சொன்னா நம்பமாட்டீங்க !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 10,242 
 
 

வீட்டுக்கு போயி 15 நாள் ஆச்சு , மனசு ரொம்ப பாரமா இருந்தது ,ரோட்டுல எல்லாரும் வேகவேகமாய் வீட்டுக்கு போறாங்க, மேகம் பூரா பக்கத்து வீட்டு குட்டி பாப்பா சுவத்துல கரிய வச்சி கிறுக்குனதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாய் கரு மேகமா ஆங்காங்கே இருட்டினதுபோல் இருந்தது ,மழை வர்ற மாதிரியும் வராத மாதிரியும் ,காத்து பலமா அடிச்சது கண்டிப்பா எதிர் வீட்டு தம்பிதத்தா மழைக்காக காத்திருப்பார்,நீண்ட நாள் கோடை வெயிலுக்கு நடுவுல இதுபோல் மழை வந்தா நல்லா இருக்கும்ன்னு அடிக்கடி சொல்லுவார்.

அதிலும் இந்த வருசம் வெயில் கண்டிப்பா சரித்திரத்தில இடம் புடிச்சிருக்கும், நம்ம கருப்பு கோயில் கம்மாவே காஞ்சு போச்சு,தொண்ணூறு வருசமா கருப்பு கோயில் கம்மால தண்ணி வத்துனதே இல்லன்னும் தனக்கு நெனவு தெரிஞ்சு கம்மால தண்ணி இல்லாம பாத்ததே இல்லன்னு பொலம்பிட்டே இருப்பாரு தத்தா.

போன வாரம் கூட கம்மாகரையில கருப்பு கோயில்ல படையல் போட்டாங்க மழைக்காக,அன்னிக்கே தம்பிதாத்தா சொன்னார் கருப்புகிட்ட சொல்லியாச்சி மழை கண்டிப்பா வந்திரும்ன்னு ,ஊரு சனங்க கடமைக்காதான் இந்த படயலயே போட்டுச்சுங்க,ஆனாலும் தம்பி தாத்தா சொன்னதுல எனக்கு முழு நம்பிக்கை இருந்தது , அதனாலையோ என்னவோ இன்னக்கி மேகம் கறுத்துகிட்டு வர்ரத பாத்த உடனே கருப்பு கோயிலுக்கு போகனும்ன்னு தோனுச்சு எனக்கு,நம்ம ஊரு கருப்பு ரொம்ப சக்தி உள்ளதுன்னு தம்பிதாத்தா அடிக்கடி சொல்லுவார்,நானும் இன்னக்கி கருப்புகிட்ட போய் என் கஸ்டத்த யெல்லாம் சொல்ல போறேன் .

ஆனா நான் அங்க போறது மணிக்கு சுத்தமா புடிக்கல ஒரு 10 நாளாதான் அவன எனக்கு தெரியும் ஆனா வேற நண்பர்கள் இல்லாததால மணி என்ட்ட சீக்கிரமே பழகிட்டான் ,மணி ரொம்ப நல்லவன் ஆனா அவனுக்கு சாமியே புடிக்காது ஏன்னு கேட்டா பதில் பேசாம கம்மாவயே பாத்துகிட்டு இருப்பான்.நானும் அடிக்கடி சொல்லுவேன் கருப்பு சாமி சக்தயுள்ளது டா நாம மனசார வேண்டுணா நடக்கும்டான்னு.அவன் உடனே கடுப்பா எந்துருச்சு போயிருவான்.அவனுக்கு ஏதோ சோகம்ன்னு நானும் கண்டுக்காம வுட்டுடுவேன் .

அந்தன்னைக்கும் நான் எங்க தெரு முக்குல போய் நின்னுகிட்டு எங்கூட்டயே பாத்துகிட்டு நின்னேன் யாருக்கும் தெரியாம, ஆனா என் செல்ல அப்புகுட்டி என்ன பாத்துட்டு ஒரே அடம் பண்ணிருச்சு,உடனே யாருக்கும் தெரிஞ்சுரும்ன்னு திரும்பி வந்துட்டேன் .எங்க அப்புச்சு மட்டும் சொன்னாரு வேணாம் கண்ணு அங்க போவாதன்னு என் மனசுதான் கேக்கல.இனி அந்த ஊட்டு பக்கம் போவக்கூடாதுன்னு தோணும் ஆனா ஆத்தாவ பாக்க ஒரு எட்டு போய்ட்டு வர கால் பற பறக்கும்,நானும் மனச படுத்திக்கிடுவேன் .ஆனா இன்னக்கி ரொம்ப கஷ்டமா இருக்கு அதான் வேற வழியே இல்ல தம்பி தாத்தா சொன்னது மாதிரி கருப்பு சக்தியுள்ளதுதான் இன்னக்கி மழ வர போகுது ,நானும் போய் மனசார என் கஸ்டத்த சொல்ல போறேன்.

விறுவிறுன்னு கருப்புகோயில் பக்கம் நடக்க ஆரம்பிச்சிட்டேன்,கருப்பு கோயில் பூசாரிய நெனைச்சா தான் பீதியா இருக்கு,ஆமா அங்க இருக்குற கருப்பு சாமிய விட அந்த பூசாரி பயங்கரமா இருப்பான்,கரகரன்னு கொரலு ,பெரிய மீசை மூஞ்ச மறைக்கும் , நீலதலைமயிர முடிஞ்சி வச்சிருப்பான்,இடுப்புல எப்போதும் துண்டு அத்தோட ஒரு கட்டு பீடியையும் மறைச்சு வச்சிருப்பான் மேலாக்க பாத்தா தெரியாத மாதிரி, பொங்கலுக்கு வெள்ளையடிச்சது போல நெத்தி முழுக்க கருப்புசாம்ப பூசிருப்பான்,சத்தமா சிரிப்பான் அப்படி சிரிச்சா கம்மாய்க்கு அந்தபக்கம் இருந்து பாத்தாலும் பளீர்ன்னு தெரியும் அவன் பல்லு பளிச்சின்னு,கட்டுமஸ்தான ஆளு வந்தாலும் பூசாரிய பாத்தா கலங்கி போயிருவாக வர்ரவுக, கோயிலுக்கு வர்ரவுக கருப்புக்கு படைக்க வாங்கிட்டு வர்ர பட்ட சாரயமெல்லாம் அந்தண்ணகி ராவுல பூசாரி குடிச்சிருவான் ,காலைல ஊரு சனமெல்லாம் கருப்பே குடிச்சிட்டதா பக்த்தில உருகுவாக .பல நேரம் பூசாரிக்கு மிலிட்ரி சாராயம் வெள்ளகார சாரயமெல்லாம் கெடைக்கும் ,ஒண்டியா ஒக்காந்து ஒரே ராவுல குடிச்சிபுடுவான்.புள்ள இல்லாத குர மட்டும்தான் அவனுக்கு ,கண்ணுமண்ணு தெரியாம சாரயத்த குடிக்கிறதும் அதனாலதான் .

அந்தண்ணகி பொழுதுக்கு அப்புறம் மணி ஊட்டு ஆளுங்க எல்லாம் கும்பலா வந்து கருப்பு கிட்ட படச்சி கருப்பு சாம்பலும் முடிகயிறும் வாங்கிட்டு போனாக அதுக்கு பொறவு மணி என் கூடெல்லாம் முன்னமாதிரி பேசறது இல்ல .எப்போ பாத்தாலும் கருப்பு கோயில் கம்மாலே உக்காந்திருப்பான் ,தம்பிதாத்தாட்ட எங்க அப்புச்சிட்ட யார்ட்டயும் பேச மாட்றான் .கருப்பு கோயிலுக்கு போறப்ப அவனுக்கும் சேத்து வேண்டனும் .

பூசாரிய பாத்து பீதி பயம் இருந்தாலும் இன்னக்கி நான் அங்க போயே ஆகணும் என் பிரச்சனைக்கி ஒரு தீர்வு வேணும்,கருப்பு கோயில நெருங்கிட்டேன் ,பூச நடந்துகிட்டு இருக்கு என் பயம் அதிகாமாகுது பூசாரி என்னையே பாக்குறான்,கோயில நெருங்க நெருங்க வேர்த்து கொட்டுது,சுரம் வந்தது மாதிரி உடம்பெல்ல்லாம் சுடுது பயத்துல.

பூசாரி வேற என்னயவே குறு குறுன்னு பாக்குறாரன், கருப்பு சாமிய பாத்து பூசாரி ஏதோ மொனவுரார் அப்புறம் என்ன நேனைசான்னு தெரில,என்னைய பாவமா பாத்துபுட்டு அந்த எடத்த விட்டு போய்டான் ,அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு ,அந்தன்னைக்கி ராவு முழுக்க எனக்கு தூக்கமே வரல கருப்புகிட்ட என் கஸ்டத்த எல்லாம் சொல்லி ஒரு மணி அழுதேன் அப்புறம்தான் லேசானதுபோல இருந்தது .இப்பவும் ஆத்தா நெனப்பாவே இருக்கு அதுக்கு வேற உடம்பு சரியில்ல எப்போ பாத்தாலும் லொக்கு லொக்குனு இருமிகிட்டே கெடக்கு ,ம்ம்ம் எல்லாம் அந்த கருப்புக்குதான் வெளிச்சம் .

வீட்டுக்கு போவனும் போல இருக்கு ,பயமாவும் இருக்கு ,எங்கூட்ட வுட்டு இத்தன நாள் நான் வெளில இருந்ததே இல்ல ஆனா இன்னக்கி ரொம்ப நம்பிக்கையா இருக்கு கருப்புகிட்ட சொன்னதும் மணியும் சொன்னான் காலைல கவலை படாத டா உன்கூட்ட்ல உள்ளவங்க உன்ன கூப்டு போவாங்கன்னு,தம்பிதாத்தாவும் சொல்லிருக்கார் கருப்புகிட்ட சொல்லிட்டா நீ நெனைச்சது நடக்கும்ன்னு ,காலைல இருந்து சந்தோசமா இருக்கேன், யாரோ கூப்ட்ட சத்தம் கேட்டு முழிச்சேன், பொழுது சாஞ்சு போச்சு, தூரத்துல இருந்து அந்த சத்தம் கேக்குது எங்கூட்டுபக்கமாதான் சத்தம் வருது ,

வழி நெடுக வெளிச்சமா இருக்கு எந்திருச்சு நடக்குறேன் ஊட்டுபக்கமா ,எங்க மாமா,அத்த,ஆச்சி எல்லாரும் வந்திருக்காக ,என்னதான் கூபுடுதுக ,மனசுக்குள்ளயே கருப்பு சாமிக்கு நன்றி சொல்லியாச்சு ,மணி தம்பிதாத்தா எல்லார் வாயிலயும் சக்கர போடணும் ,இவ்ளோ சந்தோசமா என் வாழ்க்கைல இருந்ததே இல்ல.பக்கத்தூட்டு குட்டி பாப்பா ,என் செல்ல அப்புகுட்டியும் தெருவுல வந்து நின்னுகிட்டு அடம் பண்ணிட்டு இருக்கு யாரோ சங்கிலியே அவுத்துடாங்கன்னு நெனைக்கிறேன், என்கூட சண்ட போட்டு திரிஞ்ச ரவி பயகூட வந்திருக்கான் ,

இத்தன நாள் கழிச்சி ஊட்டுக்குள்ள போறது அப்பா ! தனி சுகம்தான் , சொன்னா நம்பமாட்டீங்க ஆலம் எடுத்து என்னய உள்ள கூட்டியாந்து உக்கார வச்சி சோறு போடுறாங்க எல்லாமே எனக்கு புடிச்ச பண்டமா இருக்கு கோழி,நண்டு,ரொம்ப புடிச்ச ராலு

முட்ட ,அவ்வளவும் ஒண்ணா இருந்தாலும் தனி தனியா மணக்குது ,

அய்யோ! ஆத்தா வச்ச வடையும் பாயசமும் இருக்கு ,எனக்காக ஆத்தா பாயசத்துல காஞ்சதிராச்ச நிறைய போடும்,

எங்காத்தா சமாச்சா வாசல்ல கட்டிஇருக்கும்அப்புக்கு நீர் வடியும் ,அம்புட்டு வாசமா கொழம்பு வைக்கும். எல்லாத்தையும் சாப்புடனும் இல்லனா ஆத்தா வையும் .

முடிஞ்ச அளவு தின்னுட்டேன், அவ்ளோதான் முடில, ஆத்தா வையபோது ஏன் எல்லாரும் என்னையவே பாக்குறாங்க யாருமே சாப்புடல, பின்னாடி எதையோ பாத்து எங்காத்தா அழுவுது ஆச்சி சமாதான படுத்துது என்னனு தெரிலயே ,அப்படி என்னதான் இருக்கு பின்னாடி என்ன இது என் போட்டால யாரோ போட்டு வச்சிருக்காங்க ,இந்த ரவி பயலாதான் இருப்பான் என்ட்ட சண்ட வளக்குறதே அவனுக்கு வெள்ளையா போச்சு ,என்ன சத்தம் அது , கொல்ல பக்கமா யாரோ கூப்டுறாங்க,

தம்பிதாத்தா குரல் கேக்குது ..

வரேன் இரு தாத்தா ,இவரு ஏன் கொல்லபக்கம் வந்து நிக்கிறாரு ,

என்னதாத்தா சொல்லுங்க

வாப்பா போகலாம் !

எங்க போகணும் 15 நாள் கழிச்சி இன்னகிதான் எங்கூட்ல என்ன கூப்டாக

இன்னகிதான் நானும் சந்தோசமா இருக்கேன் இப்ப என்ன எங்க வர சொல்லுற தாத்தா , என்னால வர முடியாது ஆத்தா வந்து சொல்லு ஆத்தா

ஆச்சி நீயாச்சும் சொல்லு..

நா பேசுறத யாருமே கவனிக்கல வாசபக்கமா கருப்பு கோயில் பூசாரி வந்தான் ஆச்சிதான் போய் என்னான்னு கேக்குது

அந்த கரகர கொரலு எனக்கும் கேக்குது , ஆச்சி, புள்ள பாவம் ஒரே ஏக்கமா இருக்கு போல நேத்து பொழுதுக்கு முன்னாடி கருப்பு கோயில் பக்கம் பாத்தேன், புள்ளைக்கி புடிச்சதா சமச்சி வச்சி படைங்க,பொழுதுக்கு அப்புறம் கோயிலுக்கு வாங்க ஒரு பூச பண்ணி கொடுக்குறேன் ஊட்ட சுத்தி கருப்பு சாம்பல போட்டு வைங்க ,சின்ன புள்ள அது என்ன தெரியும் அதுக்கு ,யாரும் பயப்படாதீங்க நம்ம ஊட்டு புள்ள அது நமக்கு ஒன்னும் செஞ்சுராது ,நா கெளம்புறேன் ஆச்சி, இப்பவும் புள்ள உங்க கூடத்தான் இருக்கு ,சந்தோசமா இருக்கு சொல்லுரப்பவே பூசாரி கண்ணு ரெண்டும் விரிஞ்சு பரவசமா சொல்லுறான்,ஆச்சிக்கு கண்ணு ரொம்பி வழிய ஆரம்பிச்சிருச்சு ,இண்ணமும் புள்ளைக்கு புரிஞ்சுருக்காது ரயிலு வண்டில அடிபட்டுடோம்ன்னு , ரெண்டு மூணு வாரத்துல எல்லாம் தெரிஞ்சிரும் நமகெல்லாம் தெய்வமா இருந்து வழிநடத்தும் நம்ம புள்ள !

ஆச்சி என்ன பேசரதுன்னு தெரியாம அழுவ ஆரம்பிச்சிருச்சு ஊட்ல இருந்த எல்லாரும் அழுவ ஆரம்பிசிடாக !

அத கேக்கும்போதே தம்பிதாத்தா என் தோள்ள கைவச்சி இழுக்குறார்,கண்ணுமுழுக்க தண்ணி கோத்து நிக்கிது என்ன பேசறதுன்னு தெரியாம அவர் பின்னாலயே போறேன் .

ரோட்டுல தம்பட்ட அடிக்கிறவன் சொன்ன விஷயம் எனக்கு கேட்க்குது

டம் டம் டம் டம் ……….”ஊர் சனங்க எல்லாத்துக்கும் சொல்லிக்கிறது என்னன்னா இன்னக்கி ராவுல முருகாத்தா பேரன் மகேசுக்கு பதினாறு படைக்கிறாங்க எல்லா தலகட்டும் வந்து கலந்துக்கணும்னு கேட்டுகிறாங்க” டம் டம் டம் டம் ……….

அத கேட்டதும் மீனாச்சி அக்காவும் அவுங்க ஊட்டுகாரரும் என்னைய பத்தி பேசிக்கிறாங்க “பாவம் அந்த பய துரு துருன்னு இங்கயும் அங்கயும் சுத்திகிட்டு இருப்பான் அவனுக்கு எழுதிவச்சது அவ்ளோதான் போல, அடுத்தவாரம் நம்ம கீழதெரு மணிக்கும் பதினாறு படைப்பாங்க மச்சான் ,இவ்ளோ சின்னதுலேயே போவனும்ன்னு இருக்கு பாரு ”

கம்மா பக்கமா போற முனுசும் அவன் கூட்டாளியும் என் பேர சொல்லி பேசிக்கிறாங்க

“டேய் முனுசு பூசாரி சொன்னான் டா, நம்ம மகேசு பயலும் மணி பயலும் கம்மா பக்கம் திரியிறாங்கன்னு,நீ வாங்குன சாரயத்த வேணுன்னா எங்கூட்ல வச்சி கூட குடிச்சிக்கலாம் டா கம்மா பக்கம் வேணாம் டா,

டேய் முட்டா பயலே அவன் சொன்னனாம் இவரு பம்முராராம் மூடிட்டு வாடா எல்லாம் தெரியும் ,தம்பிஅய்யா போனப்பவும் அப்படிதான் சொன்னான் அந்த பூசாரி அதெல்லாம் சும்மா கெளப்பி விடுறாண்டா அவுனுக்கு சாரயத்துக்கு வழி பண்ணிக்கிறான் அவ்ளோதான்”

அந்த டம் டம் டம் டம் சத்தம் என் மண்டைக்குள்ள அடிக்கிறமாதிரி இருக்கு,எனக்கு இப்ப ஒடம்பு இல்ல ஆனாலும் எல்லாம் இருக்குற மாதிரியே இருக்கு.

ஆனா இப்போ மனசு பாரமா இல்ல ,திருப்தியா இருக்கு கூடவே கொஞ்சம் ஏக்கமும் …..

நா இனிமே எங்கூட்டுக்கு போக மாட்டேன் !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *