சமூகப் புயலில் ஒரு காதல் கூடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2024
பார்வையிட்டோர்: 283 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

குப்பமும், கூடவே மாளிகைகளும் பரவிக் கிடந்த சென்னை நகரில் ஒரு கடலோரப் பகுதி.

கடல் மண்ணின் மினுக்கத்தைப் போல் பெண்களும், அந்தக் கடல் மண்ணின் நெருக்கத்தைப் போல ஆண்களுமாக, புதிதாகப் பிரதிஷ்டை செய்திருந்த காவல் கன்னியம்மனின் கோவிலுக்கு முன்னாலும், பின்னாலும் பக்கவாட்டிலுமாய்ப் பரவியிருந்தனர்.

கண்கொள்ளாக் கடலின் அலையோசை, கண் நிறைந்த பொய்க்கால் குதிரையாட்டத்தாலும், விசைப்படகு முதலாளிகள் அமர்த்திய கல்யாணி ராக மேளத்தாலும், கட்டுமரக்காரர்கள் அமர்த்தி இழு வோசை மேளத்தாலும், கோவில் குலுங்கிக் கொண்டிருந்தது.

மூன்றாண்டுகளுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் அடித்துத் தாக்கிக் கொண்ட இவர்களா இப்படி என்னும்படி அத்தனை மீனவரும் கடந்ததை மறந்து, நடப்பதை நினைத்துக் களித்துக் கொண்டிருந்தனர்.

இருப்பினும் விசைப்படகு முதலாளிகள் கெழுத்தி மீன் போலவும், கட்டுமரக்காரர்கள் காஞ்சான் மீன் போலவும் கெழுத்தி கெழுத்தியோடும், காஞ்சான் காஞ்சானோடும் சேர்த்திருப்பதுபோல் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்தும், அதே சமயம் கும்பலாகப் பிரிந்தும் தோன்றினார்கள்.

கோவில் சந்நிதிக்கு முன்னால் போடப்பட்டிருந்த வி.ஐ.பி நாற்காலிகளில், விசைப் படகுக்காரர்களின் பெரியதனக்காரர் முனுசாமி மீசையை முறுக்கிக் கொண்டும், அவருக்கு அருகே அமர்ந்திருந்த அந்தக் குப்பத்தின் பெரியதனக்கார இளைஞன் கண்ணன், தன் நொண்டிக்காலைச் சுருதி சேர்ப்பது போல் தட்டிக்கொண்டும், தடவி விட்டுக் கொண்டும் இருந்தபோது –

விசைப் படகுபோல், வேக வேகமாகக் கண்கள் சுழல, கட்டுமரம் போல் கால்கள், மரத்துப் போய் நடக்க, நாலடி நீளமுள்ள மாவலரசி’ என்னும் மீனை அமுக்க முடியாமல் அமுக்கி வைத்திருக்கும் நைலான் வலைபோல் கொண்டையை அடக்க முடியாமல் அடக்கிய வலை ஜொலிக்கும்படி மல்லிகைப் பூ பந்தலிட, விறால் மீனின் வாளிப்போடு, கெண்டை மீன் கண்களோடு ஒரு வாலிபனுடன் ஜ தையாக வந்தாள் முனுசாமியின் மகள் மச்சகாந்தி.

நாற்காலியில் உட்கார்ந்திருந்த முனுசாமி எழுந்து உட்காரு மாப்பிள்ளை’ என்று சொல்லிக் கொண்டே, சரியாக இடத்தை காலி செய்யு முன்னாலேயே, மாப்பிள்ளைக்காரன் உட்கார்ந்தான். மச்சகாந்தி எங்கே உட்கார்வது என்று யோசிப்பதுபோல் கைகளை நெறித்து, கண்களைக் குலுக்கியபோது, இதுல… குந்து ம்ச்சுகாந்தி.” என்று சொல்லிக் கொண்டே, கண்ணன் நாற்காலி முனையில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலை எடுத்துக் கொண்டே எழுந்தான். பின்னர் பழைய கதையை நினைத்து, அவள் பெயரை உரிமையோடு அழைத்ததை, அப்பாக்காரனும், இப்போது அவளை உரிமையாள்பவனும் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற எண்னத்தில், ஒருவித தப்பிப்பு மனோபாவத்தில், வேகமாக நகரப்போனான் ஒற்றைக் காலாலும், ஊன்றுகோலாலும் நகர முடியாமல் அவன் தவித்தபோது, எங்கிருந்தோ வந்த ஒர் இளம் பெண், ஒடோடிவந்து அவனை அனைத்துப் பிடித்துக் கொண்டு, “நீ… ஏன் எழுந்தே” என்று கடுமையாகச் சொல்லி, அந்தக் கடுமை படர்ந்த கண்களால், மச்சகாந்தியை உஷ்ணத்தோடு பார்த்தாள். மச்சகாந்திக்குச் சுருக்கென்றது. கண்ணில் சுரந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டாள்.

அவன் அமர்ந் திருந்த நாற்காலியில் தான் அமர்ந்திருக்கிறோம் என்ற ஏதோ ஒர் இன்ப துன்ப எல்லைப் பரப்பை ஊருடுவிய உணர்வு உந்த, தான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியையும், எதிரே ஒரு திட்டுச்சுவரில் உட்கார்ந்திருந்த கண்ணனையும் மச்சகாந்தி மாறி மாறிப் பார்த்தாள்.

இதைப் போன்ற ஒரு நாற்காலிதான், அவள் காதல் வயப்படவும் காரணமாக இருந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னால்-

ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ஒருவிசைப்படகைச் சொந்தமாகவும், சினிமா நடிகைகளும் ஓர் ஆலை முதலாளியும் வாங்கிப் போட்டிருந்த மூன்று விசைப் படகுகளை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவள் தந்தை முனுசாமி கடலாட்சி செய்த சமயத்தில், விசைப் படகு ஒட்டத் தெரிந்த கட்டுமஸ்தான கண்ணன், அவரிடம் வேலைக்குச் சேர்ந்தான். இரண்டு மாத காலம் ஆகியிருக்கும்.

முதலாளி வீட்டின் வெளித்தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில், சகாக்களுடன் கண்னன் அமர்ந்திருந்தபோது, செல்லமாகவும் சிணுங்கும்படியாகவும் வளர்க்கப்பட்ட மச்சகாந்தி அந்தப் பக்கமாக வந்தாள். உடனே, கண்னன் தவிர எல்லோரும் எழுந்து நின்றார்கள். கண்ணன் மட்டும் அசையாமலும் அவள்ைப் பாராமலும் உட்கார்ந்திருந்தபோது, அவன் சகாக்களில் ஒருவன், “டேய் சோமாறி! காலு ஒடிஞ்சா பூட்டு…? எழுந்திருடா…” என்று புதியவனான அவனை மிரட்டுவதுபோல் கேட்டான்.

“ஏண்டா… இப்படி குட்டுறதுக்கு முன்னாடியே தலையக் குனியுறீங்க… உங்கள மாதிரி உருப்படி இல்லாத பசங்களால் தான் நம்ம சமூகமே உருப்படி இல்லாம துண்டு துக்கடாவா போயிட்டு. நாமும் மனுஷங்கதாண்டா…” என்றான் கண்ணன். மச்சகாந்தி, கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோவிச்சுக்காதே பாப்பா. இவன் இப்படித்தான். இம்மாந் தொலவு பேசுறானில்லே, இவன்தான் நீ பஜாருக்கு போகச்சே எவனோ ஒரு சோமாறி கிண்டல் பண்ணுனப்போ.. அவன் வாயில குத்தினான்” என்று சமாதானம் சொன்னான் ஒருவன். மச்சகாந்தி கண்ணனை நேருக்கு நேராகப் பார்த்தாள். ஆணவம் இல்லாத சுயமரியாதைத் தோரணை, கபடமில்லாத கண்கள். கட்டுமஸ்தான உடல். மச்சகாந்தி திருப்தியோடு சிரித்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.

அப்புறம் இன்னொரு நாள் லாஞ்சுக்கு டிஸல் பிடிப்பதற்காக முதலாளியிடம் பனம் வாங்க வந்த கண்ணன், அவர் இருக்கிறார் என்ற அனுமானத்தில் தாழ்வாரத்தைத் தாண்டி உள்ளறைக்கு வந்துவிட்டான். தனியாக இருந்த அவள் சிரிப்பை முந்தானையால் அணைகட்டிக் கொண்டே வெளியே ஒடிப்போய், ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டுவந்து, அவன் பக்கத்தில் போட்டுவிட்டுச் சமையல்றைக்குள் ஒடினாள்.

‘கிண்டலைப் பாரேன். தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு கண்ணன் கோபமாக நின்றான். மச்சகாந்தி, சூடான காபி டம்ளரைக் கையிலும், சுவையான ரசனைச் சிரிப்பை வாயிலும் சுமந்துகொண்டு வந்தாள். நாற்காலியில் உட்கார்ந்தால்தான் காப்பி”, என்றாள். இருவரும் தங்களை அறியாமலே சிரித்தார்கள். தங்களை மறந்து ஏதேதோ அளவளாவினார்கள்.

பழைய நினைவுகளை, அசை போட்டுக் கொண்டும், நீர் முட்டும் கண்களுடன் நிலைகுலைந்தும் நிமிர்ந்து பார்த்தாள் மச்சகாந்தி, அவளையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றிய கண்ணன், அவள் பார்வையின் வெப்ப தாகத்தில் உருகிப் போனவன் போல், எங்கேயோ பார்த்தான்.

கூத்தை நடத்தப் போகும் கோவிந்தன், சபையோருக்கு, சகலவித வனக்கங்களையும் தெரிவித்துவிட்டு, சப்ஜெக்டுக்கு வந்தான்.

“சபையோர்களே… இந்த காவல் கன்னியம்மன், நூறாண்டுகளுக்கு முன்னர், மதுரையம் பதிக்கு அருகே ஜனித்தவள். இவள், நம் ஜாதியான மீனவ ஜாதியைச் சேர்ந்தவள் அல்ல, அல்ல, அல்ல; ஆயினும் வலைபோட்டு மீன்பிடிக்கும் பாவாடராயனை, தன் அழகிய கண்வலையிலே பிடித்தவள். உள்ளூர் உறவினரைத் துறந்து, கடலோரத்திலேயே, காதலுக்காகத் தங்கியவள். கடலில், வலம்புரிச் சங்கெடுத்தான் பாவாடராயன். நம் முன்னோர் வழக்கப்படி வலம்புரிச் சங்கெடுத்தால், கடல் மாது மூன்று நாள் தீட்டுப்பட்டவள் ஆவாள். அப்போது, மீனவர்கள், கடலுக்குப் போகலாகாது. ஆனால் ஒடுறபாம்பைப் பிடிக்கிற வாலிபனான பாவாடராயன், காதலியாள் அறிவுரையை மீறி, கடலுக்குள் போய், சுறாமீன்களால் சுக்குநூறானவன். இதனால் மயங்கி, தயங்கி, மனக் கிலேசப்பட்ட காதலியானவள், தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். பின்னர், மனைவி மக்களைக் காக்கும் காவல் அம்மனாக இருப்பேன் என்று ஒருத்தி மேல் ஆவேசமாகி அறிவித்தாள். அந்தத் தர்மபத்தினி, ஒரு மீனவக்கண்ணகி. ஆகையால் பெரியோர்களே, கன்னிமை கழியா அந்தக் காவல் அம்மனின் கதையை… அடியேன்…”

கண்ணன் அவஸ்தை தாங்க முடியாதவன்போல் எழுந்தான். கடலை நோக்கி நொண்டிக் கொண்டே நடந்தான்.

சினிமாத் தியேட்டர்களிலும் விசைப்படகுகளுக்குள்ளேயும், உலர்த்திப் போடப்பட்டிருக்கும் அல்பேஷா மரக்கட்டைகளுக்கு அருகேயும் அவனுடன் களிப்புடன் விளையாடி, அளவில்லாக் காதலுணர்வை அளவோடு பழகுவதன் மூலம் காட்டி, அவன் உருவம் ഗ്രഴഖഴ്ച கண்களை உறுத்த, உள்ளமெல்லாம் அவனைப் பற்றிய உணர்வே வியாபிக்க, மாலையில் நடந்த காதற்பேச்சை காலையில் ரசித்துக் கொண்டிருந்த ஒரு நாள், கண்ணன் வந்தான். வேலையில் இருந்து விலகி விட்டதாகவும், இன்னொரு குப்பத்திற்குப் போய் அங்கே விசைப்படகு மீனவர்களால் அல்லல்படும் கட்டுமரக்காரர்களுக்கு உதவப் போவதாகவும், தெரிவித்தான். அவள் தந்தை, கட்டுமரங்களை மின்விசைப் படகால் மோதும்படி அவனுக்குச் சொல்வதும், அவன் இனத்தை இனமே கொல்வதைவிட, நானே என்னை சாகடித்துக் கொள்ளலாம்: என்று பதிலடி கொடுப்பதும் அவளுக்குத் தெரிந்ததுதான். இருந்தாலும், “ஒன் நய்னா ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால கடல்ல மீன் பிடிக்கனுமுன்னு லாஞ்சுக்கு வச்சுருக்கிற வழக்கத்தை மீறி. அப்பாவி கட்டு மரங்களோட. வலைங்கள, அறுக்கச் சொல்றாரு. நம்மளால ஒரு நொடிகூட இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டு, அவள் எவ்வளவோ மன்றாடியதையும் பொருட்படுத்தாமல் கண்னன் போய்விட்டான்.

பின்னர் முனுசாமி, “ஒன்னோட கைதொட்டுப் பழகிட்டு அந்த காலிப்பய ஏற்கனவே கீப் பண்ணுனவளோட குடித்தனம் பண்ணப் போயிட்டான். நம்ம காவல் கன்னியம்மன் எதை வேணுமுன்னாலும் சகிச்சுக்குவா. ஆனால் காதல் துரோகத்தை மட்டும் சகிச்சுக்க மாட்டாள். வேணுமுன்னா பாரேன். இன்னும் மூணு நாளையில். அவனை. ஆத்தா என்ன பாடு படுத்தப்போறா பாரு’ என்று பக்குவமாகப் பேசினார். அவர் சொன்னது போல், கண்ணன், கட்டுமரத்தில் மீன் பிடிக்கப்போன போது, சுறா மீனால் தாக்கப்பட்டு ஒரு காலை இழந்து விட்டதாக அவளுக்கு சேதி போனது.

கண்ணனின் காதல் துரோகத்திற்கு, கன்னி காவலம்மன் தண்டனை கொடுத்துவிட்டதாக, அப்பனால் நம்ப வைக்கப்பட்ட மச்சகாந்திக்கு திருமணம் முடிந்தது.

மச்சகாந்தி இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். கடல் பக்கம்போன கண்ணன், மீண்டும் தன்னைப் பார்க்கத் திரும்பி வருவான் என்று நினைத்தும், வருகிறானா என்ற ஆவலுடன் நாற்காலியின் மேல் சட்டத்தில் கையூன்றி, கண்களைத் தொலை நோக்கி போல் வைத்துக் கொண்டிருந்தாள். அவன் வரவில்லை, கணவனும் தந்தையும் கூத்தில் ஆழ்ந்திருக்க மெல்ல நழுவினாள் மச்சகாந்தி.

மையிருட்டு மொய்த்த கடலோரத்தில் கட்டுமரம் ஒன்றில் ஒர் உருவம் இருப்பதை பார்த்துவிட்டு, அவள் ஒடினாள். இளைக்க இளைக்க ஒடினாள், அவள் அனுமானம் பொய்க்கவில்லை.

கண்ணன், அவளைப் பாராமலே “வா. காந்தி.” என்றான். மச்சகாந்தியால், அந்தக் காலைப் பார்த்ததும் தாள முடியவில்லை. அதைக் கட்டிக் கொண்டு, “ஒனக்கா இந்தக்கதி. ஒனக்கா இந்தக் கதி…” என்று கடலலை ஒலி குறையும்படி புலம்பினாள். “நான் சொன்னதைக் கேட்டிருந்தால் ஒனக்குக் காலு போயிருக்குமா? தொட்டுப் பேசின பெண்ண ஏறிட்டுப் பார்க்காமலே போயிட்டே. கடைசில. நயினா சொன்னது மாதிரி கன்னி காவலம்மன். சுறாமீனா வந்து ஒன் காலை எடுத்துட்டாள். நான்தான் பாவி… என்னாலதான். இப்படி ஆயிட்டே!”

கண்னன், நிதானமாகப் பேசினான் :

“கன்னி காவலம்மன். காலை வாங்கல. ஒன் அப்பன் தான் வாங்குனான்.”

“என்ன சொல்ற…”

“நடந்ததச் சொல்றேன் நீ யாருகிட்டேயும் சொல்ல மாட்டேங்கற நம்பிக்கையில் சொல்றேன். கட்டுமர மீனவர்கள் ஒண்ணாச் சேர்த்து போலீஸ் ரிப்போர்ட் கொடுத்து ஜனங்கள, ஒண்ணு திரட்டுன என்மேல் ஒப்பனுக்குத் தீராத கோபம். நானும் ஒன்னை எப்படியாவது கூட்டிக்கிட்டு வாரத்துக்காக ஒரு திட்டம் போட்டிருந்தேன். என்னோட ஆள் ஒருவனை ஒன் நயினா லாஞ்சுக்கு அனுப்புனேன். இதைத் தெரிஞ்சுக்கிட்ட ஒன் நயினா நான் கடலுல கட்டு மரத்துல இருந்து வலைய விட்டுகிட்டு இருந்தப்போ, லாஞ்சு கொண்டு வந்து மோதுனாரு. ஆஸ்பத்திரிலதான் கண்விழிச்சேன். ஒரு காலைக் காணல.”

“இதை நீ ஏன் போலீஸ்ல சொல்லல!”

“மீண்டும் கலாட்டா வந்திருக்கும். என் ஒரு காலுக்காகப் பல தலையுங்க உருள்றத நான் விரும்பல. இந்த காலு பலருக்கு காலனா மாறுறத விரும்பல.” மச்சகாந்தி, ஆவேசத்துடன் எழுந்து, ஆவேசமாகக் கேட்டாள். “ஒன்னை மொச்சிக்கிட்டு இருந்த பொண்ணு யாரு?”

“என்னோட தங்கை”

“சரி, புறப்படு”

“எங்கே”

“இந்த நொடியில் இருந்து, நான் ஒன் சம்சாரம். புறப்படு காவலம்மன் சந்நிதியில் போய். கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொல்லுவோம். ஏன் பயப்படுற…”

“நான் பயப்படல. நீ இல்லாம என்னாலயும் வாழ முடியல. இருந்தாலும் நீயும் நானும் ஒண்னு தெரிஞ்சுக்கணும். நாம குடித்தனம் பண்ணலாம். ஒப்பனால ஒண்ணும் பண்ண முடியாது. ஒன் நயினா ஒதுங்குறது மாதுரி பாவலா பண்ணிட்டு. ஆள்பலம் உள்ள என்கிட்ட நேரடியா மோதாமல் கடலுல கட்டுமரத்தோட போறவங்க மேலே மோட்டார் படகை விட்டுப் பழி வாங்கப் பார்ப்பார். இதனால் அவருக்கும் ஆளு சேரும் பாரு… நம்ம தனிப்பட்ட காதலுக்காக நம்ம சமூகம் ரத்தக் காட்டேரியா மாறப்படாது.

“நீ மவராசியா இருக்கணும், ஒப்பன் எனக்கு பண்ணுன அக்கிரமம் வெளில வரப்படாது, இல்லன்னா, இன்னும் பல அக்கிரமம் நடக்கும். போயிட்டுவா… என் ராசாத்தி…”

கண்ணனின் குரல், தழுதழுத்தது, கன்னி காவலம்மனுக்கு கற்பூர ஆராதனை நடந்தது. அவளுக்கு அவனுக்கே ஆராதனை செய்ய வேண்டும் போலிருந்தது.

– காகித உறவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: சூலை 2005, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *