சபிக்கப்பட்டவனா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,412 
 
 

நான் கொழும்புக்கு ஆசிரியர் நியமனம் பெற்று வந்து ஒரு பிரபல கல்லூரி யில் பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றுகின்றேன். நான் கொழும்புக்கு வந்தது முதல் எனது நண்பனின் உதவியினால் கொச்சிக்கடையில் ஒரு தேநீர்க் கடையின் மேல் மாடியில் வாடகைக்குக் குடியிருக்கிறேன். –

அந்தக் கட்டிடத்துக்கு உரிமையாளர் சுகுமார் என்னும் மலையாளத்தவர். என்மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறார். நான் அங்கு குடியிருக்கப் போய் நான்கு ஆண்டுகளாகியும் அவர் வாடகை கூட்டிக் கேட்கவில்லை.

அந்த மேல் மாடியில் நானும் அந்தத் தேநீர்க் கடையில் தேநீர் தயாரிக்கின்ற செல்லையாண்ணையும் தான் இருந்து வருகின்றோம்.

செல்லையாண்ணை பதினேழு வயதில் பிழைப்புக்காகக் கொழும்பு வந்து மூட்டை சுமந்துள்ளார். பல சாப்பாட்டுக் கடைகளில் வேலை செய்துள்ளார். நடைபாதைகளில் வியாபாரஞ் செய்கின்ற வியாபாரிகளுக்கு எடுபிடி ஆளாக இருந்துள்ளார்.

அவரது உழைப்பெல்லாவற்றையும் யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற இரு சகோதரிகளுக்காக ஒவ்வொரு மாதமும் அனுப்பிவிடுவார். அவர் இக்கடைக்கு வந்து பதினைந்து வருடங்களாகின்றன. இப்பொழுது அவருக்கு வயது நாற்பத்தியாறு. அவருக்கு தான் திருமணம் செய்து வாழவில்லையே என்ற விரக்தி உள்ளூணர்வோடு கலந்ததொன்று.

தேநீர் அடித்துக்கொண்டே தெருவில் செல்லும் பெண்களைப் பார்த்து ஏதோவொரு திருப்தி அடைவார். கைகள் தேநீரை அடித்தாலும் கண்கள் பெண்கள் மீது விழுவதை நான் அவதானித்திருக்கின்றேன். அதில் ஏதோவொரு திருப்தி அடைகிறார் என்பதை நான் அறிவேன்.

நான் காலைச் சாப்பாட்டிற்காக கீழே இறங்கி வந்து அவரைக் கிண்டல் பண்ணுவேன்.

“என்ன செல்லையாண்ணை உங்கடை கண்ணெல்லாம் தெருவிலை போற வாற பொம்புளைகளை விழுங்குது?”

“வேற என்ன சேர் என்னாலை செய்ய முடியும்? சொல்லுங்கோ?” என்று உடனே பதில் வரும்.

வாழத் துடிக்கின்ற ஒரு மனிதன் என்ற நோக்கில் அவர் மீது பாசம் மிக்க அனுதாபம் உண்டு.

செல்லையாண்ணை இரவு பதினொரு மணியளவில்தான் நித்திரை கொள்ள மேல் மாடிக்கு வருவார். பத்து மணிக்குக் கடை பூட்டப்படும்.

செல்லையாண்ணை விறுவிறுவென்று பாய்ந்தோடி அருகேயுள்ள கள்ளுக் கடையில் இரண்டு போத்தல் கள்ளை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு நிதானமான வெறியுடன் மேல் மாடிக்கு வருவார்.

“சேர் தூக்கமா?” என்று என்னை எழுப்புவார்.

நான் வீட்டைப் பற்றி யோசித்தபடி கண் மூடியவாறு கட்டிலில் படுத்திருப்பேன்.

பாயை விரித்துப் போட்டு அதன் மேல் துவாயைப் பக்குவமாக விரித்துப் போட்டு “சிவனே” என்று கூறிக்கொண்டு விழுந்துவிடுவார்.

அவர் தலையணையில் படுத்ததை நான் காணவில்லை.

கள்ளு வெறி உசாரில் என்னுடன் சிறிது நேரம் உற்சாகமாகப் பேசுவார்.

“சேருக்கு எப்ப கலியாணம்?” –

“பேசுறாங்க செல்லையாண்ணை. எனக்குத் தங்கச்சி ஒன்றிருக்கு. அதற்குச் சீதனம் கொடுக்க வேணும். அப்பா, அம்மா அதிக சீதனம் தருகிற இடத்தை எதிர் பார்த்திருக்கிறாங்க”

“நானும் என்ரை இரண்டு தங்கச்சிகளுக்காகத்தான் உழைச்சு அனுப்பிக் கிழவனாகப் போயிட்டன். ஒரு தங்கச்சிக்கு நாற்பத்திமூன்று வயசு. மற்றதுக்கு முப்பத்தாறு வயசு. சனியன்கள் படிக்கயில்லை. வீட்டிலை குந்திக்கொண்டு என்ரை காசைப் பார்த்துக் கொண்டிருக்குதுகள்.”

