(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜொகூர் பாருவில் உள்ள ‘லார்க்கின்’ பேருந்து நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நுழைவுச் சீட்டு விற்பனையாளர்களின் முகவர்கள் “கோலாலம்பூர்… கோலாலம்பூர்…! பத்து பஹாட், பத்து பஹாட்…!” என்று கூவி பயணிகளின் கவனத்தை ஈர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். இடையிடையே சிங்கப்பூருக்குத் திரும்புகிறவர் களுக்கு, அவர்கள் குடியிருப்புப் பேட்டைவரை அனுப்பும் வாடகை வண்டிகளுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர் வேறு ஒரு குழுவினர். வழியனுப்ப வந்த உறவினர் கூட்டம், வாடிக்கையாளர் களுக்காகக் காத்திருக்கும் வாடகை வண்டி ஓட்டுனர்கள் என்று பலவகையான மனிதர்கள் வெவ்வேறு நோக்கத்திற்காக ஒரே கூரையின் கீழ் அலைமோதிக்கொண்டிருந்தனர்.
ஒரு வழியாகச் சிங்கப்பூர் – ஜொகூர் செல்லும் விரைவுப் பேருந்தில் ஏறி ‘லார்க்கின்’ பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கினார் பெரியவர் ராமசாமி. ஒரே பிள்ளை மாதவ கிருஷ்ணன் பிறப்பதற்குமுன், தன் மனைவியை அவருடைய சித்தப்பா வீட்டிற்குப் பலமுறை அழைத்து வந்திருக்கிறார்.
அவருடைய சித்தப்பா, மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் தனிநாடாகப் பிரிந்தகாலத்தில் பழமரம் தேடும் பறவையைப்போல் மலாயாவிலேயே தங்கிவிட்டார். ரப்பர் எஸ்டேட்டில் அவருக்குக் கிடைத்த வருமானத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் தன் குடும்பத்திற்குப் பல வசதிகளைச் செய்துகொடுத்தார். ‘பொன்னு விளையிற பூமின்னு’ அங்கிருந்து தாயகத்திற்குப் போக மனமில்லாமல் அங்கேயே வேறொரு திருமணமும்செய்து நிரந்தரமாகத் தங்கிவிட்டார். பொந்தியானில் தரை வீடு, காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் என்று தனது வசதிகளைப் பெருக்கிக்கொண்டார். இருந்தாலும் தமிழகத்திற்கு அனுப்பும் பணம் தடைப்படவில்லை. சித்தப்பாவின் முகவரி சரியாக ஞாபகம் இல்லை, இருந்தாலும் எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பிக்கையோடு புறப்பட்டு விட்டார்.
அவருடைய கடவுச்சீட்டும், பணப்பையும் தன் காற்சட்டைப் பையில் இருப்பதை அடிக்கடித் தொட்டுப் பார்த்துக்கொண்டார். இரண்டு செட் மாற்று உடை கொண்ட கைப்பையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஜொகூர்-பொந்தியான் ‘எக்ஸ்பிரஸ்’ என்ற பெயர்ப்பலகை மாட்டியிருந்த பயணச் சீட்டு விற்கும் கவுண்டரின் முன் நின்றார். ஒரு பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு மீதிச் சில்லறையையும் கவனமாக வாங்கிக்கொண்டு பேருந்து நிற்குமிடம் நோக்கி நடந்தார்.
பேருந்துப் பயணம் முழுவதும், மலேசியாவின் மாற்றத்தைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டே வந்தார் பெரியவர். பசுமை போர்த்திய காடுகளும், ரப்பர் எஸ்டேட்டுகளும் மறைந்து, வரிசையாகக் கட்டிடங்கள் முளைத்திருந்தன. அடுக்குமாடிக் கடைத்தெருக்களும், குடியிருப்பு வீடுகளும் அவர் அவர் இன்னும் சிங்கப்பூரில் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தன. மாறியது மலேசியா மட்டுமா, மக்களின் மனங்களும்தானே என்ற பெருமூச்சோடு தன் கண்களை மூடினார். அசதியின் நுனியில் அயர்ந்து தூங்கிப்போனார். திடீரென்று ‘புஸ்’ என்ற சத்தத்தோடு பேருந்து நின்றது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெரியவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.
“அலமாக்…! டயர் பஞ்சே…லா” பின் சீட்டில் அமர்ந்திருந்த ஓர் இள வயது மலாய்க்காரர் பேருந்தின் சக்கரங்களில் ஒன்றின் காற்றுப் போனதை அவர் தாய்மொழியில் கூறி எரிச்சல்பட்டுக்கொண்டார். வேகமாக அவரைக் கடந்து முன்னே நகர்ந்தவரின் பின்னே அவரும் சென்றார். மேலும், பேருந்திலிருந்து ஒவ்வொருவராகக் கீழே இறங்க ஆரம்பித்தனர்.
சாலைகளின் இரு பக்கங்களிலும் ரப்பர் மரங்கள் என்ற ‘நாங்கள் முற்றிலும் அழிந்துவிடவில்லை’ கம்பீரத்துடன் நின்றன. பேருந்து ஓட்டுனர் அரை மணி நேரத்தில், காற்று இறங்கிய சக்கரத்தை மாற்றிவிடுவதாகக் கூறி, அனைவரையும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
சற்று தூரத்தில் பாதையோரத் தேநீர்க் கடை இருப்பதைக் கவனித்த சிலர், காத்திருக்கும் நேரத்தில் சிறிது இளைப்பாறலாம் என்று கடையை நோக்கி நகர்ந்தனர். சிலர் தங்கள் பைகளில் முன்பே வாங்கி வைத்திருந்த தண்ணீர்ப் பாட்டிலைத் திறந்து, தொண்டையை நனைத்துக்கொண்டனர். வேறு சிலர் இயற்கையின் உபாதைக்கு மரங்களின் பின்னே ஒதுங்கினர்.
இதில் எதிலும் ஒட்டாமல் நின்றுகொண்டிருந்த பெரியவரின் பார்வையில் தென்பட்டது அந்த ஒற்றையடிப் பாதை. ரப்பர் மரங்களுக்கு இடையில் பிரிந்துசெல்லும் மண் பாதை. அவர் நின்று கொண்டிருக்கும் சாலையிலிருந்து பத்தடி நகர்ந்து இறங்கி நடந்தால் அந்த மண் பாதை வந்துவிடும். பெரியவர் சுற்றும் முற்றும் பார்த்தார். பலர் கைப்பேசிக்குள் நுழைந்துவிட்டிருந்தனர். பேருந்து ஓட்டுனர் வேர்க்க விறுவிறுக்க தன் காரியத்தில் கவனமாக இருந்தார். நல்ல மனம் படைத்த சிலர் அவருக்கு உதவிக்கொண்டிருந்தனர். பெரியவர் மீண்டும் அந்தப் பாதையைக் கவனித்தார். தனக்குப் பரிச்சயமான இடம்போல உள்ளுணர்வு உணர்த்திற்று. அவருடைய கட்டுப்பாட்டை இழந்த கால்கள் தானாகவே அந்தப் பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தன. அது எங்கே போகிறது, அதன் முடிவில் என்ன இருக்கும் என்பதைப் பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் தன் கைப்பையைத் தூக்கிக்கொண்டு விறுவிறுவென்று நடக்கலானார்.
ரப்பர் மரங்களின் நிழலில், காய்ந்த சருகுகள் இளைப்பாறிக்கொண்டிருந்தன. மரங்களின் வேர்கள் மண்ணைப் பிளந்து, வளைந்து செல்லும் பாம்பைப்போல் பூமிமீது நெளிந்து கிடந்தன. சில வேர்கள் கால் தடுக்கி கீழே விழச் செய்யும் அளவுக்குத் தடிமனானவை. அந்த நீண்ட மண் பாதை, மேல் நோக்கி நீண்டுகொண்டே போனது. ஓரிடத்தில் அந்தப் பாதை இரண்டாகப் பிரிந்து சென்றது. பெரியவருக்கும் சிறிது மூச்சு வாங்க ஆரம்பித்தது. தலையைச் சுற்றிப் பறந்த கொசுக்களை விரட்டிக்கொண்டே வலது பக்கம் செல்லும் பாதையில் நடந்தார்.
என்னதான் மரங்களின் நிழலும், இதமான காற்றும் பெரியவருக்கு ஆறுதலாக இருந்தாலும், வயதான காலத்தில் நீண்ட நடை அவருக்குக் களைப்பைத் தந்தது. காலி வயிற்றில் காற்று புகுந்து கபடி விளையாடியது. நாக்கு வறண்டு உள் தொண்டையுடன் ஒட்டிக்கொண்டதுபோல இறுகிக் கிடந்தது. முற்றுப்புள்ளி இல்லா வாக்கியத்தைப் போல, இந்தப் பாதையின் முடிவை அவரால் நிர்ணயிக்க முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார், கண்ணுக்கெட்டிய தூரம்வரை வீடு எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. சற்று நேரம் நின்று வேறு ஏதாவது சத்தம் வருகிறதா என்று கூர்ந்து கவனித்தார். பறவைகளின் கீச்சிடும் ஒலியும்,நீரோடையின் ஓசையும் கேட்டன. அப்படியானால், அங்கே அருகாமையில் ஏதாவது கால்வாயோ அல்லது ஆறோ இருக்கலாம் என்று தோன்றியது. ஓசை வரும் திசையை நோக்கி மெல்ல நகர்ந்தார். நீரின் சத்தம் அதிகமாகக் கேட்டது. அதோடு சிறார்களின் சிரிப்புச் சத்தமும் சேர்ந்து கேட்டது.
எட்டு முதல் பத்து வயது கொண்ட சிறுவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டும், கும்மாளமும், மகிழ்ச்சியாகவும் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டும் இருந்தனர். அதில் சிவப்பு அரைக்கால் சட்டைப் போட்டிருந்த சிறுவன் பெரியவர் அவர்களை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டான்.
திடீரென்று வெள்ளைத் தலையுடனும் கசங்கிய சட்டையுடனும் ஒட்டிய கன்னங்களுடனும் வயதான ஒருவர் நிற்பது முதலில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிடித்துவைத்த பிள்ளையாரைப்போல் ஒருகணம் அசையாதிருந்தான், பின்னர் புருவத்தை நெருக்கி, கண்களை இடுக்கி முன்னகர்ந்து வரும் பெரியவரை உற்றுப்பார்த்தான். என்ன நினைத்தானோ, மறுகணம் பெரியவரை நோக்கி சினேகமாக ஓடிவந்தான்.
“யார் தாத்தா நீங்கள், வெளியூரா?” பெரியவரையும் அவருடைய கைப்பையையும் மாறி மாறிப் பார்த்தான்.
“இங்கே யார் வீட்டுக்கு வந்தீங்க?” தலையைச் சொறிந்துகொண்டான்.
வேர்த்து விறுவிறுத்து நின்ற பெரியவருக்கு, அவனுடைய அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. தலை கிர்ரெனச் சுற்றியது. திடீரென்று பூமி அவருடைய பாதத்திலிருந்து நழுவுவதுபோல இருக்க, தன்னையும் அறியாமல் மயங்கி விழுந்தார்.
சரிகா குட்டிப்போட்ட பூனையைப்போல குசுனிக்கும், கூடத்திற்கும் டையே நடந்து கொண்டிருந்தாள். நேரம் ஆக ஆக, அவளுடைய இதயத் துடிப்பும் அதிகரித்துக் கொண்டிருந்தது. குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, சில்லென்ற தண்ணியை மடக் மடக்கென்று தொண்டைக் குழிக்குள் இறக்கிக் கொண்டாள். இருந்தும் படபடப்பு அடங்கவில்லை. குளிர்சாதனப் பெட்டியை மூடும்போது, அவள் கணவனின் 48-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாங்கிய கேக், பரிதாபமாக அவளைப் பார்த்தது!
‘பாவி மனுஷன், எங்கே போய்த் தொலைந்தார்? போயும் போயும் இன்றைக்கா இப்படி ஓர் அசம்பாவிதம் நடக்கவேண்டும்?’ நினைக்கையிலேயே அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. கைப்பேசி மணி ஒலிக்கும் சத்தம் கேட்கவும் கூடத்திற்கு வேகமாக ஓடிவந்து பதற்றமாக ‘ஹலோ’ என்றாள். மறுமுனையில் இருப்பது மாதவனாக இருக்கவேண்டும் என்று வேண்டினாள்.
“அக்கா, மாமா வந்துட்டாரா? பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல அவருக்குப் போன் போட்டா… எடுக்கவே மாட்டேங்கிறார்” மறுமுனையில் அவளுடைய தங்கை ரேணுவின் பொறுமையிழந்த குற்றச்சாட்டு.
“நானும் நிறையத் தடவை அடிச்சுட்டேன், எனக்கும் அதே கதிதான். புத்தி கெட்ட மனுஷன், நினைச்சாலே கடுப்பு வருது” அழுத்திச் சொல்லி தன் கோபத்தைக் கொட்டினாள் சரிகா. இதற்குமேல் பேசினால் அக்காள், மாமா புராணம் பாட ஆரம்பித்துவிடுவாள் என்று ரேணுவுக்கு நன்றாகவே தெரியும். பிறகு தொடர்பு கொள்வதாகக் கூறி வேகமாகக் கைப்பேசியை அமர்த்தினாள்.
மாலை மணி ஐந்து முப்பது. நம்பிக்கைகள் மரணித்துப்போய், உயிரற்ற உடல்போல உள்ளே நுழைந்தான் மாதவன்.
“முதல்ல உங்க போனைத் தூக்கிக் குப்பையில போடுங்க, எத்தனை தடவை அடிப்பது? ஒரு தடவையாவது எடுத்தால் என்னவாம்?” அடித் தொண்டையில் கீச்சிட்டாள் சரிகா. எதையும் காதில் வாங்காமல் குழப்பத்தோடு சோஃபாவின்மேல் விழுந்தான் மாதவன். உயிரற்ற பொருளைத் தொலைத்திருந்தால் அவன் இவ்வளவு பயந்திருக்கமாட்டான். இரத்தமும், சதையும், உணர்வும் கொண்ட மனித தெய்வத்தை அல்லவாதொலைத்திருக்கிறான். அதுவும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவருக்குத் திரும்பி வரத் தெரியாதே என்ற குழப்பத்துடன் முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டான். சூடான கண்ணீர் அவனது உள்ளங்கையைச் சுட்டது.
“ரிப்போர்ட் பண்ணியாச்சா, ஏதாவது தகவல் கிடைச்சுதா? எங்கே போச்சாம் அந்தக் கிழம்?” சரிகாவே தொடர்ந்து கேள்விகளைத் தொடுத்தாள்.
“அதுக்கு வேற ‘டிமென்ஷியா’ (Dementia). எங்காவது கீழே போறேன்னு போய், திரும்பி வரத் தெரியாமல் முழிச்சுக்கிட்டு இருக்கும். நந்தாவை அனுப்பி அக்கம் பக்கம் எல்லாம் திரும்பவும் தேடிப் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்” மாதவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் சரிகாவே மீண்டும் தொடர்ந்தாள்.
“போற வயசுல நம்மள நிம்மதியா இருக்க வைச்சுச்சா? உக்காந்த இடத்திலேயே ஈரம் பண்றதும், சோபாவை நாறடிச்சு… ச்சே! மானமே போகுது..” மாதவன் அவன் முகத்திலிருந்த கைகளை அகற்றினான். அவன் கண்கள் சிவந்திருந்தன. சரிகாவைப் பார்த்த பார்வையில் இறுக்கம் தெரிந்தது. இதைக் கவனிக்காமல் சரிகா பேசிக்கொண்டே போனாள்.
“அந்த கிழம் மேசைமேல இருக்கிற சாப்பாட்டைக்கூட சாப்பிட மறந்துடுது! ஒரு தடவை பசாருக்குப் போனா சுளையா ஐம்பது வெள்ளிக்குமேல் செலவாகுது. அரிசி விலை பல்லை இளிக்குது, காய்கறி விலை எகிறிக் குதிக்குது. சாப்பாட்டைக் குப்பையில கொட்டுனா… யாரு வீட்டுப் பணம் வீணாகுதுன்னு அந்தக் கிழத்துக்குப் புரியுமா?” அவளுடைய ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் கொட்டினாள்.
