இந்நேரம் காமாட்சி இருந்திருந்தால், என்னங்க இந்தாங்க காஃபி என்று இரண்டு முறையாவது தந்திருப்பாள். பார்வையாலேயே தேவைகளை புரிந்து கொள்ள வேறு யாரால் முடியும்.
காஃபி, இஷ்டப்பட்ட பலகாரம் எல்லாமே ஹோட்டலில்தான் சுந்தரேசனுக்கு அவள் போன பிறகு. பேரனுக்கும் ஒரு நாள் வாங்கிவந்தார். அஷ்வின் இந்தா ஜிலேபி என்று தரவந்த கைகளை தட்டிவிட்டாள் மருமகள் மைதிலி. கண்ட எண்ணெயில பண்ணத எல்லாம் நீங்க முழுங்குவீங்க. வாய் நீளம். இவனையும் கெடுக்காதீங்க என்று அஷ்வினை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
தலையணை மந்திரம் வேலை செய்திருக்கும்..
மறுநாள் காலை.
என்னப்பா.. சொல் பேச்சே கேட்க மாட்டேங்கரீங்க. வெளியில் வாங்கித் தின்ரீங்க. சுத்திட்டு லேட்டா வரீங்க. உங்களுக்கு சாப்பாடு போட அவ முழிச்சிட்டு இருக்க வேண்டியிருக்கு. இருக்கிறத தின்னுட்டு வீட்டோட இருந்தா என்ன? உனக்கும் அவளுக்கும் சரிபட்டு வராது.
சென்ற வாரம் தான் சொத்துக்களை செட்டில்மென்ட் எழுதி கொடுத்தார் மகன் பெயரில். அதன் பிறகு இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் மாறியதை கவனிக்கத் தொடங்கினார் சுந்தரேசன்.
ஒருநாள் இரவு லேட்டாக வந்தவருக்கு எவ்வளவு நேரம் கதவு தட்டியும் திறக்கவில்லை. வெளியில மழை வரும்போல இருக்கு மைத்து, போய் கதவைத்திற ப்ளீஸ்.
நீங்க சும்மா இருங்க. ஒரு நாள் வெளியில திண்ணையில படுக்கட்டும். அப்பத்தான் புத்தி வரும் அந்த ஆளுக்கு. அதுதான் நடந்தது.
மனைவியை எதிர்க்க துணிவில்லை. அப்பா படும் கஷ்டமும் மனதிற்கு சங்கடமாக இருந்தது. பேசாம அந்த ஆள எதாவது ஹோம்ல சேத்துடுங்க என்றது மகுடி. தலையாட்டியது பாம்பு.
பொழுது விடிந்தது. அப்பா..போய் குளிச்சிட்டு ரெடியாகுங்க.
என்னடா.. எங்க போகப்போறோம் இவ்வளவு காலையிலேயே.
வாங்க சொல்றேன். முதியோர் இல்லம் முன்பு கார் நின்றது. அப்பா..எனக்கு வேற வழி தெரியல..
சுந்தரேசன் கண்ணிலிருந்து சாரை சாரையாக கண்ணீர்.
சேர்த்துவிட்டு கார் எடுக்க வந்தவன் காதுகளில் வந்து விழுந்தன இந்த வார்த்தைகள். பெத்த அப்பாவா இருந்தா இங்க கொண்டு வந்து சேர்ப்பானா. வளர்த்த அப்பாதானே.
காரை ஆஃப் செய்துவிட்டு இல்லக் காப்பாளரிடம் தான் கேட்டதை கூறினான். ஆமாம்ப்பா எங்களோட குழந்தைகள் காப்பகத்திலிருந்து 25 வருஷத்துக்கு முன்னால் உன்னை தத்து எடுத்தவர்தான் இந்தப் பெரியவர்.
இவ்வளவு ஆண்டாக இதைக்கூட சொல்லாமல் என்னை வளர்த்தவரையா இல்லத்தில் சேர்த்தோம். பளார் பளார் என மனசாட்சி் அறைந்தது. சாஷ்டாங்கமாக அப்பாவின் காலில் விழுந்தான். என்ன மன்னிச்சிடுங்கப்பா என்று எண்ணற்ற முறை கூறி.. காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.
என்னங்க திரும்பவும் அந்த ஆள இங்கேயே கூட்டிட்டு வந்திருக்கீங்க. உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா. நம்ம நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா.. நேற்று சொன்னதெல்லாம் மறந்து போச்சா. அந்த ஆள கூட்டிட்டு உள்ள வந்தா நான் வெளியில போயிடுவேன். பறவாயில்லையா.
பளார் பளார் என கன்னத்தில் இடிபோல விழுந்தது அடி. அந்த ஆளா? செருப்பு பிஞ்சிடும். அவரு இங்க தான்டி இருப்பாரு. நீ கெளம்புடி பரதேசி என்று முடியை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
சுந்தரேசன் தடுத்தார். விடுப்பா..குடும்ப சண்டை தெருவுக்கு வர வேண்டாம்னு முடிவு பண்ணி தான் நானே சைலன்டா இருந்தேன் இல்லத்தில் சேர்க்கும் போதும். இப்போ நீயும் அதையே பண்ணாத. அவ திருந்த ஒரு வாய்ப்பு கொடு என்றார்..
மாமா என்னை மன்னிச்சிடுங்க என்று காலில் விழுந்தாள் மைதிலி.