சின்ன விஷயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 9,107 
 
 

சிறிய வீடு, சுற்றிலும் அடக்கமான தோட்டம் ஆசிரமம் போன்ற சூழ் நிலை, அந்த அமைதியான சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது சாரதாவிற்கு.

கையிலுள்ள பெட்டியை கீழே வைத்துவிட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்……கதவைத்திறந்த வசந்தா முன்னைவிட பாதியாக இளைத்துவிட்டிருந்தாள், நடையிலும் ஒரு தளர்ச்சி.

“உடம்புக்கு என்ன? உருகிபோயிட்டியே? யார் இருக்காங்க உன்கூட?”.

பல கேள்விகளுடன் உள்ளே வந்தவளுக்கு திகைப்பு ,அவள் மட்டும்தான் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.

“ஆச்சரியப்படாதே .உட்கார் சாரதா. காலம் மாறிக்கிட்டு போகிற போக்கில் பார்த்தால் இன்னும் அதிகம் கருணை இல்லங்கள் தேவைப்படும்”.

“நீ கூட ரொம்ப மாறிட்டே வசந்தா”.

“ஆமாம், உஜாலாவுக்கு மாறிட்டேன்னு சொல்றியா. அது என்ன இழவோ ‘டை ஒத்துக்கொள்வதில்லை’, உண்மை வேஷம் தெரிகிறது. அது சரி, எத்தனை காலமாச்சு உன்னைப்பார்த்து? எப்படி இருக்கே?”.

“அதிருக்கட்டும் வசந்தா ,உன்பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்?. உன் தம்பி ,தங்கை எல்லாம் எங்கே ?இப்படி நீ தனியாக”.

“சாரதா தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போகணும். யார் கூட இருந்தாலும், நம் உயிர் தனியாகத்தானே போகப்போகிறது”.

“ரொம்ப தத்துவ புத்தகங்கள் படிக்கிறாய் போலிருக்கிறது”.

“இளரத்தம் இருக்கிற வரையில் மற்றவர்கள் சொல்வதையெல்லாம் அசட்டையாக தள்ளிடறோம் முதுமையிலே அவைகள்தான் மன அமைதி தரும் ஊன்று கோலாக இருக்கு”.

“உண்மைதான் வசந்தா வாழ்க்கையிலே எத்தனையோ அனுபவங்கள்…..”, பெருமூச்சு விடடாள்
சாரதா.

“உனக்கு காப்பியா? டீயா?”

“பரவாயில்லை உனக்கு ஏன் கஷ்டம், நானே போட்டுக்கிறேனே”.

“நோ, நோ, எத்தனை வருடங்கள் கழித்து வந்திருக்கிறாய்?. உன்னை வேலை வாங்குவதா?. ஆமாம். நீ உன் பிள்ளையோடுதானே இருக்கிறாய்”.

“இல்லை வசந்தா, உன்னைப் போலவே நானும் ஒரு தனி ஆசிரமம் அமைத்திக் கொண்டிருக்கேன்”.

“என்ன சொல்றே சாரதா, தன்னுடன் தான் வந்து இருக்கவேண்டும் என்று உன் பிள்ளை பாசத்தோடு கூப்பிட்டதால்தானே அவனுடன் போனாய் ….இப்ப …தனியா இருக்கிறேன் என்கிறாயே ..என்ன விஷயம் சாரதா?”, கேட்டுக்கொண்டே காபியை ஆற்றி டம்ளரில் ஊற்றிகொடுத்தாள்.

“தலைமுறைப்பிளவு அதிகரித்துக்கொண்டு போகும் இந்நாளில் …வயதானவர்கள் இளையவர்களுக்கு பாரம், இதுதான் காரணம்”.

“மற்றவர்களுக்கு பாரம் சரி, பெற்றவர்களையே பிள்ளை பாரமாகக்கருதலாமா?. அதிசயமா இருக்கே, நான் கூட நினைச்சதுண்டு. சில நேரங்களில், நீ கொடுத்து வைத்தவள், உனக்கு கணவர், பிள்ளைகள் இருக்கிறார்கள், நல்லது, கெட்டதை பார்க்க — ஆனால் எனக்கு ..ஐ ..மிஸ்ட் தி பஸ் என்று”.

“இக்கரைக்கு அக்கரைப்பச்சை வசந்தா, உனக்கு நியாபகம் இருக்கா, கிராமத்தில் இருந்த என்னை என் மகன் வீட்டை விற்றுவிட்டு தன்னோடு கூப்பிட்டபொழுது, உன்கிட்டே இதுபற்றி சொன்னபோது நீ அட்வைஸ் பண்ணியே ……அது நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது”.

“என்ன சொன்னேன் நியாபகம் வரமாட்டேங்குது இப்பவெல்லாம்”.

“நான்சொல்றேன்னு தப்பா நினைக்காதே கையில் உள்ள காசை இறுக்கி வச்சுக்க அதுதான் நல்லது, ஏன்னா காசுதான் கடவுள் என்று சொன்னாய். அதை மட்டும் நான் கைவிடலே அதனால்தான் இந்த ஆசிரம வாழ்க்கையாவது கிடச்சுது இல்லே, கருணை இல்லத்தில்தான் நீ என்னை பார்க்கமுடியும்?”.

“ரொம்ப துயரம் அடைஞ்சிருக்கேன்னு புரியுது. என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விவரமா த்தான் சொல்லேன்”.

பழைய நிகழ்ச்சிகளை சாரதாவின் மனம் தொடுத்தது.

“கிளம்பலாமா அம்மா?”

“சித்த இருப்பா, நம்ம வாத்தியார் சம்சாரம் பங்கஜத்தம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திடறேன். நீ சாமான்களை ஏற்று”, சொல்லிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக சாரதா வாத்தியார் வீட்டுக்குப் போனாள்.

“அடேடே, சாரதாவா, புறப்பட்டாச்சா?”, பங்கஜம் கேட்டாள்.

“புறப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்”.

“கடைசியா நான் சொன்னதையெல்லாம் நீ ஏற்க வில்லை, பிடிவாதமா கிளம்பிட்டே. போனப்பறம் தான் தெரியும் அங்குள்ளவாசனை?”.

“இதைப்பாருங்க பங்கஜத்தம்மா. நான் மற்றவர்கள் மாதிரி இல்லே, என்னால எங்கேயும் அட்ஜஸ்ட் பண்ணிக்கமுடியும். அதனாலே எந்த பிரச்சனையும் வராது, உங்களை மாதிரி இல்லே நான்”.

“அதெல்லாம் இப்போ சொல்வே, உப்புப்பெறாத விஷயத்திற்குத்தான் என் மாட்டுப்பெண் என்னை காரணம் காட்டி அனுப்பினால். எப்படியோ நீ சமர்த்தா பேரு வாங்கினா சரி”.

“என் பிள்ளை கேட்பார் பேச்சு கேட்கிறவன் இல்லே, நான் என்றால் உயிர், சரி நேரமாயிட்டு. அப்பா நான் வரேன், போய் லெட்டர் போடுறேன்”.

“இந்தாடி குங்குமம் எடுத்துட்டுப்போ”, என்று சொல்லி பழம் பூ வெற்றிலையுடன் ஒரு ரவிக்கை துண்டையும் வைத்துக்கொடுத்தாள் பங்கஜம்.

ஊரில் தெருவில் எல்லோரிடமும் விடை பெற்றாள் சாரதா

“அத்தை, உங்ககிட்டே இருக்கிற அந்த வைரத்தோட்டை நாளைக்கு இரவல் கொடுக்கணும், என் தங்கை கல்யாணத்திற்கு போகணும்”.

“அதற்கென்ன பேஷா தரேன்”, இப்படி ஒவ்வொரு நகையாக வாங்கி வைத்துக்கொண்டு திருப்பித் தரவில்லை. சாரதாவும் பெரிதுபடுத்தவில்லை. மெல்ல மெல்ல வீட்டு வேலைகளையெல்லாம் சாரதாவின் தலையில் கட்டிவிட்டு புருஷனுடன் பீச், சினிமா, உறவினர் வீடு என்று சுற்றினாள் மருமகள்.

சின்னஜ்சிருசுதானே என விட்டுப்பிடித்தால் சாரதா. இன்னும் எத்தனையோ விஷயங்கள்.
எல்லாவற்றையுமே பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுத்தாள். கடைசியாக ஒரு பெருந்தொகையை கடனாக கொடுங்கள் என்று கேட்டபோழுதுதான் சாரதா விழித்துக்கொண்டாள்.

எந்த நிலையிலும் கைக்காசை விட்டுவிடாதே என்ற தோழியின் கூற்று நியாபகத்திற்கு வர, மறுத்தால் சாரதா. வந்தது வினை. அதை மனதில் வைத்துக்கொண்டு வக்கிரமான்னால் மருமகள்.

அக்கம் பக்கத்தில் போய் மருமகள் பொல்லாதவள் கொடுமைக்காரி என்றேல்லாம் சொல்வதாக பொய்களை கணவனிடம் அழுதபடியே சொல்ல-வெகுண்டான் மகன்.

“அம்மா உன் வாயையை வைத்துக்கொண்டு சும்மாவேயருக்கவே முடியாதா?. வயதானகாலத்தில் உனக்கேன் புத்தி இப்படி போகிறது?. இனிமேல நீ வீட்டைவிட்டு போகக்கூடாது, யாருடனும் பேசக்கூடாது, அப்படி இருக்க முடிஞ்சா இரு. இல்லே தனி வீடு பார்த்து உன்னை வைச்சிடறேன். ச்சே! ஆபிஸ் விட்டு வந்தா நிம்மதியே இல்லாம பண்ணிடறியே”, என்று சாடினான்.

சாரதா துடித்துப்போய்விட்டாள். அன்றுதான் மரண அடி வாங்கியதுபோல் தொயிந்து போனாள். பொறுக்கமுடியவில்லை அவளால் அன்றே தனி வீடு பார்க்க புறப்பட்டுவிட்டாள். இரண்டே நாளில் வீடு பார்த்து போகும்முன், மருமகளிடம் கூறினாள்.

“நான் எத்தனையோ பெரிய விஷயங்களில் எல்லாம் உன்னை அட்ஜஸ்ட் செய்துகிட்டேன். ஆனால் நீ ஒரு சின்ன விஷயத்தை இப்படி பெரிசு படுத்திட்டியே, வேலைக்காரி வரலே எல்லாவேலையும் நானேதான் செய்யுறேன் என்று சொன்னதை திரித்துக்கூறி என் மகனையையே எதிரியாக்கிவிட்டாயே”, சாரதா நொந்து போய்சொன்னாள்.

“ஓஹோ இப்பதானே புரியுது இத்தனை நாளும் அட்ஜஸ்ட் செய்ததா சொல்லி,சொல்லி உள்ளுக்குள்ளேயே புழுங்கிகிட்டு இருந்திருக்கீங்க, அதான் இன்னைக்கு பொங்கிட்டீங்க” என்று எதிர்த்துச்சாடினாள் மருமகள்.

“ஊரிலிருந்து புறப்படும்போது பங்கஜத்தம்மா சொன்னபடியே சின்ன விஷயத்தை பெரிசு படுத்திட்டால் மருமகள். மனம் உடைந்த நான் கையிருப்பை இழக்காமல் உன் அறிவுரைப்படி விழித்துக்கொண்டதால் தனி வீடு பார்த்துவிட்டேன் வசந்தா”.

“நீ செஞ்சது ரொம்பச் சரி, சாரதா. போகட்டும், என் கூடவாவது நாலு நாள் தங்கிட்டுப் போயேன்”

“உன்னிஷ்டம் வசந்தா, இப்ப நாம சுதந்திரப்பறவைகள், கட்டுப்பாடு கிடையாது, அவசியம் பெண்களுக்கு வேலையோ, தொழிலோ கைவசம் இருக்கணும், அப்பத்தான் முதுமையிலே தெம்பா வாழ முடியும். எல்லாவற்றுக்கும் மேலா, எந்த நிலையிலும் துணிச்சலை கை விடவே கூடாதுன்னு அனுபவத்திலே புரிஞ்சுகிட்டேன் வசந்தா ”

“தனித்திரு, விழித்திருன்னு சொன்னது நம்மை போன்ற முதுமை பருவத்தினருக்காக சொல்லப்பட்டதோ”.

இருவரும் கல கலவென சிரித்து தம் கவலைகளை மறக்க முனைந்து கொண்டிருந்தார்கள்.

– கலைமகள் – நவம்பர் 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *