தம்பியா இப்படி…?!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 3,570 
 
 

வீட்டில் காலையில் படித்துக் கொண்டிருந்த விமல் …

“ஹை… தாத்தா…!”திடீரென்று குதூகலித்தான்.

எட்டிப் பார்த்தன்.

அப்பா வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு படியேறினார்.

“வாங்கப்பா…”எழுந்து நாற்காலிப் போட்டேன்.

“வாங்க மாமா…”என் மனைவி கையில் காபி கொடுத்தாள்.

குடித்தார்.

அவரின் முகம் சுண்டி இருந்தது.

நேற்று மாலை கூட நன்றாகத்தானே இருந்தார்..? திடீரென்று என்ன வாட்டம்…?

நான் சமீபத்தில்தான் கிராமத்தில் சுத்துக்கட்டு ஒட்டு வீட்டை விட்டு, அம்மா, அப்பா.. தம்பி குடும்பம் என்கிற கூட்டுக் குடும்பத்தைப் பிரிந்தேன்.

கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நகரை ஒட்டிய புறநகர் பகுதி ஒன்றில் மனைவியின் நகைகளை விற்று மனை வாங்கி, வங்கி கடனில் வீடு கட்டி தனிக்குடித்தனம் வந்தேன்.

தம்பிக்குத் திருமணம் முடித்து விட்டதால் வீட்டிற்கு வந்த பெண்களுக்குள் பிரச்சனை உருவாகி அது பூதாகரமாக உருவெடுத்து சகோதரர்களுக்கு மனவலி, சண்டை ஏற்பட்டு வா, போ என்பதையும் தாண்டி வாடா, போடா அளவிற்குப் போய் கை கலப்பு ஏற்பட்டு தனிக்குடித்தனம் போகாமல் இருக்க அப்பா, அம்மா, சம்மதத்தோடு இந்த ஏற்பாடு.

இதையெல்லாம் விட இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் ,. எனக்கும் என் அப்பாவிற்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

வேலை கிடைக்காத வெறுப்பில், மிராசு மதர்ப்பில்…. தம்பி குடுப்பத்தைக்கூட கவனிக்காமல் தத்தாரியாக ஊர் சுற்றுகிறான்.

நான் என்னைப் போல அரசு வேலை பார்க்கும் பெண்ணைக் கட்டிக்கொண்டு , இரண்டு பிள்ளைகளை பெற்று … எங்களுக்கு அலுவலகம், அவர்களுக்குப் பள்ளிக்கூடம் என்று ஏகப்பட்ட அலைச்சல்.

மேலும் மொத்தக் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, நிலம் நீச்சு , விவசாயம் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு…ஒரே உளைச்சல்.

எத்தனை நாட்களுக்கு இப்படி அல்லாடுவது..? ஏன் இவன் இப்படி சுற்றுகிறான்…? நான் சுமப்பதால்தானே இப்படி..? யோசிக்க புரிந்தது.

திருமணமாகி ஒரு குழந்தையும், அதுவும் பெண் குழந்தைப் பெற்றுவிட்டு இப்படி பொறுப்பற்றவனாக இருந்தால் அந்த குழந்தையின் எதிர்காலம்..? தனித்து வந்தால்தான் சுமை ஏற்படும் !.தெரிந்தது.

அப்பாவிடம் சேதி சொல்ல… அவருக்கும் புரிய என்று தனிக்குடித்தனம் வந்து விட்டேன்.

இருந்தாலும்…அவ்வப்போது சென்று பார்த்துக்கொண்டும் வருகிறேன்.

இப்போது முன்னைவிட அலைச்சல். தம்பி மாறவில்லை. அப்பாதான் கஷ்டப்படுகிறார்.!!

என்றாலும் நேற்று பார்த்த அப்பா நன்றாகத்தானிருந்தார். இன்றைக்கு என்ன வந்தது..?

“என்னப்பா..?”பார்த்தேன்.

“நேத்திக்கு அந்த வீட்டிலிருந்து இங்கு என்ன எடுத்து வந்தே..?”கேட்டார்.

“பம்பு !”சொன்னேன்.

“அதான் வம்பு”என்றார் .

“புரியல..? ! ”

“அண்ணன் இங்கே இருந்தபோது வாங்கின பொருட்களை எல்லாம் எடுத்துக்கிட்டுப் போனதோடு இருக்காம விட்டுப் போன சின்னச் சின்ன சாமான்களையும்… இங்கே வரும்போதெல்லாம் ஒன்னு ஒன்னா எடுத்துப் போவுது.மிஞ்சி இருக்கிறது…. கக்கூஸ்ல உபயோகப்படுத்துற பிளாஸ்டிக் குவளை . அடுத்த முறை வந்தா…அதையும் எடுத்துப் போகச் சொல்லி காரியத்தை முடிங்க…சொல்லி நேத்து முழுக்க எனக்கும் அவனுக்கும் வாக்குவாதம் ! ”

‘சைக்கிளுக்குக் காற்றடிக்கும் சாதாரண பம்பிற்கா வம்பு..? நான் குறி பார்த்து எடுத்துச் செல்வதாய் என்ன ஒரு குதர்க்கப் புத்தி..?! ‘ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதை சாமான்களோடு சாமான்களாக எடுத்து வராமல் விட்டது தப்பு. நாம்தான் நகரத்திற்குப் போகிறோமே அங்கே இல்லாத சைக்கிள் கடையா..? காற்று இறங்கினால் அடித்துக் கொள்ளலாம். கிராமத்தில் நிறைய முள் உண்டு. அடிக்கடி பம்பிற்கு வேலை இருக்கும் . இது இங்கேயே உதவியாய் இருக்கட்டும் என்று நினைத்து வந்தது மகா தவறு.

தம்பி ஏன் இப்படி நினைக்கிறான்..?

தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் என்று இப்படி தேவைக்காக வாங்கிய சாமான்களை எல்லாம் எடுத்து வந்ததில் வருத்தம்.

எல்லாம் விட்டு விட்டு புதிதாய் வாங்க வசதி இல்லை. எல்லாம் இருவர் கடன்களிலும், மாதத் தவணைகளிலும் வாங்கியது. விட்டுப் போவது எப்படி..? கடன்களுக்கு மேல் கடன்.

பிசாத்து இந்த பம்பை எடுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. புதிதாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட மகன்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தது எடுத்துக் கொண்டு வந்தது தவறு.

“சரிப்பா . நீங்க எடுத்துப் போங்க..”எழுந்து போய் எடுத்து வந்து கொடுத்தேன்.

“உனக்குத் தேவை இல்லையா…?”கேட்டார்.

“இங்கே அக்கம் பக்கம் நிறைய கடைகள் இருக்கு. சமாளிச்சுகிறேன். தேவைப்பட்டால் புதுசா அடுத்த மாச சம்பளத்துல வாங்கிக்கிறேன். ”

“சரி”என்று சொல்லி எடுத்து எழுந்த அப்பா…

“நீ இது சம்பந்தமா அவன்கிட்ட எதுவும் கேட்டுக்காதே.”நின்றார்.

“ஏன்ப்பா..? ”

“அவன் உபயோகப்படுத்தல. எனக்குத்தான் உபயோகம். நீ அடிக்கடி வந்து போனாலும்…உன் நினைவா நீ எப்போதும் என்னோட இருக்கிறதா இது என்கிட்டேயே இருக்கட்டும். இந்த தாக்கம்தான் உன் தம்பிக்கும் போல. அதான் சண்டை!! .”சொல்லி அப்பா கலங்கி கண்களைத் துடைத்துக் கொண்டு நடக்க…

அப்பா, தம்பி பாசத்தின் அந்த வலி எனக்குள்ளும் பரவ….பொசுக்கென்று கண்ணீர் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *