பாதை தெளிவானது..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 4,032 
 

‘இதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமா…?!’ – யோசனை வளையத்திற்குள் நுழைந்தாள் சுமதி.

இத்தனை நாட்களாகக் கண்டுகொள்ளாமல் இருந்ததினால்தானே…

‘மனைவி கண்டு கொள்ளவில்லை. அங்கீகரித்துக் கொண்டாள்…!’ என்கிற தப்பெண்ணம் மனதில் தோன்றி, பயம் விலகி அவரை இரண்டு நாட்களாக அங்கேயே தங்க வைத்து விட்டது! குழந்தைகள் இரண்டும்….”அப்பா எங்கேம்மா..? எங்கே போயிருக்கார்..? ஏன் வரவில்லை..?” என்று கேள்விமேல் கேள்வி கேட்கின்றன’- எண்ணம் ஓடியது.

தவறை ஆரம்பத்திலேயே தட்டிக் கேட்டு, சுட்டிக் காட்டி, தடுத்திருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை வருமா….?! – சிந்தனையை நீட்டி நிறுத்தினாள்.

‘கூடாது! இனிமேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் நீயும் உன் குழந்தைகளும் நிர்கதியாகிவிடுவீர்கள்!!’ – என்று மனம் அடித்துச் சொல்ல…அவளுக்குத் திக்கென்றது.

‘சண்டாளி! நம் குடும்பத்தைக் கெடுக்க வந்தாளே….!’- நினைக்கவே சுமதிக்கு கசந்தது.

‘பேரென்ன… லட்சுமியாம் லட்சுமி.! படித்தவள், கை நிறைய சம்பாதிப்பவள். ஒரு நல்ல பிரம்மச்சாரியாய்ப் பார்த்துப் பிடித்துக் கொள்ளாமல் திருமணம் ஆனவரை வளைத்துப் போட்டுக் கொண்டு…!…

சினிமாக்காரிகளெல்லாம் இப்படித்தான் செய்கிறார்கள். அவர்களுக்கென்னவோ திருமணமானவர்களென்றால் இனிப்பு. இவளும் அப்படிப் போல. திருமணமான ஆண்களிடம் அப்படி என்னத்தைக் கண்டு கொண்டார்களோ இவர்கள்..!? ‘- எச்சல் விழுங்கினாள்

ஆரம்பத்தில் அலுவலக பழக்கம் என்றுதான் நினைத்து இருந்து விட்டாள். அப்புறம்தான் அது பழக்கமில்லை.. நெருக்கம் என்பது தெரிய உறைந்து போனாள். சுதாரிப்பதற்குள் நிலைமை கை மீறிப் போய் விட்டது.

இனிமேலும் தாமதிக்கலாமா..?! கூடாது!!!

இப்போது இவள் கணவனுக்காக ஏங்கவில்லை. தாம்பத்தியத்திற்காக ஈர்க்கவில்லை. இருபத்தெட்டு வயதுக்குள் மூன்று பிள்ளைகள். இரண்டு பெண். ஒரு ஆண் பெற்று ஏகப்பட்ட சுகம் அனுபவித்தாகி விட்டது. இவள் கவலைப் படுவதெல்லாம் குடும்ப ஆளுமைக்கு ஒரு ஆண். பிள்ளைகளுக்கு நல்லவனாய் ஒரு தகப்பன். இந்தக் காரணங்களுக்காகத்தான் கணவனைக் கண்டிக்க வேண்டும். கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று ஆசைப் படுகின்றாள்.

எதிர் காலத்தில் ஒரு நாள் குழந்தைகள்…

“அப்பாவுக்கு இரண்டு பெண்டாட்டியாமே..! அப்படின்னா எங்களுக்கு ரெண்டு அம்மாவா..?!” என்று கேட்டு விடக்கூடாது என்கிற பரிதவிப்பு

ஆகையால் இன்றைக்கு இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.! – சுமதி மனதில் ஒரு திட்டவட்ட முடிவிற்கு வந்தாள்.

இரண்டு நாட்களாக வராத கணவன் இன்றைக்கு வந்தே ஆகவேண்டும்.! சுமதி வாசல் பக்கம் பார்த்து அமர்ந்தாள்.

குழந்தைகளெல்லாம் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிய பிறகுதான் ஜானகிராமன் வீட்டிற்குள் யோக்கியன் போல சர்வ சுவாதீனமாக வீட்டிற்குள் நுழைந்தான்.

காத்திருந்தவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“இது உங்களுக்கே நல்லா இருக்கா…?” மெல்ல கேட்டாள்.

“எது…?” ஒன்றும் தெரியாதவன் போல் புரியாமல் பார்த்தான்.

“நீங்க அந்த வீட்டில் இரண்டு நாள் இருந்து வர்றது. ?!” சுமதி நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.

ஜானகிராமனுக்கு விசயம் புரிந்தது. பதில் சொல்லாமல் அமர்ந்தான்.

“மூணு குழந்தைகளைப் பெத்துட்டீங்க. முப்பது வயசாகுது. நாளைக்குப் பிள்ளைங்க சிரிக்குமே என்கிற நினைப்பு இல்லியா..?” குரலில் சூடு ஏற்றினாள்.

“குழந்தைங்க அப்படி நினைக்குதோ இல்லையோ. அதை சாக்காய் வைத்து நீ சொல்றே..? அப்படித்தானே..?!” – அவன் அவளைத் திருப்பி கேள்வி கேட்டான்.

“ம்ம்… அப்படித்தான்!” சுமதி பயப்படாமல் சொன்னாள்.

“இதோ பார் சுமதி. நான் அவளை வைச்சுக்கிறதுனால உனக்கு ஏதாவது பாதிப்பா..?” – அவனும் பயப்படவில்லை. தெளிவாகக் கேட்டான்.

“புரியல…?!” குழப்பமாகப் பார்த்தாள்.

“குடும்ப கவனிப்பு, உன் மேல அன்பு, குழந்தைங்க மேல பாசம்… இதில ஏதாவது குறை வைச்சுருக்கேனா…?!”

“இது வரைக்கும் இல்லே..”

“அப்புறம் எதுக்கு ஆட்சேபனை, எதிர்ப்பு, வலி, வருத்தம்…?..?”

“நீங்க சொன்ன அனைத்தும் பின்னால வராதுன்னு என்ன நிச்சயம்.?!! குறை இல்லே, வராது என்கிறதுக்காக உங்க தவறை அனுமதிக்கிறது நியாமா..? ”

“அனுமதிச்சா என்ன..?”

”நிறைய குடும்பங்கள் நடுத்தெருவில் நின்னிருக்கு. குலைஞ்சு கோலாகலமாகி இருக்கு. நான் அனுமதிக்க மாட்டேன்.!” சுமதி முடிவை திடமாக சொன்னாள்.

“என்னால அவள் தொடர்பை விட முடியாது!” – இவனும் அவன் திட்டவட்டமாகச் சொன்னான்.

இதுதான் சுமதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“உண்மையாவா…?” கறாராகக் கேட்டாள்.

“ஆமாம்..”

“இப்படி ஒரு முடிவோடதான் இருக்கீங்க. இல்லையா..?” குரல் அழுத்தம் திருத்தமாக வெளி வந்தது.

“ஆமாம்!”

“அப்படின்னா அடுத்த கட்ட நடவடிக்கை..?”

“எங்க திருமணம்.!”

இதையும் இவள் எதிர்பார்க்கவில்லை.

“நல்லா யோசனைப் பண்ணிதான் சொல்றீங்களா..?!” வார்த்தைகள் கறார் கடுமையாக வந்தது.

“ரொம்ப ரொம்ப நல்லா யோசிச்சே சொல்றேன்!” – அவனும் சளைக்காமல் சொன்னான்.

சுமதி இதயத்திற்குள் இடி, மின்னல் எல்லாம் வெடித்தது. எதையும் வெளிக்காட்டிக்காமல் கணவனை வெறித்தாள்.

“இதோ பார் சுமதி. அவள் அனாதை. தெரிஞ்சோ, தெரியாமலோ அவளைத் தொட்டுட்டேன். இப்போ விட்டா பெண் பாவம் என்னைச் சும்மா விடாது!”

“நான் பெண் பாவமில்லையா..?”

“ஏட்டிக்குப் போட்டி பேசாதே சுமதி. நான் அவளையும் இந்த வீட்டுக்குக் கூட்டி வந்துடுறேன். ஒன்னா இருக்கலாம். எந்த பாவமும் இருக்காது!”

“இது உங்களுக்கே நியாயமா படுதா..?”

“நியாயமாய் இருக்கிறதாலதான் சொல்றேன் எல்லா பாவ புண்ணியங்களுக்குப் பயந்து சொல்றேன்.! ”

“நிஜமாவா…?!”

“நிசம்! ”

திட்டவட்ட முடிவோடு இருக்கிறான். இனி பேசி பயனில்லை.! – இவளுக்கு நன்றாகத் தெரிந்தது.

குடும்பம் என்பது என்ன..? கணவன் என்பவன் யார்..? அவன் கடமைகள் என்னென்ன..? – மனதில் ஓடியது.

தொட்டுத் தாலிக்கட்டியவளுக்குப் பாதுகாப்பாய், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய்.. சம்பாதித்துப் போட்டு குடும்பத்தைத் தாங்குபவனாய் இருப்பவனே நல்ல கணவன். அதை விட்டு விட்டு …..இவன்.???

தான் வைத்துதான் சட்டம் நினைக்கும் கயவன் தான் இந்த குடும்பத்தை தாங்காவிட்டால் மனைவி என்பவள் சும்மா பணிந்துதான் ஆக வேண்டும் என்று நினைக்கும் அயோக்கியன்!

பெண் அப்படிப்பட்டவளா…? கணவன் இல்லாவிட்டால் குடும்பத்தைத் தாங்கமுடியாதவளா..? கணவனை இழந்தவர்களெல்லாம் வாழ முடியாமல் தற்கொலையா செய்து கொள்கிறார்கள்..? பிள்ளைக்குட்டிகளைக் காப்பாற்ற முடியாமல் தெருவில் நிற்கிறார்கள்..??!!

படித்தவள் வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காபந்து செய்கிறாள். படிக்காதவள், பாமரத்தி, பத்து இடங்களில் பத்துப் பாத்திரம் தேய்த்து பிள்ளைகளைக் காக்கிறாள். இல்லையென்றால் வயல் வேலை செய்கிறாள். சித்தாள், கூலி வேலை செய்கிறாள். இடத்திற்குத் தகுந்தபடி கிடைக்கும் வேலை செய்து வருமானத்தை ஈட்டி குடும்பம் காக்கிறாள். ஜானகிராமன் எண்ணம்.

மனதில் துணிவு வர….நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன…?” அவளின் பார்வை இவன் பார்த்து கேட்டான்.

“நீங்க அவளைத் திருமணம் செய்துகிட்டு வாழறதாய் இருந்தால் தாராளமா இப்பவே இந்த வீட்டை விட்டுப் போகலாம்..! எனக்கோ, என் குழந்தைகளுக்கோ இனி நீங்க தேவை இல்லே..!”

“சுமதி! நீ ரொம்ப அடம் பண்றே. திமிர்!”

“ஒரு பெண்ணால புருசன் இல்லாமல் வாழமுடியும். நேர்மையா சம்பாதிச்சு பிள்ளை குட்டி, குடும்பத்தைக் காபந்து பண்ண முடியும்.! ”

“முடியும்! ஆனா உன்னால, முடியாது!” என்றான்.

“முடியும்!” சுமதி ஆணித்தரமாக சொன்னாள்.

உறைந்து பார்த்தான்.

“ஜானகிராமன் சார்! உங்க அம்மா அப்பா தன் பிள்ளை ஒருவனுக்கு ஒருத்தியாய் யோக்கியமாய் வாழனும்ன்னுதான் இந்த பேரை வைச்சிருக்காங்க. ஆனா நீங்களோ அவுங்க எண்ணத்துல மண்ணையள்ளிப் போடுறீங்க. இந்த வீட்டை விட்டு நிரந்தரமா போற நீங்க இதையும் சேர்த்து எடுத்துக்கிட்டுப் போங்க…” என்ற சுமதி

சட்டென்று பொட்டை அழித்து.. கூந்தலில் உள்ள பூவை எடுத்து, தாலியையும் கழற்றி நீட்டினாள்.

“சுமதி…!!” ஜானகிராமன் ஏகமாய் அதிர்ந்து உறைந்தான்

“உங்க நியாயத்துக்கு இது என் நியாயம். நீங்க இல்லாத இந்த இடத்திலும், இதயத்திலும் எனக்கு இதை வெறுமனே சுமக்கனும் என்கிற அவசியமில்லே!” என்று உறுதியாய்ச் சொல்லி அவன் கையைப் பிடித்து பூ, தாலியைத் திணித்து விட்டு தன் பாதை தெளிவானதைப் போல் திரும்பி திரும்பி திடமாய் சென்றாள் சுமதி.

ஜானகிராமன் அப்படியே ஆணி அடித்து மரமாக நின்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *