கோபுரமாய் நின்றாள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 10,787 
 

ரமா, ரமா இங்கே வைத்திருந்த கவரை எங்கே காணும்? என்ற கணவன் மோகனின் அலறலைக் கேட்டு, கையில் இருந்த டிபன் பாக்ஸை அப்படியே வைத்துவிட்டு ஓடினேன் ஹாலுக்கு.

என்னங்க என்ன காணம்?

நேற்று ஆபீஸிலிருந்து கொண்டு வந்தேனே ஒரு நீளக்கவர், அதைக் காணும். ஒரு சாமான் வைச்ச இடத்தில் இருக்காதே…

கொஞ்சம் இருங்கள் நான் பார்க்கிறேன். எங்கே போய்விடும்? யார் உங்கள் டேபிளை தொடுகிறார்கள்? டேபிளின் மேல் இரைந்து கிடந்த காகிதங்களை அடுக்கிவி்ட்டு, சோபாவின் மேல் இருந்த ப்ரீப்கேஸைத் திறந்தேன். உள்ளே நீளக்கவர் ஜாக்கிரதையாக வைக்கப்பட்டிருந்தது.

தானே உள்ளே வைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருந்த தவறை ஒத்துக் கொள்ள கௌரவம் இடம் கொடுக்கவில்லை.

சரி கொண்டா, பிரீப்கேஸை பிடுங்கிக் கொண்டு போயிட்டு வரேன் என்று வேகமாகப் போய் ஸ்கூட்டரைக் கிளப்பினான்.

அம்மா டிபன் பாக்ஸ் ரெடியா? இது பெண் ஜனனி. டிபன் பாக்ஸை கையில் கொடுத்து, சரி கிளம்பு ஸ்கூல் பஸ் போய்விடப் போகிறது என்று கூறி திரும்பினால், அம்மா என்ன ஷூ, சாக்ஸை எடுத்துக் கொடேன் என்று அவசர அவசரமாக டைம் டேபிளைப் பார்த்துப் புத்தகங்களைப் பையில் திணித்துக் கொண்டிருந்தான் பிள்ளை ரவி.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ரவியை முதல் நாள் இரவே புத்தகங்களை எடுத்து வைத்துகொள் என்று இவ்வளவு வருடங்களாகச் சொல்லிக் கொண்டு இருந்தாலும் இன்று வரை கடைசி நிமிட அவசரம்தான்.

அப்பாவிடம் அடம்பிடித்து இந்த வருடத்திலிருந்து சைக்கிளில் தான் ஸ்கூலுக்குப் போவேன் என்று புது சைக்கிள் வாங்கிக் கொண்டு விட்டான். ஷூ, ஸாக்ஸை எடுத்துக் கொடுத்து ஜாக்கிரதையாகப் போய் வா என்று தினமும் சொல்லும் பாடத்தைச் சொல்லி அனுப்பினேன்.

ஒருவழியாக எல்லோரும் கிளம்பிப்போய், புயல் அடித்து ஓய்ந்ததும் போல ஓர் அமைதி. மின் விசிறியை ஓடவிட்டு, கண்ணை மூடிக் கொண்டு அப்பாடி என்று சோபாவில் சாய்ந்தேன்.

வேலைக்காரி முனியம்மா இன்னும் வரவில்லை. எட்டு மணிக்குள் வரவில்லை என்றால், அவள் வீட்டில் ஏதோ தகராறு என்று அர்த்தம். தினசரி அவள் கணவன் குடித்துவிட்டு வருவதும், மாமியார் இவளோடு சண்டை போட்டுக் கொண்டு, பிள்ளையிடம் ஏதாவது வத்தி வைப்பதும் தினசரி நிகழ்ச்சி. அவன் கோபத்தில் அவளை மொத்தி, பல நாட்கள் முகம் வீங்கித் தாமதமாக ஏதோ கதையைச் சொல்லிக் கொண்டு வருவதும் வாடிக்கையாகி விட்டது.

அடுத்தது வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டும்.

நான் ப்ரசாந்தி மாதர் சங்கத்தின் செயலாளர். பத்து வருடங்களுக்கு முன் இருபது பெண்மணிகளால் மாதம் ஒரு சமூக சேவை என்ற குறிக்கோளுடன் ஆரம்பித்த இச்சங்கம், அங்கத்தினர்களின் ஈடுபாடு, உற்சாகம் மற்றும் முயற்சிகளின் மூலம் படிப்படியாக வளர்ந்து இப்போது ஆதரவற்ற முதியோர்களுக்காக சாந்தி இல்லம் என்ற பெயரில் ஒரு முதியோர் இல்லமும் நடத்தி வருகிறது.

அங்கத்தினர்களின் முயற்சியாலும், நல்லுள்ளம் கொண்ட பல பெரிய மனிதர்களின் ஆதரவும் நன்கொடைகள் கிடைத்ததாலும், புறநகர்ப் பகுதியில் ஒரு விசாலமான இடமும், ஓர் அழகான கட்டிடமும் உருவாகி விட்டது. ஒர பாட்டியுடன் ஆரம்பித்த இல்லம் இப்பொழுது ஐம்பது முதியோர்களுடன் நல்ல முறையில் நடந்து வருகிறது.

அங்கத்தினர்கள் உழைப்பு தானக்குழு என்ற பெயரில் சிறு சிறு குழுக்களை அமைத்துக் கொண்டு தாங்களே நேரில் சென்று இல்லத்தை நடத்தும் பொறுப்புக்களை மேற்பார்வை செய்வதால், நல்ல முறையில் இல்லம் நடந்து வருகிறது. நன்கொடைகளுக்குப் பஞ்சமில்லை. இல்லத்தில் சேருவதற்கான விண்ணப்பங்களும் வந்து குவிகிறது.

மாதத்திற்கு ஒருமுறை விண்ணப்பங்களைப் பார்த்துத் தகுதி உடையவர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு தனிக்குழு. இன்று அந்தத் தேர்வு நாள்.பதினோறு மணிக்கு மீட்டிங்.

சுறுசுறுப்புடன் எழுந்து துணிகளை வாஷிங் மிஷினில் போட்டு விட்டுப் பாத்திரங்களை முடிந்தவரைத் தேய்த்துவிட்டு, அவசரமாகச் சாப்பிட்டுவிட்டுப் பார்த்தால், மணி பத்தரை ஆகிவிட்டது. ஆகையால் அவசரமாக ஓர் ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு பதினோறு மணிக்குள் அடையாறில் உள்ள எங்கள் சங்க அலுவலகத்திற்குப் போய் சேர்ந்தேன்.

ஏற்கெனவே நான்கு பாட்டிகள் அவர்களுக்குத் துணை வந்தவர்களுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

தலைவி பார்வதி அம்மாள், நான், பொருளாளர் லட்சுமி நாகராஜன் மூவருமாக அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்க ஆரம்பித்தோம். அவர்களின் நிதி நிலைமை, குடும்பச் சூழல், தேக ஆரோக்கியம் பிறருடன் அனுசரித்துப் போகும் குணம் போன்ற பல விஷயங்களை, ஆராயந்து பார்த்துத்தான் இல்லத்தில் சேர்த்துக் கொள்ள முடியும்.

ஒருவழியாக எல்லோருடனும் பேசி, வீடடிற்கு தகவல் அனுப்புவதாகக் கூறி அனுப்பிவிட்டு, கிளம்ப ஆயத்தமாகும்போது, அலுவலக வாசலில் படகு போன்ற ஒரு பெரிய கார் வந்து நின்றது.

யாராக இருக்கும்? நாம் செய்யும் நற்காரியங்களைப் பற்றிக் கேள்விப் பட்டு நன்கொடை அளிக்க வநதிருக்கிறாரா? என்ற கேள்வி மனதில் எழுந்தது.

கச்சிதமாக ஒரு ஸபாரி ஸூட், ரிம்லெஸ் கண்ணாடி அணிந்து கொண்டு கம்பீரமாக ஒருவர், அறுபது வயது இருக்கலாம்; உள்ளே வரலாமா? கேட்டுக் கொண்டே வந்தார். பார்த்தவுடனே தெரிந்து விட்டது. பல விழாக்களில் தலைமை தாங்கி, பல நன்கொடைகளும் அளிப்பவர், பத்திரிகைகளில் அடிக்கடிப் பார்க்கும் முகம். சிவா க்ரானைட் கம்பெனியின் அதிபர், சேர்மன், திரு. சிவராமன். வணக்கம் கூறி நாற்காலியில் அமர வேண்டினோ்.

அவர் மனைவி கல்யாணியும் பிரபலமானவர், பல மாதர் சங்கங்களுடன் தொடர்புடைய பிரபலமான பெண்மணி.

தொலைபேசியில் பேசியிருக்கலாமே. இவ்வளவு தூரம் எங்களைத் தேடி…பார்வதி அம்மாள் இழுத்தாள்.

ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு: உங்களிடம் ஒரு சின்ன உதவி வேண்டும் என்றார் சிவராமன்.

எங்கள் சங்கத்தின் மூலம் எங்களால் முடிந்த உதவியைக் கட்டாயம் செய்கிறோம். என்றார் பார்வதி அம்மாள்.

யாருக்காவது உதவி வேண்டுமென்று கேட்பதற்காக வந்திருப்பாரோ? பெரிய மனிதராக இருந்தாலும் என்ன எளிமை, மனதிற்குள் வியந்து கொண்டேன்.

ஒன்றுமில்லை. என் தாயாருக்கு எண்பது வயது ஆகிறது. திருவாரூர் பக்கத்தில் கல்லுக்குடி என்ற கிராமத்தில் எங்கள் பூர்வீக வீட்டில் தனியாக நிலபுலங்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தார்.

போதாத வேளை. போன மாதம் கீழே வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. ஆபரேஷன் எல்லாம் செய்து மெதுவாக வாக்கர் உதவியுடன் நடக்கிறார். இனிமேல் தனியாக கிராமத்தில் இருக்க முடியாது. ஆகையால் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டேன்.

என் தாயாரை உங்கள் இல்லத்தில் சேர்த்துப் பார்த்துக் கொண்டால்… உங்கள் இல்லத்தைப்பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகயை உங்கள் இல்லத்திற்கு செய்கிறேன்.

என் தாயாருக்காகத் தனியாக ஆள் போட்டுப் பார்த்துக் கொண்டால் அதற்கான செலவையும் ஏற்றுக் கொள்கிறேன் தயங்கியபடியே கூறினார் சிவராமன்.

நாம் இல்லம் ஆரம்பித்தது ஆதரவற்றவர்களுக்காக அல்லவா! மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

பார்வதி அம்மாள் சுதாரித்துக் கொண்டு உஙகளுக்கு வேண்டுமானால் வீட்டோடு இருந்து பார்த்துக் கொள்ள ஒரு நல்ல ஆளாகப் பார்த்துத் தரட்டுமா? என்றார்.

இல்லை.. இல்லை என் வீட்டில் அதற்குச் சரியான சூழ்நிலை இல்லை.

என் மனைவியும் ரொம்ப பிஸி. அதனால தான் நல்லா பராமரிப்பு உள்ள உங்கள் இல்லத்தில் சேர்த்துக் கொள்வீர்களா? என்று மேலும் விவரிக்காமல் சங்கடமாக நெளிந்தார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட எங்கள் தலைவி ஒரு விண்ணப்பத்தாளை அவரிடம் கொடுத்து இதைப் பூர்த்தி செய்து, உங்கள் தாயாரை அழைத்து வந்து விடுங்கள். பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

ஒரு நிம்மதியுடன் எழுந்தார் திரு. சிவராமன். உங்கள் இல்லத்தை விரிவு படுத்த திட்டங்கள் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதற்கு வேண்டிய எல்லா நிதிஉதவியும் செய்கிறேன். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று கூறி விடைபெற்றார்.

என் மனது என்னமோ சமாதானம் அடையவில்லை. கனத்த மனதுடன் வீட்டிற்கு வந்தேன். தலை வலித்தது. மனமும்தான். சூடாகக் காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து உட்கார்ந்தேன். வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தேன், முனியம்மா.

கோபம் அத்தனையும் அவள் மேல் திரும்பியது. நினைத்தபோது வருவது, நினைத்தால் மட்டம் போடுவது, மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ வேலையை விட்டு நின்றுகொள். நான் வேறு ஆள் பார்த்துக் கொள்கிறேன்.

அவள் பதிலே பேசாமல் உள்ளே சென்றாள். அவளுக்குத் தெரியும். நான் கோபமாக இருக்கும்போது பேசமாட்டாள். என்னால் அவளுக்கு எவ்வளவு உதவிகள். அவள் குழந்தைகளின் படிப்புச் செலவு, துணிமணிகள், கேட்டபொழுதெல்லாம் முன்பணம்.

மடமடவென்று வீட்டைப் பெருக்கித் துடைத்து மீதமுள்ள பாத்திரங்களைத் தேய்த்து, வாஷிங் மெஷினிலிருந்து துணிகளை எடுத்து உலர்த்தி, காய்ந்த துணிகளை மடிப்பதற்காக எடுத்து வந்து தரையில் உட்கார்ந்தாள்.

கோவிச்சுக்காதேம்மா. இந்தக் கிழவி இருட்டுலே வெளியே போச்சா, கால் இடறி விழுந்து நொண்டிக் கொண்டே நடக்க முடியாம வந்து குந்திக்கிச்சு. கால் புரு புருன்னு வீங்கிப் போச்சு. இன்னாண்ட, அன்னாண்ட நகர முடியல.

என்ன செய்யறதும்மா, ரிக்ஷாவுலே பெரியாஸ்பத்திரி்குக் கூட்டிப் போனேனா, போட்டோ புடிச்சு, எலும்பு முறிவுன்னு மாவு கட்டு கட்டி அனுப்பி விட்டுட்டாங்க. அதுக்கு ஒரு டீயும், பன்னும் வாங்கிக் கொடுத்து, பக்கத்து வீட்டு ஆயாவை கொஞ்சம் பாத்துக்கச் சொல்லிட்டு ஓடியாறேன். ஒரு நூறு ரூபாய் முன்பணம் கொடும்மா. ரெண்டு மாசத்துலே புடிச்சுக்க.

தெரியுமே இதுக்குத்தான் அடிபோடுவேன்னு இன்னா செய்யறதும்மா, காலேல அவசரத்துக்கு தண்ணீர் தவலையை அடகு வெச்சு, பணம் வாங்கிப் போனேம்மா. இப்ப மூக்கலேன்னா, வட்டி அதுஇதுன்னு முழுகிப் போயிடும்மா. வீட்டுல காலேலேர்ந்து அடுப்பு மூட்டல. ராவுக்கானும் அரிசி வாங்கிப் போய் பொங்கணும் அவள் கஷ்டம் அவளுக்கு.

எழுந்து போய் அவளுக்குக் காபி கலந்து, காலையில் செய்த இட்லியில் நாலை கொண்டுவந்து கொடுத்தேன். காபியை மடமடவென்று குடித்து விட்டு, இட்லியைப் பொட்டலம் கட்டிக் கொண்டாள். குழந்தைகளுக்கு எடுத்துப் போகலாம் என்று தோன்றியிருக்கும்.

ஏன் முனியம்மா, இந்தக் கிழவியால் எப்பப் பார்த்தாலும் வீட்டில் சண்டை தகராறு, ஏதோ இரண்டு வீடு வேலை பார்த்து அவள் வயித்துப்பாட்டைப் பார்த்துக் கொண்டாள். இனிமே அவளையும் உட்கார வைத்துச் சாப்பாடு போடவேண்டும். பேசாம எங்க முதியோர் இல்லத்துல கொண்டு வந்து சேர்த்துடு. நான் ஏற்பாடு செய்யறேன் நூறு ரூபாய் பணத்தை நீட்டிக் கொண்டே சொன்னேன்.

ஆங்… என்னம்மா.. அப்படிச் சொல்லிப்புட்ட. வீடுனா மாமியார், மருமவ சண்டை போடறது தான். அதுக்காவ அடிபட்டு விழுந்து கிடக்கிற கிழவியை அப்படியெல்லாம் விட்றதா? அதுக்குப் புள்ள இல்ல?

எதுக்காக புள்ளங்கள பெத்துக்கறது? வயசான காலத்துலே ஏதோ கஞ்சித் தண்ணி ஊத்துவாங்கன்னுதானே நாலு பேரு என்ன பேசுவாங்கம்மா? அதெல்லாம் தப்பும்மா. சரி நான் வரேன்.. நேரமாவுது? பணத்தை சுருக்குப் பையில் இடுப்பில் சொருகிக் கொண்டு கிளம்பினாள்.

மனிதாபிமானம் இன்னும் இவர்களிடம் இருக்கிறது.

படித்து, பணம் சம்பாதித்து, சமூகத்தின் மேல்தட்டில் இருப்பவர்களின் மனம் துடைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. முனியம்மா என் மதிப்பில் கோபுரமாய் உயர்ந்து நின்றாள்.

அவள் போவதைப் பார்த்துக் கொண்டே பிரமித்து நின்றேன்.

– ஜனவரி 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *