ஆபத்தான அழகு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 7,717 
 

`நீ யாரை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக்க. எனக்கு இருக்கிற வேலையில, ஒனக்கு எங்கே போய் மாப்பிள்ளையைத் தேடறது?’ கவிதாவுக்குப் பதினைந்து வயதானபோதே மங்களம் அப்படிக் கூறியிருந்தாள். `அட, ஜாதகம், மத்த பொருத்தமெல்லாம் பாத்துச் செய்யற கல்யாணமெல்லாம் நல்ல விதமா அமைஞ்சுடுதா, என்ன!’

பத்துப் பொருத்தம் பார்த்து செய்த திருமணமானாலும், இரண்டே வருடங்களில் அவளைவிட்டு எங்கோ தலைமறைவாகிவிட்ட கணவனால் அவளது சிந்தனை, அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது.

சில பெண்களைப்போல ஒரேயடியாக இடிந்து போய்விடாது, மேற்படிப்புப் படித்து, கௌரவமான உத்தியோகத்திலும் அமர்ந்தாள். ஒழிந்த நேரத்தில் சமூக சேவை. பிறருடன் அவர்கள் பட்ட துயங்களைப் பகிர்ந்துகொண்டபோது, தனது வாழ்க்கையின் அவலம் பெரிதாகத் தோன்றவில்லை.

தாயைப்போலவே வளர்ந்தாள் கவிதாவும். உயர்வு, தாழ்வு என்ற பேதமில்லாமல், எல்லாருடனும் அனுசரணையாகப் பழகுவாள்.

எப்போதாவது தான் பார்த்தே அறியாத அப்பாவின்மேல் கோபம் எழும். `இந்த ஆண்களே சுயநலக்காரர்கள்!’ என்று ஒட்டுமொத்தமாக அவ்வர்க்கத்தின்மேலேயே வெறுப்பு வரும். இவ்வளவு நல்ல அம்மாவிடம் என்ன குறை கண்டு அவர் ஓடிப்போனார்?

“ஆம்பளைங்க எல்லாருமே மோசம். இல்லேம்மா?”

அந்த விவரம் அறியாப் பெண்ணின் மனப்போக்கைப் புரிந்து கொண்டவளாய், மங்களம் லேசாகச் சிரித்தாள். “தாத்தாவை மறந்துட்டியே!” என்று, தனக்கு ஒரு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவரை நினைவுபடுத்தினாள்.

“ஆணோ, பெண்ணோ, நாம்ப எல்லாருமே மனுஷ ஜாதிதானே! சாமியா? தப்பு செய்யத்தான் செய்வோம்!”

கவிதாவுக்கு அதிசயமாக இருந்தது. பெண்கள்கூட ஆண்களை வருத்துவார்களா!

அதன்பின், அவளுக்கு ஆண்களின்மேல் பொதுவாக ஏற்பட்டிருந்த கசப்பு மட்டுப்பட்டது. எந்த ஒருவரையும் அவரது செயல்களை வைத்துத்தான் எடைபோட வேண்டும் என்று நிச்சயித்தாள்.

ஆனால், ஆண்களை நம்புவதற்கும் தயக்கமாக இருந்தது. அவசரப்பட்டு யார்மேலாவது ஆசைப்பட்டுத் தொலைத்தால், அவரும் அப்பாமாதிரி பொறுப்பற்றவராக இருந்து வைத்தால், ஆயுசு பூராவும் யார் அவதிப்படுவது?

ஏதேதோ யோசித்தவள், மற்ற பெண்களைப்போல, அவளது அழகையோ, அறிவுக் கூர்மையையோ புகழ்ந்து பேசிய ஆண்களிடம் எளிதாக மயங்கிவிடவில்லை. சிந்தனை தறிகெட்டு ஓடாததால், அதை ஒருமுகமாகப் படிப்பில் செலுத்த முடிந்தது.

வேலையில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோதுதான் சுந்தரைச் சந்தித்தாள். உத்தியோகம் சம்பந்தமான சந்தேகங்களைக் கேட்பதில் ஆரம்பித்தது அவர்கள் உறவு.

“ஒனக்காவது அப்பா மட்டும்தான் இல்லே. எனக்கு எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரையுமே தெரியாது,” என்று சுந்தர் சுயபரிதாபத்துடன் கூறியபோது, கவிதாவிற்குச் சிறிது குற்ற உணர்வு உண்டாயிற்று.

தாயன்பே அறியாது வளர்ந்திருந்தவனிடம் தான் சிறிது அன்பைக் காட்டினால்கூட, அவன் அதைப் பலமடங்காகத் திருப்பி அளிப்பது அவன்மேல் இரக்கத்தைத் தோற்றுவித்தது. அதே சமயம், பெருமையாகவும் இருந்தது.

தியாகராஜ ஆராதனையை ஒட்டி நடந்த இசைவிழாவில் கவிதா பங்குகொண்டு, மேடையை விட்டு இறங்குகையில், முகமெல்லாம் பூரிப்பாக அவளைப் பாராட்டினான் சுந்தர். தன்னையும் அறியாமல், அவனை உரசுவதுபோல நெருங்கியவள், “அம்மா! இவர்– சுந்தர். எங்க ஆபீஸ்தான்!” என்று பக்கத்தில் நின்றிருந்த மங்களத்துக்கு அறிமுகப்படுத்தினாள்.

சுந்தர் தன் மகளை உரிமையுடன் பார்த்த விதத்திலிருந்ததும், அதை அங்கீகரிப்பதுபோல அவளும் சற்றே தலையைக் குனிந்து நின்றதையும் பார்த்தாள் மங்களம். தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

“ஒரு நாள் வீட்டுக்கு வாங்களேன்!” என்று அழைப்பு விடுத்தாள். கவிதாவின் முகம் அப்போது மலர்ந்ததையும் கவனிக்கத் தவறவில்லை.

கவிதா கொண்டுவைத்த தேனீரைப் பருகியபடி இருந்தவனிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தாள் மங்களம். “ஏன் சுந்தர்? ஒங்க அப்பா, அம்மா ஒங்க கூடதான் இருக்காங்களா? இல்லே, வேலை விஷயமா நீங்க மட்டும் இங்கே இருக்கீங்களா?

“நான் பாட்டி வீட்டிலே இருக்கேன், ஆன்ட்டி. அவங்கதான் என்னை வளர்த்தாங்க. எனக்கு ரெண்டு வயசா இருக்கும்போதே அப்பா, அம்மா ரெண்டுபேரும் போயிட்டாங்க!” உணர்ச்சியற்ற குரலில் தெரிவித்தான்.

“அடடா! தெரியாம கேட்டுட்டேன். இந்த கவிதாதான் மொதல்லேயே சொல்லி இருக்கக்கூடாது?” என்று பழியை மகள்மேல் திருப்பினாள் முதியவள். இருந்தாலும், அடுத்து வந்தது மற்றுமொரு கேள்வி. “நீங்க பிறந்து வளர்ந்ததெல்லாம் கே.எல்ல (கோலாலம்பூரில்) தானா?”

அக்கேள்விக்கு விடையளிக்க சுந்தர் சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டதுபோல் இருந்தது. “நான் பிறந்தது ஈப்போவிலே!”

அதற்குமேல் மங்களம் ஏதாவது கேட்டிருப்பாள், “போதும்மா நீங்க குறுக்கு விசாரணை செஞ்சது! வக்கீலாப் போயிருந்திருக்கலாம், பேசாம!” என்று கவிதா குறுக்கிட்டு இருக்காவிட்டால்.

“பேசாம இருந்தா, எப்படி கவிதா வக்கீல் தொழில் செய்ய முடியும்?” என்று சுந்தர் கேட்க, மூவரும் மனம்விட்டுச் சிரித்தார்கள்.

“போயிட்டு வரேன், ஆன்ட்டி,” என்று சுந்தர் கைகூப்பியபடி எழுந்தபோது, மங்களத்திற்கு சுந்தரிடம் கேட்க வேண்டியது இன்னும் ஒன்று பாக்கியிருந்தது: “ஒங்க பாட்டி பேரு என்ன? ஒரு வேளை, அவங்க எனக்குத் தெரிஞ்சவங்களாக்கூட இருக்கலாம். கோயில், கச்சேரி — இப்படி எங்கேயாவது பாத்திருப்போம்!”

அவன் சொன்னான்.

தாயின் முகத்தைக்கூடப் பார்க்கப் பிடிக்காதவளாக, சாப்பிடாமலேயே போய் படுத்துக்கொண்டாள் கவிதா.

`எல்லா ஆண்களுமே நம்பத் தகாதவர்களில்லை,’ என்று சொல்லிச் சொல்லித் தன்னை வளர்த்த அம்மாவா இது? சந்தேகப் பிராணியாக, சுந்தர் என்னமோ குற்றவாளிக் கூண்டில் நிற்பதுபோல் பாவித்து..!

அரைமணி அவளைத் தனியே விட்டுவிட்டு, அறைக்குள் நுழைந்தாள் மங்களம். “எனக்கு ஒரு சந்தேகம். அது சரியா போச்சு!”

தாய் சொன்னது காதில் விழாததுபோல் கவிதா படுத்திருந்தாள். `மொதல்லே, யாரை வேணுமானாலும் கட்டிக்கன்னு சொல்றது. இப்போ, அருமையா வளத்த பொண்ணு தன்னைவிட்டுப் போயிடப் போறாளேன்னு பயம்!’ என்று தனக்குள் பொருமினாள்.

“என்னடா, இந்த சுந்தரை எப்பவோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். அப்படியே அவங்கப்பாவை உரிச்சு வெச்ச மாதிரியில்ல இருக்கார்!”

சட்டென படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டாள் கவிதா. “சுந்தரோட அப்பாவை ஒங்களுக்குத் தெரியுமா?”

மங்களம் சற்று யோசித்தாள், விஷயத்தை எப்படிப் பக்குவமாகச் சொல்வது என்று. “அவங்கப்பாவோட போட்டோ தினமும் பேப்பரில வருமே!” சமாளிக்கப்பார்த்தாள்.

“மந்திரியா? அரசியல்வாதியா?”

“அதெல்லாமில்ல. பெண்டாட்டி வேற ஒருத்தனோட உறவு வெச்சிருந்ததால, திட்டமிட்டு அவளைக் கொலை செய்துட்டாருன்னு வழக்கு. இதோ, இந்தப் பாட்டிதான் மாப்பிள்ளைமேல கேஸ் போட்டது!”

சுந்தர் பெற்றோர் இருவரையும் இழந்தது இப்படித்தானா! “தூக்குத் தண்டனையா?” மெல்லிய குரலில் கேட்டாள் கவிதா.

“ஊகும். `தக்க ஆதாரம் இல்லே’ன்னு அவரை விடுதலை செஞ்சாங்க. ஆனா, மனுஷன் தானே தூக்கு மாட்டிக்கிட்டு செத்தார், பாவம்!” எப்பவோ நடந்ததற்கு வருத்தப்பட்டாள். “வீட்டிலே பொம்பளை சரியா இல்லாட்டியும் கஷ்டம்தான்!” தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு, மங்களம் வெளியே நடந்தாள்.

`ஒழுங்கற்ற அம்மாவுக்குப் பிறந்தவன் மட்டும் நல்லவனாக இருக்க முடியுமா?’ இரவெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தாள் கவிதா.

மறுநாள். “நீங்க மொதல்லேயே எங்கிட்ட சொல்லியிருக்கணும், சுந்தர்! இப்படி, அம்மா சொல்லிக் கேக்கறப்போ, எனக்கு எவ்வளவு அவமானமா, அதிர்ச்சியா இருந்தது, தெரியுமா?” அடிக்குரலில் கேட்டுவிட்டு, கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

இருவரது தேனீரும் ஆறிக்கொண்டிருந்தது.

“எதைச் சொல்லி இருக்கணும், கவி? நான் நிஜமாவே ஒழுக்கமில்லாத ஒரு அம்மாவுக்குப் பிறந்தவன்தானான்னு என் மனசில ஒரு பக்கம் உறுத்திக்கிட்டே இருக்கே, அதையா?” அவன் கோப்பையைக் கையில் எடுத்துவிட்டு, மீண்டும் கீழே வைத்தான். “அம்மா அழகுப் போட்டியில பரிசு வாங்கினவங்க. அதுவே அப்பா அவங்கமேல அவநம்பிக்கைப்பட காரணமாயிடுச்சாம். பாட்டி சொல்லிச் சொல்லி அழுவாங்க”.

வைத்த கண் வாங்காமல், அவன் வாயையே பார்த்துக்கொணிருந்தாள் கவிதா.

“ஒரு வேளை, அப்பாதான் சந்தேகப் பிராணியா இருந்து, மத்தவங்களோட அம்மா கலகலப்பா பேசிப் பழகினதை தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கலாம், இல்லியா? வார்த்தையால அப்பா ஓயாம குத்திக் குதர்றதை பொறுக்க முடியாம, அம்மா விவாகரத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்களாம். அதைத் தாங்கமுடியாம.., அதுக்குள்ளே..!” தான் பார்த்தேயிராத பெற்றோரைப்பற்றி நிறையவே யோசித்திருந்தான்.

“யாரை நம்பறது, யாரை வெறுக்கறதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல, கவி. `எனக்கும் ஏன் எல்லாரையும்போல அப்பா, அம்மாவோட சந்தோஷமா இருக்கிறமாதிரி ஒரு நல்ல குடும்பம் அமையலே?’ன்னு நெனச்சு, நெனச்சு அழுதிருக்கேன், தெரியுமா? ஒன்னைப் பாத்தப்புறம்தான், எதிர்காலம்னு ஒண்ணு இருக்கிறதே நினைவு வந்திச்சு. இப்ப நீயும்..!” சுந்தரின் குரல் கேவியது.

அது அலுவலக காண்டீன் என்றும் பாராது, அவன் கையைத் தாவிப் பற்றினாள் கவிதா. “ஷ்..! எப்பவோ நடந்து முடிஞ்சதைப்பத்தி இப்ப என்ன!” என்று செல்லமாக மிரட்டினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *