பத்மா தனது சைக்கிளை அந்த முதியோர் இல்லத்துக்கு முன்பாக நிறுத்திவிட்டு, இல்லத்தின் தெற்குப் பக்கமாக இருந்த மைதானத்தை நோக்கி நடந்தாள்.
இல்லத்துக்கும் வீதிக்கும் இடையே உள்ள மைதான நிலப்பரப்பில் தூரத்துக்கு ஒன்றாக நின்ற இளம் மரங்களில் இலைகள் ஒன்றுகூடக் காணபடவில்லை.
“இந்த மரங்களுக்கு என்ன பெயர் பத்மா? ” என அன்று அவளுடைய தாத்தா, தாயின் தகப்பனார், கேட்டபோது அவளுக்கு அவற்றின் பெயர்கள் தெரிந்திருக்கவில்லை”தெரியாது!” என அவள் சொன்னபோது அவருடைய முகத்தில் ஒரு வியப்புக் கலந்த புன்னகை தோன்றியதை அவள் அவதானித்திருந்தாள்.
எட்டு வயதிலே டென்மார்க்குக்கு வந்து, ஏழு வருடங்களாக இந்த பாறும் பட்டணத்தில் வசித்தும், இங்கு சாதாரணமாகக் காணப்படும் இந்த மரங்களின் பெயரைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றாயா பத்மா? என ஆச்சரியப்படுவது போலிருந்தது தாத்தாவின் புன்னகை.
இன்று, பத்மாவுக்கு அந்த மரங்களின் பெயர்கள் தெரிந்திருந்தன. கோடை விடுமுறை முடிந்து தாத்தாவும் இலங்கைக்கு திரும்பியபின், அவள் முதல் வேலையாக தன் வகுப்புத் தோழி ரீனாவிடம் அவற்றின் பெயர்களை மட்டுமல்லாது மேலும் பல விசயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தாள்.
அந்தச் சமயத்தில்தான், தனக்கொரு தாத்தாவோ பாட்டியோ இல்லை என்ற ஆதங்கம் ரீனாவுக்கு இருப்பதை பத்மாவினால் அறியமுடிந்தது. எனக்கு ஒரு “பெஸ்ர கூடக் கிடையாது!” என ரீனா கவலையுடன் சொல்லியிருந்தாள்.
அப்பா, அம்மா என்ற சொற்களுக்கு “பெஸ்ர” என்ற அடைமொழியைச் சேர்த்து “மிகச் சிறந்த அப்பா” அல்லது “மிகச் சிறந்த அம்மா” என்ற அர்த்தம் தொனிக்க, டெனிஸ் பிள்ளைகள் தமது பாட்டன், பாட்டியை அழைப்பது பத்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விசயமாக இருந்ததில் வியப்பில்லைத்தான். ஏனெனில் அவளுக்குத் தன் தாத்தாவின்மேல் அத்தனை பிரியம் இருந்தது.
“பெஸ்ர” என ஒரு தடவை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள் பத்மா, கலங்கிவிட்டிருந்த கண்ணைத் துடைத்தவளுக்கு, அந்த முதியோர் இல்லத்தின் முகப்புச் சுவரில் செய்யப்பட்டிருந்த சிற்ப வேலைப்பாடு தென்பட்டது.
பெரியதொரு வளையம் போன்ற வட்டத்தினுள் மழைக் கண்ணிகள் போன்ற சிறிய பறவைகள் பல சேர்ந்து கூட்டாகப் பறந்து கொண்டிருந்தன. அவை, கலைந்து, பறக்காமல், ஒரு ஒழுங்கில், ஒரு திசைநோக்கி இசைவாகப் பறந்துகொண்டிருந்தன. வானில் ஜிவ்வென்று எழுந்து, இலாவகமாகத் திரும்பி, மேல்நோக்கிப் பறந்த அந்தப் பறவைக் கூட்டத்தின் முன்னோடிப் பறவைகளில் இரண்டொன்று, அந்தப் பெரிய வட்டத்திற்கு வெளியே போய்விட்டிருந்தன. அவற்றைத் தொடரும் மற்றப் பறவைகளும் இன்றோ நாளையோ, தமது முறை வரும்போது வட்டத்தைவிட்டுப் பறந்து எங்கேயோ போய்விடும் என்பதை அந்த முதியோர் இல்லச் சிற்பச் சின்னம் மிக அழகாகச் சொல்வது பத்மாவுக்கு இப்போது புரிந்தது.
போரில்லாத, அமைதி நிலவும் டென்மார்க்கில், பறவைகள் ஒன்றாய், இரண்டாய் தத்தம் முறை வரும்போதுதான் உலகைவிட்டுப் பறக்கும். குண்டுகளும், செல்களும் அன்றாடம் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கும் வன்னியில் முறையற்ற முறையில் அல்லவா மக்கள் மரணிக்கின்றனர்!
நேற்று சனிக்கிழமை காலையில்தான், உடையார்கட்டில் தற்காலிகமாக வசித்த தாத்தா செல் விழுந்து செத்துப்போனதாகச் செய்தி வந்திருந்தது. அதுவும் அவர் இறந்து ஒரு மாதத்திற்கும் பின்புதான், கொழும்புக்கு வந்த உறவினர் சொல்லி அறிந்த செய்தி!
அம்மா துடித்துப் போனாள். பத்மாவுக்கு அவளைப் போல வாய்விட்டு அழுது துன்பத்தைக் கவிழ்த்துக் கொட்டிவிடத் தெரியவில்லை. பாடசாலை சென்றாலாவது வேறு விசயங்களில் புலனைச் முடிந்திருக்கும். சோகத்தின் அமைதியில் ஆழ்ந்திருக்கும் வீட்டில் இருக்க முடியாமல் பத்மா சைக்கிளை எடுத்துக்கொண்டு மனம் போனபோக்கில் வந்திருந்தாள்.
தன்னை அறியாமலே தான் இந்த இடத்தைக் தேடி வந்ததற்குக் காரணம் தாத்தாவின் நினைவுதான் என்பதை பத்மா இப்போது உணர்ந்தாள்.
0000000000
இந்த மைதானத்தில்தான் அவளும் தாத்தாவும் ஒரு காலைப் பொழுது முழுவதும் ஒன்றாக இருந்திருந்தனர். அன்றுதான் அவர் பத்மாவுக்குச் சில சில விசயங்களைக் கூறியிருந்தார். அதுவரை ஆழமற்ற சிந்தனைகள் ஏதுவுமின்றி, பதினைந்து வயதிலும் ஒரு குழந்தையாய் ஓடியாடிச் சிரித்துக் களித்திருந்த பத்மா, பிறரைப், பிறருடைய துன்ப துயரங்கள்பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தாள்.
பத்மா அங்கு நின்ற மரங்களுக்கு நடுவே, ஓரிடத்தில் இருந்த பெரிய பாறைபோன்ற கல்லை நோக்கி நடந்தாள். இரண்டாவது உலகப் போரில் நாட்டைக் காப்பதற்காக உயிரை ஈந்த போர்வீரர்களின் நினைவுச் சின்னமாக அது அங்கே வைக்கப்பட்டிருந்தது.
அந்தக் கல்லின் அருகில்தான் அவளும் தாத்தாவும், அன்று காலையிலேயே மேசை கதிரை சகிதம் வந்து இடம்பிடித்து அமர்ந்திருந்தனர். மேசையின்மீது, பத்மா தான் வரைந்த ஏழெட்டுச் சித்திரங்களைப் பரப்பி, அவற்றுக்கு விலையும் குறித்திருந்தாள்.
கோடை விடுமுறையின்போது டென்மார்க்கில் பல இடங்களிலும் நடைபெறும்”லொப்ப மாக்கற்” என அழைக்கப்படும் “திறந்தவெளிச் சந்தை” அன்று அந்த முதியோர் இல்ல மைதானத்திலும் நடக்கவிருந்தது. இப்படியான சந்தையில் பெரியவர்கள் மாத்திரமன்று, சிறுவர் சிறுமியரும் வெவ்வேறு பொருட்களைக் கொண்டு வந்து விற்பனைக்கு வைப்பதையும் அவற்றுள் சித்திரங்கள், கைவினைப் பொருட்கள் போன்ற பொருட்கள் இருப்பதையும் பத்மா அறிந்திருந்தாள். தானும் தனது சித்திரங்களை இப்படியானதொரு சந்தையில் வைத்து விற்கவேண்டும் என்ற விருப்பம் பத்மாவுக்கு தோன்றியதன் காரணமாகவே அவள் தன் தந்தையிடம் சொல்லி, காரில் கதிரை மேசையையும் ஏற்றிக்கொண்டு, ஊரிலிருந்து வந்த தாத்தாவையும் கூடவே அழைத்துக்கொண்டு வந்திருந்தாள்.
அன்று காலை எட்டு மணிக்குள்ளாகவே மைதானம்களை கட்டிவிட்டிருந்தது. விற்பதற்கு வந்தவர்கள் வசதியான இடங்களை பிடித்து, பொருட்களையும் கடை பரப்பி வைத்திருந்தனர். தையல் ஊசி முதல் கோப்பை பீங்கான், கத்தி கரண்டி எனப் பல நூறு வகையான பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. பளீரென எறித்த வெய்யிலை அனுபவித்தவாறே, அவர்கள் தாம் கொண்டு வந்திருந்த பான வகைகளையும், சிற்றுண்களையும் அருந்தியவாறே, ஒருவரோடு ஒருவர் குதூகலமாகப் பேசிப் சிரித்து, மகிழ்ச்சியாக இருந்தனர்.
வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே வரும் இதமான காலநிலையையும், அது கொண்டுவரும் புத்துணர்வையும் ஆசைதீர அனுபவித்து விடவேண்டும் என்பதுபோல அவர்கள் யாவரும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர்.
மெல்ல மெல்ல மக்கள் கூட்டம் சேர ஆரம்பித்து விட்டிருந்தது. தனித்தும், குடும்பமாகவும், நண்பர்கள் குழுக்களாகவும் அவர்கள் சுற்றி நடந்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஆர்வத்துடன் பார்த்து, கையிலெடுத்து, விலைகேட்டு வாங்க ஆரம்பித்திருந்தனர்.
இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பத்மாவுக்கு நேரம் செல்ல செல்ல மனதில் ஒரு சோர்வு ஏற்படலாயிற்று. இதுவரை எவருமே அவளுடைய சித்திரங்களை நெருங்கி வந்து பார்க்கவில்லை. பக்கத்தில் செல்பவர்கள்கூட அவற்றை மேலோட்டமாக பார்ப்பதுடன் சென்றுவிடுவதை அவள் கவனித்தாள். அதன் காரணமாக அவள் உற்சாகம் இழந்துபோனதை அவளுடைய தாத்தா கவனிக்கத் தவறவில்லை.
“ஒருவேளை, நாங்கள் வெளிநாட்டவர் என்பதால்தான் எவரும் எனது சித்திரங்களைப் பார்க்க விரும்பாமல் போகின்றனரோ” என்ற தன் சந்தேகத்தைப் பத்மா தாத்தாவிடம் கூறியபோது, அவர் அதை உடனடியாக ஆமோதிக்கவில்லை. “நான் ஒருதடவை மற்றக் கடைகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்” எனச் சொல்லிவிட்டுப் போனார்.
அங்கிருந்த பல கடைகளையும் கூர்மையாகக் கவனித்த போது அவருக்கு ஒரு உண்மை புலப்பட்டது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்துமே உபயோகித்த பொருட்களாகவே இருந்தன. மேலும் அவற்றுக்கான விலைகளோ, மிகமிகக் குறைந்த தொகையாக இருந்தன. அத்துடன் சந்தைக்கு வந்த மக்களும், குறிப்பாக எதையும் வாங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தவர்களாகத் தெரியவில்லை. திருவிழாக் கடைகளை வேடிக்கை பார்க்கும் இயல்பே அவர்களில் தெரிந்தது.
இந்தச் சந்தையில் பொருட்களை விற்க வந்தவர்கள் எவருமே பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் அல்ல என்பதை பத்மாவின் தாத்தா சிறிது நேரத்துக்குள்ளாகவே புரிந்து கொண்டிருந்தார்.
அவர் மைதானத்தைச் சுற்றிக்கொண்டு பத்மா அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து அவளுக்கு சில விசயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
“பத்மா! – உன்னுடைய சித்திரங்களைப் பிறர் இரசிக்கவேண்டும், பாராட்ட வேண்டும், வாங்கவேண்டும் என்று நீ ஆசைப்பட்டதில் தவறு ஒன்றுமில்லை! ஆனால், இந்தச் சந்தை அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான இடமில்லை!… அதைப் புரிந்துகொள்ளாமல் டெனிஸ் மக்கள் நீ வெளிநாட்டவள் என்பதனால்தான் உனது சித்திரங்கள்மேல் அக்கறை காட்டவில்லை என எண்ணுதல் தவறு!…
தாம் என்றோ ஆசையுடன் வாங்கிய பொருட்களை, இடம் பற்றாமையாலோ அல்லது அவற்றின்மேல் உள்ள விருப்பம் குறைந்ததாலோ அவர்கள் அவற்றை வீணே வெளியில் எறிந்துவிட மனதில்லாமல், அவற்றை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இங்கு வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது! அதனால்தான் அவர்கள் தமது பொருட்களுக்குக் குறித்திருக்கும் விலை மிகக் குறைவாக இருக்கின்றது. இந்த விலை, பொருட்களின் பெறுமதிக்காக அல்லாமல், வெறும் சம்பிரதாயத்துக்காக சொல்லப்படும் விலையாக எனக்குத் தெரிகின்றது. நீ உனது சித்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஐம்பது குறோண் விலை குறித்திருக்கின்றாய்! அத்துடன் அவை புதியவையாகவும் இருக்கின்றன! எனவேதான் எவரும் அவற்றில் அக்கறை காட்டவில்லை என நான் நினைக்கின்றேன்”
தாத்தா கூறியதைக் கேட்ட பத்மாவுக்கு அவருடைய கூற்றுச் சரியாகவே தோன்றியது.
சித்திரங்கள், ஓவியங்கள் போன்றவற்றுக்கென தனியான காட்சிகள் நடப்பதையும், உள்ளுராட்சிமன்றம் போன்ற பொது இடங்களிலுள்ள மண்டபங்களை அந்த நோக்கத்துக்காக டெனிஸ் மக்கள் பயன்படுத்துவதையும் அவள் இப்போது நினைத்துக் கொண்டாள். தனது சித்திரங்களின்மீது எவரும் பெரிதாக அக்கறை காட்டாததற்கு உரிய காரணத்தை அறிந்தபோது அவளுடைய ஏக்கமும் கவலையும் போய்விட்டிருந்தன.
“தாத்தா! இனிமேல் எதற்காக நாங்கள் இங்கே இருக்க வேண்டும்? இந்த அப்பாவையும், அம்மாவையும் இன்னும் காணவில்லையே… அவர்கள் வந்துவிட்டால் எல்லாவற்றையும் அள்ளிக் கட்டிக் கொண்டு போய்விடலாம்!” என்று சொல்லிக் கொண்டே பத்மா தனது கதிரையில் சாய்ந்து கொண்டே பக்கத்தில் இருந்த அந்தப் பாறைமீது கால்களைத் தூக்கி வைத்தபோது தாத்தா பதறிப்போனார்.
“பத்மா!… என்ன இது!… இது ஒரு புனிதச் சின்னம் என்பதை மறந்து விட்டாயா? .. இதன்மேல் கால்படலாமா?” என்று கேட்டபோது பத்மா தனது கால்களைச் சட்டென இழுத்துக் கொண்டாள்.
வகுப்பில் ஆசிரியர் இருக்கும்போதே, மேசைமேல் கால்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு மாணவர்கள் அமரும் ஒரு சமூகத்தில் வளர்ந்த பத்மாவுக்கு, தாத்தாவின் இந்தப் பதட்டம் சற்று வியப்பையே அளித்தது.
அப்போது தாத்தா சொன்னது இப்போதும் மனதில் ஒலிப்பது போலிருந்தது.
” பத்மா! பரம்பரை பரம்பரையாக நாங்கள் வாழ்ந்த வீடுவளவு, சம்பாதித்த பொருட்கள் யாவற்றையுமே விட்டுவிட்டு, மழையிலும் இருட்டிலும் நாங்கள் யாழ்பாணத்திலிருந்து நடந்து வன்னிக்கு வந்தபோது எனது மனதில் இருந்த கவலை மிக அதிகம்தான். ஆனால், அதைவிட எனக்கு இன்னமும் கவலையை அளித்த காரியம் என்ன தெரியுமா? எங்கள் சாந்தன் உறங்கும் மாவீரர் துயிலும் இல்லத்தை, சிங்கள இராணுவம் காட்டுமிராண்டித்தனமாக கலப்பை கொண்டு உழுது அழித்த சங்கதி உனக்கு தெரியுமா? … ஊரில் இருக்கையில் நான் கோயிலுக்கு போகத் தவறினாலும் தினமும் எங்கள் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்று சாந்தனின் சமாதிமேல் பூவைப்பதற்கு மறப்பதில்லை! .. ” எனத் தழுதழுக்கும் குரலில் தாத்தா கூறியபோது பத்மாவுக்கு நெஞ்சை எதுவோ செய்தது.
00000000
ஊரில் பத்மா தனது தாத்தாவுடன் வாழ்ந்த காலம் குறைவுதான். ஏழு வயதில் அனுபவித்த தாத்தாவின் அன்பும் அணைப்பும் மட்டுமே பத்மாவுக்கு நினைவிருந்தது. ஆனால், அவர் கடந்த கோடை விடுமுறையின் போது ஊரிலிருந்து வந்து, டென்மார்க்கில் தங்கிய அந்த ஒருமாத காலத்தினுள் அவள் தன் தாத்தாவுடன் மிகவும் அன்னியோன்னியமாகி இருந்தாள்.
பேத்தியாகிய எனக்குத் தாத்தாமேல் இவ்வளவு பாசம் இருந்தால், அவருக்குத் தன் பேரப்பிள்ளைகள் மீது எவ்வளவு பாசம் இருந்திருக்கும்! அதுவும், விடுதலைப் போரில் தனது உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்த தனது மூத்த பேரப்பிள்ளை சாந்தனை ஒரு தெய்வமாக அல்லவா அவர் தனது மனதில் வைத்துப் போற்றினார்!
சாந்தன் எங்களைப் பற்றி என்ன சொன்னார் எனப் பத்மா ஒருமுறை கேட்டபோது தாத்தா சொன்னது இப்போ பத்மாவுக்கு நினைவுக்கு வந்தது.
“சிங்கள அரசு தமிழர்களை அழிப்பதற்காக எத்தனை வழிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றது! எட்டுலட்சத்துக்கும் அதிகமாக ஈழத் தமிழர்களை நாடு கடத்திவிட்டதாக அது தனக்குள் சந்தோசப்பட்டுக் கொள்கின்றது! ஆனால், இந்த எட்டு லட்சம் தமிழர்களும் எப்போதுமே எமது நாடு எப்போது விடுதலை பெறும், தமிழீழம் எப்போது மலரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்! அவர்கள் விடுதலைப் போராட்டத்துக்கு அளிக்கும் உதவி கொஞ்ச நஞ்சமல்லவே! பத்மாவைப் போன்ற எமது பிள்ளைகள், தாம் இப்போது வாழ்கின்ற நாடுகளில் உள்ள சிறப்பான அனைத்தையும் கற்றுக்கொண்டு வருவார்கள்! அப்போது தனித் தமிழீழம் உலக நாடுகளுக்கே ஒரு உதாரணமாக விளங்கும்! என்று சாந்தன் சொல்வதுண்டு!” என்று தாத்தா சொல்லியிருந்தார்.
அதுமட்டுமல்லாது, தாத்தா ஊருக்குப் புறப்படுவதற்கு முதல் நாளிரவு, தன்னை அழைத்து வைத்துக் கொண்டு சொன்னவற்றையும் பத்மா இப்போது உணர்ச்சி பொங்க நினைத்துக் கொண்டாள்.
“பத்மா! நாளை நான் போய்விடுவேன்!… மறுபடியும் உன்னை நான் காண்பேனோ என்பது எனக்குத் தெரியாது!… ஆனால், நான் இப்போது உனக்குச் சொல்லப் போவதை என்றும் மனதில் வைத்திரு!.. என்றவர் தொடர்ந்து, முன்பு எமது நாட்டில் கஸ்டப்பட்டுப் படித்துப் புலமைப் பரிசில் பெற்றவர்கள்தான் அனேகமாக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள்.. அந்த நாடுகளில் அவர்கள் உயர்கல்வியை முடித்துக் கொண்டு மறுபடியும் தமது நாட்டுக்குத் திரும்பி, தாம் பெற்ற உயர் கல்வி தமது மக்களுக்குப் பயன்பட வாழ்வார்கள்1…
சிங்கள அரசுகள் எமக்குத் தீமை செய்வதாக நினைத்துக்கொண்டு ஒரு வகையில் பெரிய நன்மையையும் செய்துள்ளதாக நான் நினைப்பதுண்டு!..
வெவ்வேறு நாடுகளில் இன்று வாழும் உன்போன்ற பிள்ளைகளுக்கெல்லாம் அவர்கள் புலமைப் பரிசில் தந்திருக்கின்றார்கள். நீங்கள் யாவரும் உங்களுக்கு உள்ள விசேச திறமை எதுவெனக் கண்டு, அதை விருத்திசெய்யும் வகையில் ஊக்கமாகப் படிக்கவேண்டும். உங்களுடைய உயர் கல்வி பூர்த்தியானதும் நீங்கள் தமிழீழம் வரவேண்டும். அங்கு வாழும் மக்களுக்கு உங்கள் திறமை பயன்தர வாழவேண்டும்!.. கடைசியாக நான் சொல்லப் போவதையும் கவனமாகக் கேட்டுக்கொள் பத்மா!…
இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாகக் கிடைப்பதில்லை. நாம் பெறும் ஒவ்வொரு விசயத்துக்கான விலையும் ஏதோ ஒரு வகையில் நாம் கொடுத்தே ஆகவேண்டும். இங்கு நீ உனது உயர் கல்வியைக் கற்பதற்கு யார் பணம் கொடுக்கின்றார்கள் என நீ நினைக்கின்றாய்?…. டென்மார்க் அரசாங்கமா? அல்லது உனது பெற்றோரா?… ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் உனக்கு உண்மை புரியும்! நீ இங்கு பெறும் உயர் கல்விக்கும், வசதியான வாழ்க்கைக்கும் விலையாகத் தமது உயிரையே கொடுப்பவர்கள் சாந்தன் போன்ற போராளிகள்தான்!… அவர்களுடைய நம்பிக்கை நிறைவேறும் வகையில் நீ வாழ்வாயா பத்மா?.. எனத் தாத்தா உணர்ச்சி மேலிட, உருக்கமாக கேட்டதற்கு “நான் நிச்சயம் அப்படியே செய்வேன்” என வாக்குக் கொடுத்தாள் பத்மா.
டென்மார்க் நாட்டின் விடுதலைக்காகத் தமது உயிரைக் கொடுத்த வீரர்களின் ஞாபகச் சின்னமாக விளங்கும் அந்தப் பெரிய கல்லின் அருகில் நின்ற பத்மாவுக்குத் தான் தாத்தாவுக்கு அளித்த வாக்குறுதி, அவருடைய மறைவின் பின்னர் மேலும் அதிகமாக உறுதிப்படுவது போன்றிருந்தது.
அவள் தன் விழிகள் இரண்டையும் மூடிக்கொண்டு, தன் கரங்களிரண்டையும் அந்தப் புனித தியாகச் சின்னத்தின் மேல் வைத்துக்கொண்டு “சாந்தனுடைய நம்பிக்கையை நான் நிச்சயம் நிறைவேற்று வேன் தாத்தா!” எனச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டாள்.
– அ. பாலமனோகரன், டென்மார்க்
நன்றி: அன்னை பூபதி ஆண்டு மலர் 1997