“கிழம் வெளியில போகும்போது எங்கே போறேன்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே? இப்ப வழி தெரியாம எங்கே விழிச்சிக்கிட்டு நிக்குதோ? அதுவும் போயும், போயும் உங்க பிறந்தநாள் அன்னிக்குத்தான் காணாமப் போகணுமா? நாசமாப்போக…!”
அடுத்த வார்த்தைப் பேச வாயைத் திறக்கும் முன்னே அவள் கன்னத்தில் சுளீர் என்று சுளீர் என்று வலி. வேதனையில் துடித்துப்போனாள். மாதவன் எரிமலையாய் நின்று கொண்டிருந்தான்.
“இதுக்கும்மேல ஒரு வார்த்தைப் பேசினா…நா…நான் மனுசனா இருக்க மாட்டேன். உண் கழுத்துல மூணு முடிச்சைப் போடும்போதே என்னோட நிம்மதி செத்துப்போச்சு!” காதில் ‘கொய்ங்’ என்ற சத்தத்துடன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு மாதவன் பேசுவதை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பணம் என்ன பெரிய பணம்? இந்த வாழ்க்கையே அவரு போட்ட பிச்சைதானே, மறந்துடுச்சா? நாம் காதலிக்கும்போது, அவரோட சம்மதம் வாங்குறதுக்காக எப்படியெல்லாம் அவரைக் காக்காப் பிடிச்சே. அவரோட பிறந்தநாளுக்குப் புதுச் சட்டை, தந்தையர் தினத்துக்குப் புதுப் பணப்பை, அவருக்கு ஓய்வு எடுக்க ‘ஒஸிம்’ நாற்காலின்னு விதவிதமா நாடகம் போட்டே! அப்படி இப்படின்னு, அவரை மயக்கித்தானே நம்ம கல்யாணத்திற்குச் சம்மதம் வாங்கினே? மூணு முடிச்சுக்குப் பிறகுதானே உன்னுடைய உண்மையான முடிச்சு அவிழ்ந்தது..!” வரலாற்றை ஆவேசமாகப் புரட்டிப் போட்டான். கசங்கிய பக்கங்களைப் பிரித்துக் காட்டினான். கிழிந்த தாள்களை ஒட்டவைத்தாலும் கிழிந்த சுவடு அழுத்தமாகத் தெரிகிறதே, அதை மாற்ற முடியாதே என்று அழுது புலம்பினான்!
“வயசான காலத்திலே மறதி வருவது இயற்கைதான்னு டாக்டர் சொன்னாரே, அது உனக்கு மறந்து போச்சா? இதுவே உங்க அப்பாவுக்கு நடந்திருந்தால்?” நரசிம்மன் அவதாரம் எடுத்திருக்கும் மாதவனைப் பார்க்கவே அஞ்சினாள் சரிகா.
“பொம்பளையா நீ? அரக்கி!” வீட்டுக்குள் நுழைந்ததும் அவரு இதைச் செஞ்சாரு, அதைச் செய்யலன்னு உன்னோட புலம்பல்தான் கதவைத் திறக்கும். என்றைக்காவது உன்னைப்பற்றி ஒரு வார்த்தை அவரு பேசியிருப்பாரா? உன்னோட நச்சரிப்புத் தாங்காமல் அன்றைக்கு நானும் அவரை தொலைஞ்சு எங்கேயாவது போங்கன்னு திட்டிட்டேன்..” மீண்டும் பளார் என்று அறைந்தான். மனதில் இவ்வளவு நாட்களும் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தையும், வெறுப்பையும் சரிகாவின் மீது கக்கினான். பிறகு, வேகமாகப் பூஜை அறைப்பக்கம் போனான்.
“முருகா, என்னை மன்னிச்சுடு!” மனமுருகி வேண்டினான். மனம் உருகியது, உடல் குலுங்கியது. சரிந்து விழும் கட்டிடத்தைப்போல பூஜை அறையின் முன் மண்டியிட்டு அழும் மாதவனைப் பார்த்து இறுகிய பனிக்கட்டியைப்போல அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்தி ருந்தாள் சரிகா.
பெரியவர், மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது, அவரைச் சுற்றி சற்று முன்னர் சந்தித்த சிறுவர்களும், சில பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். அந்தப் பெண்களின் கைகளிலும், ஆடையிலும் கித்தாப்பால் திட்டுத்திட்டாகக் காய்ந்திருந்தது.
“ம்மா… ம்மா… அவரு கண் விழிச்சிட்டார்… பாரு” சிவப்பு அரைக்கால் சட்டைப் போட்டிருந்த பையன் மகிழ்ச்சியாகக் கூவினான். எல்லோர் முகத்திலும் நிம்மதி ரேகை படர்ந்தது.
“சரவணா, அவருக்குச் சில்லுன்னு குடிக்கிறதுக்கு ‘செவென் அப்’ வாங்கிட்டு வா” தன் மடியில் இருந்த சுருக்குப் பையில் கைவிட்டு ஐந்து ரிங்கிட்டை நீட்டினார். நீட்டிய கையில் அரை அங்குல அளவு தடித்த தழும்பு இருந்ததைப் பெரியவர் கவனித்தார்.
“யாருப்பா நீங்க, யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க?” அப்பா என்று அந்தப் பெண் கனிவாய்க் கூப்பிட்டதும் பெரியவரின் கண்கள் ஈரமாயின. அதன் பிறகு அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் மௌனமே பதிலாக வந்தது.
“அடப் பாவமே! கீழே விழுந்த அதிர்ச்சியில் மூளை கலங்கிப் போச்சோ? அவரு பழசையெல்லாம் மறந்திட்டாரே, கஜினி படத்தில வர சூரியாவைப் போல…?” அங்கே குழுமியிருந்த பெண்கள், தங்களுக்குள் ளாகவே வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
“ஏம்மா, பேசாம இவரை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டுப் போயிடுவோமா?அவருக்கு நினைவு வந்ததும், அவரோட வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டுடலாம். என்னம்மா சொல்ற?” அந்தக் குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சரவணன் அம்மாவிடம் கேட்டான்.
தெளிவாகப் பேசிய சரவணனின் பேச்சு மற்றவர்களுக்கும் சரியெனப்பட்டது.
“அவன் சொல்றதும் சரிதான் மீனாட்சி. நீயும் உன் பிள்ளையும் தனியாத்தான் இருக்கீங்க, பெரியவருக்கும் இப்போதைக்கு ஆதரவு இல்ல, உன்னோட கூட்டிக்கிட்டு போனீன்னா உனக்கும் தைரியமா இருக்கும், காலையில கித்தா தோப்புக்குப் போனதுக்கப்புறம் சரவணனுக்கும் துணையா இருக்கும், யோசிச்சுச் சொல்லு புள்ள” அந்தப் பெண்கள் கூட்டத்தில் நடுத்தர வயதுடைய பெண், மீனாட்சியிடம் கூறினாள்.
“இருந்தாலும் பெரியவரையும் ஒரு வார்த்தைக் கேட்போம்” மீனாட்சி, அவர் பக்கம் திரும்பி, “தம்பி சொல்றதும் சரின்னுதான் படுது, எங்ககூட வரதுக்கு உங்களுக்கும் சம்மதம்தானேப்பா?” பரிவோடு கேட்டார்.
சில்லென்ற தண்ணீர் உள்ளே இறங்கவும் பெரியவருக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. அவர் சம்மதம் என்று தலையாட்ட, எல்லோரும் நிம்மதியாக அங்கேயிருந்து கலைய முற்பட்டனர். சரவணனுக்கு ஒரே குஷி.
“ஹாய், எனக்கு ஒரு புதுத் தாத்தா கிடைச்சுட்டாரு” மகிழ்ச்சியுடன் கூவிக்கொண்டே பெரியவரின் கைப்பையைத் தன் தலைமேல் வைத்துக்கொண்டு குதித்து ஓட ஆரம்பித்தான்.
அனைவரும் முன்னே செல்ல, பெரியவர் தன் காற்சட்டைப் பையில் இருந்த தனது கடவுச்சீட்டை யாருக்கும் தெரியாமல், சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் வீசிவிட்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்!
தமிழ் மொழி பெயர்ப்பு:
“அலமாக்…! டயர் பஞ்சே…லா” – “அடடா, வண்டி சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது”
– நீர்த் திவலைகள் (சிறுகதைகள்), டிசம்பர் 2017, ஆர்யா கிரியேஷன், சிங்கப்பூர்.