மகள் ரம்யாவின் திருமண அழைப்பிதழை முதன்முதலில் தன் அண்ணனிடம் கொடுக்க கணவர் ரவி எடுத்துப் போவார் என்று கமலா எதிர்பார்க்கவில்லை. அவருக்கும் அவர் அண்ணனுக்கும் வெகு நாட்களாய் மனஸ்தாபம். ரவி செய்யும் எந்த வேலையிலும் தப்பு கண்டுபிடிப்பதே அவர் அண்ணனுக்கு வேலை. முதல் அழைப்பிதழை அவரிடம் கொடுத்து, அவர் ஏடாகூடமாக எதையாவது சொல்லி வைத்தால் என்ன செய்வது? கவலைப்பட்டாள் கமலா.
அழைப்பிதழைத் தந்து விட்டு வந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. ரவியின் அண்ணன் வேகமாக வீட்டுக்குள் வந்தார். ‘‘என்ன பத்திரிகை அடிச்சிருக்கே? ஏகப்பட்ட மிஸ்டேக்… காலை என்பதற்கு கலைன்னு இருக்கு’’ என்று ஆரம்பித்து வரிசையாக அழைப்பிதழில் இருந்த தவறுகளைச் சொல்லி மேஜையில் வைத்துவிட்டுப் போனார்.
அவர் போனதும் ரவி சிரித்துக் கொண்டே, ‘‘இதுக்குத்தான் அவர்கிட்ட கொடுத்தேன். நாம எவ்ளோ பார்த்தாலும், சில தப்புகள் கண்ணுக்குத் தென்படாது. அண்ணன் அப்படி இல்லை. என் வேலையில் தப்பு கண்டு பிடிக்க கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கிட்டு பார்ப்பார். இப்போ என் வேலை மிச்சம். சாம்பிளுக்கு ஒரு அழைப்பிதழ்தான் அடிச்சேன். இப்போ இந்த தவறுகளைத் திருத்திட்டு மற்றதை தைரியமாய் அடிக்கலாம்’’ என்றார். கமலா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்
– ஜனவரி 2014
அருமையான கதை.வாழ்த்துக்கள்