கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 6,544 
 
 

மருமகப்பிள்ளைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தை சாவித்திரி தான் தபால்காரனிடமிருந்து வாங்கினாள்.அதிலிருந்த..விஜயாவின் கையெழுத்தை அவளால் மறக்க முடியுமா?சிறுபிராயம் தொட்டு ..A/L வரையிலும் ஒன்றாய் படித்ததில்..நட்பின் நெருக்கம் ஆழ்போல் வளர்ந்திருந்தது.சின்னச் சின்ன சந்தோசங்கள்..எத்தனை..எத்தனை!மற்றவர்களுடன் விளையாடுற போதும் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணித் தான் நிற்பார்கள்.உயிர்ச் சினேகிதிகள் என விமர்சிக்கிற அளவிற்கு திரிந்தவர்கள்.

படிப்பு உலகம் வேற,கல்யாண உலகம் வேற..என்பது போல பிறகு, என்னென்னவோ..எல்லாம் நடந்து,பிரிந்து..இப்ப,கண் காணாத தூரமாக கனடாவில் இருக்கிறாள்.நரை தட்டிப்போயிருந்தாலும்..விஜயா அவளுக்கு உயிர்ச் சினேகிதி தான்.

சமுதாயப் பார்வை எப்படி இருந்தாலும் அவளுக்கு கவலை இல்லை. நீண்டப் பெருமூச்சு விட்டாள்.

ரவியிலே..அவள் சாடைமாடையாக சினேகிதியின் குணங்களைக் காண்கிறாள்.தாடி வளர்த்துக் கொண்டு எதைச் சொன்னாலும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்புடன் நலுவலாக..பதிலளிக்கிற அவனுள்..அந்த உறுதிப்பாடுகள் இருக்கின்றன.தாய்யைப் போன்ற குணத்தை, அவனுக்கு அடுத்ததாக..இருந்த சந்திரனிலும் பார்த்தாள்.மற்றவர்கள் ..இந்தளவு உறுதிப் படைத்தவர்களாக இருக்கவில்லை.யார் கண்டது..?வேற வடிவில்..அவை இருக்கிறதோ.

காலையில்,7 மணிக்கே ரவி இறங்கி விட்டிருந்தான்.இனி 5 மணிக்கு தான் வருவான்.ராணி அவனுக்கு மத்தியானச் சாப்பாட்டையும் கட்டி குடுத்திருந்தாள்.அவனுக்கு சுமியிடமும் ,இனியாவிடமும் கொள்ளை பிரியம்.அசப்பில் சுமி அவனையே உரிச்சு வைச்சது போல..இருக்கிறாள்.அதே நெடுவலான தோற்றம்.,அமுத்தலான பார்வை.

ராணியிடமும் அன்பாக..இழைஞ்சு..விட்டே போவான்.இன்னமும் அந்த தாடியை எடுக்கிறான் இல்லை.விஜயா,குடும்பமாக கனடாவிற்கு வரும்படி எவ்வளவு வருந்தி அழைக்கிறாள்.பச்சைக் கொடி காட்டுறானா..? கடைசி வரை இல்லை.தாய் அனுப்பிய பணத்தில் CTB பஸ் ஓடுற பயிற்சி எடுத்தான்.யாழ்ப்பாணத்தில் எத்தனை CTB பஸ் ஓடுகிறது? அவன்,தனியார் மினி பஸ் ஒன்றிற்கு ரைவராக வேலை பார்க்கிறான்.

அவனுக்கு வார கடிதத்தை அவன் வாசிப்பது கூட இல்லை.ராணியிடமே கொடுத்து விடுகிறான். “வாசித்துப் போட்டு பதில் எழுது ..கையெழுத்து போட்டு விடுகிறேன்” என்பான்.ராணி லேசிலே எழுதி விடமாட்டாள்.சாரத்தை வாசிச்சுக் காட்டிய பிறகே..என்ன என்ன..எழுதலாம்..என கதைத்தே எழுதத் தொடங்குவாள்.

பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை விட்டு பிள்ளைகளை விட்டு விட்டு வந்த மகளிடம் கடிதத்தைக் கொடுத்தாள்.மகள் தாய்யை அனுதாபத்துடன் பார்த்தாள்.

“ஏம்மா,நீ கனடாவுக்கு விசிட்டிங் விசாவிலே ஒரு தடவை போய்யிட்டு வாயேன்”என்று கேட்டாள்.

“நான் எதற்கடி போகணும்.விஜயாவை எனக்கு தெரியாதா?இவன் போகணும்.ஆனால் அசைய மாட்டான். நான் சந்தைக்கு போயிட்டு வாரன்” என்று கிளம்பினாள்.

செல்வராசா மாஸ்ரருக்கு ரவி மூத்தவன்.அடுத்ததாக ..சந்திரன்,செல்வன்,கணபதி,கீதா..5 பேர்கள்.ரவிக்கு 10 வயதாக இருக்கும் போது தான் விஜயா கனடாவிற்குச் சென்றாள்.மாஸ்ரர் பெருந்தன்மையும் ,அமைதியுமானவர்.அவர் ‘அந்த விசயத்தை எரிய விடவில்லை. “கனடாவில் இருக்கிற சித்தி வீட்டை போய் விட்டாள்” என்று ஊரவர்களுக்கும்,அயலவர்களுக்கும் சொல்லி சமாளித்து விட்டார்.

விஜயா ,அவளுக்கு ஒரு பாரதக் கடிதம் எழுதுவாள்.அவளும்மினக்கெட்டு.
பிள்ளைகளைப் பற்றிய செய்திகளை எல்லாம் சேகரித்து ..எழுதுவாள்.

தாடியுடன் இருக்கும் ரவிக்கும்,சந்திரனுக்கும் உள்ள உறவு ‘ராம லஸ்மணர்’ போலயிருந்தது.அவன் அண்ணணுக்கு கட்டுப் பட்டவனாக இருந்தான்.ரவி O/L இல்
தவறிய போது,விரக்தியடைந்தவன் போல திரியத் தொடங்கினான்.அப்பாவியான முகம் ,எப்ப பார்த்தாலும் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருப்பான்.அவன் படித்த பள்ளிக்கூட விளையாட்டரங்கில் உள்ள..பபிளியனில் அவனொட ஒத்த பெடியள் செட்டுடன் சிகரட்டு புகைத்துக் கொண்டும், கள்ளு குடித்துக் கொண்டும்..இருப்பான்.நாள்
தவறாமல் யாழ்ப்பாண புதிய சந்தைக் கட்டிடத்துக்குப் போற..அவன்,சுயமாக பணம் சம்பாதிப்பதற்காக ‘சட்டவிரோதமாக வியாபாரம்’ செய்வதாக அறிந்தாள்.மாற்றாப் பிள்ளை
மனப்பான்மையுடன் காலத்திற்கு காலம் ‘கலவரங்களை’ முப்படைகளுடனும்,காடையர்களுடனும் நடத்திக் கொண்டிருக்கிற நாட்டில்..சட்டமாவது
– விரோதமாவது?ஆனால்,அரச உத்தியோகத்தில் இருந்த தமிழர்கள் ‘எத்தனை அலைகள் அடித்தாலும்’..அரச விசுவாசிகளாகவே இருந்தார்கள்.தமிழ் பொலிசிடம் அகப்பட்டிருந்தால் அவனை உள்ளே தள்ளியிருப்பார்கள்.நல்ல காலத்திற்கு பொலிஸ்படை யாழ்ப்பாணத்தில் செயல் இழந்திருந்தது.

அவனோட சேர்ந்த சிலருக்கு அச்சுக் கம்பனி ஒன்றுடன் தொடர்ப்பு இருந்தது.

O/L, A/L..கள்ள சான்றிதழ்களை தயாரித்து வித்துக் கொண்டிருந்தான்.கொழும்புக்கு
உத்தியோக வேட்டைக்குப் போறவர்களுக்கு..நல்ல கிரேட்களுடன் சான்றிதழ்கள் தேவைப்பட்டன.காலையிலே,சொன்னால்..மாலை 5 மணிக்கு முதல் தயாராக இருக்கும்.
100/=,200/= என பணம் அறவிட்டார்கள்.

லஞ்ச லாவண்ணியங்களுடன் இருக்கிற சிங்கள அரச உத்தியோக அதிகாரிகள் துப்பு துலக்கியா பார்க்கப் போறார்கள்?

ரவிச் செட்டுக்கு..ஊர்ப் பெட்டைகளுக்கு பின்னால் போய் சுற்றுற பழக்கமும் இருந்தது.
உறவினர்களுடன் சண்டையில் முடியிறளவுக்கு கூட விசயம் முற்றியும் இருக்கிறது. அப்ப,ராணிக்கு பின்னாலும் அலைந்திருக்கிறான்.அவள் சண்டைக்காரி.அப்படி ஒரு குணம்.அடிக்கடி ஏச்சுக்கள் வாங்கி கட்டியும் இருக்கிறான்.

ராணி வந்து குற்றப் பத்திரிக்கை வாசிக்கிற போது அவளுக்கு ..உள்ளே அழுகை கொப்புளிக்கும்.அவள் சினேகிதியின் மூத்த மகன் சீரழிவதை எப்படி பார்த்துக் கொண்டு இருப்பாள்!ச்ந்திரன் படித்துக் கொண்டிருந்தான்.ஆனால்,அவனைப் போலில்லாமல்..விளையாட்டுத் துறையில் திறமையானவனாக இருந்தான்.உதைப்பந்தாட்டத்தில் நேர்த்தியாக விளையாடக் கூடியவன்.பாடசாலைக் உதைபந்தாட்டக் குழுவிற்கு தலைவனாக வேறு விளங்கினான். எதிர் தரப்பு ‘பவுல்’விளையாடுகிறார்கள் என்றால்..,இவன் பவுல் விளையாடுறதே தெரியாமல் பலரின் காலை உடைத்து..ஆவேசமாக விளையாட ஆரம்பித்து விடுவான்.கிரிக்கட் குழுவிலும் சுமாராக விளையாடக் கூடியவனாக இருந்தான்.

இவனுக்கும் படிப்பு சரி வரவில்லை.

விஜயா,பல வருசங்களுக்குப் பிறகு மாஸ்ரருக்கு ஒரு கடிதம் எழுதினாள்.’பிள்ளைகளை கனடாவுக்கு எடுக்க விரும்புகிறேன்’என்று கேட்டிருந்தாள்.வளர்ந்து விட்ட ரவியிடமும்,சந்திரனிடமும்..”அம்மா உங்களை வெளியிலே வரட்டாம்.போறது தான் நல்லது.ஓம் என்று எழுதட்டா”என்று கேட்டார்.அது,வேண்டத் தகாத நிலையை ஏற்படுத்தி விட்டது.ரவி,ராணி மேலுள்ள மையலையும் உதறி விட்டு ஓரியக்கத்தில் சேர்ந்து வள்ளம் ஏறி விட்டான்.

சினேகிதிக்கு,கலக்கத்துடன் கடிதம் எழுதிய கையோடு..ராணியையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோவிலுக்குப் போனாள்.

“ராணி,அவனைக் கட்டுவாயாடி?”என்று கேட்டாள்.

ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள்.”அம்மா,உனக்கு பையித்தியமா?அந்த தாடியை கட்ட வேண்டுமா?” கேட்கவும் செய்தாள்.

“அவனைஅப்படியே விட்டால்சீரழிஞ்சே..போயிடுவானடி.பயமாகஇருக்கிறது”என்றாள்.. கலங்கிய குரலுடன் எங்கேயோ..பார்த்து..!பிள்ளையார் கோயிலை தெரிந்தெடுத்து வந்து அம்மா கேட்கிறாள்.

“அம்மா உன் விருப்பம் அதுவென்றாலும் ..இப்ப ஒன்றும் செய்ய ஏலாதே?அவன் இங்கே இல்லையே?”ஆதரவுடன் கேட்டாள்.அப்ப அவளில் வெளிப்பட்ட நிம்மதிப் பெருமூச்சு.

“காலம் எப்படியும் மாறும்மடி,பிள்ளையார் கை விட மாட்டார்.நீ மாறக் கூடாது..என்ன?”அம்மாட பரிதவிப்பு அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

“சரியம்மா,வா பூசைக்குப் போவோம்”என்று கூட்டிப் போனாள்.

அடுத்த கிழமை சந்திரனும் மற்றொரு இயக்கத்தில் சேர்ந்து போய் விட்டான்.3வது சிவாவுக்கு கம்பசில் படிக்க கிடைத்திருந்ததால்..”படிப்பை முடிக்க விரும்புகிறேன்”என மறுத்து விட்டான்.கடைசி இருவருமே போக சம்மதித்தார்கள்.மகள் விஜி ,கனடாவிற்குப் போன போது,மாஸ்ரருக்கு வீட்டிலே சமையல் பிரச்சனையாகி விடவில்லை.சிறுமகளை உதவிக்கு வைத்திருந்தாரே தவிர ,சமையல் முழுப் பொறுப்பையும் அவரே கவனித்து வந்தவர்.அதனால்,உதவியாக நின்ற ரவிக்கும்,சந்திரனுக்கும் கலாதியாக இடியப்பமும்,புட்டும் அவிக்கத் தெரிந்திருந்தது.

முதலாவதாக..சந்திரன் தான் வீட்டுக்கு திரும்பி வந்தான்.அவ்வியக்க ஏரியா பொறுப்பாளனாக நியமிக்கப் பட்டிருந்தான்.ஊரிலே பழைய வீடு ஒன்றை எடுத்து காம்பாக்கி ..அங்கேயே பெடியள்களுடன் பெரும் பொழுது தங்கினான்.வீட்டை இடைக்கிடை வந்து விட்டுப் போவான்.”காம்பிலே,சந்திரன் வைக்கிற கருவாட்டுக் குழம்பு கலக்கலானது”என்று அவளுடைய கடைசி மகன் -தவம் அவர்களோட இழுபடுறவன்..சொல்றதைக் கேட்டிருக்கிறாள்.

ரவி சென்ற இயக்கமும் அவனுடைய இயக்கமும் மோசமாக சச்சரவு இடுகிறவர்களாக இருந்தார்கள்.அதனால்,சந்திரனுக்கு தீராத தலவலியாக இருந்தது.’சைக்கிள் வெட்டுக்கள்’எப்பவும் கைகலப்பில் வெடிக்கலாம் போல பயமுறுத்திக் கொண்டே இருந்தது.

6-7 மாசம் கழிச்சு ரவியும் திரும்பி வந்தான்.அவனுடைய இயக்கம் புத்திசாலித் தனமாக அவனை இங்காலப் பக்கம் பொறுப்பாளனாக நியமித்தது.ஆச்சரியம் பூத்தது போல ..எல்லாக் கொழுவல்களும் அடங்கின.சந்திரன் தன் பக்க தணகல்களை அடக்கி விட்டான்.பிறகு ,2 இயக்கங்களிலும் ஒரே வகுப்பில் ..அல்லது பள்ளிக்கூடத்தில் படித்த பெடியள் இயல்பாக கதைத்து விட்டு அல்லது சிரித்து விட்டு போவர்களாக இருந்தார்கள்.அந்த ஊரில் மாத்திரம் தான் அத்தகைய மாற்றம் ஏற்பட்டிருந்தது.வேற ஊர்களில் எல்லாம் இன்னமும் அதே வைரித் தனம் தான் நிலவின.

மாஸ்ரர் ,வயலைக் கவனித்துக் கொண்டிருந்த போது, தீடீரென இருதய தாக்குதலால் ..தாக்கப்பட்டு..தொய்ஞ்சு,தளைஞ்சு..விழுந்து விட்டார்.அவருடைய சாவை வரம்பு கட்டிக் கொண்டிருந்த சிவா தான் நேரில் பார்த்தவன்.செத்த வீடு முடிய..இருவரும் அவரவர் காம்களிலே தங்க தொடங்கினார்கள்.சிவா,வயலையும்,வீட்டையும் சித்தப்பாவை பார்க்கச் சொல்லி விட்டு விட்டு.. கம்பசிற்குப் பக்கத்திலே ரூம் எடுத்து போய் விட்டான்.

ஒரு நாள் ரவி சைக்கிளில் தனியே போய்க் கொண்டிருக்கிற போது ராணி,அவனை வழியில் நிறுத்தி ..”என்னை நீ விரும்பினனி தானே.நீ போன பிறகு எனக்கு உன் மேல விருப்பம் விழுந்து விட்டது.கல்யாணம் கட்டி வாழ ஆசைப்படுகிறேன்.கட்டுவாயா?”என்று கேட்டாள்.ரவியிலே இப்ப பாரிய மாற்றம் ஏற்பட்டு விடிருந்தது.”நீ நல்லப் பெடியனாப் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொள்.என்ர வாழ்க்கை எப்பையும் முடியலாம்.உன்னை நட்டாற்றில் விட்டு விட முடியாது.” அவன் தெளிவாக பேசியது அவளை ஆச்சரியப் பட வைத்தது.

ஒரு தெளிவு,ஞானம்..!

இந்தியாவில், அவன் விடுதலைக் கல்லூரி ஒன்றிலும் படித்து வெளியே வந்திருக்கிறான்.புரட்சி பற்றிய ஒரு தெளிவு அவனிடம் இருந்தது. பொதுவாக அவனுடைய இயக்கப் பெடியள்களுடன் ‘அரசியல் பேசி வெல்ல முடியாது’ என்பார்கள்.எப்படிப் பட்ட பிரச்சனைகளுக்கும் அவர்கள் ஒரு பதில் வைத்திருப்பார்கள்.

அம்மாவிடம் வந்து இப்படி பேசுகிறான்..என்று சொன்னாள்.

“பிள்ளையார் கைவிட மாட்டார்.நீ மனம் தளராதே”என்றாள்.

மறுதடவை சந்தித்த போது, “ரவி கட்டினால் உங்களைத் தான் .இல்லாவிட்டால் இப்படியே இருந்து விடுவேன்”என்று ஓரேயடியாய் சொல்லி விட்டு போய் விட்டாள்.

பிறகு,சிறிலங்கா படைகளது தாக்குதல்கள் பொது மக்கள் மீதும்,இயக்கங்கள் மீதும் மோசமாக இருந்தன.இஸ்ரேலிய விமானங்கள் மூலமாக..பெடியள்களைக் கொல்கிறதாக..சொல்லி, பொது மக்களைத் தான் அதிக செல்லுகளை.. விழுத்திக் கொன்றொழித்தனர்.சந்திரனும் சுத்தி வளைக்கப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டான்.இந்த குழப்பத்திலும்,சந்திரனின் இயக்கத்திற்கும்,ரவியிட இயக்கத்திற்கும் இடையில் மோதல் வேறு வெடித்தது.

ரவியின் தரப்பில் பல பெரிய புள்ளிகள் மடிந்த போதிலும்,அவனை அவர்கள் விட்டு விட்டார்கள்.சந்திரனின் தமையன் என்பது தான் முக்கிய காரணம்.மற்றது..அவன் பேசுற பேச்சுக்கள் இயக்கப் பேச்சுக்களாக இல்லாமல் விடுதலை அரசியல்க்கான மார்க்சிசப் பேச்சாக இருந்ததும்..!

மோதல் தணிந்து அவ்வியக்கம் தடை செய்யப்பட்ட பிறகு,மினி பஸ் ஓடத் தொடங்கி இருந்தான்.

ராணி ,”தாலியைக் கட்டு” என்று திரும்ப கேட்ட போது பிள்ளையார் கோவிலில்..எல்லோரும் சூழ..’தாலியைக் கட்டினான்.சாவித்திரிக்கு கண்களில் கண்ணீர் பளபளத்தது. “,உன்ர வாக்கு பலித்திட்டு!அம்மா”என்று மகளும் கரைந்து,அவளைக் கட்டிக் கொண்டாள்.

இப்ப,அவனுக்கு 2 பெட்டை வாலூகள் இருக்கிறார்கள்.அவள்,சமாளிக்க முடியாமல் திணறுகிறாள்.இருந்தாலும் அவளுடைய உயிர் அந்த சின்னதுகள் தான்!

இப்பவும் ..விஜயாவின்கடிதங்கள் வருகின்றன. “குடும்பத்தோட அனுப்பன்டி”.அவன் மசியிறான் இல்லை.அவன் பக்கமும் நியாயங்கள் இருக்கிறனவோ?..என்று நினைப்பாள்.எப்படி இருந்தாலும் அவள் சினேகிதி பக்கம் தான்.

“அம்மா,.இந்தா தேத்தண்ணீ.நீ ரெஸ்ட் எடு,நான் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வசந்தி வீட்ட போயிட்டு வாரன்” கிளம்பினாள்.வசந்தி ,அவள் சினேகிதி-3-4 வீடு தள்ளி இருக்கிறாள்.

இப்ப,அவள் சிறிது தளர்ந்து விட்டாள் தான்.தலை மயிர் முழுதாக நரைத்து விட்டிருந்தது.முதுமை உடலை மூடிக் கொண்டு போகிறது.மனசை மட்டும் முதுமையால் தாக்க முடியவில்லை. ‘அவளும் விஜயாவும் பழகிய அந்த நாட்கள்..வசந்தியும் இவளையும் போல..!’ பெருமூச்சு விட்டாள்.தேத்தண்ணிச் சுவையும்,இனிப்பும்..இறங்க சிறிய புத்துண்ர்ச்சி ஒன்று ஏற்பட்டது. அவர்,வாகன விபத்தில் இறந்தது..கூட அவளை பெரிதாக பாதிக்கவில்லை. அவருடைய இளைப்பாரிய சம்பளம் கிடைத்ததால்..குடும்பத்தை கொண்டிழுக்க முடிந்தது.அந்த வீடும்,கொஞ்ச வயல் காணிகளும் வேறு இருந்ததால்.. அவள், தொடர்ந்தும் ராணி போலவே இருந்தாள்.ஆனால் சினேகிதி.., அவளை பெருமளவு பாதிக்கிறாள்.உயிரும்,உடலும் வேற வேற..இடங்களிலிருந்து அரற்றிக் கொள்வது போல..!

அவளுக்குத் தான்..ஏன் அப்படி ஒரு தலைவிதியோ?அப்படி என்ன பெரிய தப்பை செய்து விட்டாள்.

பண்பாடு,விழுமியங்கள்,தமிழர்களின் மாண்பு..என்று கட்டி அழுகிறவர்கள் தான் அவளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள்.சாதியம் என சண்டை பிடிப்பது,கொலைகளே விழுமளவிற்கு கொந்தளிப்பது,எல்லா அடக்குமுறைகளையும் பாவிப்பது..? ..?.. ?ஒன்றும் பிழைகள் இல்லையா?பெரியவர்கள் செய்தால்..எதுவுமே பிழைகள் இல்லையோ!

விஜயாவும்,அவளும் கொக்குவில் தொழினுட்பக் கல்லூரியில் படிக்கிற போது,கூட படித்த விமலின் பாங்கு ..குணங்கள்..விஜயாவிற்கு பிடித்து விட்டன.மாணவர்கள் என்ன சாதி என்பது..அவர்கள் வீடுகளுக்கு போய் வந்தால் அல்லவா தெரியும்.அதிலும் பெண்கள்.அவர்கள் எங்கே..போனார்க்ள்?என்ன சாதி? என்று கேட்பது எவருக்குமே பிடிக்காத விஜயம்.

விமல்,காதலைச் சொல்ல அந்த 3 வருசக் கோர்ஸில் விஜயா ஏற்றுக் கொண்டு விட்டாள்.

“இது, சரி இல்லை.முதலிலே, அவன் என்ன சாதி என்று கேட்டு விட்டு முடிவு எடு”சாவித்திரி சொல்லித் தான் பார்த்தாள்.

“அப்படிக் கேட்பது சரியில்லை”என்று சினிமாத் தனமாக மறுத்தும் விட்டிருந்தாள்.

சாத்தியப் பாடுகள் குறைவான அக்காதல் வெற்றி பெறுமோ? என்று அவள் பயந்தது நடந்தே விட்டது. அவளும் விமலும் சுபாஸ் கொட்டேலில் இருந்து ஜஸ்கிறிம் சாப்பிடும் போது,அவளுடைய அண்ணன் கதிர் பார்த்து விட்டான்.

வீட்டிலே ஒரு பூகம்பமே வெடித்தது.

கண்டமாதிரிக்கு அவளுடைய அப்பா அடித்து, அந்த கோர்ஸிற்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

கிளிநொச்சியில் இருந்த மச்சான்காரப் பெடியனான செல்வராசா..ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அமைதியான அவனுக்கு விஜயாவின் கதை தெரியாது.கலியாணத்தைக் கட்டி வைத்து விட்டார்கள்.பிறகு தான் அவனுக்கு சாடைமாடையாக தெரிய வந்தது.அவர் பெரிதாக எடுக்கவில்லை.ரவியை நிறைமாசத்தில் அவள் சுமந்து கொண்டிருந்தாள்.

விமல் தாடியை வளர்த்து கொண்டு வெளிநாடு ஒன்றுக்கு போய் விட்டான்.

விஜயாவும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ தொடங்கி விட்டாள்.ரவி,சந்திரன்..என 5 பிள்ளைகளுக்கு தாயானாள்.அப்ப தான் விதி விளையாடத் தொடங்கியது.கனடாவிற்கு போய்ச் சேர்ந்து விட்ட விமல் பார்ட்டி ஒன்றில்,தறி கெட்ட வெறியில் இருந்த போது,கூட இருந்த நண்பர்கள் அவனை கிளறத் தொடங்கினார்கள்.

கனடாவில் எக்ஸ் வைவ்,எக்ஸ் கணவர்மார்..என்றெல்லாம் நிறையப் பேர்கள் இருந்தார்கள்.அங்கே இருக்கிற தொலை காட்சி சனலில் “இளமையும் குழப்பங்களும்” என்ற மெகா நாடகத்தொடர் அந்த பாரம்பரியத்தை வைத்தே சுமார் 50 ஆண்டுகளுக்கு

மேலாக முடிவே இல்லாமல் தொடராக வந்து கொண்டிருந்தது.

வியாபார கம்பனிகளை நடத்துபவர்களும்,மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட லோயர்,கணக்காளர்கள் உட்பட..வேலை செய்யும் ஆண்கள்,பெண்கள்..வேலைக்காகவும் வியாபாரத்திற்காகவும்…ஆளை ஆளை மாத்தி மணம் முடிப்பதும், முறித்துக் கொள்வதுமான ஒரு குழம்பிய வாழ்க்கைத் தொடர் அது.அதிலே,ஒரே ப்ட்ஜைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மண முடித்தல் நிகழ்வதில்லை.கண்டறி மாட்டுக்கு வயதானவர் இளமையானவர்களை முடிப்பார்.மாறிச்சாரி..வரையறை கிடையாது.

வெளிநாட்டு ஆண்,பெண் கலாச்சாரம்.

நம்மவர்கள் கூட விரும்பிப் பார்க்கிற தொடர் அது.

நண்பர்கள் அந்த தொடரில் கதையை தொடங்கி,இன்னமும் தாடியோடு தனியனாக இருக்கிற அவனை..”டேய்,நீ அவளை நேசிச்சே!அவளும் உன்னை உண்மையாக நேசிச்சாள்.ஏன் நீ அவளை இங்கே எடுபித்து மணந்து கொள்ளக் கூடாது?”

“டேய்,மச்சான் இது நம்முடைய சாதி ஆட்களுக்கு முறையான அறை.கட்டாயம் செய்”என்று ஆளுக்கு ஆள்..ஏற்றி விட,அவனும் அந்த வெறியில்..நீண்ட கடிதம் எழுதி ,திரும்புற போது தபால் பெட்டியில் போட்டு விட்டான்.அடுத்த நாள் அதை மறந்தும் விட்டான்.அந்த நிலை கெட்ட வெறியில் பேசியது எதுவுமே ஞாபகமும் இருக்கவில்லை.

அந்த கடித்ததை மாஸ்ரரே பெற்றார்.அதை விஜயா பார்க்க மேசையில் வைத்து விட்டுப் போய் விட்டார்.அத்தகைய காந்தியவாதி அவர்.விஜயா அதை எடுத்து வாசிச்ச போது பழைய ஆத்திரங்கள் அவளுள் பிரவாகித்தன.விமலும் பெண் வர்க்கத்தையே ஏசியும் எழுதி இருந்தான்.தனிக் கட்டையாகவே சாவேன்!.. எனவும் வேறு எழுதி விட்டிருந்தான்.

அவள் உடனே சாவித்திரியிட்டேயே ஓடி வந்தாள்.பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு ஆறுதலாக இருந்த அவளுக்கு அக்கடிதம் தலையை பிய்க்கிற மாதிரி தலையிடியை ஏற்படுத்தி விட்டது.

“என்னடி செய்யப் போகிறாய்?கடிதத்தை கிழித்துப் போட்டு விடடி .பிரச்சனை முடிந்து போனது அப்படியே இருக்கட்டும் ” என்றாள்.

“சாதி சாதி..! அப்பர் அடித்த அடி இப்பவும் வலிக்குதடி.இவங்களுக்கு பாடம் படிக்கவாவது போகப் போறேன்.பாவம்! அவனை கட்டி வைத்திருக்கலாம்.ஏன் முடியாது போனது? நாம மட்டும் நேராய் வாழணும்.அதுவும் சாதிச் சட்டங்களுடன்..”வெடித்தாள்.

“எடியே, அது இல்லை..இப்ப பிரச்சனை.உனக்கு 5 பிளைகள் அரைகுறையாய் நிற்குதுகளே! இதுகளை கேள்விக் குறியாக்கப் போறாயா?”கேட்டாள்.

“வாழ்க்கையில் பிணைத்த விதமே சரியில்லை.சரியான தடத்திற்கு தானே போகிறேன்.பிரச்சனைகள் தீர்வதற்கும் வழிகள் வரும்மடி”பிடிவாதமாக நின்றாள்.

A/L இல் இருவரும் சறுக்கின பிறகு அந்த கோர்ஸையே பெரிதும் எதிர்பார்ப்போடு படித்தார்கள்.அதையும் படிக்க விடாது நிறுத்தியதால்..மனமுடைந்து அவள் அழுத அழுகை!

“எடியே காதல் வேண்டாமடி.என்னை கோர்ஸை படிக்க விட்டு, வேலை ஒன்றை எடுக்கிறதில் என்ன தவறடி இருக்கிறது?பழைய காலத்து ஆட்களாக ..; தடித்த சாதி ஆட்களாக ஆட்டம் போடுகிறார்களே”வெடித்திருந்தாள்.

“என்ன தான் செய்யப் போகிறாய்?”

பதில் கடித்தத்தை அவள் வீட்டிலிருந்து எழுதினாள்.

“கடிதப் போக்குவரத்து நம் 2 வீட்டுக்குமிடையில் நடப்பது நல்லதில்லை.எங்கட சின்னம்மா ஒருத்தி கல்யாணம் முறிந்து தனித்தவளாக ஆசிரியையாக..மானிப்பாய்யில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவர் வீட்டு விலாசத்திற்கே வருவது நல்லது.”என்று சொன்னாள்.

சனிக்கிழமை போல இருவரும் சின்னம்மா வீட்டுக்கு போய்க் கதைத்தார்கள்.அவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.அவர் வாழ்க்கையில் பட்ட காயங்களால் புதுமைப் பெண்ணாக இருந்தார். “தாராளமாக”என்று அனுமதித்தார்.

கடிதங்கள்..நீண்டன.விமல் பயண ஏஜென்சியைப் பிடித்து பாஸ்போர்ட் தொட்டு எல்லா வேலைகளையும் முடித்தான்.ரவிக்கு ,10 வயதாக இருக்கிற போது,அவள் கனடாவிற்குப் பறந்து போனாள்.

விஜயா,விமல் வாழ்க்கையில் சுமதி பிறந்தாள்.அவனுக்கு மனச்சாட்சி உறுத்தியதோ..ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொண்டான்.விஜயாவை “நாட்டுச் சூழல் நல்லாய் இல்லை,வேணுமானால் உன் பிள்ளைகளை இங்கே எடுக்க உதவி செய்கிறேன்”என்றான்.

ரவியன் சம்மதித்திருந்தால்..,சந்திரனும் சம்மதிச்சிருப்பான்;உயிரோடும்..இருந்திருப்பான்.

“ரவியை நீ தான் பார்த்துக் கொள்ள வேணும்”என்று வருகிற கடிதம் அவளை தவிக்க வைக்கும்.

“கவலைப் படாதேயடி பிள்ளையார் இருக்கிறார்”என்று எழுதுவாள்.

அவன் தாய்யின் முகத்தை பார்க்க விரும்பாததால்..போகவில்லை என்பதல்ல,புதிதாக முளைத்த அப்பாவை அவன் பார்க்க விரும்பவில்லை.விஜயாவும் மீள இங்கே வந்து ரவியை பார்க்கலாம் தான்.ஆனால்,அவளையும் ஏதோ ஒன்று தடுக்கிறது.சுமதி அவள் மகள் தான்..இருந்தாலும்,விமல் உயிரோடு இருக்கிற போது மூத்த மகனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிற தைரியம் அவளுக்கு இல்லை.

சாவித்திரிக்கு இந்த ஊசலாட்டம் கவலை அளித்தாலும் ..
“எடியே அவன் சந்தோசமாக இருக்கிறான்.கவலையை விடடி.வீடியோ பண்ணியிருக்கிறேன் பாரடி”என்று பிள்ளைகளின் பிறந்த நாட்களை சிறப்பாக

கொண்டாடி படம் பிடித்து அனுப்புகிறாள்.

அங்கே இருந்து வார வீடியோக்களை போட்டு பார்க்கிற போது ரவியும் பார்க்கிறான்.

ஒரு காலத்தில் தாய்யும்,மகனும் ஒன்று சேர்வார்கள்.அதையும் பிள்ளையார் ,கணக்கு போட்டு வைத்திருப்பார்!

அவள் திடமாக நம்புகிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *