(இதற்கு முந்தைய ‘சுயநலக் குணம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)
சமையல்காரர் சிவக்குமார் உள்ளே போய் பாலக்காடு கிளம்புவதற்காக ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார்.
சபரிநாதனுக்கு இது ஒரு புது எரிச்சல். காலையில் எழுந்ததும் இனி அவர்தான் கையில் கரண்டியைப் பிடிக்கணும். அவசரத்திற்கு எத்தனையோ நாட்கள் சபரிநாதனின் கை கரண்டி பிடித்த கைதான். ஆனால் இப்போது அதுவும் ஒரு சோதனை போல அவர் மனசை வெறுப்பேத்தியது. பாசுரம் சொல்லச் சுத்தமாக மறந்து போய்விட்டது. ‘சும்மா சும்மா என்னை சோதிக்காதே பெருமாளே’ என்று மனசுக்குள் கோபத்துடன் அரற்றினார்!
உடனே பெண்டாட்டி இல்லாத சுய இரக்கம் அவருக்குள் பீறிட்டுக்கொண்டு வந்தது. எத்தனை காலத்திற்கு இப்படி சமையல்காரன் கையையே நம்பிக் கொண்டிருப்பது… தன் பெண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை என்றதும் இதோ மூட்டையைக் கட்ட ஆரம்பித்துவிட்டான்.
அவன் திரும்பி வருவதற்குள் தனக்கே உடம்பு சரியில்லாமல் போனால் ஒரு வாய் கஞ்சி வைத்துக் கொடுக்க நாதியுண்டா? அதற்கும் மேல், தனக்கு மாரடைப்பு வந்து – அதுவும் நட்ட நடு ராத்திரியில் ஏற்பட்டு ஏனென்று கேட்க ஆளில்லாமல் அவர் செத்தேபோக நேர்ந்தால்?
ஐயோ! சபரிநாதனுக்குள் அந்தக் காட்சி ஒரு சினிமா போல ஓடியதில் மரணபயம் அவருடைய நெஞ்சைப்போட்டு அழுத்த ஆரம்பித்துவிட்டது. மரணத்தின் நிழல் அவர் உடம்பின் மேல் படுவது போலவே இருந்தது. சபரிநாதன் சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து விட்டார். ஏராளமாக வியர்த்தது.
ஓடிப்போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்தார். நகர்ந்துபோய் வாசல் கதவைத் திறந்தார். குளிர்ந்த காற்று வீசியது. அப்பாடாவென்று திண்ணையில் உட்கார்ந்தார். ஒரு நிமிஷம் மணிக்கட்டில் பல்ஸ் பார்த்தார். நார்மல்! வெளிக் காற்றுப் பட்டதும் வியர்வை காய்ந்தது போல, மரணபயமும் லேசாக உலர்ந்தது. இப்போது ஒரு விஷயம் அவரின் ஞாபகத்திற்கு வந்தது.
எப்போதோ ஒரு ஜோதிடர் அவருக்கு ஆயுள் சுமார் எழுபத்தைந்து என்று சொல்லியிருந்தார். அதன்படி பார்த்தால் இன்னும் இருபது வருஷம் பாக்கி இருக்கிறது. அனால் அந்த இருபது வருஷத்திற்கும் இப்படி தனியாகவேதான் தாளம் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? இதுதான் இப்போதைய அவருடைய திடீர்க் கேள்வி.
முத்தையா குடும்பம் சொல்கிறது, தனிமை தேவை கிடையாதென்று! ஆனால் சபரிநாதனின் மனசுதான் ரொம்பவே தயங்கியது. மகள்களை நினைத்ததும் அவரின் மனசு குழம்பியது. மாமியாரின் குடும்பத்தை நினைத்த போதோ ஏதோ ஒன்று நெஞ்சைப்போட்டு பிசைந்தது. அவர் மாமியார் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். ரொம்ப நல்ல மனுஷி. மாப்பிள்ளை மேல் அளவு கடந்த மரியாதை வைத்திருப்பவள் வேறு! அவர் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டால் அந்த மரியாதை என்னவாகுமோ? ஒரு ஆளுக்கு ஒரு மாமியார் வீடு இருந்தால்தான் சரிப்பட்டு வரும். சபரிநாதனின் மனசு இங்கேதான் நொண்டியது. எதனாலும் அவருக்கு சின்ன மரியாதைக் குறைவுகூட வந்துவிடக் கூடாது. அதைத் தாங்கமாட்டார்!
சபரிநாதன் தீவிரமாக யோசனை செய்தார். யோசிக்க யோசிக்கத்தான் ஒரு உண்மை புலனாகியது அவருக்கு. அது, இன்னொரு கல்யாணம் செய்து கொள்வது என்பது அவர் மட்டும் சம்பந்தப்பட்ட தனி நபர் விஷயமில்லை என்பது. அது அவருடைய குடும்பத்தினரும் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கல்யாண கோதாவில் அவசரப்பட்டு குதித்து விடக்கூடாது. நல்ல அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும். நல்லது கெட்டது என்று எல்லாவற்றையும் நிதானமாக யோசனை செய்து பார்த்த பின்புதான் முடிவிற்கு வரவேண்டும். இந்தத் தீர்மானத்துடன் திண்ணையில் இருந்து எழுந்துகொண்டார். ஆனால் அவருக்கு அதிக அவகாசம் எல்லாம் கிடையாது என்கிற மாதிரி சம்பவங்கள் அமைந்து விட்டன.
மறுநாள் மதியம் பாலக்காட்டில் இருந்து சிவக்குமார் மொபைலில் அவரை அழைத்தார். அவரது மனைவி செத்துப்போன விஷயத்தைச் சொன்னார். என்றைக்கு வேலைக்குத் திரும்பி வருவார் என்பது பற்றி மூச்சு விடவில்லை. சபரிநாதன் எரிச்சலடைந்தார்.
இதெல்லாம் இனிமே சரிப்பட்டு வராது. சிவக்குமார் திரும்பி வரப்போகிற தேதி தெரியப் போகிறதோ இல்லையோ, தன்னுடைய கல்யாணத் தேதியை சீக்கிரம் நிச்சயம் பண்ணிவிட வேண்டியதுதான் என்கிற படபடப்பு அவரின் உணர்வுகளில் துடித்தது. எவனாக இருந்தாலும் சரி, சம்பளம் வாங்கும் சமையல் வேலைக்கு வருகிறவன் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுப் போகலாம். அவர் செத்துப்போனார், இவர் செத்துப்போனார் என்று அடிக்கடி லீவு கேட்கலாம்… லீவே எடுக்காமல் உயிரோடு இருக்கிறவரை சமைத்துப் போடுகிற ஒரே ஜீவன் – தாலி கட்டின பெண்டாட்டிதான்!
செத்துப் போவதற்கு இரண்டு நாட்கள் முன்புகூட மரகதம் சமைத்துப் போட்ட ‘பீர்க்கங்காய்த் துவையல்’ ருசி இன்னமும் கார சாரமாக அவரின் நாக்கில் அப்படியே இருக்கிறது! ஆக, புதுப் பெண்டாட்டியின் சமையல்தான் இனி சபரிநாதனுக்குத் தேவையே தவிர, இந்த சிவக்குமாரின் சமையல் வேண்டியதில்லை. வர தோதுப்பட்டால் வந்து சிவக்குமார் கையில் கரண்டியை பிடித்துக் கொள்ளட்டும். ஆனால் அதுவும் தற்காலிகம்தான். சபரிநாதனுக்கு புதுப் பெண்டாட்டி வந்த அடுத்த நிமிஷம் சிவக்குமார் மடத்தை காலி செய்தாக வேண்டும்!
இதே நினைப்பிலேயே கொஞ்சநேரம் தோய்ந்துபோய் வலது காலை ஆட்டிக் கொண்டிருந்த சபரிநாதனின் புத்தியில் வேறொரு கோணலான பார்வை சட்டென உதித்தது. ஆங்.. இப்போது சிவக்குமாரும் தன்னைப் போலவே பெண்டாட்டியை பறி கொடுத்த ஆள்! ‘போச்சிலே மானம்’ என்று தோன்றியது. பெண்டாட்டியைப் பறிகொடுத்த ஒரு ஆசாமியே, பெண்டாட்டியை பறி கொடுத்த இன்னொரு ஆசாமிக்கு வடித்துப் போட வரப் போகிறான்! திடுக்கிட்டுப் போனார் சபரிநாதன். மனசு அவருக்குப் பொங்கிப் போய்விட்டது. இது என்ன பெண்டாட்டி இல்லாத பயல்கள் வீடா என்று நொந்து போனார் நொந்து.
நிரந்தரமாகக் கரண்டியைப் பிடிக்க புதுசா ஒரு பெண்டாட்டி வரப் போகிறாளோ இல்லையோ, அவள் வருகிறவரை சிவக்குமார் கையில் கரண்டி இருந்துவிட்டுப் போகட்டும் என்று சபரினாதனால் நினைக்க முடியவில்லை. பெண்டாட்டி இல்லாதவனுக்கு இந்த வீட்டில் தற்காலிக வேலைகூட இல்லை!
சற்றும் தாமதிக்கவே இல்லை சபரிநாதன். உடனே சிவக்குமாரின் ஆறு மாதச் சம்பளப் பணத்தை எண்ணித் தனியாக கையில் எடுத்து வைத்துக் கொண்டார். சிவக்குமாரிடம் துக்கம் கேட்கப் போவதாக ஊருக்குள் சொல்லிவிட்டு ரயில் ஏறி பாலக்காடு விரைந்தார். ஒரு பொய்யான துக்கத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு சிவக்குமாருக்கு ஆறுதல் சொன்னார். ஆறுமாத சம்பளப் பணத்தை அவன் கையில் திணித்தார். “நீ இனிமே வேலைகெல்லாம் வரவேண்டாம் சிவா… ஒன் மகன்களோடு பாலக்காட்டிலேயே இருந்து எப்படியாவது கடைகிடை வைத்துப் பிழைத்துக்கொள்…” என்று அன்பொழுக சொல்லிவிட்டு அழகாக எழுந்து வந்துவிட்டார். சிவக்குமாருக்கே தெரியாமல் சபரிநாதன் அவனை வேலையில் இருந்து கழற்றி விட்டிருந்தார், அதாவது அவரைப் பொறுத்த வரையில்.
ஆனால் இது சிவக்குமாரை கடுகளவும் அதிர்ச்சி அடைய வைக்கவில்லை என்பது அவருக்குப் பாவம் தெரிந்திருக்க நியாயமில்லை!
“சபரிநாதனுக்கு கல்யாணக் கோட்டி பிடிச்சிருக்கு… எந்த நிமிஷமும் அவனுக்குக் கல்யாணம் நடக்கும், ஒனக்கு எந்த நிமிஷமும் வேலை போகும்” என்று முத்தையாதான் என்றைக்கோ சிவக்குமாரின் காதில் போட்டு வைத்து விட்டாரே..! பொறவு எங்கேயிருந்து வரும் அதிர்ச்சி அவருக்கு?