எல்லாருக்குமான வாழ்க்கை

1
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 12,445 
 

தினமும் வேலைக்குப் போவதற்கு இங்கே ரயில் இருப்பது வசதி. வண்டியில் ஏறியதும் தூக்கம் கண்களைச் சுழற்றியது. நேற்று ராத்திரி தூங்கச் செல்வதற்கே லேட்டாகிவிட்டது.

காலையில் 5.00 மணிக்கு ட்ரெயின். ஏறி உட்கார்ந்ததும் சன்னலோர இருக்கையாதலால் “சில்’லென்ற காற்று முகத்தில் வீச, தூக்கம். வண்டி நின்றதும் சிறிது விழிப்பு வந்தது.

வண்டி கும்பகோணம் வந்திருந்தது.

அங்கு சில நண்பர்கள் ஏறினார்கள்.

எல்லாருக்குமான வாழ்க்கைவண்டி ஆடுதுறை வந்தபோது லேசாகத் தூக்கம் கண்களை அசத்தியது. கண்களை மூடித் தூங்கலாம் என்று நினைத்தபோது கைப்பேசி ஒலித்தது. வீட்டிலிருந்து பேசினாள்.

“”சொல்லுப்பா..”

“”நம்ப திருவிழாப்பட்டி சுப்பு இறந்துபோயிட்டாராம்”.

“”என்ன ஆச்சு?”

“”தெரியலே… ஏதோ வயித்து வலின்னு நாலு நாளைக்கு முன்னால பெரியாஸ்பத்திரிக்கு வந்தாராம்.. உடனே பெட்டுல சேரணும்னு சொன்னாங்களாம்.. வலியும் நிக்கலியாம்.. நேத்து ராத்திரி ரொம்ப வலியாயிடிச்சாம்.. வெட்டி இழுத்துச்சாம் ஒரு தடவை. அப்புறம் நின்னுடிச்சாம்..”

“”யாரு தகவல் சொன்னா?”

“”கனகா அக்கா சொல்லித்தான் அவரோட அண்ணன் பையன் சொன்னான்”

“”எப்போ எடுக்கறாங்களாம்?”

“”இன்னிக்கு அஞ்சி மணி ஆயிடுமாம். நாம வர வரைக்கும் எடுக்க மாட்டாங்களாம்.”

இது என்ன புதுக்கதை?

“”அவரு நோட்டுல குறிச்சு வச்சிருக்காராம்.. தான் செத்துப் போயிட்டா யாரு யாருக்குச் சொல்லணும்னு.. அவங்கள்ளாம் வந்துதான் எடுக்கணும்னு.. நீங்க காலையிலே வேலைக்குப் போறவருன்னு சொல்லி காலையிலேயே தகவல் சொல்லுங்கன்னு நேரம் கூட குறிச்சி வச்சிருக்காராம்”

அவள் சொல்லச் சொல்ல ஆச்சரியம் குமிழியிட்டு நுரைத்து வந்தது.

தன்னுடைய மரணத்தை யார் யாருக்குச் சொல்ல வேண்டும், எப்போது சொல்ல வேண்டும் என்று நேரம்வரை குறித்து வைத்த அந்த மனம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? அது என்ன எதிர்பார்க்கிறது? சுப்புவின் உருவம் மனத்திரையில் காட்சியாக விரிந்து நின்றது.

சுப்பு எதிர்பார்க்கிறவர் இல்லை.

அதற்கான தேவையும் இல்லை.

சுப்புவின் வாழ்க்கை விநோதமானது.

அவரின் தேவைகள் மிகக் குறைந்தவை. அதனை நிறைவேற்றிக் கொள்ள ஒருபோதும் அவர் தயக்கம் காட்டியதில்லை.

