ஜீவநாதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,287 
 

(1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதயத்தின் சோகச் சுமையுடன் ஜடமாய் உட்கார்ந்திருக்கின்றாள் விஜயா.

அவளுக்கு முன்னால் ஒரு சூட்கேஸ்’ திறந்த படியேயிருக்கின்றது.

வானவில்லின் வர்ண ஜாலம் கோலமிடும் அவளது உடைகள், அவள் எடுத்துச் செல்லவிருக்கின்ற அந்த சூட்கேஸ்ஸில் அடுக்கடுக்காக, மடித்து வைக்கப்பட்டும் வைக்கப்படாமலுமிருக்கின்றன.

பலரது இன்பதுன்பங்கள், தேவைகள், இதயச் சுமைகள், தாபங்கள் எல்லாவற்றையும் தமதகத்தே தாங்கிய உள் நாட்டு வெளிநாட்டு கடிதங்கள், கொழும்பில் தபாலில் சேர்க்கப்படுவதற்காக, பொலீத்தீன் உறையில் சுற்றி அவளது சூட்கேஸின் ஒரு பக்கத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

விஜயாவின் நினைவுச் சுவட்டில் மத்தாப்பு வெடித்துக் கிளம்பி மலர்கின்றது. மலர்கின்ற அந்த வர்ணப் பூக்கள் ஒருவித வேதனை தரும் இன்பமும் துயரமும் கலந்த ஏக்க அலைகளை அவளது இதயத்தில் எழும்புகின்றன.

தன்னைப் பெற்றெடுத்த இந்த அன்னை பூமியை விட்டுச் செல்கின்றேன் என்ற வேதனையா அல்லது தனது அன்புத் தாய்தந்தையரை இனி எப்போ காணப்போகின்றேன் என்ற ஏக்கமா?

அவள் பிறந்து வளர்ந்து, வானத்துத் தாரகைகளை அள்ளி விளையாடத் துள்ளிக் குதித்தோடும் செல்லக் குழந்தையாய், பிஞ்சுக்கால் பதித்து, ஆடிப்பாடித் திரிந்த, தென்னஞ்சோலைகள், பச்சைப் பசேலென்ற மரகத வயல் வெளிகள், மொட்டுகளும் மலர்களும் நனைந்த அந்தத் தாமரைக்குளம் எல்லாம் அவளது மனத்திரையில் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன.

ஏணிப்படியில் காலடி எடுத்து வைக்கின்றாள் விஜயா.

வசந்தகால இளந்தென்றல் அவளது மனோகர மேனியில் தவழ்ந்து, அவளை அறியாமலே ஒருவித துயரமயக்கத்தையூட்டுகின்றது அவளுக்கு.

அவளது வெண்நீலப் புடவை மென்காற்றில் நடுங்கித் துடிக்கின்றது.

ஆழ்ந்த நீலவானத்தில் அவளது எழிலுருவம் உருகிச் சங்கமிப்பது போன்ற உணர்வி அவளுக்கு.

ஒரு கெட்ட கனவை மறப்பதற்கு முயற்சிப்பதைப் போல அந்த பயங்கர சம்பவத்தை தனது இதயத்திலிருந்து துடைத்தெறிவதற்கு இந்த நாட்டையே விட்டுச் செல்ல, ஒரு காலத்தில் விஜயா தவித்துக் கொண்டிருந்தாள். அவளது தவிப்பு இப்பொழுது நிறைவேறப் போகின்றதா?

ஏன் இந்தத் தயக்கம்?

அவள் பிறந்து வளர்ந்த நிலத்தோடு ஒட்டிய உறவை அறுத் தெறிந்து விட்டு புறப்படுவதற்குத் தயங்குகின்றாளா?

அவள் இந்த நாட்டை விட்டுச் செல்வதற்கு தயாராகின்றாள். அதே வேளை அவள் இந்த நாட்டில் தங்கவும் எண்ணுகின்றாள். அவளுக்குத் தங்கவும் மனமில்லை, செல்லவும் மனமில்லை. இரண்டும் கெட்டான் நிலை.

தன்னைப் பெற்றெடுத்த அன்புத் தாய் தந்தை, தன் உடன் பிறப்புக்களான தம்பி தங்கைகள், இதுகாலவரை அவளுக்கு வழித்துணையாக இருக்கின்ற அவளது அன்பிற்கினியவனான ஜீவா எல்லோரையும் தேடி அலைகின்றன அவளது துயரம் நிரம்பிய விழிகள். ஆயிரக்கணக்காக நிற்கின்ற மக்கள் மத்தியில் நிற்கும் அவர்களை தூரத்திலிருந்து அவளால் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? ஒரே ஒரு தடவை, இறுதியாக அவர்களை பார்த்துவிட அவளது விழிகள் ஏங்கித் தவிக்கின்றன.

ஆயிரமாயிரம் மனித வெள்ளத்திற்கு மத்தியில் தனது நேசத்திற்கும் பாசத்திற்குமுரியவர்களை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளது விழிகளில் நீர் திரையிடுகின்றது. என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை.

விருப்பு, வெறுப்பற்ற, முற்றும் துறந்த ஞானியின் தியான நிலையில் நிற்கின்றாள் விஜயா.

பிரபஞ்சமே சூனியமயமாயிருக்கின்றது அவளுக்கு. விஜயாவிற்கு ஏன் இந்த நிலை?

அவளது தாய் தந்தையரின் நினைவலைகள் எழுந்ததும் துயரம் அவளது இதயத்தை மௌனச் சுமையாய் அழுத்துகின்றது

விஜயாவின் தந்தை ஊதாரி. தாய் நோயாளி. தம்பியோ ஊர்சுற்றி, தங்கைகள் மூவரும் பொறுப்பற்ற செல்வங்கள். விஜயாதான் குடும்பத்தின் சுமைதாங்கி. குடும்பத்தை நிருவகிக்கின்ற அவள் வெளிநாடு சென்றால், அந்தக் குடும்பச் சுமை நோயாளியான தாயின் தலையில் தான், இதனால் தான் விஜயா வெளிநாடு செல்லத் தயங்குகின்றாளா?

விஜயாவை எப்படியாவது வெளிநாட்டிற்கு அனுப்பிவிட வேண்டுமென்று அவளது தந்தை சுந்தரம் துடியாய்த் துடிக்கின்றார். அவள் வெளிநாடு சென்று விட்டால் தனக்கு ஒரு சுமை இறங்கிவிடும். அவள் வெளிநாட்டிலிருந்து மாதாமாதம் அனுப்புகின்ற பணத்தைத் தாராளமாகச் செலவு செய்யலாம். அத்துடன் தனது சகோதரியையும் திருப்திப்படுத்தி விடமுடியும் என்பது அவரது நப்பாசை.

தனது அன்பு மகள் தன் கண்முன்னால் குடியும் குடித்தனமுமாய் வாழ்வதைத் தான் கண் குளிரப் பார்க்க வேண்டுமென்பது தான் அவளது நோயாளித் தாயாரின் ஆசை.

தந்தையின் நிர்ப்பந்தத்தினால் தான் விஜயா வேண்டாவெறுப்பாக வெளிநாடு செல்லத் தயாராகின்றாள்.

தான் வெளிநாடு சென்ற பின் தன் குடும்பத்தின் கதி என்ன என்ற கேள்விக்குறி விஜயாவின் முன்னால் பூதாகாரமாக நிற்கின்றது. நீண்ட நாள்களாக இந்தக் கேள்விக்கு விடைகாண அவளது மனம் அலைகின்றது.

வரப்போகும் பிரிவின் ஆகுலத்தால் அவளது மனம் ஏங்கி அழுது கொண்டிருக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களாகத் தான் சேவையாற்றி வந்த நூற்றுக்கணக்கான மழலைச் செல்வங்களையும் அன்புத் தாய்மார்களையும் பிரிந்து செல்லப் போகின்றோம் என்ற வேதனை அவளது இதயத்தைத் தகிக்கின்றது. இந்த அன்பிற்குரியவர்களைப் போஷித்துவந்த நிலையங்களுக்குச் சென்றுவரும் வேளைகளில் அவர்கள் முகம் கொடுத்த நெருக்கடிகள் எவ்வளவு? அவர்கள் எவ்வளவு அபாயகரமான சூழ்நிலைகளில் சேவையாற்றியிருக்கின்றார்கள்?

ஊரடங்குச் சட்ட வேளைகளில், விமானத் தாக்குதல்களில், ஹெலிச் சூடுகள், ஷெல் தாக்குதல்கள் நடந்த வேளைகளில் தங்கள் உயிரைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு போஷாக்கு நிலையத்திலிருந்து மற்ற போஷாக்கு நிலையத்திற்கு அவர்கள் சென்று சேவையாற்றியிருக்கின்றார்கள். ராணுவச் சுற்றி வளைப்புக்கள், தேடுதல் வேட்டைகள் நடக்கின்ற வேளைகளிலும் அவர்கள் அஞ்சாமல், தயங்காமல் சேவையாற்றியுள்ளார்கள்.

***

விஜயாவின் பைசிக்கிள் பனங்கூடலைக் கிழித்துக் கொண்டு வளைந்து நெளிந்து செல்கின்ற ஒற்றையடிப் பாதை வழியே சென்று கொண்டிருக்கின்றது.

பனைமரங்கள் உணர்வற்று ஜடமாய் நிற்கின்றன.

கூட்டம் கலைந்த யானைகளைப் போல வரண்ட காண்டைப் பற்றைகள் சிதறிக் கிடக்கின்றன.

சிறிது தூரம் சென்றதும் தோட்ட நிலங்கள் , அந்தச் செம்மண் தோட்டங்களில் தெட்டந் தெறியனாய் விவசாயிகள் ைேல செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் கெட்ட நேரத்தில் கொதித்துத் தகிக்கும் வெய்யிலில், தன்னந்தனியனாய்ச் சென்று கொண்டிருக்கின்ற விஜயாவின் சேவை உணர்வைப் பற்றி அவர்களில் சிலர் தங்களுக்குள் மெச்சிப் பேசுகின்றார்கள்.

தூரத்தில் எங்கோ சங்கிலித் தொடராய் நாய்கள் குரைக்கின்றன.

ராணுவம் எங்கோ நடமாடுகின்றது என்பதை ஊகித்த சில விவசாயிகள் விஜயாவை எச்சரிக்கின்றனர்.

இப்படிப்பட்ட ராணுவச் சுற்றிவளைப்புக்களுக்கும் தேடுதல் வேட்டைகளுக்கும் நேரடியாக முகம் கொடுத்துப் பரீட்சயப்பட்ட அவள் தன்னை எச்சரித்து விழிப்படையச் செய்த அந்த விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவித்து ஒரு சிறு முறுவலை வெளிப்படுத்திவிட்டு வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றாள். அன்று நடக்கவிருந்த போஷாக்கு சம்பந்தமான கருத்தரங்கைப் பற்றியே அவளது சிந்தனை ஓடிக்கொண்டிருக்கின்றது.

மீண்டும் நாய்களின் தொடர்ச்சியான குரைப்பு. விஜயா ஒன்றையும் பொருட்படுத்தாது சென்று கொண்டிருக்கின்றாள்.

ஆளரவமற்ற அந்த சூனிய வெளியில் அமானுஷ்ய அமைதி.

ஆள்காட்டிப் பறவையொன்று திடீரென அலறிக்கொண்ட பறந்து செல்கின்றது.

வேகமாகச் சென்று கொண்டிருக்கின்ற விஜயா, ஒரு வளையில், தனது பைசிக்கிள் பிறேக்கைப் பிடித்து மெதுவாகச் செலுத்துகின்றாள்.

வளைவிலிருக்கின்ற காண்டைப் பற்றை மறைவிலிருந்து காக்கிச்சட்டை உருவம் ஒன்று திடீரெனப் பாய்ந்து விஜயாவினுடைய பைசிக்கிள் ஹாண்டில்களைப் பிடிக்கின்றது.

நிலை தளும்பி விழவிருந்த விஜயா ஒருவாறு சமாளித்து, தனது காலை ஊன்றியபடியே நிற்கின்றாள்.

அவளுக்குப் பேரதிர்ச்சி. விஜயா செய்வதறியாது திகைத்துப் போய் நிற்கின்றாள்.

பயபீதியில் அவளது உள்ளமும் உடலும் நடுங்குகின்றன. அவள் நட்ட கட்டையாய் நிற்கின்றாள்.

ஆஜானுபாகுவான அந்த உருவம் அவளது கையைப் பற்றுகின்றது. விஜயாவின் ரத்தம் உறைந்து விட்டது போன்ற உணர்வு அவளுக்கு.

அவளது திறந்தவாய் மூடவில்லை .

விஜயாவின் இதயத்துடிப்பு நின்று விட்டதா?

அந்தக் காக்கி உருவத்திற்குக் குரூரம் நிறைந்த கண்கள். கனல்கக்கும் அந்த உக்கிரக்கண்களிலிருந்து தெறிக்கின்ற போதை நிறைந்த வெறித்த பார்வை விஜயாவை திகிலடையச் செய்கின்றது.

மதம் கொண்ட யானையைப் போன்ற அந்த வெறியனின் உடும்புப்பிடி இறுகுகின்றது. அந்த மூர்க்கனுடைய பிடியில் அவளது குருத்து எலும்புகள் நொறுங்கி முறிவது போலிருக்கின்றது.

மரணத்தறுவாயில் தான் இருப்பதைப் போன்றிருக்கின்றது விஜயாவிற்கு. நெருங்கிவரும் மரணத்தின் நிழல் அவள் முன் படர்வது போலிருக்கின்றது.

கணப்பொழுதில் தன்னுணர்வு பெற்ற அவள் தன்னைச் சுதாரித்துக் கொள்கின்றாள்.

திடீரென அவளது ரத்த ஓட்டம் துரிதமாகி, நரம்புகளும் நாளங்களும் விண்ணென்று முறுகித் தெறித்துப் புடைகின்றன.

தன்னை விடுவிக்க அவள் போராடத் தொடங்குகின்றாள். காக்கி உடையின் இரும்புப் பிடி மேலும் இறுகுகின்றது. ஐயோ அம்மா!’

அவளையறியாமலே அவள் அவலக் குரலெழுப்புகின்றாள். அவளது வாயைத் தனது கையால் பொத்த அவன் முயல்கின்றான். அவள் திமிறிக் கொண்டு மீண்டும் அவலக்குரலெழுப்புகின்றாள்.

காக்கி உருவம் விஜயாவை காண்டைப் பற்றை மறைவிற்கு இழுத்துச் செல்ல முயல்கின்றது.

அவள் அந்த வெறியனின் மரணப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அலறியபடியே ஜீவமரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றாள்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்ட நிற்கின்றவர்களுக்கு அவலக் குரலொன்று கேட்கின்றது. அது விஜயாவினுடைய குரல்தானென்று தகித்து அவர்கள் ஆரவாரித்துக் கூக்கூரலெழுப்பியவாறு அலறல் சத்தம் வந்த திசையை நோக்கி நாலாபுறங்களிலுமிருந்து ஓடிவந்து கொண்டிருக்கின்றார்கள்.

விவசாயிகள் கூக்கூரலிட்டபடியே விஜயா போராடிக் கொண்டிருக்கின்ற இடத்தை நெருங்குகின்றார்கள்.

தன்னைக் காப்பாற்றுவதற்காக அந்த வெறியனியிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற விஜயாவைக் கண்டதும் விவசாயிகள் ஆகரோஷமடைகின்றார்கள். அவர்களிடையே கொதிப்பும் கொந்தளிப்பும் கோபாவேசமும் பொங்கிப் பிரவகிக்கின்றது. கோபத்தில் கண்களை வெறித்து நோக்கியவர்களும், தமது புருவங்களை நெருக்கி முஷ்டிகளை உயர்த்தி தமது கோபாவேஷத்தை ஆக்ரோஷக் குரல்களால் வெளிப்படுத்திக் கொண்டு ஓடி வருகின்றார்கள்.

விவசாயிகள் ஓடிவருவதைக் கண்ட அந்தக் காக்கி உடை தனது இரும்புப் பிடியைத் தளர்த்தி விஜயாவைத் தன் பிடியிலிருந்து விடுகின்றான்.

விஜயாவை நெருங்கிவிட்ட விவசாயிகள் அந்தக்காக்கி உடைக்கிராதகனைப் பிடித்து, பிய்த்துப் பிடுங்கி கூறு கூறாகக் கிழித்தெறிய வேண்டுமென்று துடிக்கின்றார்கள்.

அதிகாரத்தொனியில் சத்தமிட்டுக் கொண்டு இன்னுமொரு காக்கிச் சட்டை உருவம் எதிர்புறத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது.

காலைத் தரையிலூன்றி அழுத்தமாக வைத்தபடியே அவன் சாவதானமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றான்.

அவனது கொழுத்த, சிவந்த உருண்டை முகமும் கூரிய பார்வையுடைய உக்கிரக் கண்களும் நிதானமான நடையும் அவன் ஒரு அதிகாரி என்பதைத் துலாம்பரப்படுத்துகின்றன.

தனது அதிகாரியைக் கண்டதும் அந்த ராணுவச் சிப்பாயின் முகத்தில் பீதி. அவன் உடம்பை விறைத்துக் கொண்டு அரென்ஷனில் நிற்கின்றான்.

விஜயா திகிலடைந்தபடியே நிற்கின்றாள்.

விவசாயிகள் குமுறிக் கொந்தளித்துக் கொண்டு நிற்கின்றார்கள்.

அதிகாரி விஜயாவையும் சிப்பாயையும் மாறி மாறிப் பார்க்கின்றான். என்ன நடந்திருக்கக் கூடுமென்று ஊகித்த அதிகாரி நிலைமையைச் சமாளிக்க முற்படுகின்றான்.

அவர்கள் இருவரும் அசையாமல் நிற்கின்றார்கள்.

விவசாயிகளைக் கலைந்து செல்லுமாறு புரியாத மொழியில் ஏதோ கூறிக் கொண்டு சைகை செய்கின்றான் அதிகாரி.

அவர்கள் அசையவில்லை,

அதிகாரி உடனே சிப்பாய் பக்கம் திரும்பி வேகமாக உரத்த குரலில் கத்துகின்றான்.

சிப்பாய் நடுங்கிக் கொண்டே விழுந்து கிடந்த விஜயாவின் பைசிக்கிளை தூக்கி நிறுத்தி அவளிடம் கொடுக்கின்றான்.

விஜயா யந்திரமாய் தனது பைசிக்கிளை வாங்கிய பின்னரும் தயங்கியபடியே நிற்கின்றாள்.

அதிகாரி விஜயாவைப் பார்த்து போகும்படி சைகை செய்கின்றான். அவனது முகச்சாயலில் மன்னிப்புக் கோரும் தோரணை.

விஜயா போஷாக்கு நிலையத்தை வந்தடைகின்றாள். அவள் அங்கு எப்படி வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. வந்ததும் வராததுமாய் அவள் வழமையாக இருக்கின்ற இடத்தில் மலைத்துப் போய் இருக்கின்றாள்.

இடிந்து போயிருக்கின்ற விஜயாவைப் பார்த்ததும் அங்கிருந்து தாய்மார்களுக்கு திகைப்பு, அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விஜயாவிற்கு என்ன நடந்ததென்பதை அறிய அவர்கள் ஆவலுடன் முனைகின்றனர்.

அப்பொழுதுதான் அங்கு வந்த ஒரு தாய் தனக்குப் பக்கத்திலிருக்கின்ற ஒருவருக்கு விஜயாவிற்கு வழியில் நடந்த சம்பவம் பற்றி இரகசியமாகக் கூறுகின்றாள். சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தாய்மார்களுக்கு விடயம் தெரிய வருகின்றது. சிலர் அதை நம்பவில்லை . நம்பியவர்களுக்குப் பெரும் கவலை. தாய்மார்கள் கோபத்தில் பொங்கிப் பொருமிக் கொண்டிருக்கின்றனர்.

ஜீவா அங்கு விரைந்து வருகின்றான். அவன் வந்த வழியில் அவனுக்கு விசயம் எட்டி விட்டது.

விஜயா ஜீவாவை வெறித்துப் பார்த்த படியேயிருக்கின்றாள். அவளது இதயத்தில் நிறைந்திருந்த துயரம் பொங்கிப் பொருமி வெடிக்கின்றது.

பயபீதியடைந்த குழந்தை தாயைக் கண்டதும் கதறி அழுவது போல, திடீரென விஜயா கதறி அழுகின்றாள். அவளது உடல் குலுங்குகின்றது.

ஜீவாவிற்கு துயரம் தாங்க முடியவில்லை. அவனது இதயம் பொருமுகின்றது. கண்கள் கலங்குகின்றன. அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விஜயாவினுடைய இதயத்திலுள்ள துயரம் வெளியேறி மனம் ஆறும்வரை அவளையே பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

அங்கிருக்கின்ற தாய்மார்களுக்கு துயரத் தவிப்பு.

ஐயோ! எங்கடை விஜயாவுக்கா இந்தக்கதி?” ஒரு தாய் அங்கலாய்த்துக் கூறுகின்றாள்.

“அவன் நாசமாய்ப் போக”

இன்னொரு தாய் சபிக்கின்றாள்.

“எங்கடை விஜயா அப்பிடியொண்டும் நடத்திருக்காது. அவ நல்லாய் பயந்திட்டா அவ்வளவு தான்”

செல்லம்மா அக்கா உறுதியாகக் கூறுகின்றாள்.

‘உந்த அழிவாங்கள் எப்பதான் எங்கடை ஊரைவிட்டுத் துலையப்போறாங்களோ?”

மகேசக்கா ஏக்கத்துடன் அங்கலாய்கின்றா.

“ஆகாயத்திலை போன பிசாசை ஏணிவைச்சு இறக்கிப்போட்டு, அதை என்னண்டு கலைக்கிறதெண்டு ஒருதன் அவலப்பட்டதாக ஒரு கதையுண்டு. அதைப் போலைத்தான் இண்டைக்கு எங்கடை நிலைமையும் .

ஆனால் இதுக்குப் பொறுப்பானவன்கள் ஒரு நாளைக்கு மக்களுக்குப் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.”

ஜீவா வெறுப்புடன் கூறுகின்றான்,

விஜயாவிற்கு முன்னரைப் போல இப்போ வேலை செய்ய முடியாமலிருக்கின்றது.

அந்த ராணுவச் சிப்பாயின் கோரப் பார்வையுடன் வெறிப்பிடித்த கண்களும் அந்த விகாரமான முகமும் அவளை இரவு பகலாக அச்சுறுத்திக் கொண்டேயிருக்கின்றது. அவளுக்கு உறக்கமில்லை. உணவு உட்கொள்ளவும் முடியவில்லை. எந்த நேரமும் திகில். அது மாத்திரமில்லை. அவளுக்கு அடிக்கடி மயக்கம் வருகின்றது. எந்த நேரமும் இந்தப் பிரமை பிடித்தவளாயிருக்கின்றாள்.

விஜயாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைகின்றது. ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் அவள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றாள்.

அவள் வைத்தியசாலையிலிருக்கும் பொழுது ஜீவா காலையும் மாலையும் ஏன் விடுமுறை நாள்களிலும் மூன்று வேளைகளும் வைத்தியசாலைக்குச் சென்று, அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறித் தேற்றி, அவளை உற்சாகப்படுத்தி வருகின்றான். அத்துடன் அவளது போஷாக்கு நிலையங்களின் கடமைகள் யாவற்றையும் தானே பொறுப்பேற்று நிறைவேற்றி வருகின்றான். இதில் அவனுக்கு மனநிறைவு.

விஜயா ஜீவாவின் ஆறுதல் வார்த்தைகளையும் பணிவிடைகளையும் இதயபூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாள், அவளது இதயம் பூரிப்படைகின்றது. படிப்படியாக அவளது உளநிலையும் உடல் நிலையும் தேறிவருகின்றது. ஆனால் அந்தப் பயங்கர சம்பவத்தை அவளால் முற்றுமுழுதாக மறக்க முடியவில்லை. அதன் கருநிழலை தனது உள்ளத்திலிருந்து பூரணமாகத் துடைத்தெறிவதற்கு அவள் முயற்சி செய்து வருகின்றாள்.

விஜயா பழையபடி வேலைக்குச் செல்லும் பொழுது ஜீவாவும் அவளுடன் செல்வான். அவள் தனியே வேலைக்குச் செல்வதை அவன் அனுமதிப்பதில்லை. நிழல்போல அவன் அவளுடன் சென்று கொண்டிருக்கின்றான்.

விஜயாவின் தந்தை சுந்தரத்தார் அவனை வெளிநாட்டிற்கு அனுப்ப பகீரதப் பிரயத்தனம் செய்கின்றார். அவள் அதற்கு உடன்படவில்லை.

அவளது தந்தைக்கும் விஜயாவிற்குமிடையில் முரண்பாடு முற்றுகின்றது. அவளுக்கு வீடு நரகமாகின்றது.

எங்காவது கண்காணாத இடத்திற்கு தன்னைக் கூட்டிச் செல்லும்படி ஜீவாவை அவள் அடிக்கடி வேண்டுகின்றாள். அல்லது தன்னுடன் வெளிநாட்டிற்கு அவனை வரும்படி கேட்கின்றாள்.

ஜீவா அவளது வேண்டுகோள்களைப் பாரதூரமாக எடுக்கவில்லை. நோயின் காரணமாக அவளது உள்ளம் பலவீனமடைந்ததால்தான் அவள் அப்படிக் கேட்கின்றாள் என்று அவன் எண்ணுகின்றான். இதனால் அவளது கோரிக்கையை அவன் தட்டிக்கழிக்கின்றான்.

விஜயா ஜீவாவை இதயபூர்வமாக நேசிக்கின்றாள். ஆனால் அவளது காதலை அவனுக்கு அவளால் வெளிப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் ஜீவா அவளை நேசிக்காவிட்டால் அவன் அவளைத் தவறாக நினைக்கக்கூடும். இதனால் அவனது வெறுப்புக்குத்தான் அவள் ஆளாக வேண்டிவரும் என்ற அச்சம் அவளுக்கு.

வசந்தத்தின் வாசலில் நிற்கின்ற அவளது இளம் மனதில், அலையலையாகப் பொங்கியெழுந்து பெருகி ஓடுகின்ற இந்த ஜீவவெள்ளத்தை இதயத்தில் மூண்டெழுகின்ற இந்த இதய தாகத்தை அவளால் வெளிப்படுத்தவோ தணிக்கவோ முடியவில்லை. எவ்வளவு காலந்தான் இந்தப் புயலைத் தனது இதயத்தில் அவளால் அடக்கி வைத்திருக்க முடியும்? அவள் இதயத்தில் மூண்ட இந்தக் தாகத்தை இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்ததுதான் அதிசயத்திலும் அதிசயம்.

அவள் தன் ஆத்மார்த்தமான காதலை வெளியிட வாய்ப்பைத் தேடித் தவித்துக் கொண்டிருக்கின்றாள்.

ஜீவாவிற்கு இதே நிலைதான். தனது ஆத்ம தாகத்தை அவளுக்கு வெளிப்படுத்துகையில் அவள் அதை ஏற்க மறுத்தால் அல்லது தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு இழிவானவன் என்று நினைத்து வெறுத்தால் என்ன செய்வதென்ற திரிசங்குநிலை அவளுக்கு.

இறுதியில் விஜயா பலியாடு போல, வெளிநாடு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். வேண்டா வெறுப்பாக அவள் தன் தந்தையின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. .

அவள் பயணத்திற்கு வேண்டிய தயாரிப்புக்களைச் செய்து கொண்டிருக்கின்றாள்.

பைசிக்கிள் பெல்’ சத்தம் கேட்கின்றது.

“அம்மா ஆரெண்டு பாரணை” கூறியபடியே விஜயா உடுப்புகளை சூட்கேஸில் அடுக்கிக் கொண்டிருக்கின்றாள்.

“வெளிநாட்டுக் கடிதம் வந்திருக்கு. இந்தா ஆரெண்டுபார்.”

வெளியே சென்ற தாய் திரும்பி வந்து ஒரு கடிதத்தை விஜயாவிடம் கொடுக்கின்றாள்.

கடிதத்தைப் பார்த்ததும் விஜயாவின் கண்கள் மலர்கின்றன.

அது எங்கடை பவானியினுடைய கடிதமணை அம்மா?

“இந்தக் கடிதம் நேரகாலத்துக்கு வந்தது நல்லதாப் போச்சு. நீ கடிதத்தைப் படித்துப்போட்டு விசயத்தைச் சொல்லு மோனை. அடுப்பிலை வைச்ச கறி எரியப்போகுது. நான் அதைப் பார்த்து இறக்கிப் போட்டுவாறன்.”

கூறிவிட்டு தாய் சமையலறைக்குள் செல்கின்றாள்.

“என்ரை பவானி என்னை ஒரு நாளும் கைவிடமாட்டாள். சரி என்ன எழுதியிருக்கின்றாள் எண்டு பார்ப்பம்.”

ஆவலுடன் கடிதத்தைத் திறக்கின்றாள் விஜயா. “என் அன்பு விஜயா,

நீ இங்கு வருகின்றாய் என்று அறிந்ததும் எனக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. எப்போது நீ இங்கு வந்திறங்குவாய் என்று நான் ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால்…..”

“நான் தற்செயலாக, எதிர்பாராத விதமாக சிவசங்கரைச்சந்திக் நேரிட்டது. நீ என்னிடம் வருகின்றாய் என்று உனது அப்பா தனக்குக் கடிதம் எழுதியிருப்பதாக அவன் சொன்னான்.”

‘அப்பா எனக்குத் தெரியாமல் அவனுக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்.”

விஜயாவின் மனதில் சந்தேகக் கேள்விக்குறி.

அவள் கடிதத்தைத் தொடர்ந்து படிக்கின்றாள்.

“அது மாத்திரமல்ல விஜயா உன்னைத் தனக்குக் கல்யாணம் கட்டி வைக்க தந்தையும், தனது தாயாரும் முடிவு செய்து அதற்கான எற்பாடுகளைச் செய்வதாக

உன் தகப்பனும் தன் தாயும் தனக்கு கடிதம் எழுதியிருப்பதாக சிவசங்கர் எனக்குச் சொன்னான். அவன் உனது அப்பாவின் கடிதத்தையும் எனக்குக் காட்டினான். உனக்கு சிவசங்கரைக் கல்யாணம் செய்ய விருப்பமா விஜயா? நீ இதற்கு சம்மதத்தைத் தெரிவித்தாயா?”

விஜயாவின் முகத்தில் கருநிழல் படர்கின்றது.

“விஜயா இன்னொரு ஆச்சரியம் தரும் புதினத்தை உனக்கு அறியத் தருகின்றேன். இரு வாரங்களுக்கு முன் சிவசங்கருக்குத் திருமணம் முடிந்துவிட்டது. அதுவும் காதல் கல்யாணம்!”

‘அப்பாடா தொலைந்தது பீடை!’

விஜயா நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றாள்.

அவள் மீண்டும் கடிதத்தைப் படிக்கின்றாள்.

“அப்போ நீ இங்கு வந்தால் என்ன செய்வதென்று நான் அவனைக் கேட்டேன். அவன் என்ன கூறினான் தெரியுமா.

“விஜயா விரும்பினால் தான் அவளையும் வைத்திருக்கத் தாயர்” எண்டு அந்தக் கழிசடை எனக்குச் சொன்னான். அவனது மூஞ்சியில் காறித்துப்ப வேண்டும் போலிருந்தது எனக்கு. நான் உடனே….”

மேற்கொண்டு விஜயாவினால் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை. கோபாவேசத்தில் அவளது உடல் நடுங்கியது.

போயும் போயும் இந்தக் கேடு கெட்டவனையா எனக்குக் கட்டிவைக்க அப்பா முடிவு செய்தார்? அவர் தன்ரை சகோதரியின்ரை மகன் எண்டதாலை அவன் எப்படிக் கெட்டழிஞ்சவனென்டாலும் பாதகமில்லை. அவனை என்ரை தலையிலை கட்டிச் சுமத்தினால் போதும், நான் எப்படி நாசமாய் போனாலும் பரவாயில்லை. அவருக்கு தன்ரை சகோதரியைத் திருப்திப்படுத்தினால் சரி. அதோடை மாதாமாதம் வெளிநாட்டிலையிருந்து ஆயிரமாயிரமாய் காசு வந்தால் காணும்.

இந்தக் கடைகெட்டவனெங்கே? என் அன்பிற்கினிய ஜீவா எங்கே?

சிவசங்கர் சுந்தரத்தாரின் சகோதரியினுடைய மகன். அவன் ஏகபுத்திரன். அவனுடைய தந்தை சண்முகம் பெரும் புள்ளி. அவரது தலைமையில்லாமல் ஊரில் எதுவித பொதுவிடயமும் ஒருவராலும் நடத்த முடியாது. திருகுதாளங்களை நடத்தித்தான் அவர் இவ்வளவு சொத்துக்கும் அதிபதியானார். ஒருநாள் திடீரென நடந்த விமானத் தாக்குதலுக்கு அவர் இரையானார். அவரது உடலை உறவினர்களால் கூட பார்க்க முடியவில்லை.

தந்தையைப் போலவேதான் மகனும்.

சிவசங்கர் செல்லப்பிள்ளை. பெருவாரியான சொத்துக்கு வாரிசு. அவன் நகரிலுள்ள பிரபலமான கல்லூரியில் பயின்றவன். படிக்கும் பொழுதே கல்லூரியிலும், வெளியிலும் பெரும் அட்டகாசங்களையும் கெடுபிடிகளையும் நடத்திப் புகழ்பெற்றவன். அவன் பிஞ்சிலே பழுத்தவன். அவன் தனது சகபாடிகளுக்கே செய்த பல மோசடிகள் இறுதியில் அம்பலமாகி அவனுடைய உயிருக்கு அவர்களால் ஆபத்து நேரிட்டது. இது தெரிந்தவுடன் அவன் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டான்.

அங்கு அவன் மீண்டும் சட்டவிரோதமாக சூதாட்டக் குகைகளையும், இரவு விடுதிகள் நடத்தியும் போதைவஸ்துக் கடத்தலிலும் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை குவித்து வருகின்றான்.

சிவசங்கரைத் தனது அண்ணனின் மகள் விஜயாவிற்குக் கல்யாணம் கட்டி வைத்தால் அவன் திருந்தி நல்ல வழிக்கு வரக்கூடும் என்று அவனுடைய தாய் எண்ணினாள். அவனைத் திருமணம் செய்தால் சண்முகத்தாரின் சொத்துக்கள் அனைத்தும் தம்வசமாகிவிடும் என்று சுந்தரத்தார் நினைத்தார். அண்ணனும் தங்கையும் சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறைவேற்ற முடிவு எடுத்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஆனால் இந்த முடிவுக்கு விஜயாவினால் எப்படி உடன்பட முடியும்? ஜீவாவை அவளால் எப்படி மறக்க முடியும்?

ஜீவாவிற்கு என் இதயதாகத்தை வெளிப்படுத்தாமலிருந்தது எவ்வளவு பெரிய தவறு? அவர் என்னை நேசிக்காவிட்டாலும் ஒரு பொழுது அவர் என்னை வெறுக்கமாட்டார். இது நிச்சயம். அவர் எவ்வளவு நிதானமானவர்? எவ்வளவு அறிவாளி’

“முதலாளித்துவவாதிகள் பெண்களைப் பிள்ளை பெறும் யந்திரமாக, தங்களது உடல் வேட்கையைத் தீர்க்கும் போதைப் பொருளாக, வியாபாரப் பண்டமாக கருதுகின்றார்கள்” என்று ஒரு மேதை கூறியதாக ஒரு நாள் அவர் சொன்னார். இது முற்றிலும் சரி எண்டு இப்பதான் எனக்குப் புரியுது?”

ஜீவாவிற்கு வெளிநாடு செல்ல எவ்வளவோ வாய்ப்புக்கள் வந்தும் அவன் செல்ல விரும்பவில்லை. அவன் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவனது தந்தை ஓர் ஏழை விவசாயி.

அவன் இந்த நாட்டிலுள்ள உழைக்கும் மக்களின் விடிவிற்கான போராட்ட லட்சியத்திற்கு தன்னை அர்ப்பணித்துச் செயல்பட்டு வருகின்றான். அவன் அந்த லட்சியப் பாதையில் உறுதியாக நின்று தனது தோழர்களுடன் சேர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றான்.

“விஜயா உம்மைப் போன்ற சேவை மனப்பான்மையுடையவர் எங்களுடன் சேர்ந்துழைத்தால் உம்மால் எவ்வளவோ பங்களிக்க முடியும்” என்று அவர் கூறினார்”

அவருக்கு எவ்வளவு விசாலமான தூய்மையான உள்ளம்? இருளுடன் ஒப்பிடும் பொழுது தான் ஒளியின் மகத்துவம் தெரிகின்றது?’

ஒரு நாள் நாங்கள் இருவரும் போஷாக்கு நிலையத்திற்கு எங்கள் பைசிக்கிள்களில் ஒன்றாகச் சென்று இறங்கினோம். இதைப்பார்த்த நல்லம்மா அக்கா “இருவரும் நல்ல சோடிப் பொருத்தம்” என்று கேலியாகச் சொன்னா.

“அதுக்கு நான் குடுத்து வைக்க வேணுமே” என்று அவர் எனக்குமெதுவாகக் கூறியதை அன்று நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அது எவ்வளவு பெரும் தவறு என்று இப்பொழுதுதான் எனக்குத் தெரியுது’

‘வாற கிழமை நான் பயணம் போகின்றேன் என்று சொன்ன பொழுது ஜீவாவின் வாடி வறண்ட உதடுகளில் ஒரு மெல்லிய சிரிப்புத் தோன்றி மறைந்தது. அந்தச் சிரிப்பில் அவரது அளவற்ற நிராசையையும் வேதனையையும் தான் நான் கண்டேன். ஆண்டவா! இப்படிப்பட்ட என் ஜீவாவையா நான் விட்டுவிட்டு வெளிநாடு செல்லத் துணிந்தேன்?

தனது இருகைகளையும் தன்னையறியாமலே தன் தலைக்கு மேலே உயர்த்துகின்றாள் விஜயா. அவளது கையிலிருந்த கடிதம் நழுவி விழுகின்றது.

அவளது இதயத்தில் துயரம் தேங்கி நிற்கின்றது.

சூட்கேஸிற்கருகிலுள்ள வெளிநாடு செல்ல விருக்கின்ற அவளது பாஸ்போட் விஜயாவின் கண்ணில் படுகின்றது.

விஜயா தனது பாஸ்போட்டை நிதானமாக எடுக்கின்றாள். பாஸ்போட்டின் ஒவ்வொன்றையும் அவள் பிரித்து சுக்கல் நூறாகக் கிழித்து, அச்சிறுதுண்டுகளைத் தன் உள்ளங்கையில் வைத்து வாயால் ஊதி அவற்றைக் காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றாள். அச்சிறு துண்டுகள் அவளைச் சுற்றிய இடமெல்லாம் பூக்களைப் போல் பரவிக் கிடக்கின்றன.

அப்பொழுதுதான் வெளியேயிருந்து வந்த அவளது தந்தை சுந்தரத்தார் விஜயா பாஸ்போட்டைக் கிழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் பிரமிப்படைகின்றார்.

அவருக்கு கோபம் சீறுகின்றது.

“எடி நாசமாய் போறவளே! உனக்கென்னடி பயித்தியம் பிடிச்சிசிட்டுதோடி? என்ன வேலை செய்யிறாயடி?”

கோபாவேமாகக் கர்ச்சிக்கின்றார் சுந்தரம்.

விஜயா ஒன்றும் பேசவில்லை. அவரை நிமிர்ந்து பார்க்கின்றாள்.

நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்படுகின்ற அக்கினி ஜுவாலையாக அவளது பார்வை.

விஜயாவினுடைய முகத்தின் இறுக்கத்தையும் அவளது அக்கினிப் பார்வையையும் பார்த்த சுந்தரனார் அஞ்சி நடுங்கிச் செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்.

சுந்தரத்தாரின் கோபக்குரலைக் கேட்ட அவரது மனைவி புவனேஸ்வரி என்னவோ ஏதோவென்று பதறிக்கொண்டு குசினிக்குள்ளிருந்து அவசர அவசரமாக வெளியே வருகின்றாள்.

அவள் அவர்களிருவரது போர்க் கோலத்தைக் கண்டு திகைத்துப் போய் நிற்கின்றாள்.

விஜயா எழுந்து நிதானமாக வெளியே வருகின்றாள்.

இளங்காலை வானம் துடைத்துவிட்டாற்போல தூய்மையான வனப்புடனிருக்கின்றது.

வசந்தகால இளந்தென்றல் அவளது உடலுக்கு இதமூட்டுகின்றது.

அண்டசராசரங்களுக்குமப்பால் ஜனித்து, அலை பாய்ந்து வருகின்ற ஜீவநாதம் காற்றில் ஒலிப்பதான உணர்வு விஜயாவிற்கு.

வளர்பிறையில் தென்படும் மென் நிலவொளி போல அவளது வதனத்தில் அமைதி நிலவுகின்றது. அப்பொழுது பரிபூரண பொலிவுடன் மலரின் மென் இதழ் விரிவது போல அவளது முகத்தில் புதுப்பொலிவு.

பிரபஞ்சமே சொப்பன ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கின்றது.

விஜயா உயர்வானிலுள்ள தேவதையாகிவிட்டாளா?

இதயத்துடன் இதயமாய் ஜீவாவுடன் சங்கமித்து விட்ட விஜயா, அவனது லட்சியப் பாதையில் அந்தரங்க சுத்தியுடன் செல்வதற்கு எமது தாய்த் திருநாட்டின் புதிய பூமியில் உறுதியாகக் காலூன்றி நிற்கின்றாள்.

– 1996

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

– வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *