ஐஸ் வாங்க இரண்டு ரூபாய் கேட்டு அழுது கொண்டிருந்தான் சிறுவன் ரவி.
“ஜுரம் விட்டு இரண்டு நாள்தான் ஆகுது ஐஸ் சாப்பிடப் போறாராம். என்ன பண்ணாலும் தரமாட்டேன்,’ என்று மயிலம்மா கண்டிப்புடன் கூறினாள்.
ஆனாலும் சிறுவன் அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
வயல் வேலை முடித்தவிட்டு வீட்டுக்கு வந்த ரவியின் தந்தை ஆதிமூலம், “ஏண்டா, அழறே’ என கேட்க, “அம்மா ஐஸ் வாங்க காசு கொடுக்கலை’ என்று அழுகையோடு கூறினான்.
ரவி இரண்டு ரூபாய் எடுத்து நீட்ட, சந்தோஷமாக வாங்கிக் கொண்டு பறந்தான்.
“ஜுரம் அடிச்ச புள்ளைக்கு ஐஸ் வாங்க காசு கொடுக்கறீங்களே… எதேதுக்கு செல்லம் கொடுக்கறதுன்னு தெரிய வேணாமா?’
“புள்ள ஆசைப்படுது காசு கொடுக்காம அழறதை வேடிக்கை பார்க்கச் சொல்றியா – போடி போ…கஞ்சி ஊத்து,’ என்று சொன்னபோது, சிறுவன் வெறும் கையுடன் வந்தான்.
“ஐஸ் வாங்கலையா?’
“அப்பா, ஐஸ் வாங்கத்தான் போனேன். ஒரு பாட்டி பசின்னு கடைக்காரரிடம் பன்னு கேட்டாங்க – கடைக்காரர் தரலை. நான் அந்தப் பாட்டிக்கு பன்னு வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்டேன்பா!’
“நம்ம வூட்டுக்குக் கூப்பிட்டுவர வேண்டியது தானே?’
“உங்களுக்கு மட்டும்தான் கஞ்சி இருந்துச்சு – குடிச்சுட்டு இருப்பீங்கன்னுதா…’ என்று கூறிய மகனிடம் மூதாட்டியை அழைத்து வர சொன்னான்.
– எஸ். சீதாராமன், திண்டிவனம் (நவம்பர் 2011)