அவரின் பூர்வீகம் திருவிழாப்பட்டிதான். அது செம்மண் அடர்ந்த சிறுகிராமம். பெரும்பாலும் மூன்று விதையுள்ள கடலை… துவரை… அரிதாய் நெல் விளையும் கிராமம். ஓர் ஓட்டுவீடு மூன்று தடுப்புகளில் முன்கூடம் நடுக்கூடம் அடுப்படி என்று நீள் ஓட்டமாய் இருந்தது. ஒரு சிறிய கொல்லை. நாலைந்து தென்னை மரங்கள். அப்புறம் முருங்கை, கருவேப்பிலை என்று சிறு சிறு மரங்கள். நூறு குழி நிலம். இதுதான் அவருடைய சொத்து. இதற்கென்று வாழ்க்கைப்பட்டு வந்தவள்தான் கனகா அக்கா. கல்யாணம் ஆகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. குழந்தை எதுவும் இல்லை. இதுதான் அவர்களின் வாழ்க்கையை விநோதமாக்கிவிட்டிருந்தது. இருவருக்கிடையில் எந்தப் பிரச்னையுமில்லை. அதேபோன்று நெருங்கிய அந்நியோன்யமான உறவும் இல்லை. எப்பவாவதுதான் கிராமத்தில் வீட்டில் இருப்பார்கள். இருக்கும்போது சமைப்பாள். சாப்பிடுவார்கள். உட்கார்ந்து எதையேனும் பேசுவார்கள். தோசைக்கல்லில் விழுந்த நீர்த்துளிகளைப் போன்ற ஈரமற்ற பேச்சு அது.

ஒருவேளை ஒரு குழந்தை இருந்திருந்தால் அவர்களின் ஒட்டுதலற்ற வாழ்வினை ஒட்ட வைத்திருக்குமோ என்னவோ?

கொல்லையையும் நிலத்தையும் ஒத்திக்கு கொடுத்துவிட்டார்கள்.

சாப்பாட்டிற்கு நெல்லளந்துவிட வேண்டும் என்கிற ஒப்பந்தம்.

வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள் ஆளுக்கொரு பக்கம். நிறையச் சொந்தங்கள் இருந்தார்கள். கனகா அக்கா ஒரு திசைக்குப் போவாள். சுப்பு ஒரு திசைக்குப் பயணம் போவார்.

எல்லாருக்கும் இவர்களைப் பிடிக்கும்.

சாப்பாட்டு செலவுதானே தவிர வேறு தொல்லைகள் இவர்களால் எப்போதும் உறவுகளுக்குக் கிடையாது.

ஒரு வீட்டிற்குப் போவார் சுப்பு. அங்கே தங்குவார். அந்த வீட்டில் விசேஷம் என்றால் அது முடியும் வரை இருப்பார். அப்புறம் அந்த விசேஷத்திற்கு வருகின்ற உறவுகள் யாரேனும் பார்த்து… “”வாங்களேன் சுப்பு மாமா எங்க வீட்டுக்கு” என்றால் போதும். அதற்கெனக் காத்திருந்ததுபோலக் கிளம்பிவிடுவார். இப்படியே ஒவ்வோர் உறவு வீட்டிலும் வாரக்கணக்கில் மாதக் கணக்கில் தங்கிவிடுவார். தினமும் ஒரே வேட்டி சட்டையைத் துவைத்துப் போட்டுக் காய வைத்து உடுத்திக் கொள்வார். ஆனால் எப்போதும் பளிச்சென்று இருப்பார். சமயங்களில் பணத்தேவை என்றால் அதிகபட்சம் ஐம்பது ரூபாய்க்குமேல் கேட்க மாட்டார். இதுவே அதிகம் என்பார்.

சுப்புவிடம் ஒரு தனித்திறமை உண்டு. அதாவது எந்த நிகழ்வாக இருந்தாலும் அதன் முறைகள் அவருக்கு தலைகீழ்ப்பாடம். எனவே தடுமாறாமல் இருக்க அவரைத்தான் யோசனை கேட்பார்கள். அது கல்யாண வீடாக இருந்தாலும் சரி, இழவு வீடாக இருந்தாலும் சரி. இம்மி பிசகாது முறைகளைச் சொல்வார். எனவே பல பிரச்னைகள் அவரால் வராமல் இருப்பதால் உறவுகள் அவரிடம் ஒரு மரியாதையையும் பராமரித்து வந்தார்கள். அதுவும் செய்ய வேண்டிய முறைகளை அருகே இருந்து படிநிலை மாறாமல் மெதுவாகவும் நிதானமாகவும் சொல்லி செய்யச் சொல்வார். எனவே புதிதாக உறவுசம்பந்தம் வைத்துக் கொள்பவர்கள்கூட திருப்தியாக மன நிறைவாக இருக்க சுப்புவின் உதவி தேவையாக இருந்தது. எனவே இதனை ஒருபோதும் தவறவிடாமல் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதும் சுப்புவின் இன்னொரு திறமை என்று சொல்லலாம்.

சுப்புவிடம் அடிக்கடி நான் தொடர்பு வைப்பதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது.

அப்பா உயிரோடு இருக்கும்போது அடிக்கடி குலதெய்வக் கோயிலுக்குப் போவார்.

நியாயப்படி பங்காளிகளோடுதான் குலதெய்வக் கோயிலுக்கு வரணும். நானும் “”எல்லாரையும் கூப்பிட்டுப் பார்த்திட்டேன். வரமாட்டேங்குறாங்க.. அதுக்காக என்னால வராம இருக்க முடியுமா? என்ன பிரச்னை இருந்தாலும் வருஷத்துக்கு ஒரு தடவையாவது வந்துட்டுப் போயிடணும்.. உன் காலத்துலேயும் இத வச்சிக்க… கடைசிவரைக்கும் குடும்பம் நல்லாயிருக்கும்”

சுப்பு மாமா சொல்வார்..

“”உங்கப்பா சொன்ன மாதிரி நீ ஒருத்தன்தான் வருஷந் தவறாம குல தெய்வக் கோயிலுக்கு வரே.. வரணும்.. உன்னோட பங்காளிங்க உணர்வாங்க.. வருவாங்க”

திருவிழாப்பட்டிக்கு அருகில்தான் மீனாட்சிபுரம். அங்கதான் குலதெய்வக் கோயில் இருந்தது. பெரிய ஏரிக்கரை மேட்டின் மறுபக்கத்தில் பள்ளத்தில் இருந்தது. திருவிழாப்பட்டியிலிருந்து குறுக்கே வயல் வழியாகக் கோயிலுக்கு வந்துவிடலாம்.

பெரும்பாலும் கோயிலுக்கு வரும்போதெல்லாம் ஏரி வறண்டுதான் கிடக்கும். வெடிப்புகள் விழுந்திருக்கும். மீன்கள் நிறைய உண்டு. பிடித்து ஏலம் விடுவார்கள். அதற்கென வாங்குவதற்கு நிறைய மினிவேன்களில் ஏரியின் ஈரமற்ற இடம் வரை வந்து நிறுத்திவிட்டு வாங்கிப் போவார்கள். கோயிலுக்குப் போகும்போதெல்லாம் சுப்பு மாமாவிற்குப் போன் செய்துவிட்டால் போதும். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவார். அதற்கென உள்ள வேளார் குலப் பூசாரி வீட்டுக்குப்போய், “”கோயிலுக்கு வந்துடு. பொங்கல் வைக்கணும். அதற்கான ஏற்பாட்டோடு வந்துடு”ன்னு சொல்லிடுவார்.

“”வாங்க மாமா சைக்கிள்ல போவலாம்” என்பார் பூசாரி.

“”அதெல்லாம் சரிப்பட்டு வராது. அத பாரு நெருஞ்சிமுள் குத்து ஓரமா வயல்ல விழுந்து கோயிலுக்குப் போயிடுவேன். நீ சீக்கிரமா ஜோலிய முடிச்சிட்டு வா..”

கோயிலுக்குள் வந்ததும் தன்னுடைய தேய்ந்துபோன செருப்பை பூவரசு மரம் ஓரமாகக் கழற்றிவிட்டுக் களத்தில் இறங்கிவிடுவார்.

“”தம்பி நீ போய் காஞ்ச சுள்ளியாப் பொறுக்கிட்டு வா… பொங்கல் வக்க அடுப்பு பத்த வக்கணும்”

“”அம்மாடி நீ என்ன பண்ணறே… இந்த பூவரசு கொத்த }கொத்தா ஒடிச்சுக்க.. அதயே விளக்குமாறா.. இந்த எடத்தப் பெருக்கிடு..”

”சரி அந்த அகல் விளக்கையும் எண்ணெய் திரியெல்லாம் கொடு. நான் ரெடி பண்ணறேன்”.

“”சாமானுங்கள தனித்தனியா எடுத்து வச்சிடு”

“”அந்த பட்டுப் பாவாடையெல்லாம் தனித்தனியா வச்சிடு”.

“”அடிபைப்புல கால் முகமெல்லாம் கழுவிடுங்க.. வேலய முடிச்சதும்”.

“”கருப்பையா இருக்காரு.. சுத்தபத்தமா வெளக்கேத்தி கும்பிடணும்.”

பூசாரி வந்ததும் அவருக்கு வழிமுறைகளை சொல்லுவார்.

“”தம்பி.. விறுவிறுன்னு எல்லாத்தையும்… பச்சப்புள்ளங்க வந்துருக்கு.. டவுனுலே வளந்ததுங்க.. பசி தாங்காதுங்க..”

எல்லாவற்றிலும் புகுந்து உதவி செய்வார்… பொங்கல் தயாராகும்போது அடுப்பில் சுள்ளியை உள்ளே தள்ளுவார்… பூசாரி சாமி கழுத்தில் போடும் மாலையைச் சரிசெய்வார்..

“”மதுரை வீரனுக்கு சரியாப் போடு.. ரொம்ப கோவக்காரரு… கோவிச்சுக்கப் போறாரு.. எல்லாத்துலேயும் தேங்காய் உடைச்சி வையி… ஒரு முடிய சாமிக்கிட்ட வையு… கண்ணுள்ளதா அவங்ககிட்ட கொடு..”

“”ஏம்மா.. காமாட்சியம்மனுக்கு கொஞ்சம் பொங்கலு.. தேங்காய் பழமெல்லாம் எடுத்து வச்சிடு..”

விறுவிறுவென்று இயங்குவார்.

எல்லாம் முடிஞ்சதும்,

“”தம்பி நாலு மூடி தேங்காய் அப்படியே வாழைப்பழ சீப்பை வச்சி ஒரு 100 ரூவா வச்சி பூசாரிக்கிட்டே கொடு.. பொங்கலு வரப்போவுது.. பூசாரிய வரச்சொல்றேன்.. வேட்டி சட்டை புடவை எடுத்துக் கொடுத்து பணம் 500 வச்சிக்கொடு.. வருஷத்துக்கு ஒரு தடவ பண்ணிடு.. காலம் முழுக்க குறையில்லாம கருப்பையா பாத்துக்குவாரு.. எனக்கொரு பையில பொங்கலு.. தேங்காய் மூடி எல்லாம் வச்சுக்கொடு.. உங்கக்கா போனதும் என் பையத்தான் பாப்பா..”

எல்லாவற்றையும் மனதிற்குப் பிடித்தாற்போல நேர்த்தியாகப் பண்ணுவார்..

திரும்பிப் போகும்போது வேளார் வீட்டுலே உட்கார்ந்து, “”இன்னிக்கு கறந்த பாலு இருக்கா.. காபித் தண்ணிய போடு.. நாலஞ்சு டம்ளரு.. டவுனுக்குள்ள போறவரைக்கும் பசி தாங்கும்.. ஏம்பா… புள்ளங்களுக்கு பசியாயிருந்தா ஒரு தேங்கா மூடிய உடச்சிக் கொடு.. ரெண்டு வாழைப் பழத்தக் கொடு.. தாங்கும்”.

வண்டியேறும்போது, “”தம்பி.. ஒரு 20 ரூபா கொடுத்திட்டுப்போ”

இதுதான் சுப்பு மாமா!

இனிமேல் திரும்புவதைவிட நேரடியாக அலுவலகம் போய் கையெழுத்திட்டுவிட்டுச் சொல்லிவிட்டு வந்துவிடலாம். மதியம் ஒரு மணிக்கு சோழன் இருக்கிறது. 4 மணிக்குத் திரும்பினால் அங்கிருந்து திருவிழாப்பட்டி 25 கிலோ மீட்டர். எடுப்பதற்குள் போய்விடலாம்.

மதியம் வரவேண்டிய சோழன் அரை மணிநேரம் தாமதம் ஆகிவிட்டது.

வரும்போது மணி 4.30 ஆகிவிட்டது.

வண்டியை எடுத்து வீட்டிற்கு வந்து வண்டியைப் போட்டுவிட்டு ஓர் ஆட்டோ பிடித்து கிளம்ப 5 மணியாகிவிட்டது. போகும்போதே ரயிலடியில் ஒரு பெரிய மாலையாகக் கட்டிக் கொண்டாகிவிட்டது.

திருவிழாப்பட்டிக்குள்ள போகும்போது எல்லாம் தயாராக இருந்தது.

குளிப்பாட்ட நீர் எடுத்து வரப் போயிருந்தார்கள்.

“”வாங்கண்ணே உங்களுக்காகத் தவிச்சுக்கிட்டிருந்தோம். நீங்க வர்றவரைக்கும் எடுக்கக் கூடாதுன்னு எழுதி வச்சிருக்காருண்ணே.. இந்தாப்பா அந்த நோட்டைக் கொண்டு வாங்க..”

கொண்டு வந்தார்கள்.

கசங்கலான 40 பக்க கோடு போட்ட நோட்டு அது. பென்சிலால் எழுதியிருந்தார்.

“என்னோட சாவுக்குக் கீழ்க்கண்ட நபர்களுக்குத் தகவல் முன்னால் அளிக்க வேண்டும்.

அவர்கள் பெயர்களுக்கு எதிரே குறிக்கப்பட்டு நேரத்தில் அனுப்ப வேண்டும். அதற்குப் பின் அவர்கள் வேலைக்குப் போய்விடுவார்கள். சிரமம். அவர்கள் வரும் வரை என் பிணத்தை எடுக்கக்கூடாது. ஒருவேளை அதிக தாமதமானால் எடுத்துவிடவும். ஊரார் மன்னிக்கவும். தயவுசெய்து இந்த வேண்டுகோளை நிறைவேற்றவும். தவிரவும் என்னுடைய 100 குழி நிலத்த இந்த ஊருக்கே எழுதி வச்சிடறேன். இது என்னோட வம்சாவழி உறவுகள் குலதெய்வக் கோயிலுக்கு வரும்போது அவர்களுக்கு வேண்டிய எல்லா சவுகர்யங்களையும் நான் நின்று செய்வதுபோல செய்து கொடுப்பதற்கு. அவ்வாறு செய்பவர்கள் இந்த நிலத்தின் விளைச்சலைப் பங்கிட்டுக் கொள்ளலாம். என்ன நம்பி வந்தவளுக்கு உடம்புல உசிரு இருக்கறவரைக்கும் அந்த கருப்பையா பாத்துக்குவாரு’

இப்படியெல்லாம் இருக்க முடியுமா?

கனகா அக்கா எங்களைப் பார்த்தும் கதறி அழுதாள். தாரைதாரையாக வழிந்த கண்ணீர் அவளின் நிதர்சனத்தைக் காட்டியது.

உடைந்துபோன ஒரு பெஞ்சில் சுப்பு மாமாவைப் படுக்க வைத்திருந்தார்கள்.

மாமா முகத்தில் மரணக் களை இல்லை. தூங்குவது போல்தான் இருந்தார். ஆனால் உயிர் நீத்துவிட்டார் என்பதை பறையொலிகளும் கொட்டுச் சத்தங்களும் உறவினர் அழுகைகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தன.

எல்லோரும் வந்திருந்தார்கள். பெரிய கூட்டம். கிராமத்து கூட்டத்தைவிட.

பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள், அக்கா மருமகன்கள், அப்பாவின் பங்காளிகள், அம்மாவின் உறவுகள், சித்தியின் தம்பிகள், அவர்களின் குடும்பங்கள், பேரப் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து குலதெய்வம் கோயிலுக்கு வராதவர்கள் சுப்பு மாமா இறப்பிற்குக் கூடியிருந்தார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

“”எம் பொண்ணு கல்யாணத்துலே ஒரு பிரச்னை. விடிஞ்சா கல்யாணம். பிரச்னை வந்துடிச்சி.. தவிச்சுப் போயிட்டோம்.. மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரியாம சுப்பு மாமா ஒரு யோசனை சொன்னாரு.. 3 மணிக்கு பிரச்னை தீர்ந்துச்சி.. எப்படியாப்பட்ட மனுஷன்”

“” நம்ப ருக்கு அத்தை செத்தப்ப பெரிய சிக்கலு.. நடுவூட்டுல பொணத்த போட்டுட்டு அடிச்சுக்கறாங்க.. மண்டை உடையாத குறை.. கூட்டத்துலே புகுந்து சுப்பு மாமா பேசுன பேச்சு இருக்கே. இன்னிக்கும் மறக்க முடியாது.. கப்சிப்னு அடங்கிப் போச்சு.. ருக்கு அத்தை பொணம் காடுபோச்சு கௌரவமா..”

“”அதயேன் கேக்கறே.. என்னோட சம்பந்திங்க வந்துட்டாங்க.. காது குத்து.. ஒருத்தருக்கும் ஒரு வழிமுறை தெரியலே.. நல்லவேளை சுப்பு மாமா இருந்தாரு.. என்ன குலதெய்வம்னாரு.. முழிச்சாங்க.. சரி.. இந்த ஊருதானே.. எனக்குத் தெரியும் இந்த ஊரு வழக்கம்னு மளமளன்னு ஊரு தலைவர அழச்சிட்டு வரச்சொல்லி ஒரு சேரப் போட்டு உக்கார வச்சி… செஞ்சாரு பாரு.. இல்லாட்டி பெரிய ஊரு கலவரமாயிருக்கும்”

“” எத்தனையோ தடவ சொன்னாரு நா எல்லா ஏற்பாடும் செஞ்சு வச்சிடறேன்.. நீ கைய வீசிட்டு வான்னு கேக்கலியே.. நாப்பது வயசாயியும் பொண்ண வச்சிருக்கேன்.. சுப்பு மாமா..”

ஆளுக்காள் சுப்பு மாமா இல்லாமை குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

எதிலும் ஒத்துப்போகாத… எதிர்வாதம் பண்ணக்கூடிய… குறை பேசக்கூடிய.. எகனைக்கு முகனையாக பேசக்கூடிய இப்படி எல்லா முரண்பட்ட உறவுகளும் சுப்பு மாமாவின் கடைசி ஊர்வலத்தில் கூடியிருந்தார்கள்.

6 மணிக்கு எடுக்கப் போனார்கள்.

பாடையில் ஏற்றியதும் அந்தக் கிராமத்து கூட்டமே ஒரு பெருங்குரலை எடுத்து ஒலித்தது.

மனசு அதிர்ந்தது.

கோடிகோடியாய் கொள்ளையடித்து செய்யும் காரியத்துக்குச் சேரும் கூட்டம் இந்தக் கூட்டத்தோடு ஒப்புமையாகுமா? என்று மனதுக்குள் தோணியது.

பாடை முன்னோக்கி நகர பின்னால் ஏதோ சத்தங் கேட்டது.

என்னது?

நாங்களும் பாடை தூக்குவோம்னு பிரச்னை.

மனதுக்குள் தோணியது. சுப்பு மாமாவின் கனம் தோளைத் தடவுவதுபோல இதமாய் இருந்தது.

எல்லாருக்குமான வாழ்க்கை வாழ்தல் அப்படியொன்றும் எளிதானதல்ல என்று தோன்றியது.

– ஹரணி (ஆகஸ்ட் 2015)

Print Friendly, PDF & Email

1 thought on “எல்லாருக்குமான வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *