கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 13,086 
 
 

“ சித்தப்பா!..வரவர உங்க போக்கே சரியில்லே!…நாங்க சொன்னக் கேட்டிட்டு பேசாம இருக்கனும்!…..உங்க இஷ்டத்திற்கு எதையும் செய்யக் கூடாது!…உங்களுக்கு எங்களை விட்டா யார் கொள்ளி போடுவாங்க?..” என்று அண்ணனின் மூத்த மகன் செல்வ மணி சத்தம் போட்டான்.

“ சித்தப்பா!…இந்த வயசிலே கோயில், குளம், சாமி….என்று ஊர் ஊரா அலைந்தா.. எங்காவது நீங்க விழுந்து கொள்ளி போட ஆள் இல்லாம அனாதைப் பிணமா போய் சேர்ந்திடுவீங்க! ….” என்று பின் பாட்டு பாடினான் இளையவன் தங்க மணி.

பாவம் வீராசாமி!….சப்த நாடியும் ஒடுங்கிப் போய் மூலையில் உட்கார்ந்து கொண்டார்

வீராசாமிக்கு என்பது வயசாகி விட்டது. அவருக்கு குழந்தை குட்டி இல்லை. மனைவியும் போய் பத்து வருஷமாச்சு. சின்ன வயசிலிருந்தே அண்ணன் குழந்தைகள் இருவரையும் தன் குழந்தையாக நினைத்துப் பாசம் வைத்திருந்தார்.

அவர் ஒண்டிக் கட்டையானவுடன், தன் சேமிப்பு, பென்ஷன் எல்லாத்தையும் அண்ணன் வீட்டிலேயே கொடுத்திட்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார். அண்ணனும் போன வருஷம் தான் போய் சேர்ந்தார்.

வீராசாமிக்கு கோயில், குளம் என்றால் ரொம்ப இஷ்டம்!. அக்கம் பக்கம் எங்கு தேர், திரு விழா என்றாலும் போய் கலந்து கொள்வார்.அது அண்ணன் பசங்க இருவருக்குமே பிடிக்காது! வேறு வழியில்லாமல் தன் ஆசைகளைக் கட்டுப் படுத்திக் கொண்டார்.

செல்வ மணிக்கு திடீரென்று கடுமையான காய்ச்சல். மருத்துவ மனைக்கு அழைத்துப் போனார்கள். பன்றி காய்ச்சல் என்று சொன்னார்கள். பயத்திலேயே அவனுக்கு பாதி உயிர் போய் விட்டது. அவனை தனிமைப் படுத்தி அவன் பக்கத்தில் வரும் நர்சுகள் கூட ‘முகமூடி’ அணிந்து வந்ததைப் பார்த்தவுடன் அவனுக்கு மீதி உயிரும் போய் விட்டது!

சோகத்தில் மூழ்கிய அந்தக் குடும்பம் சகஜ நிலைக்கு வர ஒரு வருடம் ஆகி விட்டது! இப்பொழுது குடும்ப நிர்வாகம் முழிவதும் தம்பி தங்கமணி கையில்!

அவனுக்கு தண்ணி போடும் பழக்கம் உண்டு. அதை அடிக்கடி வீராசாமி கண்டிப்பார்.

“ சித்தப்பா!..நீங்க பேசாம ஒழுங்கா இருந்தீங்கனாத்தான் உங்களுக்கு நான் கொள்ளி போடுவேன்!.. என் விஷயத்தில் அடிக்கடி இப்படித் தலையிட்டா நீங்க அனாதைப் பிணமாத் தான் போய் சேர வேண்டியிருக்கும்!…” என்று ஒருநாள் தங்கமணி சத்தம் போட அதன் பின் வீராசாமி பேசாமல் போய் உட்கார்ந்து கொண்டார்!

அன்று வழக்கம் போல் ‘டூ வீலரி’ல் மார்க்கெட்டிற்குப் போன தங்க மணி மேல், எதிரே வந்த சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி விட்டது! ஸ்பாட்டிலேயே உயிர் போய் விட்டது.

உறவு ஜனங்கள் முன்னால் தங்க மணிக்கு வீராசாமி தான் கொள்ளி வைத்தார். இயற்கை மரணத்தை சீனியாரிட்டி அடிப்படையில் பிக்ஸ் செய்வதில்லை!

– குங்குமம் 19-10-2015 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *