கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2024
பார்வையிட்டோர்: 2,927 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20

அத்தியாயம்-13

சென்னையில் இருக்கும் பல பெரிய தொழிற்சாலைகளில் ‘மகாலட்சுமி இண்டஸ்டரி’சும் ஒன்று. ரேடியோ, டெலிவிஷன் போன்ற நாகரீகச் சாதனங்களைத் தயாரித்து, பொருள்களின் தரம் மூலமே அகில பாரத மார்க்கெட்டைப் பிடித்திருப்பவர்கள் இந்தக் கம்பெனிக்காரர்கள். 

வேளச்சேரியில் இருக்கும் தொழிற்சாலையை இரு அண்ணன்கள் கவனித்துக் கொள்ள, அலுவலக நிர்வாகத்தின் பொறுப்பு கடைசித் தம்பி கோபி என்கிற கோபி கிருஷ்ணனுடைய கையில் இருக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் நான்கு வருடங்கள், நிர்வாகப் பிரிவிலும், விளம்பரப் பிரிவிலும் பயிற்சிக்காகப் படித்தான். எதிர்கால நிர்வாகிகளில் தலை சிறந்த ஒருவனாக அவன் வருவான் என்று அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் அவனை வாழ்த்தினார். 

சென்னைக்கு அவன் சென்ற ஆண்டுதான் வந்தான். வந்ததுமே கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டான். தொழிலாளர் பிரச்சினைகள், நிர்வாகத்தில் அன்றாடம் எழக்கூடிய பிரச்சினைகள், அடிக்கடி தலைதூக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. சிப்பந்திகளிடம், கடமையை ஆற்ற வேண்டும் என்ற பயம் முதன் முதலாகப் பிறந்தது. இவ்வளவுக்கும் கோபி யாரையும் வேலையை விட்டு நீக்கவுமில்லை. நீக்கப்போவதாகப் பயமுறுத்தவுமில்லை. குமாஸ்தாக்களும், டைப்பிஸ்டுகளும் பயந்துகொண்டு உதவி மானேஜர், துணை மானேஜர் என்று அலறிக் கொண்டிருக்கையில், ஜெனரல் மானேஜர் கோபி சரளமாக எல்லாருடைய இருப்பிடங்களுக்கும் வந்து அன்றாட வேலைகளைப் பற்றி விசாரித்தான். அவனுடைய இந்தப் பழக்கமே சிப்பந்திகளிடையே ஒரு பொறுப்பு உணர்ச்சியை ஏற்படுத்தியது. 

நிர்வாக அலுவலகத்தில் இருக்கும் இருநூறு சிப்பந்திகளையும் கோபி, பெயர் பெயராக அறிவான். ஆனால் யாரும் எந்த விதத்திலும் தனிப்பட்ட உரிமையைக் கொண்டாட முடியாத அளவிற்குத் தன்னை வைத்துக் கொண் டிருந்தான். யாரிடமும் அவன் சொந்தமுறையில் பேசியது கிடையாது. சொந்த விஷயங்களைப் பற்றி விசாரித்தது கிடையாது. 

அவனுக்கு கம்பெனியில் நடக்கும் எல்லா விஷயங்களும் அத்துபடி, யார் கடனில் மூழ்கிக் கிடக்கிறார்கள், யார் எவனுக்கு எவ்வளவு வட்டிக்கு கடன் கொடுத்திருக்கிறார்கள். எந்தப் பெண்ணை யார் காதலிக்கிறார்கள். என்பது போன்ற விஷயங்களை அவன் அறிவான். எப்படி அறிந்து வைத்திருக்கிறான் என்று எல்லோரும் ஆச்சரியம் அடைவார்கள். கோபி தான் யாரிடமும் சொந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதில்லையே?

ரகுனாதனுடைய மரணத்தைக் கேட்டதும் அவன் அடைந்த வருத்தம் கொஞ்சம் அல்ல. பாடுபட்டு உழைக்கும் சிப்பந்திகளில் ரகுவும் ஒருவன், அவனுடைய மரணம் கம்பெளிக்கு ஒரு இழப்புதான். 

அவன் இறந்துபோன மூன்றாம் நாள்தான் ரகுவின் பொருளாதார விஷயம் சம்பந்தமான ஃபைல்களும் அவனுடைய பார்வைக்கு வந்தது.. 

ஃபைலைப் படிக்கப் படிக்க அவனுடைய வியப்பு எல்லையை மீறியது. இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று நினைத்தான் கோபி.

அந்த கோபி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் அமிர்தா வீட்டுக்கு முன் தன்னுடைய பெரிய காரை நிறுத்தி விட்டு, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இறங்கி மெதுவாக முன்னேறினான். 

“உங்களுக்கு யாரைப் பார்க்கணும்?” காரின் அருகே ஓடி வந்த பசுபதி கேட்டார். 

“மிஸ் அமிர்தா”. 

“நான் அவளுடைய அப்பா தான்!”

“ஓ. க்ளாட்டு ஸீ யு… நீங்க தானே பசுபதி?”

“ஆமாம்”. 

“பிரமாதமா டைப் அடிப்பீங்கன்னு சொல்றாங்களே, அது நீங்கள் தானே?” 

“ஏதோ டைப்பிங் தெரியும். உள்ளே வாருங்கள்..” 

“அமிர்தாவைப் பார்க்கணும்”.

”உள்ளே இருக்கிறாள்”. 

இருவரும் நடந்தார்கள். கோபி’ கூடத்தினுள் பிரவேசித்ததும், “வாருங்கள் சார்… வாருங்கள். அப்பா! இவர் தான் மிஸ்டர் கோபி கிருஷ்ணன். எங்கள் கம்பெனியின் ஜெனரல் மானேஜர்!” என்றாள் அமிர்தா, எவ்விதப் பரபரப்பும் பதட்டமும் இல்லாமல். 

“உட்காருங்கள் சார்… உட்காருங்கள்..” 

“சார், இவள் அக்கா, மிஸஸ் கௌரி மோகன் அப்பாவைத் தான் தெரிந்தாகிவிட்டது… உட்காருங்கள்… என்ன சாப்பிடுகிறீர்கள்?”

“எனக்கு உட்கார நேரமில்லை. ஆபீஸ் விஷயமாக வந்திருக்கிறேன்”. 

“சொல்லி அனுபியிருந்தால் நானே வந்திருப்பேனே.”

”மிஸ் அமிர்தா, நீங்க உடனடியா என்னுடன் புறப்பட வேண்டும். ரொம்பவும் முக்கியமான, ரகசியமான விஷயம். 

“ப்ளீஸ் கிவ் மி ஃபைவ் மினிட்ஸ் டைம்.”

“டேக் டென் மினிட்ஸ், லேடீஸ் கேனாட் டிரஸ் அப் இன் ஃபைவ் மினிட்ஸ்!” 

சொல்லிவிட்டு கோபி சிரித்தான். கோபி சிரித்தோ அல்லது இப்படி தமாஷாகப் பேசியோ அமிர்தா பார்த்ததில்லை. ஏன் வந்திருக்கிறார், முக்கிய விஷயம் என்கிறாரே. என்ன விஷயம், ஆபீஸில் அவள் ஏதாவது பெரிய தவறு ஒன்றைச் செய்து, அதனால் ஏதானும் விபரீதம் விளைந்து விட்டதா என்றெல்லாம் அவள் மனத்தில் சரமாரியாகக் கேள்விகள் துளைக்க, அவள் அவசர அவசரமாக ரத்தப் பூ நைலக்ஸைக் கட்டிக்கொண்டாள். ரிஸ்ட் வாட்ச்சின் ஞாபகம் வரவில்லை. தலையை லேசாக வாரிக்கொண்டு பழைய பின்னலையே ஒழுங்குபடுத்தினாள். 

”ஐ அம் ரெடி, சார்!”

“மிஸ்டர் பசுபதி, உங்கள் பெண்ணை நானே என்னுடைய காரிலேயே பத்திரமாக அழைத்து வந்து விடுகிறேன், கவலைப்படாதீர்கள்” என்ற கோபி, கௌரி பக்கம் திரும்பி. “வருகிறேன் மிஸஸ் கௌரி மோகன்* என்றான். 

அமிர்தா காரில் ஏறியதுமே, கோபி, “மிஸ் அமிர்தா, இப்போ நான் சில கேள்விகள் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன். என்னை மன்னித்துத்தான் ஆக வேண்டும்” என்றான். 

“கேளுங்கள்.”

”உனக்கும் இறந்து போன ரகுனாதனுக்கும் இருந்த நட்பு எப்படிப்பட்ட நட்பு?” 

“அவர் என் மீது அன்பு வைத்திருந்தார். நான் அவர்மீது ஒரு மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தேன்”. 

“நீங்கள் இரண்டு பேரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் சொன்னால்…” 

அவனை முடிக்க விடவில்லை, அமிர்தா.

“நான்சென்ஸ்!” என்றாள். 

“அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ ஆசையோ எப்போதாவது உன் மனதில் இருந்ததுண்டா?”

“எண்ணமே எழவில்லை. அப்படி இருக்கும்போது ஆசை எப்படிப் பிறந்திருக்க முடியும்?”

“அவன் உன்னைக் காதலித்திருக்கிறான்”. 

“தெரியும்”. 

”கலியாணம் செய்து கொள்ள ரொம்பவும் ஆசைப் பட்டிருக்கிறான்.” 

“அதுவும் தெரியும்”

“ஆனால் நீ லட்சியமே செய்யவில்லை.” 

“அவருடைய ஆசைகள் என்னை, என் மனசைப் பாதிக்காதபோது நான் ஏன் லட்சியம் செய்யவேண்டும்?”

“கடந்த ஏழு வருடங்களாக தினம் தினம் உனக்கு மல்லிகைப்பூ வருகிறது. அவனுடைய ஏற்பாட்டின் படி”. 

“எந்தப் பெண்ணும் குங்குமம், மஞ்சள். பூவை உதறக் கூடாது. நான் வேண்டாமென்று பல தடவை சொல்லியும் ரகு அனுப்பி வந்தார். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன், என்கிற ஒரு காரணத்துக்காக அவர் அனுப்பிய பூவை நான் என் தலையில் சூடிக்கொள்கிறேன்.”

“அவனை நீ லட்சியம் செய்யவில்லை என்பதை நீயே ஒப்புக் கொள்கிறாய்… ஆனால் ஆஸ்பத்திரியில் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ள நீ போனாயே?”

“மனித தர்மம், சிநேக தர்மம் என்றெல்லாம் தர்மங்கள் இருக்கே… அவர் ஒரு அவாதை… அண்ணன் கல்கத்தாவில் இருக்கிறார். வயதான அம்மாவும் அங்கே தான் இருக்கிறாள். இங்கே கவனிக்க யாருமில்லை…. நான் அவரைக் காதலிக்கிறவளாக இருந்தால்தான் உதவி செய்ய ஓடணுமா?”

“இந்தக் கம்பெனிக்கு எப்படி அவன் வந்து சேர்ந்தான் என்று உனக்குத் தெரியுமா?”

“தெரியாது.”

“அவனுடைய தாத்தாவும், இந்தக் கம்பெனி முதலாளிகளின் தாத்தாவும் சொந்த அண்ணன்-தம்பிகள்”. 

“இந்த விஷயத்தை இந்த உறவு முறையை அவர் என்னிடம் சொல்லியதில்லை”. 

“உன்னிடம் மட்டும் என்ன, யாரிடமுமே சொன்னதில்லை. உறவினன் என்ற காரணத்துக்காக எந்தச் சலுகையையும் அவன் எதிர்பார்த்தது கிடையாது. அதிருக்கட்டும். தினமும் பூ அனுப்பி வந்த அவனைப் பற்றி நீ என்ன நினைத்தாய்?”

“நல்ல மனிதர். கல்மிஷமில்லாத மனமுடையவர். தெய்வ பக்தி உள்ளவர். என்னைக் காதலித்தவர்.” 

“உயிரோடு இருந்திருந்தால், ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் உன் மனம் மாறியிருக்கும்னு நீ நம்புகிறாயா?”

“மனசு எப்படி வேணும்னாலும் மாறலாம். அதைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது. சொல்லப் போனால் அவருடைய கடைசி நிமிஷத்தின் போது என் மனத்தில் சலனம் ஏற்பட்டது.”

“இன்னொரு தடவை சொல்லு, அமிர்தா.”

“ஒரே ஒரு வினாடி, என் மனம் திடீரென்று அவரைக் காதலிப்பதாகப் பட்டது. ஆனால் அது அடுத்த நிமிஷமே மறைந்துவிட்டது. அவரும் மறைந்து விட்டார்.” 

“அவர் மேல் ஏற்பட்ட பரிவு அதீதமாகப் போன போது, அந்தப் பரிவுக்கு நீ காதல்னு பெயர் கொடுத்திருக்கிறாய்.”

“காதலுக்கும் பரிவுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்.”

திடீரென்று அமிர்தா கேட்டாள்: “என்னை எதற்கு ஆபீசுக்கு அழைத்துப் போகிறீர்கள்… ? வழியில் சொந்த விஷயமாகக் கேள்விகள் கேட்கிறீர்கள்… நீங்கள்தான் பிறருடைய சொந்த விஷயங்களைப் பற்றிப் பேச மாட்டீர்களே?”

கோபி சிரித்தான். 

“நிர்ப்பந்தம்!”

“என்ன நிர்ப்பந்தம்?”

“ரகு தன் சொந்த விவகாரங்களை ஆபீஸோடு கலந்து உன்னையும் அதில் இணைத்து விட்டான். சில ஃபைல்களைப் பார்த்தால் எல்லாம் புரியும்!” என்றான் கோபி. 

அமிர்தா பொறுமைக்குப் பெயர் போனவள் அல்ல. இருந்தாலும் பொறுமையுடன் காத்திருந்தாள். 

அத்தியாயம்-14

கோபி கிருஷ்ணன் அமிர்தாவை வீடுவரை சென்று, காரில் ஏற்றி காரியாலயத்துக்கு அழைத்துக் கொண்டு வந்ததற்கான காரணத்தை பட்டவர்த்தனமாக அறிந்த போது அமிர்தா அடைந்த திகைப்புக்கும் வியப்புக்கும் எல்லை இல்லை. 

“சார்! நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?. ரகு இப்படியா செய்து விட்டுப் போயிருக்கிறார்?”

“ஆமாம், அமிர்தா, ரகு தன் கைப்பட எழுதியிருக்கிறதைப்பார் அவனுடைய வக்கீலின் கையெழுத்தையும் சாட்சிகளின் பெயர்களையும் பார்… இதே ஃபைலில் கல்கத்தாவிலிருந்து ரகுனாதனுடைய அண்ணன் எழுதியிருப்பதையும் பார்.. ” 

ஃபைலை அவள் பக்கமாகக் தள்ளினான் கோபி. 

அவளுக்கு ஃபைலில் காகிதங்கள் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர, ஒரு தஸ்தாவேஜின் எழுத்துக் கூடத் தெரியவில்லை. அவள் ஒரு வித மயக்கத்தில் இருந்தாள். 

ரகுவின் ஐம்பதாயிரம் ரூபாய் இன்ஷூரன்ஸ் பணம் அவளுக்கு. ஆபீஸில் பிராவிடண்ட் பணம் பதினெட்டாயிரம் ரூபாய் அவளுக்கு. அவன் சாகும்போது அவனுடைய அறையில் இருந்த பொருள்களெல்லாம் இனி அவளுடையது. குடும்பச் சொத்தில் அவனுக்கு இருந்த அரைப்பங்கு கல்கத்தாவில் அண்ணன் கட்டியிருந்த ஒரு வீடு அவளைச் சேர்ந்தது. 

“சார்! இவ்வளவும் இனி எனக்கா?”

“ஆமாம் அமிர்தா… ரகுவின் உயிலை எதிர்க்கக் கூடியவர் ஒருவரே தான். அந்த அண்ணனும் தமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்பதை ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திட்டு, வக்கீல் மூலம் அனுப்பி இருக்கிறார். அதுவும் ரகு இறப்பதற்கு முன்னமேயே. கல்கத்தா வீடும் உனக்குத்தான்.” 

“சார், எனக்கு இவ்வளவு சொத்தை ரகு எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்… ஏன் சார்?”

“தான் உன்னை எவ்வளவு உண்மையாக நேசித்து இருக்கிறோம் என்பதை உனக்கும் உலகத்துக்கும் எடுத்துக் காட்ட…”

“ஆமாம் சார்”

“எனக்கு ஒரே ஒரு சந்தேகம் அமிர்தா”

“என்ன சார்?”

“இவ்வளவு சொத்தையும் உனக்கு எழுதியிருக்கும் விஷயத்தை நீ அவன் உயிரோடு இருக்கும்போதே அறிந்திருந்தால், மனம் மாறி அவனைக் காதலித்திருப்பாயா?”

கேள்வி அவளைத் தாக்குவதை அமிர்தா உணர்ந்தாள். கோபி அவளைப் பரீட்சை செய்கிறானா? அல்லது அவளுடைய தற்போதைய மனநிலையையும் ரகு உயிரோடு இருந்த போதே நிலைத்திருந்த மன நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க முயலுகிறானா? 

“சார், இப்போ எனக்கு அவர் இவ்வளவு கொடுத்திருப்பதால் அவர் மீது எனக்கு நன்றியும் அபிமானமும் தான் ஏற்படுகிறது. முன்னாலேயே அவர் உயிரோடு இருக்கும் போது, இந்த விஷயம் தெரிந்திருந்தால், நான் அவருடைய சொத்தையே உதறியிருப்பேன்… ஏன் தெரியுமா? அப்போது எனக்கு அவர் ஒரு வெறும் மனிதர் தான். ஒரு அன்னியர் தான்… ஆனால் இப்போ? தம் உடைமைகளையெல்லாம் எனக்கு அர்ப்பணம் பண்ணியிருக்கிறார்… இதை நான் ஏற்றுக் கொள்ளா விட்டால் அவருடைய ஆத்மாவைக் கொன்றவளாகி விடுவேன். அவருடைய ஆத்மாவுக்கு உடலோ வடிவமோ இல்லை, அதனால் அதை வெறுக்கவோ விரும்பவோ நியாயமில்லை…” என்றாள் அமிர்தா. அவளுக்கு மூச்சு வாங்கியது. 

“ரகுவின் எண்ணம் இப்போது புரிகிறதா?”

“புரிகிறது சார்”. 

“சொல்லேன், நானும் தெரிந்து கொள்ளுகிறேன்”. 

“நான் யாரையாவது கலியானம் செய்து கொண்டு, அமோகமாக வாழவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டிருக்கிறார்”. 

“எக்ஸாக்ட்லி… இனி நீ சமூகத்தில் வசதி படைத்தவள். பெரிய பணக்காரியாக நீ மாறிவிடவில்லை, என்றாலும், பழைய அந்தஸ்தையே மாற்றி விடக்கூடிய அளவுக்கு உனக்கு வசதி பெருகியிருக்கிறது… இனி எப்படி வாழவேண்டும். என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும்”. 

“சார், எனக்கு இவ்வளவு பணத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது, எப்படிப் பராமரிப்பது என்று தெரியவில்லை. நீங்கள் தான் எனக்கு வழி காட்டவேண்டும்..இவ்வளவு பெரிய கம்பெனியை நிர்வாகம் செய்கிற உங்களுக்கு என்னுடைய பிரச்சினை கடுகு மாதிரி தான்.”

“சந்தோஷமாக எதை வேணுமானாலும் செய்கிறேன் அமிர்தா!” 

அதன் பிறகு ஒரு சில நிமிடங்கள் இருவருமே பேசிக் கொள்ளவில்லை. அமிர்தா தலை குனிந்தவளாய், தன் மடி மீது கிடக்கும் ஃபைலின் மீது கண் செலுத்திக் கொண்டிருந்தாள். கோபி கிருஷ்ணன் தன்னையே தன் உடலையே பார்த்துக் கொண்டு அங்கம் அங்கமாக விழுங்குவதாக நினைத்தாள். இந்த நினைப்பு வந்தபோது அவள் கூச்சப் படவில்லை. இந்த கோபி கிருஷ்ணனை நேற்றுவரை எட்ட நின்றுதான் பார்த்திருக்கிறாள். அவனுடைய உயரத்தையும், கம்பீரமான நடையையும் தனிமையில் நினைத்துப் பார்த்திருக்கிறாள். அவனுடைய உதடுகளில் வற்றாத சுனையாக ஓடும் புன்னகை அவளுடைய மனத்தை மயக்கியிருக்கிறது. உண்மையில் அவளைக் கவர்ந்த ஒரு சில ஆண்களில் அவனும் ஒருவன் என்பதை அவளே உணர்ந்திருக்கிறாள். 

ஆனால் அவன் மீது அவளுக்குக் காதல் பிறந்திருக்கவில்லை. இதற்குக் காரணம் அவள் ஒரு யதார்த்தவாதி. ஏழை, ஏழையைத்தான் காதலிக்க முடியும். அதில்தான் வெற்றியும் நிறைவும் இருக்க முடியும் என்று அவள் நினைக்கிறவள். இந்த சித்தாந்தம் சரியானது அல்ல என்று பல உதாரணங்களிலிருந்து தெரிந்திருந்த போதிலும் அவளுடைய சித்தாந்தம் மாறவில்லை. அந்த உதாரணங்களெல்லாம் விதிவிலக்குகளாகத் தோன்றின. சமூகத்தில் வரதட்சணைக் கொடுமையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும் வரையில் காதலும் சரி, திருமணங்களும் சரி, சம அந்தஸ்துக்களுக்கிடையே, சம செல்வத்திற்குள்ளே, சம ஏழ்மைக்கிடையேதான் நடக்கலாம். நடக்க முடியும் என்ற எண்ணம் ஒரு பிடிவாதமாக அவளுள் வேரூன்றி இருந்தது. லட்சத்தில் ஒருவர்தான் இதையெல்லாம் மீறி உதாரணமாகத் திகழ்கிறார். 

இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் அவள் மூழ்கி இருந்தாள். அதுவே. கோபியை எட்ட நின்று பார்த்து ரசிப்பதோடு அவள் நிற்கக் காரணமாயிற்று. 

காதல் என்பது திடீரென்று எரி நட்சத்திரம் போலத் தோன்றும் உணர்ச்சி என்று அவள் நினைக்கவில்லை. பார்த்த பின்பேசி, பேசிய பின் பழகி, பழகியபின் புரிந்து, புரிந்த பின் இணைவதுதான் காதலின் வளர்ச்சி என்று அவள் கருதினாள். காதலின் முடிவு கலியாணத்தின் ஆரம்பமாக அவள் நினைக்கவில்லை. 

காதலின் ஆரம்பமே, அங்கீகாரம் பெறாத மண வாழ்க்கையாகத் தோன்றிற்று. ஆனால் இந்த அங்கீகாரம் பெறாத மணவாழ்க்கையில் மிருக உணர்ச்சிகள் இருக்கக் கூடாது. ஒரு லட்சிய வெறிதான் இருக்கவேண்டும் என்று அவள் தீர்மானித்தாள். 

இந்த மாதிரியான எண்ணச்சிக்கல்கள் இருக்கும்போது அவள் யாரைக் காதலிக்க முடியும்? எப்படிக் காதலிக்க முடியும்? திடீரென்று குரல் கேட்டது.

கோபியின் குரல் 

“அமிர்தா, என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?”

”ஒன்றுமில்லை” 

“ஒன்றுமில்லாததைப் பற்றி நீ நினைக்கிறாய் என்றால், நீ ஞானிதான்.” அவன் சிரித்தான். 

அவளும் சிரித்தாள். 

பிறகு, “நான் புறப்படட்டுமா?” என்றாள்.

“இப்போ மணி ஒன்று அடிக்க பத்து நிமிடம்”

“ஆமாம். பசிக்கிறது”. 

“நானும் சாப்பிடவில்லை!” என்ற கோபி, “நான் உன்னை அழைக்கிறேன் டாஜ் ஓட்டலில் சாப்பிட… தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், என் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாம்!”

“ஐ க்ளாட்லி அக்செப்ட்.” 

“பாத்ரூமுக்குப்போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா… சோப்பு, சீப்பு, பவுடர், டவல் எல்லாம் இருக்கு.” 

அவள் எழுந்தாள். 

குளியலறையில் முகத்தில் பளபளத்த சோப்பு நுரையை நீர்விட்டு விலக்கும்போது அவளுக்கு அவளுடைய செய்கையே ஆச்சரியத்தை அளித்தது. அவள் இதுவரையில் யாருடனும் ஒரு ஓட்டலுக்குப் போனதில்லை. யாரும் தைரியத்துடன் அவளை அணுகி அழைத்ததில்லை. ஒருவனுடன் போகவேண்டும் என்ற ஆசையும் அவளுள் ஒரு தடவைகூடப் பிறந்ததில்லை. இப்போது கோபி அழைத்த மறுகணமே தன் ஒப்புதலைத் தெரிவித்தாளே, ஏன்? அவன் நாருக்காகப் பேசியதுதான் தூரணமா? அல்லது ரகு எழுதி வைத்துப் போன சொத்தில் அவள் தன்னை மறந்து விட்டாளா? 

சோப்பின் நுரை கையில் ஒட்டிக்கொண்டிருந்தது. அதில் பிரதிபலித்த ஒளியைப் பார்த்தபோது, கோபியின் சிரிப்பின் ஒளி கண்முன் தெரிந்தது. 

கோபி ஏன் இப்படி அவளை ஈர்க்கிறான்? மற்றவர்களிடமில்லாத தனித்தன்மை தனி வசீகரம் அவனிடம் என்ன அப்படி இருக்கிறது? 

முகத்தைத் துடைத்துக் கொண்ட அவள் பவுடரை லேசாகத் தடவிக்கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே கைப் பையைத் திறந்து குங்குமச் சிமிழை எடுத்தாள். நெற்றியில் விரல் படும் போது, திடீரென்று, என்றோ சின்னஞ்சிறு வயதில் அவளுக்குத் தலைவாரிப் பின்னும் அத்தை சொன்ன வார்த்தைகள் அவளுள் மோதின. 

“உன் அழகுக்கு யாராவது ஒரு ராஜகுமாரன் உன்னைக் கொத்திக்கொண்டு போகப் போறான் பாரு”. 

அத்தை அடிக்கடி இந்த மாதிரி சொல்லுவாள். அந்த ராஜகுமாரன் தான் இப்போது தோன்றி விட்டானா? 

அவள் அவசர அவசரமாக கோபியின் அறையினுள் பிரவேசித்தாள். 

அவன் அவளுக்காகக் காத்திருந்தான். 

“ஐ ஆம் ஸாரி, ஐ ஹாவ் டிலேய்ட்..” 

“இட் இஸ் ஆல்ரைட்….” என்ற கோபி, நீண்டதான நிமிடம் அவளையே பார்த்தான். அமிர்தாவின் தலை தானாகக் குனிந்தது. இதுவும் அவளுக்குப் புது அனுபவம். அந்த அனுபவத்தை அவளே ரசித்துக் கொண்டிருக்கையில் கோபி சொன்னான். 

“நான் எந்தவிதமான கெட்ட எண்ணமும் இல்லாமல் சொல்லுகிறேன், அமிர்தா நீ மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய்!” அமிர்தாவின் உடல் சிலிர்த்தது. 

அத்தியாயம்-15

திடீரென்று ஒரு கார் வந்து நின்றதும், அதிலிருந்து ஒருவன் வந்து இறங்கியதும், அவன் அமிர்தாவை அழைத்துக் கொண்டு சென்றதையும் கண்ட கௌரிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் யோசித்துப்பார்த்த பின், தங்கை மீது ஒரு விதப் பொறாமையும், ஏன் இதுவரை உணர்ந்தறியாத வெறுப்பும் கூட உண்டாயின. 

“அப்பா” 

“என்ன கௌரி?” என்று கேட்டுக்கொண்டே பசுபதி சமையலறைக்குள் பிரவேசித்தார். 

“யார் அப்பா இந்தத் தடியன்?”

“அவரைப் போய் தடியன்கிடியன்னு சொல்லாதே… அவர் அமிர்தாவின் ஆபீசில் ஒரு மானேஜர் பதவி வகிக்கிறவர்”. 

“எனக்கு என்னமோ அவன் பார்வை பிடிக்கவில்லை”.

“அவர் உன்னைப் பார்க்க வரவில்லை. அமிர்தாவைத் தான் பார்க்க வந்தார்.” 

“இந்தச் சிறுக்கிக்கு அவனோடு என்ன பழக்கம்? அவனைக் கண்டதும் படபடத்துப்போனாள். அவன் கார் கதவைத் திறக்கறதுக்கு முன்னாடி, பாய்ஞ்சு ஏறி தொப்பென்று உட்கார்ந்தாள்”. 

”கௌரி, நீ இப்போ உன் வேலையைக் கவனி.. சாம்பார் இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்”. 

“நான் சொல்றேனேன்னு நீங்க தப்பா நினைச்சுண்டாலும் எனக்குக் கவலை இல்லை… நம்ப அமிர்தாவுக்கு அடக்க ஒடுக்கம் போராது – கலியாணமாகாத பெண் இப்படி ஒரு அன்னிய புருஷனோடு பட்டப்பகல்லே போகலாமா?” 

“கலியாணமான பெண்தான் போகலாம்னு சொல்றியா கௌரி? இல்லே, பட்டப்பகல்லே போகாமல் ராத்திரி வேளையிலே போகணும் என்கிறாயா? கறி நிறைய இருக்கு. போட்டுக் கொள்…” 

“இப்போ மட்டும் அம்மா இருந்தா அமிர்தா இப்படிப் போறதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாளா?”

“என்ன செய்திருப்பாள்?”

“அடுப்பிலே கரண்டியைப் போட்டு, அது நன்னா பழுக்கக் காய்ஞ்சப்புறம் அமிர்தாவின் கையிலேயும் காலிலேயும் ரெண்டு இழுப்பு இழுத்திருப்பாள்.”

“உன் தங்கையைப் பத்தி நீ இப்படிப் பேசறது துளிக்கூட நன்னாயில்லை, கெளரி”. 

“சரிப்பா, நான் இன்னிக்குப் பேசறேன்… நாளைக்கு இந்தத் தெருவே பேசும்… நாளன்னிக்கு இத்தப் பட்டணமே பேசும்… அவர்களை என்ன செய்வீர்கள்?”

“அதை அப்புறம் சொல்றேன்… இப்போ சாப்பிடு”. 

“அமிர்தா இப்படியெல்லாம் கண்ட கண்டவனோடே சுத்தறான்னு என் மாமியாருக்குத் தெரிஞ்சா அவள் இன்னும் இடிச்சுப் பேசுவா… அவள் என் மண்டையைப் புண்ணாக்க கட்டிலும் பீரோவும் போறாதா?” 

பசுபதிக்குக் கோபம் வந்தது. 

”பேசாமல் சாப்பிடு கௌரி…” 

அவர் பேசி வாய்மூடு முன் வாசலில் யாரோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. பசுபதி திரும்பிப் பார்த்தார். 

மோகன். 

“வாருங்கள் மாப்பிள்ளை, வாருங்கள்… கெளரி… யார் வந்திருக்கிறார்னு பார்” 

“உங்க பேச்சிலிருந்து தான் தெரியறதே..” கெளரி நிதானமாகச்சாப்பிடலானாள். 

“கௌரியை அழைத்துக் கொண்டு போகலாம்னு வத்திருக்கேள்”

“முதலில் சாப்பிடுங்கள். இலை போடறேன்!” என்றார் பசுபதி.

“இல்லே மாமா… வீட்லே அம்மாவும் அப்பாவும் கௌரிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் அவள் காபிகூடச் சாப்பிடாமல் புறப்பட்டிருக்கிறாள்”.

“அப்படியா” – பசுபதி.

பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்த கௌரி கையை உதறிவிட்டு எழுந்து வந்தாள். 

“நம் வீட்டு விஷயத்தையெல்லாம் ஏன் இங்கே உளர்றீங்க…பேசாம இருங்க”. 

பசுபதிக்கு விஷயம் புரிந்தது. மாமியார் வீட்டில் தகராறு செய்து விட்டு கௌரி வந்திருக்கிறாள். கட்டில், பீரோ என்ற காரணம் காட்டி இது வரையில் பேசி இருக்கிறாள். 

“என்னம்மா தகராறு?” என்று கேட்டார்.அவர்.

“உங்ககிட்டே சொல்லும்படியா ஒண்ணும் இல்லை. அப்பா“ என்று கூறிய கெளரி, கணவன் பக்கம் திரும்பி. 

“உங்களுக்கு சமர்த்தும் சாதுரியமும் கிடையவே கிடையாது!” என்றாள். 

“கெளரி சொல்றது ரொம்ப கரெக்ட், மாமா எனக்கு சமர்த்தும், சாமர்த்தியமும், சாதுரியமும் இல்லவே இல்லை… இருந்திருந்தால், இவள் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டி, தனிக்குடித்தனம் வைத்திருப்பேன்… அது கூடாது. முடியாதுன்னு சொன்னதன் பலன் தான். இவள் இங்கே ஓடி வந்திருக்கிறாள். நான் துரத்திக் கொண்டு வந்திருக்கேன்.”

பசுபதிக்குத் தலை சுற்றியது. 

மோகன் கௌரியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தான்.  

“மாமா…என் அம்மாவுக்கு நான் ஒரே பிள்ளை. தான் எதிர்பார்த்த சீர் செனத்தி வரலேன்னு ஒரு தாபம்… ஏன், ஏமாற்றம்னு கூடச் சொல்லுவேன். இந்த தாபத்திலேயும் ஏமாத்தத்திலேயும் அடிக்கடி ஏதோ பேசறாள். அது எனக்கே பிடிக்கலே. பெரியவர்கள் ஏதோ பேசுகிறார்கள், எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான்னு கெளரியும் பேசாமல் பொறுத்துக்கொண்டு போகலாம்.. ஆனால் கெளரிக்கு அந்த குணம் இல்லை. நாள் விட்டு நாள் ஏதானும் ஒரு ரகளை.., வீட்டில் எனக்கும் சரி. என் அப்பாவுக்கும் சரி, மன நிம்மதின்னு ஒண்ணு கிடையாது”.  

“பேசாம இருக்கப்போகிறீர்களா, இல்லியா?”என்று கத்தினாள் கௌரி. 

“பார்த்தீர்களா, உங்க முன்னாலேயே உங்க பெண் எப்படிப் பேசறாள்னு? இவள் தினம் தினம் தனிக் குடித்தனம்னு பல்லவி பாடறாள். அதுக்கு நான் தலை ஆட்டினால் என்ன நடக்கும்? ஒரே பிள்ளையைப் பெத்துவிட்டு நிக்கர அம்மா அப்பாவை உதறி எறிஞ்சுட்டு நான் இவள் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு போகணும். இது நியாயம்னு எனக்குப் படலே. நீங்களே உங்க பெண்ணுக்குப் புத்தி சொல்லுங்கள்!” 

பசுபதி கெளரி பக்கமே திரும்பவில்லை. 

“நீங்க சொல்ற மாதிரி என் பெண் உங்கள் வீட்லே நடந்து கொண்டிருந்தால், அதுக்காக நாள் மன்னிப்புக் கேட்கிறேன். மாப்பிள்ளை… உங்க அம்மா சீர்செனத்தி விஷயமா ஆசைப் படறதிலே ஏக்கப்படறதிலே ஒரு தப்பும். இல்லை. இந்தக் காலத்தில் பிள்ளையைப் பெற்றவர்கள், நம்ம மாதிரிக் குடும்பங்களில் படற ஆசைதான்… ஆனால் நான் கையாலாகாதவனாகப் போய்விட்டேன்… என்ன செய்கிறது… எப்படியாவது உங்க அம்மாவின் ஆசையைத் தீர்த்து வைக்கிறேன் மாப்பிள்ளை”

மோகன் சிரித்தான். 

“மாமா, நீங்கள் என்னைத் தப்பா புரிஞ்சு கொண்டிருக்கிறீர்கள்… நான் கட்டில், பீரோவுக்காக இங்கே வரவில்லை. என்னைப் பொறுத்த வரையில் ரெண்டுமே அனாவசியம். பீரோவில் ஜாக்கிரதையா வைக்க எங்க வீட்லே என்ன நகைகளும் வெள்ளிப் பாத்திரங்களும் இருக்கு… கட்டிலைப் போட்டுக் கொள்ள ஏது இடம்? நான் இங்கே வந்தது. என் மனைவியை அழைத்துக் கொண்டு போகத்தான்”. 

“கௌரி, கிளம்பு” என்றார் பசுபதி. 

“எனக்குத் தெரியும், அப்பா… அங்கே எனக்கு நிம்மதியே இல்லை”. 

“மாமா, இவள் இங்கே இப்படிக் கோபிச்சுண்டு வந்திருக்கான்னு அக்கம் பக்கத்திலே யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா நம்ம எல்லாருக்கும் அவமானம் இல்லையா?”

“நிச்சயமா மாப்பிள்ளை. நாளைக்கு தெரு பேசும். நாளன்னிக்கு பட்டணமே பேசும். இல்லையா கௌரி?” 

அவருடைய குத்தல் கௌரிக்குப் புரிந்தது. தான் அமிர்தாவைப்பற்றிப் பேசியதை இப்போ அப்பா அவள் மீதே திருப்புகிறார். 

“நன்னாப் பேசட்டும். கௌரியின் மாமியார் கொடுமைக்காரி, மருமகளை சித்திரவதை செய்து விரட்டி விட்டாள்னுதான் பேசும்..என் பேர்வே எல்லாருக்கும் ஸிம்பதிதான் உண்டாகும்”. 

“மாமா… என் அம்மா நல்லவள் பேர் வாங்கியவள். மாமியார் ஸ்தானம் வகிக்கிறப்போ ஏதானும் ரெண்டு வார்த்தை பேசத்தான் பேசறா. ஆனா கௌரி, ஒருவார்த்தைக்கு ரெண்டாக எதிர்ப்பேச்சுப் பேசறா… இதனாலே அனாவசியமாக தர்க்கமும் மனஸ்தாபமும் ஏற்படறது. இவள் மௌனமா பொறுமையா இருந்தா, எங்க அம்மா நாளா வட்டத்திலே தானா அடங்கிப் போய்விடுவா… நீங்கள்தான் உங்க பெண்ணுக்குப் புத்திமதி சொல்லித் திருத்தணும்”. 

பசுபதிக்கு மோகனை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் என்ற வாஞ்சை உண்டாயிற்று. அவனுக்குத் தான் எத்தனை பொறுமை! என்ன பண்பாடு! தன் தாயாரின் மீது பக்தியும் மரியாதையும் வைத்து அதே சமயம் மனைவியையும் விட்டுக்கொடுக்காமல் இருக்கும் இவனை ஏன் கெளரி மனம் நோகச் செய்கிறாள்? 

“கௌரி” என்றார் அவர். என்றுமில்லாத கடுமை அவர் குரலில் ஒலிப்பதை உணர்ந்த கௌரி சளைக்காமல், “என்னப்பா?” என்றாள். 

“நீ இப்போ, உடளே மாப்பிள்ளையுடன் புறப்படுகிறாய்.”  

“முடியாது”. 

“உனக்கு இந்த வீட்டில் இடமில்லை… கலியாணமான பெண்ணுக்குக் கணவன் வீடு தான் இடம்!” 

“ஆகா, என்ன பெரிய உண்மையை நீங்கள் உதிர்த்து விட்டீர்கள்! நீங்கள் என்னைக் கட்டிக் கொடுத்த இடம் எப்பேர்ப்பட்ட இடம் தெரியுமா, அப்பாடி”

“அது எப்படிப்பட்ட இடமானாலும் எனக்கு இப்போ அக்கறையில்லை, மோகனுடன் புறப்படு…” 

“இதுக்குப் பதிலா கிணத்திலே குதின்னு சொல்லியிருக்கலாம் அப்பா!” 

“அப்படி கிணத்திலே குதிக்கணும்னாலும் இங்கே கிணறும் இல்லை….” 

“மாட்டேன்,” 

“என் மானம் கௌரி. பார், உன் குணத்தைப் பார்த்துக் கொண்டு நிக்கறாரு…”

“நிக்கட்டும்… தனிக்குடுத்தனம் வைக்கிறேன்னு அவர் உங்க முன்னாலே ஒரு தடவை சொல்லட்டும், அப்புறம் நானே புறப்படுகிறேன்…” 

“கௌரி” என்ற மோகனுக்கு மேலே தொடர முடியாமல் தொண்டை அடைத்தது. 

அத்தியாயம்-16

அன்று அமிர்தாவுடன் செலவழித்த சில மணிநேரம் கோபி கிருஷ்ணனையே மாற்றி விட்டது. பெரிய பணக்காரனுடைய பிள்ளை. அமெரிக்காவில் நான்கு வருடங்கள் படித்தவன், கம்பெனியின் தலைசிறந்த நிர்வாகி, திடீரென்று அமிர்தா என்ற ஒரு பெண்ணின் உருவத்தைக் கண்டு மயங்கி விட்டான். ஓட்டலில் இருவரும் சாப்பிடும்போது அடிக்கடி அவர்களுடைய கைகள் உராய்ந்து கொண்டன. ஒரு சில வினாடிகள் அவனுடைய துடை அமிர்தாவின் துடையோடு. இடித்தது. எவ்வளவோ பெண்களைத் தொட்டுப் பழக்கப் பட்டவனாக இருந்தபோதிலும், அமிர்தாவின் ஸ்பரிசம் அவனை வேறு ஏதோ ஒரு உலகுக்கு இழுத்துக்கொண்டு போவதாகப்பட்டது. அமெரிக்காவில் அவன் எத்தனையோ பார்ட்டிகளுக்குப் போயிருக்கிறான். நைட்கிளப்புகளில் தன்னையே மறந்து கிடந்திருக்கிறான். ஆனால் அமிர்தாவுடன் இருந்த சில மணிநேரம் போல ஒன்றுமே வாய்த்ததில்லை. 

அன்று மாலை வீட்டை அடையும்போது மணி ஆறு. அவனுடைய அம்மா அவனுக்காக போர்ட்டிகோவில் காத்துக்கொண்டிருந்தாள். 

“ஏண்டா இந்தனை நேரம்?” என்று கேட்டாள் சுசீலா.

“ரகுவின் மேட்டர்… அப்புறம் ஆபீஸ் வேலை…”

“சரி சரி, டிபன் சாப்பிட வா.”

“டிபன் வேண்டாம், அம்மா”.

“காபி?” 

“தா.” 

கோபி தன் டையைத் தளர்த்திக் கொண்டிருக்கையில் சுசீலா காபியுடன் வந்தாள். 

“தாங்க்ஸ் மம்மி”

“டேய் கோபி… இப்போ உனக்கு என்ன வயசு தெரியுமா?”

“முப்பது தாண்டியாச்சு”. 

“என்ன பிரயோசனம்? உன் அப்பாவுக்கு முப்பது நடக்கறப்போ நீ அஞ்சு வயசுப் பிள்ளை”. 

“அதுக்காக” 

“டேய் கோபி, ஏண்டா இப்படித் தினம் தினம் கெஞ்ச வைக்கிற?”

”அம்மா, நீயும் மூணு வருஷமா தினம் தினம் என் பிராணனை ஒரு தரம் வாங்கிண்டுதான் இருக்கே…நானும் உன்னை ரொம்ப அழ வைச்சிருக்கேன்… இப்ப என்ன செய்யணும் என்கிறே?”. 

“கலியாணம் பண்ணிக் கொள்ளணும். அதுவும் சீக்கிரத்திலேயே…” 

”ஓகே அம்மா… உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன்..” 

சுசீலாவுக்கு ஆச்சரியத்தில் என்ன செய்வது என்று புரியவில்லை. 

“நிஜமாகவா சொல்றே, கோபி… இல்லே, என்கிட்டே வேடிக்கை பண்றியா…?”

“சத்தியமா அம்மா”

“டேய் கோபி, உன் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா எப்படி சந்தோஷப்படுவார் தெரியுமா?”

“ரொம்ப அலட்டிக்காதே அம்மா… கலியாணம் பண்ணிக் கொள்ளப் போறேன்னு சொன்னப்போ நீ சந்தோஷப் படறே… நியாயம் தான்… ஆனா யாரைன்னு கேட்டியா?”

“நீ என் பிள்ளையடா, கோபி. நீ என் பிள்ளை…… மெட்ராசிலே எத்தனை பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். எத்தனை நல்ல குடும்பங்கள், கௌரவமான குடும்பங்கள் இருக்கு.. என்னிடம் எத்தனைபேர் இது வரையில் சம்பந்தம் பேச வந்தாச்சு உன் அழகுக்கும், களைக்கும், படிப்புக்கும், விவேகத்துக்கும் ஒரு ரதியை-அதுவும் புத்திசாலி ரதியை நான் கொண்டுவராமலா இருப்பேன்…?” 

கோபி சிரித்தான். 

“அம்மா, அந்தக் கஷ்டம் உனக்கு வேண்டாம் அம்மா.”

“ஏண்டா?”

“நானே ஒரு புத்திசாலி ரதியைக் கண்டுபிடித்து விட்டேன் அம்மா”

“ரொம்ப சரி… நீ ஸெலக்ட் பண்ணினா பிரமாதமாகத் தான் இருக்கும்.. அவள் பேர் என்ன?”

“அமிர்தா.”

“ஆகா, என்ன பெயர்… காதிலே அமிர்தமே பாயற மாதிரி இருக்கு! என்ன படிச்சிருக்கா? வக்கீலுக்கா, டாக்டருக்கா?”

“குமாஸ்தாவுக்கு! டைப்பிஸ்டுக்கு!” 

“என்னடா உளர்றே?”

“எஸ்.எஸ்.எல்.சி. தான் அம்மா”

சுசீலாவின் உள்ளம் ஒரு கணம் சுருங்கியது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமலேயே, ”எஸ்.எஸ்.எல்.சி. படிச்ச பெண்கள் எத்தனையோ பேர் புத்திசாலிகளாக இல்லையா… பிரைவேட்டா மேற்படிப்பு படிச்சு பட்டம் வாங்கவில்லையா…அது சரி, என்ன நிறம்…?”

“எலுமிச்சம் பழம்… “

“எனக்குப் பார்க்கணும் கோபி… நீ, நான், அப்பா, அண்ணா எல்லாரும் போய்ப் பார்ப்போம்…”

“அம்மா, நான் பார்த்திருக்கிற பெண் ஒரு ஏழை டைப்பிஸ்ட்டு பெண். ஒரு சின்னத் தெருவில் குடியிருக்கிறவள், அந்தத் தெருவிலே கார் போறதே கஷ்டம்…. அதனாலே… அதனாலே..” 

“பெண்ணை இங்கே அழைச்சுண்டு வரேன் என்கிறாயா?”

“ஆமாம்.”

“செய்… உன் இஷ்டம் போல செய்… கலியாணத்தை எப்போ வச்சுக்கலாம்… இந்த மாசமே… “அம்மா இழுத்தாள்.

“மூணு மாசமோ ஆறு மாசமோ போகட்டும். அதுக்கு முன்னாடி நான் அமெரிக்காவுக்குப் போகவேண்டும்…” 

“இப்போ என்னடா அங்கே வேலை…?”

“ஒருகாண்ட்ராக்ட் சம்பந்தமா போகணும்” 

“டேய், கலியாணம் என்கிற இந்தப் புனிதமான காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு அமிர்தாவையும் அழைத்துக்கொண்டு போடா…”

“இல்லேம்மா, இந்தனை காலம் பொறுத்த நீ இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துத்தான் ஆகணும்”. 

சுசீலாவுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தபோதிலும் அவளுடைய சந்தோஷத்துக்கு அளவில்லை. மூத்த மருமகள் மாலதியிடம் விஷயத்தைச் சொன்னாள். 

“அம்மா, நீங்கள் உங்கள் வாழ்க்கையிலேயே எதிர்பார்த்துக் காத்திருந்த நன்னாள், இன்று!” என்றாள் மாலதி. மாலதி கெட்டிக்காரி… யார் யாரிடம் எப்படிப் பேசணும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். ஏன், அது இயல்பாகவே வந்த ஒரு கலை. 

“பெண் ஏழை வீட்டுப்பெண்”. 

“அதனால் என்னம்மா? இங்கே வந்துவிட்டால் உங்க ஐசுவரியம் வந்துவிடப்போறது”. 

“நான் தவிச்ச தவிப்பு ஒரு வழியா தீர்ந்துவிட்டது மாலதி. நான் கோவிலுக்குப் போறேன்… அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணணும்.”

“சரிம்மா” என்ற மாலதி, “ஏம்மா, எதுக்கும் நீங்க. ஒரு தரம் அந்தப் பெண்ணைப் பார்த்து விடறது நல்லது, இல்லையா… ” என்றாள். 

“அழைத்துக் கொண்டு வரேன்னு கோபியே சொல்லி இருக்கானே மாலதி.”

“அவர் இங்கே அழைச்சுட்டு வர்றத்துக்கு முன்னாலே நாம ஒரு தரம் அவளை அவள் வீட்டிலே பார்க்கிறது தான் நல்லது. நல்ல பசு மாட்டைக் கூட போய்ப் பார்த்துத்தாள் வாங்குவார்கள்…”

“அவள் விலாசம் கூட எனக்குத் தெரியாதே மாலதி!…”

“நீங்கள் அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள்… என்னுடைய எதிர்கால ஓரகத்தியின் விலாசத்தை நான் நாளைக்குள் விசாரித்து வைக்கிறேன்…”

“அப்ப நான் கோயிலுக்குப் போய்விட்டு வரேன்.”

“கோபி பார்த்து வைத்திருக்கிற அமிர்தாவை ஒரு தடவை பார்த்தபின் அர்ச்சனை செய்யலாம் அம்மா… நீங்கள் ஒரு அவசர ஆவேசத்திலே உணர்ச்சிவசப்பட்டுச் செய்யற அர்ச்சனைக்குப் பலன் இல்லாமல் போய்விடுமோன்னு நான் பயப்படறேன்…” 

சுசீலாவுக்கு ஒண்ணும் புரியவில்லை. மாலதி ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறாள்? 

“ஏண்டி மாலதி, இப்படி அபசகுனம் மாதிரிப் பேசறே?”

“இல்லேம்மா, நல்ல சகுனம் பார்த்து அர்ச்சனை செய்யக் கிளம்பலாம் என்கிறேன்.” 

“உனக்கு இந்த அமிர்தாவைப் பிடிக்கலை போலிருக்கு”

“எனக்குப் பிடிச்சா என்ன பிடிக்காமப் போனா என்ன, கலியாணம் செய்து கொள்ளப் போறவர் கோபி… வாழப் போறவள் அந்தப் பெண்…”

“ரொம்ப விட்டேத்தியா பேசறே நீ…அவள், அந்த அமிர்தா ஒரு சாதாரண டைப் அடிக்கிறவனுடைய பெண் தானே என்ற இளப்பம். நீ ஒரு ஜட்ஜுடைய பெண் இல்லையா!”.

“ஐயோ அம்மா, ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க… சத்தியமா என் மனசிலே எந்தக் கல்மிஷமும் இல்லைம்மா?”

“எனக்கு எல்லாம் தெரியும் டீ… உன் மச்சினனுக்கு கலியாணம் ஆறது உனக்குப் பிடிக்கலை. அவன் என்னென்னிக்கும் ஒண்டிக் கட்டையா இருக்க மாட்டானான்னு நீயும் உன் புருஷனும் ஏங்கறேள்..!”

“அவரை ஏம்மா இழுக்கறேன்… அவரும் உங்க பிள்ளைதானே…..” 

“என் பிள்ளையாகத்தான் இருந்தான் உன் கழுத்திலே மூணு முடிச்சு போடறவரைக்கும்… நீதான் அவனை உருத்தெரியாம மாத்திட்டயே….” 

“அம்மா, நீங்க என்னென்னமோ போறீங்க.. என்ன பேசறோம்னு யோசிக்காமயே போறீங்க… நம்ம கோபி இத்தனை நாளா, ஒரே பிடிவாதமா இருந்தவர், இன்னிக்குத் திடீர்னு அமிர்தா என்கிற பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளத் தயார் என்று சொல்றார். கோபி இப்படித் திடீர்னு மாறணும்னா, ஏதோ ஒரு அதிசயம் நடந்திருக்கணும். இல்லாமப் போனா ஒரு விபரீதம் நடந்திருக்கணும். அமிர்தாவின் அழகு மட்டும் தான் கோபியை மாத்திருக்குன்னா அவளுடைய அழகின் அதிசயத்தை நாம் நேரே பார்த்து அனுபவிக்கலாம்… இல்லை. அவளால் ஏதானும் விபரீதம் ஏற்பட்டு அதன் காரணமாகத்தான் கோபி மனம் மாறியிருக்கிறார் என்றால், எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அம்மா… இந்தக் குடும்பத்துக்கு நல்ல பெயர் வரணும்னு எனக்கும் ஒரு ஆசை உண்டு!”

மாலதி பேசி முடித்தாள். சுசீலாவால் பதில் சொல்ல முடியவில்லை.

– தொடரும்…

– கோபுர தீபம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1999, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *