(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிறுவனாயிருந்தபோதே நான் சிங்கப்பூருக்குப் போய்விட்டேன். காரணம் தாய் தந்தையற்ற அனாதையாயிருந்ததுதான். என்றைக்காவது ஒரு நாள் போயே போய் விடப்போகும் இந்த உயிரின்மீது எனக்கிருந்த ஆசையால்தான் யுத்தத்திற்குப் பயந்து திரும்பவேண்டி வந்தது. சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தபோது எனக்கு எங்கு செல்வதென்றே புரியவில்லை. நகரை நான்கைந்து முறை வலம் வந்து பார்த்தேன்; வழி ஒன்றும் தோன்றவில்லை.
இரவு எட்டு மணி இருக்கும். மழை ‘சோ’ என்று பெய்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான் எனக்குப் பிறப்பிடமான வேலூரில் இருக்கும் போது எனது நண்பன் அப்துல் காதரின் ஞாபகம் வந்தது. நான் அவனைப் பார்த்துச் சுமார் பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். ஆகவே இப்பொழுது அவன் அதே ஊரிலேயே இருக்கிறானோ என்னமோ என்ற சந்தேகம் வேறு என்னைப் பேதலிக்கச் செய்தது. இருந்தாலும் இரவு எங்காவது தங்கிவிட்டு மறுநாள் அவனைப் போய்ப் பார்ப்பதென்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், அஜ்ஜா என்னும் அழகுத் தெய்வம் அன்றிரவே எனது முடிவை மாற்றிக் கொள்ளச் செய்துவிடும் என்று நான் அப்பொழுது எதிர்பார்க்கவில்லை. எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
அந்தப் பெரு மழையில் நனைந்துகொண்டே அப்பொழுது நான் சைனாபஜார் ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு காலி ஜட்கா போய்க் கொண்டிருந்தது. “ஏய், ஜட்கா! ஏய், ஜட்கா!” என்றேன் நான். அவன் என்னைச் சட்டை செய்யாமல் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். ‘திடுதிடு’ வென்று ஓடி நான் வண்டிக்கு முன்னால் போய் நின்றேன். அவன் வண்டியை நிறுத்தி விட்டு “எங்கே போவணும், மகாராஜ்!” என்று கேட்டான். அப்படிக் கேட்கும்போது அவனது கண்கள் சுழன்றன; பெரிய கஞ்சாக் குடியன் போலும்!
வண்டியில் ஏறிக் கொண்டேன். சிங்கப்பூரிலிருந்து திரும்பிய கதையை அவனிடம் சொல்லி, இரவு எங்கேயாவது தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று அவனையே கேட்டேன். எனக்குப் பிடித்தமானால் தன் வீட்டிலேயே தங்கலாமென்று அவன் சொன்னான். நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.
சிறிது நேரத்திற்கெல்லாம் நான் ஜட்காவாலாவின் வீட்டை அடைந்தேன். அவனுடைய வீடு மீர்சாஹிப் பேட்டையில் ஒர் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. உதிர்ந்து போன ஓலைக் கூரையும், கதவுகளுக்குப் பதிலாகத் தொங்கவிடப் பட்டிருந்த கோணிக் கந்தைகளும் அவனுடைய தரித்திர நிலையை எடுத்துக் காட்டுவனவாயிருந்தன. பெருமழையின் காரணமாகத் தாழ்வாரத்தில் கட்டிப்போட்டு வைத்திருந்த வெள்ளாடு ஒன்று, அவனைக் கண்டதும் குட்டிகளுடன் சேர்ந்து, ‘அம்மே, அம்மே!’ என்று பரிதாபத்துடன் கத்திற்று. அந்தக் கத்தலைக் கேட்டுத் தன்னுடைய அப்பா வந்திருந்ததை அறிந்து கொண்டவள் போல் ஒரு பெண் உள்ளேயிருந்து ஓடோடியும் வந்தாள். அவளுடைய முகத்தில் இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு வேதனை குடி கொண்டிருந்தது.
இந்தச் சமயத்தில் யாரோ ஒருவன் வீட்டு வாயிலில் நின்று கொண்டு, “அலிகான்!” என்று இரைந்தான். அவனைப் பார்த்தால் ஈட்டிக்காரன் போல் தோன்றிற்று. உடனே ஜட்காவாலா விரைந்து சென்று அவனிடம் ஏதோ சில்லறையைக் கொடுத்து அனுப்பினான். அவன் சென்றதும் “அஜ்ஜா!” என்றான் அலிகான். “இருக்கிறேன்!” என்றாள் அவள் வெறுப்புடன்.
அவளுடைய வெறுப்பைப் பொருட்படுத்தாமல் “இரண்டு நாட்களாக என்னைக் காணாமல் என்ன செய்தாய், அஜ்ஜா ஏதாவது சாப்பிட்டாயா?” என்று கேட்டான் அவன்.
“எப்படிச் சாப்பிடுவது? எங்கிருந்து சாப்பிடுவது?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
அலிகான் நான் இருந்த பக்கம் திரும்பி, “குழந்தைக்கு என்மேல் ரொம்பக் கோபம்!” என்று அசட்டுச் சிரிப்புடன் சொல்லிவிட்டு “உம்… அது இருக்கட்டும், அஜ்ஜா! இவர் சிங்கப்பூர் ஆசாமி. இரவு இங்கே தங்கச் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது இவருக்கும் சேர்த்து ஏதாவது தயார் பண்ணு!” என்று எட்டணாவை எடுத்து அஜ்ஜாவின் கையில் கொடுத்தான். அவள் அதை வாங்கிக்கொண்டு என்னை ஏற இறங்கப் பார்த்தாள். நான் ஒரு ரூபாயை எடுத்து அலிகானிடம் கொடுத்து அவளிடம் கொடுக்கச் சொன்னேன். அவன் அதை வாங்கித் தன் பையில் போட்டுக் கொண்டான்.
சிறிது நேரத்துக்கெல்லாம் கூடையை எடுத்துக் கொண்டு அஜ்ஜா கடைக்குப் புறப்பட்டபோது “எனக்கென்னமோ இன்று உடம்பு சரியில்லை அம்மா கொஞ்சம் படுக்கையைப் போட்டுவிட்டுப் போ?” என்றான் அலிகான். அவளும் அப்படியே அவனுக்குப் படுக்கையைப் போட்டுவிட்டுச் சென்றாள். இதையெல்லாம் பார்த்த போது, தன்னுடைய சொந்த செளகரியத்துக்காகத்தான் அலிகான் படுதா முறையைக் கூடக் கைவிட்டு விட்டானோ என்று எனக்குத் தோன்றிற்று.
கடையிலிருந்து திரும்பி வந்ததும் அஜ்ஜா அவசர அவசரமாகச் சமைத்தாள். அப்பாவைச் சாப்பிடுவதற்கு எழுப்பினாள். அவன் எழுந்திருக்கவில்லை – ஏன் எழுந்திருக்கவில்லை? அதுவும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து போய்விட்டது. அவன் முடிவில்லாத நித்திரையில் ஆழ்ந்து விட்டான்! – அஜ்ஜா அலறினாள்; நான் திடுக்கிட்டு அவளருகில் சென்றேன். அவள் கண்ணிர் தோய்ந்த கண்களால் என்னை ஏறிட்டுப் பார்த்தாள். “அல்லாவின் கிருபை அவ்வளவுதான்” என்றேன் நான்.
என்ன நிலையற்ற வாழ்வு!
என்னுடைய சொந்தச் செலவில்தான் அலிகாவின் பிரேதத்தை எடுத்து அடக்கம் செய்ய வேண்டி நேர்ந்தது. பார்க்கப் போனால் அவன் இறந்ததற்காக அஜ்ஜா வருந்துவதற்கு அவசியமே இல்லாமலிருந்தது. ஏனெனில் காலையில் வண்டியைக் கட்டிக் கொண்டு சென்றால் “இன்றுடன் என்று திரும்புவாய், பாவா?” என்று கேட்கக்கூடிய நிலையில்தான் அவள் என்றும் இருந்திருக்கிறாள். காரணம், அலிகானுக்கு அஜ்ஜாவைக் காட்டிலும் சாராயத்தின் மீதும் கஞ்சாவின் மீதும் அதிக அன்பு இருந்து வந்திருக்கிறது. கிடைத்ததைக் கொண்டு கீழே விழும்வரை சாராயத்தைக் குடித்துவிட்டு, அதற்கு மேல் கஞ்சாவை அடித்துவிட்டு, வண்டியை வண்டி மேட்டில் நிறுத்திவிட்டு, வேறு கவலையொன்றும் இல்லாமல் வண்டிக்குள் படுத்துக் கொண்டு தூங்கியே அவன் தன் வாழ்நாட்களில் பாதியைக் கழித்திருக்கிறான். மற்றப் பாதி நாட்கள் அஜ்ஜாவுக்குச் சஞ்சலத்தைக் கொடுப்பதில் கழித்திருக்கிறான்.
இந்த விஷயங்களெல்லாம் தெரிந்த பிறகு, அஜ்ஜாவின் மீதிருந்த அனுதாபம் எனக்கு அதிகமாயிற்று. ஆனால் அந்த அனுதாபத்தை நான் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை… அப்படிக் காட்டிக் கொள்வது அவள் ஏதாவது தப்பர்த்தம் செய்து கொள்வதற்கு ஏதுவாகுமென்று நான் நினைத்ததுதான் அதற்குக் காரணம். இதனாலேயே அலிகான் இறந்தபிறகு, அந்த ஈட்டிக்காரன் வந்து தனக்குச் சேரவேண்டிய பாக்கிக்காகக் குதிரை வண்டியையும் ஆடுகளையும் பறிமுதல் செய்தபோது நான் ஒன்றும் பணம் கொடுத்து உதவவில்லை. ஆனால் அதற்காக அவள் மனம் நோவதைப் பார்த்து என்னால் மெளனம் சாதிக்கவும் முடியவில்லை. சிறிது அச்சத்துடனே அவளை நெருங்கி, “அஜ்ஜா! தற்சமயம் அவற்றை மீட்டுக் கொடுக்கக்கூடிய நிலைமையில் தான் அல்லா என்னை வைத்திருக்கிறார். ஆனாலும் அவற்றால் உனக்கு ஒன்றும் பயனில்லை. வேண்டுமானால் என்னிடமிருந்து அந்தப் பணத்தை நீ ரொக்கமாகப் பெற்றுக் கொண்டு, உனது ஜீவியத்திற்கு ஏதாவது வழி தேடிக் கொள். இப்படி என் வலுவில் உனக்கு உதவி செய்ய முன் வருவதைப் பற்றி நீ ஒன்றும் தப்பர்த்தம் செய்து கொள்ளாதே! உனது சகோதரன் மாதிரி என்னை…” என்று நான் இழுத்தேன்.
இதைக் கேட்டதும் அஜ்ஜாவின் முகத்தில் ஏனோ ஒருவிதான பயங்கரப் பீதி குடிகொண்டது. அவளுடைய உதடுகள், “உனது சகோதரன் மாதிரி என்னை… உனது சகோதரன் மாதிரி என்னை….” என்று திருப்பித் திருப்பி முணுமுணுத்தன.
அதற்குமேல் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. நான் மெல்ல அவள் மெல்லிய கரத்தைப் பற்றினேன். ஆனால் “உன்னை நிக்கா செய்து கொள்கிறேன்” என்று சொல்ல எனக்கு அப்பொழுது தைரியம் வரவில்லை. அதற்குப் பதிலாக, “உன்னை என்றும் நான் கைவிடமாட்டேன்” என்று மட்டும் உறுதி கூறினேன். அதைக் கேட்டு அவளது முகம் மலர்ந்தது; அந்த முகத்தைப் பார்த்து எனது முகமும் மலர்ந்தது.
அடுத்த நாளே நாங்கள் இருவரும் வேலூருக்குப் பிரயாணமானோம். அங்கு போய்ச் சேர்ந்த சில நாட்களுக்கெல்லாம் எனது நண்பன் அப்துல்காதரைக் கண்டு பிடித்துவிட்டேன். அவனைக் கண்டுபிடிப்பதில் எனக்கு அப்படி ஒன்றும் சிரமம் ஏற்படவில்லை. ஏனெனில் அவன் அப்பொழுது வேலூர் லாங் பஜாரில் பெரிய அரிசி மண்டி வியாபாரியாயிருந்தான். அவனுடைய உதவியைக் கொண்டு அஜ்ஜாவை எங்கள் மதச்சம்பிரதாயப்படி விவாகம் செய்து கொண்டேன். அதற்குப் பிறகு அவனுடைய மண்டியிலேயே மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் எனக்குக் குமாஸ்தா வேலையும் கிடைத்தது.
நாலைந்து வருடங்கள் நாங்கள் ‘பஹூ குஷீ’ யாகக் காலத்தைக் கழித்தோம். இருந்தாலும் வாழ்க்கையின் வரவுக்கும் வயிற்றுப் பாட்டுக்கும் சரிக் கட்டுவதே சிரமமாயிருந்தது. இந்த நிலையில் அஜ்ஜாவின் கை நிறையத் தங்க வளையல்கள் வாங்கிப் போட வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. அந்த ஆசை தான் கடைசியில் என்னை அஜ்ஜா நிராகரிப்பதற்குக் காரணமாகிவிட்டது
கதையைக் கேளுங்கள்: ஒரு நாள் எனது எஜமானன் என்னிடம் ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து, பாங்கில் போட்டுவிட்டு வரும்படி சொன்னான். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு நான் நேரே நகைக் கடைக்குச் சென்றேன். அரை டஜன் தங்க வளையல்களை வாங்கி அஜ்ஜாவுக்குத் தெரியாமல் வீட்டில் வைத்து விட்டு எஜமானிடம் சென்று பணம் பறி போய் விட்டதாகச் சொன்னேன். அப்பொழுது எனக்கு அந்தத் தைரியம் எப்படி வந்ததோ, அது எனக்கே தெரியாது. அதை இப்பொழுது நினைத்துக் கொண்டாலும் எனக்கு வியப்பாயிருக்கிறது. எனது போலி நடிப்பைக் கண்டு என்னுடைய நண்பன் ஏமாந்து விட்டான். “என்ன செய்வது, எதற்கும் நீ போலீஸில் எழுதி வை!” என்றான்.
அன்றிரவு வீட்டுக்குச் சென்றதும் அஜ்ஜாவை அன்புடன் அழைத்து அவளது கரங்களில் வளையல்களை இட்டேன். அவள், “இந்த வளையல்களை வாங்க உங்களுக்குப் பணம் ஏது?” என்று வியப்புடன் கேட்டாள்.
“உனக்குத் தெரியாமல் இத்தனை நாட்களாகச் சேர்த்து வைத்திருந்தேன்” என்று நான் அப்பொழுது பொய் சொன்னேன். கடைசி வரையில் நான் அந்தப் பொய்யை வெளிப்படுத்தாமலே இருந்திருக்கக் கூடாதா?
அன்று இரவு அவள் தலை குனிந்தபடி என் அருகில் உட்கார்ந்திருந்தாள். நான் மனங்கனிந்து மெல்ல அவளது முகவாய்க் கட்டையைத் தொட்டு, அவளுடைய தலையை நிமிர்த்த முயன்றேன். அப்போது தன் மிருதுவான கரங்களால் அவள் எனது கையைத் தட்டிவிட்டு முல்லைச் சிரிப்புச் சிரித்தாள். அந்தச் சிரிப்பின் களிப்பிலே என்னை மறந்து நான் வளையல் வாங்க எனக்குப் பணம் கிடைத்த உண்மையை சொல்லி விட்டேன். அதே மூச்சில் ‘விர்’ரென்று மண்டிக்கு கிளம்பாமல் சிறிது நேரம் வீட்டிலேயே இருந்திருந்தால், நான் சொன்னதைக் கேட்டு அவளது முகம் திடீரென்று மாறுதல் அடைந்தததைப் பார்த்திருப்பேன் என்பது எனக்குப் பிறகுதான் தெரிந்தது?
மண்டிக்குப் போய்விட்டு அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் அஜ்ஜாவைக் காணவில்லை. அவளுக்குப்பதிலாக கட்டிலின்மீது ஒரு கடிதம் கிடந்தது. அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்தேன்.
“எனது அன்பருக்கு
என் மனத்தை எவ்வளவோ சிரமத்துடன் திடப்படுத்திக் கொண்டு உமக்கு நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வெகு சீக்கிரத்தில் மறைந்துவிடப் போகும் எனது அழகு உமது அறிவைப் பாழாக்கிவிட்டது. அதற்காக என்னை மன்னிக்கவும். நீர் முதலில் தெரிவித்தமாதிரி உம்மை நான் சகோதரனாகவே பாவித்திருந்தால்?….. வளையல்கள் பீரோவில் இருக்கின்றன. என்னைத் தேட வேண்டாம் தேடுவதில் பயனில்லை.
அஜ்ஜா!”
இந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு அந்தத் தங்க வளையல்களை விற்றுப் பணத்தைக் கொண்டுபோய் அப்துல் காதரிடம் சேர்த்தேன். அவனிடம் நடந்த கதையைச் சொல்லி, “என்னை மன்னிக்கவேணும்” என்று கேட்டுக் கொண்டேன்.
அவன் எனது வேண்டுகோளை லட்சியம் செய்யால், “அஜ்ஜா!” என்றான் சிரித்துக் கொண்டே.
என்ன ஆச்சரியம்! அடுத்த நிமிடம் அஜ்ஜா எனக்கு எதிரே வந்து நின்று புன்னகை புரிந்தாள். அப்துல் காதர் “நீ நினைத்தபடி நடந்துவிட்டது. ஆனாலும் என்னிடம் வேலை செய்யவோ, எனது முகத்தில் மீண்டும் விழிக்கவோ உன் கணவனுக்கு மனமிராது. ஆகவே இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்னைக்குப் போய் ஏதாவது வியாபாரத்துறையில் ஈடுபட்டு மனம்போல் உங்களது வாழ்நாட்களைக் கழியுங்கள்” என்று அவளிடம் சொல்லி நான் கொண்டு வந்து கொடுத்த பணத்தை திருப்பி என்னிடமே கொடுத்துவிட்டான்.
மறுநாள் அவளை வாயார வாழ்த்திக் கொண்டே நாங்கள் சென்னைக்குப் பயணமானோம் – அப்புறம் என்ன? முக அழகோடு அக அழகும் பெற்றிருந்த அஜ்ஜாவின் அரவணைப்பிலே நான் எல்லாவற்றையும் மறந்தேன்!
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.