“ஏன் செல்லையாண்ணை இவ்வளவு காலமும் அவங்க கலியாணங் கட்டயில்லை ?”

“சேர் ஒண்டு சீதனம் இரண்டாவது பெண்கள் அழகாயிருக்க வேணும். படிச்செண்டாலும் இருக்க வேணுமில்லையா? என்ரை மூஞ்சியை பார்த்தீங்களா பல்லு மிதந்து கறுப்பாக அசிங்கமா இருக்கிறன். எனக்கு சேலை உடுத்திப் பாத்திங்களானா என்ரை தங்கச்சிகளைப் பாத்த மாதிரி இருக்கும்.”

ஒரு நாள் பழம் பாயில் இடது கையைத் தலையின் கீழ் வைத்து கொண்டு என்னை நோக்கி ஒருக்களித்துப் படுத்துக் கிடந்து இவற்றைக் கூறினார். எனக்கு மனசு குழம்பிப் போச்சு.

“சேர் நீங்க காலத்தோடை கலியாணங் கட்டுங்க. நீங்க கலியாணங் கட்டாமயிருந்து சாதிக்கிறது ஒண்டுமில்லை”.

“எனக்குப் பொறுப்பிருக்கு”

“நானும் அப்பிடி நினைச்சுத்தான் காலத்தை வீணாக்கி விட்டன். கலியாணங் கட்டி வாழ்ந்து கொண்டு பொறுப்பை ஏதோ ஒரு வகையில் சமாளிக்கலாம் சேர்”

“செல்லையாண்ணை நீங்க சொல்றது சரிதான். யோசிக்கிறன்.”

இருவரும் சிறிது நேரம் மௌனமாகக் கிடந்தோம். செல்லையாண்ணை நித்திரை கொண்டு விட்டார். எனக்கு அவரை நினைத்து நித்திரை வரவில்லை.

காலை ஐந்து மணிக்கே செல்லையாண்ணை எழுந்து குளித்து, புல்லுப் போல் அங்குமிங்கும் வளர்ந்திருக்கும் தலை முடியை ஒரு பழைய சீப்பால் சுவரில் தொங்க விடப்பட்டுள்ள சிறு கண்ணாடியில் பார்த்து வாரிக்கொண்டு கீழே இறங்குவார்.

அவர் அன்று தலை வாரிக் கொண்டிருந்தபோது நான் நித்திரை முறிந்து எழுந்து விட்டேன்.

முகத்தை இருகைகளாலும் தேய்த்து சோம்பல் முறித்துக் கொண்டு அவரைப் பார்த்தேன். தொளதொளத்த சேர்ட்டு இரண்டு தான் அவரிடம் நீண்ட காலமாக உண்டு. அதைப்போல இரண்டு சாரங்கள் தான் வைத்திருக்கிறார். ஒரு சாரத்தையும் ஒரு சேர்ட்டையும் அணிந்து கொண்டு, மற்றவற்றைப் பக்குவமாக மடித்து, சொப்பிங் பையில் போட்டு அந்த அறையின் ஒரு மூலையில் வைத்துக் கொள்வார்.

“செல்லையாண்ணை”

“என்ன சேர், இண்டைக்கு வெள்ளனவே எழும்பிட்டீங்க?”

“நித்திரை வரையில்ல”

“வரப் போற மனுஷியைப் பத்தி யோசிச்சீங்களோ?

“இல்லை…. உங்களைப் பத்தித் தான் யோசிச்சன்”

“என்ரை கதை, இழவு விழுந்த கதை. பொய் சொல்லாதீங்க, என்னைப்பத்தி யோசித்து என்ன செய்யப்போறீங்க?”

“அது சரி செல்லையாண்ணை உங்களுக்குப் பால் உணர்ச்சியே இல்லையா?”

“இல்லாமயில்லை சேர்”

“பொம்புளைகளோடை”

“சீச்சீ, சேர் அந்த மாதிரி ஆள் நானில்லை”

“அப்படியா?” நான் அவரைப்பார்த்து கள்ளச் சிரிப்புச் சிரித்தேன்.

“நான் சொல்றது அந்தோனியாரானை உண்மை சேர் ஓம் சேர் எனக்கு நாற்பத்தாறு வயசாகுது. ஒரு பொம்புளைக்குப் பின்னாலும் போனதில்லை.”

“இல்லை செல்லையாண்ணை மனிதனுக்கு பெண் உறவு அவசியம். அப்படி இல்லாவிட்டாலும் பொம்புளை உறவுகளைப் பார்த்து சந்தோசங் கொள்ளலாம் தானே?”

“நீங்க சொல்றது புரியல்லை சேர்”

“கொழும்புத் தியேட்டர்களில் வயது வந்தவர்களுக்கு மட்டும் படங்கள் போடுறாங்கள். நான் பார்த்திருக்கிறன்”

“இல்லை சேர் அதெல்லாம் நான் பார்க்க மாட்டன். பார்த்தா கெட்ட நினைவெல்லாம் வந்து அலையவேண்டி வரும். கள்ளுக் குடிச்சிட்டு வந்து படுத்துத் தூங்கினால் போதும் உங்கை மூலைக்கு மூலை “புளு பில்ம்” காட்டுறாங்க. நான் பார்த்ததேயில்லையே சேர்”

“செல்லையாண்ணை உங்களுக்கு வாழத் தெரியாது”

“நான் மடையன் தானே சேர். இல்லாட்டி தேத்தண்ணி அடிச்சுக் கொண்டிருப்பனா? நான் கீழ போறன் தேத்தண்ணி அடிக்க” என்று கூறி விட்டு அவர் கீழே இறங்கினார்.

பர்மய கப் நான் சித்திரை மாத லீவில் யாழ்ப்பாணம் சென்றேன். எனது பெற்றோர்கள் அவர்களுக்குத் திருப்தியான இடத்தில், அதாவது போதிய சீதனம் கொடுக்கு மிடத்தில் பெண்ணைப் பார்த்திருந்தார்கள்.

ஒரு சுப நாளில் பெண் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று பெண்ணைக் காட்டினார்கள். எனக்குப் பெண் பெரிதும் பிடிக்கவில்லையென்றாலும் தங்கைக் காகப் பரவாயில்லை என்று சம்மதித்தேன்.

நான் சென்று ஒரு கிழமையில் திருமணம் முடிந்தது. எனது மனைவியுடன் மூன்று கிழமைகள் வாழ்ந்துவிட்டு கொழும்புக்கு வந்தேன்.

நான் கட்டிலில் கிடந்து யோசித்துக் கொண்டிருக்கையில் வழமை போல் அந்த இரவு செல்லையாண்ணை கள்ளுக் குடித்துவிட்டு வந்தார்.

“சேர் கலியாணம் முடிஞ்சுதா?”

“ஓம் முடிஞ்சுது!”

“பொம்பிள எப்படி அழகானவளா?”

இதற்கு என்னால் எப்படிப் பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவரைத் திருப்திப்படுத்துவதற்காக “ஓம் ” என்றேன்.

அவர் நான்கு முன் பற்கள் விழுந்த வாயைச் சுதந்திரமாகத் திறந்து சிரித்தார்.

“பொம்புளை வீட்டுக்காரங்க நல்லவங்களா?

“கொஞ்சம் பணத்திமிர் இருக்குப் போலை” –

“எவ்வளவு சீதனம் தந்தாங்க”

“நாலு இலட்சம்”

“பெரிய இடந்தான். உங்களை விழுங்கிடுவாங்க. கவனமாயிருங்க சேர்” “செல்லையாண்ணை நீங்க சொல்றது சரிதான்” “அவங்க, உங்க பொம்பிளை கொழும்பு பார்திருக்கிறாங்களா?”

“இல்லை ”

“ஒரு நாளைக்கு இங்கை கூட்டிக்கொண்டு வந்து கொழும்பெல்லாம் காட்டுங்க எனக்கு உங்க பொம்பிளையைப் பார்க்க வேணும் போல இருக்கு சேர்”

“ஓம் ஓம் செய்யத்தான் வேணும்”

வழமை போல் தனது பழம் பாயை போட்டு, அதற்கு மேல் துவாயை விரித்து விட்டு என்னை நோக்கியவாறு உட்கார்ந்திருந்தார்.

“சேர் கல்யாணப் போட்டோக்கள் கொண்டு வந்தீங்களா?”

“இல்லை. போட்டோ எடுத்தவன் தரப் பிந்திப் போச்சு. அடுத்த முறை போய்க் கொண்டு வாறன்.”

“ஓம், ஓம் மறக்காமல் கொண்டு வாங்க!”

கள்ளு வெறியில் அவரது கண்கள் மூடி மூடித் திறப்பது தெரிந்தது.

“சேர் எப்படி பொண்ணோடு சந்தோசமா இருந்தீங்களா?”

“ஓம், பெருஞ் சந்தோசத்தைக் கொடுத்ததாக இல்லை. ஓரளவு சந்தோசம் தான்”

“நீங்க சந்தோசமா இருக்கணும்” என்று கூறிய செல்லையாண்ணை சரிந்து படுத்தார். சிறிது நேர மௌனம். செல்லையாண்ணை என் பக்கமாகப் புரண்டு என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டே கிடந்தார். பின்னர் நீட்டி நிமிர்ந்து கொஞ்ச நேரம் கிடந்தார். மீண்டும் என் பக்கமாகச் சரிந்து என்னையே பார்த்துக் கொண்டு கிடந்தார்.

“சேர்”

“ஓம் என்ன செல்லையாண்ணை?”

“சேர் நான் வாழ்க்கையில என்னத்தைக் கண்டன்? இத்தனை வயசு வரை மூச்சு விட்டுக்கொண்டு மாத்திரந்தானே இருக்கிறன்”

அதைக்கேட்டு என் நெஞ்சம் அதிர்ந்தது. அடங்கவில்லை.

– தினகரன் 1995 – – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *