சிறகு நாவல் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 6,779 
 

ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும், நம் வாழ்க்கை இயற்கையை ஒட்டியே செயல்படுகிறது. இயற்கைக்கு மாறாக செயல்பட எத்தனிக்கும்போது முரண்பாடுகள் தலைதூக்கும். ஆண்டுகள் பலவாயினும் மூன்று முடிச்சால் பிணைக்கப்பட்ட வாழ்வில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் கடைநிலையும் அப்படித்தானே.

அவன் முதிர்ந்தவன்; அவளும்தான், ஆனால் வயதில் சற்று இளையவள். அவன் ஒரு சக்கரவண்டியில் – அவள் மெல்ல அந்த வண்டியைத் தள்ளினாள். அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான் – பார்த்தான் என அவளுக்குத் தோன்றியதா? அவனுடைய உதட்டின் ஓரம் புன்னகையா – அவள் நினைத்தாளா? ஆனால், அவளுக்குத் தெரியும்… அவனுக்கு நினைவு என்பதே இல்லை. அவனுடைய நினைவுகள் மலர்ந்து, மறைந்து, வாழ்வில் நடந்தவை மறந்து- ஒன்று, இரண்டு, மூன்று என ஆண்டுகள் ஓடிவிட்டனவே. அவனுக்கு எல்லாமே அவள்தான் செய்ய வேண்டும். எதையும் அவனால் செய்து கொள்ளவே முடியாது. இது, மூன்று முடிச்சு ஏற்படுத்திய பந்தமா? அல்லது, பாரமா?

அவன் ஒரு சிறகு நாவல்.

அவனை அலுங்காது குலுங்காது கடைநிலைக்கு அழைத்துச் செல்லும் சிறகுதான் அவள். அவன் நினைவு மழுங்க மழுங்க அவள் சிறகாக மாறினாள். பழுத்த நாவல் உதிர்ந்து விழுந்து அதிர்ச்சியில் சிதறும்போது மண் அப்பிக்கொள்ளும் – ஔவையின் சுட்ட பழம் – மரத்திலிருந்து நாவல் உதிரும்போது அதைத் தாங்கி, சிறிது தூரம் அது காற்றில் மிதந்து வரச் செய்து, மெல்ல மெல்ல சேர வேண்டிய மண்ணில் சேரும்வரை அதில் மண் ஒட்டாமல் சேர்ப்பதுதான் சிறகின் இலக்கு, பணி.

சக்கரவண்டியை அவள் மேலும் நகர்த்தினாள். அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான் – பார்த்தான் என அவளுக்குத் தோன்றியதா? அவன் பார்த்தான் என்ற கற்பனை கூட அவளுக்குள் சிறகடிக்கச் செய்தது.

அவன் நாவல் – அவள் சிறகு. அவன் ஒரு சிறகு நாவல்.

– ‘வீரயுக நாயகன் வேள்பாரி ‘ நாவலில் திரு. சு.வெங்கடேசன் அவர்கள் சிறகு நாவல் பற்றி எழுதிய குறிப்பை மனதில் கொண்டு எழுதிய சிறுகதை இது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *