்த்திப் படுத்திருந்தாள்.
“”என்னாச்சு பானு?”
“”எனக்கு என்ன ஆனா என்ன? உங்கம்மா நல்லா இருக்காங்களா?”
“”என்ன பானு இப்படி பேசறே? அட்டாக் வந்த அம்மாவைப் பாக்கப் போனது தப்பா?
“”தப்பே இல்லை அம்மா கோண்டு நீங்க… உங்க கிட்டே வேற என்னத்தை எதிர்பாக்க முடியும்?”
இவனுக்கு எரிச்சலும் கோபமும் வந்தது.
அப்போது…
டெலிபோன் கூப்பிட்டது.
இவன் பேசினான்..
மறுமுனையில் ஒரு லேடி டாக்டர்.
“”ஓ மிஸ்டர் அசோக்கா கன்கிராட்ஸ்.. நீங்க அப்பா ஆகப் போறீங்க. பட் உங்க ஒய்ப் அனீமிக்கா இருக்காங்க.. சில மாதங்களுக்கு பெட் ரெஸ்ட் தேவை. நான் மெடிசன் எல்லாம் ப்ரஸ்கிரைப் பண்ணி இருக்கேன். டேக் கேர்” இவனுக்கு மகிழ்ச்சி அதிர்ச்சி. பானுவின் கரங்களை முத்தமிட்டான்.
ரெஸ்ட் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இல்லாவிட்டால் தட்டாமாலை சுற்றி இருப்பான்.
“”பானு சொல்றதைக் கேளு. பேசாம இந்த வேலையை விட்டுட்டு”
அவன் முடிப்பதற்குள் பானு மறுத்தாள்.
“”முடியாது. இந்த வேலையை விட முடியாது…நல்ல சம்பளம் இந்த வேலை கிடைக்காது..ரெண்டு மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறம் மெட்டர்னடி லீவுக்கு அப்ளை பண்ணி சமாளிக்கலாம்”
“”குழந்தையையும் வைச்சுட்டு நீ எப்படி ஆபீஸ் போவே? பேசாம அம்மாவை..”
“”இது தான் சாக்குன்னு உங்க அம்மாவை”
“”அவசரப்படாதே பானு. நான் என் அம்மாவைச் சொல்லல்லை. உங்க அம்மாவை வரச் சொல் ..”
பானு தயங்கியபடி சொன்னாள்..
“”என் அம்மா கிட்டே பேசிப் பாத்துட்டேன். மன்னி கர்ப்பமா இருக்காளாம். அம்மா அமெரிக்கா போகப் போறாங்களாம் ப்ளைட் டிக்கெட் கூட வந்தாச்சாம்…”
நாட்கள் வாரங்கள் மாதங்கள் செக் அப் மருந்து டானிக் நாட்கள் ஓடியதே தெரியவில்லை..
செய்தி கேட்டு அம்மா மகிழ்ந்தாள். “”பானுவைப் பத்திரமா பாத்துக்கோ” என்றாளே தவிர, “”நான் வரட்டுமா?” என்று கேட்கவில்லை.
அவளுக்குத் தெரியும். இங்கு அழைப்பதற்கு யாருமில்லை என்று தெரியும் அழையாதவர் வீட்டு வாசலை மிதியாதவள் அவள்.
ஆண் குழந்தை பிறந்தது பட்டுக் குஞ்சலம் போன்று மென்மையான சருமம். பவளவாய் பிங்க் நிறத்தில் உள்ளங்கைகள்.
பானுவைத் தாயாக்கி இவனைத் தந்தையாக்கிய மதலை.
அம்மா வாழ்த்துக்களுடன் பரிசுப் பொருட்களுடன் பிரசவ லேகியம் தானே தயாரித்து கொரியரில் அனுப்பி இருந்தாள்.
பிஞ்சு மதலையை வீட்டிற்கு எடுத்த வந்தபோது ஆரத்தி எடுக்கக் கூட யாருமில்லை.
கண்ணீரைத் துடைத்தபடி பானு வீட்டில் அடி எடுத்து வைத்தாள்.
ஒரு மாதம் ஓடி விட்டது.
ஆயா ஒருத்தி வந்து குழந்தையைக் குளிப்பாட்டி கூட மாட உதவி செய்து வந்தாள்.
பானு யோசனையில் மூழ்கிக் கிடந்தாள்.
அன்று……..
தன் கணவனிடம் தயங்கியயபடி வந்தாள் பானு.
குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருந்த அசோக் அவளைப் பார்த்தான்.
“”நாளைலே இருந்து நான் வேலைக்குப் போகணும்”
“”தெரியும்..”
“”அதில்லை குழந்தை?”
“”அதான் வீட்டோட ஆயா இருக்காளே அவ பாத்துப்பா”
“”அதில்லை ஆயாவோட பராமரிப்புலே குழந்தையை விட நான் தயாரா இல்லை?”
“”என்ன செய்யலாம்?”
“”ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா உங்க அம்மாவை”
“”இதோ பார் எங்கம்மாவை இழுக்காதே. அவங்க இப்பத்தான் அட்டாக் வந்து குணமாயிட்டு வராங்க. அவங்களாலே எல்லாம் இங்கே வர முடியாது”
“”அவங்க ஏன் இங்கே வரணும்? நாம் அங்கே போகலாம். நம்ம ரெண்டு பேரும் வேலையை மாத்திட்டு சென்னை போயிடலாம்”
இவன் திகைப்புடன் அவளைப் பார்த்தான்.
“”ஆமாங்க குழந்தையை ஆயாவோட பராமரிப்பிலே நான் விடத் தயாரா இல்லை. அம்மா பாத்துட்டா போதும். பாக்கி வேலை யெல்லாம்”
“”அதுக்காக நாம் சென்னை போகணுமா? குழந்தை அம்மா கிட்டே இருக்கட்டும். நாம சனி, ஞாயிறு போய்ப் பாத்தா போதாதா?”
“”என்னங்க சொல்றீங்க? பெத்த குழந்தையை ஒரு வாரம் பாக்காம சனி, ஞாயிறு மட்டும் பாக்க முடியுமா? இதென்ன ஆபிஸ் டூர் போற விஷயமா? காலத்தோட கட்டாயம் நான் வேலைக்குப் போறேன். ஆனா நான் ஒரு தாய் அதை மறந்துடாதீங்க.. என் மகனைப் பாக்காம என்னால இருக்க முடியாது”
குழந்தை தூங்கி விட்டது. அதை படுக்கையில் கிடத்திய அசோக் தன் மனைவியின் அருகில் வந்தான்.
“”பானு இந்தக் குழந்தைக்கும் உனக்கும் உறவு ஏற்பட்டு ஒரு சில மாதங்களே ஆச்சு.. இதையே உன்னால தற்காலிகமாகக் கூட பிரிய முடியலேன்னா என் தாயை நினைச்சுப் பார். இருபத்தி ஐஞ்சு வருஷமா என்னை வளத்து ஆளாக்கியவள் உயிருக்கும் உயிராய் நேசித்து தாயாய் ஆயாவாய் தன் நேசத்திலேயும் பாசத்திலேயும் வளத்து நெஞ்சிலே தாலாட்டி என்னை வளத்த தாய். அவளால மட்டும் தன் மகனைப் பிரிஞ்சு இருக்க முடியுமா? தாய்மைங்கிறது பொது மொழி. அதன் அர்த்தம் எல்லா இடங்களிலேயும் ஒரே மாதிரித்தான், அது அன்பு மொழி, பாச மொழி, நேச மொழி. அன்பு தான் அதன் பரி பாஷை. பாசம் தான் அதன் இலக்கணம். புரியுதா?”
பானு கை கூப்பினாள்..
“”புரியுதுங்க. நாம எப்போ சென்னை கிளம்பறோம்”
தூக்கத்தில் அரி மிரட்டலில் குழந்தை சிரித்தான்.
சீக்கிரம் சோளிங்கநல்லூர் ப்ளாட்டில் குடி புக நாள் பார்க்க வேண்டும்.
அவனுள் எத்தனை எத்தனையோ கற்பனைகள்
முதலில் இந்தச் செய்தியை அம்மாவிடம் சொல்ல வேண்டும்
அவன் மொபைல் போனை எடுத்த அதே நேரம் போன் கூப்பிட்டது.
பேசினான்.
“”பானு நாம இப்பவே சென்னை கிளம்பறோம்”
“”ரொம்ப சந்தோஷங்க”
“”என் அம்மா இறந்துட்டாங்களாம்”
– மே 2014
அன்புடையீர் ,
வணக்கம். தாயாகி வந்த தனிக் கருணை சிறுகதை அருமை தனக்கு வந்தால்தான் தலைவலியும் காய்ச்சலும் என்பது போல் பானு தாயாகிப் போன பின்புதான் தாயின் அருமை தெரிகிறது. யதார்த்தமான கதை. எளிய நடை. எழுத்தாளருக்கு எனது பாராட்டுக்கள். சிறுகதையை இடம்பெறச் செய்த சிறுகதைகள் இணைய தளத்திற்கு நன்றி.
பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை .