சந்தேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2023
பார்வையிட்டோர்: 1,852 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு பிச்சைக்கார சிறுவர்களின் சாமர்த்தியத்தைப் பற்றி ஒரு கதாசிரியர் சித்தரித்திருந்தார். இருவரும் பிச்சை எடுக்கிறார்கள். எப்படி? அன்னந் தண்ணீரின்றி ஐந்தாறு நாட்கள் பட்டினிகிடந்தவர்களைப் போல் வயிற்றை எக்கிக் கொண்டு கல்லுங் கசிந்துருகும்வண்ணம். கண்ணீர் தாரை தாரையாய் வடிய, “ஐயா, தருமவான்களே! தாய் தந்தையற்ற இந்த ஏழைச் சிறுவர்களுக்கு இரங்கிப் பிச்சை போடுங்கள் ஐயா!” என்று கேட்டு பிச்சை வாங்குகிறார்கள். பின்னர்க் கிடைத்த காசை பக்கத்துத் தெருவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் தாய் தந்தையர்களிடம் இரகசியமாகக் கொடுத்து விட்டு, அதில் தங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்க 5,10 காசு வாங்கிக் கொண்டு திரும்பவும் பிச்சை எடுக்க வந்து விடுகிறார்கள். பிச்சை கேட்கும் சமயத்தில் அவர்களுக்கு இந்த நடிப்பு பழக்கப்பட்டுப் போய்விட்டது. மிகத் திறமையாக இந்தப் பிச்சைக்கார நடிப்பை நடிக்கிறார்கள். இவ்வாறு முடிந்திருந்தது இந்தக் கதை.

என் எதிரில் நின்று பிச்சை கேட்ட அந்தச் சிறுமியைப் பார்த்ததும் எனக்கு அந்தக் கதையின் ஞாபகந்தான் வந்தது; இவள் சம்பாதிக்கிற காசும் யாருக்குப் போய்ச் சேருகிறதோ என்று.

எனவே, என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பர் நாராயண சாமியை நோக்கி, “மிஸ்டர், சாமி! இந்தப் பிச்சைக்காரச் சிறுமியைக் கவனித்தீரா? இவள் தனக்காகப் பிச்சை எடுக்கவில்லை. யாருக்காகவோ இப்படி பிச்சை வாங்கி காசு சேர்க்கிறாள். எல்லாம் பகல் வேஷம்’ என்றேன்.

“அது நிசந்தாணுங்க. படுத்த படுக்கையில் கிடக்கும் என் தாயாருக் காகத்தானுங்க நான் பிச்சை எடுக்கிறேன்” என்றாள் அப்பிச்சைக்காரச் சிறுமி.

இந்தப் பதில் என் வாதத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது. இருந்தாலும் கௌரவத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாமல், “ஏன் இப்படிப் பொய் சொல்றே? உன் தாயார் எங்காவது வேலை செய்து கொண்டிருப்பாள். உன் தந்தை எங்காவது வேலை செய்து கொண்டிருப் பார். உன் தந்தை எங்காவது.” என்று முடிப்பதற்குள், “சாமி! உங்களுக்குச் சந்தேகமிருந்தால் இப்பவே என் கூட வாங்க. உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் என் தாயைக் காண்பிக்கிறேன்” என்றாள்.

உடனே என் நண்பர் சாமி, “மிஸ்டர்! எனக்கென்னவோ இச்சிறுமி கூறுவது உண்மையாக இருக்கலாமென்றே தோன்றுகிறது. அத்துடன் என்னையுமறியாமல் இவள் மீது பாசம் பிறக்கிறது. வாருங்கள். போய்ப் பார்ப்போம்” என்று அழைத்தார்.

எனக்கும் பொழுது போக வேண்டியிருந்ததால், அவருடன் அச்சிறுமி வழிகாட்ட ஒரு குறுகிய சந்துக்குள் சென்றோம். அங்கிருந்த ஒரு சிறு வீட்டின் வெளித் தாழ்வாரத்தில் ஒரு மாது முக்கி முனகிக் கொண்டு படுத்திருந்தாள். “அம்மா! அம்மா! இப்ப உடம்பு எப்படியிருக்கு?” என்று கேட்டுக் கொண்டே அச்சிறுமி அம்மாதின் அருகில் உட்கார்ந்து தன் தாயின் முகத்தை நிமிர்த்திக் கேட்டாள். அந்த ஏழ்மைக் கோலத்திலும் அவ்வம்மையாரின் முகம் அழகுடனும் கம்பீரத்துடனும் விளங்கிற்று. அம்முகத்தை என் நண்பர் சாமி பார்த்ததுதான் தாமதம். “ஐயோ! நான் காண்பது கனவா, நனவா? பார்வதி! பார்வதி! என்னைப் பார்! நான்தான் அந்தப் பாதகன். உன்…” என்று மேலே பேச முடியாமல் தவித்தார். அம்மாது அவர் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு அவரை நன்றாக கூர்ந்து கவனித்தாள். உடனே அவளுக்கு மயக்கம் வந்துவிட்டது. உணர்ச்சியற்று மரக்கட்டை போல் விரைத்து விட்டாள். பேச்சு மூச்சில்லை. உடனே அவ்வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்து முதல் சிகிச்சை செய்ததின் மேல் அவள் மிகவும் பிரயாசையுடன் கண் விழித்தாள்.

“இந்த அம்மா யாரோ தெரியலே. இரண்டு நாளைக்கு முன்பு இந்தப் பெண்ணுடன் இங்கு வந்து, தங்க இடங்கேட்டுச்சு. எங்கள் வீட்டிலே இருக்கிறவங்களுக்கே இடம் போதலை. இதிலே இந்த அம்மா தங்கியிருக்க இடத்துக்கு நான் எங்கே போவது? ‘உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு. எனக்குப் போக்கிடம் இல்லை. நாலு நாளா காய்ச்சல். உடம்பு நெருப்பா காயுது. கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்கோ. இந்தக் கந்தைத் துணி மூட்டையைத் தவிர என்னிடம் வேறு சாமான் கிடையாது. நானும் என் மகளும் இப்படியே இந்தத் தாழ்வாரத்திலே படுத்துக்கிறோம். இன்னும் நாலைஞ்நாளையிலே நாங்க இதைவிட்டுப் போய் விடுகிறோம்’ என்று கெஞ்சினாள். அதன் பிறகு நான் எப்படிங்க முடியாதுங்கறது? ஆபத்து சமயத்துக்கு உதவாத மனுஷ ஜென்மம் எதுக்குங்க? சரி, இரும்மா என்று சொல்லி விட்டேன். ஏதோ அப்போதைக்கப்போது கஞ்சி கேட்டா வைச்சுக் கொடுக்கிறேன். இதுதான் என் சக்திக்குகந்தது” என்று ஒரே மூச்சில் பேசித் தீர்த்தாள் அந்த வீடு பிடித்திருந்த அம்மையார்.

“ஐயோ! இவள் என் மனைவி, பார்வதி! மிஸ்டர்! ஒரு டாக்ஸியைக் கூப்பிடுங்கள். உடனே இவளை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று நண்பர் சாமி துடிதுடித்தார்.

அவ்வாறே ஒரு டாக்ஸியை அமர்த்தி நண்பர் சாமியின் மனைவி என்று சொல்லப்பட்ட அவ்வம்மையை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்தோம். பிச்சை எடுத்த அந்தச் சிறுமியையும் அவர், “என் கண்ணே! முத்தே!” என்றுக் கொஞ்சிக் குலாவி தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். போகும்போது அவர் என்னை நோக்கி, “மிஸ்டர்! நாளைக்குக் காலையிலேயே என் வீட்டுக்கு வந்து விடுங்கள். உங்களுக்கு எல்லா விவரத்தையும் சொல்கிறேன்” என்றார்.

இது என்ன ஆச்சரியம்! எதிர்பாராத விதமாக ஒரு பிச்சைக்காரச் சிறுமியைச் சந்திக்கப் போக, அதிலிருந்து எவ்வாறோ பிரிந்திருந்த தன் மனைவியையும், மகளையும் காண நேர்ந்த அதிசயத்தை நினைந்து நினைந்து வியப்புக் கடலுள் மூழ்கினேன்.

மறுநாள் அதிகாலையிலேயே நான் நாராயணசாமி இல்லத்திற்குச் சென்றேன். சிறிது நேரம் பொது விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரே தமது வரலாற்றைக் கூற ஆரம்பித்தார்.

“மிஸ்டர்! உங்களிடம் என் வரலாறு முழுவதையும் சொன்னால்தான் என் மனப்பாரம் குறையும். தயவு செய்து கேளுங்கள். என் தந்தை ஒரு வியாபாரி. எங்களுக்கு ஏராளமான சொத்து சுந்திரங்கள் இருந்தன. எனக்கு 23 வயது நடந்த போதுதான் என் பெற்றோர் பார்வதியை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். அழகுப் போட்டியில் முதற்பரிசு பெறத்தகும். பார்வதி எனக்கு மனைவியாகக் கிடைத்தது எங்களிடமுள்ள பணபலமேயன்றி வேறல்ல. பார்வதியின் பெற்றோர்கள் பணக்காரரு மல்ல; ஏழைகளுமல்ல. நடுத்தர நிலையில் உள்ளவர்கள். இப்படிப்பட்ட பெரிய இடத்துச் சம்பந்தத்தைத் தட்டிக் கழிக்க அவர்கள் விரும்பவில்லை யாதலால், எங்கள் திருமணம் இனிது முடிந்தது.

பார்வதி எனக்கு மனைவியானதற்குப் பிறகு உண்மையிலேயே அழகு ராணியாக விளங்கினாள். நாங்களோ வைர வியாபாரிகள். லட்சம் லட்சமாக லேவாதேவி செய்கிறவர்கள். நகைக்கும் உடைக்குந்தானா பஞ்சம். விதவிதமான உயர்தர ஆடை ஆபரணங்களைப் பார்வதிக்கு அணிவித்துப் பார்த்துக் களித்தேன். சில சமயங்களில் அவளுடைய பேரழகைக் காணும்போது எனக்கு விவரம் புரியாத திகில் ஏற்படும். இத்தகைய அழகுத் தெய்வத்திற்கு நான் ஏற்ற ஜோடிதானா என்று எண்ணுவேன். அப்போது என்னுடைய எண்சாணுடம்பும் ஒரு சாணாகக் குன்றிவிடும்.

இந்தத் தாழ்வு மனப்பான்மை எதற்கெடுத்தாலும் அவள்மீது வீணாக சந்தேகம் படும்படிச் செய்துவிட்டது. அவள் யாருடனும் சிரித்து விளையாடக்கூடாது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும் என்று விரும்பினேன்.

ஆனால், இதை பகிரங்கமாக அமல் நடத்த முடியவில்லை. அத்தான்! அத்தான்! என்று அல்லும் பகலும் என் மேல் அன்பு மழை பொழியும் அவளை நான் எப்படி குற்றம் சாட்டுவது?

ஒருநாள் இரவு அவள் என் படுக்கையறையிலிருந்து வெளியே போனாள். சந்தேகப் பேர்வழியான நான் அவளைப் பின்தொடர்ந்தேன். என்ன ஆச்சரியம்! எங்கள் தோட்டத்தில் யாருமற்ற தனி இடத்தில் தன்னைப் போன்ற அழகுள்ள ஒருவனிடம் சிறிது நேரம் சம்பாஸித்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினாள்!

எனது சந்தேகம் இப்போது விஸ்வரூபம் எடுத்துவிட்டது. வானம் இடிந்து என் தலையில் விழுவது போலும், பூமி பிளந்து நான் அதளபாதாளத்தில் போவது போலும் பிரமை தட்டிற்று, ‘யாரடி அவன்? இந்த நேரத்தில் அந்தத் தனி இடத்தில் அவனுடன் உனக்கென்ன பேச்சு?’

என்று இரைந்தேன். ‘ஐயோ! அவர் யாரென்பதை மட்டும் கேட்காதீர்கள். அதைச் சொல்வதால் உங்கள் கௌரவத்திற்குத் தான் குறைவு. நான் உங்களுக்கு ஒருபோதும் துரோகம் நினைக்க மாட்டேன். என்னை நம்புங்கள்’ என்று கெஞ்சினாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. எப்படியிருக்கிறது ஞானம்! கண்ணுக்கு முன்னாலே கண்டதையே இவள் மறைக்கப் பார்க்கிறாள். அப்பப்பா! பெண்களுக்குத் தான் எவ்வளவு நெஞ்சழுத்தம். இவ்வாறு என் உள்ளம் அனல் கக்கிற்று. ‘சீ! நாயே! உண்மையைச் சொன்னால் பிழைத்தாய். இன்றேல் உன்னைக் கொன்று விடுவேன்!’ என்று மிரட்டினேன். அப்பொழுதும் அவள் பழைய பல்லவியையே பாடினாள். ‘சீ! பேயே! இனி நீ இங்கிருக்கத் தகுதியில்லை. உடனே இவ்வீட்டை விட்டு வெளியே போ. ஒழுக்கங்கெட்டவளுக்கு இங்கு இடமில்லை’ என்று கடிந்து 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த அவளுடைய கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைச் சாத்தினேன்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும், அவள் பெற்றோர் இருக்கு மிடத்திற்குச் சென்று, ‘பார்வதி நேற்றிரவு இங்கு வந்தாளா?’ என்று வினவினேன். ‘இல்லையே! ஏன்? அவள் எங்குச் சென்றாள்?’ என்று அவள் தாயும் தந்தையும் பதறினர்.

அந்தச் சமயத்தில் முந்தின இரவு என் தோட்டத்தில் பார்வதியுடன் பேசிய அந்த வாலிபன் அங்கு வந்தான். அவனைக்கண்டதும் என் கோபம் எல்லை மீறிப் போயிற்று. ‘எல்லாவற்றிற்கும் இந்தப் பாதகன்தான் காரணம்’ என்று நடந்த விஷயங்களை அவர்களுக்கு விளக்கிக் கூறினேன்.

அதைக் கேட்ட அவ்வாலிபன் தன் தலையில் அடித்துக் கொண்டு, ‘அட பாவி! குடியைக் கெடுத்து விட்டாயே! அவள் என் உடன் பிறந்த சகோதரி அல்லவா? பாங்கியில் குமாஸ்தாவாக இருந்த நான் பாங்கிப் பணத்தை ஒரு அவசர காரியத்திற்காக எடுத்துச் செலவு செய்து விட்டேன். அதற்காக எனக்கு மூன்று வருஷம் சிறைத் தண்டனை கிடைத்தது. இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் விடுதலையடைந்தேன். என் தங்கை பார்வதியைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினேன். சிறைத் தண்டனை பெற்ற நான் உன்னெதிரே வருவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, என் தங்கையைத் தனியே சந்தித்துவிட்டுத் திரும்பினேன். அது இந்த விபரீதத்தில் கொண்டு வந்து விடுமென்று நான் கனவிலும் எண்ண வில்லையே!’ என்று கதறி அழுதான்.

பிறகு, நாங்களிருவரும் பார்வதியைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டோம். ஒன்றும் பலிக்கவில்லை. நான் மனம் வெறுத்து என் பெற்றோரைப் பிரித்து இருந்தப் பெரியநகருக்கு வந்து விட்டேன். நேற்றுத்தான் என் மனைவியையும், என் மகளையும் பிச்சைக்காரக் கோலத்தில் கண்டுபிடித்தேன். அவர்கள் பிச்சை எடுக்க வேண்டிய வேலைக்கு வந்தது அந்தப் பாழாய்ப்போன எனது சந்தேகத் தினால் தான் என்று கண்ணீர் வடித்தார் என் நண்பர் நாராயணசாமி.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

ந.பழநிவேலு (பிறப்பு: 20-6-1908) இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1930ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து சிங்கப்பூரிலே வசித்துவந்தார். இவரொரு வானொலி ஒலிபரப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், மொழிபெயர்ப்பாளரும், சிறுகதை, நாடக, புதின எழுத்தாளரும், கவிஞருமாவார். 1930களில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணியினைத் தொடங்கிய இவர் 1949ம் ஆண்டில் அப்போதைய 'ரேடியோ மலாயா' எனும் மலாயா வானொலி சேவையில் இணைந்தார். அங்கு ஒலிபரப்பாளராகவும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *